10 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 95

என்ன பதில் சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்று மனதுக்குள் ஒரு ஒத்திகைப் பார்க்க ஆரம்பித்தேன்.

இதுவே நாயக்கர் அந்த லேவாதேவிக்காரருடன் வராமல் இருந்திருந்தால் என்னுடைய அணுகுமுறை மோசமாக இருந்திருக்கும்.

என்னுடைய வங்கி அனுபவத்தில் எனக்கு ‘ஏதாச்சும்..’ என்ற வார்த்தையைக் கேட்கும்போதெல்லாம் கோபம் பொத்துக்கொண்டு வரும்.

அவர் வங்கிக்கு எத்தனை முக்கியமான வாடிக்கையாளராக இருந்தாலும் அன்றே அவருடனான என்னுடைய வணிக உறவையும் கூட துண்டித்துக்கொள்ள தயங்கியதில்லை.

அந்த லேவாதேவிக்காரரோ என்னுடைய வர்த்தகத்திற்கு எந்த வகையிலும் உகந்தவரல்ல என்று தீர்மானித்த நான் நாயக்கரைப் பார்த்து, ‘சார்.. தப்பா நினைச்சிக்காதீங்க. உங்க நண்பருடைய வேண்டுகோள் என்னுடைய வங்கி வணிகத்திற்கு முற்றிலும் முரணானது.அதனால என்னால அவர் கேக்கறத செய்ய முடியாது.’ என்றேன் நிதானம் இழக்காமல்.

சரிதான் சார் என்பதுபோல் தலையை அசைத்த நாயக்கர் தன்னுடன் வந்தவரிடம், ‘செட்டியார், நீங்க கொஞ்சம் வெளியே வெய்ட் பண்ணுங்க. நான் சார்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வந்திடறேன்.’ என்றார்.

அவருடன் வந்தவருக்கு என்னை பார்க்க சங்கடமாயிருந்திருக்க வேண்டும்.. ஒன்றும் பேசாமல் எழுந்து கதவைத் திறந்துக்கொண்டு வெளியேறினார்.

நாயக்கர் என்னைப் பார்த்து, ‘சார் நீங்க தப்பா நினைச்சிக்காதீங்க. இவரோட உள் எண்ணத்த புரிஞ்சிக்காம நானும் கூட்டிக்கிட்டு வந்திட்டேன். என்னோட பல ரைஸ் மில் நண்பர்களுக்கு இவர்தான் ஃபைனான்சியர். அந்த நட்பு முறையிலதான் நான் என்ன ஏதுன்னு கேக்காம கூட்டிக்கிட்டு வந்திட்டேன்.’ என்றார்.

எனக்கு அவருடைய தர்மசங்கடம் புரிந்தது. நான் தஞ்சையில் வந்து சேர்ந்த நாள் முதலாய் அவரை நான் அறிந்து வைத்திருந்ததால் அவரும் இதற்கு கூட்டோ என்ற எண்ணம் என் மனதில் துளியும் இல்லை.

நான் எழுந்து நின்று அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டு, ‘பரவாயில்லை சார். நான் உங்கள நம்புறேன். உங்க மரியாதைக்காகத்தான் நான் கோபப்படலை.. பணத்தால எங்கள மாதிரி ஆளுங்களக்கூட விலைக்கு வாங்கிரலாம் நினைச்சதத்தான் என்னால தாங்கிக்க முடியலை..’ என்றேன்.

அவர் மீண்டும் என்னிடம், ‘மன்னிச்சிருங்க சார். ஆனா அவர் பிசினஸ் பண்றதுல எந்த தில்லுமுல்லும் பண்ணமாட்டார் சார்.. பரம்பரை பரம்பரையாவே இந்த தொழில்ல இருக்கற குடும்பத்துலருந்து வந்தவர்தான். ஏன் திடீர்னு இவருக்கு இந்தமாதிரி ஐடியா வந்துச்சோ தெரியலை.. நான் பார்த்துக்கறேன்.’ என்றவாறு வெளியேறினார்.

பாவம், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நாயக்கர் என்னுடைய அலுவலகத்திற்கு வரவே தயங்கினார் என்பது சிறிது காலத்திற்குப் பிறகுதான் எனக்குத் தெரிந்தது.

