05 May 2006

என் ஓட்டு யாருக்கு?


தமிழக சட்டமன்ற தேர்தல் களம் கடந்த ஒரு வார காலமாக சூடு பிடித்திருக்கிறது.

பிரதமர், சோனியா என பல தேசிய தலைவர்களும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைத்து தமிழக அமைச்சர்களும் முகாமிட்டு காரசார பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்..

இன்னும் இருபத்தி நான்கு மணி நேரம்.. பிரச்சாரம் ஓயப்போகிறது.

இந்த சூழலில் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.. என் ஓட்டுக்கு யாருக்கு?

தமிழகத்திற்கு வெளியே பணியாற்றிக்கொண்டிருந்ததால் கடந்த பல சட்டமன்ற தேர்தல்களில் ஓட்டளிக்க முடியாமல்போன எனக்கு இத்தேர்தல் தனி முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் நினைக்கிறேன்.

கடந்த இரு வார காலத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சித்தலைவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளை சன் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகளில் பார்த்து கேட்டதை வைத்து எழுதப்பட்டதே இந்த கட்டுரை. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்னுடைய கருத்துகள் மட்டுமே..

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவருடைய உரையில் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையில் இருந்தவர்கள் என்ன செய்து கிழித்தார்கள் என்ற ஜெயலலிதாவின் கேள்விக்கு விளக்கமளித்தார்..

அவை எந்த அளவுக்கு தமிழகத்திற்கு நன்மையளித்திருக்கிறது என்பதை ஆராய்வதை விட்டுவிடுவோம். ஆனால் பல நல்ல திட்டங்களை ப.சிதம்பரம், டி.ர்.பாலு, தயாநிதி மாறன் மற்றும் அன்புமனி போன்றவர்கள் தமிழகத்திற்கு கிடைக்கச் செய்திருக்கிறார்கள் என்பதை ஜெயலலிதாவே மறுக்க முடியாது என்பதை நாம் அறிவோம்.

சரி. அது ஒருபுறம் இருக்கட்டும்..

கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தை ஆண்ட கட்சி என்ன செய்தது என்று ஒரு கேள்வியையும் கேட்டுவிட்டு தானே கிண்டலுடன் பதிலும் அளித்தார் நிதியமைச்சர்.

ப.சிதம்பரம் அவர்கள் மற்ற எந்த தலைவருக்கும் இல்லாத அளவு பொறுமை இருக்கிறது. அவர் பேச்சில் கண்ணியமும் இருக்கிறது.. உணர்ச்சிவசப்பட்டு சேற்றை வாரி இரைக்கும் சில தலைவர்களுடன் (பெயர் வேண்டாம்) ஒப்பிடுகையில் அவர் மிகச்சிறந்தவர். அவர் பேசும்போது கைதட்டல்கள் எழவில்லை.. யாரும் எழுந்து ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.. ஆனால் நிசப்தம் நிலவியது.. மக்கள் அப்படியே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். தன்னால் முடிந்த வரை சாதாரண பாமரர்களுக்கும் விளங்கும் வகையில் பேசினார்.

அவர் அன்று ற்றிய உரையில் என்னுடைய நினைவில் குறித்துவைத்திருந்தவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்.

2001ம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களாயிருந்தவர்களில் இருவர் அல்லது மூவரைத் தவிர (ஜெயலலிதாவை விட்டுவிட்டு) இன்று எத்தனை அமைச்சராக இருக்கிறார்கள்? ஒருவரை நீக்குவீர்கள் பிறகு அவரையே மீண்டும் சில மாதங்கள் கழித்து சேர்த்துக்கொள்வீர்கள்.

உங்களுடைய அமைச்சர்கள் எல்லோரும் தினம் காலையில் கண்விழித்ததும் உங்களுடைய கட்சி தினசரியை பார்த்துத்தானே நாம் இப்போது அமைச்சரவையில் இருக்கிறோமா இல்லையா என்று தெரிந்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறீர்கள்..

சென்னைக்கு எத்தனை கமிஷனர்களை நியமித்தீர்கள்.. கணக்கு வைத்திருக்கிறீர்களா? எத்தனை டி.ஜி.பிக்கள்?

