31 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 109

எனக்கு அவருடைய வேண்டுகோள் பிடிக்கவில்லை என்பதை என்னுடைய முகத்தைப் பார்த்தே அவர் தெரிந்துக்கொண்டார் என்று நினைக்கிறேன். ‘என்ன சார் நீங்க, எப்பவும் முரண்டு பிடிக்கற இவரே ஒத்துக்கிட்டார். நீங்க ஏதும் சொல்லி மறுக்கா இவரும் பெறண்டுரப் போறார் சார்.’ என்றார்.

நான் அவருக்கு பதிலொன்றும் கூறாமல் என் நண்பரைப் பார்த்தேன். அவரிடம், ‘எப்படி சார் நீங்களும் இந்த மாதிரியான முட்டாள்தனமான ஐடியாவுக்கு ஒத்துக்கறீங்க? வெறும் சர்டிஃபிக்கேட் கொடுத்துட்டா முடிஞ்சி போச்சா? இவர் சொல்றதப் பார்த்தா குறைஞ்ச பட்சம் ரெண்டு லட்சமாவது நஷ்ட ஈடு கேட்பார் போலத் தெரியுது. நீங்க குடுக்கப்போற சர்டிஃபிகேட்ட நம்பி பாலிசிய புதுப்பிச்சிருவாங்கன்னு நீங்க நினைக்கறீங்களா?’ என்றேன் ஆங்கிலத்தில்.

நாங்கள் இருவரும் ஆங்கிலத்தில் உரையாடிக்கொள்வதை விரும்பாத வாடிக்கையாளர், ‘சார் நீங்க பாட்டுக்கு இங்க்லீஷ்ல பேசிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? என் பிரச்சினைக்கு ஒரு முடிவு சொல்லுங்க.’ என்றார் சற்றே கோபத்துடன்.

என்னுடைய நண்பர் நான் முற்றிலும் எதிர்பார்க்காத விதமாக, ‘இங்க பாருங்க ----------------. நான் நீங்க கேக்கறா மாதிரி சர்டிஃபிகேட் குடுக்கறதுக்கு தயாரா இருக்கேன். ஆனா இனிமே மேனேசரா இருக்கப்போறது இவருதான். இவருக்கு இந்த விஷயம் பிடிக்காம இருக்கறபோது என்னை என்ன செய்ய சொல்றீக? நீங்களாச்சி இவராச்சி. ஏதாச்சும் பேசி முடிவுக்கு வாங்க.’ என்றவாறு அறையைவிட்டு வெளியேற முயற்சி செய்தார்.

என்ன நெஞ்சழுத்தம்யா உனக்கு என்று நினைத்தேன். செய்த தவற்றை மறைக்க வங்கி நியதிகளுக்கு முற்றிலும் ஒத்துவராத ஒரு காரியத்தை தான் செய்வதற்கு தயாராக இருப்பது போலவும் நான் அதற்கு குறுக்கே நிற்பது போலவும் ஒரு மாய தோற்றத்தை உருவாக்க முயல்பவரை என்ன செய்தாலும் தகும் என்ற எண்ணத்துடன் வாடிக்கையாளரைப் பார்த்தேன். ‘அய்யா, நீங்க ஒரு புகார் எழுதி கொடுங்க. என்னால ஆனத செய்யறேன். ஆனா இப்ப நீங்க கேக்கறத என்னால மட்டுமில்ல இவராலகூட செய்யமுடியாது.’

அறையை விட்டு வெளியேறுவதைப் போல் பாவனை செய்த என்னுடைய நண்பர் நான் கூறியதைக் கேட்டதும் திரும்பி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். தான் சாமர்த்தியமாக வளைக்கப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்திருப்பார், இனியாவது அறிவுபூர்வமாக சிந்திப்பார் என்று நினைத்தேன்.

ஆனால் அவர் நேரெதிராக, ‘உங்க மேனேசர் சொன்னா மாதிரியே புகார் எளுதிக் கொடுத்துட்டு போம்யா.. எனக்கென்ன? இவரு பாட்டுக்கு உம்ம புகார வாங்கி மேல அனுப்பிட்டு அவர் சோலிய பார்ப்பாரு.. அவஸ்த படப்போறது நீர்தானய்யா? என்ன சொல்றீரு? புகார எளுதிக் கொடுத்துட்டு போறீரா?’ என்றார் கேலியுடன்.

