07 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 39

'பின்னே? இப்பத்தைக்கி அந்த கேஸ்லதான சார் நம்ம கான்ஸ்டிரேஷன்லாம்....?' என்றார் பிபி சற்று எரிச்சலுடன். 'நாளைக்கி சார்ஜ் ஷீட் ஃபைல் பண்ண கையோட மஜிஸ்டிரேட் கிட்ட செஷன்ஸ் கோர்ட்டுக்கு கமிட் பண்ண சொல்லிறணும்னு மாதவன் கிட்ட ஏற்கனவே சொல்லியாச்சு.... செஷன்ஸ் கோர்ட்ல வந்துட்டா அப்புறம் அது நம்ம கேஸ்... ஒரே வாரத்துலயே காஸ் லிஸ்ட்ல (cause list) வந்துறும்.... அதுக்கு நா கியாரன்டி... அப்புறம் நம்ம சைடுலருந்து வாய்தா வாங்கற பேச்சுக்கே இடமில்ல.... கோர்ட் பண்ற adjournmentsல்லாத்தையும் சேத்தா கூட எப்படியும் ஆறு மாசத்துக்குள்ள முடிச்சி கன்விக்‌ஷன் வாங்கி அந்த கேடிய உள்ள தள்ளிட்டுத்தான் மறுவேலைன்னு இருக்கேன்.... நீங்க என்னடான்னா எந்த கேஸ்ங்கற மாதிரி கேள்வி கேக்கறீங்க? ஒங்க எஸ்.ஐதான் இப்படின்னு நினைச்சா எவ்வளவு சீனியர் நீங்க... நீங்களே இப்படி கேட்டா எப்படி சார்?'

எரிச்சலுடன் பி.பி பொறிந்து தள்ள நெற்றியில் கைவைத்தவாறு கேட்டுக்கொண்டிருந்த ஆய்வாளர் பெருமாள் டைனிங் ரூமிலிருந்து தன்னையே கேலி புன்னையுடன் பார்த்தவாறு அமர்ந்திருந்த தன் மனைவியை பார்த்து முறைத்தார்.. நீ உன் வேலையை பாரு என்பதுபோல்...

'சாரி... கோச்சிக்காதீங்க சார்....'

'பரவால்லை சொல்லுங்க.... பேசினீங்களா?

'ஆமா சார்... அந்த பார்க்கிங் பையன ஸ்டேஷனுக்கே கூப்ட்டு வார்ன் பண்ணி அனுப்பியிருக்கேன்... பயத்துல அழறான் சார்.. எப்படி சார் ஜட்ஜ் முன்னால பொய் சொல்றதுன்னுட்டு.... நா சொன்னா மாதிரி சொல்லலன்னாத்தான்டா ஒனக்கு பிரச்சினைன்னு மிரட்டியிருக்கேன்... பய சொல்லிறுவான்.... ஆனா...'

'என்ன சார் ஆனான்னு இழுக்கறீங்க?'

'இல்ல சார். அந்த லேடிதான் பிரச்சினையாருக்கும்போல.... அந்த லேடி ஒத்துக்கிட்டா மாதிரிதான் இருந்துது.... அந்தம்மாவோட ஹஸ்பென்ட் கொஞ்சம் பெரிய எடம்... ரிட்டையர் ஆய்ட்டாலும் இன்னும் இன்ஃப்ளூயன்ஸான ஆள் மாதிரி தெரியுது.... இந்த மாதிரியெல்லாம் தேவையில்லாம தொந்தரவு செஞ்சீங்கன்னா அப்புறம் நா கமிஷனர் லெவல்ல மூவ் பண்ண வேண்டி வரும்னார்....'

'அத கேட்டுக்கிட்டு நீங்க வந்துட்டீங்களா சார்?' என்று எரிச்சலுடன் இடைமறித்தார் வேணு...

'இல்ல சார்..... நா விடாம, வேணும்னா போய்க்குங்க சார்னு ஒரு போடு போட்டேன்.... மனுசன் வாய மூடிக்கிட்டார்...'

'அப்போ பிரச்சினை வராது!'

'ஆமா சார்... அப்படியே வந்தாலும் பாத்துக்கலாம் சார்.. .குறைக்கிற நாயி கடிக்காது... அந்தாளுக்கு உண்மையிலயே கமிஷனர தெரிஞ்சிருந்தாலும் அவருக்கு இவர தெரிஞ்சிருக்கணுமே, என்ன சொல்றீங்க?' என்று பெருமாள் சிரிக்க எதிர்முனையில் அவர் காது கிழிந்துவிடும் அளவுக்கு வேணு சிரித்தார். 'சரி சார்.... வேற ஒன்னும் இல்லையே?'