எத்தனை முறை தலைமைச் செயலாளரை மாற்றியிருக்கிறீர்கள்? எத்தனை அமைச்சரவை செயலர்கள்?

சரி அது போகட்டும்..

திடீரென்று ஒருநாள் எஸ்மா, டெஸ்மா என்றீர்கள்.. இரவோடு இரவாக கள்வர்களைப் பிடிப்பதுபோல வீடு புகுந்து கைது செய்தீர்கள்.. கூண்டோடு கூண்டாக வேலையை விட்டு வெளியேற்றினீர்கள்..

பிறகு பாராளுமன்ற தேர்தலில் சூடுபட்டதும் நீங்கள் அவர்கள் மேல் தொடுத்த எல்லா வழக்குகளையும், சிலவற்றைத் தவிர, விலக்கிக்கொண்டீர்கள். வீட்டுக்கு அனுப்பிய எல்லோரையும் திரும்ப அழைத்து வேலை கொடுத்தீர்கள்.. வாபஸ் பெறாமல் மீதமிருந்த வழக்குகளையும் வாபஸ் பெற்றீர்கள்.

பொட்டாவை மிகச்சிறப்பாக (நக்கலுடன் சிரிக்கிறார்) செயல்படுத்திய முதலமைச்சர் நீங்கள்தான். அதற்கும் பணியாதவர்களை கஞ்சா வழக்கில் வீழ்த்தினீர்கள்.

முந்தைய ஆட்சிக்காலத்தில் பணியமர்த்தப்பட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை வேலையை விட்டு வெளியேற்றினீர்கள்.. சட்டத்தை மதிக்கும் நீங்கள் நீதிமன்றங்களின் தீர்ப்பையும் மீறி இன்றுவரை அவர்களை பணியமர்த்தாமல் காலம் தாழ்த்துகிறீர்கள்.

இப்போது தாலிக்கு தங்கம் என்கிறீர்கள்.. சாலைப் பணியாளர்களின் ஐம்பதுக்கு மேற்பட்டோர் தங்களுடைய தாலியையே பறிகொடுத்தார்களே.. அதற்கு நீங்கள்தானே காரணம்?

மதமாற்ற சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள்.. பிறகு விலக்கிக்கொண்டீர்கள்..

சிறுபான்மையினரிடத்தில் ஏதோ கரிசனம் உள்ளவர்களைப்போல காட்டிக்கொள்ள கிறித்துவ தேவாலயங்களிலும் சமபந்தி போஜனம் என்றீர்கள்.. அதை சம்பந்தப்பட்டவர்களில் சிலர் எதிர் குரல் கொடுத்ததும் பின்வாங்கிவிட்டீர்கள்..

மத்திய அரசு எந்த திட்டத்தை தமிழகத்திற்கு ஒதுக்கினாலும் ஒத்துழைக்க மறுக்கிறீர்கள்..

சேது சமுத்திர திட்டத்திற்கு முதலில் குரல் கொடுத்தது நீங்கள்தான் என்றீர்கள். ஆனால் அதை பிரதமர் அறிவித்தபோது அது நிறைவேறாமல் இருப்பதற்கு தங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தீர்கள்.. திட்டம் முடிந்து வெற்றிகரமாக செயலாக்கப்பட்டால் மீண்டும் என்னால்தான் என்றும் பேசுவீர்கள்..

இன்று தமிழகத்தில் பல இடங்களிலும் மத்திய தரைவழி அமைச்சகம் செயல்படுத்த முயன்றும் எத்தனை மேல்வழி பாலங்கள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றன..? அதற்கெல்லாம் தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்துவதில் தங்களுடைய அரசு காட்டும் தாமதம்தானே காரணம்?

சென்னைக்கு உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒன்றை ஆயிரம் கோடி செலவில் பிரதமர் அறிவித்தார். அதை செயல்படுத்த இதுவரை நீங்கள் ஏதாவது முயற்சி செய்தீர்களா? இப்போது நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக அரசு பொறுப்பில் செய்வோம் என்கிறீர்கள்..

