16 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 99

நான் நேற்றுக் குறிப்பிட்டிருந்த வாடிக்கையாளருடைய விஷயம் இருக்கட்டும்..

இன்று வேறொரு வாடிக்கையாளரைப் பற்றி கூறுகிறேன்..

இவரும் தஞ்சையில் பல வருடங்களாக போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டிருந்தவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என்னை வந்து சந்தித்தார்.

அவர் என்னுடைய அறைக்குள் நுழைந்ததுமே ஜவ்வாது வாசனை மூக்கைத் துளைத்தது. பட்டு வேட்டி, பட்டு சட்டை, கழுத்தில் பருத்த தங்கச் சங்கிலி, மணிக்கட்டில் தங்கபட்டையுடன் கூடிய கைக்கடிகாரம், இத்யாதிகளுடன் பணக்காரத்தனமாய்....

கையோடு தன்னுடைய நிறுவனத்தின் கடந்த மூன்று வருட நிதிநிலை அறிக்கை (Balance sheet) யையும் கொண்டுவந்திருந்தார்.

‘சார் பரம்பரை பரம்பரையா நாங்க இந்த தொழில்ல இருக்கோம். என் கம்பெனிக்கு பத்து, பண்ணண்டு வண்டிங்க இருக்கு. ஒன்னுலயும் ட்யூ கட்டலேங்கற பேச்சுக்கே இடமில்லை. சாதாரணமா நான் பேங்குகளுக்கு லோனுக்கு போறதில்லை.. சேட்டுங்க கிட்டதான் போறது.. வண்டிய புக் பண்ணமா.. சேட்டுக்கிட்ட லோன் போட்டமான்னு இருந்துருவேன். வட்டி கொஞ்சம் ஜாஸ்திதான். ஆனா ஒரு அஞ்சாறு மாசம் லோன் கட்டலைன்னாலும் சேட்டுங்க வட்டி வந்தா போறும்னு இருப்பாங்க. ஆனா பேங்குல அப்படியில்ல. நோட்டீஸ் மேல நோட்டீசா அனுப்பி வீட்டுப் பொம்பளைங்க முன்னால மானத்த வாங்கிருவாங்க.’ என்றார் பந்தாவாக.

அப்ப ஏன்யா இங்க வந்தீரு என்று கேட்க வேண்டும்போலிருந்தது. இருப்பினும் அவர் பேசட்டும் என்று அமைதியாக இருந்தேன்.

‘கீழ வீதியில மார்க்கெட்டுக்கு பக்கத்துலருக்கற உடையார்தான் உங்க பேர சொல்லி நீங்களும் நம்ப ரோட்டரி க்ளப் மெம்பர்தான் போய் பாருங்க. எதுக்கு சேட்டுங்கக்கிட்ட வட்டிய குடுத்து அல்லாடறீங்கன்னார். அதான்...’ என்று இழுத்தார்.

அவர் கூறிய உடையார் எனக்கு அறிமுகமானவர்தான். நான் அங்கத்தினராகவிருந்த ரோட்டரி க்ளப் கூட்டம் ஒன்றில்தான் அவரையே சந்தித்தேன். ஆனாலும் இத்தகைய க்ளப் கூட்டங்களுக்கு மட்டும் சென்று வந்தேனே தவிர அதிலிருந்த அங்கத்தினர்களுடன் வர்த்தகரீதியிலான எந்தவித உறவையும் வைத்துக்கொள்வதில்லை என்பதில் உறுதியாயிருந்தேன். அதில் சிலருக்கு மனவருத்தம் இருந்ததென்றாலும் நான் அதைப் பொருட்படுத்தியதில்லை.

