20 March 2006

திரும்பிப் பார்க்கிறேன் 101

சட்டென்று பொங்கி எழுந்த கோபத்தில், ‘உங்க கிட்ட குடுக்க முடியாதுங்க. இத கொண்டு வந்து கொடுத்த ஆள்கிட்டதான் குடுக்க முடியும். அவர வரச்சொல்லுங்க’ என்று விரட்டியடித்தேன் என்னுடைய அந்த செயலும் வில்லங்கத்தை விலைக்கு வாங்கப்போகிறது என்பது தெரியாமல்.

வில்லங்கமான ஆட்களை எதிர்கொள்ளும்போது ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பது அனுபவத்தில்தான் தெரியவரும்.

எனக்கு அப்போதிய அனுபவம் இல்லை என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு இச்சம்பவம்.

அப்போக்குவரத்து நிறுவனத்தின் முதலாளி எத்தனை எத்தன் என்பதை நான் சரிவர அறிந்திருக்கவில்லை. அத்துடன் அவருடைய செல்வாக்கு எங்கெல்லாம் பரவி இருந்தது என்பதையும் பிறகுதான் அறிந்துக்கொண்டேன்.

என் அலுவலகம் தேடிவந்த வேலையாளிடம் அவருடைய பத்திரத்தைக் கொடுக்க முடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டு நான் என்னுடைய அலுவலைப் பார்க்க ஆரம்பித்தேன்.

அலுவலகம் முடியும் நேரத்தில் என்னைத் தேடிக்கொண்டு என்னுடைய பகுதியிலிருந்த காவல் நிலையத்திலிருந்து ஒரு கான்ஸ்டபிள் வந்தார்.

சாதாரணமாக என்னுடைய கிளையில் தங்க நகைகள் மீது கடன் பெற காவல்துறையினர் வருவதுண்டு என்பதால் நானோ அல்லது என்னுடைய ஊழியர்களோ அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அன்று வந்தவரும் ஏற்கனவே என்னுடைய கிளைக்கு வந்து அறிமுகமானவர்தான்.

நானும் காசாளரும் வங்கி கணக்கு வழக்குகளையெல்லாம் முடித்துவிட்டு ரொக்கத்தையும் அன்று ஈடு வைக்கப்பட்ட தங்க நகைகளையும் பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு அப்போதுதான் வெளியில் வந்து நின்றுகொண்டிருந்தோம்.

அவரை புன்னகையுடன் வரவேற்ற என்னுடைய காசாளர், ‘என்ன சார் கோல்ட் லோனா. இன்னைக்கி முடியாதே சார்.’ என்றார்.

அவரோ மிகவும் சீரியசாக, ‘சார்.. நா அதுக்கு வரலை. மேனேஜர் சார்கிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயமா பேசணும்.’ என்றார்.

நான், ‘என்ன சார் சொல்லுங்க?’ என்றேன்.

அவர் சற்றே தயங்கி, ‘சார் உங்க கேபின்ல போயி பேசலாம்னு நினைக்கிறேன். விஷயம் கொஞ்சம் சிக்கலானது.’ என்றார்.

நானும் காசாளரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.

‘சரி சார். உள்ள வாங்க.’ என்று கூறிவிட்டு காசாளரைப் பார்த்து, ‘நீங்களும் வாங்க.’ என்று கண்ணால் சாடை காட்டிவிட்டு அவரை என்னுடைய காபினுக்கு அழைத்துச் சென்று அமர்ந்தேன்.

என்னுடைய காசாளரும் அறைக்குள் நுழைவதைப் பார்த்த கான்ஸ்டபிள் சற்றே சங்கடப்பட்டார். ‘சார் உங்கக் கிட்ட தனியா பேசலாம்னு..’

நான் அவரையும் என்னுடைய காசாளரையும் மாறி, மாறி பார்த்தேன். காசாளர் என்னுடைய பார்வையை தவறாக புரிந்துக்கொண்டு, ‘அப்போ நான் வெளிய நிக்கறேன் சார், நீங்க பேசிட்டு வாங்க.’ என்றவாறு அறையை விட்டு வெளியேற முயன்றார்.