இந்தியாவில் உத்தரபிரதேசத்திலும்தான் எதிர்கட்சி ஆட்சி செலுத்துகிறது.. அவர்கள் மத்திய அரசுடன் சுமுகமான உறவு வைத்திருக்கிறார்கள். பிரதமர் பங்கேற்கும் எல்லா விழாக்களிலும் பங்கேற்கிறார்கள்..ஆனால் இங்கு நிலை என்ன?

சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் திறப்பு விழா அழைப்பிதழில் உங்களுடைய ஒப்புதலின்பேரில் உங்களுடைய பெயர் அச்சிடப்பட்டும் கடைசி நேரத்தில் உடல் நலத்தைக் காரணம்காட்டி வராமல் புறக்கணித்தீர்களே.. எங்களைக் கண்டால் அலர்ஜி.. ஒத்துக்கொள்கிறோம்..ஆனால் பிரதமர் என்ன செய்தார்?

இப்படி மத்திய அரசு என்ன செய்தாலும் நான் ஒத்துவரமாட்டேன் என்றால் யாருக்கு நஷ்டம்? தமிழக மக்களுக்குத்தானே..?


அவருடைய பேச்சில் இருந்த நியாயத்தை, நிதர்சனத்தை உணர்ந்த நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன்..

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சிதான் ஆட்சிபுரியவேண்டுமா?

நிச்சயம் இல்லை.. ஆனால் கருத்து ஒற்றுமையுள்ள ஆட்சிகள் வேண்டும்..

சிறுபிள்ளைத்தனமான ஒத்துபோகுதலும் இருக்கலாகாது.. அதே போல நீ எதைச் செய்தாலும் நான் எதிர்ப்பேன்.. என்னைக் கலந்தாசிக்காமல் எதைச் செய்தாலும் நான் ஒத்துழைக்கமாட்டேன் என்று மூர்க்க குணமுள்ள ஆட்சியும் நமக்கு தேவையில்லை..

இன்று களத்தில் மோதிக்கொள்ளும் இருதரப்பிலும் நேர்மையற்ற அரசியல்வாதிகள் இருக்கின்றனர். சாதி, இன அரசியலை நடத்தியவர்களும் இருக்கின்றனர்.. அவர்கள் நடத்தும் வருமானத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லாத வாழ்க்கைதரத்தையும் நாம் கண்கூடாக காண்கிறோம்.

இச்சமயத்தில் ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது..

ஒரு சமயம் விண்ணகத்தில் நுழைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துவரவே கடவுள் பயந்துபோய் இனி நாளொன்றுக்கு இத்தனை பேர் விண்ணகத்திற்குள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானித்து வாயில்காப்போனாக இருந்த மிக்கேல் சம்மனசை (Angel) அழைத்து உங்களுடைய கணிப்பின் முறையை சற்று தளர்த்திக்கொள்ளவேண்டும் என்று கட்டளையிட்டாராம்.

ஒரு குறிப்பிட்ட நாளன்று விண்ணகத்திற்குள் அனுமதிக்கப்படவேண்டியவர்களுக்கென குறிக்கப்பட்ட அளவை எட்ட ஒரு நபர் தேவைப்பட்டதாம்..

ஆனால் கணிப்பிற்கு இருவர் காத்திருந்தனராம்..

அவர்களில் ஒருவர் அரசியல்வாதி. மற்றவர் அடியாள்.. அதாவது பணத்திற்காக ‘போட்டு தள்ளு’கிறவர்.

முன்னவர் சரியான ஊழல் பேர்வழி.. அவர் செய்யாத அக்கிரமங்களே இல்லை. அவருக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு உலகில் நிலுவையில் இருந்தது.. அவரால் இயன்றவரை தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு கடைசியில் குற்றம் நிரூபணம் ஆவதற்கு முன்பே படுகொலை செய்யப்பட்டவர்.

அடியாளுக்கு எதிராகவும் வழக்கு இருந்தது.. முந்தையவரைக் கொலை செய்த குற்றம். அதாவது மனித வெடி குண்டாக தன் உயிரையே பணத்திற்காக தியாகம் செய்தவர்.

கடவுள் தீர்ப்பிடுவதற்கு முன் ஒவ்வொருவரின் பாவ, புண்ணியங்களை தராசில் எடையிட்டு கடவுளுக்கு பரிந்துரை செய்பவர்தான் மிக்கேல் சம்மனசு (Angel).

