07 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 93

சற்று நேரம் என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டு என்னை ஆட்சியரை அழைக்க பரிந்துரை செய்த பாதிரியாரை சென்று பார்க்கலாம் என்று புறப்பட்டேன்.

நான் அவருடைய அலுவலகத்திற்கு செல்லும் முன் என்னுடைய கிளைக்கு தொலைபேசியில் அழைத்து என்னுடைய காசாளரிடம் நான் வருவதற்கு இனியும் அரை மணி நேரம் காலதாமதாகலாம் என்று தெரிவித்தேன்.

அவர், ‘சார் நீங்க கவலைப்படாம வாங்க. இங்க ஒன்னும் பிரச்சினையில்லே.’ என்றார்.

அதைக் கேட்டதும் மன நிம்மதியுடன் சேவை மையத்தின் தலைவருடைய அலுவலகம் சென்றேன்.

நல்ல வேளை. அவர் அலுவலகத்தில் இருந்தார்.

என்னைக் கண்டதும், ‘என்ன ஜோசப் கலெக்டர பார்த்தீங்களா? டேட் கொடுத்தாரா?’ என்றார்.

நான் எனக்கு நேர்ந்ததை சுருக்கமாக தெரிவித்தேன்.

அவர் உடனே ஒரு சிறு புன்னகையுடன், ‘அவர் அப்படித்தான். கொஞ்சம் பெருமை பாராட்டும் சுபாவம் உடையவர். மற்றபடி பிரச்சினையில்லை.’ என்றார் சர்வ சாதாரணமாக.

அதுதான் பாதிரியார்களுக்கும் நமக்கும் உள்ள பிரச்சினை. அவர்களுக்கு யாரையுமே தவறாக எண்ணத் தெரியாது.

மாவட்ட ஆட்சியரின் காரியதரிசியானால் இவரை துச்சமாகப் பேசியதை நானே கேட்டேன். இவரோ அவரைப் பற்றி எதுவும் தவறாகப் பேசாமல் அவருடைய குணம் அப்படித்தான்.. மற்றபடி பிரச்சினையில்லை என்கிறார்!

‘ஃபாதர் எனக்கென்னவோ கலெக்டர் இல்லாமயே இந்த விழாவ நடத்திரலாம்னுதான் தோணுது.. ஆரம்பத்திலேயே என்னுடைய எண்ணமும் அதுதான். நீங்க சொன்னீங்களேன்னுதான் நான் அங்க போனேன். அந்த அனுபவமே எனக்கு போதும். எனக்கு மறுபடியும் DRDA ஆஃபீசுக்கோ அல்லது BDO ஆஃபீசுக்கோ போய் கெஞ்சறது பிடிக்கலை ஃபாதர்.’ என்றேன் வெறுப்புடன்.

அவர் அப்போதும் அமைதியுடன், பதற்றப்படாமல், ‘அப்படி இல்லை ஜோசப். நாம செய்யறது ஒரு பொது நல சேவை. இதுல நம்மளப்பத்தி மட்டும் நினைக்கக் கூடாது. அரசு அதிகாரிகளுக்கும் சில வரைமுறைகள் இருக்கு இல்லையா? அதைத்தான் அவர் அப்படி சொல்லியிருப்பார். நீங்க கவலைப்படாம போங்க. நானே நாளைக்கு காலைல முதல் வேலையா கலெக்டர போய் பார்த்து இதப்பத்தி பேசிட்டு வரேன். BDO வையும் பார்த்து அவருக்கும் யாருக்காவது கடனுதவி செய்யணும்னு இருந்தா அதையும் தெரிஞ்சிக்கிட்டு வரேன்.. இந்த மாதிரி நான் நிறைய பார்த்திருக்கேன். நீங்க போய் பார்த்த அதிகாரிக்கு நானே நேர்ல வந்து இதைச் சொல்லவில்லைங்கற வருத்தம் இருந்திருக்கலாம். அவருடைய தன்மானப் பிரச்சினையை தீர்த்து வச்சிட்டா எல்லாம் நல்லபடியா நடக்கும். அத நான் பார்த்துக்கறேன்.’ என்று எனக்கு விளக்கம் அளிக்க நான் வியப்புடன் அவரையே பார்த்தேன்.