***

ஆனால் நான் முற்றிலும் எதிர்பார்க்காத விதமாக இந்த சம்பவம் நடந்து முடிந்து சுமார் நான்கு வாரங்கள் கழித்து ஒரு நாள் தஞ்சை முன்சீஃப் நீதிமன்றத்திலிருந்து எனக்கு ஒரு தொலைப்பேசி வந்தது.

‘மேனேஜர் சாருங்களா?’ என்ற முற்றிலும் பரிச்சயமில்லாத குரல் கேட்கவே நான் தயக்கத்துடன், ‘யாருங்க?’ என்றேன்.

‘சார் ஒரு HUF Settlement கேஸ்ல மைனர் ஷேரை உங்க பேங்க்ல டெப்பாசிட் பண்றதா பார்ட்டீஸ் ப்ரொப்போஸ் பண்றாங்க. அதுவிஷயமா நம்ம முன்சீஃப் ஐயா உங்கள அவரோட சாம்பருக்கு வரமுடியுமான்னு கேக்கச் சொன்னார்.’

எனக்கு சிறிது நேரம் ஒன்றும் புரியவில்லை. யார் நம்முடைய வங்கியின் பெயரை முன்மொழிந்திருக்கப் போகிறார்கள் என்று நினைத்தவாறு , ‘சரி உடனே வருகிறேன்.’ என்று கூறிவிட்டு என்னுடைய காசாளரிடம் கூறிவிட்டு கிளம்பிச் சென்றேன்.

அங்கே தஞ்சை முன்சீஃப் சாம்பரில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நாயக்கருடன் என்னை வந்து சந்தித்த லேவாதேவிக்காரரும் மற்றும் சிலரும் அமர்ந்திருந்தனர்.

அவர் என்னைக் கண்டதும் எழுந்து என்னை முன்சீஃபுக்கு அறிமுகப்படுத்தினார். நான் முன்சீஃபுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்தேன்.

‘சார் உங்க பேங்கப் பத்தி அவ்வளவா கேள்விப்பட்டதில்லை.. சாதாரணமா இந்த மாதிரி செட்டில்மெண்ட் கேஸ்ல நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியில்தான் டெப்பாசிட் பண்ணணும்னு ஆர்டர் போடுவேன். ஆனா சார் (லேவாதேவிக்காரரைக் காட்டி)தான் இல்ல, இத உங்க பேங்க்லதான் போடணும்னு பிடிவாதமா இருக்கறதுனாலதான் உங்கள வரச் சொன்னேன்.’ என்றார்.

அதனைத் தொடர்ந்து என்னுடைய வங்கியைக் குறித்து அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நான் அளித்த பதில் திருப்தியளிக்கவே, ‘ஓக்கே மிஸ்டர் ஜோசஃப், I will pass the orders as prayed by the parties. ஷார்ட் நோட்டீஸ்ல வந்ததுக்கு ரொம்ப நன்றி..’ என்றார் புன்னகையுடன்.

நான் என்னருகில் அமர்ந்திருந்த லேவாதேவிக்காரரின் கரங்களைப் பற்றி நன்றியைத் தெரிவித்தேன்.

அவர், ‘சார் நா நாளைக்கு உங்கள வந்து பாக்கறேன்.’ என்று சுருக்கமாகக் கூறிவிட்டு என்னை வாசல்வரை வந்து வழியனுப்பினார்.

அவருடைய அண்ணன் மகன்கள் பேரில் நீதிமன்றத்திலிருந்து சுமார் இரண்டு வாரங்கள் கழித்து வந்த காசோலையைப் பார்த்து நான் அசந்து போனேன். அதுதான் என்னுடைய கிளையின் மிகப் பெரிய வைப்புத் தொகைக் கணக்காக இருந்தது. அதுவும் பத்து வருடங்களுக்கு!

