22 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 102

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த எனக்கு காய்கறிகளை மார்கெட்டில் பார்த்துதான் பழக்கம். அதுவும் சென்னையில் நான் இருந்த பகுதியில் காய்கறிகள் வீட்டு வாசலுக்கே வந்துவிடுவதுண்டு. ஆகவே பால்கனியில் ரோஜா செடிகளை வளர்ப்பதைத் தவிர விவசாயம் என்றால் என்ன என்பதை சென்னை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான விவசாயிகள் நிகழ்ச்சியில்தான் பார்த்திருக்கிறேன்.

ஆனால் தஞ்சையில் நாங்கள் இறுதியாய் குடிபுகுந்த வீட்டைச் சுற்றிலும் இருந்த காலி இடம் என் மனைவிக்கு நாமும் காய்கறிகளை வீட்டிலேயே வளர்த்தாலென்ன என்று ஒரு சபலத்தை ஏற்படுத்தியது. நாங்கள் அதற்கு முன்பு குடியிருந்த வீட்டின் பின்புறத்தில் இருந்த தோட்டத்தில் தக்காளி, வெண்டை, புடலை, அவரை போன்ற காய்கறி செடிகள் செழித்து வளர்ந்திருந்ததைப் பார்த்ததிலிருந்தே என் மனைவிக்கு இந்த யோசனைதான். ‘நாமளும் இந்த மாதிரி வீட்லயே நமக்கு தேவையான காய்கறிகளை வளர்த்தா எவ்வளவு நல்லாருக்கும்?’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். அது புதுவீட்டுக்கு வந்து வீட்டைச் சுற்றிலும் இருந்த வெற்று இடத்தைப் பார்த்ததிலிருந்து இன்னும் கூடியது.

‘இங்க பார், நீ நினைக்கறா மாதிரி அது ஒன்னும் அவ்வளவு ஈசி இல்லை. விதைய போட்டுட்டு தண்ணிய ஊத்திட்டா செடி தன்னால வளந்துரும்னு நினைச்சிக்கிட்டிருக்கே. அதுக்கு இன்னும் என்னென்னமோ செய்யணும். ரெண்டு வயசு பொண்ண வச்சிக்கிட்டு சமாளிக்கறதுக்கே உனக்கு நேரம் போறலை. இதுல இத வேற இழுத்துப் போட்டுக்காத.. மிஞ்சிப்போனா இன்னும் ரெண்டு மூனு வாரத்துல பிரசவத்துக்கு ஊருக்கு போவேண்டிய ஆளு நீ. இப்ப இந்த வேலை தேவைதானா? செடிய நடுறேன், தண்ணிய ஊத்துறேன் பேர்வழின்னு கீழ விழுந்து ஏதாச்சும் ஏடாகூடம் பண்ணிக்காதே. அப்புறம் உங்கம்மாவுக்கு நான் பதில் சொல்லமுடியாது’ என்று நான் அடித்த லெக்சர் மேடத்தின் காதில் விழுந்தால்தானே.

அவ்வார இறுதியில் சனிக்கிழமை அரைநாள் என்பதால் மதியம் உணவுக்கு வீட்டுக்கு சென்றபோது ஒரு வயசானவர் வீட்டுக்கு பின்புறம் இருந்த இடத்தில் மும்முரமாக மண்வெட்டியால் கொத்தி சீர்படுத்திக்கொண்டிருந்தார்.

நிறைமாத கர்ப்பிணியாய் இருந்த என் மனைவியோ நான் வந்து நிற்பதையும் கவனியாமல் தோட்டக்காரரை ‘அங்க கொத்துங்க. இப்படி செய்ங்க, அப்படி செய்ங்க’ என்று மிரட்டிக்கொண்டிருக்க அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த செம்மண்ணில் என் மகள் புரண்டு விளையாடி செக்க செவேல் என்று நிறம் மாறியிருந்தாள்.

சரி, மூன்றாவது மனிதர் இருக்கும் நேரத்தில் பிரச்சினை செய்யவேண்டாம் என்று நினைத்த நான் என் மகளை அள்ளி எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தேன். அடுத்த பத்து நிமிடம் குழந்தையைக் கதற, கதற அழுத்தி தேய்த்து குளிப்பாட்டி அவளை பழைய நிறத்துக்கு மாற்றி எடுப்பதற்குள் போதும், போதும் என்றாகிவிட்டது.

குழந்தையின் அழுகுரல் கேட்டு வீட்டுக்குள் ஓடி வந்த என் மனைவி. ‘என்னங்க.. நீங்க எப்ப வந்தீங்க? வந்ததும் வராததுமா பாப்பாவ ஏன் குளிப்பாட்டறீங்க?’ என்று கேட்டபோதுதான் விளங்கியது அவள் மண்ணில் புரண்டு விளையாடியதைக் கூட அவர் கவனிக்கவில்லையென்பது..

