09 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 94

தஞ்சையில் நான் இருந்த சமயத்தில் எங்கும் பரவியிருந்த இன்னொரு வர்த்தகம் தனியார் லேவாதேவிகள்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த இவர்கள் வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வங்கிகளுக்கு இணையாக என்று கூறமுடியாவிட்டாலும் வங்கிகளுடைய செயல்பாட்டை சற்றே பாதிக்கும் அளவுக்கு வர்த்தகம் செய்துக்கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

நான் தஞ்சைக்கு மாற்றலாகி வந்திருந்த புதிதில் நாயக்கரை சந்தித்ததைப் பற்றி எழுதியிருந்தேன்.

அவருடைய தொழில்களில் முக்கியமான ஒன்று இத்தகைய லேவாதேவிகாரர்களுக்கு இடைத்தரகராக இருப்பது என்பதை பிறகுதான் தெரிந்துக்கொண்டேன்.

இவர்கள் எல்லோருமே பரம்பரை, பரம்பரையாகவே பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருந்தவர்கள்.

சென்னையிலும் வடக்கத்திய மாநிலங்களிலிருந்து வந்து இத்தகைய கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு அடகுக் கடைகள் நடத்தி வந்தவர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். அவர்களுள் சிலருடன் என்னுடைய வங்கி வணிகத்தின் நிமித்தம் நெருங்கியும் பழகியிருக்கிறேன்.

ஆனால் சென்னையிலுள்ளவர்களுடைய வணிகத்தை ஒப்பிடும்போது தஞ்சை லேவாதேவிக்காரர்களின் வணிகம் பலமடங்கு பெரிது.

வங்கிகளில் ஒரு வணிகத்திற்கு கடன் பெற வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் சொத்து ஜாமீன் கேட்பது நிச்சயம். அதாவது, கடன்தாரரின் சொத்தை கடனுக்கு ஈடாக அடகு வைப்பது.

இதற்காக சொத்தையே வங்கிகளுடைய பெயருக்கு மாற்ற வேண்டும் என்பதில்லை. சொத்துக்குண்டான பத்திரங்களை அதற்குண்டான சமர்ப்பண படிவங்களில் கையொப்பமிட்டு வங்கிகளிடம் ஒப்படைத்துவிட வேண்டும். கடன் தொகை முழுவதும் அடைக்கப்பட்டதும் கடன் பத்திரங்களை வங்கிகள் திருப்பிக் கொடுத்துவிடும்..

ஆனால் பெரும்பாலான வர்த்தகங்களுக்கு வழங்கப்படும் கடன்கள் ஓவர்டிராஃப்ட் எனப்படும் முடிவுறா கணக்குகளாகும். அதாவது இத்தகைய கடன்களை முழுவதுமாக திருப்பி செலுத்த வேண்டியதில்லை..

கடன்தாரரின் வர்த்தகம் நடந்துக்கொண்டிருக்கும்வரை இக்கடன்களும் நிலுவையில் இருக்கும். ஒவ்வொரு மூன்றாம் மாதமும் (இப்போது ஒவ்வொரு மாதமும்) பற்று வைக்கப்படும் வட்டியை மட்டும் செலுத்திவிட்டால் போதும்.

அத்துடன், வர்த்தகத்தின் வளர்ச்சிக்கேற்ப கடன் அளவும் (Overdraft Limit) கூடிக்கொண்டே போக வாய்ப்பிருக்கிறது.

ஆனால் இத்தகைய கடன் தொகையை ஒரு வங்கியிலிருந்து முதன் முறையாக பெற வேண்டுமென்றால் அதற்கு பலவிதமான நியதிகளுக்கு கட்டுப்படவேண்டும். எல்லாவற்றிற்கும் முதலாக வணிகர்கள் தங்களுடைய வர்த்தகத்தின் வரவு செலவு கணக்கை, விற்பனை விவரங்களை தெளிவாக வைத்திருக்க வேண்டும். பிறகு வருமான வரி, விற்பனை வரி போன்றவற்றை தவறாமல் செலுத்துபவராயிருக்க வேண்டும்.

இவ்விரண்டு நியதிகளுக்கும் பெரும்பாலான வணிகர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இந்த சூழலில்தான் தனியார் லேவாதேவிகளின் உதவியை நாடுவதற்கு இவர்கள் தள்ளப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

மேலும், வங்கி மேலாளர்கள் அடிக்கடி மாறிவிடுவதால் உள்ளூரில் வணிகம் செய்பவர்களை முழுவதுமாக அறிந்துக்கொள்ள அவர்களுடைய வரவு செலவு கணக்கு மிக அத்தியாவசியமாகிவிடுகிறது.