பிறகு, ‘ஓக்கே ஃபாதர். உங்க விருப்பப்படியே செஞ்சிரலாம். நான் மேற்கொண்டு என்ன செய்யணும்னு நீங்க சொல்ற வரைக்கும் காத்திருக்கிறேன்.’ என்று கூறிவிட்டு என் கிளைக்கு திரும்பினேன்.

அவர் என்ன செய்தாரோ அடுத்த நாள் மாலையே என்னை தொலைப் பேசியில் அழைத்து ஆட்சியர் அளித்த தியதியை எனக்கு தெரிவித்தார். அத்துடன் BDO அளித்த சுமார் இருபது பெயர்களைக் கொண்ட பட்டியலையும் ஒரு சிப்பந்தி வழியாகக் கொடுத்தனுப்பினார். அத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தில், ‘இதில் குறிப்பிட்டுள்ள இருபது பேருக்கும் சலுகைக் கடனுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவர்களுக்கும் சேர்த்து சப்சிடி தொகையை எங்களுடைய சேவை மையமே வழங்கிவிடும். அரசிடமிருந்து இத்தொகை உங்களுக்கு கிடைக்கும்போது எங்களுடைய மைய கணக்கில் வரவு வைத்தால் போதும்.’ என்று குறிப்பிட்டிருந்தார்.

BDO அலுவலகத்திலிருந்து வந்திருந்த பட்டியிலிலிருந்த பெயர்களையும் அவர்களுடைய விலாசத்தையும் மேலோட்டமாக பார்த்தபோதே அவை நான் ஏற்கனவே நிராகரித்தவைதான் என்பது தெரிந்தது. அவர்களுள் ஒருவரும் கடன் பெறுவதற்கு தகுதியானவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல அவர்கள் குறிப்பிட்ட சில அரசு அதிகாரிகளுக்கு மிகவும் வேண்டியவர்கள் என்பதும் நான் ஏற்கனவே விசாரித்து அறிந்திருந்தேன்.

இதை நான் பட்டியல் கிடைத்தவுடனே பாதிரியாரை தொலைப்பேசியில் அழைத்து தெரிவித்தேன். அவர் அப்போதும் பதற்றமடையாமல், ‘தெரியும் சார். ஆனால் அவர்கள் அனைவரையும் கடனைத் திருப்பியடைக்க வைப்பது எங்களுடைய மையத்தின் பொறுப்பு. தயவுசெய்து இதை பிரச்சினையாக்காதீர்கள்.’ என்று வேண்டிக் கொண்டார்.

எனக்கும் வேறு வழி தெரியாததால் விருப்பமில்லாமல் அவர்களுக்கும் தலா ரூ---------- கொடுப்பதாய் ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று..

ஆனால் மையத் தலைவர் கூறியதுபோலவே அவர்களையும் மாதந்தவறாமல் கடன் தொகையை அடைக்கச் செய்தது மையத்தின் சேவையாளர்கள்தான்.

****

தஞ்சையில் நான் இருந்த காலத்தில் இத்தகைய அனுபவங்கள் எனக்கு பல ஏற்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளின் மிரட்டலுக்கு பணியாமல் நான் நினைத்தவர்களுக்கு மட்டுமே, அதாவது நான் குறிப்பிட்ட சேவை மையம் செயல்படுத்தி வந்த திட்டங்களின் வழியாக மட்டுமே நான் இத்தகைய கடன்களை வழங்குவது என்பதில் உறுதியாக இருந்தேன்.

