20 November 2013

அரசியல்வாதிகள் அனைவருமே முட்டாள்கள்தானா?

அடக்கமுடைமை

குறள் எண்: 127.  யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

குறள் எண்: 129.   தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்  ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

திருக்குறளில் அடக்கமுடமை என்ற அதிகாரத்தில் தரப்பட்டுள்ள பத்து குறட்பாக்களில் மேலே குறிப்பிட்ட இரு குறள்கள் நாவடக்கத்தைப் பற்றி பேசுகின்றன. இவ்விரு குறட்களின் பொருள் தெரியாதவர்களே இருக்க முடியாது. 

எண் சான் உடம்புக்கு தலையே பிரதானம் என்பார்கள். 

என்னைக் கேட்டால் அதிலுள்ள நாக்கு அதை விட பிரதானம் என்பேன்.

முன்பெல்லாம், ஏன், இப்போதும்தான், அரசியல் பிரமுகர்கள்தான் இந்த அடக்கத்தை காற்றில் பறக்க விட்டுவிட்டு சகட்டுமேனிக்கு பேசிவிட்டு செல்வார்கள். அதிலும் தேர்தல் நேரம் என்றால் கேட்கவே வேண்டாம். சொல்ல தகாததையெல்லாம் சொல்லிவிட்டு ஊடகங்கள் திரித்துவிட்டன என்று கூசாமல் பொய் சொல்வார்கள். 

இப்போது மெத்த படித்தவர்களும் இந்த பட்டியலில் இணைவதுதான் வேதனையளிக்கிறது.

கடந்த சில நாட்களாக வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஒரு சில வார்த்தைகளைக் கூறிவிட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளும் அறிவியல் விஞ்ஞானியும் பாரத ரத்னா விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான திரு. CNR RAOவைப் பற்றித்தான் கூறுகிறேன்.இவரை நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுக்கு தெரிவு செய்த அரசியல்வாதிகளையே 'முட்டாள்கள்' என்று வாய் தவறி - உண்மையில் நாக்குதான் தவறு செய்தது. ஆனால் சொல்வது வாய் தவறி விட்டது என்று!! - கூறிவிட்டு நான் சொல்ல வந்தது அது இல்லை என்கிறார். 'முட்டாள்தனம்' என்பதற்கும் 'முட்டாள்' என்பதற்கும் அப்படியென்ன பெரிய வித்தியாசம் என்று விளங்கவில்லை. முட்டாள்தான் முட்டாள்தனத்தை செய்ய முடியும்! அரசு அறிவியல் ஆய்வுகளுக்கு போதிய அளவு பண உதவி வழங்காதது முட்டாள்தனம் என்ற பொருள்பட நான் சொன்னதை ஊடகங்கள் திரித்து அரசியல்வாதிகள் அனைவரையும் நான் முட்டாள்கள் என்று கூறியதுபோல் வெளியிட்டுவிட்டன என்கிறார். 

அதுமட்டுமா? சீனர்களைப் போல் இந்தியர்கள் கடின உழைப்பாளிகள் இல்லையென்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார். 

இவர் யார் சீனரா? அல்லது இவர்களுடன் பணியாற்றும் அத்தனை விஞ்ஞானிகளும் சீனாவில் இருந்து வந்தவர்களா? 

இருமுறை செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை செலுத்த முயன்று தோல்வியடைந்தவர்கள்தானே சீனர்கள்? நம் இந்தியர்கள் அதில் வெற்றியடையும் நாள் வெகு தொலைவில் இல்லையே?