நான் அவரை தடுத்தி நிறுத்திவிட்டு கான்ஸ்டபிளைப் பார்த்து, ‘சார் நீங்க சொல்ல வந்தத தாராளமா சொல்லலாம். இவர் எனக்கு அசிஸ்டெண்ட். இவருக்கு தெரியாத ரகசியம் ஒன்னும் இல்லை.’ என்றேன்.

அவர் சற்று தயங்கிவிட்டு, ‘சார் இன்னைக்கி காலைல ----------- டிரான்ஸ்போர்ட் ஓனர் அவரோட ஆள அனுப்பி ஏதோ டாக்குமெண்ட கேட்டாராம். நீங்க அதெல்லாம் குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டீங்களாமே சார்.’

நான் வியப்புடன் என்னுடைய காசாளரைப் பார்த்தேன். ‘ஆமாம் சார். ஏன்னா அந்த டாக்குமெண்ட முதல்ல கொண்டு வந்த ஆள் வந்தாத்தான் குடுக்க முடியும்னு சார் சொல்லியனுப்புனார். அதுக்கென்ன இப்போ.’ என்றார் அவர் சற்றே கோபத்துடன்.

கான்ஸ்டபிள் அவரைப் பார்த்து, ‘சார்.. நான் மேனேஜர்கிட்ட பேசிட்டுப் போக வந்திருக்கேன். நீங்க சும்மா கேட்டுக்கிட்டிருங்க.’ என்றார் பதிலுக்கு சூடாக.

நான் இருவரையும் கையமர்த்திவிட்டு, ‘சார்.. அவர் கோபத்தோட சொன்னாலும் அதான் நடந்தது. அந்த பத்திரத்த யார் கொண்டு வந்து கொடுத்தாங்களோ அவர் வந்தாத்தான் கொடுக்க முடியும்.’ என்றேன். ‘நான் கேக்கறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க. இதுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்னு நான் தெரிஞ்சிக்கலாமா சார்?’

‘அந்த டிரான்ஸ்போர்ட் முதலாளி உங்க மேல ரிட்டன் கம்ப்ளெய்ண்ட் குடுத்துருக்கார் சார். இல்லன்னா நாங்க ஏன் தலையிடறோம்?’ என்றார் உரத்த குரலில்.

குறிக்கிட முயன்ற என்னுடைய காசாளரை தடுத்து நிறுத்திய நான், ‘என்னன்னு சார் கம்ப்ளெய்ண்ட்?’ என்றேன்.

‘நீங்க அவரோட சொத்து பத்திரத்தை சட்ட விரோதமா வச்சிக்கிட்டிருக்கிறீங்களாம். அவர் அந்த சொத்த விக்க தீர்மானிச்சிருக்கறதுனால அது உடனே வேணுமாம். வில்லங்கம் பண்ணாம குடுத்துருங்க சார். அது பெரிய இடம்.. உங்களுக்கேன் வம்பு?’

எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. என்ன அக்கிரமம்! போலியான ஒரு பெயரைக் கொடுத்து ஒரு வங்கியையே ஏமாற்ற நினைத்த ஒருவர் கொடுத்த புகாருக்கு அடிபணிந்துவிடச் சொல்லி சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய காவல்துறையே அது பெரிய இடம், உங்களுக்கேன் வம்பு என்று பாதிக்கப்பட்ட என்னை பயமுறுத்துகிறது..

சட்டென்று மனதில் ஒரு யோசனை தோன்ற, ‘சார் ஒரு நிமிஷம் வெளியே வெய்ட் பண்ண முடியுமா? நான் எங்க பேங்க வக்கீல்கிட்ட பேசணும்.’ என்றேன்.

