23 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 103

குழந்தைகள் பெரியவர்கள் செய்வதை அப்படியே பிடித்துக்(படித்து என்றும் சொல்லலாம்) கொள்ளும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது நல்லதானாலும் சரி, கெட்டதானாலும் சரி..

என்னுடைய மகளும் அப்படித்தான். அவள் ஒன்றரை வயதானபோதே பேசத் துவங்கியவள். மழலை என்ற சொல்லே அவளுடைய பேச்சில் தெரிந்ததில்லை.

வார்த்தைகள் பளார், பளார் என்று தெறிக்கும். ஆகையால் நாம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவள் காதுபட எந்த வார்த்தையை யார் பேசினாலும் அடுத்த நிமிடமே அவளுடைய உதடுகளிலிருந்து அதே வார்த்தைகள், அதே பாணியில் வந்து விழும்.

என்னுடைய வீட்டில் வேலைக்கு வரும் பெண் தன்னுடன் தன்னுடைய எட்டு வயது மகள¨யும் அழைத்து வருவார். அச்சின்னஞ்சிறு பெண்ணை வரம்பில்லாமல் பாத்திரங்கள் துலக்கவும், வீட்டையும் தோட்டத்தையும் சுத்தம் செய்ய அவள் உத்தரவிடும்போதெல்லாம் எனக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வரும்.

என்னுடைய மனைவியிடம் அவளை கண்டிக்கும்படி சொல்வேன். ஆனால் என்னுடைய மனைவியோ, ‘என்னங்க பண்றது? எனக்கும் அவ பண்றத பார்த்தா கோபமாத்தான் இருக்கு. ஆனா நாம ஏதாச்சும் சொல்லப் போயி அவ வேலைக்கே வராம நின்னுட்டா அவ்வளவுதான். வயித்த தள்ளிக்கிட்டு நா எத்தன வேலயத்தான் செய்யிறது?’ என்பார். அவருக்கு அவருடைய கவலை.. கை நீட்டி சம்பளம் வாங்கும் பெண் பால்மணம் மாறாத குழந்தையை வேலை செய்ய ஏவிவிட்டு ஹாய்யாக வெற்றிலையை சுவைத்துக்கொண்டு வாயடித்துக்கொண்டிருக்கும் அந்த வேலைக்காரப் பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் என்னுடைய பிரஷர் ஏறும். ஆனாலும் அப்பெண்குழந்தை, கை வலிக்குதும்மா என்றபோதெல்லாம் எரிச்சலுடன் முண்டம், முண்டம்.. என்று ஏசுவாள்..

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய மகள் ஒருநாள் ஒரு வேலையும் செய்யாமல் அமர்ந்திருந்த வேலைக்காரியைப் பார்த்து, ‘ஏய் முண்டம்? என்னா வேலை செய்யாம உக்காந்திருக்கே?’ என்றாளே பார்க்கவேண்டும்!

அதிர்ச்சியில் என் மகளைப் பார்த்த அப்பெண் என் மனைவியிடம், ‘அட, பாருங்கம்மா ஒங்க பொண்ணு என்ன பேச்சு பேசுதுன்னு? எங்கருந்து இந்த வார்த்தைய புடிச்சிது?’ என என் மனைவிக்கு என்ன தோன்றியதோ, ‘இதெல்லாம் உங்கக்கிட்டருந்து படிச்சதுதான். நீங்கதான ஒங்க பொண்ண எப்ப பார்த்தாலும் அந்த வார்த்தைய சொல்லியே திட்டுவீக? அதப் பார்த்துத்தான் என் பொண்ணும் படிச்சிக்கிட்டா. இனிமேலாச்சும் சின்ன பிள்ளைங்க இருக்கற எடத்துல என்னத்த பேசறது, எப்படி பேசறதுன்னு தெரிஞ்சி பேசுங்க.’ என்று திட்டித் தீர்த்தார்.

வேலைக்கார பெண்ணின் மகளுக்கு என்ன தோன்றியதோ என் மகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். தன்னால் சொல்லி திட்டமுடியாததை இவள் தைரியமாக செய்துவிட்டாளே என்று நினைத்ததோ என்னவோ..

