15 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 98

தஞ்சை நகரில் விவசாயத்திற்குப் பிறகு லாபகரமான வர்த்தகம்/தொழில் சரக்கு டிரான்ஸ்போர்ட்.

தஞ்சையிலிருந்து நாளொன்றுக்கு இருநூற்றுக்கும் மேலான கனரக வாகனங்கள் நெல், அரிசி, வாழை, பலா, என பலவகை விவசாயப் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு அண்டை மாவட்டங்கள்/மாநிலங்களுக்குச் சென்றுக்கொண்டிருந்தன..

இத்தகைய வாகனங்களை வாங்குவதற்கென சலுகைக் கடன் வசதிகளை வழங்குவதில் டிட்கோ என்ற அரசு நிறுவனம் முதன்மையிலிருந்தாலும் எங்களைப் போன்ற வங்கிகளும் இதில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தன.

அத்துடன் நான் தஞ்சையில் இருந்த சமயத்தில் துவக்கப்பட்ட சாராயம் தயாரிக்கும் தொழிற்சாலையையொட்டி துவக்கப்பட்ட பலவிதமான சிறு தொழில் நிறுவனங்களுக்கும் சிறு கனரக வாகனங்கள் எனப்படும் மூன்று சக்கர சரக்கும் வாகனங்கள் மற்றும் சிறு டெம்போ வாகனங்களுக்கும் கிராக்கி ஏற்பட வங்கிகளை நோக்கி கடன் பெற படையெடுக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெறுகத் தொடங்கியது..

நான் தஞ்சையிலிருந்த இரண்டு வருட காலத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக (Heavy vehicles) மற்றும் சிறு கனரக (Light commercial vehicles) வாகனங்களுக்கு கடனுதவி வழங்கியிருக்கிறேன்.

இத்தகைய வாகனங்களுக்கு வழங்கும் கடனுக்கு ஈடாக வாங்கப்படும் வாகனங்களுடன் அதன் மதிப்பிற்கு சமமான சொத்தையும் ஈடாக அடகு (Mortgage) வைக்கவேண்டும் என்பது நியதி.

அத்தகைய வங்கி வர்த்தகத்தில் நல்ல லாபமும் இருந்ததால் அதில் இருந்த ஆபத்தையும் (Risk)  மீறி அதில் என்னைப் போன்ற வங்கி மேலாளர்கள் ஈடுபடுவது வழக்கம்..

அப்படி எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்..

எங்களுடைய வங்கியில் வாகனங்களை வாங்க கடனுதவி எந்தவித சிரமமுமில்லாமல் கிடைக்கிறது என கேள்விப்பட்ட ஒருவர் என்னை அனுகினார்.

அவர் பார்ப்பதற்கு மிக எளிமையாக இருந்தார். அவரே ஒரு வாடகை வாகனத்தை ஓட்டி இதே போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டிருப்பதாக கூறினார்.

சரக்கு போக்குவரத்து தொழிலில் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘எனக்கு ஒரு லாரி வாங்கணும் சார்.. என்கிட்ட வண்டியோட விலைல பதினஞ்சி பர்சண்ட் தொகை ரொக்கமா இருக்கு. மீதிய நீங்க கடனா கொடுத்தீங்கன்னா வட்டியும் அசலுமா நீங்க சொல்ற தேதியில டாண்னு கட்டிருவேன்யா..’ என்றார்.

ஆடை பாதி, ஆள் பாதி என்பார்களே..

அப்படித்தான் இருந்தது அவருடைய தோற்றம். அவர் உடுத்தியிருந்த ஆடையின் கோலத்தைப் பார்த்தால் அவரிடம் ஒரு கன ரக வாகனத்தின் விலையில் பதினைந்து விழுக்காடு ரொக்கமாய் இருக்கிறதென்பதை விசுவசிப்பதே கடினமாக இருந்தது.

‘உங்களுக்கு தஞ்சாவூர்ல அறிமுகப்படுத்தவோ அல்லது உங்க கடனுக்கு ஜாமீன் கொடுக்கவோ யாராச்சும் இருக்காங்களாய்யா?’ என்றேன்.

