30 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 108

நான் இதேதடா புது வம்பு என்று நினைத்தேன். ‘நம்ம மருமகன்தான் மேனேசரா வராறுன்னு’ ஊர் முழுக்க விளம்பரம் செஞ்சிருப்பாரோ என்று நினைப்புடன் அவருக்கு எப்படி பதிலளிப்பதென தெரியாமல் அவரையே பார்த்தேன்.

சொந்த ஊரில் பணியாற்றுவது ஒரு வகையில் சந்தோஷம் என்றால் வேறொரு வகையில் அதுவே ஒரு பிரச்சினையாகிவிடவும் வாய்ப்பிருக்கிறது. அதுவும் பணத்தையே மூலதனமாக, கருப்பொருளாக(raw material) வைத்து நடத்தப்படும் வணிகம் வங்கி வணிகத்தில் கேட்க வேண்டாம்.

சேமிப்பு நிதியைத் திரட்டுவதும் திரட்டிய நிதியை கடனாக கொடுப்பதுமே ஒரு வங்கி மேலாளரின் தலையாயப் பணி. என்னைப் போன்ற மேலாளர்களுள் பெரும்பாலோனோர் தங்களுடைய சொந்த ஊரில் பணியாற்ற விரும்பினாலும்  தங்களுடைய மனைவியுடைய ஊரில் பணியாற்ற சற்று தயக்கம் காட்டுவதுண்டு.

ஏன்?

தங்களுடைய கிளைக்கு வேண்டிய நிதி திரட்டும் நோக்கத்துடன் தங்களுடைய மனைவியுடைய உறவினரை அண்டிச் செல்ல ஒருவித ஈகோ இடம் கொடுக்காது. ‘என்னங்க நீங்க, பாக்கறவங்கக் கிட்டல்லாம் நீங்க எங்க பேங்க்ல டெப்பாசிட் போடுங்க, எங்க பேங்க்ல டெப்பாசிட் போடுங்கன்னு கேட்டு மானத்த வாங்கறீங்க. எங்க வீட்டு விசேஷத்துக்கு உங்கள கூட்டிக்கிட்டு வர்றதுக்கே பயமாயிருக்கு. உங்கள பார்த்தாலே மிரண்டு ஓடறாங்க பாருங்க. உங்க பேங்க் வேலையெல்லாம் வெளியாளுங்கக் கிட்ட வச்சிக்குங்க. நம்ம வீட்டாளுங்கக் கிட்ட வேணாம்.’ என்று என் மனைவியே தடுத்து விடுவார்.

ஆனால் அதே கடனுதவி வேண்டுமென்றால், ‘ஏங்க, அவரு எங்களுக்கு ரொம்ப தெரிஞ்சவருங்க. நீங்க அவர நம்புறீங்களோ இல்லையே எங்கப்பாவ நம்பி தாராளமா லோன் குடுக்கலாம். நம்ம வீட்டாளு ஒருத்தர் மேனேசரா இருக்காரே, நமக்கு சல்லிசா லோன் குடுப்பாருன்னுதானே கேக்கறாங்க? எல்லார்கிட்ட பேசற ரூலெல்லாம் பேசாம இவருக்கு குடுங்க.’ என்பார் என் மனைவி!

நிலமை இப்படியிருக்க, ‘டிபிஆர். நீங்க உங்க ஒய்ஃப் ஊர்லல்லே இருக்கீங்க. மத்த ஊர்ல நீங்க பண்ணதவிட ரெண்டு மடங்கு இங்க பண்ணனும்.’ என்று வங்கி மேலதிகாரிகளும் வர்த்தக பட்ஜெட்டை உயர்த்தி வைத்துவிடுவார்கள்.

இதில் வேறொரு குடும்பப் பிரச்சினையும் இருக்கிறது.

