29 March 2006

திரும்பிப் பார்க்கிறே 107

தூத்துக்குடி கிளைக்கு வருவதற்கு முன்பு நான் மேலாளராகவிருந்த இரு கிளைகளுமே நான் புதிதாய் துவங்கிய கிளைகளாகும். ஆரம்ப முதலே நாமே தேர்ந்தெடுத்த வாடிக்கையாளர்களாதலால் அக்கிளைகளை நடத்திச் செல்வது மிக எளிதாக இருந்தது.

புதிய கிளையை திறப்பது ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதற்கு ஒப்பாகும். கிளையைத் திறப்பதற்கு முன்னர் பல சிரமங்களை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டியிருக்கும்.

ஒரு புது கிளையைத் திறப்பது திருமணம் செய்துக்கொள்வதுபோலென்றால் பழைய கிளையொன்றை பொறுப்பேற்றுக்கொள்வதென்பது ஏற்கனவே மணம் முடித்து குழந்தைகளுடன் இருக்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக்கொள்வதற்குச் சமம் என்றால் மிகையாகாது.

நமக்கு முன்பு மேலாளராக இருந்தவர்கள் செய்த நன்மை, தின்மை எல்லாமே நம்மையும் பாதிக்கும். அவர்கள் நேர்மையுள்ளவர்களாக, ஒழுக்கம் (disciplined) உள்ளவர்களாக இருந்தால் பிரச்சினையில்லை. அதுமட்டுமல்ல, நல்ல திறமையுள்ளவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் நம்முடைய வாழ்க்கை நரகம்தான்.

தூத்துக்குடி கிளை திறக்கப்பட்டு ஏழு வருடங்கள் நிறைவுபெற்றிருந்ததாலும் அங்கு ஏற்கனவே பல சிக்கல்கள் இருந்ததாலும் (இது முன்னாலயே எனக்கு தெரியாமப் போச்சே என்று பிற்பாடு என்னை நானே நொந்துக்கொண்டேன்) கிளையின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள எனக்கு இரண்டு வாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

எனக்கு முன்பு மேலாளர்களாகவிருந்த இருவருமே என்னுடைய நெருங்கிய நண்பர்கள். என்னுடன் பல நிலைகளிலும் சேர்ந்து பணியாற்றியவர்கள். இருவருமே தென் மாவட்டங்களைச் சார்ந்தவர்கள். ஒரே குலத்தைச் சார்ந்தவர்கள். இக்குலத்தைச் சார்ந்தவர்கள்தான் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வணிகத்திற்கு பேர்போனவர்கள். ஆனால் சற்றே ஒழுங்கீனமானவர்கள்.. அதாவது, வணிகத்தை நடத்திச் செல்வதில்..

அதைப் பிறகு பார்ப்போம்.

தூத்துக்குடியில் மிகவும் பிரசித்தமான தொழில் மீன் பிடிப்பு. நான் மேற்கூறிய குலத்தினரும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த குலத்தினரும் தூத்துக்குடி மக்கள் தொகையில் ஏறத்தாழ சரிபாதி. இவ்விரு குலத்தினருக்கும் இடையில்தான் ஜன்மப் பகை என்று கூறியிருந்தேன். ஆயினும் வணிகம் என்று வந்துவிட்டால் இதை இரு குலத்தாருமே பொருட்படுத்த மாட்டார்கள்.

தூத்துக்குடியிலிருந்த வங்கி கிளை மேலாளர்கள் பெரும்பாலும் வேறு மாவட்டங்களைச் சார்ந்தவர்களாகத்தான் இருந்தனர். பல அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள் வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்களாகவும் இருந்தனர். அதில் சிலருக்கு தமிழே சரியாக பேச வராது. தமிழ் தெரிந்தவர்களுக்கே இந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் பேசும் தமிழ் சரியாய் விளங்காது. இதில் வேற்று மாநிலத்தைச் சேர்ந்த மேலாளர்களின் நிலை என்னவாயிருக்கும்?

மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தவர்களும்தான் ஏறத்தாழ எல்லா வங்கிகளிலும் கடனுதவி பெற்றிருந்தார்கள். என்னுடைய வங்கியிலும் அதே நிலைதான்.