'இல்ல சார்... நாளைக்கி காலையில நானே கோர்ட்டுக்கு போயி சார்ஜ் ஷீட் ஃபைல் பண்ணிறலாம்னு இருக்கேன்... தன்ராஜ சட்டை பண்ண போறதில்லை.... என்ன சொல்றீங்க?'

'அதுவும் சரிதான்... அந்தாள கொஞ்ச நாளைக்கி டீல்ல வுடுங்க... என்ன பண்றார்னு பாக்கலாம். வச்சிடறேன்...'

பெருமாள் இணைப்பைத் துண்டித்துவிட்டு தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மனைவியை பொருட்படுத்தாமல் செல்ஃபோனை அணைத்து சோபாவில் வீசிவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தார்.

*****

அடுத்த நாள் சென்னை பெருநகர் நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பாக சென்னை மைலாப்பூர் E1 காவல் நிலைய ஆய்வாளர் பெருமாள் மாதவி கொலைவழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கோபாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தார். அதனையடுத்து எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்ப நடுவர் உத்தரவிட்டார். ஆனால் அப்போது நீதிமன்றத்தில் இருந்த ராஜசேகர் தாம் ஏற்கனவே நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்ற அறிவிக்கை தமக்கு தேவையில்லை என்றும் காவல்துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிக்கை மற்றும் அதனுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து ஆவணங்களின் நகல்களையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தயாராக வைத்திருந்த மனுவை சமர்ப்பிக்க நடுவர் அதை ஏற்றுக்கொண்டு வழங்க உத்தரவிட்டார். 

நடுவருடைய சுமூக மனநிலையை உணர்ந்த ராஜசேகர் தான் தயாரித்து வைத்திருந்த மற்றொரு மனுவான மாதவி குடியிருந்த வீட்டை தங்கள் வசம் ஒப்படைக்கும் மனுவையும் சமர்ப்பித்தான். 

அதை வாங்கி வாசித்த நடுவர், 'என்ன சார் சொல்றீங்க?' என்பதுபோல் அரசு வழக்கறிஞர் மாதவனைப் பார்க்க அவர் திரும்பி தன் அருகில் அமர்ந்திருந்த ஆய்வாளர் பெருமாளைப் பார்த்தார். அவர் ஆட்சேபனை இல்லை எனபதுபோல் தலையை அசைக்க, 'we have no objection my lord' என்றார் மாதவன்.

'அப்போ சரி....order is passed as prayed.' என்று உத்தரவிட்ட நடுவர். 'I am committing this case to trial court. Adjourned.' என்று வழக்கை விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

'என்னைக்கி விசாரணைக்கு வரும்னு ட்ரையல் கோர்ட் காஸ் லிஸ்ட்ட பாத்துக்குங்க சார்.' என்றான் பாஸ்கர் ராஜசேகரிடம். 'நீங்க கேட்ட காப்பீஸ இன்னைக்கி சாயந்தரம் இல்லன்னா நாளைக்கி பகலுக்குள்ள குடுத்துடறேன்.'

ராஜசேகர், 'சரி பாஸ்கர்.. நாளைக்கி வசந்த் வருவார். அவர்கிட்ட குடுத்துருங்க.... எனக்கு இன்னும் ரெண்டு கேஸ் இருக்கு.' என்றவாறு அவனுடைய மற்ற வழக்குகள் நடைபிறவிருந்த நீதிமன்ற அறையை நோக்கி விரைந்தான். 

******

அடுத்த நாள் மாலை வழக்கு சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் வசந்த் ராஜசேகருடைய அலுவலகத்திற்கு சென்றான்.

'என்னடா எல்லாத்தையும் வாங்கிட்டியா?' என்றவாறு அவனை வரவேற்ற ராஜசேகர் தன் குமாஸ்தா நாகு இன்னும் தன் இருக்கையில் அமர்ந்திருந்ததை கவனித்தான். 'என்ன நாகு, கிளம்பல?'

'தோ கிளம்பிட்டேன் சார்...' 

'நாளைக்கி நமக்கு கேஸ் எதுவும் இருக்கா, டைரிய பாத்தியா?'

'இல்ல சார்..... இனி வெள்ளிக் கிழமைதான்...'

'ஓ! சரி.. நீ கிளம்பு.... வெள்ளிக்கிழமை காலைல வந்தா போறும்.'