நம்முடைய தகப்பன் வழி, தாய் வழி பந்துக்களானால் நாம் விருப்பப்பட்டால், கடன் பெறுவோருக்கு எல்லா தகுதியும் இருந்தால் கொடுக்கலாம். இல்லையென்றால் முடியாது என்று மறுத்துவிடலாம். அவர் அதிகம் போனால் நம்முடைய தாய்க்கோ, தந்தைக்கோ உறவினராக இருப்பார். சிறு வயது முதலே நம்மை நன்கு தெரிந்தவர்களாயிருப்பதால் நாம் இல்லை என்று மறுத்துக்கூறினாலும் அதற்காக வருத்தப்பட்டு கோபித்துக்கொள்ள மாட்டார்கள்.

அதுவே மனைவி குடும்பத்தார் என்றால், ‘என்னவே உங்க மருமகன் ரொம்பத்தான் பண்ணிக்கிறார்.. நீரு சொன்னீருன்னுதானவே அவர்கிட்ட போனேன். ஏதோ மூனாம் மனுசங்கக்கிட்ட கேக்கறா மாதிரி செக்யூரிட்டிய தாரும், காரண்டிக்கு வேற ஒருத்தர கொண்டாரும்னு சொல்றார்?’ என்று நம் மனைவியின் உறவினரிடமே போய் முறையிடுவார்கள்.

சென்னை நான் பிறந்து வளர்ந்த ஊர். என்னுடைய தாய் மற்றும் தந்தையுடைய எல்லா உறவினர்களும் சென்னையில்தான். ஆனால் என்னுடைய குணத்தை நன்கு அறிந்திருந்த என்னுடைய பெற்றோர், சகோதரர்கள், தாய் மாமன்மார், சித்தி, சித்தப்பா யாருமே அவர்களுக்கோ அல்லது அவர்களுடைய நண்பர், உறவினருக்கோ இதுவரை நான் மேலாளராயிருந்த எந்த கிளையையும் அணுகியதில்லை.

ஆனால் தூத்துக்குடியில் நிலைமை சற்று பிரச்சினையாகத்தானிருந்தது. ஒரு தந்தைக்கு தன்னுடைய மகன் வங்கி மேலாளராயிருப்பது பெரிய விஷயமாக இல்லாதிருக்கலாம். ஆனால் ஒரு மாமனாருக்கு அப்படியில்லை. அதுவும் தூத்துக்குடி போன்ற ஒரு சிறு நகரத்தில் அது ஒரு பெரிய மதிப்புக்குரிய விஷயம் போலிருக்கிறது. அதனால்தான் தனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்களிடத்தில் நான் அதே ஊரில் வங்கி மேலாளராக வருவதை பறைசாற்றியிருந்தார்.

அது ஆரம்பத்தில் எரிச்சலாக இருந்தாலும் போகப்போக சரியாகிவிட்டது.

ஆகவேதான் அந்த படகுக்காரர் என்னைப் பார்த்து அப்படியொரு கேள்வியை கேட்டதும் எனக்கு எரிச்சலாக வந்தது. இருப்பினும் அதை மறைத்துக்கொண்டு, ‘ஆமாங்க.’ என்றேன்.

அவர் உடனே சந்தோஷமாக, ‘பிறவென்ன சார். என்னைப் பத்தி உங்க மாமனார்கிட்ட வேணும்னாலும் கேட்டுக்குங்க. என் பேர்லயே அஞ்சாறு மெக்கனைஸ்ட் போட் இருக்கு.. அதுவுமில்லாம ஒத்திக்கு எடுத்து ஒரு நாலு போட்டு ஓட்டறேன். எங்கிட்ட மட்டும் சுமார் நூறு பயலுவ வேலைக்கி இருக்கானுக. ஒங்க பேங்க்ல மட்டுமில்ல சார் இங்கருக்கற நிறைய பேங்க்ல எனக்கு வரவு செலவு இருக்கு. எந்த பேங்கல வேணும்னாலும் கேட்டுக்கிறுங்க.. -----------------னா (அவருடைய பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) எல்லா மேனேசர்களுமே நல்லத்தான் சொல்வாங்க.’ என்று கூறிவிட்டு என்னுடைய மேலாளர் நண்பரைப் பார்த்து நக்கலாக, ‘இவரத்தவிர.’ என்றார்.

