12 August 2006

கோவா பயணம் நிறைவு பதிவு

நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து சுமார் இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது பழைய கோவா.

அங்குதான் சுமார் நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக அழிவுறாமல் பாதுகாக்கப்பட்டு வரும் தூய சவேரியாரின் உடல் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப் பிரசித்தமான தேவாலயங்களில் ஒன்றான பாம் ஜீசஸ் தேவாலயம் இருந்தது.

அத்தேவாலயத்திற்கு ஏற்கனவே ஒரு முறை, அதாவது நான் மும்பையில் பணிபுரிந்துக்கொண்டிருந்த சமயத்தில் (1995ம் ஆண்டு) சென்றிருக்கிறேன்.

அத்தேவாலயத்தில் வெள்ளிப் பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வரும் உடல் பத்து வருடங்களுக்கு ஒரு முறை பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படுவது வழக்கம். அது 1995ல் நடந்தபோது நான் அலுவல் விஷயமாக கோவா செல்ல வேண்டியிருந்தது.

அடுத்த பத்தாண்டின் இறுதியில், அதாவது 2005ம் ஆண்டு அங்கு செல்ல விரும்பியும் முடியாமற் போகவே இம்முறை கோவா செல்ல வாய்ப்பு கிடைத்ததும் நிச்சயம் அத்தேவாலயத்திற்கு சென்று வருவதென தீர்மானித்தேன்.

பகல் சுமார் இரண்டரை மணிக்கு புறப்பட்ட நாங்கள் அடை மழை காரணமாக மோசமாக பழுதடைந்திருந்த சாலையில் வேகமாக செல்ல முடியாமல் நாற்பத்தைந்து நிமிடத்தில் முடிய வேண்டிய பயணம் சுமார் ஒன்றரை மணி நேரம் எடுத்தது.

பிற்பகல் நேரமானதாலும் மழை பெய்துக்கொண்டே இருந்ததாலும் தேவாலய வளாகம் காலியாக இருந்தது.

சுற்றுலா தளமான பழைய கோவாவில் பிரசித்தமான சுற்றுலா தளமான இத்தேவாலயத்திற்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம் என்றார் எங்களுடன் துணைக்கு வந்த மேலாளர்.

தேவாலய வளாகத்தின் முன்பு அமைந்திருந்த புகைப்பட ஸ்டுடியோக்களும், பல்பொருள் அங்காடியும், புனிதரின் புகைப்படங்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றை விற்கும் கடைகளும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கையில் மெழுகு திரிகள், மாலைகளை வைத்துக்கொண்டு எங்களை சூழ்ந்துக்கொண்ட கோவன், மலையாளி மற்றும் தமிழ் பேசும் பெண்களையும் பார்த்தபோது என்னுடைய நண்பர் கூறியது உண்மைதான் என்பது எங்களுக்கு விளங்கியது.

மழை சற்றே ஓய்ந்திருக்க என்னுடைய டிஜிட்டல் கேமராவிற்கு தேவையான பாட்டரிகளையும் சில மெழுகு திரிகளையும் வாங்கிக் கொண்டு ஆலயத்தை நோக்கி நடந்தோம்.
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு புனிதப்படுத்தப்பட்ட கருங்கற்களாலான தேவாலயம் தூரத்திலிருந்து பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக காட்சியளித்தது. 1946ம் ண்டு இந்தியாவின் முதல் மைனர் பசிலிக்காவாக பிரகடனப்படுத்தப்பட்ட தேவாலயம் அது என்பதை எங்கோ படித்த ஞாபகம்.

ஆலயத்தின் வாயிலில் நின்று உள்ளே பிரதான பலிபீடத்தைப் பார்த்தபோது அதனுடைய பிரம்மாண்டம் தெரிந்தது. சுமார் இருநூறடி நீளமும் அறுபதடி அகலமும் அறுபதடி உயரமும் கொண்ட தூண்களில்லாத பிரதான ஹால் பிரமிக்க வைத்தது.

என்னுடைய கேமராவை எடுத்து வாயிலிலிருந்து பிரதான பீடம் வரை மெதுவாக நடந்து அந்த பிரம்மாண்டத்தை முடிந்த அளவு பிடித்துக்கொண்டேன்.