அவர் யாரை விண்ணகத்திற்குள் பரிந்துரைப்பார் என்று நினைக்கிறீர்கள்?

அதுமாதிரிதான் நானும் செய்யப் போகிறேன்..

I would prefer the lesser evil.. இதில் யார் lesser evil என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது..

என்னைப் பொறுத்தவரை அது MK தலைமையிலான அணிதான்..33 comments:

Karthikeyan said...

வழக்கம் போல் நல்ல திறனாய்வு..

எந்த பக்கமும் சரியில்லை.
49 ஒ போடவும் பயம்.
ஒட்டு போடவும் ஆசை.

என் நிலைமை மிக மோசம்....

சுதர்சன் said...

சிதம்பரத்தின் பேச்சு அருமை.

பிரதீப் said...

சபாஷ்.
இதே லெஸ்ஸர் ஈவில் தத்துவத்தின் படிதான் நானும் திமுகவை ஆதரிக்கிறேன்.

மத்தியிலும் மாநிலத்திலும் திமுக ஆட்சி வந்தால் இவர்கள் ஆட்டம் தாங்காது என்பவர்கள் இன்னொருமுறை தொடர்ந்து ஜெ. கையில் ஆட்சியைக் கொடுத்தால் என்னாகும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

நல்ல அலசல், நல்ல முடிவு! வாழ்க!

tbr.joseph said...

வாங்க கார்த்திக்கேயன்,

தயவுசெய்து 49ஓ வேண்டாம். எல்லோரும் இப்படி செய்தால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் பீஹாரைப் போன்று இழுபறி ஆகிவிடும்.

யார் வந்தாலும் ஆட்சியில் பெரிதாய் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. ஆகவே யாரால் அதிகம் பாதிப்பு இருக்காது என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.

இது உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சேர்த்து..

tbr.joseph said...

வாங்க சுதர்சன்,

ப.சி. பேசியதில் இன்னும் நிறைய கருத்துக்கள் இருந்தன..

குறித்துக்கொள்ள விட்டுப்போய்விட்டது..

தேவ் | Dev said...

ஜோசப் சார்...

சரியான் நேரத்தில் சரியானப் பதிவு. :)

இன்னிக்கு வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனப் பிறகு தான் அலசி ஆராஞ்சு யாருக்கு குத்தலாம்ன்னு முடிவு பண்ணனும்

Sittukuruvi said...

என்னவோ போங்கள். கேப்டனை காரணமே இல்லமல் நிராகரிச்சுட்டீங்களே. ஜெயிக்கமாட்டார் என்ற ஒரே காரணம் தானோ?

tbr.joseph said...

வாங்க தேவ்,

யாருக்கு குத்தலாம்ன்னு முடிவு பண்ணனும் //

கரெக்ட். யாருக்காச்சும் ஒட்டு போட்டே ஆகணும்..

tbr.joseph said...

வாங்க பிரதீப்,

இன்னொருமுறை தொடர்ந்து ஜெ. கையில் ஆட்சியைக் கொடுத்தால் என்னாகும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.//

ஆமாம். இது மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று!

tbr.joseph said...

வாங்க சிட்டுக்குருவி,

கேப்டன் தனியாக ஜெயித்து சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்பதால் அவரை ஆதரித்து ஓட்டுகள் சிதறிப்போய்விடக்கூடாது.

அவர் இன்னும் சில ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபட்டு சேவை செய்யட்டும். அடுத்த தேர்தல்வரை நிலைத்து நின்றால் அப்போது பார்க்கலாம்.

இந்த தேர்தலில் அவருக்கு நிச்சயம் ஓட்டு இல்லை..

முத்து(தமிழினி) said...

சார்,

அருமையாக பதிவு

குறைந்த அளவே தீமை என்று நீங்கள் கூறியதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இன்று நாம் இருக்கிறோம்.

சிதம்பரம் கூறிய புள்ளிவிவரங்களும் அதை நீங்கள் எடுத்து இயம்பிய பாங்கும் கனஜோர்.

tbr.joseph said...

வாங்க முத்து,

நன்றி.

D The Dreamer said...

