28 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 106

தஞ்சையிலிருந்து இத்தகைய சந்தோஷமான, மனதுக்கு நிறைவு தரக்கூடிய அனுபவங்களுடன் உழைப்பாளர்களின் தினமான மே மாதம் ஒன்றாம் தேதியன்று அதிகாலையில் தஞ்சையிலிருந்து ஒரு வாடகைக் காரில் தூத்துக்குடியை நோக்கி புறப்பட்டோம்.

என்னுடைய வீட்டு சாமான்கள், ஃபர்னிச்சர்கள் எங்களுக்கு பின்னால் ஒரு லாரியில் தொடர்ந்தன..

தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு நான்கு மணி நேரம். மதுரையிலிருந்து அருப்புக் கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு சுமார் இரண்டரை மணியிலிருந்து மூன்று மணி நேரம்..

ஆனால் வெயிலின் தாக்கத்தால் தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி வயல் வெளிகளின் ஓரத்தில் அமர்ந்து இளநீர் குடிப்பதும் சாலையோரத்திலிருந்த புளிய மரங்களில் புளியங்காயை விளையாட்டாய் கல்லெறிந்து விழவைத்ததும்.. முதன் முதலாக கண்ணுக்கெட்டும் தூரம்வரை பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளைப் பார்த்த என் மகளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை..

அதெல்லாம் ஒரு பசுமையான நினைவுகள்..

எங்களுடைய வாகனம் தூத்துக்குடியை அடைந்தபோது மாலை மணி ஐந்தைக் கடந்திருந்தது.

என்னுடைய மாமனார் வீட்டுக்கு ஏற்கனவே தொலைப்பேசி செய்து அறிவித்திருந்ததால் நாங்கள் சென்றடைந்த நேரத்தில் என்னுடைய மாமனார் லாரியில் வந்திருந்த பொருட்களை இறக்கி வைக்க ஏற்பாடு செய்திருந்த நால்வர் அடங்கிய ஒரு குழு எங்களை வரவேற்றது. நாங்கள் சென்றடைந்த சிறிது நேரத்தில் என் மாமனாரும் வந்து சேர்ந்தார்.

தூத்துக்குடி கிளை மேலாளர் தங்கியிருக்க அலுவலக கட்டிடத்தின் பின்புறத்திலேயே வசதி இருந்ததால் நாங்கள் சென்றடைந்த நேரத்தில் அவரும் அங்கு இருந்தார். அத்துடன் அன்று ஞாயிற்றுக்கிழமையாயிருந்தும் துணை மேலாளர் மற்றும் தலைமைக் குமாஸ்தா (Head Clerk), காசாளர் என எல்லோரும் அலுவலகப் பணியில் மும்முரமாக இருந்ததைப் பார்த்தேன்.

‘எதுக்கு ஞாயிற்றுக்கிழமையிலும் இவங்க வந்திருக்காங்க?’ என்றேன் மேலாளரிடம். அவர் என்னைப் பார்த்த பார்வையில் சற்றே கேலி தெரிந்ததைப் போலிருந்தது. ‘இது தஞ்சாவூர் பிராஞ்ச் இல்லை டிபிஆர். வேல பெண்டு கிழிஞ்சிரும். வந்துட்டீங்கல்லே.. இனி நீங்களே தெரிஞ்சுக்குவீங்க.’

அட! அப்படியென்னடா வேலை பெரிசா .. என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் வெளியே சொல்லி அவருடைய விரோதத்தை சம்பாதித்துக்கொள்ள விரும்பவில்லை.

இதற்கிடையில் தூத்துக்குடி கிளை கட்டிடத்தைப் பற்றி விவரிக்க வேண்டும்.