தூத்துக்குடியில் மீன்பிடித் தொழில் 'காத்துக்காலம்' எனப்படும் ஜூலை மாத நடுவாக்கில் துவங்கி அக்டோபர் மாதம் வரை கனஜோராக நடைபெறும். தூத்துக்குடிக் கடல் பகுதி இறால் சாகுபடிக்கும் மிகவும் பிரசித்தமானது. மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சிங்க ரால் எனப்படும் ஒருவகை ராட்சத இறால்களை கொள்முதல் செய்ய கேரள மாநிலத்திலிருந்து வணிகர்கள் refrigerated வாகனங்களில் வந்து காத்து நிற்பார்கள்.

நடுக்கடலுக்குள் சென்று மீன்பிடிப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் டீசல் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள படகுகளை லாஞ்ச் (Launch) மற்றவற்றை தோணிகள் என்று வகைப்படுத்தி வங்கிகள் கடன் வழங்குவது வழக்கமாயிருந்தது.

ஒரு லாஞ்ச் கட்டுமானத்திற்கென சுமார் ஐந்திலிருந்து ஆறு லட்சம்வரை கடன் வழங்குவதுண்டு. அவ்வாறு வங்கிகளிலிருந்து கடனுதவி பெற்று கட்டப்படும் லாஞ்சுகளை மரைன் காப்பீடு எனப்படும் திட்டத்தில் முழுமையாக காப்பீடு செய்ய வேண்டும் என்பது வங்கிகள் நிர்ணயிக்கும் விதிகளுள் ஒன்று.

கடலுக்குள் செல்லும் இத்த்கைய லாஞ்சுகள் விபத்துக்குள்ளாகும் விகிதம் சற்றே கூடுதல் என்பதால் காப்பீட்டு சந்தாவும் (Insurance premium) வருடத்திற்கு சுமார் ரூ.15000 த்திலிருந்து ரூ.25000 வரை இருந்தது. தூத்துக்குடியிலிருந்த பொது காப்பீட்டு கழகங்களின் (Genernal Insurance Corporations) மொத்த வர்த்தகத்தின் கணிசமான விழுக்காடு இத்தகைய காப்பீட்டு பத்திரங்களிலிருந்து கிடைக்கும் சந்தாதான் என்றால் மிகையாகாது. ஆனால் இத்தகைய நிறுவனங்கள் வருடா வருடம் வழங்கும் நஷ்ட ஈடும் கணிசமாக இருக்கும்.

காப்பீட்டு சந்தாவின் அளவு அதிகமிருந்ததாலும் ‘நம்ம படகுக்கு என்ன வரப்போவுது? எதுக்கு வம்பா இவனுகளுக்கு கொட்டி கொடுக்கறது?’ என்ற படகு உரிமையாளர்களின் மெத்தன போக்கினாலும் பெரும்பாலானோர் வங்கிகளின் நியதியை மீறி தங்களுடைய படகுகளை காப்பீடு செய்யாமல் இருந்துவிடுவார்கள். அதைக் கண்டும் காணாததுபோல் வங்கி மேலாளர்களும் இருந்துவிடுவதுண்டு.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இத்தகைய படகுகள் விபத்துக்குள்ளாகிவிட்டால் முதலில் வங்கியை நோக்கி ஓடிவருபவர்கள் அவற்றின் உரிமையாளர்களாகத்தான் இருப்பார்கள். வங்கி மேலாளர் முன்னெச்சரிக்கையாக காப்பீட்டு பத்திரத்தை புதுப்பிக்காமலிருந்துவிட்டால் தொலைந்தார். அடிக்கவே வந்துவிடுவார்கள். ‘என்னவே என்னத்த -------ங்கிக்கிட்டிருந்தீரு? இப்ப எம்படகு சாஞ்சி கிடக்குதே இதுக்கு யாருவே பொறுப்பு? என்ன பண்ணுவீரோ ஏது பண்ணுவீரோ எங்களுக்கு தெரியாது.. நாசமா போன படகு எளுந்திருச்சி நிக்கணும்னா இன்சூரன்ஸ் பணம் கைக்கு வந்தாவணும்.’ என்று முறைத்துக்கொண்டு நிற்பார்கள்..

அத்தகைய ஒரு சிக்கலைத்தான் நான் பணியில் சேர்ந்த முதல்நாளே சந்திக்க நேர்ந்தது.

