14 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 97

‘என்ன சார்?’ சொல்லுங்க என்றேன் வலுடன்.

அவர் கூறி முடிக்கும் வரை பொறுமையுடன் கேட்ட நான், ‘இத அப்படியே உங்க நண்பர் உங்க்கிட்ட சொன்னாரா சார்?’ என்றேன்.

அவர், ‘ஆமாம் சார். நான் உங்கக் கிட்ட சொன்னதெல்லாம் அவர் என்னிடம் சொன்னதுதான். இது மட்டுமில்ல சார், இன்னும் இத விட மோசமானதையெல்லாம் அந்த மனுஷன் செஞ்சிருக்காராம்.’ என்று இன்னும் சில விஷயங்களையும் கூறினார்.

அதைக் கேட்ட நான் அதிர்ச்சியில் சிறிது நேரம் எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தேன்.  இவரைப் போன்ற புல்லுருவிகள் இருப்பதால்தான் சில அரசு அதிகாரிகள் இத்தகையோரைக் கையில் எடுத்துக்கொண்டு அரசு பணத்தை கூட்டுக் கொள்ளையடிக்கிறார்கள் என்று தோன்றியது.

என்னுடைய காசாளர் பரிந்துரைத்ததை அப்படியே இங்கே எழுதுவது நன்றாய் இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் இப்போதிருக்கும் பதவி எனக்கு அளித்த அனுபவத்தின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது எத்தனை சிறுபிள்ளைத்தனமான காரியத்தை அன்று செய்தேன் என்று நினைத்து வெட்கப்படுகிறேன்.

ஆனால் அந்த இளம் வயதில் ‘தீனிக்கி தானி’ என்று தெலுங்கில் சொல்வதுபோல ஆணவம் பிடித்த அந்த வங்கி மேலாளரை என்னுடைய காசாளர் பரிந்துரைத்தபடியே செய்து அடிபணிய வைத்தேன்.

ஆனால் நான் செய்த காரியம் (குரலை மாற்றி சம்பந்தப்பட்ட மேலாளரை தொலைப்பேசியில்  அழைத்து அவர் வேறொரு வாடிக்கையாளருடைய பணிப்பெண்ணிடம் ஏடாகூடமாக நடந்துக்கொண்டு விஷயம் காவல்துறை வரை சென்று எச்சரிக்கப்பட்டு கமுக்கமாய் விடுவிக்கப்பட்டதை கூறி மிரட்டியது. தொலைப்பேசியில் மிரட்டியது என்னுடைய வாடிக்கையாளர்தான் என்று அம்மேலாளர் நினைத்துக்கொண்டு அவருடைய கணக்கை முடிக்க ஒப்புக்கொண்டது) backfire கியிருந்தால் அது என்னுடைய பதவியையே ஏன் என்னுடைய வேலையையே கூட பாதித்திருக்குமே என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

இரண்டு நாட்கள் கழித்து என்னுடைய கிளைக்கு வந்த என்னுடைய வாடிக்கையாளர் மிக சந்தோஷமாகக் காணப்பட்டார்.

என் அலுவலகத்திற்குள் நுழைந்து இருக்கையில் அமர்வதற்கு முன்பாகவே மேசைக்கு குறுக்கே தன்னுடைய கரங்களை நீட்டி என் வலக்கரத்தைப் பிடித்து குலுக்கினார். ‘சார் நீங்க என்ன பண்ணீங்களோ தெரியலை.. இன்னைக்கி காலைல மேனேஜரே கூப்டு உங்க கணக்கை இன்னைக்கி முடிச்சி வைக்கறேன். வந்து உங்க ப்ராப்பர்ட்டி டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் வாங்கிட்டு போயிருங்கன்னு ஃபோன் போட்டார் சார்..’ என்றவரின் முகத்திலிருந்த மகிழ்ச்சி என்னையும் தொற்றிக்கொள்ள ஒன்றும் தெரியாதவன் போல், ‘அப்படியா சார்.. ரொம்ப சந்தோஷம்.. நான் அவர கூப்டவே இல்லை சார்..’ என்றேன்.

அவர் என்னுடைய பதிலில் திருப்தியடையாதவர் போல், ‘என்னமோ சார்.. நம்ம காரியும் முடிஞ்சிருச்சி.. அது போதும்..’ என்றார்.

அப்போதும் அவர் என்னைப் பார்த்த பார்வையில் ஒரு சந்தேகம் இருந்தது. நான் அதைப் பெரிதுபடுத்தாமல், ‘இனி நீங்க என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்களோ அத செஞ்சிருங்க சார்..’ என்றேன்.

அது நடந்த முடிந்த இரண்டு வாரங்களுக்குள் ஒவ்வொன்றாக தன்னுடைய எல்லா வர்த்தக கணக்குகளையும் என்னுடைய கிளைக்கே மாற்றிக்கொண்டார் அவர்.

