28 September 2006

திரும்பிப் பார்க்கிறேன் 200

என்னுடைய வங்கி அலுவலில் சுமார் எட்டு ஊர்களில் பணியாற்றியிருக்கிறேன்.

நான் மேலாளராக பணியாற்றிய சுமார் இருபது ஆண்டுகளில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பலவும் அலாதியானது. வாடிக்கையாளர்கள் பலருடயை கோபத்திற்கும், நிந்தனைக்கும் உள்ளாகியிருக்கிறேன். சிலரால் அவமானத்திற்கும் உள்ளாகியிருக்கிறேன். பலருடைய பாராட்டையும், சிலரிடமிருந்து அபிரிமிதமான அன்பையும் சம்பாத்தித்தும் இருக்கிறேன்.

பாராட்டப்படும்போதும் சரி அவமானப் படுத்தப்பட்டபோதும் சரி எல்லாவற்றையும் ஒரே மனநிலையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தை எனக்கு அளித்தது என்னுடைய அசைக்க முடியாத இறைநம்பிக்கையென்றால் மிகையாகாது.

அதுவும் மதுரையில் நான் இருந்த ஒரு வருடத்தில் அந்த இறுதி மாதத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் மறக்க முடியாதது.

முந்தைய பதிவில் நான் கூறியிருந்ததைப் போன்று மதுரையில் அப்போதிருந்த மாவட்ட ஆட்சியாளர் தன்னுடைய செயல்பாட்டில் மிகவும் தீவிரமாக இருந்தார். அதில் தவறேதும் இல்லை. அவருடைய நோக்கம் நேர்மையானதுதான். இல்லையென்று சொல்லவில்லை.

ஆனால் அதை செயல்படுத்திய விதம்தான் சர்ச்சைக்குரியதாக இருந்தது. என்னைப் போன்ற வங்கி மேலாளர்களின் செயல்பாட்டில் அதாவது கடன் பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையீடு செய்ததைத் தான் என்னாலும் வேறு சில மேலாளர் நண்பர்களாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இது போதாதென்று அப்போது மத்தியில் ஸ்டேட் ராங்கில் அமைச்சராக இருந்த ஒருவரது தலையீட்டை சொல்லி மாளாது. அவர் அப்போதைய பிரதமரின் பிரத்தியேக பிரதிநிதியாக தன்னைத்தானே வரித்துக் கொண்டு செல்லும் இடமெல்லாம் லோன் மேளா என்ற பெயரில் அரசு வங்கிகளை நிர்பந்தம் செய்து தகுதியற்ற பலருக்கும் சலுகைக் கடன்களை அள்ளி வீசியது.. வெளிப்படையாக கூற வேண்டுமென்றால்.. அக்கிரமம்.

அவருடைய தயவை எந்த வங்கியின் மேலாளரும், அது அரசு வங்கியாக இருந்தாலும் சரி, தனியார் வங்கியாக இருந்தாலும் சரி, எதிர்நோக்கி இருக்கவில்லை. ஆனாலும் என்ன காரணத்தாலோ சகல அரசு வங்கிகளின் மேலாளர்களும், ஓரிருவரைத் தவிர, ஒருவருக்கு மேல் ஒருவர் விழுந்து அவருக்கு பணிவிடை செய்ய தயாராக இருந்ததுதான் வேதனை.

அதுவும் அன்று வங்கி மேலாளர்களின் க்ளப் தலைவராக இருந்தவர் மாவட்ட ஆட்சியாளரை விடவும் முனைப்பானவராக இருந்தது அதைவிட துரதிர்ஷ்டம்.

மத்திய அமைச்சரின் மதுரை சுற்றுப்பயண விவரங்களை மாவட்ட ஆட்சியர் அவரிடம் கொடுத்து மதுரையில் செயலாற்றி வந்த அனைத்து வங்கிகளும் இன்னின்ன இடத்தில் லோன் மேளா நடைபெறும் என்று, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வங்கியும் இத்தனை பேருக்கு கடன் வழங்க வேண்டும் என்று பட்டியலிட்டு கொடுத்திருப்பார் போலிருந்தது.