சீனர்கள் இந்தியர்களைக் காட்டிலும் தேசப் பற்று உள்ளவர்களாம்! இவர் எதை தேசப் பற்று என்கிறார் என்று விளங்கவில்லை. எந்த இந்திய பிரஜை தேசப்பற்று இல்லாமல் இருந்ததாக இவர் குறிப்பிடுகிறார்? அன்னிய நாட்டுக்கு சென்று பணியாற்றுபவர்களையா? சீனாவில் வாழும் சீனர்கள் இந்தியர்களைப் போல வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பாததற்கு மூல காரணம் இந்தியர்களைப் போன்று ஆங்கில அறிவு அவர்களுக்கு இல்லை என்பதுதான். உழைப்பு என்று எடுத்துக்கொண்டால் நாளொன்றுக்கு பதினைந்து மணி நேரம் தொடர்ச்சியாக இன்றும் பணியாற்றும் இந்திய இளைஞர்கள் இருப்பதால்தான் ஐ.டி துறையில் இவர்களால் உலகெங்கும் சென்று பிரகாசிக்க முடிகிறது. இதற்கு முந்தைய தலைமுறை இந்தியர்களை வேண்டுமானால் இந்த அளவுக்கு உழைக்காதவர்கள் சொல்லலாம். ஆனால் அதையும் பொதுவாக சொல்லிவிட முடியாது. அன்று தன்னலம் பாராமல், நேரம் பாராமல் உழைத்து தங்களுடைய குழந்தைகளை படிக்க வைத்ததால்தான் இன்றைய தலைமுறை இந்தியர்கள் படிப்பிலும், விஷய ஞானத்திலும் சிறந்து விளங்க முடிகிறது. ஆனாலும் இப்படி நம்மை நாமே தரம் தாழ்த்திக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. பாமரன் பேசினால் பொறுத்துக்கொள்ளலாம். இந்தியாவின் இரத்தினம் என்று கருதப்படுபவர் இப்படி பேசலாமா?

நாட்டின் மிக உயர்ந்த விருதுக்கு தகுதி பெற வெறும் படிப்பும், அறிவும் மட்டுமே போதாது. தன்னடக்கமும் மிகவும் அவசியம். தன்னடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே நாவடக்கமும் இருக்கும். இது இரண்டும் இல்லாதவர்கள் வாழ்வில் எத்தகைய உயர்வை அடைந்தாலும் பிறருடைய பழிச்சொல்லுக்கு ஆளாவது நிச்சயம்: திரு CNR ராவைப் போல.

இந்த விஷயத்தில் இதே விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் டென்டுல்கர் பரவாயில்லை. கடந்த இருபத்தி நான்கு ஆண்டு கால பொது வாழ்வில் (No one can dispute that he is one of the most popular public figures in India) ஒரு முறை கூட தகாத பேச்சுக்காக பழித்துரைக்கப்பட்டதில்லை. வெறும் பள்ளி படிப்பை மட்டுமே கொண்டிருக்கும் ஒருவர், புகழின் உச்சிக்கே சென்ற ஒருவர், இந்த அளவுக்கு தன்னடக்கத்துடன் இருப்பது அபூர்வம்தான். அந்த வரிசையில் வரும் இன்னொரு விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த். 

இவ்விருவருடன் ஒப்பிடுகையில் மெத்த படித்த CNR சற்று தரம் இறங்கிவிட்டார் என்றே கூற வேண்டும். 

கடந்த திங்கள் கிழமை அன்று இரவு CNN-IBN தொலைக்காட்சியில் இதைப் பற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது அவர் முகத்தில் வழிந்த அசட்டுத்தனத்தை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. நாவடக்கமின்மை அவரை எந்த அளவுக்கு இறக்கிவிட்டது! 

சந்தனத்தைப் பூச வந்தவர்கள் முகத்தில் கரியை பூசி அனுப்பியதுபோல் இருந்தது!

***********14 comments:

ராஜி said...

படித்தால் மட்டும் போதுமா!?

டிபிஆர்.ஜோசப் said...


ராஜி said...
படித்தால் மட்டும் போதுமா!?//

அதானே!!

வே.நடனசபாபதி said...

இந்த மெத்தப் படித்தவருக்கு ‘பாரத ரத்னா விருது’ கொடுத்தது ‘முட்டாள்தனம்’ தான். அதைத்தான் அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

அடக்கமுடைமை அதிகாரத்தில் 121 ஆம் குறளான

''அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.''

என்ற குறளைக் கூட இவரைப்போன்றோர்களுக்காக திருவள்ளுவர் எழுதியிருக்கிறார் என எண்ணுகிறேன்.

G.M Balasubramaniam said...

இப்போதெல்லாம் சர்ச்சைகளையே பதிவுகளாக்கி விடுகிறீர்போலிருக்கிறதே. திரு.C.N.R.-ன் பேச்சைக் குறிப்பிட தலைப்பு அரசியல்வாடிகள் அனைவருமே முட்டாள்கள்தானா......!>>?