அடுத்த சில வாரங்களில் அவருடைய வயது முதிர்ந்த தந்தை மற்றும் அவருடைய வர்த்தக நிறுவனங்களில் பாகஸ்தர்களாயிருந்த அவருடைய இளைய சகோதரர்கள் மற்றும் குடும்பத்தாரைச் சந்தித்தபோதுதான் தெரிந்தது அவர்கள் அந்த பொறுப்பில்லாத மேலாளரின் செய்கைகளினால் ஒட்டுமொத்த வங்கி மேலாளர்களைப் பற்றியும் எத்தனைத் தரக்குறைவாக நினைத்திருந்திருக்கிறார்கள் என்று..

அதுவும் அவருடைய எண்பது வயது தந்தை பேசியதிருக்கிறதே இப்போது நினைத்தாலும் அவமானமாய் இருக்கிறது.

அவர் ஆங்கிலேயர் ட்சிக்காலத்தில் தஞ்சையில் இம்பீரியல் வங்கி என அழைக்கப்பட்டு இப்போது பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் வங்கி மேலாளர்களின் அருமை பெருமைகளையெல்லாம் எடுத்துக் கூறி அக்காலத்திய சவுகரியங்களை ஒப்பிட்டுப்பார்த்து அடித்த லெக்சர்.. ஏண்டா இவரைச் சந்திக்க வந்தோம் என்று என்னை நினைக்க வைத்தது..

ஆனாலும் அவர் அன்று கூறிய பல காரியங்கள் ஒரு வங்கி வாடிக்கையாளரின் பார்வையிலிருந்து மிகவும் நியாயமானவைகளே என்று இப்போது எனக்கு தோன்றுகிறது..

ஆனால் என்னுடைய கிளைக்கு தன்னுடைய கணக்குகள் எல்லாவற்றை¨யும் மாற்றிக்கொண்டதும் அவர் ஒருவருடைய தேவைகளை நிறைவு செய்யவே எனக்கு போதும், போதும் என்றாகிவிட்டது..

சில வாடிக்கையாளர்கள் இப்படித்தான். அவர்களுடைய வர்த்தகங்களில் எல்லா வித தில்லுமுல்லுகளையும் செய்வார்கள். வங்கியின் நியதிகளுக்கு முற்றிலும் ஒவ்வாத சலுகைகளை எல்லாம் ‘நீங்க மனசு வச்சா செய்யலாம் சார்.’ என்று கெஞ்சுவார்கள்.

வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகளிடமிருந்து நேர்மையை எதிர்பார்க்கும் இத்தகையோர் தாங்களும் அவ்வாறே வங்கி நியதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை மறந்துவிடுவார்கள்.

என்னுடைய என்றும் மாறா கொள்கைகளின்படி நானும் வழிதவறி செல்லமாட்டேன் யாரையும் வறிதவறி செல்லவும் விடமாட்டேன் என்பதில் உறுதியாயிருக்கவே அடுத்த சில மாதங்களிலேயே எனக்கும் அவருக்கும் இடையிலிருந்த சுமுகமான உறவில் விரிசல் ஏற்படத் துவங்கியது..

ஒருநாள் அவர், ‘ இதுக்கு அவரே மேல்போலத் தெரியுது சார். அவர் கேக்கறத குடுத்துட்டா போறும் நம்ம காரியம் நடந்துறும். இங்க நானா முன்வந்து குடுக்கறேங்கறேன். நீங்க அதையும் வேணாங்கறீங்க.. நா கேக்கறதையும் முடிச்சிக் குடுக்க மாட்டேங்கறீங்க. பிசினஸ்னா நெளிவு சுளிவு வேணும் சார்..’ என்றார் எரிச்சலுடன்..

விஷயம் இதுதான்..

அவருடைய மொத்த வணிகத்திற்கும் ஒரு வருடத் தேவைக்கு வேண்டிய ஒரு தொகையை நிர்ணயத்து ஓவர்டிராஃப்ட் லிமிட் என்று என்னுடைய மேலிடத்தில் ஒப்புதல் பெற்றுவிட்டால் சில அத்தியாவசிய தேவைகளுக்காக அதிலிருந்து சுமார் பத்து விழுக்காடு கூடுதல் கொடுக்க என்னைப் போன்ற வங்கி மேலாளர்களுக்கு அதிகாரம் (discretion) கொடுக்கப்படுவது வழக்கம்.

ஆனால் என்னுடைய வாடிக்கையாளர் என்னுடைய மேலிடம் ஒரு வருடத்திற்கென வழங்கப்பட்ட மொத்த தொகைக்கு ஈடாக கூடுதல் தொகையை ஏறக்குறைய வருடம் முழுவது எதிர்பார்ப்பார். அதைத்தான் எங்களுடைய வங்கி பாஷையில் ஓவர் டிரேடிங் (Overtrading) என்போம். அதாவது, வர்த்தகம் செய்பவர் அவருடைய முதலீடு இல்லாமல் அல்லது அதற்கு பன்மடங்கு மேலாக வரவு, செலவு செய்வது.

