07 நவம்பர் 2007

வங்கிகளில் கணினி - 2

அந்த காலத்தில் பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய கிளை பரிவர்த்தனைகளை (Transactions) கணினிமயமாக்க முனைந்ததன் அடிப்படை நோக்கம் அன்றாட அலுவல்களை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதுடன் அரையாண்டு மற்றும் ஆண்டு அலுவல்களை அதிக சிரமம் இல்லாமல் முடிக்க வேண்டும் என்பதுதான். அதாவது தங்களுடைய Accounting தேவைகளை நிவர்த்தி செய்ய ஒரு மென்பொருள் தேவை என்பது மட்டுமே வங்கிகளுடைய குறிக்கோளாக இருந்தது. இதற்கு காரணம் பெரிய மற்றும் மிகப்பெரிய கிளைகளில் அன்றாட பரிவர்த்தனைகளை இரவு பத்து மணிக்குள் முடிப்பதே பெரிய விஷயமாக இருந்ததுதான்.

அரையாண்டு, ஆண்டு இறுதி காலங்கள் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அப்போதெல்லாம் டிசம்பர் மாதம் வந்துவிட்டால் (வங்கிகளின் ஆண்டு ஜனவரி-டிசம்பர் ஆக இருந்த காலம் அது) முதல் தேதியிலிருந்தே வங்கி ஊழியர்கள் அன்றாட அலுவல்களுடன் ஆண்டு இறுதி அலுவல்களை துவக்கினால் மட்டுமே டிசம்பர் 30ம் தேதிக்குள் ஆண்டு இறுதி அலுவல்களை ஒரளவுக்காவது முடிக்க முடியும். டிசம்பர் 30 மற்றும் 31ம் தேதிகளில் வீட்டிற்கு செல்வது என்பதே அபூர்வம்தான். கிளைகளில் பணியாற்றும் குமாஸ்தாக்களுக்கு அந்த ஒரு மாதகாலத்தில் இத்தனை மணி நேரம் ஒவர் டைம் அளிக்க வேண்டும் என்று நிர்ணயித்துவிடுவதும் உண்டு. ஆனால் என்னைப் போன்ற மேலாளர்களுக்கோ அல்லது துணை அதிகாரிகளுக்கோ Closing allowance என்று ரூ.250 லிருந்து ரூ.500/- வரை கொடுத்துவிட்டு தினம் ஒன்றுக்கு பதினைந்து மணி நேரத்திற்கு மேல்  உலுக்கி எடுத்துவிடுவார்கள்.

ஆனாலும் ஆண்டு இறுதி முடிந்து உள் மற்றும் வெளி தணிக்கையாளர்கள் (Internal and External Auditors) கணக்குகளை தணிக்கை செய்து கிளையிலுள்ள அனைத்து கணக்குகளிலும் பற்று மற்றும் வரவு வைத்த வட்டி சரியானதுதான் என்று கூறும் வரை பல இரவுகளில் உறக்கத்தை இழக்க வேண்டியிருக்கும். ஏதாவது ஒருசில கணக்குகளில் வட்டி பற்று வைத்தது குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு முன்பு அந்த கணக்கு முடிக்கப்பட்டிருக்கும் சூழலில் வங்கிக்கு ஏற்பட்ட வட்டி இழப்பை சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் மேலாளரிடமிருந்து வசூலிக்கவும் வங்கிகள் தயங்காது.

