13 March 2006

ஏன்.. ஏன்.. ஏன்?

கடந்த வாரம் என் நண்பர் முத்து(தமிழினி) அவர்களின் 'அந்த காலத்தில்' என்ற தலைப்பில் எழுதிய பதிவை வாசித்ததும் எனக்குத் தோன்றியவைகளை ஒரு தனி பதிவாக எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

முத்துவின் பதிவைப் படிப்பதற்கு முந்தைய நாள் இரவு என்னுடைய மகள் படிக்கும் கல்லூரி மாணவர் ஒருவர் (என் மகள் இறுதியாண்டு. இம்மாணவர் மூன்றாம் ஆண்டு. ஆனாலும் என் மகள் தலைமையில் உள்ள சுமார் இருபத்தைந்து மாணவ/மாணவியர் கொண்ட குசும்பு குழுவின் உறுப்பினர்களுள் ஒருவராம்!) தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது அவருடைய கல்லூரி பேருந்துடனேயே மோதி, விபத்துக்குள்ளாகி சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.

அவருடைய வயது 22.

‘எப்ப பார்த்தாலும் சிரிச்சிக்கிட்டே இருப்பாம்ப்பா. நல்லா வேற படிப்பான். அவங்க பேட்சில அவந்தான் ஃபர்ஸ்ட் செமஸ்டர்லருந்து ஃபர்ஸ்ட் ராங்க் வருவான்.. நல்ல சிவப்பா இருப்பான். என்னெ எப்ப பார்த்தாலும் என்னக்கா மூஞ்சில கொஞ்சம் வெள்ள பெயிண்ட் அடிச்சிக்கிட்டா நீங்களும் என்ன மாதிரி ஆயிரலாம் இல்லேம்பான்.. பாவம்ப்பா அவன்.. அவங்கப்பாவும் அம்மாவும் டைவோர்ஸ் பண்ணிக்கிட்டு அப்பா அமெரிக்காவுல, அம்மா துபாய்ல, தங்கச்சி ஊட்டியில, இவன் மெட்றாஸ்ல.. ஆனாலும் அந்த வருத்தத்த வெளிய காமிச்சிக்காம எப்ப பார்த்தாலும் சிரிச்சிக்கிட்டு.. அவனுக்கு ஏம்ப்பா இப்படி நடந்தது?’ என்றாள் என் மகள். ‘இறைவன், இறைவன்னு எப்ப பார்த்தாலும் எழுதிக்கிட்டிருக்கீங்களே.. நீங்க சொன்ன இறைவனாப்பா இந்த மாதிரியெல்லாம் பண்றார்? எல்லாம் சுத்த வேஸ்ட்ப்பா..’

இப்படி மணிக்கணக்காய் அரற்றிக்கொண்டிருந்த என் மகளை எப்படி தேற்றுவதென தெரியாமல்..

நேற்று, ஞாயிறன்று என்னுடைய தேவாலயத்தில் ஆங்கில திருப்பலி நேரத்தில் நான் கேட்ட பிரசங்கமும் (பாதிரியார் மிக அருமையான ஆங்கிலப் புலமை பெற்றிருந்ததால் அவரால் உணர்ச்சி ததும்ப சொற்பொழிவாற்ற முடிந்தது) இதையொட்டியே இருந்தது ஒரு தற்செயலான காரியம்தான் என்றாலும் அவர் எடுத்துரைத்த இரண்டு சம்பவங்களும் கூட இப்பதிவை எழுத தூண்டியது எனலாம்.

முதலாவது: என்னுடைய கோடம்பாக்கம் பங்கில் அங்கத்தினர்களாகவிருந்த அப்பா, அம்மா, மகள் என்ற ஒரு சிறு குடும்பம். கடந்த வாரத்தில் +2 பரீட்சையில் முதல் இரண்டு பரீட்சைகள் எழுதி முடித்துள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ‘உடம்பெல்லாம் பயங்கரமா வலிக்குதப்பா..’ என்று புகார் செய்த மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்களுக்கு அதிர்ச்சி.. தங்களுடைய ஒரே செல்ல மகளுக்கு ப்ளட் கான்சர்..! கலங்கி நின்ற பெற்றோர் என்னுடைய பங்கு குருவிடம் கேட்ட கேள்வி.. ‘ஏன் ஃபாதர் எங்களுக்கு இந்த சோதனை?’