அதற்கு வங்கி மேலாளர்களும் ஒத்துழைக்க வேண்டும். இதை அவர் கேட்கும்போதெல்லாம் அவருடைய முந்தைய வங்கி மேலாளர் செய்திருக்க வேண்டும். அதற்குப் பிரதியுபகாரமாகத்தான் ஓசியில் திருச்சிக்கு சென்று தங்க வாகனம், ஹோட்டல வாடகை, என்று எதிர்பார்த்திருக்கிறார்.

அதை மட்டும் என்னிடம் சொல்லி அழுத என்னுடைய வாடிக்கையாள தான் எத்தகைய உதவிகளைப் பெற்றேன் என்று என்னிடம் கூறாததால் அல்லது நான் விசாரித்து அறிந்துக்கொள்ளாததால் வந்த வினை ஏறக்குறைய நாள்தோறும் அவருடன் ஏற்பட்ட வாக்குவாதங்கள், மனவருத்தங்கள்..

எண்ணி ஒரே வருடத்தில் அவர் அவருடைய அத்தனை வர்த்தகக் கணக்குகளையும் வேறொரு வங்கிக்கு மாற்றிக் கொண்டு செல்ல, அப்பாடா விட்டது தொல்லை என்று நானும் என் காசாளாரும் நிம்மதியடைந்தோம்..

‘ஏன் சார், உங்க பேங்கலருந்து அவர் மாறணும்னு நினைச்சப்போ உங்கக் கிட்ட வந்து மணிக்கணக்கா நான் பேசினேனே.. அவர் இப்படீன்னு ஒரு வார்த்தைக் கூட சொல்லலையே சார்.. அவராவது பரவாயில்லை அவரோட அப்பா, அந்த வயசான கிழம்.. இப்படி போட்டு கவுத்துட்டீங்களே சார்..’ என்று அவருடைய கணக்குகளை என்னைப் போலவே ஆர்வத்துடன் ஏற்று எடுத்த என்னுடைய சக வங்கி மேலாளர் ஒரு நாள் என்னிடம் வந்து குறைபட்டுக்கொண்டபோது அவரை எப்படி தேற்றுவதென தெரியாமல் வாளாவிருந்தேன்..

வேற வழி? ‘விட்டாப் போறும்னு தெரிஞ்சிதான் சார் நான் அன்னைக்கி பேசாம இருந்தேன்’ என்று கூறவா முடியும்?

ஆக, ஒரு கசப்பான ஆனால் அதே சமயம் எனக்கொரு நல்ல பாடத்தைக் கற்பித்த அனுபவம் அது..

தொடரும்

6 comments:

துளசி கோபால் said...

என்னங்க 'மிமிக்ரி'யிலே மன்னன் போல இருக்கே!
எப்படியோ, தொல்லை விட்டதுன்னு இருந்துட்டீங்களா?

tbr.joseph said...

அடடா, என்னே ஒற்றுமை துளசி!

இப்பத்தான் உங்க வீட்ல போயி கிரகப்பிரவேசம் மற்றும் கல்யாண சாப்பாடு சாப்டுட்டு வந்தேன்.

திரும்பி வந்தா இங்க நீங்க!

டி ராஜ்/ DRaj said...

Project Management -ல Is / Is Not லிஸ்ட் தயார் செய்யனும்ன்னு சொல்லுவாங்களே அது போல ரொம்ப விவரமா பேசிக்கனும் போல இல்லைன்னா சிக்கல் தான்.

tbr.joseph said...

வாங்க ராஜ்,

நீங்க சொல்றது சரிதான். ஆனா எந்த ஒரு வாடிக்கையாளரும் சார் நீங்க உங்க நியதிகளுக்கு புறம்பாக எனக்கு சில சலுகைகள் செய்ய வேண்டியிருக்கும் என்று முன்கூட்டியே சொல்லமாட்டார்கள். அதில்தான் சிக்கலே இருக்கிறது.

ஐ.டி. ல மட்டும் என்ன வாழுதாம். இது வரைக்கும் இந்தியாவுலருக்கற டாப் மூனு மென்பொருள் நிறுவனங்களுடம் ப்ராஜக்ட்ஸ் செய்திருக்கிறோம். எல்லோருமே ஆரம்பத்தில் சொல்வதொன்று இடையில் செய்வது வேறொன்று.. கடைசியில் ப்ராஜக்ட் முடிவடையும்போது கிடைப்பதோ.. கேட்கவே வேண்டாம்..

G.Ragavan said...

அப்பாடியோவ்...சி.ஐ.டி சங்கர் படம் மாதிரி செஞ்சிருக்கீங்க...ம்ம்ம்...இப்பல்லாம் செய்ய மாட்டீங்கன்னு நம்புறோம். :-)

tbr.joseph said...

வாங்க ராகவன்,

மும்பை கிளையில் பணி புரிந்த வரைக்கும் இப்படித்தான் செய்துவிட்டு சில பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டு விழித்திருக்கிறேன்..

இப்போது.. நிச்சயம் செய்ய மாட்டேன்..