01 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 89

அடுத்த இரண்டு நாட்களில் வேறு ஆட்களை வைத்து ஆண்டெனாவை வெற்றிகரமாக பொருத்தி முடித்து தொலைக்காட்சிப் பெட்டியை உபயோகிக்கத் துவக்கினோம்.

ரூபவாஹினியில் அழகான செந்தமிழில் தமிழ் செய்திகளை வாசிக்கக் கேட்டபோது ஆனந்தமாக இருந்தது. மற்றபடி பெரும்பாலான நிகழ்ச்சிகள் சிங்களத்தில் இருந்ததால் சிறிது நாட்களிலேயே அலுத்துப் போனது.

வானம் தெளிவாக இருக்கும் நாட்களில் சென்னை தொலைக்காட்சி ஒளிபரப்பு கிடைப்பதுண்டு. கலர் பெட்டியில் கறுப்பு வெள்ளை ஒளிபரப்பு!

என்னுடைய வீட்டுக்கார அம்மையார் ஆரம்பத்தில் தினமும் ஆறு மணியானதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண வந்தார்கள். நாளடைவில் ஒன்றும் விளங்காத சிங்கள நிகழ்ச்சிகள் அலுப்பை ஏற்படுத்த  அவர்களுடைய வரவு வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் என குறைந்து பிற்பாடு சுத்தமாய் நின்றுப்போனது.

நாமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாமே என்ற நப்பாசையில்தான் ஆண்டெனாவையே அடிக்க சம்மதித்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு அவர்களுடைய நடவடிக்கைகள் அதற்குப் பிறகு வெகுவாக மாறிப்போயின!

நின்னா குத்தம் உக்கார்ந்தா குத்தம் என்று சொல்வார்களே அதுபோல் எதற்கெடுத்தாலும் அவர்களுடைய தலையீட்டால் எங்கள் இருவருடைய நிம்மதியே போய்விட்டது என்று சொல்லும் அளவுக்கு ஆகிப்போனது நிலமை.

இரவு படுக்கச் செல்லுமுன் இலங்கை வானொலி ஒலிபரப்பும் இரவு நேர பாடல்களைக் கேட்காமல் என்னால் இருக்க முடியாது. என்னுடைய மூத்த மைத்துனர் கப்பலில் இருந்து கொண்டு வந்த ஸ்டீரியோ செட்டில் ஒலி அளவை எத்தனைத்தான் குறைத்தாலும் வீட்டிற்கு வெளியே அதுவும் இரவு நேரத்தில் கேட்காமல் இருக்காது.

அதற்காக, ஒரு நாள் நான் அலுவலகத்துக்கு புறப்பட்டுக்கொண்டிருக்கையில் என்னை வழிமறித்து, ‘பத்து மணிக்கு லைட்ட அணைச்சிட்டு படுத்துறணும்.. இது குடும்பம் நடத்தற வீடு கும்மாளம் போடற வீடு இல்லை’ என்று என்னுடைய வீட்டுக்காரர் சொன்னதுதான் last straw! கடுப்பாகிப் போனேன்.

அதற்கு முன்பு ‘சார், வண்டிய கேட்டுக்கு வெளியவே ஆஃப் பண்ணிட்டு வீட்டுக்குள்ள தள்ளிக்கிட்டுத்தான் வரணும், மேலே குழந்தை அதிகமா ஆட்டம் போடுது. கீழ இருக்க முடியலை, கண்டிச்சி வைங்க, பால் ரொம்ப தண்ணியாருக்கு உங்க வொய்ஃப் சும்மானாவாவது அடிக்கடி புகார் பண்றாங்க கொஞ்சம் சொல்லி வைங்க, அப்படி, இப்படியென்று தினம் ஒரு புகார் கூறியபோதெல்லாம் பொறுத்துக் கொண்ட நான் இது குடும்பம் நடத்தற வீடு என்று  என்னையும் என் மனைவியையும் சேர்த்து கூறியது சற்றே தரக்குறைவான பேச்சாக தோன்றவே.., ‘சரி சார்.. இந்த மாசக் கடைசிக்குள்ள வீட்ட காலி பண்ணிடறேன்.’ என்று கூறிவிட்டு அலுவலகம் புறப்பட்டுச் சென்றேன்.

என்னுடைய கிளை திறந்து சுமார் ஆறு மாதங்கள் ஆகியிருந்த நிலையில் அலுவலக வேலை நெட்டி முறிந்தது. தினமும் இரவு எட்டு மணிக்கு முன்பாக அலுவலகத்தை விட்டு இறங்க முடியாத சூழ்நிலையில் வீட்டைத் தேடி அலைய வேண்டிய வேலையும் சேர்ந்துக்கொண்டது..