அவர் எரிச்சலுடன் என்னைப் பார்த்தார். ‘எதுக்கு வக்கில், கோர்ட்டுன்னு யோசிக்கறீங்க? முதல்ல நீங்க யாரு, யார்கிட்ட மோதறீங்கன்னு தெரிஞ்சிக்குங்க. வக்கீல்ங்க சொல்லிட்டு போயிருவாங்க. அப்புறம் மாட்டிக்கிட்டு அவஸ்தை படப்போறது நீங்க. பேசாம காதும், காதும் வச்சா மாதிரி அந்த பத்திரத்தை எங்கிட்ட குடுத்துறுங்க.. இல்லையா, எங்கூட ஸ்டேஷன் வரைக்கும் வந்து நீங்களே எங்க இன்ஸ்பெக்டர் அய்யாக்கிட்ட குடுத்துருங்க. ஏன் சார் வம்ப விலைக்கு வாங்கறீங்க?’

நான் என்னுடைய காசாளரைப் பார்த்தேன். அவர் வேண்டாம் என்பது போல தலையை அசைக்க கான்ஸ்டபிள் கோபத்துடன் அவரைப் பார்த்தார். ‘யோவ் நீ எந்த ஊர் ஆள்யா? சார் கொடுக்கறேன்னாலும் நீ விடமாட்ட போலருக்கு? ஒழுங்கா வீடு போய் சேரணும்னு நெனப்பில்லையா? போய்யா உன் சோலிய பார்த்துக்கிட்டு..’ என்று இரைய அலுவலக நேரம் முடிந்தும் போகாமல் வெளியில் காத்துக்கொண்டிருந்த என்னுடைய மற்ற அலுவலர்களும் கதவைத் திறந்துக்கொண்டு என் அறைக்குள் நுழைந்தனர்.

விஷயம் விபரீதமாகும் முன்பு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நின¨ப்பில் நான், ‘சார்.. நீங்க பேசறது கொஞ்சம் கூட சரியில்லை. என் ஆஃபீஸ்குள்ள வந்து என்னோட கேஷியரையே நீங்க மிரட்டறீங்க. சரி, ஒரு நிமிஷம் இங்கேயே இருங்க. நான் வெளிய போயி வக்கீல்கிட்ட பேசிட்டு வந்திடறேன். அவர கன்சல்ட் பண்ணாம என்னால ஒன்னும் செய்யமுடியாது.’ என்றவாறு அறையை விட்டு வெளியேறி என்னுடைய வழக்கறிஞருக்கு ஃபோன் செய்தேன்.

அவர் நான் கூறியதை முழுவதும் கேட்டுவிட்டு, ‘சார்.. நீங்க ஒன்னும் பதற்றப்படாதீங்க. பத்திரம் எங்கிட்ட இருக்குன்னு சொல்லிருங்க. கான்ஸ்டபிள் சொன்னா மாதிரி இது கொஞ்சம் பெரிய இடம்தான். ரொம்ப கவனமா டீல் பண்ணனும். நீங்க ஃபோன அந்த கான்ஸ்டபிள்கிட்ட குடுங்க. நான் பேசறேன்.’ என்றார்.

நான் பேசிக்கொண்டிருந்த தொலைப்பேசியின் வேறொரு இணைப்பு என் அறைக்குள் இருந்ததால் நான் அவருடைய அழைப்பை அதற்கு மாற்றிவிட்டு என்னுடைய அறைக்குள் நுழைந்து கான்ஸ்டபிளிடம் ஒலிவாங்கியைக் கொடுத்தேன். ‘எங்க வக்கீல் லைன்ல இருக்கார். உங்களோட பேசணுமாம்.’

அவர் மனமில்லாமல் ஒலிவாங்கியை என்னிடமிருந்து வெடுக்கென்று பிடுங்கி, ‘யார் சார் நீங்க?’ என்றார் எரிச்சலுடன்.

மறுமுனையில் என்ன சொன்னாரோ அடுத்த நொடியே, ‘சார் நீங்கதான் இவங்க வக்கீலா? எனக்கு தெரியாம போயிருச்சி சார். தப்பா நினைச்சிக்காதீங்க.. ஒரு சின்ன சிக்கல்.. அதான்..’ என்று சங்கடத்துடன் இழுத்தார்.

அடுத்த ஐந்து நிமிடம், ‘சரி சார். ஆமா சார்.. சரி, சார்.’ என்று பலமுறை ஆமாம் போட்டுவிட்டு இறுதியில் ஒலிவாங்கியை என்னிடம் நீட்டியவரின் முகத்தில் முன்பிருந்த எரிச்சலும் கோபமும் சுத்தமாய் மறைந்திருந்தது! ‘சார் உங்ககிட்ட பேசணுமாம்..’