நான் மேற்கூறிய விழா நடத்தி முடித்த ஒரு சில மாதங்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் வழக்கமாக நடத்தும் கூட்டம் ஒன்றில் தஞ்சை DRDAவின் தலைவராய் இருந்த அதிகாரி ஒருவர் என்னுடைய வங்கியின் பெயரைக் குறிப்பிட்டு (என் பெயரைக் குறிப்பிடாமலிருந்தது என் பாக்கியம்!) அரசு செயல்படுத்தும் எந்த திட்டத்திலும் பங்குகொள்வதில்லையென்று புகார் கூறினார்.

என்னுடைய வங்கி நடத்திய கடன் வழங்கும் விழாவிற்கு தலைமைத் தாங்க வந்திருந்த ஆட்சியருக்கு தஞ்சை ஆயரே என்னை நேரடியாக அறிமுகப்படுத்தியதிலிருந்து அவர் என்னை ஒருவாறு நினைவில் வைத்திருந்திருக்கிறார்.

DRDA என்னுடைய வங்கியின் பெயரை கூட்டத்தில் அறிவித்ததும் இதன் பிரதிநிதி யார் என்று கூட்டத்தில் அமர்ந்திருந்தவரை பார்த்த ஆட்சியர் நான் எழுந்து நின்றதும் என்னை அடையாளம் கண்டுக்கொண்டு என்னைப் பார்த்து லேசாய் புன்னகைத்தார்.

பிறகு DRDA அதிகாரியைப் பார்த்து, ‘It is OK. He is from the Private Sector only. He is doing whatever is possible. We are more concerned about the Public Sector Banks.’ என்று ஒரே போடாக போட அதிகாரியின் முகம் வாடிப்போனது. என்னை ஒருமுறை பார்த்துவிட்டு அமர்ந்துக்கொண்டார்.

***

சேவை மையம் செயல்படுத்திய திட்டங்களில் பல தஞ்சையைச் சுற்றிலுமிருந்த கிராமங்களில், முக்கியமாக மையத்தினரால் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில், வாழ்ந்த சமுதாயத்தில் நலிந்த மக்களுக்கு, அதுவும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவிருந்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

இப்போது கர்நாடக மாநிலத்துடனான காவிரி பிரச்சினை அப்போதும் இருந்தது. காவிரியாற்றை நம்பி விவசாயம் செய்து பிழைத்து வந்த மக்கள், அதுவும் வயலில்லாத ஏழைத் தொழிலாளர்களுடைய வாழ்வில் மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஆடு மற்றும் கறவை பசு வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற திட்டங்கள் விவசாயக் குடும்பத்திலிருந்த பெண்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்தன என்றால் மிகையாகாது.

ஆனால் அவற்றிலும் அரசியல்வாதிகளின் தூண்டுதலால் இடைத் தரகர்களாக செயலாற்றிவந்த சில எத்தர்கள் தலையிட்டு ஏழை எளிய விவசாய பெண்களை ஏமாற்றியதையும் நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

ஒரு முறை எங்களுடைய திருச்சி கிளைக்கு அங்கு மேலாளராகவிருந்த என் நண்பரைச் சந்திக்க சென்றிருந்தேன். அவர் என்னைவிட இரண்டு வருடம் சீனியர். தென் மாவட்டம் ஒன்றைச் சார்ந்தவர்.

அவருடைய விசாலமான அறையில் அவருடைய இருக்கைக்குப் பின் சுவரோரமாக சுமார் பத்து மாட்டுத் தீவன மூட்டைகள், தீவனம் கலக்க உபயோகிக்கும் மரத்தாலான தொட்டிகள், பால் கறக்க உபயோகப்படுத்தப்படும் தகரத்தாலான பாத்திரங்கள், கறந்த பாலை சேமித்து வைக்கும் அலுமினியத்தாலான பாத்திரங்கள் இருப்பதைக் கண்டேன்.

‘என்ன சார்.. பால் பண்ணை ஏதும் துவக்கியிருக்கீங்களா?’ என்றேன் கேலியுடன்.