என்னுடைய அப்போதைய மேலாளர் நான் கிளையின் பொறுப்பை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளும் வரை அல்லது குறைந்தபட்சம் ஒருவார காலமாவது இருந்துவிட்டுச் செல்லவேண்டும் என்ற நியதி இருந்ததால் அவர் அலுவலகத்தையொட்டியிருந்த குடியிருப்பிலேயே இருந்தார். அவர் வீட்டைக் காலி செய்யும்வரை நான் ஏதாவது விடுதியில் தங்கிக்கொள்ளலாம் என்றாலும் என்னுடைய மாமனார் வீடு அருகிலேயே இருந்ததால் அங்கு சென்று தங்கினேன்.

நான் பணியில் சேர்ந்த அன்று சுமார் பதினோரு மணிக்கு பதற்றத்துடன் ஒருவர் நாங்கள் இருவரும் அமர்ந்திருந்த மேலாளர் அறைக்குள் நுழைந்தார்.

‘சார் நம்ம லாஞ்சோட பாலிசி பேப்பர்ச கொஞ்சம் எடுங்க சார்.. நேத்து ராத்திரி இந்த பயலுக திரும்பி வராக்கல மணல் மேட்டு மேல மோதிட்டானுக.. போட்டு முன் பக்கம் ஒடைஞ்சி பெருத்த சேதாரமாயிருச்சி சார்..’

எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் என் நண்பரைப் பார்க்க அவர் படு மெத்தனமாக, ‘என்னவே வெளையாடுறீரா? உம்ம லோனத்தான் க்ளோஸ் பண்ணி ஆறுமாசமாவுதுல்லே.. பிறவு நா எதுக்கு பாலிசிய ரினியூ பண்றது?’ என்றார்.

அவருடைய முகம் இதைக் கேட்டதும் பேயறைந்தது போல ஆக மேலே பேச முடியாமல் இருக்கையில் சரிந்து அமர்ந்து எங்கள் இருவரையும் மாறி, மாறி முரைத்தார்.

என்னுடைய வங்கியிலிருந்து கடந்த ஆறு ண்டுகளில் நான்கு முறை கடனுதவி பெற்று முழுவதுமாக திருப்பி செலுத்திய அவருடயை படகு நான் சேர்ந்த தினத்திற்கு முந்தைய தின இரவு விபத்துக்குள்ளாகியிருந்தது. முழுவதுமாக நஷ்டஈடு (Total loss claim) கோரப்படும் ரகத்தைச்சார்ந்த விபத்து.

ஆனால் குறிப்பிட்ட படகுக்கென வங்கியிலிருந்து பெற்றிருந்த கடனை முழுவதுமாக அவர் அடைத்திருந்ததால் படகுக்கான மரைன் பாலிசியை வங்கி மேலாளர் புதுப்பிக்கவில்லை.

ஆனால் அதிலும் ஒரு சிக்கல்.

முந்தைய பாலிசியை வங்கிதான் புதுப்பித்திருக்கிறது. அதற்குப்பிறகுதான் வாடிக்கையாளர் கடனை முடித்திருக்கிறார். வங்கியின் நியதிப்படி கடனை அடைத்து முடித்தவுடன் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு 'சந்தாதாரர் கடைனை அடைத்துவிட்டார். ஆகவே காப்பீட்டு பத்திரத்தை அவர் பெயருக்கே மாற்றிவிட எந்தவித ஆட்சேபனையுமில்லை.. இனிவரும் புதுப்பிப்புகளும் சம்பந்தப்பட்ட காப்பீடுதாரரே செய்துக்கொள்வார்' என்று வங்கி மேலாளர் அறிவித்திருக்க வேண்டும்.

அப்படி அறிவித்திருந்தால் புதுப்பிக்க வேண்டிய நோட்டீஸ் காப்பீடு நிறுவனத்திலிருந்து நேரடியாக உரிமையாளருக்கே அனுப்பப்பட்டு விடும். ஆனால் என்னுடைய முந்தைய மேலாளர் அதை செய்யாமல் விட்டுவிட்டார்.

