10 June 2011

மு.க. என்ன செய்யப் போகிறார்?


இன்று பிற்பகல் திமுகவின் உயர்மட்டக் குழு கூடி அவசர ஆலோசனை செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது?

இந்த அவசரக் கூட்டம் எதற்காக?

சில நாளேடுகள் திமுக தன்னுடைய மத்திய அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து விலக்கிக் கொள்ளக் கூடும் என்கின்றன. அது அவர்களுடைய ஊகம் மட்டுமல்ல, விருப்பமும் கூட. மாநிலத்தில் ஆட்சியை இழந்த திமுக மத்தியிலும் ஆட்சியில் இல்லையென்றால் அது மக்கள் மனதிலிருந்து அறவே அழிந்து ஒழிந்து போகும், போக வேண்டும் என்பது இத்தகைய பத்திரிகைகளின் ஆவல்.

அந்த ஆவலை, எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைக்கப் போகிறாரா மு.க? இதைத்தான் சமீபத்தில் 'கூடா நட்பு தீதாய் முடியும்' என சூசகமாக கூறினாரா? அவருடைய அன்பு மகள் கனிமொழி இருமுறை முன்ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு இருக்கும் அவல நிலைக்கு மத்தியில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ்தான் மறைமுக காரணம் என்று அவர் கருதும் சூழலில் அவருக்கு அத்தகைய நட்பே வேண்டாம் என முடிவெடுக்க வாய்ப்புள்ளது. அவருடைய இப்போதைய மனநிலையிலிருக்கும் எவராலும் அப்படித்தான் முடிவெடுக்க முடியும் என்பதில் ஐயமில்லை. ஆனால்
அத்தகைய முடிவு அது எந்த வகையில் அவருடைய கட்சிக்கு பலனளிக்கப் போகிறது என்பதை விட எப்படியெல்லாம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் நல்லது என கருதுகிறேன்.

அமைச்சரவையிலிருந்து விலகிக்கொள்ளலாம் என அவர் முடிவெடுக்க வேறொரு காரணமும் உண்டு. மத்திய அமைச்சர் திருத்தி அல்லது மாற்றி
அமைக்க வாய்ப்புள்ளது என பிரதமர் அவர்கள் சமீபத்தில் கூறினார். அத்தகைய சூழலில் தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ள தயாநிதி
மட்டுமல்லாமல் திமுகவை சார்ந்த வேறு அமைச்சர்களும் கூட பதவியை பறிகொடுக்கலாம் என தெரிகிறது. அப்படியொரு சூழல் ஏற்படுவதை
தவிர்க்க நாமாகவே அமைச்சரவையிலிருந்து விலகிக்கொண்டால் என்ன என்றும் முக நினைத்திருக்கலாம்.

காரணம் எதுவானாலும் அத்தகையதொரு முடிவு கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதையும் முகவும் கட்சியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது திமுக பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வந்த கொள்கை. ஆனால் மாநிலத்தில்
ஆட்சியில் இல்லாத சமயத்தில்தான் மத்தியில் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மறந்ததன் விளைவுதான் இன்றைய திமுகவின் இழிநிலைக்கு முக்கிய காரணம்.

மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காலத்தில் மத்தியிலுள்ள கூட்டாட்சியில் அங்கத்தினராக இருக்கும் பட்சத்தில் நாட்டின் ஒட்டுமொத்த நிலையை கருதி மத்தியிலுள்ள கூட்டணியரசு எடுக்கும் சில முடிவுகள் தாங்கள் ஆட்சியிலிருக்கும் மாநிலத்திற்கு எதிரானதாக இருக்க
வாய்ப்புள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஐந்தாண்டுகளில் அடிக்கடி உயர்த்தப் பட்ட பெட்ரோல் விலை, சிங்கள அரசுக்கு சாதகமாக
மத்திய அரசு எடுத்த பல முடிவுகள், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோதும் அந்த நாட்டுடனான பொருளாதார உறவில் விரிசல் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கவலையில் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்த நிலை.... இத்தகைய முடிவுகளுக்கு திமுக காரணம் இல்லை என்றாலும் மத்திய கூட்டணியில் இருந்ததால் பகிரங்கமாக எதிர்க்க முடியாத சூழல்....இன்று ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசு தைரியமாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறதென்றால் அதற்கு மத்தியிலுள்ள ஆட்சியில் தங்களுக்கு பங்கில்லை என்கிற துணிவால்தான். இல்லையென்றால் மேடமும் வாயை மூடிக்கொண்டுதான் இருந்திருப்பார்!