மரைக்காயர் மஹல் என்றால் தூத்துக்குடியில் தெரியாதவர் யாருமே இருக்க முடியாது. WGC சாலை எனப்படும் தூத்துக்குடியின் பிரதான சாலையில் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும்படி அமைந்திருந்த பிரம்மாண்ட கட்டிடம் அது. கீழ்தளம், மேல்தளம் என இரண்டே தளங்கள் இருந்தாலும் அதனுடைய மொத்த உயரத்தை வைத்துப் பார்த்தால் ஏதோ நான்கு மாடி கட்டிடம் போல தோற்றமளிக்கும்.

அதற்கடுத்தாற் போலிருந்த ‘தந்தியாபீஸ்’ எனப்படும் தபால் நிலையமும், தொலைப்பேசி அலுவலகமும் இக்கட்டிடத்தைவிட இரண்டு மடங்கு தளங்களைக் கொண்டிருந்தாலும் உயரமென்னவோ ஒன்றுதான்.

கீழ்தளத்திற்குள் நுழைந்து தலையை உயர்த்தி பார்த்தால்தான் புரியும் அதன் கம்பீரம். கீழ்தளத்தின் கூரை தரையிலிருந்து சுமார் பதினெட்டிலிருந்து இருபதடி உயரம் இருக்கும்! அதற்குமேல் மேல்தளம். அதனுடைய கூரையும் அதே அளவு உயரத்தில்.. ஆக மொத்த கட்டிடத்தின் உயரம் சுமார் நாற்பதடி..

அக்கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து பார்த்தால் தூத்துக்குடி மொத்தமும் தெரியும். கிழக்கே தூரத்தில் நீலநிற கடலும் - நீல நிறமா, என்ன சார் விளையாடறீங்களா என்று தூத்துக்குடிக்காரர் ஒருத்தர் மறுத்து எழுதப்போகிறார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன் -– தூத்துக்குடி முழுவதும் வானத்தை முட்டிக்கொண்டு நிற்கும் தேவாலய கோபுரங்களும் (இத்தனை சிறிய ஊரில் இத்தனை தேவாலயங்களா என்று வியந்ததுண்டு. கொச்சியும் அதுபோலத்தான். ஒரே சாலையில் மூன்று தேவாலயங்களைப் பார்த்திருக்கிறேன்), சிவன் கோவில் கோபுரமும், மசூதிகளின் மணிகூண்டுகளும் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும்..

என்னுடன் வந்து நின்ற வாகனத்திலிருந்த என்னுடைய வீட்டுப் பொருட்களை வாகனத்திலிருந்து இறக்கி எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த மேல்தளத்தில் (என்னுடைய கிளை அலுவலகம் மேல் தளத்தின் முன்புறமும் குடியிருப்பு அதன் பின்புறம் அமைந்திருந்தது. என்னுடைய குடியிருப்புக்கு அலுவலகத்திற்குள் நுழைந்துதான் செல்ல வேண்டும். இதன் காரணமாக நானும் என் குடும்பத்தினரும் பட்ட அவஸ்தைகளை பிறகு சொல்கிறேன்) கொண்டு சென்று இறக்குவதென்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பதைக் கட்டிடத்தைப் பார்த்தால்தான் விளங்கும்.

மாடிப்படிகள் அந்தக்கால கருங்கற் பாறைகளாலானவை. ஒவ்வொரு படியும் சுமார் ஒரு அடி உயரம் இருந்தது. இதில் அடிபட்டுக்கொள்ளாமல் என் மகள் ஏறிச் செல்வதே ஒரு சர்க்கஸ் போல இருந்தது. இதில் கட்டில், அலமாரி, குளிர்பதனப் பெட்டி போன்ற சாதனங்களை ஏற்றுவதென்றால்..
‘அதப்பத்தியெல்லாம் நீங்க கவல படாதீங்க. நாம பாட்டுக்கு எங்க அம்மா வீட்டுக்கு போலாம். இதெல்லாம் எங்கப்பா இருந்து ஏத்தி வச்சிருவாங்க.’ என்றார் என் மனைவி.