ஆகவே இத்தகைய அலுவல்கள் கணினிமயமாக்கப்படவேண்டும் என்பதை அப்போது கிளைகளில் பணியாற்றிய என்னைப் போன்ற அதிகாரிகள் அதாவது Banking Officers முன்வந்ததில் வியப்பில்லை. ஆனால் அவர்களில் எவருமே முறைப்படி மென்பொருட்களை வடிவமைக்கவோ (Design) அல்லது தயாரிக்கவோ (Develop) பயின்றவர்கள் அல்ல. வங்கி அலுவல்களுக்குப் பிறகு கையில் கிடைத்த புத்தகங்களை படித்தோ அல்லது அப்போது இதற்கென்று புற்றீசல் போன்று துவக்கப்பட்டிருந்த பயிற்சி அமைப்புகளில் (Training Institutes) சேர்ந்தோ பயின்றவர்களாகத்தான் இருந்தார்கள். இத்தகையோரை ஓரிடத்தில் சேர்த்து துவக்கப்பட்டவைதான் கணினி இலாக்காக்கள். பெரும்பாலான வங்கிகளில் இந்த இலாக்காவை Data Processing Centre என்று குறிப்பிட்டிருந்தனர். கணினி இலாக்கா என்ற பெயர் வந்ததே இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகுதான். இதற்கு எங்களுடைய வங்கியும் விதிவிலக்கல்ல.

கிளை அதிகாரிகள் தாங்களாகவே முன்வந்து மென்பொருளில் இறங்கியதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. அதாவது inner agenda என்பதுபோன்ற காரணம். சாதாரணமாக கிளை அதிகாரிகள் மூன்று வருடங்களுக்கு மேல் ஒரே ஊரில் பணியாற்ற முடிவதில்லை. ஒரே ஊரில் இருக்க வேண்டும் என்றால் வங்கியின் மத்திய அலுவலகத்தில் இருந்த சில முக்கிய இலாக்காக்களில் பணியாற்றி இவர்கள் இல்லையென்றால் பணிகள் ஸ்தம்பித்துபோய்விடும் என்பதுபோன்ற ஒரு மாயையை ஏற்படுத்த வேண்டும். இதில் அக்கவுண்ட்ஸ், க்ரெடிட் இலாக்காக்களை விட்டால் இந்த டேட்டா ப்ராசசிங் இலாக்காதான் மிக முக்கியமான இலாக்காவாக இருந்தது. மென்பொருள் தயாரிப்பது என்பது அத்தனை இலகுவான விஷயம் இல்லையே. ஆகவே இந்த அதிகாரிகளுக்கு பயங்கர தட்டுப்பாடு இருந்த காலம் அது. தலைமை அலுவலகம் அமைந்திருந்த நகரம் மற்றும் அதற்கு மிகவும் அருகாமையிலுள்ள நகரங்களைச் சார்ந்த அதிகாரிகள் தங்களுடைய சொந்த ஊரிலோ அல்லது அதற்கு மிக அருகாமையிலோ தொடர்ந்து பணியாற்ற கணினி இலாக்கா ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

கணினி இலாக்காவில் பணியாற்ற தகுதி வாய்ந்த அதிகாரிகளுடைய எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதாலேயே இத்தகைய அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும், கூடுதல் சலுகைகளும் அளிக்கப்பட்டிருந்தன. எங்களுடைய வங்கியில் கணினி இலாக்கா துவக்கப்பட்ட காலத்தில் கைவிரல் எண்ணிக்கையிலேயே இருந்த இவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் அலுவலகத்திற்கு வரலாம், ஏன் சில சமயங்கள் அலுவலக நேரத்திலேயே மென்பொருள் தயாரிப்பில் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதுபோன்ற சலுகைகளும் அளிக்கப்பட்டிருந்தன. மேலும் இவர்களுடைய செயல்பாட்டை சரிவர கண்கானிக்க மற்றும் அவர்கள் தயாரிக்கும் மென்பொருள் தங்களுடைய கிளைகளில் பயன்படுத்த தகுதிவாய்ந்தவைதானா என்பதை மேற்பார்வையிடக் கூடிய திறன்படைத்த மேலதிகாரிகள் இல்லாதது இத்தகைய அதிகாரிகளுக்கு கொண்டாட்டமாக இருந்தது.

'இவனுங்க என்ன லாங்வேஜ்ல பேசறாங்கன்னே வெளங்கமாட்டேங்குது. இதுல இவனுங்க பண்ற வேலைய சரியா இல்லையான்னு எப்படி கண்டுபுடிக்கறது. ஆலையில்லாத ஊர்ல இலுப்பைப் பூவும் சர்க்கரைன்னு கேள்விப்பட்டதில்லையா அதுமாதிரிதான் இவனுங்களும்.' என்று புலம்புவார் அப்போதைய பொது மேலாளர்.