சரி, காப்பீடு நிறுவனத்திலிருந்து வந்த புதுப்பிப்பு நோட்டீசையாவது அது வந்தவுடனே உரிமையாளருக்கு அனுப்பியிருக்க வேண்டும். இங்கேதான் சிக்கலே. என்னுடைய மேலாளர் தான் உடனே உரிமையாளரின் விலாசத்துக்கு அனுப்பிவிட்டேன் என்றார். ஆனால் உரிமையாளரோ வரவேயில்லை என்று சாதித்தார்.

‘சார் சும்மா, சும்மா சொன்னதையே சொல்லிக்கிட்டிருக்காதீங்க.. நீங்க அனுப்பியிருந்தா வந்து சேர்ந்திருக்குமில்லே..’ என்று வாடிக்கையாளர் குரலை உயர்த்தி வாதாட ரம்பித்தார்.

என்னுடைய மேலாளர் அவருக்கும் மேலே குரலை உயர்த்தி, ‘வேய்.. பாரும்.. நா சும்மா இருக்கேன்னு நெனச்சுக்கிட்டு குரல ஒசத்தாதேயும்.. நீமரு செய்ய வேண்டிய சோலிய செஞ்சீராவே.. லோனு முடிஞ்சிருச்சிவே, லாஞ்சு புக்கு, இன்சூரன்சு எல்லாம் வாங்கிட்டு போயிரும்னு எத்தன தரம் போன் போட்டிருப்பேன். ஃபிஷ்ஷிங் ஹார்பர்ல பாத்தப்பல்லாம் உம்ம கிட்ட சொல்லலே.. அப்பல்லாம் இருக்கட்டும் சார் எங்ஙன போயிரப்போவுதுன்னு கெத்தா பேசினீரு. மறந்துட்டீரா? புது மேனேசர் வருவார்னு சொன்னேன்லே.. அவருதான் இவரு.. வேணும்னா இவர்கிட்ட பேசிக்கிரும்..’ என என்னை நோக்கி கை காட்ட அவர் அப்போதுதான் என்னை பார்த்தார்.

சட்டென்று கோபம் தணிந்து, ‘சார் நீங்க நம்ம --------------ஐயாவோட மருமகனாமே.. சரியாய்யா?’ என்றார்.

நான் இதேதடா புது வம்பு என்று நினைத்தேன். ‘நம்ம மருமகந்தான் மேனேசரா வராறுன்னு’ நம்முடைய மாமனார் ஊர் முழுக்க விளம்பரம் செஞ்சிருப்பார் போலிருக்கிறதே என்ற நினைப்புடன் அவருக்கு எப்படி பதிலளிப்பதென தெரியாமல் அவரையே பார்த்தேன்.தொடரும்..

16 comments:

டி ராஜ்/ DRaj said...

முதல் நாளிலேயே சிக்கலா?

///புது மேனேசர் வருவார்னு சொன்னேன்லே.. அவருதான் இவரு.. வேணும்னா இவர்கிட்ட பேசிக்கிரும்//
அவரு பண்ணின தப்புக்கு உங்களை எப்படி கேட்டுக்கங்கன்னு சொல்லலாம்?? வாடிக்கையாளர் இருக்கும் போது நீங்க confront பண்ணமாட்டீங்கன்ற தைரியமோ??

துளசி கோபால் said...

ஆரம்பமே மோதல் ( படகுதான்) தானா?

மருமகப்பிள்ளை மானேஜரா வர்றதை மாமனார் சொல்லாம இருந்தாத்தான் தப்பு.
இல்லீங்களா?

G.Ragavan said...

நல்ல தொவக்கம். என்னவெல்லாம் நடந்துச்சோ.....

சரி. நீங்க என்ன செஞ்சீங்க? அதான் அடுத்த பதிவுல தெரிஞ்சிருமே.....

பிஷ்ஷிங் ஹார்பர் பக்கத்துல குவார்டர்ஸ்ல இருந்தப்போ ராத்திரி மாடி ஏறிப் பாத்தா...லாஞ்சிக மீன் பிடிக்கப் பொறப்பட்டுப் போறது கண் கொள்ளாக் காட்சியா இருக்கும். காலைல ஹார்பருக்குப் போனா அங்கனயே வேண்டிய மீன வாங்கீட்டு வந்துரலாம்.