ஆனால் தனியார் லேவாதேவிக்காரர்கள் பெரும்பாலும் அவர்கள் வணிகம் செய்யும் ஊரிலேயே பல வருடங்கள், ஏன், வழிவழியாகவே வசிப்பவர்களாக இருப்பதால் உள்ளூரில் வணிகம் செய்யும் எல்லோரையும் ஆதி முதல் அந்தம் வரை அறிந்திருப்பார்கள்.

இதுவும் அவர்களுடைய வெற்றிக்கு ஒரு காரணம்..

இப்படி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருப்பவர்களும் தங்களுடைய வணிகத் தேவைக்கு வங்கிகளைத் தான் நாடுவார்கள்.

அப்படியொருவரை அழைத்துக்கொண்டு ஒருநாள் என்னிடம் வந்தார் என்னுடைய பழைய நண்பர் நாயக்கர்.

அவருடன் வந்தவரைக் கண்டவுடனே அவர் லேவாதேவிக்காரர் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. ஏனென்றால் நான் கிளை திறக்கும் நேரத்தில் சேமிப்பு நிதியைத் திரட்ட வேண்டி நான் சென்று சந்தித்த பலர் இவ்வணிகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்.

அதுவும் தஞ்சையில் இத்தகையோர் ஏறக்குறைய எல்லோருமே ஒரே தோற்றத்தில் இருந்தனர் என்றால் அது மிகையாகாது.

இடுப்புக்குக் கீழே உயர்ந்த ரக மல் வேட்டி.. மேலே காலர் வைத்த ஷேர்வானி டைப் கோட்டு.. நெற்றி நிறைய சந்தணக் கீற்று, அதற்கு நடுவே சந்தணப் பொட்டு.. பார்த்த மாத்திரத்தில் தெரிந்துவிடும் அவர்கள் யாரென்று..

‘சார் இவர் ---------’ என்று நாயக்கர் அவரை அறிமுகப்படுத்தியதுமே நான், ‘நீங்க கொடுக்கல் வாங்கல் பிசினஸ்தானே பண்றீங்க?’ என அவர் எந்தவித வியப்பையும் முகத்தில் காட்டாமல், ‘ஆமாம் சார்.’ என்றார் புன்னகையுடன்.

வெற்றிலைக் காவியேறிய உதடும், பற்களும் இவர்களுடையே வேறொரு அடையாளம்!

‘சொல்லுங்க சார்..’ என்றேன் அவர்கள் இருவரும் அமர்ந்ததும்.

நாயக்கர் என்னைப் பார்த்து புன்னகையுடன், ‘சார் நீங்க நினைக்கிறா மாதிரி இவர் உங்கக் கிட்ட கடன் வாங்க வரலை..’ என்றார்.

நான் உண்மையிலேயே வியப்புடன் அவருடன் வந்தவரைப் பார்த்தேன். ‘அப்புறம் சார்? சொல்லுங்க..’

‘சாரோட ஃபேமிலில சொத்த பிரிச்சி செட்டில்மெண்ட் பண்றாங்க. அதான் சார், ஜாய்ண்ட் ஹிண்டு ஃபேமிலி.. இவரோட அப்பாவுக்கு இன்னும் அஞ்சாறு மாசத்துல எண்பது வயசாவுது.. அதான் பிசினஸ், சொத்து எல்லாத்தையும் தன் மூனு பசங்களுக்கும் பிரிச்சி குடுத்து செட்டில்மெண்ட் பண்ணிரலாம்னு பாக்கறார். இவரோட மூத்தவர் தவறிப்போய் அஞ்சாறு வருஷம் ஆயிருச்சி. அவரோட பங்கு அவரோட மூனு மைனர் பசங்களுக்கு போணும். பெரியவருக்கு தன் மருமக மேல அவ்வளவா அபிப்பிராயம் இல்லாததால சொத்தா குடுக்காம அதுக்கு ஈடான தொகைய பேங்க்ல பசங்க பேர்ல டெப்பாசிட்டா போட்டுரலாம்னு நினைக்கிறார். அதான் உங்கக் கிட்ட கூட்டிக்கிட்டு வந்திருக்கேன்.’

அட! பரவாயில்லையே.. எதிர்பார்க்காத சந்தோஷமாயிருக்கிறதே என்று நினைத்தேன்.