ஒரு மென்பொருள் தயாரிப்பில் இறங்குவதற்கு முன்பு அவற்றின் தேவைகளைக் குறித்து ஆய்வு செய்து (Requirement Study) சம்பந்தப்பட்ட மென்பொருளை பயன்படுத்துபவர்களுடன் (Users) கலந்தாலோசித்து தயாரிக்கப்படும் SRS அறிக்கைகளின் முக்கியத்துவத்தை இந்த கத்துக்குட்டி அதிகாரிகள் உணர்ந்திருக்கவில்லை.

மேலும் இத்தகைய அதிகாரிகளில் பெரும்பாலானோர் கிளைகளில் பணியாற்றியவர்கள் என்பதால் கிளைகளில் பணியாற்றுபவர்களுக்கு என்ன தேவை என்பதை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள தேவையில்லை என்றும் இதற்கென பிரத்தியேகமாக ஒரு அறிக்கை தயாரித்து மேலதிகாரிகளின் பார்வைக்கு சமர்ப்பிக்க தேவையில்லை என்றும் நினைத்தனர். 'நாம SRS Document தயாரிச்சி அனுப்புனாலும் அத படிச்சி புரிஞ்சிக்கப் போறதில்ல. அப்புறம் எதுக்கு வீண் வேலை.' என்றும் நினைத்திருக்கலாம்.

இதன் விளைவுகளை இவர்கள் தயாரித்த மென்பொருளை பயன்படுத்திய என்னைப் போன்றவர்கள்தான் அனுபவிக்க வேண்டியிருந்தது.

தொடரும்...

11 கருத்துகள்:

  1. <= தயாரிக்கப்படும் SRS அறிக்கைகளின் முக்கியத்துவத்தை இந்த கத்துக்குட்டி ====>
    out of syllabusங்க =))
    பாடத்திட்டத்தில் பெயரளவுக்கு இருக்கும். படிக்கும்போது எழுத வாய்ப்பில்லை.வேலை செய்யும்போதும் யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட அறிக்கையே வேலை பார்க்கும் நிறுவனத்தில் முழுதாக இருக்காது. எல்லாம் ஒரு குத்து மதிப்புதான்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க சிவா,

    எல்லாம் ஒரு குத்து மதிப்புதான்.//

    ரொம்ப சரியா சொன்னீங்க:-))


    out of syllabusங்க =))//

    இதுவும் ரொம்ப சரி...

    பதிலளிநீக்கு
  3. <=== அவர்கள் தயாரிக்கும் மென்பொருள் தங்களுடைய கிளைகளில் பயன்படுத்த தகுதிவாய்ந்தவைதானா என்பதை மேற்பார்வையிடக் கூடிய திறன்படைத்த மேலதிகாரிகள் இல்லாதது இத்தகைய அதிகாரிகளுக்கு கொண்டாட்டமாக இருந்தது. === >

    :) :)

    பதிலளிநீக்கு
  4. வாங்க வினையூக்கி,

    இப்பவும் நிறைய பேங்க்ஸ்ல இதுதாங்க நிஜமான நிலைமை. இல்லன்னா நூறு கோடி, ஐநூறு கோடின்னு செலவு பண்ணி சாஃப்ட்வேர் வாங்குவாங்களா?