வாடிக்கையாளருடைய முகம் போன போக்கிலிருந்தே அவருடைய கோபம் முழுவதும் என்மேல் திரும்பியிருக்கிறது என்பதை நான் புரிந்துக்கொண்டேன். ஆனாலும் என்னுடைய நண்பருடைய விபரீத விளையாட்டில் அவரே சிக்கிக்கொள்ளப் போகிறார் என்பதை நான் உணர்ந்திருந்ததால் அவரிடம் ஆங்கிலத்தில், ‘சார், நீங்க தேவையில்லாம இவருக்கும் எனக்கும் இடையில பிரச்சினைய உண்டுபண்ண நினைக்கறீங்கன்னு நினைக்கறேன். அதனால இப்பவே இவர் முன்னாலயே நம்ம ஜோனல் மேனேஜருக்கு ஃபோன் பண்ணி இந்த விஷயத்த சொல்லி அவர்கிட்டவே இதுக்கு என்ன சொலுஷன் என்னன்னு கேட்ருவோம். என்ன சொல்றீங்க?’ என்றேன்.

என்னுடைய யோசனையைக் கேட்டதுமே அவருடைய முகம் வெளிறிப்போனது. அவசர அவசரமாக, ‘ப்ளீஸ் ஜோசப்.. அதுமட்டும் வேணாம். நான் சும்மாத்தான் இவருடைய யோசனைக்கு ஒத்துக்கறா மாதிரி நடிச்சேன். குடுக்கறேன்னு சொன்னேனே தவிர நான் இருக்கற ஒரு வாரம் வரைக்கும் இன்னைக்கி நாளைக்கின்னு இழுத்தடிச்சிட்டு போயிருவேன். அப்புறம் எனக்கொன்னும் தெரியாதுன்னு நீங்களும் தப்பிச்சிக்கலாம்.’ என்றார் ஆங்கிலத்தில்.

என்னுடைய நண்பர் மேல் நான் அதுவரை வைத்திருந்த நம்பிக்கை, மதிப்பு எல்லாம் அவருடைய இந்த பேச்சைக் கேட்டதுமே போய்விட்டது. இப்படி பேசுகிற மனிதர் கிளையில் இன்னும் என்னென்ன குளறுபடிகளை செய்திருப்பாரோ என்று அஞ்சினேன்.

எங்களுடைய ஆங்கில சம்பாஷனை வாடிக்கையாளருக்கு புரிந்ததோ என்னவோ அவருடைய கோபம் முழுவதும் என்மேல்தான் திரும்பியது. ‘சார் நீங்க மேனேசரா வரீங்கன்னு உங்க மாமனார் சொன்னதும். சரி நமக்குத் தெரிஞ்ச ஒருத்தரு மேனேசரா வந்தா நல்லதுன்னு நானும் சந்தோஷப்பட்டு எங்க ஆளுங்கக்கிட்ட எல்லாம் சொல்லி சந்தோஷப்பட்டோம். ஆனா நா நெனச்சதுக்கு நேர் மாறா ஒரு தொட நடுங்கியா இருப்பீங்க போலருக்கு. நீங்க இந்த ஊர்ல ஒப்பேறமாட்டீங்க சார். நாங்க ஒளைச்சி சம்பாதிச்சி சாப்பிடற ஆளுங்க. நாய் மாதிரி ஒளைப்போம் ராசா மாதிரி உடுத்துவோம். எங்கள பார்த்து தப்பா எடப் போட்றாதீங்க, சொல்லிட்டேன். நா நாளைக்கு காலைல வருவேன். நா சொன்னா மாதிரி ஒரு சர்ட்டிஃபிகேட் கொடுக்கலைன்னா எங்க சங்க ஆளுங்களோட வந்து உங்க பேங்க் முன்னால போராட்டம் பண்ணுவோம். அப்புறம் வருத்தப்பட்டுக்காதீங்க, சொல்லிட்டன்.’ என்றவர் என்னுடைய நண்பரைப் பார்த்து, ‘சார், இவர்கிட்ட எனக்கு உங்க பேங்க்ல எவ்வளவு கணக்கு வழக்கு இருக்கு, நா எத்தன பேர சிபாரிசு பண்ணி கொண்டுவந்திருக்கேன்னு எடுத்து சொல்லி விஷயத்த நாளைக்குள்ள முடிச்சிருங்க. இல்லன்னா நீங்களும் ஊர் போய் சேர்ந்துக்க மாட்டீங்க.’ என்றவாறு வெளியேறி ஹாலில் நின்றுக்கொண்டிருந்த மற்ற சில வாடிக்கையாளர்களிடம், ‘வேய் புதுசா வந்திருக்கற மானேசரு சரியான வெளக்கெண்ணெய்.. உங்க கணக்கையெல்லாம் வேற எங்கயாச்சும் கொண்டு போயிருங்க. சொல்லிட்டன்.’ என்ற இரைந்து கூறிவிட்டு வெளியேறினார்.