****

வேறொரு நாள் சனிக்கிழமை. நான் அலுவலகத்திலிருந்து சுமார் மூன்று மணிக்கு வீட்டையடைந்தபோது முன் ஹாலிலிலிருந்து வீடு முழுவதும் அரிசியும் மணலும் கலந்து தூவப்பட்டிருந்தது.

அன்று அலுவலகத்திலிருந்த வேலைப் பளுவும், ஒரு வாடிக்கையாளருடன் ஏற்பட்டிருந்த வாக்குவாதமும் என்னுடைய மனதையும் உடலையும் வெகுவாகப் பாதித்திருக்க வீடு கிடந்த கோலத்தைப் பார்த்ததும் ஆத்திரம் என்னையுமறியாமல் பொங்கி வந்தது.

கையிலிருந்த பெட்டியை சோபாவில் வீசிவிட்டு படுக்கையறையை எட்டிப் பார்த்தேன். கட்டிலில் என் மனைவி அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க என்னுடைய மகளைக் காணவில்லை.

வீட்டின் இன்னொரு சாவி என்னிடம் இருந்ததால் வாசற்கதவுக்கு முன்னாலிருந்த இரும்புக் கேட்டை உள்ளிருந்து பூட்டிவிட்டு வாசல் மரக்கதவை திறந்துவைத்திருப்பார் என் மனைவி. வெளியே சுற்றுச்சுவருக்கு வெளியே யார் வந்து நின்றாலும் வாசற்கதவை திறக்காமலே பார்ப்பதற்காக இந்த ஏற்பாடு.

ஆகவே நான் கேட்டைத் திறந்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்ததை என் மனைவி அறிந்திருக்கவில்லை.

அயர்ந்து உறங்குபவரை எழுப்ப விரும்பாமல் வீட்டின் பின்னாலிருந்த சமையலறையை நோக்கி நடந்தேன். அங்கே நான் பார்த்த காட்சி என்னை ஒருபுறம் திகைக்க வைத்தாலும் அதுவரை எனக்கிருந்த கோபத்தை உடனே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.

கையிலிருந்த காய்கறி கூடையிலிருந்த அரிசி மற்றும் மணல் கலந்த கலவையை அன்று தோட்டக்காரர் விதைகளை வீசியதுபோல படு சிரத்தையாய் உணவு அறை மற்றும் சமையலறையில் வீசிக்கொண்டிருந்தாள் என் மகள்..

இடுப்பில் ஜட்டி மட்டும். அதற்கு மேல் ஒரு துவாலை.. வேட்டி! தோளில் ஒரு துவாலை.. தோட்டக்காரரும் தோளில் ஒரு துண்டுடன் தான் இருப்பார்!

சிறிது நேரம் சப்தம் எழுப்பாமல் நின்ற இடத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். நான் நிற்பது தெரியாமலே கூடையிலிருந்த கலவையை எடுப்பதும் தனக்குத்தானே முனுமுனுத்துக் கொண்டு ஒரு இஞ்ச் இடம் விடாமல் தெளிப்பதுமாய் மும்முரமாய் இருந்தாள் என் விவசாயி மகள்!

என் மகளை அப்படியே அள்ளி உணவு மேசையில் அமர்த்திவிட்டு
என் மனைவி எழுவதற்குள் சுத்தம் செய்து முடித்துவிட வேண்டும் என்ற நினைப்பில் அடுத்த ஒரு மணி நேரம் சாப்பாட்டையும் மறந்து வீடு முழுவதும் கூட்டியெடுத்து முடிப்பதற்குள் என் முதுகு இரண்டாகப் பிளந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால் என் மனைவிக்கு என்னுடைய மகள் செய்த காரியம் தெரியவேண்டாம் என்று நினைத்து நான்  செய்து முடித்த காரியத்தை என் மனைவி எழுந்ததும் அவரிடம் என் மகள் அழுதுக்கொண்டே ‘இந்த அப்பாவ பாருங்கம்மா. நான் வீடு முழுசும் தெளிச்சிருந்த விதையை எல்லாம் எடுத்துக்கொண்டு போய் குப்பையில கொட்டிட்டாங்க’ என்று புகார் செய்ததுதான்.