நான், ‘யெஸ் சார்.’ என்றேன் என்னுடைய வழக்கறிஞரிடம்..

‘சார் நான் நல்லதனமா சொல்லியிருக்கேன். நான் சொன்னா மாதிரியே பத்திரம் எங்கிட்டதான் இருக்கு மேனேஜர்கிட்ட பேசி பிரயோசனம் இல்லை. பத்திரம் வேணும்னா அந்த டிரான்ஸ்போர்ட் முதலாளி எங்கிட்ட வந்து வாங்கிக்கச் சொல்லுங்கன்னு சொல்லியிருக்கேன். என்ன சார் .. நான் சொன்னாப்பலே செஞ்சிரலாம் இல்லே. இல்லேன்னா உங்கள வீடுவரைக்கும் வந்து மிரட்டுனாலும் மிரட்டுவாங்க..’

எனக்கு அவர் கூறிய யோசனை அவ்வளவாக பிடிக்காவிட்டாலும் வேறு வழி தெரியாததால் சரி என்றேன் அரைமனதுடன்.

என்னுடைய குரலில் தொனித்த அதிருப்தி அவருக்கு புரிந்திருக்கவேண்டும். உடனே அவர், ‘சார் இதத்தவிர வேறு யோசனை உங்களுக்கு இருந்தா சொல்லுங்க. அப்படியே செஞ்சிரலாம்.’ என்றார்.

‘அப்படி இல்லை சார்.. என்கிட்ட இந்த பத்திரத்த கொடுத்த ஆள் நாளை மறுநாள் வந்து நான் கொடுத்த பத்திரத்த திருப்பி தாங்க சார்னு கேட்டா என்ன பண்றதுன்னுதான் யோசிக்கறேன்.’ என்றேன்.

அவர் சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு, ‘அப்ப என்ன செய்யலாம் சொல்லுங்க?’ என்றார். அவருடைய லோசனையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற அதிருப்தி குரலில் தெளிவாகத் தெரிந்தது..

இவரை விட்டால் இப்பிரச்சினையிலிருந்து சுமுகமாக என்னால் வெளிவர இயலாது என்று நினைத்தேன். ஒருவேளை சேட்டுக்கு இந்த டிரான்ஸ்போர்ட் முதலாளியைத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவரை நம்பிக்கொண்டு என்னுடைய வழக்கறிஞருடைய லோசனையை நிராகரித்தால் ஒருவேளை சேட்டுக்கு இந்த ஆளை தெரியாமல்போய் மீண்டும் இவரிடமே வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்றும் நினைத்தேன்.

சரி.. வருவது வரட்டும் என்ற நினைப்பில், ‘இல்லை சார் நீங்க சொன்னபடியே செய்யலாம்.ஆனால் அந்த ஓனர்கிட்டருந்து கைப்பட நாந்தான் என்னுடைய பத்திரத்தை என்னுடைய வேலையாள் மூலமாக கடன் பெறுவதற்காகக் கொடுத்தனுப்பினேன். எனக்கு இப்போது கடன் தேவையில்லை என்பதால் பத்திரத்தைத் திருப்பித் தர கேட்டுக்கொள்கிறேன்.’னு எங்க பேங்குக்கு அட்றஸ் பண்ணி ஒரு ரிக்வெஸ்ட்டும் பத்திரத்த அவர்கிட்ட கொடுக்கும்போது பத்திரத்தைப் பெற்றுக்கொண்டேன் என்று ஒரு ரசீதும் பெற்றுக்கொண்டால் நல்லாருக்கும்னு நினைக்கிறேன்.’ என்றேன்.

அவர் உடனே, ‘நல்ல ஐடியா, சார். அப்படியே செஞ்சிடறேன். நீங்க கவலைப்படாதீங்க.’ என்றார்.