அருமையான பதிவு. பசிதம்பரம் அருமையாக பேசுவார். 2001 ஆம் ஆண்டும் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக வால் உபயோகப்படுத்தப்பட்டவர். (தலை இருக்கிறது தலைமை இல்லை கமெண்ட் ஞாபகம் இருக்கா சார்)

தமிழ்நாடு சிறக்க ப சிதம்பரம் முதலமைச்சர் ஆகும் காலம் கனியனும் சார் அல்லது அவர் போன்ற கண்ணியமிகு அரசியல்வாதிகள் பெருகனும். :)

Krishna said...

சென்றமுறை (2001ல்), ப.சி, யின் பேச்சை சென்னையில் இருந்தபோது நேரில் கேட்டேன். மிகப் பண்புள்ள, செறிவான பேச்சாய்ப் பட்டது. இம்முறையும் அவ்வாறே எனத் தெரிகிறது.

மீண்டும் ஒரு முறை தொடர்ந்து, அம்மாவுக்கே என நினைத்தாலே நடுங்குது. கம்யூனிஸ்டுகள் தயவில் முக ஆட்சி, ஒரு பரவலான நன்மைகளையும், சில தீமைகளையும் தரவல்லது என்பதால், அத்தகு ஆட்சி அமைய என் விருப்பம். ஆதலால், ஓட்டுப் போட இயலாத என்னால் முடிந்தது, உங்களுக்கு ஒரு +...

வி.சி. க்கள் கொஞ்சம் தொகுதிகள் பெற வேண்டும் என்பதும், விஜயகாந்த் தவிர்த்த வேறு யாராவது, அக்கட்சி சார்பாய் வெற்றி பெற வேண்டும் என்பதும் (வாய்ப்பிருக்கா எனத் தெரியவில்லை - இல்லையென்றால் அவர்), சில பழந்தின்னி கொட்டை போட்டவர்கள் திமுக, சார்பில் தோல்வியடைய வேண்டும் என்பதும் (மந்திரி ஆக முடியாதில்ல..), கவிஞர் சல்மா, அப்பாவு, ஞானசேகரன் (வேலூர்),ஜெயகுமார் (மந்திரி), டாக்டர். கிருஷ்ணசாமி, வெற்றி பெற வேண்டும் என்பதும், மதிமுக சார்பில் பொடாவினால் துன்பப் பட்டவர்கள் சிலர் வெல்ல வேண்டும் என்பதும், தோழர்கள் கனிசமாய் வெல்ல வேண்டும் என்பதும், பக்கத்தில், ரங்கசாமி தலைமையிலேயெ மீண்டும் காங். ஆட்சி என்பதும் என் விருப்பப் பட்டியல்கள்.

tbr.joseph said...

வாங்க d!

அவர் போன்ற கண்ணியமிகு அரசியல்வாதிகள் பெருகனும். //

கண்டிப்பா. அவர் தமிழக முதலமைச்சராகும் காலம் வருமா? ஹூம்..

Krishna said...

//அவர் இன்னும் சில ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபட்டு சேவை செய்யட்டும். அடுத்த தேர்தல்வரை நிலைத்து நின்றால் அப்போது பார்க்கலாம்.

இந்த தேர்தலில் அவருக்கு நிச்சயம் ஓட்டு இல்லை.. //

காப்டன் குறித்த உங்கள் கருத்திலும் அப்படியே ஒத்துப் போகிறேன். அவர் இப்பொழுது பெரு வெற்றி பெற்றால், ஒவ்வொரு ஹீரோவும் இதற்கு முயல்வார். தமிழகம் தாங்காது.

குறைந்த பட்சம், இவர் அடுத்த ஐந்தாண்டுகள் அரசியலில் இருந்து, மக்கள் பிரச்சினைக்கு போராடிக் கொண்டிருக்கட்டும், அப்போது மக்கள் இவரைக் கொண்டாடுவர்.

tbr.joseph said...

வாங்க கிருஷ்ணா,

என் விருப்பப் பட்டியல்கள். //

அடேங்கப்பா பட்டியல் ரொம்ப நீளமா இருக்கே.. பேராசைதான் உங்களுக்கு :)

Doondu said...

நாங்களூம் திமுக அணிக்கு வாக்களிக்க இருக்கிறோம்.