என்னை முன்சீஃப் நீதிமன்றத்தில் சந்தித்த அடுத்த நாளே என்னுடைய கிளைக்கு வந்த லேவாதேவிக்காரர் அவருடைய வணிகக் கணக்கையும் என்னுடைய கிளையிலேயே துவங்க எங்கள் இருவரிடையேயும் ஒரு நல்ல நட்பு அன்று துவங்கியது. 'சார் அன்னைக்கி நீங்க நான் எவ்வளவு செல்வாக்குள்ளவன்னு தெரிஞ்சும் கொஞ்சம் கூட தயங்காம என்னோட யோசனைய நிராகரிச்சீங்களே.. ரெண்டு மூனு நாளைக்கு உங்க மேல நான் ரொம்ப கோபமாத்தான் இருந்தேன். ஆனா அதுக்கப்புறம் யோசிச்சி பார்த்தப்போ நீங்க சொன்னதுதான் சரின்னு பட்டுது. அதான் அந்த டெப்பாசிட்ட உங்க பேங்க்லயே போடச் சொல்லி நிர்பந்திச்சேன்.' என்று அவர் கூறியபோது மனித மனங்கள்தான் எத்தனை விசித்திரமானது என்று நினைத்துக்கொண்டேன்.

நான் தஞ்சையிலிருந்து மாற்றலாகிச் செல்லும்வரை அவருடனான அந்த நட்பு வளர்ந்து நெருக்கமானது. அந்நட்பு என்னுடைய கிளையின் வர்த்தகத்திலும் மிகவும் உதவியாக இருந்தது என்றால் மிகையாகாது.

நாளடைவில் என்னுடைய கிளையின் நட்புமிக்க சேவையால் கவரப்பட்டு அவருடைய முழு வர்த்தக கணக்கையும் என்னுடைய கிளைக்கே மாற்றி என்னுடைய கிளையின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களுள் அவர் ஒருவரானார் என்பது இன்னொரு மகிழ்ச்சியான செய்தி.

இதையறியாத நாயக்கர் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு என்னை சந்திக்க நேர்ந்தபோது, ‘சார், அதுக்கப்புறம் உங்கள பேங்க்ல பாக்க வர்றதுக்கே சங்கடமாயிருக்கு.. எல்லாம் அந்த செட்டியாரால.’ என்று வருத்தப்பட்டார்.

நான் சிரித்துக்கொண்டே அதற்குப் பிறகு நடந்தவற்றை கூற, ‘அப்படியா சார்?’ என்று வியந்துபோனார். ‘அந்தாளு எங்கிட்ட சொல்லவே இல்லையே?’

***

நான் கிளையைத் திறந்து ஆறு மாதங்கள் முடிவடையும் தறுவாயில் ஒரு வயதானவர் என்னுடைய கிளைக்கு வந்தார்.

அவரை நான் அதற்கு முன்பு எங்கோ பார்த்த ஞாபகம் மட்டும் இருந்தது. ஆனால் எங்கு என்பது மட்டும் சட்டென்று நினைவில் வரவில்லை. ஒரு அரசியல்வாதியைப் போன்ற உடையணிந்திருந்த அவர் ஒரு பெரிய கும்பிடு போட்டு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

தான் இன்னார் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் அவரை என் நினைவுக்கு வர எழுந்து நின்று மரியாதை செலுத்தினேன். அவர் தஞ்சையின் பழம்பெரும் சுதந்திர வீரர் ஐயா பரிசுத்தம் நாடார் அவர்கள்.

பாரதிராஜாவின் காதல் ஓவியம் படம் நினைவிருக்கிறதா?

அதில் ஐயா அவர்களின் வீட்டையே சுற்றி, சுற்றி இயக்குனர் காட்டியிருப்பார். அந்த வீடு தஞ்சையில் அத்தனை பிரபலம்!

அவரையும் தஞ்சையில் அறியாதவர்களே இருக்க முடியாது.

அவருடைய புகைப்படத்தை நான் தஞ்சை ஆயரின் இல்லச் சுவர்களில் பலமுறைப் பார்த்திருக்கிறேன்.

அவருடைய குடும்பத்தினர் ஒரு காலத்தில் தஞ்சையில் மிகவும் செல்வாக்குடன் வாழ்ந்திருக்கின்றனர். ஐயா அவர்களுடைய வீட்டிற்கு இரண்டு மூன்று முறை சென்றிருக்கிறேன்.

அவ்வீட்டின் பிரம்மாண்டத்தைப் பற்றி எழுத வார்த்தைகளே இல்லை. அவருடைய வீட்டுச் சுவற்றில் ஐயாவுடன் இல்லாத தேசத் தலைவர்களே இல்லை எனலாம்.