நான் சங்கடத்துடன் என் நண்பரைப் பார்த்தேன். அவர் கோபத்துடன், ‘ஏன்வே சொல்ல மாட்டீரு. நீரு வந்து நின்னப்பல்லாம் நான் லோன் குடுத்தேன்லே. என்னைய இல்லே சொல்லணும்?’ என்றார்.

நான் சாதாரணமாக எந்த சூழ்நிலையிலும் என்னுடைய வாடிக்கையாளர்களிடத்தில் சரிக்கு சமமாக வாதாட விரும்பாதவன். வாடிக்கையாளருடைய தரப்பில் தவறு இருந்தாலும் முடிந்தவரை பொறுமையாய் பதிலளிப்பவன்.

இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. எந்த ஒரு வாடிக்கையாளருமே தன்னைப் போன்ற இன்னொரு வாடிக்கையாளர் அவமானப்படுவதை விரும்பமாட்டார். நாம் ஒரு வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்யும் சமயத்தில் அலுவலகத்தில் இருக்கும் மற்ற வாடிக்கையாளர்கள் அதை கேட்க நேர்ந்தால் அடுத்த கணமே அவர்கள் வாய் வார்த்தையாக, ‘இந்த மேனசரு சரியான முசுடுய்யா. எதுக்கெடுத்தாலும் கோவப்படுறாரு’ என்று ஊர் முழுவதும் பறைசாற்றிவிடுவார்கள்.

வங்கி வர்த்தகமே மேலாளர்களும், கிளையில் பணிபுரியும் பணியாளர்களும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்ற சேவையின் தரத்தின்மீதுதான் சார்ந்திருக்கிறது. அவர்களுடைய சேவையில் ஒரு சிறு பழுதிருந்தாலும் அது அக்கிளையின் வர்த்தகத்தையே பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆகவேதான் அந்த வாடிக்கையாளருக்கு சரிசமமாக கோபப்பட்டு வாக்குவாதத்தில் இறங்கிய என்னுடைய மேலாளர் நண்பரை வியப்புடன் பார்த்தேன். உடனே ஆங்கிலத்தில், ‘இவரை ஒரு பத்து நிமிடம் வெளியே காத்திருக்க சொல்லுங்கள். நான் உங்களுடன் தனியாக பேச வேண்டும்.’ என்றேன்.

ஆனால் என்னுடைய நண்பர் என்னுடைய வேண்டுகோளின் பொருளைப் புரிந்துக்கொள்ளாமல், ‘நீங்க என்ன ஜோசப்? இந்த ஊராளுங்களே இப்படித்தான்.  பணிஞ்சி போனோம்னு வைங்க. தலைக்கு மேல ஏறி உக்காந்திருவாங்க. நீங்க பார்த்துக்கிட்டே இருங்க நான் இவர எப்படி டீல் பண்றேன்னு.’ என்று ஆங்கிலத்தில் பதிலளித்துவிட்டு வாடிக்கையாளரைப் பார்த்தார்.

அவரோ, ‘இவனுக என்ன இங்க்லீஷ்ல பேசிக்கிறானுங்க?’ என்பதுபோல் எங்கள் இருவரையும் பார்த்தார்.

நான், ‘ஐயா.. நீங்க கோபப்படாம இப்ப என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க.’ என்றேன்.

என்னுடைய நண்பர் கோபத்துடன் ஆங்கிலத்தில், ‘என்ன ஜோசப் நீங்க? இவனப்போயி ஐயான்னுக்கிட்டு.. நம்ம முன்னால ஒக்காரக் கூட தகுதியில்லாத மீன்பிடிக்கற பயலுக..’ என நானும் கோபத்துடன், ‘வார்த்தைய அனாவசியமா விடாதீங்க. வெளியிலருக்கற ஆங்கிலம் தெரிந்த வாடிக்கையாளருக்கு யாருக்காவது தெரியவந்தா வீண் பிரச்சினையாயிரும். கண்ட்ரோல் யுவர்செல்ஃப்.’ என்றேன்.