அவர் சிறிது சங்கடத்துடன் என்னைப் பார்த்தார். ‘இருக்காங்க சார். உங்களுக்கும் கூட தெரிஞ்சிருக்கும். ஆனா நா உங்கக் கிட்ட ஒரு வண்டி வாங்கறதுக்காக வந்தேன்னு தெரிஞ்சா இப்ப நா ஓட்டிக்கிட்டிருக்கற வண்டியையும் புடுங்கிக்குருவாய்ங்கய்யா. அதுமட்டுமில்லய்யா, இவருக்கு லோன் கொடுக்காதீங்கன்னு ஒங்கக்கிட்ட சொன்னாலும் சொல்லுவாய்ங்க.. அதான் யோசிக்கறேன்.’

அவர் கூறியது உண்மையா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் அதில் இருந்த நியாயத்தைப் பார்த்தேன். இப்படி பல சமயங்களில் நேர்ந்திருக்கிறது.

அப்படித்தான் ஒரு முறை ஒரு வர்த்தகர் என்னிடம் வந்து, ‘சார் இப்ப நான் ஆப்பரேட் பண்ணிக்கிட்டிருக்கற ஓவர்டிராஃப்ட் கணக்கை ------- பேங்க்லருந்து உங்க பேங்குக்கு மாத்திக்கலாம்னு இருக்கேன். அங்க எனக்கு குடுத்துருக்கற அதே அளவு நீங்க குடுத்தாப் போறும்.. நீங்களா என்னோட ஒரு வருஷ டீலிங்க்ஸ பார்த்துட்டு மேல போட்டு குடுங்க.’ என்றார்.

‘அப்படீன்னா எதுக்குய்யா எங்க பேங்குக்கு வரேங்கறீங்க? இப்ப நீங்க கணக்கு வச்சிருக்கற பேங்க்.. நம்ம மாநிலத்த சேர்ந்த பேங்காச்சே..’ என்றேன்.

‘அப்படி இல்லைய்யா..’ என்றவர் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு காரணத்தைக் கூறியதும் சரி என்று கூறிவிட்டு, ‘நான் உங்க பேங்குல உங்களப்பத்தி விசாரிக்கலாம் இல்லே.’ என்றேன்.

அவர் பதறியவாறு, ‘ஐயா அத மட்டும் செஞ்சிராதீங்க. நா உங்கள வந்து இந்த விஷயமா பார்த்தேன்னு தெரிஞ்சால என் கணக்க உடனே நிறுத்திருவாங்கய்யா.. என்ன பத்தி விசாரிக்கணும்னா மார்க்கெட்ல விசாரிங்கய்யா..; என்றார்.

அவர் கூறியது சரிதான். தஞ்சையில் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் வங்கிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவி வந்த காலம் அது.. ஏன் இப்போதும் அப்படித்தான்.

ஆங்கிலத்தில் கூறுவார்கள்: Dog in the Manger attitude என்று. வைக்கோல் போரில் ஏறி நின்றுக்கொண்டிருக்கும் நாய் தானும் திங்காதாம் திங்க வருவதையும் திங்க விடாதாம்!

அதுபோன்றுதான் சில வங்கி மேலாளர்களும்.. சரி நம்மால திருப்திப்படுத்த முடியாத வாடிக்கையாளர் வேற எங்காவது போய் வரவு செலவு வைத்துக்கொள்ளட்டுமே என்று விடமாட்டார்கள்.

சரி.. வங்கி மேலாளர்களே இப்படி என்றால் வர்த்தகம் செய்யும் முதலாளிகளைக் கேட்கவேண்டுமா?

என்னை கடனுக்கு அணுகிய வாடிக்கையாளர் தஞ்சையிலிருந்த மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்களில் ஒன்றை லீசுக்கு எடுத்து ஓட்டிக்கொண்டிருப்பவர். அவர் அதை விட்டுவிட்டு சொந்தமாக ஒரு வாகனத்தை வாங்கி முதலாளியாவதை அவருடைய இப்போதைய முதலாளி ஒத்துக்கொள்ள மாட்டார் என அவர் கூறியதிலிருந்த நியாயத்தைப் புரிந்துக்கொண்டேன்.

இருந்தாலும் யாருடைய அறிமுகமும், பரிந்துரையும் இல்லாமல் மிகவும் எளிமையாய் காட்சியளிக்கும் இவருக்கு எப்படி கடன் கொடுப்பது என்று யோசித்தேன்.