சிங்க இறால் ரொம்பப் பெருசா இருக்கும். ஆனா நாஞ் சாப்பிட்டுப் பாத்ததில்லை. எல்லாம் வெள்ளக்காரனுக்கு ஏத்துமதியாயிருதே......

Krishna said...

சார், "மணமான பெண்", உவமை சரியில்லையே. கொஞ்சம் இடிக்குது, நிறைய நெருடுதே.

இராமநாதன் said...

யார் மேல தப்புன்னு சொல்றது. இருந்தாலும் உங்க பக்கம் கைகாட்றது டூ மச்! :)

மாமனார் இருக்கவே சுமூகமா முடிச்சிட்டீங்கன்னு கெஸ் பண்ணவா? முதல்லேயே அவ்வளவு மரியாதையா கேக்கறாரே.

tbr.joseph said...

வாங்க ராஜ்,

சிக்கல் இல்லாத நாளே எங்களுடைய வங்கி வாழ்க்கையில் இருந்ததில்லை.

அதுவும் தூத்துக்குடி போன்ற கிளையென்றால் கேட்கவே வேண்டாம்.

சில கிளைகளில் வாடிக்கையாளர்களுடைய கடன் கணக்கில்தான் பிரச்சினையிருக்கும். வாடிக்கையாளர்கள் மிக நல்லவராக இருப்பார்கள். ஆனால் தூ..டி கிளையில் வாடிக்கையாளர்களை சமாளிப்பதுதான் பெரிய தலைவலி.

tbr.joseph said...

வாங்க துளசி,

மருமகப்பிள்ளை மானேஜரா வர்றதை மாமனார் சொல்லாம இருந்தாத்தான் தப்பு. இல்லீங்களா? //

அது மருமகன் அரசு அதிகாரியா இருந்தா சரி. வங்கி மேலாளருக்கு அது பெரிய தலைவலி. ஏன் என்று பிறகு சொல்கிறேன்.

tbr.joseph said...

வாடிக்கையாளர் இருக்கும் போது நீங்க confront பண்ணமாட்டீங்கன்ற தைரியமோ?? //

இருக்கலாம் ராஜ். நான் குறிப்பிட்டிருந்த மேலாளரும் அம்மாதிரி குணம் கொண்டவர்தான்.

tbr.joseph said...

வாங்க இராமநாதன்,

யார் மேல தப்புன்னு சொல்றது. இருந்தாலும் உங்க பக்கம் கைகாட்றது டூ மச்!

அது மட்டுமா பண்ணார். அடுத்த பதிவ பார்த்துட்டு சொல்லுங்க.

G.Ragavan said...

ஜோசப் சார். நான் போட்ட பின்னூட்டத்தயே காணமே...நானும் அதச் சேத்து வெக்கலையே...........

tbr.joseph said...

வாங்க ராகவன்,

நான் நேற்று கேரளா சென்றிருந்தேன். அதனால்தான் பின்னூட்டங்களை பப்ளிஷ் செய்ய முடியாமற் போயிற்று.

இன்று காலை உங்களுடைய முதல் பின்னூட்டத்தை பப்ளிஷ் செய்தேன். ஆனால் அதற்குப் பிறகு நீங்கள் இட்ட இந்த பின்னூட்டம் மட்டும் பப்ளிஷ் ஆயிற்று. முதல் பின்னூட்டம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.:-((

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

உங்க பின்னூட்டம் பப்ளிஷ் ஆகாம விட்டுப் போயிருச்சிங்க. தப்பா நினைச்சிக்காதீங்க.

ராகவனோடதும் அப்படித்தான் ஆயிருச்சி.

"மணமான பெண்", உவமை சரியில்லையே. கொஞ்சம் இடிக்குது, நிறைய நெருடுதே. //

உவமை சரியில்லையோ.. சரி.. ஒரு செக்கண்ட் ஹேண்ட் வண்டிய வாங்குறதப் போலன்னு வச்சிக்கலாம்..

எந்த ஒரு தப்பான எண்ணத்துலயும் அந்த உவமைய போடலீங்க.

G.Ragavan said...