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
இந்த மெத்தப் படித்தவருக்கு ‘பாரத ரத்னா விருது’ கொடுத்தது ‘முட்டாள்தனம்’ தான். அதைத்தான் அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

அடக்கமுடைமை அதிகாரத்தில் 121 ஆம் குறளான

''அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.''

என்ற குறளைக் கூட இவரைப்போன்றோர்களுக்காக திருவள்ளுவர் எழுதியிருக்கிறார் என எண்ணுகிறேன். //

சரியாக சொன்னீர்கள். ராவ் அவர்கள் இந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர்தான். ஆனால் நாவடக்கம்தான் இல்லை. ஒருவேளை விருது கிடைத்த வேகத்தில் அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்பட்டுவிட்டாரோ என்னமோ :/)

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...
இப்போதெல்லாம் சர்ச்சைகளையே பதிவுகளாக்கி விடுகிறீர்போலிருக்கிறதே. //

'உலகில் நடப்பவை என் பார்வையில்' என்பதுதானே என்னுடைய வலைப்பூவின் (Blog) Tag line! என்னுடைய தளத்தில் 'செய்தி விமர்சனங்கள்'தான் அதிகம் இருக்கும். அதற்கு அடுத்தபடியாக 'அனுபவம்' என்ற தலைப்பில் எழுதுவேன். என்னுடைய வங்கி அனுபவங்களை 'திரும்பிப் பார்க்கிறேன்' என்ற தலைப்பில் சுமார் இருநூறு பதிவுகள் எழுதிவிட்டதால் அந்த தலைப்பிலும் எழுத விஷயம் இல்லை என்பதால்தான் நாட்டு நடப்பைப் பற்றிய பதிவுகளே அதிகம் இடம் பெறுகின்றன. சிலரைப் போல் வெறும் 'Feel Good' பதிவுகளை என்னால் எழுத முடிவதில்லை.

திரு.C.N.R.-ன் பேச்சைக் குறிப்பிட தலைப்பு அரசியல்வாடிகள் அனைவருமே முட்டாள்கள்தானா......!>>?//

இப்படியொரு தலைப்பு சரிதானா என்கிறீர்களா? பதிவிலுள்ள காரசாரம் தலைப்பிலும் தெரிந்தால்தான் வாசகர்கள் நம் தளத்தை நாடி வருவார்கள் என்பதால் அந்த தலைப்பு :/)

வவ்வால் said...

ஜோசப் அவர்களே,

// ஆனால் நாவடக்கம்தான் இல்லை. ஒருவேளை விருது கிடைத்த வேகத்தில் அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்பட்டுவிட்டாரோ என்னமோ :/)/./

ரொம்ப வெகுஜன ரீதியா யோசிச்சா இப்படித்தான் நினைக்க தோன்றும், பெரும்பாலும் அரசு விருது கிடைக்காதவரையில் "காரமா" விமர்சனம் செய்பவர்கள், விருது கிடைச்சதும் அமுங்கிடுவாங்க, ஆனால் உயரிய விருது கிடைச்ச பின்னும் தனது எண்ணத்தை அப்படியே சொல்லி இருக்காரே அதுக்கு தனி தைரியம் வேண்டும்.

விருது வாங்கினவங்க எல்லாம் கூழை கும்பிடு போட்டு தான் பேசுவார்கள், இவரைப்போல ஒரு சிலர் தான் "இப்படி பட்டவர்த்தனமாக" பேசுகிறார்கள், அதையும் பழமை சிந்தனையுடன் நாவடக்கம் இல்லைனு சொல்ல நல்லவங்க நிறைய பேரு இருக்காங்க அவ்வ்!

இன்னும் நாலு சூடா பேசி இருக்கலாம். ஆனால் அதுக்குள்ள அவரையும் அதட்டிட்டாங்க போல அவ்வ்!

#சி.என்.ஆர் ராவ் இந்திரா காந்தி காலத்திலேயே குறைவான செலவில் தேசிய நதிகளை இணைக்க திட்டம் தயாரித்து கொடுத்தார், அதை வேறு சில அரசியல் காரணங்களுக்காக ஓரம் கட்டிட்டாங்க. ஓரளவுக்கு விவரங்கள் தெரியும் ,அதை எல்லாம் யாராவது வெளியில் சொன்னால் நம்பத்தான் ஆள் இருக்காது அவ்வ்.