‘நல்லா இருக்கு, நீ குழந்தைய பார்த்துக்கற லட்சணம். நிலத்த கொத்தி எடுக்கறப்பவே இப்படீன்னா, இன்னும் விதைய போட்டு வளர்க்க ஆரம்பிச்சா உம் பொண்ணையே மறந்துருவே போலருக்கே.. அதுக்குத்தான் சொன்னேன் இந்த வேலையெல்லாம் வேணாம்னு.’ என்றேன் சற்றே கோபத்துடன்.

என்னுடைய கோபம் எப்போதுமே என் மனைவியிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. நான் கோபமாயிருக்கிறேன் என்று தெரிந்ததுமே அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றுவிடுவது அவருடைய டெக்னிக்.. ஃபயரிங் ரேஞ்சிலிருந்து விலகிப்போய்விட்டால் பிரச்சினையில்லையே?

‘இருங்க, அவர அனுப்பிச்சிட்டு வந்திடறேன்.’ என்றவாறு சென்றுவிட நானே சாப்பாடு மேசையில் எனக்கென எடுத்து வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டு முடித்தேன். சனிக்கிழமையென்றாலே சாப்பிட்டதும் ஒரு குட்டித்தூக்கம் போடுவது வழக்கம்.

குழந்தையை கட்டிலில் கிடத்தி தூங்க வைத்துவிட்டு அருகிலேயே படுத்தவன் அப்படியே உறங்கிப் போனேன். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து எழுந்தவன் வீட்டின் பின்புறத்திலிருந்து பேச்சுக் குரல் வரவே, ‘இன்னுமா அந்த ஆள் போகலை.’ என்று முனுமுனுத்தவாறு சென்று பார்த்தேன்.

என்னுடைய மனைவியின் மேற்பார்வையில் அந்த வயாதானவர் சுமார் இரண்டாயிரம் சதுர அடி நிலத்தை கொத்தி முடித்து சதுர, சதுரமாக நிலத்தை வகுந்து பாத்தி கட்டி விதைகளை தெளித்துக் கொண்டிருந்தார். பின்புற வாசலருகே கிடந்த காலி விதை பாக்கெட்டுகளை எடுத்துப் பார்த்தேன்..

முன்பிருந்த வீட்டில் நான் பார்த்த அதே தக்காளி, வெண்டை, கத்தரிக்காய், அவரை விதைகள்..

தோட்டத்தின் மூலையில் சுற்றுச்சுவரையொட்டி மூங்கிலாலான ஒரு சிறிய பந்தல் அவரை, புடலைக்கு தயாராக இருந்தது..

நான் பார்த்த பார்வையிலேயே என்னுடைய கோபத்தை புரிந்துக்கொண்ட என் மனைவி தோட்டக்காரரைப் பார்த்து கண்சாடைக் காட்டி, ‘சும்மா இருங்க. அவர் போட்டும், பேசிக்கலாம்.’ என்றார் குரலெழுப்பாமல்.

அவர் அடுத்த அரைமணியில் வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிச் செல்ல, என் மனைவி ‘நான் பிரசவத்துக்கு ஊருக்கு போகலை. நாம இப்ப பாக்கற நர்சிங் ஹோமுலயே பிரசவத்த வச்சிக்கலாம். எங்கம்மா இப்ப வீட்ல சும்மாத்தான இருக்காங்க. அவங்கள இங்க ஒரு ரெண்டு மாசத்துக்கு வரச்சொல்லிட்டா போச்சி.’ என்றார் சாவகாசமாக.

‘ஏன், இந்த காய்கறி விவசாயம் கெட்டுப் போயிரும்னா இங்கேயே பிரசவத்த பார்த்துக்கலாங்கறே? முதல் பிரசவத்துல ஊர்ல இருந்தப்பவே சரியான டைமுக்கு போகாம அவஸ்தைப் பட்டேன்னே. இப்ப ஊர் பேர் தெரியாத ஊர்ல உங்கம்மா வந்து சேர்றதுக்கு முன்னாலயே வலியெடுத்தா யார் உன்ன கூட்டிக்கிட்டு போறது? அதெல்லாம் ஒன்னும் வேணாம். அப்படியே இங்க பிரசவம் வச்சிக்கிட்டாலும் குழந்தைய பார்ப்பியா இத பார்ப்பியா?’

என்னுடைய எல்லா கேள்விக்கும் தயாராக ஒரு பதிலை வைத்திருந்த என் மனைவியிடம் இனியும் பேசி பலனில்லை என்பதை உணர்ந்த நான், ‘சரி. இப்பவே தூத்துக்குடிக்கு ஃபோன் போடு. உங்கம்மாவையே கேட்போம்.’ என்றேன்.