துவக்க நாளன்று என்னுடைய பொது மேலாளர் சாங்ஷன் செய்துவிட்டு சென்ற எல்லா கடன்களுக்கான விண்ணப்பங்கள், அதைச் சார்ந்த படிவங்கள், கணக்கு வழக்குகள் எல்லாவற்றையும் வாடிக்கையாளர்களிடத்திலிருந்து பெற்று என்னுடைய வட்டார மேலாளருக்கு அனுப்ப ஏறத்தாழ எல்லாமே சாங்க்ஷன் ஆகி வந்தன.

ஆகவே அக்கடன்களை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பட்டுவாடா செய்யும் வேலை வேறு சேர்ந்துக்கொள்ள முன் பின் யோசிக்காமல் ஏண்டா வீடு காலி பண்ணிடறேன்னு சொன்னோம் என்று தோன்றியது.

அத்துடன் இனி வீடு மாறுவதென்றால் வீட்டுக்காரர் வசிக்காத வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று வேறு ஏற்கனவே தீர்மானித்திருந்ததால் பிரச்சினை மேலும் சிக்கலாகிப்போனது.

நான் ஒரு பக்கம், பாய் ஒரு பக்கம் என ஒரு வார காலத்திற்கு வீடு வேட்டை நடத்தினோம். இதற்கிடையில் என் மனைவி மீண்டும் கர்ப்பமாகி இருந்ததால் அருளானந்தர் நகரை விட்டு செல்லவும் மனமில்லாமல் அருளானந்தர் நகர் எல்லைக்குள்ளாகவே நடந்த எங்களுடைய ஒரு வார வீடு தேடும் படலம் தோல்வியில் முடிவடைந்தது..

ஆனால் எங்களுடைய அதிர்ஷ்டம் மாதக் கடைசிக்கு இனியும் ஒரு வாரம் இருந்த சூழ்நிலையில் நான் முற்றிலும் எதிர்பாராதிருந்த திசையிலிருந்து உதவி வந்தது.

நான் சென்னையிலிருந்த சமயத்தில் வாரம் ஒரு முறை மட்டுமே கோவில் வழிபாட்டிற்க்கு செல்வது வழக்கம். ஆனால் தஞ்சையில் காலை பத்து மணிக்குதான் அலுவலகம் என்பதாலும் அருளானந்தர் நகருக்கு மாற்றலாகி வந்த வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே எங்களுடைய பங்கு தேவாலயம் இருந்ததால் அநேகமாக வாரத்தில் எல்லா நாளுமே காலை வழிபாட்டுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

அப்படி தினமும் நான் செல்லும்போதெல்லாம் என்னுடைய பங்கு குருவைப் பார்த்து புன்னகையுடன் காலை வணக்கும் கூறிவிட்டு செல்வது வழக்கம். அவருக்கு என்னைப் பற்றி லேசாக அறிந்திருந்தாலும் ஒரு நாள் என்னை ஆயருக்கு அறிமுகப்படுத்திய எங்களூர் பாதிரியார் அவருக்கு என்னை நேரிடையாக இன்னார் என்று அறிமுகப்படுத்தியதிலிருந்து எங்கள் இருவருக்குமிடையே நட்பு சற்றே நெருக்கமானது.

நாளடைவில் அவராகவே முன் வந்து என்னுடைய வங்கியில் அவருடைய பங்கு கணக்கைத் துவக்கி வரவு செலவு செய்ய ஆரம்பித்தார். அவருடைய பங்கு அலுவலகம் நான் என்னுடைய அலுவலகம் செல்லும் பாதையிலேயே இருந்ததால் அவருடைய கணக்கில் வரவு வைக்கவேண்டிய காசோலைகள் இருந்தால் முந்தைய நாளே எனக்கு தொலைபேசி செய்வார். நானும் வரும் வழியில் அதைப் பெற்றுக்கொண்டு செல்வேன்.

அப்படி ஒரு நாள் அவரைச் சந்திக்கச் சென்றபோது என்னுடைய வீட்டுப் பிரச்சினையை அவரிடம் கூறினேன். அவர் நான் இப்போது தங்கியிருக்கும் வீட்டுக்காரரை நன்றாகத் தெரிந்திருந்ததால், ‘ஐயோ சார். அவர் வீட்லயா இருக்கீங்க? அவர் சரியான சிடுமூஞ்சியாச்சே?’ என்றார் சிரித்துக்கொண்டு.

எனக்கு வியப்பாகிப் போனது. ‘என்ன ஃபாதர் நீங்கதான் ஒரு விழாவுல அவர இந்திரன் சந்திரன்னு புகழ்ந்தீங்க? நீங்களே இப்படி சொல்றீங்களே?’ என்றேன்.