அதற்கெனவே ஒரு பிரத்தியேகமாக ஒரு கூட்டத்தைக் கூட்டி எல்லா மேலாளர்களையும் மத்திய அமைச்சரின் பெயரைச் சொல்லியே பயமுறுத்தி சம்மதம் பெற்றிருந்தார். என்னுடைய நல்ல நேரமோ அல்லது கெட்ட நேரமோ நான் அந்த கூட்டத்திற்கு செல்ல இயலவில்லை.

அடுத்த நாள் கேரள மாநிலத்தைச் சார்ந்த ஒரு வங்கியில் மேலாளராக இருந்த என் நண்பரை தொலைப்பேசியில் அழைத்து முந்தைய நாள் கூட்டத்தில் நடந்தது என்ன என்று விசாரித்தேன்.

என்னுடைய வங்கிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கடன் பட்டியலை தன்னிடம் கொடுத்திருப்பதாகவும் யாராவது ஒரு சிப்பந்தியை அனுப்பினால் கொடுத்தனுப்புவதாகவும் அவர் தெரிவித்தார். நான் கூட்டத்தில் வேறு ஏதும் விவாதிக்கப்பட்டதான் என்று கேட்டேன்.

‘நீங்க வேற டிபிஆர். அந்த பிரசிடெண்ட் எங்க எங்கள பேச விட்டார். இதுல தந்திருக்கற டார்கெட்ட எந்த பேங்காவது மீட் பண்ணாம இருந்தா அவங்களப் பத்தி அவங்க எச்.ஓவுக்கு நானே கம்ப்ளெய்ன் செய்வேன்னு மிரட்டாத குறைதான். என்ன அக்கிரம் பாருங்க. கவர்ன்மெண்ட் ஃபண்ட்ஸ் எல்லாம் நேஷனலைஸ்ட் பேங்குக்காம் ஆனா லோன்னு வரும்போது மட்டும் எல்லா பேங்கும் குடுக்கணுமாம்.. எங்க போய் சொல்றது.’ என்று அங்கலாய்த்தார்.

நான் சட்டென்று, ‘சார் நா ஒன்னு சொன்னா நீங்க ஒத்துழைப்பீங்களா?’ என்றேன் அவருடைய பதில் என்னவாயிருக்கும் என்று தெரிந்திருந்தும்.

அவர் தயக்கத்துடன், ‘நீங்க முதல்ல ஒங்க ஐடியாவ சொல்லுங்க.’ என்றார்.

‘பேசாம நாம ஏற்கனவே பாரோயர்ஸ தேர்ந்தெடுத்துட்டோம். அவங்களுக்கு மினிஸ்டர் முன்னால வச்சி லோன் குடுத்தா போறும்னு சொல்வோம். அவங்களுக்கு இத்தன பேருக்கு லோன் குடுக்கணும்னுதான டார்கெட்.. யாருக்குன்னு இல்லையே..’

எதிர் முனையிலிருந்து பதிலே வரவில்லை. ‘வேணாம் டிபிஆர். ஏற்கனவே பலதடவை நீங்க கலெக்டர்கிட்ட டோஸ் வாங்கியிருக்கீங்க.. இப்ப வர்றது மினிஸ்டர்.. எதுக்குங்க வம்ப விலை குடுத்து வாங்கறீங்க? என்னெ விட்டுருங்க..’ என்று கழன்றுக்கொண்டார்..

அன்று மாலை என்னுடைய சிப்பந்தியை அனுப்பி என்னுடைய வங்கிக்கு கொடுக்கப்பட்டிருந்த டார்கெட்டை பார்த்ததும் எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கொடுக்கப்பட்டிருந்த டார்கெட்டை என்னுடைய வங்கி எட்டியிருந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட அரசு இலாக்காவிலிருந்து பரிந்துரை செய்யப்பட்டிருந்த நபர்களுக்கு கடன் வழங்கவில்லையென்ற ஒரே காரணத்திற்காக நான் நிராகரித்த அவர்களுடைய பெயர்களே மீண்டும் பட்டியலிலிருந்ததைக் கண்டு கொதித்துப் போனேன்.

