06 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 92

வட்டாட்சியர் என்னவோ நல்லவராய்தான் தெரிந்தார்.. ஆனால்...

ஒரு சின்ன திருத்தம்.

வட்டாட்சியர் என்றால் தாசில்தாராம்! சிவஞானம்ஜி சொல்றார். அதுதான் சரி. அவருக்கு நன்றி.

நான் கூற வந்தது மாவட்ட ஆட்சியர். அதாவது கலெக்டர்.

அவர் ஒரு வடக்கத்திய மாநிலத்தைச் சார்ந்தவர். மிகவும் மென்மையாக பேசுபவர். எளிமையானவர்.

ஆனால் அவரைச் சந்தித்து எங்களுடைய வங்கி கடன் வழங்கும் திருவிழாவுக்கு அழைக்க எனக்கு அவ்வளவு இலகுவாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் அவ்விலாக்கா உயர் அதிகாரியாக இருப்பவர் பெரும்பாலும் நேர்மையானவராக, எளிமையானவராகத்தான் இருந்தார். ஆனால் அவரை சந்திப்பதென்பது அத்தனை எளிதாக இருக்கவில்லை.

நான் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முதலில் அவருடைய காரியதரிசியாய் இருந்த ஒருவரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவரை சந்திப்பது மாவட்ட ஆட்சியரைச் சந்திப்பதைவிட கடினமாக இருந்தது. அத்தனை பந்தா பேர்வழியாக இருந்தார்.

அவரை சந்தித்த நாளைப் பற்றி இப்போது எழுதும்போதும் என்னையுமறியாமல் கோபம் பொங்கி எழுகின்றது. என்னுடைய அப்போதைய வயது 35. இப்போதிருக்கும் பொறுமை எனக்கு அப்போது இல்லை. அத்துடன் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரப்படும் வயது.

அவரை சந்திக்க சென்று என்னுடைய பெயர் அச்சிட்ட அடையாள அட்டையை அவருடைய சிப்பந்தியிடம் கொடுத்தனுப்பிவிட்டு காத்திருந்தேன்.

எவ்வளவு நேரம் என்று நினைக்கிறீர்கள்?

சுமார் ஒரு மணி நேரம்!

என்னுடைய கிளையில் என்னை விட்டால் வேறு யாரும் அதிகாரி இல்லாத சமயம் அது. காசாளர் வசமிருந்த அன்றாட அத்தியாவசிய குறைந்தபட்ச ரொக்கத்தை மட்டும்தான் அவர் கவுண்டரில் வைத்திருப்பார். யாருக்காவது அவர் கைவசம் இருக்கும் தொகையை விட கூடுதல் தொகை கொடுக்கவேண்டியிருந்தால் நானும் அவரும் சேர்ந்துதான் பாதுகாப்பு பெட்டக அறையிலிருந்து எடுக்க முடியும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் காலை பத்திலிருந்து மதியம் இரண்டு மணி வரை, அதாவது வங்கி வர்த்தக நேரத்தில், நான் காசாளரை மட்டும் விட்டுவிட்டு போவது சற்று சிரமமான காரியம். அந்த நேரம் பார்த்து யாராவது முக்கியமான ஒரு வாடிக்கையாளர் வந்து அவருக்கு தேவைப்பட்ட தொகை கொடுக்க முடியாமல் போனால் பிரச்சினையாகிவிடவும் வாய்ப்புண்டு.

ஆனால் என்னுடைய அதிர்ஷ்டம் எனக்கு அமைந்த மிகவும் பொறுப்புள்ள காசாளர். அவரைப் பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறேன். எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் நிதானம் தவறாமல் பணியாற்றக்கூடிய மனமுதிர்ச்சி பெற்றவர்.

ஆகையால் நியதிகளுக்கு மாறாக அவரையும் வேறொரு குமாஸ்தாவை மட்டும் கிளையில் விட்டுவிட்டு எப்போதாவது முக்கியமான சமயங்களில் நான் வர்த்தக நேரத்திலும் வெளியில் செல்வதுண்டு.

அன்றும் அப்படித்தான். மாவட்ட ஆட்சியரை அழைத்துவிட்டு ஒரு அரை மணி நேரத்தில் திரும்பிவந்துவிட முடியும் என்று நினைத்து சென்ற நான் அவருடைய காரியதரிசியையே ஒரு மணி நேரமாகியும் சந்திக்க முடியாமல் காத்திருக்க நேர்ந்ததை நினைத்து ஆத்திரத்துடன் அமர்ந்திருந்தேன்.