போலிடோண்டு தலைமைக் கழகம்
துபாய்.

tbr.joseph said...

குறைந்த பட்சம், இவர் அடுத்த ஐந்தாண்டுகள் அரசியலில் இருந்து, மக்கள் பிரச்சினைக்கு போராடிக் கொண்டிருக்கட்டும்//

சரியாய் சொன்னீர்கள்..

tbr.joseph said...

நாங்களூம் திமுக அணிக்கு வாக்களிக்க இருக்கிறோம்.

போலிடோண்டு தலைமைக் கழகம்
துபாய். //

அட! தோ பார்றா.. முதல் தடவையா 'டூண்டு' அனுப்புன பிரசுரிக்கத்தகுந்த பின்னூட்டம் இதுவாத்தான் இருக்கும்..

யாரங்கே.. நூறு பொற்காசுகளை குரியரில் அனுப்பு!

ஜோ / Joe said...

ஜோசப்சார்,
ஓட்டு போட இயலாவிடினும் ,உங்கள் நிலைப்பாடு தான் என்னதும்.

tbr.joseph said...

வாங்க ஜோ,

நன்றி..

NRI களும் தபால் மூலம் ஓட்டுப்போடும் முறை வரவேண்டும்..

ப்ரியன் said...

நல்ல அலசல் ஜோசப் சார்...

அதிமுக வுக்கு திமுக எவ்வளாவோ மேல்.இவர்களுக்கு மாற்று வேண்டும் தான் ஆனாலும் அது இன்றைக்கு சாத்தியமில்லை ஆனால் நம் காலத்திற்குள் நடக்கும் என்பது உண்மை.

எங்கள் தொகுதியில் ஜாதி பாசம் விட்டுப்பார்த்தால் இரு அணியிலுமே ஓரளவு நல்லவர்க்ள்தாம் திமுக சார்பில் நின்கிறவர் ஏற்கனவே இருந்த போது பல நல்லதுகள் செய்திருக்கிறார்.அதிமுக சார்பில் சென்றமுறை வென்றவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை ஆனாலும் அதிமுக சார்பில் நிற்பவர் கட்சி பாகுபாடுகளையும் தாண்டி பல நன்மைகள் செய்தவர்.அவர் ஜாதி ஓட்டுகளும் உண்டு.

நானும் அவருக்குத்தான் ஓட்டளிக்க வேண்டுமென நினைத்திருந்தேன்.ஆனால் தினமலரில் அவருக்கு ஓட்டுப் போட்டு அம்மாவை வெற்றி பெற வைக்கச் சொல்லி மணல் கொள்ளைக்கு பேர் போன கோவை அன்பர் ஒருவர் விளம்பரத்தில் கேட்கிறார்.அவருக்கு என்ன பாசம்?அவர் வந்தால் இவருக்கு மேலும் 'கொள்ளை' லாபம்தானே அதனால் நானும் முடிவை மாற்றிவிட்டேன்.நன்றி சரியான நேரத்தில் ஓட்டு கேட்டு விளம்பரம் தந்த அந்த கோவை கொள்ளை அன்பருக்கும் வெளியிட்ட தினமலருக்கும்.

tbr.joseph said...

வாங்க ப்ரியன்,

அதனால் நானும் முடிவை மாற்றிவிட்டேன்//

பாருங்க.. எப்படியெல்லாம் வாக்காளர்களின் முடிவுகள் மாறுகின்றன..

அதனால்தான் நம் நாட்டைப் பொறுத்தவரை கருத்துக்கணிப்புகள் பல நேரங்களில் பொய்த்துப்போகின்றன. Exit Polls எனப்படும் கணிப்புகள் 60% சரியாக இருக்கின்றன.. அதன்படி ஹிந்து நாளிதழின் திங்கட்கிழமை அன்று நட்டத்தவிருக்கும் கணிப்பு எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

அரவிந்தன் said...

ஜொஸப் சார் என்னை கேட்டால் 49 ஓ போட்டு அனைத்து வேட்பாளர்களையும் கதிகலன்ஹ்கச்செய்யா வேண்டும், அப்போதுதான் இவர்களுக்கு பயம் வரும், கட்சிகளும் நல்ல கண்ணியமானவர்களுக்கு வாய்ப்பு அளிப்பார்கள்.