உடனே என் மனதில் ஒரு திட்டம் தோன்றியது. அவர்கள் வழியிலேயே தற்சமயம் போவோம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு அடுத்த நாள் முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு இலாக்கா பரிந்துரைத்த நபர்களை நேர்காணல் செய்து கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து கடன் வழங்குவதற்கான உத்தரவுகளைத் தயார் செய்தேன். ஆனால் எவருக்கும் வழங்கக்கூடாது என்ற தீர்மானத்துடன் மத்திய அமைச்சர் நடத்தும் லோன் மேளாவில் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தேன்.

மத்திய அமைச்சருடைய பொன்னான கரங்களால் சில கடன்களாவது பொருளாக (தையல் இயந்திரம், பால் பாத்திரங்கள், சக்கர நாற்காலிகள், என செல்லும் இவற்றின் பட்டியல்) கொடுக்கப்படவேண்டும் என்பது நியதியாயிருந்தது.

என்னுடைய மிக முக்கியமான வாடிக்கையாளர்களாயிருந்த மதுரை மல்ட்டி பர்ப்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டியின் மேற்பார்வையில் இயங்கி வந்த சுய வேலைப்பாடு மையத்தில் பயிற்சி பெற்றிருந்த சுமார் இருபது கைம்பெண்களுக்கு தையல் இயந்திரம் கொடுப்பதென தீர்மானித்து அவர்களை விழா தினத்தன்று வந்து அமைச்சர் கையால் அவற்றைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை செய்து முடித்தேன். அவர்களுடன் நான் அங்கத்தினராயிருந்த லயன் க்ளப் பரிந்துரைத்த ஊனமுற்ற சிலருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தேன்.

அமைச்சருடைய தலைமையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம் ஒரு திறந்த வெளி திடல். அதில் திடலின் ஓரத்தில் மதில் சுவரையொட்டி எல்லா வங்கிகளும் சிறு, சிறு ஸ்டால்களை அமைத்து தாங்கள் வழங்கவிருந்த பொருட்களை காட்சியாக வைக்க வேண்டும். இதுவும் நம்முடைய அமைச்சரின் நியதிகளுள் ஒன்று.. எல்லாம் ஒரு ஷோதான்..

அமைச்சரை வரவேற்று திடலின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் (அந்த தொகையைக் கொண்டே சுமார் ஆயிரம் ஏழைகளுக்கு கடன் வழங்கியிருக்கலாம் என்பது வேறு விஷயம்) அதிகாரிகளும், அவருடைய அடிபொடிகளும் புகழாரம் சூட்ட திடலை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த கடைகளின் எண்ணிக்கையைப் பார்த்து பெருமிதமடைந்திருந்த அமைச்சர் வங்கி அதிகாரிகளை எத்தனை போற்றினாலும் தகும் என்று தன்னுடைய உரையைத் துவக்கினார்.

ஆரம்பத்தில் மேலாளர்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தாலும் நேரம் செல்லச் செல்ல அவர்களை வசை பாடத் துவங்கினார். இந்தியாவில் முதல் நூறு பணமுதலைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடனை வசூலித்தாலே போதும் இந்தியாவில் உள்ள சகல ஏழைகளுடைய தேவைகளையும் பூர்த்தி செய்துவிடலாம். அதற்கு முயற்சி செய்யுங்கள். அதை விட்டுவிட்டு இந்த ஏழைப் பாழைகளுக்கு கொடுக்கும் சில்லறைக் கடன்களை வசூலிப்பதில் உங்களுடைய திறமையைக் காட்டாதீர்கள் என்ற ரீதியில் இருந்தது அவருடைய உரை..

கடன் பெற வந்திருந்தவர்களுக்கு கேட்க வேண்டுமா? கடனைத் திருப்பி செலுத்த வற்புறுத்தாதீர்கள் என்றபோது கரகோஷம் வானைப் பிளந்தது. திடலில் குழுமியிருந்த எங்களைப் போன்ற மேலாளர்களைப் பார்த்து முஷ்ட்டியை உயர்த்திக் காட்டினார்கள். அதாவது, ‘மவனே லோன கட்டுன்னு கேட்டே.. அவ்வளவுதான்..’ என்பதுபோலிருந்தது அவர்களுடைய செய்கை..

