12 December 2006

தி.பா.தொடர்-பாகம் II - 5

எந்த ஒரு அலுவலிலும் கிடைக்காத அரிய அனுபவங்கள் வங்கி அலுவலில் கிடைக்க வாய்ப்புள்ளது என்றால் மிகையாகாது.

என்னுடைய முன்னாள் வங்கி முதல்வர் ஒருவர் அடிக்கடி கூறுவார். ‘நா என்னோட அனுபவங்கள எல்லாம் எழுதணும்னு ஆரம்பிச்சா ஆயிரம் பக்க புத்தகம் கூட போறாது. அத்தன இருக்கு..’

உண்மைதான்..

என்னுடைய இந்த முப்பாதாண்டு வங்கி வாழ்க்கையில் நான் சந்தித்த நபர்களைப் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தால் அதற்கு முடிவே இராது.

சமீபத்தில் நான் எங்களுடைய சென்னை வட்டார அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அது ஒரு எட்டு மாடிக் கட்டிடம்.

எங்களுடைய அலுவலகம் அமைந்திருந்த தளத்தைத் தவிர்த்து மற்ற ஏழு மாடிகளிலும் அக்கட்டிட உரிமையாளர்களான ஒரு ஸ்தாபனத்தைச் சார்ந்த நிறுவனங்களே அமைத்நிருந்தன.

எங்களுடைய அலுவலகம் அக்கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட சமயத்தில் நான் அங்கு சீஃப் மேலாளராக இருந்தேன்.

ஆகவே அந்த கட்டடத்தின் மற்ற தளங்களில் பணியாற்றிய பலரையும் எனக்கு பரிச்சயமிருந்தது.

அதில் ஒருவர் என்னை லிஃப்ட்டில் (இதுக்கு என்னங்க தமிழ்? மின்தூக்கி!) பார்த்துவிட்டு ‘எப்படி சார் இருக்கீங்க? இப்ப இங்கயே வந்துட்டீங்களா?’ என்றார். நாங்கள் இருவரும் சந்தித்து சுமார் பதினைந்து வருடங்கள் ஓடியிருந்தன!

இந்த பதினைந்து வருடங்களில் நான் சுமார் ஐந்தாறு இடங்களில் பணியாற்றிவிட்டேன். அவரோ அதே கட்டடத்தில்! அவர் முன்பு இருந்த அதே தளத்தில்.. இருக்கை மட்டும் மாறியிருந்தது!

இந்த பதினைந்தாண்டு காலத்தில் நான் சுமார் பலதரப்பட்ட நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களைச் சந்தித்திருப்பேன். அவர்களுடன் பழகியிருப்பேன். ஆனால் அவர்? ‘எங்க சார்.. பொழுது போனா, பொழுது விடிஞ்சா.. இதோ இந்த காப்பிக்காரன் முகத்துலதான்..(அவரும் கையில் ஒரு டிரெயில் பத்து காப்பி கோப்பைகளுடன் எங்களுடன் அன்று லிஃப்ட்டில்.. என்ன ஆச்சரியம் என்றால் அவரும் அதே கட்டிடத்தில் எங்களுடைய அலுவலக துவக்க நாளன்று வந்திருந்தவர்களுக்கு தேனீர் சப்ளை செய்தவர்!) நீங்க குடுத்து வச்சவர் சார். எத்தன ஊர பாத்துருப்பீங்க?’ என்று சலித்துக்கொண்டார்.

‘ஹ¥ம்.. இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பதுபோல்தான்’ என்று நினைத்துக்கொண்டேன். ஊர் மாற்றத்திற்கு ஆளாகும்போதெல்லாம் நானும் என் குடும்பத்தாரும் பட்ட அவஸ்தைகள் அவருக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது?

ஆனாலும் இது சுவார்ஸ்யமான பதவிதான். எத்தனைக் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தாலும் இறுதியில் நம்மால் பிறருடைய முன்னேற்றத்திற்கு உதவ முடிகிறதே என்ற மனதிருப்தி வேறெந்த அலுவலிலும் கிடைக்க வாய்ப்பில்லை.