‘சே.. எந்த நேரத்துலடா இந்த ஊர்ல கால் எடுத்து வச்சோம்.’ என்று நொந்துபோய் என்னுடைய நண்பரைப் பார்த்தேன். அவரோ ஒரு விஷமப் புன்னகையுடன். ‘என்ன ஜோசப். இந்த ஊரோட லட்சணம் இப்பவாவது புரிஞ்சிதா? நானும் நம்ம --------------ரும் (முந்தைய மேலாளர்) இந்த ஊர்ல குப்பையக் கொட்றதுக்கு என்ன பாடுபட்டிருப்போம்னு இப்பவாவது புரிஞ்சிக்குங்க.’ என்று எகத்தாளமாக கூற நான் இனியும் வாக்குவாதத்தில் இறங்க விரும்பாமல் என் எதிரில் இருந்த கடன் பத்திரங்கள் அடங்கிய கோப்பை சரிபார்க்க ரம்பித்தேன்.

ஆக, தேவையில்லாத ஒரு பிரச்சினையுடன் என்னுடைய தூத்துக்குடி வாசம் ஆரம்பித்தது.

அன்று மாலைவரை கணக்கு வழக்குகளை சரி பார்ப்பதிலும் என்னுடைய நண்பர் அளித்திருந்த கடன் கணக்குகளுக்கென ஈடாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், சொத்து பத்திரங்களை ஒவ்வொன்றாக சரிபார்ப்பதிலும் நேரம் போனதே தெரியாமல் போனது.

நான் அன்று நாள் முழுவதும் சரிபார்த்த கணக்குகளில் ஒரு சிலவற்றைத் தவிர எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு குறை இருக்கவே என்னுடைய பொறுமையை இழக்க ஆரம்பித்தேன். நான் லாக்கர் அறையிலிருந்து சரிபார்ப்பதற்காக எடுத்த அடகு வைத்த பொருட்களை திரும்பி வைத்தால்தான் என்னுடைய காசாளர் வீடு திரும்ப முடியும் என்பதால் அவர் மாலை ஏழு மணியானதும், ‘சார் நான் மூணாம் மைல்ல குடியிருக்கேன். இப்பப் போனாத்தான் சரியாயிருக்கும்.’ என்று வந்து நின்றார்.

இதற்கிடையில், நான் ஒவ்வொரு கணக்கை சரிபார்த்து முடித்ததும் அவற்றில் நான் கண்ட குளறுபடிகளை ஒரு நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொள்வதைப் பார்த்த என்னுடைய நண்பர் பொறுமையிழந்துபோய், ‘என்ன ஜோசஃப், நீங்க நம்ம இன்ஸ்பெக்ஷன் ஆளுங்கள விட மோசம் போலருக்கே. இப்படி ஒவ்வொன்னையும் பார்த்துக்கிட்டிருந்தீங்கன்னா நீங்க சார்ஜ் எடுக்கறதுக்கு ஒரு மாசம் ஆயிரும். நீங்க ஒன்னு பண்ணுங்க. என்ன நாளைக்கே ரிலீவ் பண்ணிருங்க. நா வேணும்னா நம்ம ஜோனல் மேனேஜர்கிட்ட சொல்லிக்கறேன்.’ என்றார் எரிச்சலுடன்.