பிறகு, வாடிக்கையாளரிடம், ‘நீங்க சொல்லுங்க. இப்ப நாங்க என்ன பண்ணனும்?’ என்றேன்.

என் நண்பருக்கு என்னுடைய அறிவுரை  பிடிக்கவில்லையென்பது அவருடைய அடுத்த கேள்வி எனக்கு உணர்த்தியது.

‘சொல்லுவே. இப்ப அவர்தான் மேனேசரு. சொல்லும்.’ என்றார் வாடிக்கையாளரிடம்..

அவர் தயக்கத்துடன் எங்கள் இருவரையும் பார்த்தார். ‘சார்.. இந்த பிரச்சினை இவரால வந்ததுதான்.’ என்றார் என் நண்பரை நோக்கி.

கோபத்துடன் இடைமறித்து பேச முயன்ற என் நண்பரை பொருட்படுத்தாமல், ‘அது முடிஞ்ச கதை. இப்ப என்ன பண்ணனும்? அத மட்டும் சொல்லுங்க.’ என்றேன்.

அவரும் கோபப்பட்டார். ‘அதெப்படி சார். இவர் மட்டும் இன்சூரன்ஸ் கம்பெனி அனுப்பன நோட்டீச என் வீட்டுக்கு அனுப்பியிருந்தா நா பாட்டுக்கு இன்சூரன்ஸ் பணத்த கட்டிட்டு போயிருப்பேன்லே.. இப்ப அதுலதான பிரச்சினையே இருக்கு?’

என்னுடைய நண்பர் நான் தடுப்பதற்குள் குறுக்கிட்டார். ‘நா அனுப்பலேன்னு எத வச்சி சொல்றீரு?’

அவரும் பதிலுக்கு சூடாக. ‘சரி சார். நீங்க அனுப்பினீங்கன்னு சொல்றீகல்லே. அதுக்கு உங்க பேங்க்ல ரெக்கார்ட் இருக்கும்லே. அத காட்டுங்க. நீங்க ஒரு இன்ஸ்டால்மெண்ட் கட்லனாவே நோட்டிஸ் அனுப்பற ஆளு. இத லெட்டர் ஏதும் வைக்காமயா அனுப்பியிருப்பீங்க? அத காட்டுங்க. என் தலையெளுத்துன்னு என்னாலவறத பாத்துக்கறேன்.’ என்று கூறிவிட்டு என்னைப் பார்த்தார். ‘நீங்களே சொல்லுங்க சார். நான் சொல்றது சரிதானே?’

எனக்கும் அவர் கூறியது சரிதான் என்று தோன்றியது. என்னுடைய மேலாள நண்பர் விழித்ததைப் பார்த்தபோதுதான் எனக்கும் அவர்மேல் சந்தேகம் ஏற்பட்டது.

வாடிக்கையாளர் அவருக்கே உரிய பாணியில், ‘பாத்தீங்களா சார் இவர் பே முளி முளிக்கறத? இவர் அனுப்பவே இல்ல சார்.’ என்றார் கேலியுடன்.

நான் என் நண்பரைப் பார்த்தேன். அவர் மும்முரமாக தன்னுடைய மேசை இழுப்பைத் திறந்து எதையோ மும்முரமாக தேடுவதுபோல் இருந்தார்.

வாடிக்கையாளரோ இதுதான் சமயம் என்று அவருடைய வேண்டுக்கோளை வைத்தார். ‘சார்.. நீங்க நோட்டீச அனுப்பவேயில்லைன்னு தெளிவாயிருச்சி. இப்ப நா சொல்ற மாதிரி செஞ்சீங்கன்னா.. இதுலருந்து விடுபட வாய்ப்பிருக்கு. நா இன்சூரன்ஸ் பண்ற ஏஜண்ட் நம்ம பையந்தான். அவன் கிட்ட யோசன கேட்டுட்டுத்தான் வந்திருக்கேன்.’