அதுவும் ஒவ்வொரு கிளையாக ஆய்வுக்குச் செல்லும் வாய்ப்பு ஒரு கிளை மேலாளருக்குக் கிடைக்கக் கூடிய அனுபவங்களை விடவும் மிக அதிக அளவிலான அனுபவங்களை எனக்கு அளித்தது என்றே நினைக்கிறேன்.

அவற்றில் சில..

ஒரு முறை நாட்டின் பெரு நகரங்களிலிருந்த (Metros) எங்களுடைய கிளை ஒன்றிக்கு ஆய்வுக்கு சென்றிருந்தேன்.

அப்போது கிளை மேலாளர் பதவியிலிருந்தவர் என்னுடைய பேட்ச் மேட் என்பார்களே அதுபோல நான் மேலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்ட அதே நாளில் மேலாளரானவர். என்னுடைய வயதுதான் அவருக்கும்.

ஆயினும் இத்தனை பெரிய கிளைக்கு இவ்வளவு விரைவில் எப்படி மேலாளராக முடிந்தது என்று தோன்றியது எனக்கு. ஆனால் அவருடயை குடும்பப் பெயரில் (அம்மாநிலத்தில் ஒருவரின் பொருளாதார, சமூக அந்தஸ்த்தை அவர்களுடைய குடும்பப் பெயரை (வீட்டுப் பெயர் என்பார்கள்) வைத்தே கணித்துவிடலாம்.) அப்போதிருந்த எங்களுடைய இயக்குனர்களில் ஒருவருடைய பெயரும் ஒன்று என்பது பிறகுதான் நினைவுக்கு வந்தது.

சரி.. அது நமக்கு வேண்டாம்.. மேலிடத்து செல்வாக்கில் உயர்வது எல்லா நிறுவனங்களிலும் உள்ளதுதானே.

ஆனால் செல்வாக்கு மட்டும் போதாது.. அனுபவமும் திறமையும் மிக, மிக அவசியம் என்பது அவருடைய கிளையை ஆய்வு செய்து முடித்தபோது எனக்கு விளங்கியது.

There is no substitute for hard work என்பார்கள்.. உன்மைதான். ஆனால் கடின உழைப்பு மட்டுமே போதாது.. புத்திசாலித்தனமும் வேண்டும். அத்துடன் விஷய ஞானமும் வேண்டும்.

விஷய ஞானமும், புத்திசாலித்தனமும் இல்லாத கடின உழைப்பு வீண் என்பதை அவருடைய கிளையை ஆய்வு செய்தபோது என் கண் முன்னே காண முடிந்தது.

வங்கியின் இயக்குனர் குழுவில் மூத்த அங்கத்தினர் ஒருவருக்கு உறவினர் என்றாலும் அக்கிளை மேலாளார் உழைப்புக்கு அஞ்சாதவர். அவர் மேலாளராக பதவியேற்றதிலிருந்து வணிகத்தைப் பல மடங்கு உயர்த்தியிருந்தார். அதாவது மொத்த வணிகத்தின் அளவை.

ஒரு கிளையின் மொத்த வணிகத்தின் அளவு (Total turnover) என்பது கிளைக்கு கிடைத்த சேமிப்பு (Deposits) அளவையும் கிளை வழங்கியிருந்த கடன் (Advances) அளவையும் சேர்த்து கணக்கிடுவது. அவர் கிளைக்கு பொறுப்பேற்றிருந்த தியதியிலிருந்த அளவுடன் (Level) நான் ஆய்வு நடத்திய தியதியிலிருந்த அளவை ஒப்பிடுகையில் சுமார் முப்பதிலிருந்து ஐம்பது விழுக்காடுகள்வரை கூடியிருந்ததைக் காண முடிந்தது.

அவர் பதவியிலிருந்த சுமார் முப்பது மாத காலத்தில் அவர் சாதித்திருந்தது உண்மையிலேயே பெரிய சாதனைதான். மறுப்பதற்கில்லை. குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் இப்போதுள்ளது போல Bullish ஆக இருந்திராத காலம் அது.

ராஜீவ் காந்தி பிரதமராக தட்டுத்தடுமாறி ஆட்சி செய்துக்கொண்டிருந்த காலம்.  