நான் மட்டுமல்ல. என்னைப் போலவே ரோட்டரி மற்றும் லயன் க்ளப் உறுப்பினராயிருக்கும் எல்லா வங்கி மேலாளர்களுமே அப்படித்தான் நினைப்பார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. இத்தகைய க்ளப் உறுப்பினர்கள் பெரும்பாலும் வங்கிகளில் கடன் பெறுபவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுடனான வங்கி மேலாளர்- வாடிக்கையாளர் உறவில் அடிக்கடி அபிப்பிராய பேதங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அது க்ளப் கூட்டங்களையும் பாதித்துவிட வாய்ப்பிருக்கிறதென்பதால் அவர்களுடன் வர்த்தக உறவை ஏற்படுத்திக்கொள்வதை தவிர்க்கவே வங்கி மேலாளர்கள் பலரும் விரும்புவர்..

இதிலிருந்து ஒரேயொரு நபருக்கு மட்டும் விதிவிலக்கு இருந்தது. அவர்தான் நான் தஞ்சையில் கிளை திறக்க மிகவும் உதவியாயிருந்த சேட். அவருடனான வங்கி-வாடிக்கையாளர் உறவில் அபிப்பிராய பேதங்கள் வர வாய்ப்பே இருந்ததில்லை. அவருடைய வர்த்தகம் அத்தகையது. அவரை விடவும் அவரிடம் ஹ¤ண்டி மூலம் கடன் பெற்றிருந்தவர்கள்தான் எங்களுக்கு முக்கியம்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

என்னை அணுகிய வாடிக்கையாளர் தொடர்ந்து பேசினார். ‘சார் இப்ப இருக்கற பண்ணண்டு வண்டிங்கள்ல இருக்கற மொத்த ட்யூவையும் பார்த்தாக்கூட வண்டிங்களோட இன்னைய மார்க்கெட் ரேட்ல சுமார் முப்பது பர்சண்ட்தான் இருக்கும். மிஞ்சிப் போனா இன்னும் ஒரு வருஷத்துல எல்லா ட்யூவும் முடிஞ்சிரும். அதனால இன்னும் ஒரு நாலு வண்டி வாங்கினாலும் என்னால உங்க அசலையும் வட்டியையும் ஈசியா கட்டிற முடியும். என்னை பத்தி நீங்க மார்கெட்லயும் விசாரிச்சிக்கலாம்.. இல்ல நான் கடன் வாங்கியிருக்கற சேட்டுங்கக் கிட்டயும் விசாரிச்சிக்கலாம்.’

அவருடைய குரலில் தொனித்தது தன்னம்பிக்கையா அல்லது அகங்காரமா என்ற யோசனையுடன் அவரையே பார்த்தேன்.

‘சரி சார். உங்க பேலன்ஸ் ஷீட்ட குடுத்துட்டு போங்க. எனக்கு ஒரு ரெண்டு நாள் குடுங்க... பார்த்துட்டு சொல்றேன்.’ என்றேன். தொடர்ந்து, ‘சாதாரணமா எங்க பேங்க்ல மார்ஜின் தொகை போக வண்டியோட மதிப்புக்கு ஈடா சொத்து ஜாமீன் கேட்போம். விவசாய நிலமா இல்லாம வீடு, கடை, இல்லன்னா வீட்டு மனை ஏதாச்சும் வேணும்.’ என்றேன்.

அவர் என்னுடைய கேள்வி புரியாததுபோல பார்த்தார். ‘சொத்து ஜாமீனா? எதுக்கு சார்? அதெல்லாம் என்னால தர முடியாது சார். சொத்து இல்லாம இல்லே..ஆனா அத அடகு வச்சித்தான் தொழில் பண்ணணும்னா அதுக்கு எங்கப்பா ஒத்துக்க மாட்டார். உங்களால முடியலைன்னா விட்டுருங்க. இதுக்குத்தான் சேட்டுங்கக்கிட்ட கொஞ்சம் வட்டி ஜாஸ்தியானாலும் எங்கள மாதிரி ஆளுங்க போறது.’ என்று எழுந்துக்கொண்டார்.

நான் அவரை தடுத்து நிறுத்துவேன் என்று எதிர்பார்த்தார் போலிருந்தது. நான் ஒன்றும் பேசாமல் அவர் கொடுத்த நிதிநிலை அறிக்கை அடங்கிய கோப்பை அவரிடம் திருப்பிக் கொடுத்ததும் ஒரு நிமிடம் திகைத்துப்போய் பார்த்துவிட்டு என் கையிலிருந்த கோப்பை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு என்னுடைய அறைக்கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறினார்.