பிறகு ஆதி முதல் அந்தம் வரை எல்லாவற்றையும் நான் எடுத்துரைக்க வீங்கிய வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க முடியாமல் என் மனைவி சிரிக்க, நல்ல வேளை அக்கம்பக்கத்தில் வீடுகள் ஏதும் இல்லாததால் ‘என்னாச்சி இவங்களுக்கு?’ என்று யாரும் எட்டிப்பார்க்க வழியில்லை.

இதே சென்னையாயிருந்தால் இப்படி வாய்விட்டு சப்தமாய் சிரிக்கக் கூட முடியாது. இந்த களேபரத்துக்கு இடையில் ‘எதுக்குப்பா சிரிக்கிறீங்க.?’ என் மகள் அப்பாவித்தனமாய் கேட்டுக்கொண்டே அழுததை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது..

அதனால்தானோ என்னவோ குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள்..

***

என்னுடைய மகளுடைய இன்னுமொரு விபரீத செய்கை நட்ட நடுராத்திரியில் எழுந்துக்கொள்வதுதான்.

நானும் என் மனைவியும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருப்போம். படீர், படீர் என்ற அறை முதுகில் விழும். பதறியடித்துக்கொண்டு எழுந்து பார்த்தால் என்னுடைய மகள் எழுந்து கொட்ட, கொட்ட விழித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள்.

ஆரம்பத்தில் இருவரும் மாறி, மாறி அவளை உறங்கச் செய்ய படாத பாடுபடுவோம். நாளடைவில் அவளுடைய சுபாவம் பரிச்சயமாக அவளை அப்படியே கட்டிலில் அமர்த்திவிட்டு அவளைச் சுற்றிலும் பொம்மைகளை பரப்பி வைத்துவிட்டு நானும் என்னுடைய மனைவியும் மீண்டும் உறங்கிவிடுவோம்.

காலையில் எழுந்துப் பார்த்தால் பொம்மைகள் மீதே என் மகளும் படுத்து உறங்கிக் கிடப்பாள்..

‘அவ நடுராத்திரிலதானடி பொறந்தா.. கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருப்பா. வயசு ஏறுனா எல்லாம் சரியாயிரும்.’ என்றார் என் மாமியார் ஒருமுறை.. ‘அதுக்காகத்தான் பெரியவங்க கூட இருக்கணுங்கறது.. உங்களுக்கு என்ன தெரியும்?’

அவர்கள் கூறியது போலவே குழந்தை நேரம் காலமில்லாமல் அழும்போது ஆரம்பத்தில் எதற்கு அழுகிறது என்றுகூட விளங்காது. அதுவும் கடைசியாய் நாங்கள் தஞ்சையிலிருந்த இருந்த வீடு அந்துவான காட்டில் இருப்பது போல் இருந்தது..

வீட்டு உரிமையாளரின் சகோதரர் குடும்பத்தைவிட்டால் அக்கம்பக்கத்தில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வீடுகளே இருக்காது..

இரவு எட்டு மணிக்கே ஆள் நடமாட்டம் குறைந்துபோய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மையிருட்டாய் தெரியும்.

‘யம்மா, உங்க வீட்டு பின்னாலருக்கற முருங்கை மரத்துல முனி இருக்குதும்மா..’ என்று ஒரு நாள் என்னுடைய வேலைக்காரப் பெண் என் மனைவியிடம் கூறிவிட ‘இதிலெல்லாம் எங்களுக்கு நம்பிக்கையில்லைங்க’ என்று என் மனைவி அப்போது கூறிவிட்டாலும் அவருக்கு உள்ளூர பயம் இருந்ததென்னவோ உண்மைதான்..

****

இரண்டாவது மகள் பிறந்து சுமார் ஒரு வாரம் கழித்து மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்..

என்னுடைய மாமியார் வீட்டிலிருந்து வந்திருந்த அவருடைய தங்கைகள் இருவரும், என் மனைவியுடைய இளைய சகோதரர்களும் அடுத்த இரு நாட்களில் ஊருக்குத் திரும்பிச் செல்ல என் மாமியார், நான், என் மனைவி என கூட்டம் குறைந்து  பத்துநாள் கலகலப்புக்குப் பிறகு வீடு அமைதியாய் போனது..

என்னுடைய மூத்த மகளைப் போலவே இரண்டாவது மகளும் நள்ளிரவு பிரசவம் ஆனதால் இரண்டு பிள்ளைகளும் நள்ளிரவில் எழுந்துக்கொள்வது வழக்கமாகிப் போனது. மூத்தது விளையாட்டை ஆரம்பித்தால் சின்னது அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிடும்..