பிறகு சட்டென்று ஒரு யோசனை என் மனதில் எழ அவரைப் பார்த்து, ‘ஐயா நீங்க உங்க பேரு, விலாசம் எல்லாத்தையும் தெளிவா எழுதிக்கொடுத்துட்டு போங்க. நா விசாரிச்சிட்டு சொல்றேன்.’ என்றேன்.

அவர் சரிசார் என்று கூறிவிட்டு தன்னுடைய தஞ்சை டவுண் மற்றும் கிராமப்புற விலாசத்தை எழுதிக் கொடுத்துவிட்டு.. ‘ஐயா நீங்க போய் விசாரிக்கறதுல எந்த மறுப்பும் நா சொல்லலை.. ஆனா நா வண்டி வாங்கற விஷயத்தையும் அதுல பதினஞ்சி பர்சண்ட் எங்கிட்ட ரொக்கமா இருக்குங்கற விஷயத்தையும் என் வீட்லக் கூட சொல்லிறக்கூடாதுய்யா.’ என்று அழமாட்டாக் குறையாகக் கூறினார்.

நான் ஒன்றும் பதில் பேசாமல் அவரையே சில விநாடிகள் பார்த்தேன். என்னுடைய அனுபவத்தில் ஒருவர் பொய் சொல்கிறாரா என்பதை கணிக்கும் திறமை லேசாக இருந்தது. அன்று அவர் பேசிய தோரணை என்னை சந்தேகப்பட வைக்கவில்லை என்பது மட்டுமல்ல அவரைப் பார்த்து பரிதாபப்படவும் வைத்தது.

‘சரிங்கய்யா.. நீங்க போங்க, நான் பார்த்துக்கறேன்.’ என்றேன்.

அவர் தயக்கத்துடன், ‘ஐயா, நீங்க சொத்து ஜாமீன் ஏதும் கேப்பீங்களாய்யா?’ என்றார்.

நான் அவரிடம் கொடுப்பதற்கு என்ன இருக்கப் போகிறது என்ற நினைப்பில், ‘உங்கக் கிட்ட இருந்தா குடுங்க. குடுத்தீங்கன்னா என்னோட பவர்லயே லோன் குடுத்துருவேன். இல்லன்னா மேலிடத்துக்கு அனுப்பணும். எப்படியும் ஒரு மாசம் ஆயிரும்.’ என்றேன்.

அவர் உடனே, ‘இல்லய்யா.. எங்கிட்ட ஒரு வீடும் கொஞ்சம் நிலமும் இருக்குது. அது உங்களுக்கு ஏத்ததான்னு பாருங்க. டாக்குமெண்ட் கையோட கொண்டு வந்திருக்கேன். என் வீட்டுக்கு பக்கத்துலதான்யா நிலமும் இருக்கு. நீங்களே போய் பாத்துக்கிட்டாலும் சரி.. இல்ல நானே ஒரு வண்டிய ஏற்பாடு பண்ணி கூப்டுக்கிட்டு போணும்னாலும் சரி. ஐயா என்ன சொல்றீங்களோ அதே போல செஞ்சுருவேன்யா’ என்றவாறு கக்கத்தில் வைத்திருந்த மஞ்சள் நிற துணிப் பையிலிருந்து எடுத்து பவ்யத்துடன் நீட்டினார்.

நான் அவர் முன்பு பத்திரத்தைத் வாசிக்க விரும்பாமல், ‘சரிய்யா நீங்க போய்ட்டு ஒரு ரெண்டு நாள் கழிச்சி வாங்க, நான் பார்த்து வைக்கிறேன்.’ என்றேன்.

பிறகு பத்திரத்தைத் திறந்து வாசித்துப் பார்த்தேன். ஐந்து ஏக்கர் நஞ்சை நிலமும்.. சுமார் ஆயிரம் சதுர அடி வீட்டு மனையில் ஒரு இரட்டை மாடி வீடும்.. அது இருந்தது தஞ்சையிலிருந்து சுமார் இருபது கி.மீ தொலைவில் இருந்த ஒரு கிராமத்தில்..