பல்லைக் கடித்துக்கொண்டு நிற்க வேண்டிய தலையெழுத்து.. நின்றோம்..

அமைச்சர் உரையாடலை முடித்துக்கொண்டு கடன் வழங்கும் விழாவைத் துவங்கினார். திடலை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வங்கியின் கடையின் வாயிலிலும் நின்றுக்கொண்டு அவர்கள் தயாராக வைத்திருந்த பொருட்களை சம்பிரதாயமாக ஒன்றிரண்டை கடன் பெற வந்திருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு அடுத்த கடைக்கு நகர்ந்தார்.

முதலில் அமைக்கப்பட்டிருந்த அரசு வங்கிகளுடைய கடையை முடிப்பதற்குள் அமைச்சருடைய பொறுமை எல்லையை கடந்திருந்தது. அதற்கு முக்கிய காரணம் கூட்ட நெரிசல். வங்கிகளும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு நூற்றுக் கணக்கில் பொருட்களை அடுக்கி வைத்து எல்லோருக்குமே அமைச்சரின் கரங்களால் கொடுக்க முனைந்தது..

எங்களைப் போன்ற தனியார் வங்கிகளின் கடைகள் இறுதியில் அமைக்கப்பட்டிருந்ததால் முதல் வங்கியினுடைய கடையில் துவங்கி என்னுடைய வங்கியின் கடைக்கு வந்தபோது சுமார் இரண்டு மணி நேரம் கடந்திருந்தது.. அவர் சற்றும் எதிர்பாராத அளவுக்கு கூட்டம் நாலா புறத்திலும் அவரை நெருக்கவே மனிதர் பொறுமையிழந்திருந்தார்.

என்னுடைய கடையில் நான் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த நபர்களில் இரு கைம்பெண்களுக்கு தையல் மிஷினும் கால்கள் இரண்டும் செயலிழந்திருந்த ஒரு நபருக்கு சக்கர நாற்காலியை அமைச்சர் கையால் வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தேன். அவரும் பேருக்கு தையல் இயந்திரத்தின் மேல் தன்னுடைய கரங்களை வைத்து ஒருவருக்கு கொடுத்து முடிக்க அவருக்கருகில் நின்றிருந்த ஒரு அரசு அதிகாரி அவருடைய காதில் ஏதோ ஓதினார். அமைச்சர் கோபத்துடன் என்னைப் பார்த்து, ‘என்ன மிஸ்டர் டிபார்ட்மெண்ட் ரெக்கமெண்ட் செஞ்ச யாருக்குமே நீங்க லோன் குடுக்காம நீங்களா யாரையோ கொண்டு வந்து குடுக்கறா மாதிரி ஒரு நாடகம் நடத்தறீங்களாமே? I don’t like this and I will not be a party to this farce.’ என்று விருட்டென்று விலகிச் செல்ல அங்கு குழுமியிருந்த கூட்டமே என்னை ஏதோ வில்லனைப் பார்ப்பதுபோல் பார்த்தது..

என்னுடைய மதுரை லயன் க்ளப் தலைவரும் உதவி தலைவரும் தாங்கள் பரிந்துரைத்த ஊணமுற்ற நபர்களுக்கு சக்கர நாற்காலி வழங்குகிறாரே என்ற எண்ணத்தில் விழாவுக்கு வந்திருந்து என்னுடைய கடை வாசலில் நின்றிருந்தனர். அவர்களுக்கும் அமைச்சரின் பேச்சு பெருத்த அவமானத்தை அளித்தது. இருப்பினும் அமைச்சருக்கு அஞ்சி உடனே எனக்கருகில் நின்றிருந்த அவர்கள் இருவருமே ஏதோ சம்பந்தம் இல்லாதவர்கள்போல் ஒதுங்கி நின்றுக்கொண்டனர்.

எனக்கு அவமானமாகப் போனது. ஆயினும் அதை பெரிதுபடுத்தாமல் என்னுடைய கடை வாசலிலேயே நின்றிருந்தேன். என்னுடைய மேலாளர் நண்பர் ஒருவர், ‘ஜோசப் மினிஸ்டர் போறதுக்குள்ள நீங்க போய் அவர்கிட்ட சாரி சொல்லிடறதுதான் நல்லது. ஏற்கனவே DRDA ஆஃபீசருக்கு ஒங்கள புடிக்கவே புடிக்காது. அவர்தான் அமைச்சர் காதுல ஓதியிருக்கார். அதனால..’