அவர் வேண்டுமென்றே எங்களுடைய அறைக்கு வெளியே இருந்த தலைமைக் குமாஸ்தாவுக்கும். காசாளருக்கும் கேட்கும்படி குரலையுயர்த்தி பேசுவதை கவனித்த நான் பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பாமல் எழுந்துக்கொண்டேன். ‘சார், நான் சார்ஜ் எடுத்து முடிக்கற வரைக்கும் நீங்க என்னோட இருக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை. முக்கியமான சில டெப்பாசிட்டர்சையும், லோன் பார்ட்டீசையும் மட்டும் நாளைக்கும், அதுக்கடுத்த நாளைக்கும் அறிமுகப்படுத்திட்டு நீங்க போயிருங்க. இந்த செக்யூரிட்டிசை செக் பண்றதையெல்லாம் நானே பண்ணிக்கறேன். உங்க முன்னால நான் செக் பண்ணி எனக்கு தப்புன்னு தோன்றத குறிச்சி வச்சிக்கறத நீங்க வேற விதமா எடுத்துக்கறீங்க. எதுக்கு இந்த வம்பு? அதனால நீங்க போனதுக்கப்புறம் செக் பண்ணிக்கறேன்.’ என்றேன்.

அவர் சந்தேகத்துடன் என்னை பார்த்தார். ‘என்ன ஜோசப், அப்போ என்னை ரிலீவ் பண்ணும்போது உங்க ரிலீவிங் மேனேஜர் சர்ட்டிஃபிகேட்டை குடுக்கற ஐடியா இல்லையா?’

அவருடைய உள் நோக்கத்தைப் புரிந்துக்கொண்ட நான், ‘சேச்சே. அதெல்லாம் குடுத்துருவேன். ‘என்ன, சப்ஜெக்ட் டு டீடெய்ல்ட் வெரிஃபிகேஷன்னு போட்டு குடுப்பேன்.’ என்றேன்.

அவருக்கு அதில் திருப்தியில்லையென்றாலும் வேறு வழி தெரியாமல் ஒத்துக்கொண்டார். நான் அவரிடமும் அலுவலகத்திலிருந்த பணியாளர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு கீழே நிறுத்திவைத்திருந்த என்னுடைய இரு சக்கர வாகனத்தை நோக்கி நடந்தேன்.

நான் கடைசிப் படியில் இறங்கும்போது கட்டிடத்தின் கீழ் பகுதியில் குடியிருந்தவர் என்னுடைய வாகனத்திற்கருகில் ஒரு சாய்வு நாற்காலியில் இருக்கையின் கரங்களின் மீது காலைநீட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு புன்னகையுடன், ‘குட் ஈவ்னிங் சார்.’ என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

அவர் உடனே எழுந்து புன்னகையுடன் என்னுடைய கரங்களைப் பற்றிக்கொண்டார். ‘கேள்விப்பட்டேன் சார். உங்க ஃப்ரெண்ட் சொல்லியிருந்தார். முதல் நாளே மேலே வந்து பாக்கவேணாம்னு நினைச்சிக்கிட்டு வரலை. நானும் ஒரு பேங்க் மானேஜரா இருந்து ரிசைன் பண்ணவந்தான்.’ என்றார்.

நான் வியப்புடன், ‘அப்படியா சார்? எந்த பேங்க்ல இருந்தீங்க?’ என்றேன்.

அவர் ‘பேங்க் ஆஃப் மதுராவில மண்டபம் பிராஞ்சுல இருந்தேன். நாந்தான் மரைக்கயார் ஃபேமிலில கடைசி பேரன். இந்த கீழ் போர்ஷன் முழுசும் என்னோடது. மேலருக்கறது என் அக்காவுக்கு பாத்தியமானது. அவங்களும் அத்தானும் திருவனந்தபுரத்துல இருக்காங்க. நீங்க இங்க வந்ததும் ஒருநா சாவகாசமா எல்லாத்தையும் சொல்றேன்.’ என்றார்.