சரி போனால் போகட்டும். ஆளைப் பார்த்தாலே சரியில்லை. அந்த ஆளோட வேட்டியும் ஜிப்பாவும், கழுத்துல, கைல மாட்டிக்கிட்டிருக்கற நகைகளும்.. எல்லாம் வேஷம்.. என்று நினைத்துக்கொண்டு என் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

என் அறையை விட்டு அவர் வெளியேறிய விதம் என்னுடைய கிளையில் என்னுடன் பணிபுரிபவர்களையும் ஒரு சில வாடிக்கையாளர்களையும் அதிர்ச்சியுற வைத்தது என்று நினைக்கிறேன்.

அடுத்த நிமிடமே என் அறைக்குள் நுழைந்த என்னுடைய காசாளர், ‘என்ன சார். என்னாச்சி?’ என்றார்.

நான் சிரித்துக்கொண்டே நடந்ததைச் சுருக்கமாக கூறினேன். அவர், ‘இவ்வளவுதானா சார். நான் என்னவோ, ஏதோன்னு பயந்துட்டேன்.’என்று சிரித்தவாறு திரும்பிச் சென்றார்.

அவர் வெளியேறி ஐந்து நிமிடத்திற்குள் என்னுடைய கிளை உரிமையாளருடைய மூத்த சகோதரர் என்னைத் தேடிக்கொண்டு வந்தார்.

வந்ததும், சற்று முன் வந்திருந்த வாடிக்கையாளரின் பெயரைக் குறிப்பிட்டு ‘அவர் உங்க பேங்க்லருந்து இறங்கிப் போனத பார்த்தேன். ஏதாச்சும் பிரச்சினையா சார்?’ என்றார்.

நான் வியப்புடன், ‘இல்லையே..’ என்றேன். ‘ஏன் கேக்கறீங்க?’

எந்த ஒரு வாடிக்கையாளரைப் பற்றி என் வங்கியில் உள்ள ஊழியர்களைத் தவிர்த்து யாரிடமும் அனாவசியமாக நான் கூறுவதில்லை, தேவைப்பட்டால் தவிர.

‘சார், அவர் யாருன்னு உங்களுக்கு சரியா தெரியலைன்னு நினைக்கிறேன். அவருடைய மாமனார் குடும்பம் தஞ்சாவூர்ல பெரிய செல்வாக்குள்ள குடும்பம்.. ஊர சுத்தி இருக்கற சொத்த பராமரிக்கவே ஒரு தனி ஆஃபீஸ் இருக்குன்னா பார்த்துக்கங்களேன். அவரோட ஒரே பொண்ணோட புருஷன் இவர். அதாவது மருமகன்.  இவர் மாமனார் அளவுக்கு இல்லன்னாலும் இவர் குடும்பமும் செல்வாக்குள்ள குடும்பம்தான். இருக்கற சொத்த வச்சே பத்து தலைமுறைக்கும் சாப்பிடலாம். ஆனாலும் இவர் தனியா ஒரு லாரி கம்பெனிய ஆரம்பிச்சி தன் கால்லதான் நிப்பேன்னு நிக்கறார். யார் வம்பு தும்புக்கும் போமாட்டார். இவரோட சம்சாரமும் அதே மாதிரித்தான். அந்த பொண்ணோட அப்பா நினைச்சா திருச்சிலருந்து சாரதாஸ் கடையவே இங்க கொண்டு வந்துரலாம். ஆனா அவங்களும் இவரும் நம்ம கடைக்கு வந்துதான் துணி எடுப்பாங்க. ஏள பாளையெல்லாம் பண்டிகைக்கு பட்டு எடுத்து உடுத்துற காலத்துல அந்த பொண்ணு நூல் சேலைதான் எடுக்கும். என்னம்மா நீங்கன்னா அமைதியா ஒரு சின்ன சிரிப்பு சிரிக்கும். ஆனா இவர் அந்த பொண்ணுக்கு நேர் எதிர்.. அதாவது உடுத்துறதுல.. இவருக்குன்னே திருச்சியிலருந்து பட்டு வேட்டியும் ஜிப்பா தைக்கறதுக்கு பட்டு துணியும் வாங்கிட்டு வந்து குடுப்பேன். ஆனா ஒன்னு சார். இவர் பாக்கறதுக்குத்தான் பந்தாவா இருப்பார்.. என்ன கொஞ்சம் முன்கோபி வேற. மத்தபடி தங்க கம்பி சார். அவர் உங்க கிட்ட என்னத்துக்கு வந்தார்னு எனக்குத் தெரியலை. ஆனா லோனுக்குன்னு வந்திருந்தா கண்ண மூடிக்கிட்டு குடுக்கலாம் சார்.’ என்றார்.