சரி, மாமியாரும் மனைவியும் பார்த்துக்கொள்ளட்டும் என்று நான் என்னுடைய படுக்கையறைக் கதவை தாளிட்டுவிட்டு உறங்கலாம் என்று நினைத்தால் என் மூத்த மகள் விடமாட்டாள். ‘அப்பா பாப்பா கத்துதுப்பா.. அம்மாவால ஒன்னும் பண்ண முடியலை. அம்மாச்சியாலயும் ஒன்னும் பண்ண முடியலை. நீங்க வாங்கப்பா’ என்று கதவைத் தட்டி ஆர்ப்பாட்டாம் செய்துவிடுவாள்..இது தினமும் நடக்கும் கதைதான்.

நள்ளிரவானாலும் வாசற்கதவை விரியத் திறந்து வைத்துக்கொண்டு வெளியே இருட்டை எந்தவித பயமும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருப்பதும் என்னுடைய மூத்த மகளுடைய விபரீத வழக்கங்களுள் ஒன்று. நானோ என் மனைவியோ இதைப் பார்த்துவிட்டு கதவை அடைக்கச் சென்றாலும் அழுகைதான். ‘சரி போய்த் தொலை’ என்று வாசல் விளக்கையும் விடிய விடிய எரிய வைத்துவிட்டு செல்வதைத் தவிர வேறு வழி தெரியாமல் விழிப்போம் நானும் என் மனைவியும். ‘இதென்னடி பழக்கம்னு மண்டையில ரெண்டு போட்டு படுக்க வைக்கறத விட்டுட்டு என்னடி பிள்ளைய வளக்கறே?’ என்பார் என் மாமியார்.

அப்படி ஒரு நாள் கதவைத் திறந்துவைத்துவிட்டு நான் என்னுடைய படுக்கையில் சென்று விழ என் மகளின் குரல், ‘அப்பா வெளியில ஒரு சிங்கம் வந்து நின்னுக்கிட்டு நம்ம பாப்பாவ கேக்குதுப்பா..’

பதறியடித்துக்கொண்டு நான், என் மனைவி, என் மாமியார் ஓடி சென்று  பயத்தில் அலறிக்கொண்டிருந்த என் மகளை வாரியணைத்துக்கொண்டு வாசற்கதவை சாத்திவிட்டு அவளை சுவாசப்படுத்திவிட்டு படுக்கச் செல்ல விடியற்காலை இரண்டு மணியாகிவிட்டது..

‘விடிஞ்சதும் முதல் வேலையா உம் மாப்பிள்ளக்கிட்ட சொல்லி வேற வீட்ட பாக்கச் சொல்லு. நல்லா வீட்ட பார்த்து வந்தீங்க. ஏதோ நம்ம ஊர் மைய வாடியில (மயானத்துல) இருக்கறா மாதிரி இருக்கு.’ என்றார் என் மாமியார்..

தொடரும்..


23 comments:

துளசி கோபால் said...

என்ன சிங்கம் வந்து பாப்பாவைக் கேக்குதா? ஐய்யோ என்ன ஆச்சு?
எதுக்குங்க இப்படி நடுங்க வைக்கறிங்க?

G.Ragavan said...

சார், நடுநிசில பொறந்தா அந்த வேளைக்கு எழுந்து உக்காந்துக்கிருவாங்களா! ம்ம்ம்...புதுச்செய்திதான் எனக்கு.

சார். முனியாவது கினியாவது.....அதெல்லாம் ஒன்னும் கெடையாது.

இருட்டைப் பார்த்து உக்காந்திருந்தா அதப் பத்தி பயமில்லைன்னு நினைச்சிக்கனும். இல்லைன்னா பேச்சுக் குடுத்து அங்க என்னம்மா பாக்குறைன்னு கேக்கனும்.

சிங்கம் வந்த கதை....சின்ன வயசுல புக்குல கத படிச்சிட்டு...அதுல சொல்ற மாதிரி நான் நெறைய சொல்லீருக்கேன். யாராவது குழந்தை கிட்ட "ரொம்ப அழுதா சிங்கம் பிடிச்சிட்டுப் போயிரும்னு" சொல்லீருக்கலாம். அதுனால சின்னக் குழந்த அழுகுறப்போ அப்படிச் சொல்லீருக்கலாம்.