எங்களுக்கருகில் நின்றிருந்த என்னுடைய மாமனாரும் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தார். நான் என்னுடைய மேலாளர் நண்பரைப் பார்த்தேன். அவர் ஒன்றும் பேசாமல் ஒரு விஷமப் புன்னகையுடன் என்னைப் பார்த்தார்.

‘டிபிஆர் இத எறக்கறதுக்கு தஞ்சாவூர்ல எவ்வளவு குடுத்தீங்க?’ என்றார்.

அவர் இதை ஏன் கேட்கிறார் என்று விளங்காமல், ‘எதுக்கு கேக்கறீங்க?’ என்றேன்.

‘சொல்லுங்க. விஷயமாத்தான் கேக்கறேன்.’

‘Frankஆ  சொல்லணும்னா. நா ஒன்னுமே கொடுக்கலை. நம்ம பேங்க் வாட்ச் மேனும் அவரோட பையனுமே லாரில வந்தவ க்ளீனரோட சேர்ந்து தூக்கி வச்சிட்டாங்க. ஆனா அங்க அது க்ரெளண்ட் ஃப்ளோர். லாரிய வாசல்வரைக்கும் கொண்டு நிறுத்திட்டு ஈசியா ஏத்தி வச்சிட்டாங்க. இந்த பில்டிங்க பார்த்தால பயமா இருக்கே.’

எங்களுடைய இந்த சம்பாஷனை ஆங்கிலத்தில் இருந்ததால் பொருட்களை இறக்க வந்திருந்த தூத்துக்குடி குழுவினருக்கும் வாகனத்துடன் வந்திருந்த தஞ்சைவாசிகளுக்கும் நாங்கள் விவாதித்த விஷயம் தெரிய வாய்ப்பில்லாமல் போனது. அதுவும் நல்லதுக்குத்தான்.

என்னுடைய மேலாள நண்பர் பதில் கூறாமல் புன்னகையோடு நிறுத்திக்கொண்டார். என் மாமனார் அவரை நெருங்கிச் சென்று, ‘சார் தயவு செய்து நீங்க எதையாச்சும் சொல்லி காரியத்த கெடுத்துராதீங்க. நான் ஏற்கனவே பேசிதான் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். இவனுங்க தோணிக்குப் போற பயல்க. இந்த ஜாமானெல்லாம் அவனுங்களுக்கு லேசான விஷயம்..’ என்றார்.

‘ஒங்க மருமவன் என்ன சொல்றாருண்ணே..’ என்றார் ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமாக இருந்த நால்வர் குழு தலைவர். இந்த அண்ணேங்கறது தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் மிகவும் பிரபலம். தம்பிங்கற உறவு முறையே கிடையாது. எல்லோரும் எல்லோருக்கும் அண்ணந்தான். அவ்வளவு மரியாதை! அதைப்பற்றி தனியாக பிறகு எழுதுகிறேன்.

‘அதொன்னும் இல்லவே.. நீரு ஒம்ம ஆளுங்கள ஜாமான வண்டியிலருந்து இறக்கி வைக்கச் சொல்லும்யா..’ என்றார் என் மாமனார்.

‘என்னலே பாத்துக்கிட்டுக்கிட்டு நிக்கறீக.. சட்டுபுட்டுன்னு எறக்கி போட்டும் போணும்லே..? என்றார் குழுத்தலைவர் தன் சகாக்களிடம்.

ஆனால் அவர்களோ அசைவதாகத் தெரியவில்லை.

‘எலே என்னத்தலே பாக்கறீக? ஜாமான் சாஸ்தியாருக்கேன்னா. அதெல்லாம் அண்ணனனோட மருமவன் பாத்து குடுப்பாகல்லே.. நீய சோலிய ஆரம்பிங்கலே..’

‘அதான் நான் அப்பவே போயிருவோம்னேன்.. இப்ப பாருங்க.. உங்க தலைய பாத்ததுமே கூட கேக்கறாங்ய..’ என்று என் காதைக் கடித்தார் என் மனைவி.