இரண்டாவது: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி சரித்திரத்தின் ஒரே கறுப்பு சாம்பியன் தான் ஒரு HIV Positive என அறிந்தபோது ஆர்தர் ஆஷ் தன்னுடைய நெருங்கிய மத போதகர் ஜெஸ்சி ஜாக்சனிடம் கேட்ட கேள்வி ‘I thought God gave me the brightest crown in the world when I won the Wimbledon. Why now, this Cross to me?’

ஏன்... ஏன் ... ஏன்?

மூன்று சம்பவங்கள், மூன்று கேள்விகள்..

ஏன்?

‘பதினெட்டு வயசு வரைக்கும் எல்லா க்ளாஸ்லயும் எங்க பொண்ணுதான் ஃபாதர் ஃபர்ஸ்ட். கவிதைப் போட்டி, கதைப் போட்டி, பாட்டு போட்டின்னு எல்லா போட்டிகள்லயும் ஃபர்ஸ்ட் வந்து எங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷத்துக்கு மேல சந்தோஷத்த வாரிக் குடுத்த எங்க பொண்ணுக்கா ஃபதர் இந்த சோதனை? என்ன கொடுமை ஃபாதர்..?

மருத்துவமனையில் இரத்த புற்று நோய்க்கு சிகிச்சைக்கு தயாராகிவரும் இளம் மாணவியின் பெற்றோர் கேட்கும் கேள்வி இது..

அமெரிக்காவிலிருந்து வந்த தந்தை முகத்தில் எந்தவித வருத்தத்தின் சாயலும் இல்லாமல் நிற்க.. ‘நீங்க செஞ்ச அக்கிரமந்தாங்க எம்புள்ளய இப்படி அநியாயமா கொன்னுருச்சி..’ என்று அரற்றும் தாயின் குரல் என் மகளை நேற்றும், அதற்கு முந்தைய நாளும் உறங்க விடாமல் செய்கிறதே..

தான் எந்தவித தவறும் செய்யாதிருந்தும் தன்னுடைய முந்தைய இரண்டு இருதய அறுவைச் சிகிச்சைகளின்போது எய்ட்ஸ் நோய்க் கிருமிகளுடனான இரத்தம் ஏற்றப்பட்டதன் மூலம் எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் இள வயதிலேயே மரிக்க நேர்ந்த ஆர்தர் ஆஷின்.. Why me? என்ற கேள்வி..

சும்மாவா சொல்கிறார்கள்?

Inscrutable are the ways of God என்று..

(இதை என்னுடைய 'என்பைபிள்' வலைப்பதிவில் இடலாம் என்றுதான் தயார் செய்தேன். ஆனால் ஆன்மீகப் பதிவுகளை படிப்பதில் மிகச் சிலரே விருப்பம் காட்டுவதால் இப்பதிவில் இடுகிறேன்.)

18 comments:

துளசி கோபால் said...

இப்படித்தான் 'ஒய் மீ' பல இடங்களிலே, நம்மில் பலர் வாழ்க்கையிலே கேட்டுக்கறோம். ஆனால் எதாவது நல்ல விஷயத்தை
அனுபவிக்கறப்ப இந்தக்கேள்வியைக் கேட்டுக்கறமா? அப்ப 'ஏதோ பூர்வ ஜென்ம பலன்'ன்னு பெருமைப்பட்டுக்கறோமில்லையா?

டி ராஜ்/ DRaj said...

சார்:
உங்க பொண்ணு கேட்கும் கேள்விகளுக்கு எவரும் பதிலளிக்க முடியது. அவரது நண்பனின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

ஆனால் போதுவாக...

துன்பம் வரும் போது "கடவுளே, என் எனக்கு மட்டும் இப்படி'ன்னு புலம்பும் நாம் சந்தோசம் வரும்போது ஒரு நொடியேனும் "இந்த மகுடத்திற்கு தகுதியானவர்கள் எத்தனையோ பேர் இருக்கையில் ஏன் என்னை தேர்ந்தெடுத்தீர் கடவுளே?" என்ற கேள்வியை கேட்டிருப்போமா?

டி ராஜ்/ DRaj said...

சார்: அந்த பாதிரியார் சொன்ன இரு சம்பவங்களுக்கும் என்ன விளக்கம் சொன்னார்? தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். முடிந்தால் சொல்லுங்களேன்.

tbr.joseph said...

வாங்க துளசி,

நீங்க கேக்கறதும் நியாயம்தான்..