// சார், "மணமான பெண்", உவமை சரியில்லையே. கொஞ்சம் இடிக்குது, நிறைய நெருடுதே. //

கிருஷ்ணா...கண்டிப்பாக நெருடக்கூடாது. ஒருவன் குழந்தையோடு இருக்கும் விதவைப் பெண்ணையோ அல்லது கணவனைப் பிரிந்த பெண்ணையோ திருமணம் செய்து கொண்டால்..இந்த நிலைதானே. அதைத்தான் ஜோசப் சார் சொல்லியிருகிறார் என நினைக்கிறேன்.

ஆண் மறுமணம் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பெண் மறுமணம் என்பது இன்னமும் முறையாக திறந்த மனதோடு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. நிலமை மாற வேண்டும்.

G.Ragavan said...

// இன்று காலை உங்களுடைய முதல் பின்னூட்டத்தை பப்ளிஷ் செய்தேன். ஆனால் அதற்குப் பிறகு நீங்கள் இட்ட இந்த பின்னூட்டம் மட்டும் பப்ளிஷ் ஆயிற்று. முதல் பின்னூட்டம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.:-(( //

ஜோசப் சார். அதுவும் வந்துருச்சு...மேல பாருங்க........

tbr.joseph said...

நல்ல தொவக்கம். என்னவெல்லாம் நடந்துச்சோ.....

சரி. நீங்க என்ன செஞ்சீங்க? அதான் அடுத்த பதிவுல தெரிஞ்சிருமே.....

பிஷ்ஷிங் ஹார்பர் பக்கத்துல குவார்டர்ஸ்ல இருந்தப்போ ராத்திரி மாடி ஏறிப் பாத்தா...லாஞ்சிக மீன் பிடிக்கப் பொறப்பட்டுப் போறது கண் கொள்ளாக் காட்சியா இருக்கும். காலைல ஹார்பருக்குப் போனா அங்கனயே வேண்டிய மீன வாங்கீட்டு வந்துரலாம்.

சிங்க இறால் ரொம்பப் பெருசா இருக்கும். ஆனா நாஞ் சாப்பிட்டுப் பாத்ததில்லை. எல்லாம் வெள்ளக்காரனுக்கு ஏத்துமதியாயிருதே......

ராகவன் என்னோட மெய்ல் பாக்ஸலருந்த உங்க பின்னூட்டத்த காப்பி பண்ணி போட்டுட்டேன்..

எல்லாம் வெள்ளக்காரனுக்கு ஏத்துமதியாயிருதே//

உண்மைதான் நம்ம நாட்டுல கிடைக்கற நல்லது, பெரியது எதுவானாலும் வெளிநாட்டுக்காரனுக்குத்தான் கிடைக்குது. எல்லாம் காசு பண்ற வேலை.

Krishna said...

சார். நிச்சயமாய் தப்பா நினைக்கவில்லை. உங்களை தப்பா நினைக்கவும் முடியாது. முதல்ல நினைத்தது, ஏதாவது தப்பா எழுதிட்டமான்னு, அப்புறம் நினைத்தது ப்ளாகர் பிரச்சினை செய்யுதுன்னுதான்.

நீங்க தப்பான அர்த்ததில எழுதவில்லை என்பது நீங்கள் சொல்லித்தான் தெரியனுமா சார்.

இடிக்குதுன்னு சொன்னது, வேற எந்த அர்த்தத்திலும் இல்ல. பெண் விஷயத்தில, கைம்பெண், விவாகரத்தானவள் என இரண்டு பெரிய வித்தியாசம் இருக்கே. முன்னாள் கணவன் சரியா இருந்திருந்தான்னா அதன் விளைவுகள் இதிலிரண்டிலும் வேறுபடும். ஆனால், உஙக விஷயத்திலே, முன்னவர் நல்லவராய் இருந்தா, பிரச்சினையே இல்லையே.

ராகவன், நெருடுதுன்னு சொன்னது மறுமணம் சற்றே லாவகமாய் கையாளப்பட வேண்டிய விஷயம் என்பதில் மட்டுமல்ல. பொதுவாய் கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார்னு சொல்வாங்க. கல்யாணம் பண்ணிப்பார்னா, தனக்கு இல்லை, சகோதரிக்கோ, மகளுக்கோ, தோழிக்கோ என்றுதான் அர்த்தம். அத நினச்சியும் அப்படி சொன்னேன். மற்றபடி, நானும், பெண் மறுமணம் விஷயத்தில் நிலைமை மாற வேண்டும் என ஆதங்கப்படுகிறேன்.