என்னுடைய மேலாளர் முகத்தில் ஒரு விஷமப்புன்னகை. அவர் அப்படித்தான். என்னுடைய நெருங்கிய நண்பர்தான். ஆனால் பிறத்தியார் படும் அவஸ்தையைப் பார்த்து ரசிப்பதில் மன்னன். நானும் அவரும் குமாஸ்தாக்களாக ஒரே கிளையில் பணிபுரிந்திருக்கிறோம்..

கடினமான வேலைகளையெல்லாம் சாமர்த்தியமாக நம் தலையில் கட்டிவிட்டு காலையாட்டிக்கொண்டு உக்கார்ந்திருப்பார். 'இத்தன வருஷாமாகியும் நீர் மாறாம அப்படியேத்தான் இருக்கீரு’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

பொருட்களை இறக்க வந்த தூத்துக்குடி குழு தங்களுக்குள் குசுகுசுவென ஏதோ பேசிக்கொள்வது தெரிந்தது.

‘என்னப்பா நீங்க பாத்துக்கிட்டே நிக்கறீங்க. முன்னமே பேசித்தானே கூப்டுக்கிட்டு வந்தீங்க.. இப்ப என்னவாம்? ஏதாச்சும் கூட வேணுமாக்கும்?’ என்றார் என் மனைவி தன் தந்தையிடம்.

என் மாமனார் சங்கடத்துடன் என்னைப் பார்த்தார். மருமகன் முன்னால நம்ம மானத்தை இப்படி வாங்கறானுவளே என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. நேரே விடுவிடுவென ரகசியமாக பேசிக்கொண்டிருந்தவர்களை நெருங்கினார். என்ன பேசினாரோ தெரியவில்லை.. நால்வரும் வாயெல்லாம் பல்லாக அடுத்த அரை மணியில் எல்லாவற்றையும் இறக்கி வைத்துவிட்டு.. என் மாமனார் ரகசியமாய் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு ‘வரோம் சார்.’ என்று எனக்கு கையசைத்துவிட்டு அவர்கள் வந்த முச்சக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டு பறந்துவிட்டனர்.

என்னுடன் தஞ்சையிலிருந்து வந்த ஓட்டுனரும், க்ளீனரும் நான் வற்புறுத்தியும் ஒன்றும் வாங்க மறுத்து திரும்பிச் சென்றனர்.

‘பாருங்கப்பா. தஞ்சாவூர்காரங்களுக்கு நாம என்ன சொந்தமா பந்தமா? ஊர்ல ஏத்தும்போதும் இந்த டிரைவரும் க்ளீனரும் சேர்ந்து ஏத்தினாங்க தெரியுமா? இங்ஙனயும் ஜாமான எறக்கி வைக்க ஹெல்ப் பண்ணலே.. நம்ம ஊராள்ங்களும்  இருக்கான்வளே.. அள்ளிக் குடுத்திருப்பீங்களே.. அவனுக வாயெல்லாம் பல்லா இளிச்சப்பவே நெனச்சேன்..’ என்று சலித்துக்கொண்டார்  என் மனைவி..

‘டிபிஆர். உங்க மாமனார் பேசி கூட்டிக்கிட்டு வந்திருக்கேன்னு சொன்னதுமே நா நெனச்சேன்.. இந்த ஊர்ல இப்படித்தான்.. அதான் வந்துட்டீகல்லே.. நீங்களே பார்த்துக்குவீங்க.. ஏண்டா வந்தோம்னு நினைக்காம இருந்தா சரி..’ என்ற என்னுடைய மேலாள நண்பர்.. ‘அண்ணே நான் ஒங்கள தப்பா சொன்னேன்னு நினைச்சிக்காதீங்க.. இந்த ------------பயலுவளுக்கு எத்தன குடுத்தாலும் பத்தாது.. நீங்க வேணா பாருங்க.. நேரா ஒயின் ஷாப்புக்குத்தான் போயிருப்பானுவ..’ என்றார் என்னுடைய மாமனாரைப் பார்த்து.