அவர் நான் தமாஷ் செய்கிறேன் என்று புரிந்துக்கொண்டு உரக்கச் சிரித்தார். ‘வேற என்ன பண்ண சொல்றீங்க ஜோசப்? அவர் நம்ம பேரவைத் தலைவர். அவர பத்திய உண்மைகளை அரங்கத்துல சொல்லவா முடியும்? சரி அத விடுங்க. உங்களுக்கு எவ்வளவு வாடகையில வேணும்?’ என்றார்.

நான் என்னுடைய வங்கியில் எனக்கு வீட்டுக்கான வாடகையை அவர்களே கொடுத்துவிடுவார்கள் என்று கூறி அதற்குண்டான தொகையையும் கூறினேன். உடனே அவர், ‘பரவாயில்லையே.. அப்படீன்னா நீங்க கவலைய விடுங்க.. நாளைக்கு காலைக்குள்ள அருளாநந்தர் நகர்லயே வீட்டுக்காரர் இல்லாத ஒரு வீட்ட புடிச்சிக் குடுக்கறதுக்கு நான் பொறுப்பு. கவலைப் படாம போங்க.’ என்றார்.

எனக்கு அப்போதும் நம்பிக்கையில்லை. இருந்தாலும் அவர் சொல்கிறாரே என்று, ‘சரி ஃபாதர். கிடைச்சா நல்லதுதான்.’ என்று கூறிவிட்டு என் அலுவலகம் சென்றேன்.

ஆனால் ஆச்சரியம்! அன்று மாலையே அவர் என்னை அழைத்து, ‘சார், அருளானந்தர் நகர் கோடியில ஒரு தனி வீடு இருக்கு. வீட்டுக்காரர் மெட்றாஸ்ல இருக்கார். கேர்டேக்கர் நம்ம பங்கு ஹைஸ்கூல்லதான் டீச்சரா இருக்கார். அவருக்கு உங்கள பத்தி தெரிஞ்சிருக்கு. நான் சொன்னதும் உடனே சரின்னுட்டார். நீங்க ஆறுமணிக்குள்ள வந்தா சாவிய வாங்கி வீட்ட பாக்கலாம்.’ என்றார்.

ஆறு மணி என்ன, இப்போதே வருகிறேன் என்று  என்னுடைய காசாளரிடம் (என்னுடைய உதவி மேலாளரை கிளை துவங்கிய மூன்று மாதத்திலேயே உங்களுடைய வர்த்தக அளவுக்கு உதவி மேலாளர் தேவையில்லை என்று வேறொரு கிளைக்கு மாற்றிவிட்டார் என்னுடைய வட்டார மேலாளர்.) கூறிவிட்டு புறப்பட்டுப் போய் என் மனைவியையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.

அந்த வீட்டைக் கட்டி இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தன. நான் சென்னையில் வசித்து வந்த வீடுகளைப் போலவே சகல வசதிகளும் இருந்தன. வீட்டின் மொத்த அளவு ஆயிரம் சதுர அடிகளுக்கும் சற்றே கூடுதல். தனி வீடு. சுமார் 5000 ச.அடி நிலப் பரப்பில் கட்டப்பட்டிருந்தது. வீட்டின் பின்புறம் மற்றும் மேற்கே இருந்த காலி இடத்தில் வீட்டில் முன்பு வசித்தவர்கள் இட்டுச் சென்ற காய்கறி மற்றும் பூச் செடிகள். நிலத்தின் மூலையில் கிணறு..

வீட்டில் ஒரேயொரு குறை அக்கம்பக்கத்தில் ஒரு வீட்டைத் தவிர வேறு வீடுகளே இல்லாததுதான்.

வீட்டின் முன்புறத்தில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு காலி மைதானம்.. மாலையில் சிறுவர்கள் வந்து விளையாடும் நேரம் தவிர அது காலியாக கிடந்தது. நாங்கள் சென்ற நேரத்தில் மாலைச் சூரியன் மேற்கே மறைவது மிகவும் அழகாய் தெரிந்தது..

வீட்டிற்கு மேற்கே இருந்த வீடு என்னுடைய வீட்டு உரிமையாளருடைய சகோதரருடையது. அதுவும் சுமார் 10000 ச.அடி நிலப்பரப்பில் கட்டப்பட்டிருந்தது. வீடு வெளியிலிருந்து பார்ப்பதற்கு சுமார்தான் என்றாலும் வசதியாக இருந்தது. தகப்பனில்லாத வீட்டில் மூத்த மகன் கராத்தே வகுப்பு நடத்த வீட்டின் முகப்பில் இருந்த வெற்று நிலத்தை  பயன்படுத்திக்கொண்டிருந்தார். அவரும் அவருடைய தாயும் ஒரு சகோதரியும் மட்டும் இருந்தனர்.