‘செஞ்சிரலாம் சார்.’ என்றேன் சந்தோஷத்துடன்.

ஆனால் நாயக்கருடன் வந்தவருடைய முகத்தில் எந்தவித சந்தோஷமும் தென்படவில்லை.

அவர் என்னை சந்தேகத்துடன் பார்ப்பதுபோல் தெரியவே, ‘என்ன சார்.. ஏதோ கேக்கணும்னு வந்துட்டு தயங்கறதுபோல தெரியுதே.. என்னன்னு சொல்லுங்க.’ என்றேன்.

அப்போதும் அவர் எப்படி கூறுவது என்ற சற்று தயங்கி நாயக்கரைப் பார்த்தார்.

அவர் புரிந்துக்கொண்டு, ‘சார் ஒன்னுமில்லை.. இவருக்கு ஒரு சந்தேகம்.’ என்றார் என்னைப் பார்த்து.

நான் இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, ‘சொல்லுங்க சார்.’ என்றேன்.

நாயக்கர் மீண்டும், ‘சார் இவங்க அப்பா போடறதா சொல்ற தொகை ரொம்ப பெரிசு.. சுமார் ஒவ்வொரு பசங்க பேர்லயும் -------- லகரம் போட வேண்டியிருக்கும். அந்த பசங்க மேஜராவுறதுக்கு இன்னும் பத்து வருஷத்துக்கு மேல ஆவும்.. இவரத்தான் எல்லா பசங்களுக்கும் கார்டியனா போடறதா இருக்கு..’ என்று இழுத்தார்.

அதுக்கு எதுக்கு தயங்கறீங்க என்று கேட்க வேண்டும் என்று நினைத்த நான் இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறதென்று நினைத்து ஒன்றும் பதில் பேசாமல் அவர்களாகவே சொல்லட்டும் என்று இருவரையும் பார்த்தேன்.

நாயக்கருடன் வந்தவர், ‘சார் நானே சொல்றேன். என் அண்ணன் பசங்களோட மொத்த ஷேர் ரூ------- லட்சம். அத சரிசமமா பிரிச்சி பத்து வருஷ டெப்பாசிட்டா போடறதா ப்ளான். மிஞ்சி, மிஞ்சிப் போனா நீங்க -------- பர்செண்ட் வட்டி குடுப்பீங்க.. அதையே நம்ம லேவாதேவி பிசினஸ்ல போட்டா அஞ்சே வருஷத்துல பசங்களோட பங்க ரெண்டு மடங்காக்கிரலாம். அப்பாக்கிட்ட சொன்னா புரியவே மாட்டேங்குது.. அதான் நம்ம நாயக்கர்கிட்ட பேசிக்கிட்டிருந்தப்போ சொன்னேன். அவர் நீங்கதான் இதுக்கு சரியான ள்னு கூப்டுக்கிட்டு வந்தார்.. இங்க வந்துட்டு நான் பசங்க பேர்ல டெப்பாசிட் போட வந்தா மாதிரி சொல்லிட்டார். சார் தப்பா நினைச்சிக்காதீங்க.. நான் இங்க வந்தது அதுக்கில்லை..’ என்றார் தெளிவாக..

நான் ஒன்றும் பதில் பேசாமல் சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘சரி.. நீங்க சொல்றது முழுசும் புரியாததால கேக்கறேன். இதுல நான் என்ன பண்ணணும்? அதச் சொல்லுங்க.’ என்றேன்.

‘நீங்க என் அப்பாக்கிட்ட வந்து பேங்க்ல பெரிசா வட்டியும் கிடைக்காது.. அப்படியே கிடைச்சாலும் பத்துவருஷத்துக்கெல்லாம் பேங்க்ல டெப்பாசிட் எடுத்துக்க மாட்டாங்கன்னு சொல்லணும். இதுக்கு உங்களுக்கு ஏதாச்சும் வேணும்னா...’ மேலே தொடர்வது உசிதமில்லை என்று நினைத்தாரோ அல்லது என்னுடைய முகத்தில் தெரிந்த கோபத்தைப் பார்த்துவிட்டாரோ.. தன்னுடைய பேச்சை நிறுத்திக்கொண்டு நாயக்கரை சங்கடத்துடன் பார்த்தார்.

நாயக்கர் உடனே கோபத்துடன், ‘செட்டியார்.. என்ன இது.. எங்கிட்ட ஒன்னு சொல்லி கூட்டிக்கிட்டு வந்துட்டு இங்க வந்து இப்படி பேசறீங்க?’ என்றார்.