ஆனால் நான் நினைத்ததற்கு நேர் மாறாக என்னுடைய மாமியாரும், மாமனாரும் என்னுடைய மனைவியின் யோசனையை அப்படியே ஏற்றுக்கொள்ள, ‘நீங்க கவலைப்படாதீங்க மாப்பிள்ளை.. நான் அவ அம்மாவ நாளைக்கே அனுப்பி வைக்கிறேன். தஞ்சாவூர்லதான் மெடிக்கல் காலேஜே இருக்கே. அப்புறம் மருத்துவத்துக்கு என்ன பிரச்சினை.’ என்று என்னுடைய மாமனார் கூற என்னால் ஒன்றும் மறுத்துப் பேச முடியாமல் போனது.

‘சரி.. நீயாச்சி, உங்கம்மாவாச்சி எப்படியோ போங்க. அப்புறம் ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சி.. எங்கம்மாவுக்கு என்னால பதில் சொல்ல முடியாது. இப்பவே சொல்லிட்டேன்.’ என்ற எச்சரிக்கையுடன் முடித்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

அடுத்த நாளே வந்து சேர்ந்த என்னுடைய மாமியாரும் தோட்டத்தைப் பார்த்ததும், ‘அட எம்பொண்ணு கூட உருப்படியா ஒரு காரியத்த செஞ்சிருக்காளே.’ என்று வியந்து நிற்க ‘பார்த்தீங்களா நீங்களும் இருக்கீங்களே?’ என்பதுபோல என்னைப் பார்த்தார் என் மனைவி.

அடுத்த இரண்டு நாட்களில் தோட்டக்காரர் வந்திருந்து தண்ணீர் ஊற்றுவதிலிருந்து, களை எடுப்பது, தக்காளி செடி வளர்ந்து வரும்போது வளைந்துவிடாமல் இருக்க என்ன செய்வது என விலாவாரியாக சொல்ல சொல்ல என் மனைவியும் மாமியாரும் படு சீரியசாக குறித்துக்கொண்டனர்.

விதைகள் முளைக்க ஆரம்பித்து, அடுத்த இரண்டு வாரங்களில் குட்டி, குட்டியாய் செடிகள் முளைக்க ஆரம்பிக்க, இதெல்லாம் தேவைதானா என்று நினைத்த என்னையும் ஒரு இனம் புரியாத ஆர்வம் பற்றிக்கொண்டது. என் இரண்டரை வயது மகளுக்கோ கேட்கவே வேண்டாம். நேரம் காலம் தெரியாமல் தோட்டத்தை விட்டு வீட்டுக்குள் வரவே மாட்டேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தாள்.

ஆக, அன்று துவங்கிய காய்கறி விவசாயம் கன ஜோராக அடுத்த ஒரு வருடம் நீடித்தது. நான் முற்றிலும் எதிர்பார்க்காத அளவுக்கு விளைச்சல் அமோகமாக விளைய நாங்கள் உபயோகித்ததுபோக என்னுடைய கிளையிலிருந்த மூன்று அலுவலர்கள், என்னுடைய அலுவலக உரிமையாளர்கள் குடும்பங்களுக்கும் சப்ளை போனது..

***

நான் எதிர்பார்த்தது போலவே என்னுடைய மனைவிக்கு மருத்துவர் குறித்திருந்த நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே பிரசவ வலி வர அலுவலகத்திலிருந்த நான் உடனே என்னுடைய உரிமையாளரின் வாகனத்தில் விரைந்து சென்று அவரை நான் தங்கியிருந்த வீட்டிற்கு மிக அருகாமையிலிருந்த மருத்துவமனையிலேயே சேர்த்தேன்.

என்னுடைய மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த அதே நேரத்தில்தான் நடிகர் திலகத்தின் மகளும் முதல் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருடைய மூத்த சகோதரர் நடிகர் பிரபு அவ்வளவாக பிரபலம் அடைந்திருக்கவில்லை. இருந்தாலும் நடிகர் திலகத்தின் மகனாயிற்றே.. அவருடைய தங்கை அனுமதிக்கப்பட்டிருந்த அறையைச் சுற்றி எப்போதும் ஒரு சிறு கூட்டம் அலைந்துக்கொண்டிருக்கும்..

என்னுடைய மனைவி அனுமதிக்கப்பட்ட அன்று இரவே பிரசவம் எந்தவித பிரச்சினையுமில்லாமல் நடந்தது. என்னுடைய மூத்த மகளைபோலவே இரண்டாவதாக பிறந்த மகளும் என்னுடைய நிறத்தைக் கொண்டிராமல் என் மனைவி நிறத்தில் இருந்தது என் மனைவியைவிட மாமியாருக்கு மிகவும் திருப்தி..