அரவிந்தன்

tbr.joseph said...

வாங்க அரவிந்தன்,

ஆனால் நம்முடைய வரிப்பணத்தை நாமே வீணாக்கிவிடுவோமே..

உங்களுடைய யோசனைபடி செய்தால் யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காமல் போய் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க வேண்டி வருமே..

ஆகவே.. 49 ஓ வால் எந்த பயனும் இல்லை.. படித்தவர்கள் ஓட்டளிக்காவிட்டால் நஷ்டம் அவர்களுக்குத்தான். ஏனென்றால் படித்தவர்களை விட படிக்காதவர்கள் அதாவது 49 ஓவை அறிந்திராதவர்கள்தான் அதிகம் பேர்.. ஆகவே படித்தவர்கள் அனைவருமே ஓட்டளிக்க வேண்டும்..

Muthukumar Puranam said...

மிகசிறந்த சாதனை1
தமிழ்நாட்டில் கலகம் இல்லாமல் ஆண்டது. (தான் ஆட்சிக்கு வர புலியும் சிங்கமும் மோதட்டும் என்று இப்பொழுதே ஆரம்பித்தாகிவிட்டது).

2) ரவுடிகளை ஒழித்தது.

3)தீவரவாதத்தின் நிழல் கூட தமிழகத்தில் படாமல் காக்கும் தலைமை
(திமுக வந்தால் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் நன்றாக சம்பாதிப்பர்)
4) பெண்களுக்கு பாதுகாப்பு
5) ஒட்டுமொத்த வளர்ச்சி சிறப்பாகவே இருப்பது என்று positives பல இருக்கு.

திமுக:
1) குடும்பம், குடும்பதொழில். tata வை மிரட்டிய பெருமையுடைத்து.
2) உடன்பிறப்புக்களின் கட்டப்பஞ்சாயத்து.
3) தலைமை பலகீனமாகி வருவதால், திறமையற்ற ஆட்சியாளர்கள் (stalin, thayanidhi, azhagiri களின் குண்டா ராஜ்யம்)
4) தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளிடம் சமரசம், அதுவே தமிழ்பற்று என்ற பறைசாற்றல் (வீரப்பன் சாப்பிட்ட இட்லியை பிடித்தோம் என்று sun TVla vanthathu).
5) possibilities for Lawlessness and riots


Ammaku thaan en vote..ungal votum kooda apdiye irunthaal magizhven

Krishna said...

//At 2:17 PM, குழலி / Kuzhali said…

//1) தமிழ்நாட்டில் கலகம் இல்லாமல் ஆண்டது.
//
பதில் திமுக காரன் மாதிரி சொல்ல வேண்டியதிருக்கும் இருந்தாலும் பிறகு சொல்கிறேன், இப்போதல்ல (இது ஒரு பிரச்சார பதிவல்லவா/)
//2) ரவுடிகளை ஒழித்தது.
//
தனக்கு பிடிக்காத ரவுடிகளை மட்டும் ஒழித்தது, திமுக பேரணியில் ரவுடி வீரமணியை வைத்து வெட்டி இருவரை கொன்றுவிட்டு பிறகு அவனை சுட்டு தள்ளினார்கள், ரவுடிகள் ஒழிந்தனர் ஆனால் அதிமுகவிற்கு பிடிக்காத ரவுடிகள் மட்டும், பேருந்தினுள் வைத்து கொளுத்திய ரவுடிகள் இன்னமும் உள்ளனர், ஆதிராஜாராம், சேகர் பாபு போன்றவர்கள் அதிமுகவில் உள்ளனர், உடனே மற்ற கட்சிகளின் தாதா பட்டியல் போட வருபவர்களுக்கு கொஞ்சம் பொறுங்கள் அதிமுகவின் சாதனையாக சொன்னது ரவுடிகள் ஒழிந்தனர், மாற்று கட்சி தாதாக்களை பட்டியலிட்டால் ரவுடிகள் இன்னமும் உள்ளனர் என்று தானே அர்த்தம்...