என் மாமனார் முகம் போன போக்கு அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே ஏதோ அபிப்பிராய பேதம் ஏற்பட்டிருக்கிறதென்று எனக்கு தோன்றியது..

என்னுடைய மேலாள நண்பர் சார்ந்த குலத்தினருக்கும் அவர் கூறிய -------------பயலுவ சார்ந்த குலத்தினருக்கும் இடையே இருந்த ஒருவித ஜன்மப்பகையைப் (அதை பகை என்று கூறமுடியுமா என்று தெரியவில்லை) பற்றி பிறகுதான் எனக்கு தெரிந்தது..

தொடரும்

17 comments:

இராமநாதன் said...

//என்னுடன் தஞ்சையிலிருந்து வந்த ஓட்டுனரும், க்ளீனரும் நான் வற்புறுத்தியும் ஒன்றும் வாங்க மறுத்து திரும்பிச் சென்றனர். பாருங்கப்பா. தஞ்சாவூர்காரங்களுக்கு நாம என்ன சொந்தமா பந்தமா? ஊர்ல ஏத்தும்போதும் இந்த டிரைவரும் க்ளீனரும் சேர்ந்து ஏத்தினாங்க தெரியுமா? இங்ஙனயும் ஜாமான எறக்கி வைக்க ஹெல்ப் பண்ணலே.. நம்ம ஊராள்ங்களும் இருக்கான்வளே//
அடாடாடாடா... ஜோசப் சார்... என்னத்த சொல்றது.. நீர் வாழ்க!

ஆரம்பமே அங்கயும் தடங்கலா. தூத்துக்குடிக்கு நான் போனதேயில்ல. திருநெல்வேலி மாதிரி அருவாள் ஸ்டாண்ட் ஏரியாவா அதுவும்?

துளசி கோபால் said...

ஆரம்பிச்சாச்சு அடுத்த 'திக்திக்'

இனி ஒரே ஓட்டம்தான். ரைட் ரைட் . போலாம்

G.Ragavan said...

ஆகா தூத்துக்குடி வந்துருச்சா....பிரமாதம்...பிரமாதம்....இனிக் கொண்டாட்டந்தான்.....

தந்தியாபீஸ் பக்கத்துல இருந்த கட்டடத்துலயா நீங்க இருந்தீங்க....நீங்க சொல்றாப்புல அது பெரிய கட்டடமுல்லா...இங்குட்டு பெரிய கோயிலு..அங்குட்டு மாதா கோயிலு...நடுவுல கடலு....நல்ல எடமாச்சே....சேவியர்ஸ் பள்ளிக்கூடம் பக்கத்துலதான இருக்கு. ஒன்னொன்னா நெனவுக்கு வருது. ஒரு வாரம் லீவு போட்டுட்டு தூத்துக்குடீல போய் தங்கீட்டு வரனும் போல இருக்கு.

// கிழக்கே தூரத்தில் நீலநிற கடலும் - நீல நிறமா, என்ன சார் விளையாடறீங்களா என்று தூத்துக்குடிக்காரர் ஒருத்தர் மறுத்து எழுதப்போகிறார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன் //

நா ஒன்னுஞ் சொல்லப் போறதில்ல சார். விசயம் ஒங்க போக்குல வந்தாவுல்ல நல்லாருக்கும். :-)

// (அதை பகை என்று கூறமுடியுமா என்று தெரியவில்லை) //

தூத்துக்குடியோட சாபமே அதான் சார். நானே ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன். அந்தக் குலத்துல இருந்து ஒரு ரொம்ப நல்லவரு சுயேச்சையா போட்டப்ப...மதபேதம் பாக்காம மத்தவங்க ஓட்டு போட்டாங்க...ஆனா பகைன்னு இருக்குறவங்க...எதுத்து ஓட்டுப் போட்டு அவங்காளு (இப்ப புது பஸ்டாண்டு பக்கத்துல இவரோட மக பேருல ஓட்டல் இருக்கு. சரிதானே?)ஒருத்தர செயிக்க வெச்சாங்க....இது நிச்சயமா தூத்துக்குடீல மாறனும்.

tbr.joseph said...