இதை எதிர்பார்க்காத நாகு வாயெல்லாம் பல்லாக, 'அப்படியா சார், தாங்ஸ் சார்...' என்றவாறு உடனே தன் பையை எடுத்துக்கொண்டு கிளம்பினான். இதற்கு மேலும் அங்கு இருந்தால் எங்கே ராஜசேகர் மனதை மாற்றிக்கொள்வானோ என்ற பயம். 

அவன் செல்லும் வரை காத்திருந்த ராஜசேகர், 'வசந்த் நீ அந்த கதவை சாத்தி தாள் போட்டுட்டு வா.... இல்லன்னா அவன் மறுபடியும் வந்தாலும் வந்துருவான்.....'

வச்ந்த் சிரித்தவாறே எழுந்து சென்று கதவைச் சாத்தி தாளிட்டுவிட்டு வந்து அமர்ந்து மேசை மீது வைக்கப்பட்டிருந்த கணத்த உறையை திறந்து குற்றப்பத்திரிக்கையை முதலில் எடுத்து ராஜசேகரிடம் அளித்தான்.

குற்றப்பத்திரிக்கையை மேலோட்டமாக வாசித்த ராஜசேகரின் முகம் சட்டென்று மாறுவதை கவனித்த வசந்த், 'என்ன பாஸ் பேயறைஞ்சா மாதிரி ஆய்ட்டீங்க?' என்றான் சிரிப்புடன்.

ராஜசேகர் எரிச்சலுடன் அவனைப் பார்த்தான். 'டேய்... என்ன நக்கலா?'

'சாரி பாஸ்.... ஒங்க முகம் போன போக்க பாத்துட்டு..... சாரி...'

'சரி பரவால்லை..... ஆனா இத பாத்ததும் கொஞ்சம் ஷாக்காத்தான்டா இருக்கு....'

'அப்படி என்ன பாஸ் இருக்கு? படிங்களேன் நானும் கேக்கேன்...'

'முழுசையும் படிச்சா நேரம்தான் வேஸ்டாவும்.... படிச்சத சுருக்கமா சொல்றேன்.....'

'சரி, சொல்லுங்க...' என்ற வசந்த் தன் குறிப்பேட்டை திறந்தான்.

'டேய்... இப்ப நோட்ஸ் எதுவும் எடுக்காத... நாளைக்கி காப்பி போட்டு குடுக்கறேன்.... இப்ப நா சொல்றத மட்டும் கேளு...'

'ஓக்கே பாஸ்.'

'நாம  எதிர்பார்த்தது மாதிரியே IPC Sec.300ல ஃபர்ஸ்ட் சார்ஜ்.'

'சரி'

'ரெண்டாவது இதுவரைக்கும் நமக்கு தெரியாதது. Sec.375 - Rape - இத நா எதிர்பார்க்கல...' என்றான் ராஜசேகர். 

இதை உண்மையிலேயே அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இது நிச்சயம் கற்பழிப்பாக இருக்க வாய்ப்பில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கையை புரட்டி பார்த்தான். அதில் மருத்துவர் கோபாலுக்கு DNA TEST எடுத்து பார்த்தால்தான் அவர் இதற்கு பொறுப்பா இல்லையா என்று தெரியும் என்று குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தான். ஆனால் ராஜசேகருக்கு இதற்கு கோபால்தான் காரணம் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்கவில்லை. ஆனால் அதே சமயம் தனக்கென்று ஒதுக்கப்பட்ட செவ்வாய் அன்று தன்னை வேண்டுமென்றே வராதே என்று சொல்லிவிட்டு இன்னொருவருடன் மாதவி சல்லாபத்தில் ஈடுபட்டிருந்தாள் என்ற நினைப்பு அவனை கொதிப்படையச் செய்தது. ஆனால் தன் மனதில் எழுந்த இந்த எண்ணத்தை எதிரில் அமர்ந்திருக்கும் வசந்த் தெரிந்துக்கொள்ளக் கூடாது என்ற நினைப்புடன் மிகவும் சிரமப்பட்டு தன் உணர்வுகள் முகத்தில் தெரியாவண்ணம் அடக்கிக்கொண்டான்.

'என்ன பாஸ் Rape சார்ஜ பாத்ததும் சைலன்டாய்ட்டீங்க?'

'ஆமாடா... இந்த சார்ஜ் கொஞ்சம் ஷாக்கிங்காத்தான் இருக்கு.... இத நா எதிர்பார்க்கலை... ஆனா இத நமக்கு சாதகமாவும் யூஸ் பண்ணிக்கலாம். என்ன சொல்றே?'