அவருடைய அறைக்குள் பல முறை சென்று திரும்பிய அவருடைய சிப்பந்தி என்னை பரிதாபமாகப் பார்த்தார். ‘என்னங்க உங்க ஐயா ரொம்ப பிசியா இருக்கார் போல. சாய்ந்திரம் வந்தா ஃப்ரியா இருப்பாரா?’ என்றேன்.

அவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ரகசியக் குரலில், ‘அத ஏன் சார் கேக்கறீங்க? சார் சும்மாவே பந்தா பண்ணுவார். இன்னும் ஒரு வாரத்துல நம்ம ---------- அமைச்சர் வர்றதா இன்னைக்கி காலைலதான் மெசேஜ் வந்தது. அதான். பயங்கரமா பிசியா இருக்கா மாதிரி காட்டிக்கறார். அத்தோட நீங்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்காம வந்துட்டீங்களாம். கொஞ்ச நேரம் காத்துக்கிட்டிருக்கட்டும்னு சொல்றார் சார். இன்னும் ஒரு பத்து நிமிஷம் பாருங்க. அவர் கூப்டலனா நான் மறுபடியும் போய் சொல்றேன்.’ என்றார்.

நான் என் தலைவிதியை நொந்துக்கொண்டு சரி வந்ததுதான் வந்தோம் பார்த்துவிட்டே போகலாம் என்று காத்திருந்தேன்.

அவருடைய சிப்பந்தி என்னிடம் கூறியபடி பத்து நிமிடம் கழித்து அறைக்குள் சென்று என்ன சொன்னாரோ காரியதரிசி பெரிய மனது வைத்து என்னை உள்ளே அழைத்தார்.

நான் உள்ளே நுழைந்து காலை வணக்கம் கூறிவிட்டு அவரைப் பார்த்தேன். பதில் வணக்கம் கூறாதது மட்டுமல்ல கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு எனக்கு இருக்கைக் கூட அளிக்காமல், ‘சொல்லுங்க சார். என்ன விஷயமா கலெக்டர பாக்கணும்?’ என்றார்.

அவருக்கு ஓய்வு பெற இன்னும் ஒரு வருடம் இருந்தால் அதிகம். மாவட்ட ஆட்சியரை ஏற்கனவே ஒரு வங்கியர்களின் கூட்டத்தில் பார்த்திருக்கிறேன். அவர் இவரை விட சுமார் இருபத்தைந்து வயதாகிலும் இளையவராயிருப்பார். அந்த வயதிலும் எளிமையாக இருந்த அவர் எங்கே.. பணி ஓய்வுபெற இன்னும் ஒன்றோ இரண்டோ வருடம் இருந்த சமயத்திலும் வெட்டி பந்தாவோடிருந்த இவர் எங்கே என்று நினைத்தேன்.

நான் சுருக்கமாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க நினைத்த விஷயத்தை எடுத்துரைத்தேன். அத்துடன் நான் அவரை அழைக்க நினைத்ததே தஞ்சை பல்நோக்கு சேவை மையத்தின் தலைவருடைய லோசனையின் பேரில்தான் என்றும் கூறினேன்.

அதுதான் நான் செய்த தவறு..

இதில் எனக்குக் கிடைத்த படிப்பினை: நாம் யாரையாவது, முக்கியமாக அரசு அதிகாரிகளை, சந்திக்க அல்லது அவருடைய உதவியைக் கோரி செல்வதானால் யாருடைய சிபாரிசில் வந்திருக்கிறோம் என்பதை எடுத்தவுடனே தெரிவிக்காமலிருப்பது நல்லது. ஏனெனில் ஒருவேளை நம்மை சிபாரிசு செய்தவருக்கும் நாம் சந்திக்க சென்றவருக்கும் இடையில் ஏதாவது மனத்தாங்கல் இருக்கும் பட்சத்தில் நம்முடைய சந்திப்பு அல்லது நாம் சென்ற காரியம் தோல்வியில் முடிய வாய்ப்புள்ளது.

அதுதான் அன்று நடந்தது. என்னை மாவட்ட ஆட்சியரை அழைக்க பரிந்துரைத்த பாதிரியாருக்கும் ஆட்சியரின் காரியதரிசிக்கும் இடையில் ஏதோ மனத்தாங்கல் இருந்திருக்கிறது. அதனால்தானோ என்னவோ அவர் என்னையும் ஒரு எதிரியாகக் கருதினார்.