வாங்க இராமநாதன்,

எனக்கு எந்த ஊரும் சொந்தமில்லை.. ஊர் ஊரா போயி இப்போ யாதும் ஊரே யாவரும் கேளீர்ங்கறா மாதிரிதான்.

அதனால ஒரு ஊர பத்தி எந்தவித பாகுபாடும் இல்லாம நல்லதையும் கெட்டதையும் ஒரே கண்ணோட்டத்தோட எழுதமுடியுது..

எல்லா ஊர்லயும் நல்லவங்களும் இருக்காங்க கெட்டவங்களும் இருக்காங்க.. அதே மாதிரி தஞ்சையிலும் தூத்துக்குடியிலும்.

திருநெல்வேலி மாதிரி அருவாள் ஸ்டாண்ட் ஏரியாவா அதுவும்? //
ஒருவகையில அப்படித்தான். தென் மாவட்டங்களிலுள்ள மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதை அங்கிருந்த இரண்டே ஆண்டுகளில் தெரிந்துக்கொண்டேன். திருநெல்வேலியில் நடைபெறும் வங்கி மேலாளர்கள் கூட்டத்திலும் கூட அணல் பறக்கும்.

tbr.joseph said...

வாங்க துளசி,

ரைட் குடுத்திட்டீங்கல்லே.. இனி வண்டி பறக்க வேண்டியதுதான்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

பிரமாதம்...பிரமாதம்....இனிக் கொண்டாட்டந்தான்.....//

பாக்கலாம். ஆனா திண்டாட்டமும் இருக்கும்:-))

(இப்ப புது பஸ்டாண்டு பக்கத்துல இவரோட மக பேருல ஓட்டல் இருக்கு. சரிதானே?)//

ரொம்ப சரி.. அதாவது ரிக்கார்டுக்கு.. உண்மையான ஓனர் யாருன்னுதான் எல்லாருக்கும் தெரியுமே.

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
தஞ்சை காரங்களுக்கு ரொம்ப ஐஸ் வச்சுட்டீங்க .அப்புறம் தென் மாவட்டத்துக் காரங்க உணர்ச்சி வசப்படுறவங்க தான் .கட்டபொம்மன் ,பாரதி பொறந்த மண்ணுல்லா! பாக்கத் தான் முரடா இருப்போம் .பாசம் வச்சுட்டா உசுரையும் குடுப்போம்லா!என்ன ராகவன்?

tbr.joseph said...

வாங்க ஜோ,

பாக்கத் தான் முரடா இருப்போம் .பாசம் வச்சுட்டா உசுரையும் குடுப்போம்லா!//

அதென்னவோ உண்மைதான். ஆனா பகைன்னு வந்துட்டா உசிரையும் எடுத்திருவீங்கல்லே?

ஜோ / Joe said...

//அதென்னவோ உண்மைதான். ஆனா பகைன்னு வந்துட்டா உசிரையும் எடுத்திருவீங்கல்லே?//
தூத்துக்குடி கொஞ்சம் அதிகம் தான் .பொதுவா தென்மாவட்டங்கள்-னு சொல்லப்படுற பல விஷயங்கள் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரிக்கு ஒத்து வருவதில்லை .திருநெல்வேலி அளவுக்கு வீச்சரிவா தகராறு ,சாதிச் சண்டையெல்லாம் குமரி மாவட்டத்துல கிடையாது .ஒரு தடவை மத ரீதியா வந்த சண்டை தான் உண்டு .கலவரங்களும் ,சண்டைகளும் குறைவாயிருப்பதற்கு படிப்பறிவும் ஒரு காரணமாயிருக்கலாம்.