நல்ல வேளை. எப்போதும் திறந்துக்கிடக்கும் என் அறை கதவை நாயக்கர் உள்ளே நுழைந்ததுமே அழுத்தி அடைத்துவிட்டு வந்திருந்தார்.

நான் இருவரையும் மாறி, மாறி பார்த்தேன்.

என்ன பதில் சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்று மனதுக்குள் ஒரு ஒத்திகைப் பார்க்க ஆரம்பித்தேன்.


தொடரும்..

12 comments:

G.Ragavan said...

ம்ம்ம்ம்..குடும்பக் குழப்பம் வங்கி வரைக்கும் வந்துருச்சா.......பசங்க பேர்ல வங்கீல போட்டு வெக்கிறது நல்லதுதான். அந்தப் பணத்தை எடுத்து வட்டிக்கும் விடனும்னு செட்டியார் விரும்புறாராக்கும்....

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அந்தப் பணத்தை எடுத்து வட்டிக்கும் விடனும்னு செட்டியார் விரும்புறாராக்கும்//

பாங்குல மைனர்ங்க மேல போட்டுட்டா அவங்க படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்குத்தான் கார்டியனால கடனா எடுக்க முடியும்..

ஆனா அவரு பேங்க்ல போடறதையே கூடாதுன்னு நான் சொல்லணும்னுல்லே வந்தாரு.

அதுக்கு எனக்கு கமிஷன் வேற கொடுக்கறதா சொல்றாரே..

Krishna said...

Nayakkarum Kootta?

G.Ragavan said...

ஓ உங்களுக்கும் எதுனாச்சும்....க்கு இதுதான் பொருளா..........அடடா!

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

நாயக்கர் கூட்டாளியாயிருந்திருந்தால் அவர் செட்டியாரைப் பார்த்து கோபப்பட்டிருக்கமாட்டாரே..

Krishna said...

illa, niraya peru nadikkirangale, atha vachi sonnen. Konjam kozhambittennu ninakiren. SETtayum, Nayakkaraiyum confuse pannetten pola.

tbr.joseph said...

மீண்டும் வருக ராகவன்,

எதுனாச்சும்....

இந்த வார்த்தை ரொம்பவும் டேஞ்சரானது..

அத கேக்கறவங்க சரியா புரிஞ்சிக்கலைன்னா அம்புடுதேன்..

tbr.joseph said...

மீண்டும் வருக கிருஷ்ணா,

illa, niraya peru nadikkirangale, atha vachi sonnen//

நடிக்கிறவங்க இருக்காங்கங்கறது உண்மைதான். நாயக்கர் இனப் பற்று சற்றே அதிகம் உள்ள மனிதர். ஆனால் என்னிடம் அவர் நடிக்கவில்லை..

SETtayum, Nayakkaraiyum confuse pannetten pola. //

என்னுடைய அனுபவத்தில் சேட்டும் நல்லவர்தான். நாயக்கர்தான் அவரை களவாணிப்பயல் என்பார்.. அது தமிழர்களைத் தவிர தஞ்சையிலிருந்த மற்றவர்களை குறிக்க அவர் பயன்படுத்தும் சொல் அது..

துளசி கோபால் said...

அப்பாடா,

இந்தப் பதிவுவரை ஒருவழியாப் படிச்சுட்டேன். மூச்சு வாங்குது:-)) ஆனாலும் உங்களுக்கு சோதனை மேல் சோதனைதான்.

tbr.joseph said...

வாங்க துளசி..

எவ்வளவு நாளாச்சி உங்க எழுத்த படிச்சி?

நிதானமா உக்கார்ந்து மூச்சு வாங்கிக்கிருங்க..

என்னுடைய கோப்புகளை அப்படியே வாசிக்க முடிந்ததா?

துளசி கோபால் said...

எங்கே அப்படியே வாசிக்க முடிஞ்சது? நோட்பேடுலே போட்டு மாத்திட்டுப் படிச்சேன்.

மத்தவங்க பதிவுகளை நேரம் கிடைக்கும்போது படிக்கலாம். உங்களோடது தொடராச்சே. அதானாலே முன்னுரிமை(!) கொடுத்துட்டேன்.

tbr.joseph said...

அதானாலே முன்னுரிமை(!) கொடுத்துட்டேன். //

அடடா.. புல்லரிக்குது..

உங்களுடைய முன்னுரிமை(!)க்கு மிக்க நன்றிங்க துளசி..