ஆனால் ஒரு மேலாளரின் வணிக மற்றும் நிர்வாகத் திறமை அவருடைய காலத்தில் கிளையில் நடந்த மொத்த வணிகத்தின் அளவையல்ல மாறாக அதன் தரத்தைப் பொறுத்தே கணிக்கப்படுகிறது.

சகட்டுமேனிக்கு வர்த்தகத்தை கூட்டிவிட்டு அதனால் வங்கிக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதனால் எந்த பயனும் இல்லையல்லவா?

அப்படித்தான் இருந்தது அந்த கிளையின் செயல்பாடு.

எதனால் அந்த நிலமை?

இதற்கு பல காரணங்கள் இருக்க வாய்ப்புண்டு.

ஒன்று சம்பந்தப்பட்ட மேலாளர் ஊழல் பேர்வழியாக இருக்கலாம்.

அல்லது விஷய ஞானம் இல்லாதவராகவோ அல்லது நிர்வாகத் திறமையில்லாதவராகவோ அல்லது over enthusiastic (மிதமிஞ்சிய ஆர்வம் என்று சொல்லலாமா?) ஆகவோ இருக்கலாம்.

ஒரு கிளை மேலாளர் ஊழல் பேர்வழியாக  இருக்கும் பட்சத்தில் அவர் வழங்கியிருந்த கடன்களில்தான் (Advances) பிரச்சினையாக இருக்கும். அதாவது கிளையனுடைய நிதியறிக்கையில் வலதுபுறம் (Right hand side of the Balance Sheet) எனப்படும் Asset sideல்தான் எல்லா பிரச்சினையும் இருக்க வாய்ப்புண்டு என்போம்.

ஆனால் இடப்புறத்திலுள்ள Liabilitiesலும் (Deposits) பிரச்சினைகள் இருந்தால் நிச்சயம் அவர் நான் இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள விஷய ஞானம், நிர்வாகத் திறமை அல்லது மிதமிஞ்சிய ஆர்வம்.. அதாவது எப்படி வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம் தனக்கு நியமிக்கப்பட்டுள்ள இலக்கை கடக்க வேண்டும் என்பதுதான் குறி என்று செயல்படுபவராகத்தான் இருக்க முடியும்.

Asset பக்கத்தில் மட்டும் பிரச்சினையென்றால் வங்கிக்கு பண நஷ்டம் ஏற்படும். ஆனால் Liability பக்கத்திலும் பிரச்சினையென்றால் வங்கியின் பெயரும் நஷ்டப்பட வாய்ப்பிருக்கிறது.

ஒரு உதாரணத்திற்கு..

இப்போதெல்லாம் வங்கியில் ஒருவர் சேமிப்பு கணக்கு (Deposit or Savings Accounts) ஒன்றைத் துவக்க விரும்பினால் இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள ‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துக்கொள்ளுங்கள்’ என்ற கொள்கையில் (Know Your Customer Concept) நிர்ணயிக்கப்பட்டுள்ள அனைத்து நியதிகளையும் (Norms) நிச்சயம் கடைபிடிக்க வேண்டியிருக்கும்.

அப்போது இத்தகைய கொள்கை அமுலில் இருக்கவில்லையென்றாலும் இப்போது பிரத்தியேகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நியதிகளுக்கு இணையான நியதிகள் இருக்கத்தான் செய்தன.

அதாவது வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ள விரும்பும் நபர் வங்கிக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமாயுள்ள வாடிக்கையாளர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்படவேண்டும்.

அவர் அவர்தான் என்பதை உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கணக்கில் ரொக்கமாக செலுத்த வேண்டுமெனில் அதற்குத் தேவையான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் (Proof of resources). அதாவது மாத வருமானம் மட்டுமே உள்ள ஒருவர் லட்சக்கணக்கில் ரொக்கமாக வங்கியில் செலுத்த அனுமதிக்கமாட்டார்.