என்னுடய மாமனார், பள்ளியில் படிக்கும் இரண்டு கொழுந்தன்மார்களும், என்னுடைய மாமியாருடைய தங்கைகளும் அடுத்த நாளே வந்து சேர என் வீட்டில் ஒரு குட்டி கூட்டத்தால் கலகலத்தது..


தொடரும்..

10 comments:

துளசி கோபால் said...

//என்னுடைய கோபம் எப்போதுமே என் மனைவியிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ......//

உண்மையை ஒத்துக்க வேண்டிய நேரம் வந்துருச்சு!:-)))) வீட்டுக்கு வீடு வாசப்படிங்களா இருக்கேங்க.
அது எப்படிங்க?

டி ராஜ்/ DRaj said...

எல்லா பெண்களுக்கு செடி வளர்ப்பதில் ஒரு தணியாத ஆர்வமிருக்கும் போல. :) and most men (like me) play spoil sport ;)

//அடுத்த நாளே வந்து சேர்ந்த என்னுடைய மாமியார்//
//என் வீட்டில் ஒரு குட்டி கூட்டத்தால் கலகலத்தது..//

இதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கனும் சார் :)

sivagnanamji(#16342789) said...

kolundhanmar= you mean brother in laws?

ஜோ / Joe said...

ஹி..ஹி..ஹி..நல்லாயிருக்கு இந்த அத்தியாயம்.

tbr.joseph said...

என்னன்னே தெரியலீங்க துளசி,

பின்னூட்டம் பெட்டி ரொம்பவும் தொல்லை குடுத்திருச்சி இன்னைக்கி.

பின்னூட்டங்களுக்கு பதில் போடறது முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கேன்.. திறந்தாத்தானே..

உண்மையை ஒத்துக்க வேண்டிய நேரம் வந்துருச்சு!//

உண்மைன்னா என்னைக்காவது ஒருநா ஒத்துக்கத்தானே வேணும்..

வீட்டுக்கு வீடு வாசப்படின்னா.. எல்லா வீட்லயும் உங்க ராச்சியம்தானே.. என்னங்க?:-)

tbr.joseph said...

எல்லா பெண்களுக்கு செடி வளர்ப்பதில் ஒரு தணியாத ஆர்வமிருக்கும் போல. and most men (like me) play spoil sport//

கரெக்டா சொன்னீங்க ராஜ்..

இதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கனும் சார் //

ஆமாங்க.. நாட்ட விட்டு பொழைக்க போனவங்க எல்லாருக்குமே இந்த ஏக்கம் இருக்கத்தான் செய்யும். மும்பையிலருந்த காலத்துல எனக்கும் இப்படி தோணும்..

G.Ragavan said...

காய்கறித் தோட்டம்னா எனக்கும் ரொம்பப் பிடிக்கும். தூத்துக்குடீல சின்ன வயசுல வீட்டுக்குப் பின்னாடி முருங்க மரம், தொட்டிகள்ள கீரப்பாத்தி, மஞ்சக் கனகாம்பரம், செம்பருத்தி அது இதுன்னு காடா இருக்கும். அதப் பாத்தாலே ஒரு சந்தோஷம் வரும்.

கோயில்பட்டீல, கரூர்ல எல்லாம் வாழ, தக்காளீன்னு, அவரக்காய், போட்டிருக்கோம். அது ஒரு நல்ல பொழுது போக்கு. அதே போல நல்ல விளைச்சலும் கூட.

கோயில்பட்டீல வெண்டக்கக்கா காச்சிக் காச்சிக் கொட்டுச்சு...வாழைகள் கொலைகொலையாத் தள்ளுச்சு....மாதுளை கூட வெச்சிருந்தோம்....அது ஒன்னுதான் சரியா வரலை...மத்ததெல்லாம் நல்லா வந்துச்சு...

உங்க மனைவிக்கு ஒரு Hats Off

tbr.joseph said...

வாங்க ஜி..

கொழுந்தன்=பிரதர்ஸ்-இன் - லா!!

வேற ஏதாச்சும் இருக்கா என்ன?

மனைவியோட அண்ணன்னா மச்சான், தம்பின்னா கொழுந்தன்..

tbr.joseph said...

வாங்க ஜோ,

ஹி..ஹி..ஹி..நல்லாயிருக்கு இந்த அத்தியாயம். //

அப்பாடா.. தாங்ஸ் :-))

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அடடா.. வீட்டுத் தோட்டக்கலைய உங்க கிட்டவே படிச்சிருக்கலாம் போலருக்கே :-()