அத்தனை அரசியல் செல்வாக்குடன் வாழ்ந்தவர்!

ஆயரை ஒருமுறை சந்திக்கச் சென்றிருந்தபோது அவர் தஞ்சையில் நம் மதத்தைச் சார்ந்த ஒருவர் வங்கி மேலாளராக வந்திருக்கிறார் என்று கூறியதையடுத்து அந்த வயதான காலத்திலும் என்னைச் சந்தித்துவிட்டு செல்ல வந்ததாய் கூறியபோது எனக்கு என்ன சொல்வதென தெரியாமல் ஒரு நிமிடம் வியந்துபோய் நின்றேன்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெறும் நேரத்தில், ‘வீட்டுக்கு ஒரு நாள் குடும்பத்தோட வந்து போங்க தம்பி..’ என்று மிகவும் அன்புடன் அழைத்துவிட்டு சென்றதை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

அதற்குப் பிறகு தஞ்சை ஆயர் தலைமையில் நடந்த சில சமூக சேவை விழாக்களில் அவரை சந்தித்து அளவளாவியிருக்கிறேன். அவருடைய தள்ளாத வயதிலும் பொதுவாழ்வில் அவர் காட்டிய அக்கறை என்னை மிகவும் கவர்ந்த விஷயங்களுள் ஒன்று. அவருடைய குடும்பத்தினர் நடத்தும் உணவு மற்றும் தங்கும் விடுதி இப்போதும் தஞ்சையில் பிரசித்தம். நான் தங்கியிருந்த அருளானந்தர் நகர் என்பதே அவருடைய குடும்பத்தினர்களுள் ஒருவர் பெயரைக் கொண்டது என்பது பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது!

நான் தஞ்சையில் சந்திக்க நேர்ந்த மிகவும் அற்புதமான மனிதர்களுள் அவரும் ஒருவர்..

தொடரும்..

11 comments:

Krishna said...

Honesty alone wins has now changed into honesty also wins, in these days. Still, we r happy to see person like u who r suceesful despite being honest(painful to use this word - despite). This will definitely strengthen our conviction to be honest,come what may. For this reason only, we want u to write in detail without rushing.

துளசி கோபால் said...

இப்பத்தாங்க நாலு காசு வந்ததுமே மனுஷன் ஆட்டம் போடறான்.
நிறைக்குடம் தழும்பாதுன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க.

எனக்கும் தெரிஞ்ச ஒரு பெரியவர், நம்மளைப் பார்த்ததுமே நாங்க கையைத் தூக்கறதுக்கு முன்னாலெயே 'நமஸ்காரம்'னு கைகூப்பிச்சொல்றப்ப அப்படியே குற்ற உணர்ச்சியிலே என் மனசு கூசிறும்.

எல்லாம் மேன்மக்கள்

டி ராஜ்/ DRaj said...

சார்:
முதல் கோணல் முற்றிலும் கோணல்-ன்னு சொல்வாங்க. ஆனா லேவாதேவிகாரர் விசயத்தில பொய்யாத்தான் போச்சு. :) ரொம்ப judgemental-ஆ இருக்ககூடாதுங்கரதுக்கு இது ஒரு நல்ல உதாரணம்.

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

Honesty alone wins has now changed into honesty also wins, in these days.//

நேர்மைதான் நிரந்தரமான வெற்றியை மட்டுமல்ல இடைக்காலத்தில் ஏற்படும் தோல்விகளைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும் அளிக்கும்.

நேர்மையற்றவர்களின் வெற்றி நிரந்தரமானது அல்ல என்பது நான் என் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை..

ஒருவேளை நான் பொருளாதாரத்தில் மிக உயர்ந்த ஸ்தானத்தை அடையாதிருக்கலாம். ஆனால் இருக்கும் இடத்தில் நிம்மதியாய், சந்தோஷமாய் இருக்கிறேனே அதுவே எனக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பது என்னுடைய கருத்து.

tbr.joseph said...