சில விநாடிகள் ராஜசேகர் சொன்னதை மனதுக்குள் அசைபோட்டான் வசந்த். 'அதாவது இது அவங்களுக்குள்ள எந்த சண்டையோ சச்சரவோ இல்லேங்கறத காமிக்கிறதா ஆர்க்யூ பண்லாம்னு சொல்றீங்க. அப்படித்தானெ பாஸ்?'

'கரெக்ட்....இத ப்ராசிக்யூஷன் வேணும்னா ரேப்னு சொல்லலாம். ஆனா கோபால் இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவார்னு தெரியல... இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லேன்னு சொல்லிட்டார்னா அவரில்லாம ஒரு தேர்ட் பார்ட்டி அந்த வீட்டுக்குள்ள போயிருந்தார்கறத ப்ரூஃப் பண்றது நமக்கு ஈசியாயிரும்....'

'கரெக்ட் பாஸ்.... ஆனா கோபால் DNAவுக்கு ஒத்துக்குவாரா?'

'சந்தேகம்தான்.... ஆனா இந்த சார்ஜ அவர் படிக்கறப்ப அவரோட ஃபேஷியல் ரியாக்‌ஷன க்ளோஸா பாக்கணும்.... அவர் முகம் போற போக்குலருந்தே இதுக்கும் அவருக்கும் சம்மந்தம் இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம்... என்ன சொல்றே?'

வசந்த் சிரித்தான். 'ஆமா பாஸ்... unless he is trained actor..'

ராஜசேகரும் அவனுடைய சிரிப்பில் இணைந்துக்கொண்டான். 'எனக்கும் அந்த லேடிக்கும் ஹவுஸ் ஓனர்-டெனன்ட்ங்கற உறவ தவிர வேறு எதுவும் இல்லேன்னு எங்கிட்ட அடிச்சி சொன்னவராச்சே.... அதான் யோசிக்கிறேன்.'

'அட நீங்க ஒன்னு பாஸ்... அவர் அடிச்ச எத்தனையோ டூப்புல இதுவும் ஒன்னாருக்கும்...'

ராஜசேகர் மீண்டும் புன்னகையுடன் வசந்தை பார்த்தான். 'இருந்தாலும் இருக்கும். ஆனா பொய் சொல்றார்னு அவர் முகத்த பாத்தா தெரியவே தெரியலைடா... அவ்வளவு நேச்சுரலா சொல்றார்...' 

ஏன் நீ மட்டும் என்னவாம் என்று இடித்துரைத்தது அவனுடைய உள்மனசு...!

தொடரும்..
7 comments:

வே.நடனசபாபதி said...

// இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லேன்னு சொல்லிட்டார்னா அவரில்லாம ஒரு தேர்ட் பார்ட்டி அந்த வீட்டுக்குள்ள போயிருந்தார்கறத ப்ரூஃப் பண்றது நமக்கு ஈசியாயிரும்....'//

கோபாலைத்தான் சாட்சிக்கூண்டில் ஏறி இதை சொல்வாரா? பார்ப்போம்.

டிபிஆர்.ஜோசப் said...

கோபாலைத்தான் சாட்சிக்கூண்டில் ஏறி இதை சொல்வாரா? பார்ப்போம். //

தெரியலையே... அவர கூண்டுல ஏத்தாதீங்கன்னு ராகவாச்சாரி சொல்லியிருக்கறதால சந்தேகம்தான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

G.M Balasubramaniam said...


இதுவரை அறிமுகமான கதாபாத்திரங்களில் ஒருவர்தான் கொலை செய்தாரா?

இராஜராஜேஸ்வரி said...


குறைக்கிற நாயி கடிக்காது... அந்தாளுக்கு உண்மையிலயே கமிஷனர தெரிஞ்சிருந்தாலும் அவருக்கு இவர தெரிஞ்சிருக்கணுமே,///

உண்மைதான் ..பல பிரபலங்களை அவருக்குத்தெரிந்திருக்கும்

பிரபலங்களுக்கு அவர்களைத்தெரியாதே..!!


வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_9.html

Ranjani Narayanan said...

உங்களின் இந்தக் கதையை முதலிலிருந்து படிக்க வேண்டும்.
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...

இதுவரை அறிமுகமான கதாபாத்திரங்களில் ஒருவர்தான் கொலை செய்தாரா?//

ஆமாம்.....

டிபிஆர்.ஜோசப் said...

AM
Ranjani Narayanan said...
உங்களின் இந்தக் கதையை முதலிலிருந்து படிக்க வேண்டும்.
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!//

நானும் பார்த்தேன். தகவலுக்கு நன்றி.