இது போல அரசியல்வாதிகள் செய்யுற பிக்கால்லித்தனமெல்லாம் பார்த்து கடுப்பாகி , சமயம் கிடைத்ததும் பொங்கிட்டார்னு தான் தோனுது.
--------------
# //அதுமட்டுமா? சீனர்களைப் போல் இந்தியர்கள் கடின உழைப்பாளிகள் இல்லையென்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார். //

கட்டுமானத்துறை சம்பந்தப்பட்டவங்க யாரைக்கேட்டாலும் சொல்வாங்க, சீனர்கள் இந்தியர்களை விட கடின உழைப்பாளிகள் என்று.

அதே போல ஒட்டுமொத்தமாகவே நம்மை விட கடின உழைப்பாளிகளே, நாமளும் அப்படி உழைக்கனும் என்பதற்காக அப்படி சொல்லி இருக்கலாம்.

இப்போ சென்னை மெட்ரோ ரயில் சுரங்க பணி செய்வது சீனர்கள் தான், மற்ற வேலை வட இந்தியர்கள் :-))

தமிழ்நாட்டில இருக்கவங்களே ,நம்மை விட வட இந்தியர்கள் கடின உழைப்பாளிகள் என ஒத்துக்கொள்வார்கள், அதனால் தான் இப்போலாம் சென்னையில நடக்கிற கட்டுமான பணிகளுக்கு எல்லாம் வட, வடகிழக்கு மாநில ஆட்களை தான் வச்சுக்கிறாங்க, குறைவா சம்பளம் கொடுத்தாலும் நிறைய நேரம் வேலை வாங்கலாம், நடைமுறை உலகை கவனிங்க சார். உணர்ச்சிவசப்பட்டு எல்லாத்துலவும் நாம தான் பெஸ்ட்னு சொல்லி ஏமாத்திக்கிறதுல என்ன பயன்?

தி.தமிழ் இளங்கோ said...

நான் படித்த காமிக்ஸ் கதைகளிலும், பார்த்த ஆங்கிலப் படங்களிலும் விஞ்ஞானிகளை கிராக்குகளாகவே காட்டி இருப்பார்கள். வேறு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

டிபிஆர்.ஜோசப் said...

தி.தமிழ் இளங்கோ said...
நான் படித்த காமிக்ஸ் கதைகளிலும், பார்த்த ஆங்கிலப் படங்களிலும் விஞ்ஞானிகளை கிராக்குகளாகவே காட்டி இருப்பார்கள். வேறு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.//

கிராக்குங்கன்னு சொல்ல முடியாது.. ஆனா கொஞ்சம் eccentricனு சொல்லலாம்.

டிபிஆர்.ஜோசப் said...

:14 AM
வவ்வால் said...
ஜோசப் அவர்களே,

// ஆனால் நாவடக்கம்தான் இல்லை. ஒருவேளை விருது கிடைத்த வேகத்தில் அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்பட்டுவிட்டாரோ என்னமோ :/)/./

ரொம்ப வெகுஜன ரீதியா யோசிச்சா இப்படித்தான் நினைக்க தோன்றும், பெரும்பாலும் அரசு விருது கிடைக்காதவரையில் "காரமா" விமர்சனம் செய்பவர்கள், விருது கிடைச்சதும் அமுங்கிடுவாங்க, ஆனால் உயரிய விருது கிடைச்ச பின்னும் தனது எண்ணத்தை அப்படியே சொல்லி இருக்காரே அதுக்கு தனி தைரியம் வேண்டும்.//

வெகுஜன ரீதியான்னா? அறிவுஜீவி மாதிரி இல்லேன்னு அர்த்தமா?

இந்த மாதிரி பேசறதுக்கு தனி தைரியம் வேண்டும்//

இதுக்கு பேர் தைரியம் இல்லை. அசட்டுத்தனம். உண்மையிலேயே அவருக்கு தைரியம் இருந்திருந்தால் சரியான நேரத்தில் சரியான அளவு நிதி கிடைக்கவில்லை என்று எப்போது நினைத்தாரோ அப்போதே சொல்லியிருக்க வேண்டும். அதன் விளைவாக ஏதாவது தண்டனை கிடைத்திருந்தால் அதையும் எதிர்கொண்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவருடைய உழைப்பை அங்கீகரிக்கும் சமயத்தில் திருவாய் மலரக்கூடாது.