எனக்கு சட்டென்று கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டு, ‘நீங்க வேற சார். நியாயமா பார்த்தா அவர்தான் எங்கிட்ட வந்து மன்னிப்பு கேக்கணும்.. என்ன நடக்குது, எங்க இருக்கோங்கற நினைப்பே இல்லாம பேசிட்டு போறாரு.. நான் போய் மன்னிப்பு கேக்க போய் மேற்கொண்டு ஏதாச்சும் பேசினாலும் பேசுவார். நடந்தது நடந்துருச்சி.. இனி என்ன ஆகப்போவுதோன்னு பயந்து என்ன ஆகப்போவுது.. என்ன நடந்தாலும் ஃபேஸ் பண்ணித்தான சார் ஆகணும்.. I will face it.’ என்றவாறு என்னுடன் வந்திருந்த என்னுடைய உதவி மேலாளரிடம், ‘நீங்க பேக் பண்ணிட்டு ஆஃபீசுக்கு போங்க சார்.. நான் வீட்டுக்கு போறேன்.. நாளைக்கு பாக்கலாம். நீங்க இங்கருந்தா மறுபடியும் பிரச்சினை வந்தாலும் வரும்..’ என்றேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று கடன் பெற வந்திருந்த அனைவரையும் அடுத்த நாள் வங்கிக்கு வருமாறு கேட்டுக்கொண்டு நான் உடனே அங்கிருந்து புறப்பட்டேன். அன்று மாலை வங்கி மேலாளர்கள் சார்பில் அமைச்சருக்கு ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் கலந்துக் கொள்ளவில்லை..

என்னதான் வீராப்பாகப் பேசிவிட்டு வீடு திரும்பினாலும் அன்று முழுவதும் மன நிம்மதியில்லாமல் படுக்கையில் கிடந்து உழன்றுக்கொண்டிருந்தேன்..

தொடரும்...

13 comments:

sivagnanamji(#16342789) said...

WELLDONE JOSEPH. HATS OFF!

200 யத் தாண்டி இந்த எபிசோட முடியுங்க

அருண்மொழி said...

200வது பதிவிற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுவது (அதுவும் பல வருடங்களுக்கு முன் நடந்ததை நினைவு கூர்ந்து) என்பது மிக கடினமான காரியம்.

துளசி கோபால் said...

200 வது தி.பா. வுக்கு வாழ்த்துகளைப் பிடியுங்க மொதல்லெ.

என்ன அமைச்சர்? எல்லாம் சின்னத்தனம்......


உங்க மனசு எவ்வளவு உளைஞ்சுருக்குமுன்னு புரியுது.

dondu(#4800161) said...

சிறு தொழில்களுக்குக் கடன் கொடுப்பது தவறில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் வரைமுறை என்று உண்டு. அதை மதிக்காது எல்லா பணமும் தன் அப்பன் வீடுப் பணமாக நினைத்த அந்த மத்திய மந்திரியின் சின்ன புத்தித்தனம் கண்டிக்கத் தகுந்ததே (அவர் பெயரைத்தான் இந்த நாடே அறியுமே).

அதே மகானுபாவர் பிற்காலத்தில் அவர் அளிக்கச் செய்த கடன்கள் வாராக்கடனாகப் போன போது எல்லா விதிமுறைகளையும் பார்த்து விட்டே முதலில் சம்பந்தப்பட்ட மேனேஜர்கள் கடனளித்திருக்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அவர் சாடிய பெரும் தொழிலதிபர்கள் பலர் பெற்ற கடன்களும் இவர் மாதிரியான அரசியல் வாதிகளின் தலையீட்டால் வந்தவையே. உதாரணம் இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் மாட்டிக் கொண்ட விவகாரம். அதற்கு மூல காரணமாக இருந்த மூப்பனார் பிற்காலத்தில் அதற்கும் தனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்ற ரேஞ்சில் பேசினார். அவர் அனுப்பித்த நபர்களுக்கு விதி முறை அனுமதித்தால் மட்டுமே கடன் தருமாறு கூறியதாக அந்த மனிதர் பேட்டியளித்தார். 'அதை நீர் என்ன கூறுவது' என்றுதான் பேட்டியை தொலைக் காட்சியில் பார்த்த எனக்குத் தோன்றியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

tbr.joseph said...