‘சார், அவர் சொல்லிட்டாப் போறுமா? இந்த மாதிரி தனியார் வங்கிகள் நடத்துற விழாவுலெல்லாம் ஆட்சியர் கலந்துக்க மாட்டார். நீங்க உங்க பேங்குக்கு அலாட் பண்ண எந்த டார்கெட்டையும் ரீச் பண்ணலை. DRDA க்கும் BDO க்கும்தான் சார் பெனிஃபிஷியரீச செலக்ட் பண்றதுக்கு கவர்ன்மெண்ட் அதிகாரம் குடுத்திருக்கு. நீங்க சொல்ற சேவை மையத்துக்கு இல்ல. உங்க வங்கி இதுவர BDO அலுவலகத்துலருந்து பரிந்துரை செய்த எந்த பெனிஃபிஷியரிக்கும் நீங்க கடனுதவி செய்யலைன்னு ஏற்கனவே புகார் வந்திருக்கு. நீங்க என்னடான்னா நீங்களா ஒரு லிஸ்ட் தயாரிச்சிக்கிட்டு அவங்களுக்கு குடுக்கறேன், இவங்களுக்கு குடுக்கறேன்னு பேருக்கு ஒரு விழா நடத்துவீங்க, அதுக்கு ஆட்சியர் வரணும்னு வந்து கேட்டா நாங்க உடனே வந்துரணுமா? போங்க சார், முதல்ல BDO வை பார்த்து உங்கக் கிட்டருக்கற பெனிஃபிஷியர்சோட லிஸ்ட குடுத்து அவங்களுக்கு எலிஜிபிளிட்டி இருக்குதான்னு கன்ஃபர்ம் பண்ணிட்டு வாங்க. அப்புறம் விழா நடத்துறத பத்தி யோசிக்கலாம்.’ என்று ஒரு பெரிய லெக்சரே அடித்தார்.

என் அடிவயிற்றிலிருந்து எழுந்து வந்த ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். ஆனாலும் என்னுடயை கண்களிலிருந்தே என்னுடைய கோபத்தை அவர் உணர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

‘ஒன்னு தெளிவா சொல்றேன் கேட்டுக்குங்க சார். நான் இப்போ சொன்னதையும் மீறி நீங்களா தேர்ந்தெடுத்திருக்கிற பெனிஃபிஷியரீஸ்கு லோன் குடுக்கறேன்னு ப்ரொசீட் பண்ணீங்கன்னா ஆட்சியர்கிட்ட சொல்லி உங்க மேலிடத்துக்கு உங்க பேர்ல நடவடிக்கை எடுக்க சொல்ல வேண்டியிருக்கும். அத ஞாபகத்துல வச்சிக்கிட்டு மேல்கொண்டு என்ன செய்யணும்னு யோசிங்க. போங்க. எனக்கு வேற வேலையிருக்கு.’

அத்துடன் தலையைக் குனிந்துக்கொண்டு தன்னுடைய வேலையைக் கவனிக்க துவங்கியவர் நான் அங்கு நிற்கிறேனா போய்விட்டேனா என்றுகூட தெரிந்துக்கொள்ள விரும்பவில்லை.

இனியும் காத்திருந்து பயனில்லை என்று நினைத்த நான் வேறு வழியில்லாமல் அறைக் கதவைத் திறந்துக்கொண்டு வெளியேறினேன்.

அறைக்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த சிப்பந்தியிடம் BDO வுடைய அலுவலகம் எங்கிருக்கிறதென்று விசாரித்தேன்.

‘நீங்க இப்ப போனா அவர பாக்க முடியாது சார். ஒன்னு சாயந்திரம் ஆறு மணிக்கு மேல போய் பாருங்க. இல்லன்னா காலைல ஒன்பது மணிக்கு முன்னால வந்துருங்க பார்த்துரலாம். நான் வேணும்னா முன்கூட்டியே நீங்க் வருவீங்கன்னு சொல்லி வைக்கட்டுமா சார்.’ என்றவாறு என்னை அவர் பார்த்த பார்வையிலேயே இந்த தனிச்சேவைக்கு என்னிடம் ஏதோ எதிர்பார்ப்பதுபோல் தெரிந்தது.

பார்த்தீர்களா?