இது சேவிங்ஸ் கணக்குக்கு மட்டுமல்ல. வைப்பு நிதி (Fixed Deposits) கணக்குகளுக்கும் பொருந்தும். கணக்கில் வராத பணம் வங்கிகள் மூலமாக புழக்கத்தில் விடப்படலாகாது என்பதற்காகவே இத்தகைய நியதிகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

இதன் உட்பொருளை உணராமல் சகட்டு மேனிக்கு போவோர் வருவோரையெல்லாம் வங்கிக் கணக்குகளைத் துவக்க அனுமதித்துவிட்டு அது வருமான வரி இலாக்காவிற்கு தெரிய வந்தால் அதை அனுமதித்த வங்கி மேலாளர் மீது மட்டுமல்ல சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவர் மீதும் நேரடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

அப்படியொரு செயலைத்தான் செய்து வைத்திருந்தார் நான் ஆய்வு செய்த கிளையின் மேலாளர்.. அதாவது தான் செய்தது எத்தனை விபரீதமானது என்ற விவரமில்லாமல்..

தொடரும்..


11 comments:

வினையூக்கி said...

//அது நமக்கு வேண்டாம்.. மேலிடத்து செல்வாக்கில் உயர்வது எல்லா நிறுவனங்களிலும் உள்ளதுதானே.

ஆனால் செல்வாக்கு மட்டும் போதாது.. அனுபவமும் திறமையும் மிக, மிக அவசியம் என்பது அவருடைய கிளையை ஆய்வு செய்து முடித்தபோது எனக்கு விளங்கியது.
//
சரியாக சொன்னீர்கள் சார். எவ்வளவு மேலிடத்து செல்வாக்கு இருந்தாலும் "திறமை" மற்றும் "அதிர்ஷ்டத்தை" பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலிதனம் இருந்தால் மட்டுமே முன்னுக்கு வரமுடியும்.

நல்ல தொடர்.

tbr.joseph said...

வாங்க வினையூக்கி,

எவ்வளவு மேலிடத்து செல்வாக்கு இருந்தாலும் "திறமை" மற்றும் "அதிர்ஷ்டத்தை" பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலிதனம் இருந்தால் மட்டுமே முன்னுக்கு வரமுடியும்.//

மிகச் சரியாக சொன்னீர்கள். திறமையை வேண்டுமானால் நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும். ஆனால் 'அதிர்ஷ்டம்' வாழ்வில் ஒருமுறைதான் கதவைத் தட்டும் என்பார்கள். அதைப் பயன்படுத்திக்கொள்ளும் புத்திசாலித்தனம் மிக, மிக அவசியம். Luck favours the brave என்றும் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.. இதில் brave என்பதை புத்திசாலித்தனம் என்றும் கொள்ளலாம்.

Krishna said...

//ஆனால் செல்வாக்கு மட்டும் போதாது.. அனுபவமும் திறமையும் மிக, மிக அவசியம் //

இப்போதைய உதாரணம் சொல்லனும்னா, தயாநிதி மாறனும், ஜி.கே.வாசனும் அப்பா பெயரால, தடால்னு மேல வந்தவங்கதான், செயல்திறமையால, ஒருத்தர் எங்கயோ போய்கிட்டு இருக்கார், அடுத்தவர் மத்திய மந்திரி ஆனபின்னும் ஆளு எங்கன்னு தேடற மாதிரி இருக்கார்...

//Asset பக்கத்தில் மட்டும் பிரச்சினையென்றால் வங்கிக்கு பண நஷ்டம் ஏற்படும். ஆனால் Liability பக்கத்திலும் பிரச்சினையென்றால் வங்கியின் பெயரும் நஷ்டப்பட வாய்ப்பிருக்கிறது.//

இன்றைய பதிவில ரொம்பப் பிடித்த வரி, இதுதான் சார். எங்க அப்பா அடிக்கடி சொல்லிட்டுருந்ததை ஞாபகப்படுத்திட்டீங்க சார்..உன்னுடைய செயல்களால எனக்கு, பொருளாதார நஷ்டம் வந்தா பரவாயில்ல, அவன் அப்பனா நீன்னு கேக்கற நிலம வரக்கூடாதுன்னுவார்.

sivagnanamji(#16342789) said...

நான் சென்னைக்கு இருப்பிடத்தை
மற்றியவுடன், அருகில் இருந்த வங்கியில் கணக்கு துவக்க விரும்பினேன்;தெறிந்தவர் அறிமுகம் கேட்டனர்..."தெரிந்தவர்(வங்கியில்/வங்கி வாடிக்கையாளருள்)
எவருமில்லை; தேர்தல் ஆணையத்தின் அடையாள அட்டை
உள்ளது...."என்றேன்
"அது தேர்தலில் ஓட்டுப் போட!இங்கு
தெரிந்தவர் அறிமுகம் வேண்டும்"
என்று கூறி மறுத்து விட்டனர்!
இது சரியா?