ஆனா பொதுவாவே தூத்துகுடி,நெல்லை,குமரி மாவட்டத்து மக்கள் தைரியமா எதையும் தட்டிக்கேட்பாங்கண்ணு ஒரு எண்ணம் உண்டு.

tbr.joseph said...

தட்டிக்கேட்பாங்கண்ணு ஒரு எண்ணம் உண்டு. //

கரெக்ட். முதல்ல தட்டிட்டு அப்புறம் கேப்பாங்க..

நம்ம சாமியார்ங்களக் கூட விடமாட்டாங்கங்கறத அங்க இருந்தப்போத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்..

ஜோ / Joe said...

//கரெக்ட். முதல்ல தட்டிட்டு அப்புறம் கேப்பாங்க..//
என்ன கிண்டலா ஜோசப் சார்?
சென்னையிலயே நான் பாத்திருக்கேன் .பொது இடத்துல நடக்குற அநியாயங்கள தட்டிக்கேக்குறது பெரும்பாலும் இந்த பகுதியிலிருந்து வந்தவங்களா இருக்கும் .வட தமிழ்நாட்டு,தஞ்சை பகுதிக் காரங்க காரியவாதிங்க .நழுவுறதுலயே குறியா இருப்பாங்க .(வட நாட்டு மக்கள் கோவிச்சுகாதீங்கப்பா .ஜோசப் சார் நம்மள வாருறதால உண்மைய சொல்ல வேண்டியதா போச்சு)

tbr.joseph said...

பொது இடத்துல நடக்குற அநியாயங்கள தட்டிக்கேக்குறது பெரும்பாலும் இந்த பகுதியிலிருந்து வந்தவங்களா இருக்கும் //

நீங்க சொல்றதும் சரிதான் ஜோ. நானும் தெ.மாவை சேர்ந்தவந்தானே.
வ.த.மாவட்டகாரங்கள் பெரும்பாலும் சாதுக்கள்தான் சென்னைவாசிகளையும் சேர்த்து. சென்னையில் அளும்பு பண்றவங்க பெரும்பாலும் தெ.மாவை சேர்ந்தவர்கள்தான். ஆனால் பாசம் கொண்டவர்கள் என்பதை மறுக்க முடியாது. போறுமா ஜோ. தஞ்சைக்காரங்களப் பத்தி நீங்க சொல்றதுக்கு இ.நா, அமல் எல்லாரும் கோபிக்காம இருந்தா சரிதான்..

G.Ragavan said...

// பாக்கலாம். ஆனா திண்டாட்டமும் இருக்கும்:-)) //

திண்டாட்டத்துக்கெல்லாம் பாத்தா தெக்குல இருக்க முடியுமா?

////(இப்ப புது பஸ்டாண்டு பக்கத்துல இவரோட மக பேருல ஓட்டல் இருக்கு. சரிதானே?)//

ரொம்ப சரி.. அதாவது ரிக்கார்டுக்கு.. உண்மையான ஓனர் யாருன்னுதான் எல்லாருக்கும் தெரியுமே. //

ஆமாமா...ஊருக்கே தெரிஞ்ச விஷயந்தான் அது. என்னவோ நல்லாருந்தாச் சரிதான். இவரு இந்தவாட்டி போட்டி போட்டாலும் தோத்தாச் சரிதான்னு தோணுது எனக்கு.

G.Ragavan said...

// ஜோசப் சார்,
தஞ்சை காரங்களுக்கு ரொம்ப ஐஸ் வச்சுட்டீங்க .அப்புறம் தென் மாவட்டத்துக் காரங்க உணர்ச்சி வசப்படுறவங்க தான் .கட்டபொம்மன் ,பாரதி பொறந்த மண்ணுல்லா! பாக்கத் தான் முரடா இருப்போம் .பாசம் வச்சுட்டா உசுரையும் குடுப்போம்லா!என்ன ராகவன்? //

அதானவே....சிதம்பரம்பிள்ளை கப்பல் விட்ட ஊருல்லா...ஆயிரம் சண்டையிருந்தாலும் காரியத்துல கண்ணுல்லா......கலெக்டர் ஜீப்பு மேலையே குண்டு எறிஞ்ச ஊருதான்...ஆனா இந்தூர்ல சில அதிசயங்களும் உண்டு.