வாங்க துளசி,

எனக்கும் தெரிஞ்ச ஒரு பெரியவர், நம்மளைப் பார்த்ததுமே நாங்க கையைத் தூக்கறதுக்கு முன்னாலெயே 'நமஸ்காரம்'னு கைகூப்பிச்சொல்றப்ப அப்படியே குற்ற உணர்ச்சியிலே என் மனசு கூசிறும்.//

நீங்க எழுதுனத படிக்கறப்போ நான் ரொம்ப உணர்ச்சிவசப்படறேங்க..

நானும் நிறைய நேரத்துல இப்படி உணர்ந்திருக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க ராஜ்,

ரொம்ப judgemental-ஆ இருக்ககூடாதுங்கரதுக்கு இது ஒரு நல்ல உதாரணம்.//

நீங்க சொல்றது ரொம்பவும் சரி ராஜ்.

நானும் நிறைய நேரத்துல என்னோட கணிப்புல தோல்வியடைஞ்சிருக்கேன்.

நான் பார்த்ததுமே ஒருத்தர எடை போட்டுறுவேன். என் பார்வையிலருந்து தப்பவே முடியாதுங்கறதெல்லாம் சுத்த ஹம்பக்.

தஞ்சையிலயே எனக்கு இந்தமாதிரி ரெண்டு விதமான அனுபவங்களும் ஏற்பட்டிருக்கு. அடுத்து வர வாரத்துல அதப்பத்தி சொல்றேன்.

sivagnanamji(#16342789) said...

yogyama selvam serthavargal attam podradhu ille
thappu thalangaldhan romba sound vidum
thanjavur pakkam "noyyarisi kodhi thangadhu" enbanga

சிறில் அலெக்ஸ் said...

ஜோசப் சார்,
உங்கள் அனுபவங்கள் ஒவ்வொன்றும் அருமையான பாடங்கள். முதலில் வாசிக்கும்போது செட்டியாரை இகழத்தோன்றியது பின்னர் படித்தபோது அப்படியே மதிப்புமாறிவிட்டது.

தமக்கு சங்கடம் தந்தவரிடம் நட்பு பாராட்டுவது பலருக்கும் இயலாத ஒன்று அதை நீங்களும் செட்டியாரும் அருமையாய் செய்திருக்கிறீர்கள்.

tbr.joseph said...

வாங்க சிறில்,

சாதாரணமாக வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மேலாளர்களிடம் என்ன கேட்கலாம், என்ன கேட்கக்கூடாது என்று தெரியாமலே கேட்டு சங்கடங்களைத் தருவது சகஜம்தான். அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அப்போதே மறந்துவிட பழகிக்கொள்ளாவிட்டால் பிரச்சினைதான். இது என் முப்பதாண்டு கால வங்கி வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடங்களுள் ஒன்று.

G.Ragavan said...

பொதுவில் எல்லாரும் நல்லவர்கள்தான். சமயத்தில் ஏதாவது குறுக்க வந்து தட்டி விட்டுருது. வளர்ப்பும் சூழ்நிலையும் முக்கிய காரணங்கள்.

வைரமுத்து ஒருமுறை சொல்லியிருந்தார். "என்னுடைய நண்பர்கள் மற்ற நண்பர்களின் ரகசியங்களைக் கேட்டு நான் மறுத்த பொழுது என் மேல் ஆத்திரப்பட்டிருக்கிறார்கள். பாவம். அவர்கள் ரகசியங்களைக் கூட நாம் அப்படித்தான் பாதுகாப்பேன் என்று அறியாதவர்கள்." அதே போன்ற எண்ணந்தான் அந்த லேவாதேவிக்காரருக்கும் வந்திருக்கும். ஆகையால்தான் உங்களை நம்பி வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

பொதுவில் எல்லாரும் நல்லவர்கள்தான்.//

கரெக்ட். அப்படித்தான் என்னைப் போன்ற வங்கி மேலாளர்கள் நினைத்து தங்களை அவமதிக்கும் வாடிக்கையாளர்களின் ஏச்சையும் பேச்சையும் பெரிதுபடுத்தாமல் எங்கள் பணியைச் செய்கிறோம்.

வாடிக்கையாளர்கள் எங்கள் பதவியைத்தான் குறை சொல்கிறார்கள் எங்களையல்ல என்பதை புரிந்துக்கொண்டால் அவமானப்படுத்தப்படுகிறோம் என்ற பேச்சுக்கே இடமில்லையல்லவா? We are trainged to be impassive in our job.