நானும் சரி என்று கூறிவிட்டு வாகனத்தை உதைத்து ஸ்டார்ட் செய்தேன். அவர் உடனே ரகசியக் குரலில், ‘சார் நீங்க சார்ஜ் எடுக்கும்போது எல்லாத்தையும் ஒழுங்கா பார்த்துக்குங்க. உங்க ஃப்ரெண்ட பத்தி நான் கேள்விப்பட்ட வரைக்கும் அவர் ஒரு டிசிப்ளின் இல்லாத ஆளுன்னு நினைக்கிறேன். தப்பானவர் இல்லை. ஆனா எல்லாரையும் சட்டுன்னு நம்பிருவார்னு நினைக்கிறேன்.’ என்றார்.

நான், ‘சரி சார். பார்த்துக்கறேன். உங்க இன்ஃபர்மேஷனுக்கு நன்றி’ என்று சுருக்கமாகக் கூறிவிட்டு புறப்பட்டேன்.

அடுத்த பத்து நிமிடத்தில் என்னுடைய மாமனார் வீட்டை அடைந்து வாகனத்தை ஏற்றி நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்ததும் ஹாலில் நடுநாயகமாக அமர்ந்திருந்தவரைப் பார்த்து திடுக்கிட்டுப் போனேன்.

அவர் யாரென்று நினைக்கிறீர்கள்? அன்று காலையில் என்னுடைய கிளைக்கு வந்து என்னையே பகிரங்கமாக குறை கூறிவிட்டு சென்ற வாடிக்கையாளர்!

தொடரும்..

13 comments:

துளசி கோபால் said...

விவரமான ஆளுதான். மாமனாருக்கு முன்னாலே
நீங்க எப்படியும் சரின்னு சொல்லிருவிங்கன்னு நினைச்சுட்டார்போல.

G.Ragavan said...

ஹா ஹா ஹா பாத்தீங்களா அந்தாள....இங்க கொத்தீட்டு அங்க தத்தீட்டு உக்காந்திருக்கிறத....வந்தவருக்கு ஒரு காப்பி டீயாவது கொடுக்கக் கூடாதா?

tbr.joseph said...

வாங்க துளசி,

விவரமான ஆளுதான். //

இருக்காதா பின்னே..

சரின்னு சொல்லிருவிங்கன்னு நினைச்சுட்டார்போல//

இருக்கும், இருக்கும்.

tbr.joseph said...

வாங்க துளசி,

வந்தவருக்கு ஒரு காப்பி டீயாவது கொடுக்கக் கூடாதா?//

கண்டிப்பா!

sivagnanamji(#16342789) said...

vadikkaiyalar mun neengal angilathil een pesavendum?
tamil il pesiyirundhal avarukkum
pirachinayin theeviram purinthirukkum.........yarayo kappatra nam pirachinayil vizha venduma?

tbr.joseph said...

வாங்க ஜி!

avarukkum
pirachinayin theeviram purinthirukkum.........//

பிரச்சினையின் தீவிரம் அவருக்கு தெரியாதென்றா நினைக்கிறீர்கள். அவர் பயங்கரமான ஆளுங்க. இல்லன்னா பத்து போட்டுகள வச்சி மேனேஜ் பண்ண முடியுமா?

அவர் வேணும்னே நூல் விட்டு பார்த்தார். நாம மாட்ட தயாராயில்லேன்னு தெரிஞ்சதும் கோபப்பட்டு கலாட்டா பண்ணிட்டு போய்ட்டார். இந்த மாதிரி ஆளுங்கள என்னுடைய அலுவலக வாழ்க்கையில் நிறைய பார்த்திருக்கேன்.. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அனுபவிச்ச டென்ஷ்னை நினைச்சாத்தான் கஷ்டமாயிருக்கும்.

இராமநாதன் said...

ஜோசப் சார்,
தப்பா நினச்சுக்காதீங்க. உங்க நண்பர் இந்நேரம் ஏஜிஎம் ஆவோ ஜிஎம் ஆவோ ஆகியிருப்பாரே.. என்ன செய்யறது, பெருமையெல்லாம் நமக்கு, பழியெல்லாம் அடுத்தவர்களுக்குன்னு அலட்டிக்காம போகறவங்களோட காலம் இது.