நடுபீடத்திற்கு வலப்புறத்தில் இருந்த பிரம்மாண்ட பீடத்தில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் கோவாவின் கொல்லர்களால் செய்யப்பட்ட வெள்ளி பேழையில் தூய சவேரியின் அழியா உடல் வைக்கப்பட்டிருந்தது.
நடு பீடத்திற்கு வலப்புறத்தில் காவல் தூதரின் பீடமும் ஆலயத்தின் இடப்புறத்தில் தூய மரியாளின் பீடம் தங்க நிறத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தது.

ஆலயம் முழுவதும் பழைய பொலிவு அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட்டு வந்திருப்பது நன்கு தெரிந்தது. அமைதியான அச்சூழலில் மெய்மறந்து மவுனமாய் அமர்ந்திருந்தேன். மனதில் இனம் புரியாத அமைதி, மகிழ்ச்சி. என் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் எல்லோருக்காகவும் ஒரு நிமிடம் கண் மூடி இறைவனைப் பிரார்த்தித்தேன்.சுமார் ஒரு மணி நேரம் செலவழித்தபின் மீண்டும் விடுதி நோக்கி புறப்பட்டோம். கோவாவில் பிரசித்தமான முந்திரி பருப்பு, பிபின்கா அல்வா (உண்மையிலேயே சூப்பராக இருந்தது) ஆகியவற்றை வாங்கிக்கொண்டு விடுதிக்கு திரும்பினேன்.

தேவாலய வளாகத்தில் இறங்கியதும் அதிசயமாக நின்றிருந்த மழை வாகனத்தில் ஏறியதும் மீண்டும் துவங்கி விடுதி வந்து சேரவும் நின்று போனது!

போக வர சுமார் நாற்பத்தைந்து கிலோ மீட்டர் தூரம் ஆளை விழுங்கும் குழிகளில் விழாமல் பயணம் செய்த களைப்பில் நானும் என் நண்பரும் அவரவர் அறைக்கு திரும்பி குளித்து முடித்து ஒரு குட்டித் தூக்கம் போட்டோம்.

அன்று இரவு மீண்டும் கலகலப்பான கலை நிகழ்ச்சி இரவு ஒன்பது மணிக்கு..

முந்தைய நாள் கஜல் இசை என்றால் அன்று இந்தி சினிமா பாடல்கள் கச்சேரி.

மும்பையில் தற்போது மிகவும் பிரபலமான கே.கே என்ற இளைஞர் தலைமையில் நான்கு இளைஞர்களைக் கொண்ட குழு சுமார் மூன்று மணி நேரம் கலக்கியது.

முந்தைய நாள் இரவு சீனியர் கஜல் பாடகருக்கு மதிப்பு கொடுத்து அரங்கத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மதுபான பார் இன்று அரங்கத்திற்குள்ளேயே!

முந்தைய நாள் அரங்கத்தின் முற்பகுதியில் விரிக்கப்பட்டிருந்த மெத்தை இருந்த இடத்தில் இன்று தரையிலிருந்து அரையடி உயரத்திற்கு சுமார் இருபது பேர் ஆடுவதற்க வசதியாக ஒரு குட்டி மேடை..

அதை சுற்றிலும் ஜோடி, ஜோடியாக அமர்ந்து ரசிப்பதற்கு இருக்கைகள்..

மேடையில் ஏறுவதற்கு அமைக்கப் பட்டிருந்த மூன்று படிகளும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு கலர் கலராய் கண்ணடிக்க மேடையில் அமர்ந்திருந்த ஐந்து இசைக் கலைஞர்களைச் சுற்றியும் இடைவிடாமல் மின்னிக்கொண்டிருந்தன வண்ண, வண்ண விளக்குகள்..

ஒரு திரைப்பட செட்டிங்கைப் போலிருந்த மேடையைப் பார்த்ததுமே சிஸ்கோ மற்றும் வங்கிகளைச் சார்ந்த இளம் அதிகாரிகள் படு உற்சாகமடைந்தனர்.

கச்சேரி துவங்குவதற்கு முன்பே இரண்டு, மூன்று சுற்றுகளை முடித்துவிட்டிருந்த இளைஞர்களும், இளைஞிகளும் (இவர்களில் பலரை முதல் முதலாக பார்க்கிறேன். விடுதியில் தங்கியிருந்த மேல் மட்டத்தை சேர்ந்தவர்கள்!) அளித்த உற்சாக வரவேற்புடன் மேடையில் தோன்றினார் ஒரு எலும்புக் குச்சி மனிதர்..