விருது வாங்கினவங்க எல்லாம் கூழை கும்பிடு போட்டு தான் பேசுவார்கள், //

அப்படி பொதுவா சொல்லி இதுவரை விருது வாங்கியவர்களை அவமானப்படுத்தாதீர்கள்.

இவரைப்போல ஒரு சிலர் தான் "இப்படி பட்டவர்த்தனமாக" பேசுகிறார்கள், அதையும் பழமை சிந்தனையுடன் நாவடக்கம் இல்லைனு சொல்ல நல்லவங்க நிறைய பேரு இருக்காங்க அவ்வ்!

இன்னும் நாலு சூடா பேசி இருக்கலாம். ஆனால் அதுக்குள்ள அவரையும் அதட்டிட்டாங்க போல அவ்வ்!//

இப்பத்தான் சொன்னீங்க அவர் ரொம்ப தைரியமானவர்னு.... இப்போ யாரோ அவர அதட்டி அடக்கிட்டாங்கன்னு சொல்றீங்க!

#சி.என்.ஆர் ராவ் இந்திரா காந்தி காலத்திலேயே குறைவான செலவில் தேசிய நதிகளை இணைக்க திட்டம் தயாரித்து கொடுத்தார், அதை வேறு சில அரசியல் காரணங்களுக்காக ஓரம் கட்டிட்டாங்க. ஓரளவுக்கு விவரங்கள் தெரியும் ,அதை எல்லாம் யாராவது வெளியில் சொன்னால் நம்பத்தான் ஆள் இருக்காது அவ்வ்.//

அதுக்குத்தானங்க நாட்டுலயே உயரிய சிவிலியன் விருதை குடுத்து பாராட்டியிருக்காங்க! இன்னும் என்ன செய்யணுங்கறீங்க?

இது போல அரசியல்வாதிகள் செய்யுற பிக்கால்லித்தனமெல்லாம் பார்த்து கடுப்பாகி , சமயம் கிடைத்ததும் பொங்கிட்டார்னு தான் தோனுது.//

யார்தாங்க பிக்காலித்தனம் செய்யல? விஞ்ஞானிகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதைத்தான் முன்னாள் ISRO தலைவர் காட்டிவிட்டாரே?

--------------
# //அதுமட்டுமா? சீனர்களைப் போல் இந்தியர்கள் கடின உழைப்பாளிகள் இல்லையென்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார். //

கட்டுமானத்துறை சம்பந்தப்பட்டவங்க யாரைக்கேட்டாலும் சொல்வாங்க, சீனர்கள் இந்தியர்களை விட கடின உழைப்பாளிகள் என்று.//

இது ஒரு comparative அல்லது relative வாதம். ஒரு துறையில் சீனர்கள் என்றால் இன்னொரு துறையில் அமெரிக்கர்கள் அல்லது இந்தியர்கள். இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதே சரியில்லை.

அதே போல ஒட்டுமொத்தமாகவே நம்மை விட கடின உழைப்பாளிகளே, நாமளும் அப்படி உழைக்கனும் என்பதற்காக அப்படி சொல்லி இருக்கலாம்.

இப்போ சென்னை மெட்ரோ ரயில் சுரங்க பணி செய்வது சீனர்கள் தான், மற்ற வேலை வட இந்தியர்கள் :-))

தமிழ்நாட்டில இருக்கவங்களே ,நம்மை விட வட இந்தியர்கள் கடின உழைப்பாளிகள் என ஒத்துக்கொள்வார்கள், அதனால் தான் இப்போலாம் சென்னையில நடக்கிற கட்டுமான பணிகளுக்கு எல்லாம் வட, வடகிழக்கு மாநில ஆட்களை தான் வச்சுக்கிறாங்க, குறைவா சம்பளம் கொடுத்தாலும் நிறைய நேரம் வேலை வாங்கலாம், நடைமுறை உலகை கவனிங்க சார். உணர்ச்சிவசப்பட்டு எல்லாத்துலவும் நாம தான் பெஸ்ட்னு சொல்லி ஏமாத்திக்கிறதுல என்ன பயன்?//

நாமதான் பெஸ்ட்டுன்னு சொல்ல வேணாம். அதே சமயம் நாம easy goingனு சொல்ல வேண்டியதில்லை.