    கொடுமை:(

    பதிலளிநீக்கு
  5. எந்தத் துறையை எடுத்தாலும், எந்தச் செயலை செய்தாலும் அதில் நன்மை தீமைகள் கலந்தே இருக்கும். கண்ணிமயமாக்குவதற்கு முன்னால் தீமைகள் அதிகம் இருந்தன. அவைகளைக் களைவதற்கு கணிணி தேவைப்பட்டது. pros and cons of computerisation - விவாதத்திற்குரிய பொருள். வங்கிகளிலே கணிணித்துறை மட்டுமல்ல - மற்ற துறைகளிலும் பதிவில் சொல்லும் குறைகள் உண்டு. மனிதர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஓரு விதம். இன்றைய தினம் வங்கிகளில் கணிணித்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கும் சிரமங்கள் சொல்லி மாளாது. அதிக நேரம் பணி செய்பவர்கள் அவர்கள் தான் என்பதை அடித்துச் சொல்ல முடியும். சில வங்கிகள் 1000 கிளைகளுக்கு மேலே இணைந்து ஒரே கிளையாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும், 1000 கிளைகள் - லட்சக்கணக்கான பரிவர்த்தனைகள் - லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப் படுவார்கள். அதனால் ஏற்படும் இழப்பு சரி செய்யப்பட முடியாத இழப்பு. அன்னப் பறவை போல் நீரை நீக்கி பாலை மட்டும் அருந்துவது நன்று. விவாதத்தை விரும்பாவிடில் விலக்கிவிடலாம். ஆரோக்கியமான விவாதமாகத் தொடர ஆசை.

    பதிலளிநீக்கு
  6. வாங்க சீனா,

    அன்னப் பறவை போல் நீரை நீக்கி பாலை மட்டும் அருந்துவது நன்று. //

    இத்தொடர் என்னுடைய அனுபவத்தை, எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுவதற்காகவே. துவக்கத்தில் கண்னி இலாக்காவிற்கு வெளியிலும், அதனைத் தொடர்ந்து அதற்கு மிக அருகில், பிறகு அதனுள்ளேயே பணியாற்றிக்கொண்டிருக்கும் என்னுடைய அனுபவத்தில் பாலும் இருக்கும் அதிலிருந்து பிரிக்க முடியாத நீரும் இருக்கும்.

    விவாதத்தை விரும்பாவிடில் விலக்கிவிடலாம். ஆரோக்கியமான விவாதமாகத் தொடர ஆசை.//

    எனக்கும்தான். என்னுடைய எண்ணங்களுக்கு அல்லது என்னுடைய அபிப்பிராயங்களுக்கு எதிராக வரும் எதையும், அது தரக்குறைவாக இல்லாதவரை, விலக்கியதே இல்லை.

    ஆகவே கவலை வேண்டாம். உங்களுடைய எண்ணங்களை தயங்காமல் எழுதலாம். இதில் வாதம் என்கிற கோணமே இருக்காது.

    பதிலளிநீக்கு
  7. வங்கிகளுக்கு மட்டுமே மென்பொருள் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் எனக்கு இந்த தொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து எழுதவும்.

    பதிலளிநீக்கு
  8. வாங்க கொத்தனார்,

    எனக்கு இந்த தொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். //

    இருந்தாச் சரி:-))

    தொடர்ந்து எழுதவும்//

    முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. Positive approach க்கு நன்றி ஜோசப். எண்ணங்களை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. அனுபவங்கள் எண்ணங்களின் ஆதாரம். தங்களின் அனுபவங்கள் தங்களின் எண்ணங்களை எழுத வைத்திருக்கிறது. அனுபவங்கள் குறிப்பிட்ட சூழ்நிலையில், குறிப்பிட்ட மனிதர்களை அடிப்படையாகக் கொண்டவை. அவ்வனுபவத்தினால் ஏற்படும் எண்ணங்களாகட்டும் அல்லது கருத்துகளாகட்டும் அவை எல்லா வங்கிகளுக்கும் பொதுவானவையாக இருக்க முடியாது. பெரும்பாலான வங்கிகளுக்கு அக்கருத்துகள் பொருந்தலாம். அதை Generalise பண்ணுவது சரியா ? தெரியவில்லை.

    தொடர்ந்து எழுதுங்கள்.தொடர்ந்து பதிலளிக்கிறேன்.

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. Joseph Sir,

    You are invited

    http://sambarvadai.blogspot.com/2007/11/blog-post_16.html

    thanks in advance

    பதிலளிநீக்கு