அரசு நலிந்தோர் வாழ்வில் ஒளி பிறக்கட்டுமே என்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்கிறது. அத்திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட சமூகத்தினர் பயன்பட வங்கிகள் தங்களுக்கு ஏற்படும் நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் சலுகைக் கடனுதவி அளிக்க முன்வருகின்றன.

ஆனால் இப்பணியில் அரசுக்கும் வங்கிகளுக்கும் துணையாய் நின்று கடனுதவி பெறுவதற்கு ஏற்றவர்களைத் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்யும் பணியை மட்டும் ஆற்ற வேண்டிய பொறுப்பிலிருக்கும் அரசு அதிகாரிகள் நடந்துக்கொள்ளும் விதம் எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.

அரசு ஊழியர்கள் ஒட்டு மொத்தமாய் எல்லோருமே இப்படித்தான் என்று நான் சொல்ல வரவில்லை.

ஆனால் நான் சந்தித்த பெரும்பாலான அதிகாரிகள் இப்படிப்பட்டவர்கள்தான் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்..

சற்று நேரம் என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டு என்னை ஆட்சியரை அழைக்க பரிந்துரை செய்த பாதிரியாரை சென்று பார்க்கலாம் என்று புறப்பட்டேன்.

தொடரும்..

7 comments:

டி ராஜ்/ DRaj said...

பல நேரங்களில இப்படித்தான் சார், சாமிய விட பூசாரிகள் ரொம்ப பந்தா பண்ணுவாங்க. And worse at times we wont be able to put people in their place. :(

sivagnanamji(#16342789) said...

dear TPR
i hail from thanjavur district but was serving in other district.once i was in need of a community certificate for my daughter
i had been to the concerned taluk office in my native dist.i was just astonished to meet the treatment i received.whatever we ask that dy thaildhar his only answer was 'come next day or come next week'this delay tactice is not due to workload......just a way of pressurising us to hand over "speed money"

tbr.joseph said...

வாங்க ராஜ்,

சாமிய விட பூசாரிகள் ரொம்ப பந்தா பண்ணுவாங்க. //

இந்த அதிகாரிங்க அத விட மோசம்.

tbr.joseph said...

we wont be able to put people in their place.//

It is true Raj. Because in that case we would not be able to achieve our aim.

I could have simply asked that PA to mind his own business, but he would have corrupted the mind of the Collector.

tbr.joseph said...

ஐயா சிவஞானம்ஜி,

நீங்களாவது உங்க சொந்த விஷயமா போனீங்க.

ஆனா நான்? ஒரு பொது நல காரியத்துக்காக அதுவும் விழாவுக்கு தலைமை தாங்க ஆட்சியரை அழைக்க சென்றிருந்தேன். எனக்கு கிடைத்த மரியாதையை பார்த்தீர்கள் அல்லவா? அப்புறம் வேறென்ன சொல்ல?

இன்னமும் அதே நிலைமைதான் என்பதுதான் அதைவிட வேதனை!

G.Ragavan said...

அலுவலகத்தில் வந்தவரிடம் பேசுவது என்பதும் ஒரு கலை. நேற்று ஒரு பெரிய மேனேஜரிடம் பேசும் பொழுது...எடுத்தேன் கவிழ்த்தேன்...கொடுக்காய்க் கொட்டினேன் என்று பேசினார். நான் விஷயத்தை மட்டும் கேட்டுக் கொண்டு வந்து விட்டேன். அவர் சொல்ல வந்ததை நிச்சயமாக நல்லவிதமாகவும் சொல்லியிருக்கலாம். ஒப்புதல் இல்லை என்பதை எரிச்சலோடும் நக்கலோடும்தான் சொல்ல வேண்டும் என்பது மிகக் கெட்ட பழக்கம்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

எடுத்தேன் கவிழ்த்தேன்...கொடுக்காய்க் கொட்டினேன் //

அடடா.. எங்க வீட்டம்மா பேசறா மாதிரியே எதுகை மோனையோட பேசறீங்க.. தூத்துக்குடி ஸ்டைலா?

நான் விஷயத்தை மட்டும் கேட்டுக் கொண்டு வந்து விட்டேன். //

கரெக்ட். அதுதான் சரியான அணுகுமுறை.. அவருக்கு மேலருந்து என்ன ப்ரஷரோ..

இன்னைக்கி இதே விஷயத்த சூரியன் தொடர்ல ஒரு கதாபாத்திரம் வழியா சொல்லியிருக்கேன்.. படிச்சி பாருங்க.