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

அடுத்தவர் மத்திய மந்திரி ஆனபின்னும் ஆளு எங்கன்னு தேடற மாதிரி இருக்கார்...//

அவருடைய தந்தையும் அமைச்சராக பரிணமித்தவரல்லவே. அமைச்சர் பதவையைக் கண்டாலே காத தூரம் ஓடியவரல்லவா அவர்? கட்சிப் பதவி மட்டும் போதும் என்று இருந்தவராயிற்றே. பூனைக்குப் பிறந்தது புலியாகுமா?


உன்னுடைய செயல்களால எனக்கு, பொருளாதார நஷ்டம் வந்தா பரவாயில்ல, அவன் அப்பனா நீன்னு கேக்கற நிலம வரக்கூடாதுன்னுவார்.//

மனதை நெகிழவைத்தது உங்களுடைய இந்த வரிகள்.. உண்மைதான். எல்லா குடும்பத்திலும் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளிடத்திலிருந்து விரும்புவது இதைத்தான். இதை இப்படியும் சொல்லலாம்: நாம் நம்முடைய பெற்றோர்களுக்கு Assetஆக இருக்கிறோமோ இல்லையோ நிச்சயம் Liabilityஆக இருக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

tbr.joseph said...

வாங்க ஜி!

"அது தேர்தலில் ஓட்டுப் போட!இங்கு
தெரிந்தவர் அறிமுகம் வேண்டும்"
என்று கூறி மறுத்து விட்டனர்!
இது சரியா? //

சரியல்ல. அறிமுகம் வேண்டும் என்பதன் நோக்கத்தை நான் என்னுடைய பதிவில் கூறியுள்ளதுபோல நீங்கள் சிவஞான்ம்ஜி என்பவர்தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவே.

இதற்கு ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை ஆகியவை வழங்கியுள்ள அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் என ஏதாவது ஒரு ஆவணம் போதும். சில மேலாளர்கள் இத்தகைய விஷயங்களில் அதிகப்பிரசங்கிகளாக நடந்துக்கொள்வதுதான் பிரச்சினையே.

என்ன செய்வது?

Krishna said...

//நாம் நம்முடைய பெற்றோர்களுக்கு Assetஆக இருக்கிறோமோ இல்லையோ நிச்சயம் Liabilityஆக இருக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். //

கலக்கிட்டீங்க!!

G.Ragavan said...

பாம்பா பழுதான்னு தெரியாம பழுதுன்னு தூக்கிச் சொமக்குறத விட பாம்புன்னு ஒதுங்கிப் போறது மேல்னு சொல்றீங்க. உண்மைதான். வங்கிகளில் மட்டுமல்லாமல் மென்பொருட் துறையிலும் நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்டு. எடுத்து விட்டா ஊரு நாறீரும். அதுனால அமைதியா இருக்கேன். அல்லது இருக்கோம்.

tbr.joseph said...

கலக்கிட்டீங்க!! //

:) :) :)

tbr.joseph said...

வாங்க ராகவன்,

வங்கிகளில் மட்டுமல்லாமல் மென்பொருட் துறையிலும் நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்டு. எடுத்து விட்டா ஊரு நாறீரும்.//

I.T. துறையிலிருப்பவர்களும் மனிதர்கள்தானே.. அதுவும நம் வயதொத்தவர்கள் அதிகம் இருக்கும் இத்துறையில் போட்டியும் பொறாமையும் இருக்கத்தானே செய்யும்.

sivagnanamji(#16342789) said...

பதவி வேண்டாமென்று ஒதுங்கினால்
பூனையா?

பதிவுகள் நன்றாக இருப்பினும் சில
பின்னூட்டங்கள் பதிவுகளின் போக்கையே மாற்றிவிடுவதை
அறிவீர்கள்.
அப்படிப்பட்ட பின்னூட்டங்கள்
தேவையா....