அவர் சிரித்தவாறே என்னைப் பார்த்தார். ‘ஜோசப், எல்லாம் இந்த களவாணிப்பயல்களாலத்தான். நம்ம கிட்ட கடன வாங்கிற  வேண்டியது. ஒரு ஜாமானையும் வாங்காம ஒரே ஜோடி மாட்ட நாலஞ்சி பேர் காமிச்சி நம்மள ஏமாத்திப்பிடறானுங்க இல்லே. அதுக்குத்தான் நானே அவனுங்களோட மாட்டுச் சந்தைக்குப் போயிருவேன். மாட்டைப் புடிச்சி கையில குடுத்து, எலேய் உங்க ஜாமான் ஜெட்டையும் நானே வாங்கி தந்துருவேன்.. எல்லாப் பயலும் ஒளுங்கு மரியாதையா பாலக் கறந்து வித்தோமா லோன கட்டுனோமான்னு இருக்கணும்.’ என்று அவருடைய ஊர் பாஷையில் எனக்கு விவரித்தபோது நான் அசந்து போய் அவரையே பார்த்தேன்.

அவர் அத்துடன் நிற்கமாட்டார். அதிகாலையில் எழுந்து அவரிடம் கடன் பெற்றவர்கள் பண்ணைக்கே சென்று நிற்பார். ‘என்னவே, எப்படி இருக்கு பிசினஸ்?’ என்று விசாரிப்பார்.

அவர் சில மாதங்கள் கழித்து அங்கிருந்து தூத்துக்குடி கிளைக்கு மாற்றலாகி சென்றார். அவர் தூத்துக்குடியில் பணியாற்றிவிட்டு மாற்றலாகிச் செல்லும்போது அவரிடமிருந்து கிளை பொறுப்பை ஏற்றது நான். அங்கும் அவருடைய செயல்பாடு அப்படியே இருந்தது..

திருச்சியில் மாட்டு சந்தையென்றால் தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகம்..  மீன் படகுகளுக்கு கொடுத்த கடனை வசூலிக்க மீனவர்கள் கூடும் துறைமுகத்திற்கே சென்று நிற்பார்..

அவரைப் போல செயலாற்ற நான் ஒருபோதும் முனைந்ததில்லை..

ஆனால் அவர் கூறியதென்னவோ நிதர்சனமான உண்மை..

அதாவது, ஒரேயொரு ஜோடி பசுவைக் காட்டியே பல வங்கிகளை ஏமாற்றியவர்கள் ஏராளம்..

தொடரும்..

4 comments:

G.Ragavan said...

ஓ அடுத்து தூத்துக்குடியா....வரட்டும் வரட்டும்....காத்திருக்கிறேன். தஞ்சாவூர் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

tbr.joseph said...

வாங்க ராகவன்,

தூத்துக்குடிக்கு வர்றதுக்கு இன்னும் ஒரு பத்து நாளாவது ஆவும்..

Krishna said...

Appadi podunga. Ennada Thanjavur chapter close panra mathiri ezuthararennu ninathen. Innum paththu Nal varaporathu kuriththu santhosham.

(sir, unga political comments padichen. Intha podu podareenga. Intha saruthana athu?!!)

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

தஞ்சாவூரப் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்குது. அதனாலதான்..

(sir, unga political comments padichen. Intha podu podareenga. Intha saruthana athu?!!)

நான் சாதாரணமா அரசியல் பதிவுகள படிக்கறதோட சரி. கருத்து சொல்வதில்லை. ஆனால் வை.கோவைப் பற்றி நான் படித்த சில பின்னூட்டங்கள் என்னை அப்படி எழுத தூண்டின என்று நினைக்கிறேன். மற்றபடி எனக்கும் அரசியலுக்கும் காத தூரம்..

அதான் ஜோவும், முத்துவும் தூள் கெளப்புறாங்களே..