அப்படியா? என்று நினைத்துக்கொண்டு, ‘அப்படியா சார்?’ என்றேன்.

அவருடைய முகம் சட்டென்று களையிழந்து போனதிலிருந்தே அவர் சொன்னதை நான் அவ்வளவாக நம்பவில்லை என்பதை அவரும்  புரிந்துக்கொண்டார் என்று எனக்குத் தோன்றியது. ‘சரி சார். அவர் இறங்கிப் போனத பார்த்ததும் ஏதோ சொல்லணும்னு தோனிச்சி.. சொல்லிட்டேன். தப்பா நினைச்சிக்காதீங்க.’ என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றார்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்களே அதையே மாற்றி அகத்தின் விகாரமும் முகத்தில் தெரியும் என்றும் கூறலாம் என்று நினைத்தேன்.

நாம் மனதில் என்ன நினைக்கிறோம்.. முக்கியமாக நாம் கோபப்படும்போதோ அல்லது நம்முடைய எதிரில் இருப்பவர் கூறுவதை நம்பாமல் இருக்கும்போதோ  அத்தகைய எண்ணம் நம் முகத்தில் தெரியாமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் திறமையுள்ள அதிகாரியாக மாறிவிட்டோம் என்று அர்த்தம் என்பார் என்னுடைய வங்கித்தலைவர்.

நான் தஞ்சையிலிருந்த வயதில் அந்த நிலையை அடைந்திருக்கவில்லை. அதனால்தான் நொடிப்பொழுதில் எனக்கு நல்ல நண்பராயிருந்த பாயின் மனம் நோகும்படி நடந்துக்கொண்டேன்.

அவர் சென்று வெகு நேரமாகியும் அவர் கூறியதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.

நான் வாடிக்கையாளர்களை கணிக்கும் விதத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது.. அதை விரைவில் திருத்திக்கொள்ளாவிட்டால் ஆபத்து என்றும் நினைத்தேன்..

இனி நான் நேற்று குறிப்பிட்ட வாடிக்கையாளரைப் பற்றி பார்ப்போம்..

தொடரும்..
15 comments:

துளசி கோபால் said...

டிபிஆர்ஜோ,

//நான் தஞ்சையிலிருந்த வயதில் அந்த நிலையை அடைந்திருக்கவில்லை. ..//

இப்ப மனசொன்னு நினைச்சாலும் முகம் மாறாத நிலை வந்துச்சா இல்லையா?
நல்ல வேளை இன்னிக்கு வியாழனாப் போச்சு. நாளை வரவிருக்கும் 100வது பதிவுக்கு
அட்வான்ஸ் வாழ்த்து(க்)கள்!!!

டி ராஜ்/ DRaj said...

//நான் நேற்றுக் குறிப்பிட்டிருந்த வாடிக்கையாளருடைய விஷயம் இருக்கட்டும்//

சார்:
மெகா சீரியல்காரங்க தோத்தாங்க போங்க :)
ராஜ்

Krishna said...