ஆனாலும் துக்கத்துக்குத்தானே தோழர்களே இல்லை..

சந்தோஷத்துக்கு எத்தனை பேர் கூடி அதுல எனக்கும் ஒரு பங்குன்னு வந்துடறாங்க? அப்போ கடவுள எங்க நினைக்கறதுக்கு நேரம்?

எல்லாரும் அழறப்போ எனக்கு மட்டும் எதுக்கு இந்த சந்தோஷம்னு கேக்க தோணுமா?

ஆனா துக்கம் வரும்போது.. வேற வழி தெரிய மாட்டேங்குதே.. ஐயோ நீயும் என்ன கை விட்டுட்டியே சாமின்னுதானே அரற்ற தோனுது?

tbr.joseph said...

நீங்க சொல்றது சரிதான் ராஜ்.

ஆனா என்னோட வெற்றியில எனக்கும் ஒரு பங்கு இருக்கேங்கற எண்ணத்துல கடவுள ஏன் நான் நினைக்கணும்..

ஆனா துக்கத்துல எனக்கெந்த பங்கும் இல்லையேன்னுதானே நான் நினைச்சு புலம்ப வேண்டியிருக்கு..

tbr.joseph said...

ராஜ்,

பாதிரியார் சொன்ன வாக்கியம்தான் என்னுடைய பதிவில் இருந்த கடைசி வாக்கியம்..

inscrutable are the ways of God!

இறைவனின் செயல்களுக்கு விடை காண முயல்வது வீணே என்று..

அவர் கூறிய கருத்துகள் சில மிக அருமையானவை.. அவற்றை தொகுத்து என்னுடைய 'என் பைபிள்' பதிவில் தவக்கால சிந்தனைகள் என்ற தொடரில் ஒரு தனி இடுகையாக எழுதலாம் என்றிருக்கிறேன். அநேகமாய் புதன் கிழமை இடுகிறேன்.

தேவ் | Dev said...

அள்ளிக் கொடுக்கும் போது இறைவனை ஏனோ நாம் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை? அவன் கொடுத்ததை அவன் திருப்பி எடுக்கும் போதோ நாம் நிலைக்குலைந்துப் போகிறோம்...

எல்லாம் பரமத் தகப்பனின் செயல்.

//inscrutable are the ways of God!//

How true!!!

மணியன் said...

//இதை என்னுடைய 'என்பைபிள்' வலைப்பதிவில் இடலாம் என்றுதான் தயார் செய்தேன். ஆனால் ஆன்மீகப் பதிவுகளை படிப்பதில் மிகச் சிலரே விருப்பம் காட்டுவதால் இப்பதிவில் இடுகிறேன்.//

நீங்கள் பின்னூட்டங்களை வைத்து இந்த முடிவுக்கு வந்திருந்தால் என்னைப் போன்ற படித்து பின்னூட்டம் இடாதவர்களை கணக்கில் எடுத்திருக்க மாட்டீர்கள்.

tbr.joseph said...

வாங்க மணியன்,

இல்லைங்க. என்னோட என்பைபிள் பதிவிலருக்கற விசிட்டர்ஸ் கவுண்டருடைய ரீடிங்க்ஸ்படி சுமார் ஐம்பது பேருக்கும் குறைவாகவே அதை படிக்கின்றனர்.

அதனால்தான் அப்படி எழுதியிருந்தேன்.

tbr.joseph said...

மீண்டும் வாங்க துளசி,

கடவுளின் செயல்களுக்கு நம்மால் விடை காண முடிந்தால் நாமும் தேவர்களின் ஸ்தானத்துக்கு உயர்த்தப்பட்டுவிடுவோம்னு நினைக்கறேன்..

முத்து(தமிழினி) said...

,இதற்கு என்னாலான பதில்களை நாளை கொடுக்க முயற்சிக்கிறேன்

K.R.Athiyaman said...

inscrutable are the ways of God!

the following is a mail i had sent to Writer Sujatha sometime ago :

Dear Sir,

Hindu concepts of transmigration of soul, rebirth can be used to justify or rationalise the unfairness of life on earth. God' dharma or ethics is incomprehensible to our human logic. Good people suffer needlessly while evil people flourish and die peacefully. so it seems. In Astrology, the fifth house denotes prevoius births or purva punya sthanam. And our current life and events are based on tallying the good/bad things we had done in prevoius births.

Only if we can understand or accept such logic can we justify or rationalise life's contradictions and unfairness.