இதெல்லாம் மென்மையா அணுக வேண்டிய சின்னப் பிரச்சனைகள்.

ஜோ / Joe said...

மகாநதி படமும் 'பேய்கள நம்பாத பிஞ்சுல வெம்பாத' பாட்டும் தான் ஞாபகத்துக்கு வருது!

ஜோ / Joe said...

ராகவன்,
ஆனாலும் அநியாயத்துக்கு அனுபவம் உள்ள மாதிரி சொல்லுறீங்க.. நீங்க ஏதோ 8 புள்ள பெத்த மாதிரியும் ஜோசப் சார் இப்போ தான் கல்யாண வயசுல இருக்க மாதிரியும்..குழம்பிட்டேன்..ஹா..ஹா

tbr.joseph said...

துளசி, ராகவன், ஜோ,

ஒரு மீட்டிங்கல இருக்கேன். மூனு மணியாவும்.. பதில் போடறதுக்கு.. பை..

G.Ragavan said...

// ராகவன்,
ஆனாலும் அநியாயத்துக்கு அனுபவம் உள்ள மாதிரி சொல்லுறீங்க.. நீங்க ஏதோ 8 புள்ள பெத்த மாதிரியும் ஜோசப் சார் இப்போ தான் கல்யாண வயசுல இருக்க மாதிரியும்..குழம்பிட்டேன்..ஹா..ஹா //

என்ன ஜோ..இப்பிடிச் சொல்லீட்டீங்க...பெத்தால்தான் பிள்ளையா....எத்தனை கதாபாத்திரங்களை நான் பெத்திருக்கேன். அவங்கள வளக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்.
:-)

அப்படியில்லீங்க...ஒரு பிரச்சனைன்னா...எப்படிப் பாக்கனுமுன்னு கொஞ்சோல அறிவிருக்கு. அத வெச்சுச் சொன்னேன்.

இன்னும் என்னையக் கேட்டா...ஜோசப் சார் பாப்பாவைத் தூக்கிக்கிட்டு உள்ள ஓடுனதே தப்பு. அவருடைய மனைவிக்கு இருந்த அந்த முனிப்பயத்துல இவருக்கும் கொஞ்சம் இருந்திருக்குன்னு நெனைக்கிறேன்.

பாப்பா கிட்ட..அப்படியா வா அந்தச் சிங்கத்தப் பாக்கலாம்னு சொன்னா...பாப்பா பொய் சொன்னென்னு ஒத்துக்கிற வாய்ப்பு இருக்கு. இல்லைன்னா...சிங்கத்தக் காணோமே....அப்படீன்னு பேச்சுக் குடுத்து விஷயத்தக் கண்டு பிடிக்கலாம்.

டி ராஜ்/ DRaj said...

சார்:
பேங்க் விஷயங்கள் இல்லாமல் குழந்தைகள் குறித்த இந்த பதிவு ஒரு மாறுதலாகவும் நன்றாகவும் இருந்தது. :)
ராஜ்

ஜோ / Joe said...

ராகவன்,
தெரியும்..சும்மா தமாசு.

நீங்க சொன்ன மாதிரி ஜோசப் சார் மகளை தோள்ல போட்டுகிட்டு "சின்ன பொண்ணே! சின்னப் பொண்ணே சேதி கேளம்மா..நான் சொல்லப்போகும் வார்த்தையை நல்லா எண்ணிப்பாரம்மா!...

வேப்பமர உச்சியில் நிண்ணு பேய் ஒண்ணு ஆடுதுண்ணு விளையாடப்போகும் போது சொல்லி வைப்பாங்க .உன் வீரத்தை கொழுந்துலயே கிள்ளி வைப்பாங்க ..வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே" -அப்படிண்ணு நம்ம வாத்தியார் கணக்கா பாடியிருக்கணும்-னு சொல்ல வர்றீங்க .ஹி.ஹி

tbr.joseph said...

எதுக்குங்க இப்படி நடுங்க வைக்கறிங்க? //

சாரிங்க துளசி..

tbr.joseph said...