வாய்யா கிருஷ்ணா, ஒரு நாள் காக்க வச்சதுக்கே கிண்டல் பண்ணீருல்ல, இப்ப இன்னும் ஒரு நாள் வெயிட் பண்ணும். ரொம்ப பேசுனீருன்னா, நாளையும் அந்த வாடிக்கையாளரைப் பற்றி எழுதாம, அடுத்த வாரம் வரை காக்க வச்சிருவேன்.

tbr.joseph said...

வாங்க துளசி,

இப்ப மனசொன்னு நினைச்சாலும் முகம் மாறாத நிலை வந்துச்சா இல்லையா?//

முழுசா வந்திருச்சின்னு சொல்லமுடியாது.. ஆனா முன்னைக்கி இப்ப பரவால்லை.

நாளை வரவிருக்கும் 100வது பதிவுக்கு
அட்வான்ஸ் வாழ்த்து(க்)கள்!!!//

நீங்க சொன்னப்புறம் தான் பாக்கறேன். இந்த தொடரை தொடங்கறப்போ இந்த அளவுக்கு இது வளரும்னு நிச்சயம் நான் நினைக்கவே இல்லைங்க..

உங்க வாழ்த்துக்கு நன்றி துளசி.

tbr.joseph said...

வாங்க ராஜ்,

மெகா சீரியல்காரங்க தோத்தாங்க போங்க//

நாளைய பதிவ வாசிச்சி முடிக்கும்போது ஏன் இப்படி பண்ணேன்னு உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

என்ன நீங்க நான் சொன்னா மாதிரி நீங்களே எழுதிட்டீங்க?

சேச்சே. நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன். நாளைக்கு நிச்சயம். அத படிச்சி முடிச்சதும் நான் எப்படி செஞ்சேன்னு உங்களுக்கே புரியும்.

Krishna said...

சார், இப்பவே நாளை என்ன எழுதுவீங்கன்னு குன்ஸா புரியுது. சும்மா ஒரு தமாஷ்!

sivagnanamji(#16342789) said...

endha endha natkalil soriyan &thrumbi parkren iduhinreergal enbadhai kooravum pls

tbr.joseph said...

என்னங்க ஜி. திடீர்னு இந்த கேள்வி..

டெய்லிதானே போடறேன்.

எல்லா பதிவுகளையும் மொத்தமா ஒரே நேரத்துல போட்டா என்ன சார் தமிழ் மணத்தோட முகப்பு பக்கம் முழுசையும் புடிச்சிக்கிறீங்கன்னு நக்கல் பண்றாங்களே சில பேர். அதனாலதான் போன ஒரு மாசமா காலை பத்தரைக்கு தி.பா தொடர், 12.30க்கும் என்பைபிள் அப்புறம் பிற்பகல் 1.30க்கு சூரியன்னு போட்டுக்கிட்டிருக்கேன். அதன் படி இன்னைக்கி சரியா 1.30க்கு சூரியன் உதிச்சிரும்.

துளசி கோபால் said...

டைம்டேபிள் எல்லாம் அட்டகாசமா இருக்கு!

tbr.joseph said...

டைம்டேபிள் எல்லாம் அட்டகாசமா இருக்கு! //

டீச்சர் போடாத டைம்டேபிளா?

G.Ragavan said...

உண்மைதான் ஜோசப் சார். ஒருவர் பேசுவதை வைத்தே அவரை நல்லவர் வல்லவர் எனக்கொள்ள முடியுமானால் நன்றாக நடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் நல்லவர்களும் வல்லவர்களும்தான். (நம்ம அரசியல்வாதிகள் போல....) சில சமயங்களில் அவசர முடிவை விட ஆற அமர முடிவெடுப்பதே சிறந்தது.

tbr.joseph said...

அவசர முடிவை விட ஆற அமர முடிவெடுப்பதே சிறந்தது.//


ரொம்ப சரி, ராகவன்.

Murali said...

Hello TBR

நாளை வரவிருக்கும் 100வது பதிவுக்கு
அட்வான்ஸ் வாழ்த்து(க்)கள்!!!

Murali

tbr.joseph said...

நன்றி முரளி!