என்னுடைய நண்பர் எரிச்சலுடன், ‘நீர் பிரச்சின பண்றதுங்கற முடிவோடத்தான் வந்திருக்கீரு.. என்ன யோசனைய்யா அது? சொல்லுங்க கேப்போம்.’ என்றார்.

‘உங்க பேங்க்லருந்து பழைய டேட்டுல அதாவது அந்த இன்சூரன்ஸ் முடிஞ்ச டேட்டுக்கு ஒரு ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு டிராஃப்ட் இன்சூரன்ஸ் கம்பெனி பேருக்கு குடுத்தா மாதிரி ஒரு சர்டிபிகேட் குடுக்கணும். மத்தத நா பாத்துக்கறேன்.’ என்றார் கூலாக..

நான் அவருடைய யோசனையிலிருந்த முட்டாள்தனத்தைவிட என்னுடைய நண்பர் இந்த பிரச்சினையிலிருந்து தப்பித்தால் போதும் என்ற திருப்தியுடன் ‘செஞ்சிட்டா போச்சி.’என்ற பதிலைக் கேட்டு  திகைத்துப் போய் அவரையே பார்த்தேன்..

தொடரும்

14 comments:

துளசி கோபால் said...

இப்படிச் செஞ்சா இன்ஷூரன்ஸ் கம்பெனியை ஏமாத்துனதா ஆகாதா?

என்னங்க இது இப்படி?........ம்ம்ம் அப்புறம்?

ஜோ / Joe said...

//நம்ம முன்னால ஒக்காரக் கூட தகுதியில்லாத மீன்பிடிக்கற பயலுக.//

இப்படி சொல்லுற பொறம்போக்கெல்லாம் ஒரு வங்கிக்கு மேலாளரா?கேவலம்!

பொன்ஸ்~~Poorna said...

இருங்க இருங்க.. ட்ராப்ட்டுன்னு எதை சொல்றாங்க? எனக்கு புரியலை..

டி ராஜ்/ DRaj said...

//உங்க பேங்க்லருந்து பழைய டேட்டுல அதாவது அந்த இன்சூரன்ஸ் முடிஞ்ச டேட்டுக்கு ஒரு ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு டிராஃப்ட் இன்சூரன்ஸ் கம்பெனி பேருக்கு குடுத்தா மாதிரி ஒரு சர்டிபிகேட் குடுக்கணும். மத்தத நா பாத்துக்கறேன்//

இப்படியெல்லாம் செய்யமுடியுமா சார்?
இன்ஸ்சுரன்ஸ் expire ஆகி எத்தன நாள் ஆகியிருந்தது சார்?

குமரன் (Kumaran) said...

ஜோசஃப் சார். திரும்பிப் பார்க்கிறேன் '108'வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள், வணக்கங்களுடன்.

G.Ragavan said...

ம்ம்ம்ம்ம்ம்...நல்ல சண்டைதான். குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்னு அவருக்குத் தெரியலை. சரி விடுவோம். நடந்து முப்பது வருசம் ஆச்சே.

அஜஸ்மண்டு பண்ணனுமாக்கும்...அதுக்கு அவரும் ஒத்துக்கிறாராக்கும்....நல்ல கதைதான்....

tbr.joseph said...

வாங்க துளசி,

இப்படிச் செஞ்சா இன்ஷூரன்ஸ் கம்பெனியை ஏமாத்துனதா ஆகாதா?//

பின்னே? கண்டுபிடிச்சா அவ்வளவுதான்.

tbr.joseph said...

வாங்க ஜோ,

ரொம்ப சூடாயிட்டீங்க போலருக்கு. அதான் எக்குத்தப்பா வார்த்தை வந்து விழுந்திருச்சின்னு நினைக்கிறேன்.