வாகனத்தின் விலையில் அவருடைய கையிலிருந்த ரொக்கம் போக கடன் தொகைக்கு ஏறக்குறைய சமமாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு முதலில் இவரைப் பற்றி விசாரித்துவிட்டு பிறகு கடன் கொடுப்பதைப் பற்றி முடிவு செய்யலாம் என்று தீர்மானித்தேன்.

அவரைப் பற்றி விசாரிக்க ஏற்ற ஆள் என்னுடைய காசாளர்தான் என்று முடிவு செய்து அவரை அழைத்து என்னிடமிருந்த வாடிக்கையாளருடைய பெயர் மற்றும் விலாசம் அடங்கிய சீட்டை அவரிடம் கொடுத்து அவர் என்ன செய்யவேண்டும் என்று சுருக்கமாகக் கூறினேன்.

அவரும் சரி என்று அன்று மாலையே சற்று முன்னதாகப் புறப்பட்டுச் சென்றார்.

அடுத்த நாள் காலை திரும்பி வந்து அவர் கூறியதைக் கேட்டுவிட்டு, ‘அப்படியா, அவர பார்த்தா அப்படி தெரியலையே?’ என்று வியந்தேன்.

தொடரும்..

7 comments:

துளசி கோபால் said...

அதாங்க உருவத்தைவச்சு யாரையும் எடை போட்டுறக்கூடாது.
திருவள்ளுவர் கூட சொல்லியிருக்காரே,
'உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.......'
( முழுக்குறளையும் போட்டால் அர்த்தம் சொல்லணுமுன்னு குமரனின் கட்டளை இருக்காமே!)

Krishna said...

ஆரம்பிச்சிட்டாருய்யா ஆரம்பிச்சிட்டாரு. மீண்டும் ஸஸ்பென்ஸ்!! இன்னும் கொஞ்சம் சேர்த்துத்தான் எழுதுனா என்னவாம். கேட்டா, சுவாரஸ்யம் கூட்டறேன்னு சொல்லுவார். இவர சொல்லி குத்தமில்ல. எப்படா பதிவ போடுவாருன்னு காத்துக்கிட்டிருக்கிற எங்கள சொல்லனும்...

tbr.joseph said...

வாங்க துளசி,

முழுக்குறளையும் போட்டால் அர்த்தம் சொல்லணுமுன்னு குமரனின் கட்டளை இருக்காமே!//

பொருத்தமான குறளை பொருத்தமான இடத்துல போடறவங்களுக்கு பொருளையும் சொல்லணும்னு ஒரு கடமை இருக்குங்களே அதனாலதான் குமரன் அப்படி சொல்லியிருப்பாரு..

ஆனால் ஒன்னு இந்த 'எடை'ன்னு சொல்றீங்களே.. அது எப்படி backfire ஆச்சின்னு நா சொல்லும்போது பாருங்க..

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

சுவாரஸ்யம் கூட்டறேன்னு சொல்லுவார்.//

நம்ம வாழ்க்கையே அப்படித்தானே கிருஷ்ணா. நாளைக்கு என்ன நடக்கப்போவுதுன்னு இன்னைக்கே தெரிஞ்சிட்டா சுவாரஸ்யமே போயிருமே..

டி ராஜ்/ DRaj said...

//அப்படியா, அவர பார்த்தா அப்படி தெரியலையே?’ என்று வியந்தேன்//

வியந்தேன் ன்ஹ்கற வார்த்தைய பாத்தா ஆளு நல்லவரா இருப்பாருன்னு தோணுது. ஆனா சேச்சிக்கு சொன்ன பதில்ல சொன்னத பாத்தா ஆளு ஒருவேளை ஃப்ராடோன்னு படுது. என்ன நடந்ததுன்னு எனக்கு மட்டும் சொல்லிடுங்க சார். ;)

tbr.joseph said...

வாங்க ராஜ்,

சேச்சிக்கு கொடுத்த பதிலுக்கு அதான் அர்த்தமா?

No comments :<)

G.Ragavan said...

ஆகா இன்னொரு சஸ்பென்சா...........சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸ்
போதுமடா சாமி :-)) கிண்டல்தான் ஜோசப் சார்...நாளைக்குத் தெரிஞ்சி போகும்ல...காத்திருக்கேன்.