பழைய துறைமுகம் எதுக்க இருக்குற பிள்ளையார் கோயில் ரொம்பச் சிறிது. ஆனா கூட்டம் வரும். அதுக்கு கட்டளைதாரர் யாருங்கீக....ஒரு கிருத்துவக் காண்டிராக்டர்.

அதே போல எங்களுக்குச் சீக்கு வந்தா பள்ளிவாசலுக்குக் கூட்டீட்டுப் போய் மந்திரிக்கிறதும் உண்டு. மாதா கோயிலுக்கு மெழுகுதிரி ஏத்துறதும் உண்டு. திருவிழாக்கு நாங்களும் சர்ச்சுக்குப் போவோம். சிவங்கோயில் சூரசம்ஹாரத்துக்கு எல்லாக்கடைக்காரங்களும் சேவை வெப்பாங்க. ஒரு மாதிரி ஊருன்னு வெச்சுக்கோங்களேன்...மீன் கொழம்பு மாதிரி உப்பும் ஒறப்புமா இருந்தாலும் பெணஞ்சு திங்க நல்லாருக்கும். ஆனாலும் அப்பப்ப முள்ளு சிக்கிக்கிரும்.

G.Ragavan said...

////தட்டிக்கேட்பாங்கண்ணு ஒரு எண்ணம் உண்டு. //

கரெக்ட். முதல்ல தட்டிட்டு அப்புறம் கேப்பாங்க..

நம்ம சாமியார்ங்களக் கூட விடமாட்டாங்கங்கறத அங்க இருந்தப்போத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்.. //

ஜோ சொல்றதும் சரி. ஜோசப் சார் சொல்றதும் சரி. படக்குன்னு மூஞ்சிக்கி நேரா தப்பூன்னு சொல்லீருவாங்க...அது சாமியா இருந்தாலும் சரி...சாமியாரா இருந்தாலும் சரி...இது தொடர்பா ஒரு பிரச்சனையே வந்துச்சு நெனைக்கிறேன். சரியா நெனைவில்லை.....

இந்தியாவுக்கே உப்புப் போடுற ஊரு....தன்னோட சாப்பாட்டுல போடாமலா இருக்கும்....அதான் இம்புட்டு உணர்ச்சி....

tbr.joseph said...

மீன் கொழம்பு மாதிரி உப்பும் ஒறப்புமா இருந்தாலும் பெணஞ்சு திங்க நல்லாருக்கும். ஆனாலும் அப்பப்ப முள்ளு சிக்கிக்கிரும். //

அடடா! சொந்த ஊரப்பத்தி எதுகை மோனையோட எழுதி கலக்குறீங்க ராகவன். வாழ்க உங்க நாட்டு சாரி, ஊர் பக்தி..

tbr.joseph said...

இந்தியாவுக்கே உப்புப் போடுற ஊரு....தன்னோட சாப்பாட்டுல போடாமலா இருக்கும்.//

ஆமாமா. அந்த ஊராளுங்களோட சட்டையில நிக்கற வேர்வையிலேயே உப்புக்கரைய நான் பார்த்திருக்கேன்:-)

உப்பு நிறைய சாப்பிட்டா ரோஷம் வருமாமே.. அத்தோட ஒறப்பும் சேர்த்துட்டா கேக்கவா வேணும்? நானும் பக்கத்தூருகாரந்தான்னாலும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததுனால இந்த ரெண்டுமே கம்மியாத்தான் போடுவாங்க எங்க வீட்ல.. 'அதனாலதான ஒங்களுக்கு ரோஷமே இல்ல.. இடிச்சி பேசினாலும் இளிச்சிக்கிட்டு போயி நிக்கறீக'ம்பாங்க எங்க வீட்டு மேடம்.