ஜோக் அடிப்பவராம்!

சரசரவென்று மூச்சு விடாமல் ஹிந்தியில் அவர் அடித்த பல ஜோக்குகளும் சென்சார் செய்யப்பட வேண்டியவை. ஆனாலும் போதையில் இருந்த குடி மகன், மகள்களுக்கு மத்தியில் அவை மிகவும் வரவேற்பை பெற்றன.

மட்ட ரகமான சிரிப்பு வெடிகளை ரசித்து கரவொலி எழுப்பிய அரங்கத்திலிருந்த இளைஞர்/இளைஞி கும்பலைப் பார்த்தபோது நாம் எங்கே சென்றுக்கொண்டிருக்கிறோம் என்று கேட்க தோன்றியது.

எனக்கு மிக அருகாமையில் அமர்ந்திருந்த இரு நடுத்தர மேல்மட்ட பெண்கள் சிரித்த சிரிப்பில் இருக்கையிலிருந்தே விழுந்துவிடுவார்களோ என்ற பயத்தில் அவர்களை ஓரக்கண்ணால் பார்த்தேன். அவர்கள் தன்னை மறந்து ஜோக் அடித்துக்கொண்டிருந்த இளைஞனையே பார்த்துக்கொண்டிருந்தனர். என்ன ரசனையோ என்று நினைத்தேன்.

இருப்பினும் அடுத்த ஒரு மணி நேரம் அவருடைய சர வெடிகள் அரங்கமெங்கும் சிரிப்பு வெடிகளாக எதிரொலிக்க ஹாலின் கோடியிலிருந்த 'பார்' பரபரப்பாக இருந்தது.

மணி பத்து!

பசி வயித்தைக் கிள்ள எழுந்து அரங்கத்தை அடுத்திருந்த வராந்தாவிற்குள் நுழைந்தோம் நானும் என் நண்பரும்.

வகை, வகையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த உணவை சீந்த ஆள் இல்லை. எல்லோரும் ‘குடிப்பதிலேயே’ குறியாயிருந்தனர் போலும்.

சற்று முன் வரை வயிற்றைக் குடைந்தெடுத்த பசி பரப்பி வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளைக் கண்டதும் போன இடமே தெரியவில்லை. பேருக்கு எப்போதும் சாப்பிடும் நான், மீன் கறி ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு அரங்கத்திற்குள் நுழைந்தோம்.

மைக் டெஸ்டிங்.. செக் ஒன் டூ த்ரீ நடந்துக்கொண்டிருந்தது..

அடுத்த சில நொடிகளில் ஆடம்பரமில்லாத் ஜீன்ஸ், டீஷர்ட் உடையில் கையில் மைக்குடன் அட்டகாசமான டான்ஸ் மூவ்மெண்டுடன் மேடையில் நுழைந்த கே.கே என்ற அந்த இளைஞர் நள்ளிரவு கடந்தும் யாரும் கலைந்து செல்லா வண்ணம் தன்னுடைய திறமையில் கட்டிப் போட்டுவிட்டார் என்றால் மிகையாகாது.

அவர் அன்றைய நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்திருந்த பாடல்கள் அனைத்துமே ஆடாதவரையும் ஆடவைத்துவிடும் பாடல்களாக இருந்தன.

ஓரிரு பாடல்கள்வரை அரங்கம் அமைதியாய் கேட்டுக் கொண்டிருக்க வெறுத்துப் போன கே.கே மேடையிலிருந்து இறங்கி தரையில் அமைக்கப்பட்டிருந்த நடன மேடையில் வந்து பாடிக்கொண்டே முன் வரிசையில் அமர்ந்திருந்த இளைஞ்களைப் பார்த்தவாறே ஆட அவர்களும் உற்சாகம் மற்றும் போதை தலைக்கேற எழுந்து அவருடன் சேர்ந்து ஆட.. அரங்கத்திலிருந்த அனைத்து இளைஞர், இளைஞிகளும் மேடையை நோக்கி படையெடுக்க.. பிறகென்ன..