நானும் என் மனைவியும் வீட்டைப் பார்த்து முடித்த திருப்தியுடன் அடுத்திருந்த ஒரே வீடான வீட்டிற்கு சென்று அவர்களை சந்தித்தோம். ஆனால் அவருக்கும் என்னுடைய வீட்டுக்காரருக்கும் ஏதோ மனத்தாங்கல் போலிருக்கிறது. அதனால்தான் வீட்டுப் பராமரிப்பை அவரிடம் அளிக்காமல் தன்னுடைய மனைவி வீட்டாரிடம் ஒப்படைத்திருக்கிறார் என்னுடைய வீட்டுக்காரர்.

இருந்தாலும் எங்களை வரவேற்று உபசரித்து, ‘வீடு தனியாக இருக்கிறதே என்று கவலைப்படாதீர்கள். இங்கே திருடர் பயமெல்லாம் இல்லை. காத்தோட்டமா நல்லா வசதியாத்தான் கட்டி வச்சிருக்கார் என் கொழுந்தன். என்ன, ஆள்தான் கொஞ்சம் முசுடு. ஆனாலும் அவர் எப்பவாச்சும்தான் வருவார். அவரோட மச்சினன் பொறுப்புலதான் வீட்டை விட்டிருக்கார். அவர் ரொம்ப நல்ல மனுஷன்.. நீங்க தைரியமா வாங்க. நாங்க பக்கத்துலதான இருக்கோம்.. என்றார் வீட்டுத்தலைவி..

அவர்களுடைய பதிலில் திருப்தியடைந்த நாங்கள் இருவரும் அம்மாத இறுதியில் புதிய வீட்டில் குடிபுகுந்தோம்..

அவ்வீட்டில் இருந்த ஒன்றரையாண்டு காலத்தில் பல நல்லதும் நடந்தது சில கெட்டதும் நடந்தது..

தொடரும்

6 comments:

ramachandranusha said...

personal
சார், இதுலதான் சொன்னேன். ஆர்சீவ்ஸ் எதையும் காணோமே? பழையதை எப்படிப் படிப்பது? தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
உஷா

tbr.joseph said...

உஷா நீங்க குறிப்பிட்ட இடுகைக்கு போகாம http://ennulagam.blogspot.com க்கு போய் பாருங்க. பழையவைன்னு இதுக்கு முன்னாலருக்கற எல்லா இடுகைகளுக்கும் இருக்கும்.

டி ராஜ்/ DRaj said...

//‘பத்து மணிக்கு லைட்ட அணைச்சிட்டு படுத்துறணும்.. இது குடும்பம் நடத்தற வீடு கும்மாளம் போடற வீடு இல்லை//
How irritating...I think anyone in your position would have vacated the house.

tbr.joseph said...

வாங்க ராஜ்,

கரெக்டா சொன்னீங்க. நான் காலி பண்ணதுக்கப்புறம் அந்த வீடு ரொம்ப நாளா காலியாவே இருந்தது..

அதுக்கப்புறம் அவர் என்னை தேவாலயத்துல பார்த்தபோதெல்லாம் கண்டுக்கவே மாட்டார்..

சக மனிதர்கள நேசிக்க முடியாமதவர் கடவுளை மட்டும் எப்படி நேசிச்சாரோ.. நான் சந்தித்த மனிதர்களுள் விசித்திரமான மனிதர் அவர்..

G.Ragavan said...

வீட்டுக்காரரின் பேச்சில் பிழை இருக்கிறது. குடித்தனம் இருக்குற வீடுன்னு எல்லாம் பேசுறது பொருப்புள்ள பெரிய மனுசன் பேசுற பேச்சு இல்லை. அதுவும் ஒரு அதிகாரியைப் பாத்து...மனைவி மக்களோட இருக்குறவரப் பாத்து....யாராயிருந்தா என்ன...ஏன் சொல்லனும்?

tbr.joseph said...

ஆமாம் ராகவன்,

குடியிருப்பவர் அதிகாரியோ சாமான்யனோ அவனும் மனிதந்தானே. மிராசுதார் பரம்பரை என்றால் எல்லோரையும் அடிமைகள்போல பார்க்கவேண்டுமா என்ன? நான் வேறு சில பண்ணையார்களையும் மிகப் பெரிய மிராசுதார்களையும் தஞ்சையில் இருந்த சமயத்தில் சந்தித்திருக்கிறேன். ஆனால் இவரைப் போன்ற (ஆணவம் என்று சொல்ல முடியாது.. சில சமயங்களில் நல்லவர்போல் பேசுவார்) ஒரு totally unpredictable personality சந்திக்கவேயில்லை..