அதுனால சின்னக் குழந்த அழுகுறப்போ அப்படிச் சொல்லீருக்கலாம்.//

இப்ப தோணுது.. ஆனா அப்போ மாமியாரும், என் மனைவியும் பதறிப்போயி பாப்பாவ அங்கருந்து தூக்கிட்டு ஓடுனும்னுதான் தோனிச்சே தவிர யாருக்கும் அவள அந்த நடுநிசி நேரத்துல வெளிய கூட்டிக்கிட்டு போயி அவ சொன்னத பொய்யின்னு நிருபீக்கணும்னு தோனலை.. அதுவுமில்லாம அவளோட வயசு அப்போ ரெண்டரை.. அந்த வயசுல நாம இல்லைன்னு சொன்னா புரியும்னு நினைக்கிறீங்க>சார். முனியாவது கினியாவது.....அதெல்லாம் ஒன்னும் கெடையாது.//

நானும் தனியா அந்த வீட்ல ஒரு ரெண்டு மாசம் இருந்திருக்கேன்.

ஒரேயொரு தடவை கதவ பூட்டிக்கிட்டு போவேண்டாமேன்னு எங்க பேங்க் வாட்ச்மேனை ராத்திரியில படுத்துக்குங்கன்னு சாவிய குடுத்தேன்.

ரெண்டாம் நாளே அவர் ஊருக்கு போன் பண்ணி சார் நான் நேத்து ராத்திரி தூங்கிட்டிருந்தப்போ யாரோ என் மேல வந்து படுத்தாப்பல இருந்திச்சி சார். என்னால தனியா உங்க வீட்ல படுக்க முடியாது சார்னிட்டார்.

இதெப்படி இருக்கு?

tbr.joseph said...

மகாநதி படமும் 'பேய்கள நம்பாத பிஞ்சுல வெம்பாத' பாட்டும் தான் ஞாபகத்துக்கு வருது! //

கரெக்ட் ஜோ.. ஆனா அந்த பாட்டுலயே அந்த பாட்டிம்மா திடீர்னு ஜன்னலுக்கு வெளிய நின்னுக்கிட்டு கையில வேப்பிலையோட ஆடுறது பார்த்துட்டு கமலும் நிசமாவே பயந்து போறாமாதிரி வருமே..

tbr.joseph said...

பாப்பா பொய் சொன்னென்னு ஒத்துக்கிற வாய்ப்பு இருக்கு. //

ரெண்டரை வயசு பொண்ணுக்கா?

கொஞ்சம் கஷ்டம்தான் ராகவன்..

tbr.joseph said...

பேங்க் விஷயங்கள் இல்லாமல் குழந்தைகள் குறித்த இந்த பதிவு ஒரு மாறுதலாகவும் நன்றாகவும் இருந்தது//

ஆமாங்க ராஜ். அதுவுமில்லாம தஞ்சை வங்கி அனுபவங்கள் ஒருமாதிரியா முடிஞ்சிருச்சி..

இன்னும் ஒரேயொரு பதிவுதான்.. அப்புறம் அடுத்த ஊர்..

tbr.joseph said...

அப்படிண்ணு நம்ம வாத்தியார் கணக்கா பாடியிருக்கணும்-னு சொல்ல வர்றீங்க .ஹி.ஹி //

நட்ட நடு ராத்திரியிலே நான் ஒருவேளை அப்படி செஞ்சிருந்தா என் மாமியாரே மாப்ளைக்கு என்னமோ ஆயிருச்சின்னு பொண்ணையும் பேத்திங்களையும் கூட்டிக்கிட்டு அடுத்த நாளே புறப்பட்டு போயிருந்தாலும் போயிருப்பாங்க..

G.Ragavan said...

// வேப்பமர உச்சியில் நிண்ணு பேய் ஒண்ணு ஆடுதுண்ணு விளையாடப்போகும் போது சொல்லி வைப்பாங்க .உன் வீரத்தை கொழுந்துலயே கிள்ளி வைப்பாங்க ..வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே" -அப்படிண்ணு நம்ம வாத்தியார் கணக்கா பாடியிருக்கணும்-னு சொல்ல வர்றீங்க .ஹி.ஹி //

வேறய வெனையே வேண்டாம் ஜோ....அப்புறம் பாப்பா வந்து...அப்பா அப்பா வெளிய ஒரு சிங்கம் வந்து ஒங்களக் கேக்குதுப்பான்னு சொல்லீருக்க வாய்ப்பு இருக்கு. :-)

G.Ragavan said...