செடேட் சென்னை வாழ்க்கையைப் பார்த்து பழகிப்போன என்னைப் போன்றவர்களுக்கு அது ஒரு தனி உலகமாகத்தான் தெரிந்தது..

என்னருகில் அமர்ந்திருந்த அவ்விரு நடுத்தர இளைஞிகளுக்கும் ஆடுவதற்கு ஆசைதான்.. ஆனால் உடல் ஒத்துழைக்க வேண்டுமே.. சேர்த்து வைத்திருக்கும் சொத்து முழுவதுமே இடுப்பிலும் அதற்குக் கீழும் அல்லவா இருந்தது! இருக்கையிலிருந்தவாறே இடுப்பை வளைத்தும் கால்களை உதைத்தும் அவர்கள் பட்ட பாட்டை பார்த்து சிரிப்பதா அழுவதாவென தெரியாமல்..

நேரம் போனதே தெரியாமல் நள்ளிரவைக் கடந்து சுமார் இரண்டு மணி வரை நானும் அமர்ந்திருந்தேன்!

அடுத்த நாள் காலையிலேயே கிளம்பிச் செல்ல வேண்டியிருந்தவர்கள் காலை உணவுடன் விடைபெற்று செல்ல மழை சற்றே நின்றிருந்ததால் நானும் என்னுடைய நண்பரும் விடுதியையொட்டியிருந்த கடற்கரையை நோக்கி நடந்தோம்.

எங்களுடைய அறையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பச்சைப் பசேலென காட்சியளித்த புல் தரை, ஆங்காங்கே அம¨க்கப்பட்டிருந்த புதர்கள், மரத்தாலான டிசைனர் பாலங்கள், நீருற்றுகள் என அந்த சூழலே பார்க்க ரம்மியமாக இருந்தது.

வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் கடலும் ஆக்ரோஷமாக காட்சியளித்தது. சாதாரண உயரத்திற்கும் சற்று கூடிய உயரத்தில் அலைகள் கோபத்துடன் கரையை அறைந்துக் கொண்டிருக்கவே கடற்கரையில் விடுதியின் காவலர்கள் ஆங்காங்கே குளிக்க வருபவர்களைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தனர்.


சற்று நேரம் நின்றிருந்து மாசில்லாத காற்றை நெஞ்சு முழுக்க இழுத்து நிரப்பிக்கொண்டு பை, பை சொல்லிவிட்டு அறைக்கு திரும்பினோம்.

நன்பகல் விமானத்தைப் பிடித்து மும்பை வந்து சேர்ந்தபோது நல்ல மழை. நாங்கள் சென்னைக்கு செல்ல வேண்டிய விமானம் புறப்பட இன்னும் அரை மணியே இருந்த நிலையில் ஜெட் நிறுவனத்தின் மேலதிகாரி ஒருவர் எங்களுடைய விமானத்திற்கே வந்திருந்து போர்டிங் பாஸ்சில் கையொப்பமிட்டு கோவா விமானத்திலிருந்து சென்னை விமானத்திற்கு நேரடியாக அழைத்துச் சென்றார்.

சென்னை வந்து சேர்ந்தபோது மாலை ஐந்து மணி..

இரண்டு இரவு மூன்று பகல்..

மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது கோவா பயணம்!

இத்துடன் Desk Top ல் சேமித்துக்கொள்ளும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் சேமித்துக்கொள்ளுங்கள்..

இப்போதெல்லாம் இந்த மலர்கள்தான் என்னுடைய மடிக் கணினியில் ஜொலிக்கின்றன.. அங்கிருந்து என்னுடைய செல் ஃபோனுக்கும் மாற்றி அங்கும் இவைதான் Desk Top Screens!

சார்.. போறும் சார்.. நாங்க ஒலகமெல்லாம் சுத்தி வந்துக்கிட்டிருக்கோம்.. நீங்க என்னவோ இங்கருக்கற கோவா போய் வந்துட்டு...

நிறுத்திட்டேன்:)

Image and video hosting by TinyPic

14 comments:

sivagnanamji(#16342789) said...

தூய சவேரியாரின் உடலைப் பார்க்க
உதவினீர்கள்;நன்றி
இனி திரும்பிப்பார்க்கலாமே

tbr.joseph said...

வாங்க ஜி!