வாங்க ஜி!

200 யத் தாண்டி இந்த எபிசோட முடியுங்க //

201ல முடிஞ்சிரும்..

tbr.joseph said...

வாங்க அருண்மொழி,

200வது பதிவிற்கு வாழ்த்துக்கள். //

நன்றிங்க..

தொடர்ந்து எழுதுவது (அதுவும் பல வருடங்களுக்கு முன் நடந்ததை நினைவு கூர்ந்து) என்பது மிக கடினமான காரியம்//

எத்தனையோ ஆட்டோபையாக்ரஃபி வந்துருக்குங்களே.. அதுமாதிரிதான் இதுவும்.. அனுபவங்கள் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏற்படுவதுதானே.. அதை நாம் பலருடனும் பேசுகையில் பகிர்ந்துக்கொள்வதில்லையா.. நான் எழுத்தில் வடித்திருக்கிறேன்.. அவ்வளவுதான்..

tbr.joseph said...

வாங்க துளசி,

200 வது தி.பா. வுக்கு வாழ்த்துகளைப் பிடியுங்க மொதல்லெ.//

புடிச்சிட்டேன்.. நன்றி துளசி..

என்ன அமைச்சர்? எல்லாம் சின்னத்தனம்......//

ஏறக்குறைய எல்லா அரசியல்வாதிகளும் இப்படித்தான்.. இல்லன்னாதான் நாடு எங்கயோ போயிருக்குமே..


உங்க மனசு எவ்வளவு உளைஞ்சுருக்குமுன்னு புரியுது. //

ஆமாங்க.. அத அனுபவிச்சவங்களுக்குத்தான் புரியும்..

tbr.joseph said...

வாங்க ராகவன் சார்,

நீங்க சொன்ன அத்தனையும் நூத்துக்கு நூறு உண்மைதான் சார்..

நீங்க சொன்ன சேர்மனுக்கு ஒன்னும் ஆகலையே.. பாத்தீங்க இல்லையா?

இந்தியன் வங்கி சுமார் 3600 கோடி நஷ்டக்கணக்கை ஒட்டுமொத்தமாக எழுதித் தள்ளியிருக்கிறது..

G.Ragavan said...

ஜோசப் சார், நீங்க எடுத்த முடிவு நேர்மையான முடிவு. ஆனா அது கண்டிப்பா உங்களுக்கு நல்லதத்தான் கொண்டு வந்திருக்கும். அதில் ஐயமில்லை. முதல் வினை எதிர்வினையாக இருந்தாலும் அதன் விளைவாக வந்த வினைகள் நல்வினைகளாகத்தான் இருந்திருக்க வேண்டும். சரியா?

200 பதிவிட்டமைக்கு எனது வாழ்த்துகள்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

முதல் வினை எதிர்வினையாக இருந்தாலும் அதன் விளைவாக வந்த வினைகள் நல்வினைகளாகத்தான் இருந்திருக்க வேண்டும். சரியா?//

ரொம்ப சரி.. ஆனா இப்படிப்பட்ட சோதனையான சமயங்கள்ல எனக்கு ஆறுதலாவும் நம்பிக்கையும் தந்தது என்னுடைய ஆழமான இறை நம்பிக்கைதான்..

200 பதிவிட்டமைக்கு எனது வாழ்த்துகள்.//

நன்றி ராகவன்.

மணியன் said...

200வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! 201 உடன் நிறுத்தப் போகிறீர்களா ? ஓ, மதுரை வாசத்தையா?

tbr.joseph said...

வாங்க மணியன்,

200வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! 201 உடன் நிறுத்தப் போகிறீர்களா ? //

நாளைய பதிவ படிச்சா புரியும்னு நினைக்கேன்..

இலவசக்கொத்தனார் said...

200!

வாழ்த்துக்கள் டி.பி.ஆர்.