It is Ok. என்ன பண்றது? ஆனா ராகவன் சொல்றா மாதிரி இது இருபது வருஷத்துக்கு முன்னால நடந்ததுதானே ஒதுக்கிதள்ளிட முடியலை. ஏன்னா இந்த மாதிரி எண்ணங்கள் இப்பவும் இருக்கு..

tbr.joseph said...

வாங்க பூன்ஸ்,

Bank Draftன்னு கேள்விப்பட்டதே இல்லையா. வாடிக்கையாளார் ஒருவர் வங்கியில் பணம் செலுத்தி பெறும் instrumentஐத்தான் Draft என்கிறோம்.

இது வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கிலிருந்து கொடுக்கும் காசோலைகளை விட மதிப்பு வாய்ந்தது.

காப்பீட்டு பத்திரத்தை புதுப்பிக்க தேவையான தொகையை வங்கி draft வழியாக நான் அனுப்பி வைத்திருந்தேன் என்று வாதாடினால் காப்பீட்டு கழகம் அவருடைய நஷ்ட ஈட்டு மனுவை பரிசீலிக்கும் என்பது வாடிக்கையாளருடைய எண்ணம். அதனால்தான் அப்படியொரு சான்றிதழை அவர் கோரினார்.

tbr.joseph said...

வாங்க ராஜ்,

இப்படியெல்லாம் செய்யமுடியுமா சார்?
இன்ஸ்சுரன்ஸ் expire ஆகி எத்தன நாள் ஆகியிருந்தது சார்? //

இன்சூரன்ஸ் காலம் முடிஞ்சி ஒரு நாளாயிருந்தாலும் ஒரு மாசமாயிருந்தாலும் ஒன்னுதானே.. இந்த கேசுல ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. ஆதலால்தான் டிராஃப்ட் தபாலில் அனுப்பி வைத்திருந்தேன் என்று கூறி தப்பித்துக்கொள்ளலாம் என்று வாடிக்கையாளர் நினைத்திருக்கிறார்.

tbr.joseph said...

வாங்க குமரன்,

உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

சரி விடுவோம். நடந்து முப்பது வருசம் ஆச்சே.//

முப்பதில்லை.. இருபது. என்றாலும் இன்றைக்கும் இது நடந்துக்கொண்டுதானிருக்கிறது என்பது உங்களுக்கும் தெரியுமே.

அஜஸ்மண்டு பண்ணனுமாக்கும்...//

இதைவிட பெரிய அஜ்ஸ்மண்டையெல்லாம் படு அசால்டாக கேட்டுவிட்டு, 'நீங்க நெனச்சா செய்யலாம் சார்.' என்பார்கள் சில வாடிக்கையாளர்கள்.

பொன்ஸ்~~Poorna said...

டி டியைத் தான் அப்படி சொல்றீங்களா.. இப்பொவெல்லாம் ட்ராப்ட் எடுக்கற பழக்கம் எல்லாம் போயிடுச்சு சார்.. நான் இதுவரைக்கும் ஒரே ஒரு தடவை தான் பாங்க்குப் போய் ட்ராப்ட் எடுத்திருக்கேன்.
இப்போ எல்லாம் இணையத்திலேயே எல்லாம் முடிஞ்சுடுது.. அதான் அந்தப் பேரே தெரியலை.. (எனக்குத் தெரிஞ்ச ஒரே ட்ராப்ட், மெயில் அனுப்பும் முன் பாதுகாக்கப் படும் மாதிரி மெயில் ... :) ஹி ஹி)

விளக்கமா சொன்னத்துக்கு ரொம்ப நன்றி சார்.

tbr.joseph said...

இப்போ எல்லாம் இணையத்திலேயே எல்லாம் முடிஞ்சுடுது//

நீங்கல்லாம் புது ஜெனரேஷன் ஆளுங்க இல்லையா பூன்ஸ்?

ஆனா இப்பவும் பிசினஸ் பண்றவங்க, நம்பர் டூ வில டீல் பண்றவங்கல்லாம் டிடி ய நம்பித்தான் இருக்காங்க.