மெட்ராஸ்ல ஊழல், பித்தலாட்டம்; தஞ்சாவூர்ல சாதிச்சண்டை இன்னபிற; தூத்துக்குடில internal politics-ஆ..

எங்களுக்கு படிக்கறதுக்கு விறுவிறுப்பா இருந்தாலும், நீங்க இதெல்லாம் நேர்ல பாத்த போது எப்படி நொந்துருப்பீங்கன்னும் நினைக்கத் தோணுது.

arunagiri said...

இது போன்ற ஆட்கள் அடிதடிக்கும் அஞ்ச மாட்டார்கள். நீங்கள், உங்கள் மாமனார் ஊரில் இருந்தது நல்லதுதான். எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம்: சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் நடந்தது . Sales person ஒருவர் வேலை செய்யாமல் பேட்டா எல்லாம் அநியாயப் பொய் voucher போட்டு வாங்கிக்கொண்டு பெண்கள் கல்லூரிப்பக்கம் சுற்றுவதாக compalint வர, பல warnings தரப்பட்டு, ஒரு நாள் dismiss செய்யப்பட்டார். ஆனால், prorated salary அல்லாது முழு salary-ம் தர வேண்டும் என office-க்கு வந்து cashier-இடம் தகறாறு செய்யத் தொடங்க, "அவர் மேலாளரிடம் இருந்து அப்படி உத்தரவு வரவில்லை என்றும் அதனால் முழு salary தர இயலாது" என்றும் கூறினார். உடனே அந்த sales person யாரும் எதிர்பாராத ஒரு காரியம் செய்தார். சட்டையைத் தூக்கி, இடுப்பில் செருகி வைத்திருந்த பெரிய size மாமிசம் வெட்டும் கத்தியை எடுத்து cashier மேஜை மேல் ஓங்கிக் குத்தினார், பாபா ரஜினி பாணியில். குத்தி விட்டு, அதே மேசை மேல் உட்கார்ந்து கொண்டு " நான் ஆடு வெட்டுற ....ம்., தெரியுமுல்ல? இதுல ஒரே குத்து, வீடு போயி சேர மாட்ட இன்னிக்கு" என்று சொல்லி விட்டு, close-upஇல் cashierஐ முறைக்க, cashier மிரண்டு போய், ஒரு மாத சம்பளம் கணக்கிட்டு ஐந்தே நிமிடத்தில் பைசல் செய்தார். பிறகு இதைக் கேள்விப்பட்டு சிலர் அவரிடம் வந்து "ஒங்கள மாதிரி ஆளுங்க பயந்தவங்கனு அவனுக்குத் தெரியுங்க, அதான், வில்ல விட்டுட்டு அம்ப அடிக்கிறா மாதிரி, ஒங்கள்ட்ட வந்து மோதி இருக்கான், சரி, இப்ப approval இல்லாம settle செய்துட்டீங்களே, மேலிடத்தில் கேட்டால் என்ன செய்வீங்க?". அவர் சொன்னார் " பரம்பர சொத்து, கட்சி background, அடிதடி இப்படி எதுவும் இல்லாம படிப்பு, வேலை இத மட்டுமே ந்ம்பிட்டு இருக்குறது எங்க குடும்பம், என்னய வேலைய விட்டு அனுப்பினாலும் சரி, நான் குத்துப்பட்டு செத்தாலும் சரி, நடுத்தெருவுல நிக்கப்போறது என்னோட family-தான். மேலிடத்துல கெஞ்சிப் பார்ப்பேன்; ஒத்துக்கலையா, என்னோட கைக்காச போட்டு கட்டுவேன், வேற என்ன செய்ய? " என்றார். உண்மைதான் என்று தோன்றியது.

tbr.joseph said...