Hope you must have read Razor's Edge by your favourite author Somerset Maughaum, based on Ramanar and India. It is his most important work. Pls re-read Larry's
experiences and inferences again. About Godliness and human life and soul.

Also R.K.Narayan's auto biography "My Days" and semi-autobiographical novel "English Teacher" are important books about tranmigration of soul. he says he established contact with his late wife (who passed away in 1939) ; and he is not unscientific.

I am an ametuer astrologer..

K.R.Athiyaman said...

Another mail to Writer Sujatha :

Dear Sir,

The booklet "Oru Vingana Parvayilirundhu" (1984) is
important and lucidly written. I consider it as one of your best works.

Only one matter has not been mentioned.Dual nature of particles (uncertainity principle) which tells about wave/matter state or nature of particles ; can be co-related to our Siva Sakthi (and
ardhanareeshwarar);matter becomes energy and vice versa ; sakthi(energy) becomes sivam (matter) ; and sivasakthi is the nature of universe. (..movie: Thiruvilayadal and the famous dual between sivam andsakthi)

All things and actions in this universe are co-related in distance and time. Saravam Brahma mayam. For e.g a wave in a beach is the net result of all forces and parameters of ocean and land ,wind and time.

Astrological perspective too can be fit into this view. The postions and movements of planets affect and control life events...

K.R.Athiyaman said...

To : Thiru Sujatha

Dear Sir,

Panchaboohtams can be compared to the different states of matter as :

Nilam : solids
Neer : Liquids
Kattru : gas
Ahayam : vacuum/space (or the fourth state of matter : plasma ?)
Nerupu : heat energy or photons, etc which gets released or absorbed when matter converts from one state to another.

Aquarian age had dawned as per western astrology. Democracy, concepts of equality and fraternity ; technological development and telecommunications,
sending aid and care packages, disintegeration of family values are some of the symtoms.

Ilayaraja's Thiruvasagam composition is a very good
example of Aquarian age. Fusion music and cross cultural exchanges as never before.

aravindaan said...

I am also in the same boat asking God Why for me

After marriage(29 days) when we return from Tirupathy we met with accident on the spot she died. I love her so much and so she. She helps every one so generous. why me..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//எதாவது நல்ல விஷயத்தை
அனுபவிக்கறப்ப இந்தக்கேள்வியைக் கேட்டுக்கறமா? அப்ப 'ஏதோ பூர்வ ஜென்ம பலன்'ன்னு பெருமைப்பட்டுக்கறோமில்லையா?//

துளசியக்கா!
அருமையான கேள்வி கேட்டுள்ளார்..
கடவுளை நம்பினால், இதுதான் நியதி என்பதை நம்பியே ஆகவேண்டும்.
வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனையிருக்கும்..
கவியரசர் நல்லாச் சொல்லியுள்ளார்.
செத்த பிணத்தைப் பார்த்து சாகும் பிணங்கள் அழுகிறது என்றார் பட்டனத்தார்.
இதை எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு, மிஞ்சியிருக்கும்
என் உறவுகளுக்கு ஈழத்தில் என்ன??ஆனதோ எனும் வேதனையிருக்கு,
தினமும் சஞ்சலத்துடன் காலம் கழிகிறது.
இன்றுவரை எம் உடலுள் என்ன வருத்தம் உண்டோ??
யாரை நோவது...
இது வாழ்வா???
ஆனால் வாழத்தானே வேண்டும்..
பிறந்து விட்டோமல்லவா???

G.Ragavan said...

தெரியலையே ஜோசப் சார். தெரியலையே. பல சமயங்கள்ள ஏன்னு தெரியாம முழிக்கிறதுண்டு. ஆனா நல்லதுக்குத்தான்னு மனசத் தேத்திக்கிட்டு வாழ்க்கையத் தொடர்ந்து செய்ய வேண்டியதுதான்.

அம்பாளடியாள் வலைத்தளம் said...

வணக்கம் !
இன்பத்திலும் துன்பத்திலும் இறைவன் மீது நம்பிக்கை கொள் அதுவே
வாழ்வுக்குகந்த வழி என்பதை மீண்டும் ஒரு முறை நினைவில் நிறுத்திய
சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா .இன்று தான் தங்களின் வலைத்
தளத்தைக் காணும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டேன் மிக்க மகிழ்ச்சியாக
உள்ளது.தொடர்கிறேன் தங்கள் பகிர்வினையும் முடிந்தவரை .