இனி திரும்பிப்பார்க்கலாமே //

பார்க்கலாமே.. திங்கள் முதல்:)

மணியன் said...

முதல்பாதியில் ஆத்மாவிற்கு திருப்தி; பின்பாதியில் ஐம்புலன்களுக்கு திருப்தி. நன்றாகவே இருந்திருக்கிறது உங்கள் கோவா பயணம். ஆமாம், பெனி பற்றி ஒரு குறிப்பும் இல்லை :)

tbr.joseph said...

வாங்க மணியன்,

ஆமாம், பெனி பற்றி ஒரு குறிப்பும் இல்லை//

ஃபெனியை நான் 19995ல் சென்றிருந்த சமயம் குடித்துவிட்டு படாதபாடு பட்டிருக்கிறேன். அதான் இந்த முறை அதன் பக்கமே செல்லவில்லை.

அருண்மொழி said...

என்ன சார் Fenny பற்றி பேசினாலே வருஷம் தடுமாறுது?? (19995 ...)

tbr.joseph said...

வாங்க அருண்மொழி,

என்ன சார் Fenny பற்றி பேசினாலே வருஷம் தடுமாறுது?? (19995 ...) //

பாத்தீங்களா? பேர சொல்றப்பவே வருஷம் தடுமாறுனா குடிச்சா என்னாவும்?

அதான் விட்டுட்டேன்:))

வடுவூர் குமார் said...

கோவா போய் வந்த மாதிரி திருப்தி.
அதிலும் அந்த மேரி மாதா படம்!!! வேளாங்கண்ணியை ஞாபகப்படுத்துது
நன்றி..

பெத்த ராயுடு said...

//நடு பீடத்திற்கு வலப்புறத்தில் காவல் தூதரின் பீடமும் //

காவல் தூதர்ங்கறது?

முத்து(தமிழினி) said...

sir,

i read part 2 after reading this...
that is useful one for me...thanks for that...

சில நாள் தமிழ்மணத்தில் இல்லாதது போலவே தெரியலை சார். ஏதாவது அவுட்சோர்சிங் கம்பெனி வைச்சிருக்கீங்களா?

tbr.joseph said...

வாங்க குமார்,

கோவா போய் வந்த மாதிரி திருப்தி.//

அப்படியா? இந்த மாதிரி எல்லாரும் அவங்கவங்க பயண அனுபவத்த பகிர்ந்துக்கிட்டா எவ்வளவு நல்லாருக்கும்!

tbr.joseph said...

வாங்க பெத்த ராயுடு,

காவல் தூதர்ங்கறது? //

நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் ஒரு Guardian Angel ஐ கொடுத்திருக்கிறார் என்பது கிறித்துவர்களின் நம்பிக்கை.

ஆனால் தேவாலயங்களில் அவருக்கென தனியாக ஒரு பீடம் இருப்பதில்லை. கோவாவில்தான் முதன் முதலாக பார்த்தேன்.

tbr.joseph said...

வாங்க முத்து,

ஏதாவது அவுட்சோர்சிங் கம்பெனி வைச்சிருக்கீங்களா? //

எதுக்கு எழுதறதுக்கா? கோஸ்ட் ரைட்டர் மாதிரியா? அப்படியொரு கம்பெனிய நாம தொடங்குனா என்ன:)

G.Ragavan said...

புகைப்படங்கள் மிக அருமையாக வந்துள்ளன.

கோவா அனுபவங்கள் ஒரு மாதிரி கலக்கலாக உள்ளன. :-)

கே.கே திரைப்படங்களிலும் பாடியுள்ளார். அவர்தான் இவர் என நினைக்கிறேன். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் விஸ்வநாதனோடு சேர்ந்து "விடை கொடு எங்கள் நாடே" என்று பாடுவாரே...அவரும் கேகே தான்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

கே.கே திரைப்படங்களிலும் பாடியுள்ளார். அவர்தான் இவர் என நினைக்கிறேன். //

அப்படியா? இருக்கலாம். மிக அருமையாக பாடினார். ஒரே
மூன்று மணி நேரம் பாடுவதென்பது ஆச்சரியமான விஷயம்தான்.

இரண்டு நாள் செமினாருக்கு மிக நல்ல முத்தாய்ப்பாக இருந்தது அவருடைய நிகழ்ச்சி.