//3)தீவரவாதத்தின் நிழல் கூட தமிழகத்தில் படாமல் காக்கும் தலைமை
(திமுக வந்தால் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் நன்றாக சம்பாதிப்பர்)
//
பயங்கரவாதி வைகோவுடன் கூட்டே வைத்துள்ளார் ஜெயலலிதா, நக்கீரன் கோபால், நெடுமாறன், சுப.வீ எல்லாம் தீவிரவாதிகளா? என்னமோ இதற்கு முன்பெல்லாம் தமிழகம் காஷ்மீர் மாதிரி இருந்ததாகவும் இப்போது அமைதிப்பூங்காவாக இருப்பது போலவும்....

சம்பாதித்த தீவிரவாதி ஆதரவாளர்கள் பெயரையும் சொல்லுங்கள்

//4) பெண்களுக்கு பாதுகாப்பு
//
என்னங்க இதுக்கு முன்னாடி தெருவில் போன எல்லா பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத மாதிரியும் அம்மா ஆட்சியில் ஆளூக்கு ஒரு போலிஸ் பாதுகாப்பு போட்ட மாதிரியும், இந்த ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த தாக ஏதேனும் புள்ளிவிபரம் இருந்தால் தாருங்கள் ஒத்து கொள்கிறேன்...

//5) ஒட்டுமொத்த வளர்ச்சி சிறப்பாகவே இருப்பது என்று positives பல இருக்கு.
//
யாருடைய வளர்ச்சிங்க? மன்னார்குடி குடும்பத்தின் வளர்ச்சியா? இரண்டே ஆண்டில் வளர்ந்த MIDAS ஆ? மணல் காண்ட்ராக்டர் ஆறுமுகச்சாமியா?


At 2:25 PM, Pot"tea" kadai said…

4) பெண்களுக்கு பாதுகாப்பு

ஆத்தா ஜெயலட்சுமி, அக்கா செரினா ரெண்டு பேருக்கும் எவ்ளோ பாதுகாப்பு...நீங்க டிவியெல்லாம் பாக்கறதில்லையா?//

முத்துகுமார் உங்களுக்கு கொஞ்சம் தெளிவு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.

sivagnanamji(#16342789) said...

adhe! adhe!

tbr.joseph said...

வாங்க ஜி!

நன்றி, நன்றி!!

திரு said...

நல்ல அலசல் ஜோசப் அய்யா! சிதம்பரம் அவர்களது கேள்விகள் தமிழ்நாட்டு மக்களின் பெரும்பாலானவர் கேட்க தவிக்கிற கேள்விகள். 49 ஓ என்பது நடைமுறை அரசியலுக்கு உகந்ததல்ல. நல்ல தலைவர்களை உருவாக்குவதும், அவர்களை ஆதரிப்பதும் மக்களின் கடமை.

tbr.joseph said...

வாங்க திரு,

49 ஓ என்பது நடைமுறை அரசியலுக்கு உகந்ததல்ல. நல்ல தலைவர்களை உருவாக்குவதும், அவர்களை ஆதரிப்பதும் மக்களின் கடமை. //

மிகச்சரியாய் சொன்னீர்கள்.

ஜெய. சந்திரசேகரன் said...

பாவம் நீங்கள். வேலை நிமித்தம் பல ஊர்களில் இருந்துவிட்டதால், பி.சி. பற்றிய பல நிஜங்கள் தெரியாமல், அவர் பேச்சை நம்பி, மற்றவரைப்பற்றிய அபிப்ராயத்தை மாற்றிக்கொண்டுள்ளீர்கள். 49-ஒ போட்டால், ஒரு வேளை யாருமே ஜெயிக்கவில்லை என்றால், மறு தேர்தல் நடக்கும். நின்ற வேட்பாளர்கள் அன்றி, வேறொருவர் நிற்கவேண்டும்.கட்சிகளுக்கு பயம் வரும். கொஞ்சமாவது நல்ல மனுஷனை நிப்பாட்டலாமேயென்று! lesser evil? DMK? நல்ல ஜோக்- ஜோ சார் சொன்ன ஜோக்! உங்கள் மற்ற பதிவுகள் படித்து பின்னூட்டம் போட நினைத்து வேலை நிமித்தம் போட முடியாமல் போனது, பல முறை.இனி தொடர்ந்து படித்து, போடுவேன்.