// அவ சொன்னத பொய்யின்னு நிருபீக்கணும்னு தோனலை.. அதுவுமில்லாம அவளோட வயசு அப்போ ரெண்டரை.. அந்த வயசுல நாம இல்லைன்னு சொன்னா புரியும்னு நினைக்கிறீங்க> //

நிச்சயம் புரியும். அதுவுமில்லாம நீங்க பாப்பா சொல்றது பொய்யின்னு நிரூபிக்கக் கூடாது. கூட்டீட்டுப் போய் எங்க ஏதுன்னு கேட்டாலே போதும்..கொஞ்சம் கொஞ்சமா ஒளறி உண்மை வெளிய வந்துரும்.

// ரெண்டாம் நாளே அவர் ஊருக்கு போன் பண்ணி சார் நான் நேத்து ராத்திரி தூங்கிட்டிருந்தப்போ யாரோ என் மேல வந்து படுத்தாப்பல இருந்திச்சி சார். என்னால தனியா உங்க வீட்ல படுக்க முடியாது சார்னிட்டார்.

இதெப்படி இருக்கு? //

சார். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நம்புனா அருணகிரி சிரிப்பாரு. மயிலார் கொத்துவாரு.

ஆனாலும் ஒவ்வொரு அனுபவங்களுக்குக் காரணங்கள் தெரியாமத்தான் போகுது....

sivagnanamji(#16342789) said...

----------------------------------
***********************************
vedikkaya padichuttu magizchiya SOORIYAN pakkam pona ange SOORIYAN 14 vandhu mirattudhu
ennada padicha madhiri irukke nu tople partha sooriyan14 (JAN)jolikkudhu.,,en ippadi?
***********************************-----------------------------------

tbr.joseph said...

ஆனாலும் ஒவ்வொரு அனுபவங்களுக்குக் காரணங்கள் தெரியாமத்தான் போகுது....

கரெக்ட். சில அனுபவங்கள் நமக்கு ஏற்படலைன்னாலும் மத்தவங்களுக்கு ஏற்பட்டதா சொல்லும்போது நாம வாயடைச்சித்தான் நிக்க வேண்டியிருக்குது..

நாளைய எப்பிசோட படிச்சிட்டு சொல்லுங்க..

நடந்ததுக்கு என்ன காரணம்னு நானும் ரொம்ப காலமா மலைச்சிப் போய் நின்னேன்..

tbr.joseph said...

வாங்க ஜி!

அதத்தான் நானும் பார்த்துட்டு முளிச்சேன். எப்பவோ எழுதுனது இப்ப வந்து முதல்ல நிக்குதேன்னு..

ஏதாச்சும் ஆவி வேலையா இருக்குமோ.. இருக்கும்.. யார் கண்டா? ஹி, ஹி.

மணியன் said...

ஜோசஃப், எல்லோருக்கும் நிகழும் சம்பவங்கள்தான். அதனை கண்ணெதிரே கொணர்வதில்தான் ஒரு எழுத்தாளனின் வண்ணம் வெளிப்படுகிறது. அழகாக எழுதியுள்ளீர்கள்.

பழூர் கார்த்தி said...

வணக்கம் ஜோசப்.. ரொம்ப நாள் கழிச்சி இன்னிக்குதான் உங்க வலைப்பக்கத்துக்கு வந்திருக்கேன்.. இந்த பதிவு நல்லா, மாறுதலா எழுதியிருக்கீங்க..

//எல்லோருக்கும் நிகழும் சம்பவங்கள்தான். அதனை கண்ணெதிரே கொணர்வதில்தான் ஒரு எழுத்தாளனின் வண்ணம் வெளிப்படுகிறது. அழகாக எழுதியுள்ளீர்கள்.//
இதனை முற்றிலும் வழிமொழிகிறேன்..
பாராட்டுக்கள் !!!

tbr.joseph said...

அழகாக எழுதியுள்ளீர்கள்.

நன்றி மணியன்

tbr.joseph said...

இந்த பதிவு நல்லா, மாறுதலா எழுதியிருக்கீங்க..//

நன்றி சோ.பையன்