நான் தொலைப்பேசியை துண்டித்துவிட்டு நிமிர கான்ஸ்டபிள் எழுந்து ‘நான் வரேன் சார். உங்க வக்கீல் சார் சொன்னத அப்படியே எங்க அய்யாகிட்ட சொல்லிடறேன்.இனி உங்க பாடு உங்க வக்கீல் பாடு. அப்புறம் ஏதாச்சும் வில்லங்கமா ஆச்சுதுன்னா எங்கக்கிட்ட வராதீங்க. சொல்லிட்டேன்.’ என்று வெளியேறினார்.

என்னுடைய காசாளர் என்னைப் பார்த்தார். ‘என்ன அக்கிரமம் பார்த்தீங்களா சார்? இது தஞ்சாவூர்தானான்னே ஆச்சரியமா இருக்கு. பம்பாய் மாஃபியாம்பாங்களே அந்த ரேஞ்சுக்கு நடக்குது பாருங்க?’ என்று சிரிக்க நானும் அறையிலிருந்த ஊழியர்களும் சிரித்தோம்.

உண்மைதான்.. அப்படித்தான் இருந்தது அந்த அனுபவம்!

தொடரும்..


9 comments:

துளசி கோபால் said...

தில்லுமுல்லு செய்யரவங்க பின்னாலே ஒரு படையே இருக்கு போல!

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
கடந்த 5 பதிவுகளை இன்று ஒன்றாக படித்தேன்..100-ஐ தாண்டியதற்கு வாழ்த்துக்கள்!

G.Ragavan said...

இந்த உலகத்துல ஏன் தெரியுமா அன்னதானந்தான் பெருசுன்னு சொல்றாங்க...மத்ததெல்லாம் எவ்வளவு குடுத்தாலும் போதுமுன்னு தோணாதாம். கல்வி கூட. ஆனால் அளவு வந்ததும் வயிறும் மனமும் போதுமுன்னு சொல்றதால அன்னதானந்தான் பெருசுன்னு சொல்வாங்க. கல்விதானம் புண்ணியந்தான். ஆனால் கல்வியில்லாம வாழலாம். சோறு இல்லாம வாழ முடியாது.

அப்படியிருக்கிறப்போ...பணம்? அதான் குண்டா குண்டாவா கொண்டான்னு இந்த மாதிரி ஆளுங்க வம்பு பண்றாங்க.........

tbr.joseph said...

வாங்க துளசி,

தில்லுமுல்லு செய்ரவங்களுக்கு பின்னால இந்த மாதிரி படை இருந்தாத்தான் வெற்றிகரமா அவங்க தில்லுமுல்லு பண்ணாலும் மாட்டிக்காம இருக்க முடியும்.

tbr.joseph said...

வாங்க ஜோ,

உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.

நேற்று உங்களுடைய பெயர் கொண்ட புனிதரின் விழா. தெரியும்தானே..

உங்களுக்கு என்னுடைய திருநாள் வாழ்த்துக்கள்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அப்படியிருக்கிறப்போ...பணம்? அதான் குண்டா குண்டாவா கொண்டான்னு இந்த மாதிரி ஆளுங்க வம்பு பண்றாங்க......... //

பணம்தான் நம்ம ரா மெட்டீரியல்னு சொல்லுவார் எங்க சேர்மன். ஆனா அதுதான் எங்க ரத்தமேன்னு சொல்வாங்க இந்த மாதிரி ஆளுங்களும் நம்ம அ.வாதிகளும்.

tbr.joseph said...

துளசி, ஜோ மற்றும் ராகவன்.

என்னுடைய மும்பை அனுபவங்களை என்னுடைய ஆங்கில பதிவான http://tbrjoe.blogspot.com ல இன்னையிலருந்து எழுத துவங்கியிருக்கிறேன்.

படித்துவிட்டு உங்களுடைய கருத்தை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,
அன்புடன்,
டிபிஆர்.ஜோசஃப்

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
தெரியும்.உங்களுக்கும் தானே!நன்றி!
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

tbr.joseph said...

நன்றி ஜோ..

இன்னைக்கி மட்டுமாவது என்னுடைய சூரியன் தொடரின் இன்றைய எப்பிசோடை படிங்க..

ஏன்னு உங்களுக்கே புரியும்..