நீங்கள் சொல்கிற மாதிரி வடநாட்டவர்தான் கடின உழைப்பாளிகள் என்பதும் சரியில்லை. நான் மும்பை, கொல்கொத்தா போன்ற நகரங்களில் பணியாற்றியுள்ளேன். அங்கு சாலைப்பணியாளர்கள் பலரும் நம்மவர்கள்தான். கேட்டால் இவர்கள்தான் கடினமாக அதே சமயம் திறமையுடன் பணியாற்றுவார்கள் என்றார்கள். அதே போல் மும்பையில் BEST, TELCO, TCS போன்ற பல நிறுவனங்களிலும் ஒரு காலத்தில் தலைமை பதவியில் இருந்தவர்கள் தமிழர்களே. இவ்வளவு ஏன்? மத்தியில் மிக முக்கிய அமைச்சகங்களாக கருதப்பட்ட நிதி மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகங்களுக்கு பொறுப்பேற்றிருந்தவர்கள் தமிழர்களே.

யாரோ ஒரு ராவ் சொன்னார்னு நீங்களும் சேந்துக்கிட்டு தமிழர்களை எதற்கு பழித்துரைக்கிறீர்கள்? மேலும் எந்த குற்றச்சாட்டையுமே பொதுவாக சொல்வது ஒரு திறன் படைத்த அறிவியலாருக்கு அழகில்லை.

Packirisamy N said...

என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன். திரு. CNR RAO கூறிய முறையும், இடமும் வேண்டுமானால் தவறாக இருக்கலாம். அவர் கூறிய விஷயங்கள் அனைத்தும் உண்மை. அரசியல்வாதிகள் பற்றி நான் எதுவும் சொல்லத் தேவையில்லை. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக சீனர்களுடன் வேலை செய்திருக்கிறேன். அவர்கள் நம்மைவிட கடுமையான உழைப்பாளிகள். அறிவிலும் நம்மைவிடக் குறைந்தவர்களல்ல. ஆனால் அவர்களுக்கு ethical values எதுவும் கிடையாது. இந்தியர்களுக்கு social conscience சீனர்களைவிட குறைவுதான். என்னுடைய அபிப்பிராயத்தில் நாட்டுப்பற்று என்பது இந்தியர்களுக்கு கிரிக்கெட் மட்டும்தான். ஒரு மாநிலத்தை விட்டு அடுத்த மாநிலத்துக்கு சென்றுவிட்டால் நாம் இந்தியர் இல்லை மதராஸி மட்டும்தான். நாமாவது பரவாயில்லை. மிசோரம், நாகாலாந்து மக்கள் இன்னும் பரிதாபத்துக்கு உரியவர்கள். இவையனைத்தும் எனது அபிப்பிராயங்களே.

டிபிஆர்.ஜோசப் said...


Packirisamy N said...
என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன். திரு. CNR RAO கூறிய முறையும், இடமும் வேண்டுமானால் தவறாக இருக்கலாம்.//

இதைத்தான் நானும் சொல்ல வந்தேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

வவ்வால் said...

ஜோசப் அவர்களே,

விமர்சனமே இல்லாமல் எல்லாம் சரி,எல்லாம் நல்லா நடக்குதுனு சொல்லிட்டு போனால் சந்தோஷமா இருக்கும் போல :-))

நாவடக்கம்னு சொல்லி நாலு பேரு தூக்கிட்டு போய் அடக்கம் செய்யிற வரைக்கும் உண்மையே பேசாம அடங்கி போயிட வேண்டியது தான் அவ்வ்.

விருதுக்கொடுத்ததுக்கு நன்றி கடனா "சம்பிராதாயமா" பாராட்டி பேசிட்டு போகனும்னு நினைக்கிறது ரொம்ப சம்பிரதாயமானது அவ்வ்!

# சரி அப்துல் கலாம் எழுதின விங்க் ஆஃப் ஃபயர்/ அக்னி சிறகுகள் படிச்சிருக்கீங்களா?

வெங்கட் நாகராஜ் said...

நாவடக்கம் - பலருக்கு இது வருவதில்லை.....

அரசியல்வாதிகள் பலரும் தேர்தல் சமயத்தில் இப்படித்தான் எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.... இவரும்!