வாங்க இராமநாதன்,

தப்பா நினச்சுக்காதீங்க. உங்க நண்பர் இந்நேரம் ஏஜிஎம் ஆவோ ஜிஎம் ஆவோ ஆகியிருப்பாரே.. //

அதுதான் இல்லை. நான் என்னுடைய உத்தியோக பாதையில் நான் படித்த பாடம் இது. நம்முடைய நேர்மையாக்கும், அயரா உழைப்புக்கும், பணிவுக்கும் உடனே அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் நாளடைவில் நிச்சயம் கிடைக்கும். அடாவடித்தனம் செய்பவர்கள் சடுதியில் புகழடைவார்கள். ஆனால் அவர்களே எதிர்ப்பாராதவிதமாக சிக்கலில் சிக்கிக்கொண்டு அவமானப்படுவார்கள். அவர் என்னவானார் என்பது சொல்வது நன்றாயிருக்காது. ஆனால் நீங்கள் நினைப்பதுபோல் நடக்கவில்லை.

tbr.joseph said...

எங்களுக்கு படிக்கறதுக்கு விறுவிறுப்பா இருந்தாலும், நீங்க இதெல்லாம் நேர்ல பாத்த போது எப்படி நொந்துருப்பீங்கன்னும் நினைக்கத் தோணுது. //

உண்மைதான் இராமநாதன். நொடி நேர உறக்கமுமில்லாமல் கழிந்த இரவுகள் எத்தனையோ, எத்தனையோ. அவமானம், ஏமாற்றம், உடல்நலக்குறைவு இவற்றையெல்லாம் கடந்துதான் இப்போதைய நிலையை அடைந்திருக்கிறேன் என்றால் அது மிகையாகாது. ஆனால் அத்தகைய சூழ்நிலையிலெல்லாம் எனக்கு உறுதுனையாய் இருந்தது என்னுடைய அசைக்க முடியாத இறை நம்பிக்கையும், இறைபக்தியும்தான். இறைவன் இல்லை இன்று வாதிடுபவர்களுக்கெல்லாம் என்னுடைய வாழ்க்கையொரு பாடமாயிருக்கும் என்று நம்புகிறேன்.

tbr.joseph said...

வாங்க அருணகிரி,

நீங்க சொல்றது ஓரளவுக்கு வாஸ்தவம்தான். ஆனால் அதுமட்டுமே நமக்கு பாதுகாவலாக இருக்காது. எப்போது பாயவேண்டும் எப்போது பதுங்கவேண்டும் என்பதை உணர்ந்திருப்பதுதான் மிகவும் முக்கியம். யாரிடம் எப்படிப் பேசவேண்டும், எப்படிப் பழக வேண்டும்..என்பதை அறிந்திருப்பதும் அவசியம். நம்முடைய நிலை அறியாமல் நடந்துக்கொள்ளும்போதுதான்
காரியம் விபரீதமாகிப்போகும். என் அனுபவத்தில் நான் படித்த பாடம் இது. நீங்கள் விவரித்த சம்பவம் நம் யாருடைய வாழ்க்கையில் ஏற்படலாம். உங்களுடைய நண்பர் எதிர்கொண்ட விதத்தில் புத்திசாலித்தனம் தெரிகிறது. அது நிச்சயம் கோழைத்தனம் இல்லை.

Krishna said...

சார், பொதுவாக நேர்மையாக இருந்தா, முன்னேற முடியாது, வெற்றி பெற முடியதாதுன்னுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உங்கள் வாழ்க்கைத்தொடரில், அப்படி இல்லை என்னும் செய்தி, மிக மிக பயனுள்ள செய்தி, என் போன்றோருக்கு. எனவே, அந்த மேனேஜர் மாதிரி ஆட்கள் கடைசியில் என்ன ஆனார்கள் என்பதை கட்டாயம் எழுதவும்.
(ஆராய்ச்சி கட்டுரை சம்பந்தமான வேலையில் உங்கள் பதிவை இப்போதுதான் படிக்க முடிந்தது)

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

பொதுவாக நேர்மையாக இருந்தா, முன்னேற முடியாது, வெற்றி பெற முடியதாதுன்னுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்//

அதெல்லாம் நேர்மையற்றவர்கள் விரிக்கும் மாயவலை. நேர்மையற்றவர்கள் ஆரம்பத்தில் வேகமாக முன்னேறுவதுபோன்ற தோற்றம் இருக்கும். உண்மைதான். ஆனால் இறுதியில் நேர்மையும், அயரா உழைப்பும்,பணிவும் மட்டுமே வெற்றிபெறும். இடையில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு ஒருபோதும் மனந்தளர்ந்துவிடக்கூடாது.