மேலும், நாட்டின் மிகப் பெரிய ஊழலில் திமுக அமைச்சர்களில் சிலர் சிக்கிக்கொண்டதற்கு முழு காரணமே மத்தியில் கட்சியின் சார்பில்
அமைச்சர்களாக இருந்த ஒரு சிலரின் அரசியல் மற்றும் மேலாண்மை (Management) முதிர்வின்மையே காரணம். குறிப்பாக ராஜா. அவர் சட்டம்
படித்தவர்தான் என்றாலும் நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர்கள் ஒருசிலர் மற்றும் அரசியல் தரகர்கள் சிலரின் வியாபார/அரசியல் தந்திர
வலையில் சிக்கி அவர்களுக்கு சாதகமாக முடிவெடுக்கக் வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் என்றால் அதற்கு அவருடைய அனுபவமின்மையும்
ஒரு காரணம். எங்களுக்கு சாதகமாக நீங்கள் முடிவெடுங்கள்...கலைஞர் தொலைகாட்சியில் முதலீடு செய்கின்ற சாக்கில் உங்களுக்கும்
உங்களுடைய தலைவருக்கும் வேண்டிய தொகையை நாங்கள் தருகிறோம் என்பதுபோன்ற ஆசை வார்த்தைகளை நம்பி அவரும் வீழ்ந்து
கட்சியையும் வீழ்த்திவிட்டார். அதற்கு ஒத்து போன கனிமொழிக்கும் இத்தகைய அனுபவின்மையே காரணம்... திருடுபவனை விட கையும் களவுமாய் சிக்கிக்கொள்பவனுக்குத்தான் தண்டனையின் வீரியம் அதிகம் தெரியும்.... அதைத்தான் கனிமொழி இப்போது அனுபவித்து படித்துக்கொண்டுள்ளார்...இனி திருடுவார்... ஆனால் சிக்கிக்கொள்ள மாட்டார்... தற்போதைய தமிழக முதல்வரைப் போல....

என்னுடைய வங்கியிலும் கூட முதல் முதலாக மேலாளர் பதவிக்கு உயர்த்தப்படுபவர்கள் முதலில் மிகச் சிறிய கிராம கிளைகளில்
அமர்த்தப்படுவார்கள். மும்பை, கொல்கொத்தா, தில்லி போன்ற பெரு நகரங்களில் கிளை மேலாளராக பணிபுரிய திறமை மட்டுமே ஒருவருக்கு
போதாது. தொழிலில், வணிகத்தில் அனுபவம் மிகுந்த அதிபர்கள், முதலாளிகளின் வசிய வலையில் சிக்காமல் இருக்கக் கூடிய அனுபவமும் (work experience and maturity) மேலாளர்களுக்கு மிகவும் தேவை என்பதை அனுபவ பூர்வமாக உயர் அதிகாரிகள் அறிந்திருப்பதால்தான் தங்களைப்
போன்றே புதியவர்களும் இத்தகைய வலையில் சிக்கி சீரழிந்துபோய்விடக் கூடாது என்று கருதி கிராம, நகர கிளைகளில் தகுந்த அனுபவம் பெற்ற
பிறகே பெருநகர கிளைகளில் மேலாளர்களாக அமர்த்துவார்கள்.

மேலும்... இத்தகைய மாபெரும் ஊழலுக்கு திமுக மட்டுமே பொறுப்பு என்கிற வாதத்தையும் என்னால் ஏற்கவே முடியவில்லை. ஏனெனெலில் ஹிந்து தினத்தாள் ராஜாவுக்கும், பிரதமருக்கும் இடையே எழுதப்பட்ட பல கடிதங்களை வெளியிட்டிருந்தது. அதன்படி ராஜா மற்றும் அவருடைய
அமைச்சரகம் எடுத்த ஒவ்வொரு முடிவுக்கும் பிரதமர் மட்டுமல்லாமல் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழுவும் (GoM) முழு பொறுப்பு
ஏற்கவேண்டும். பிரதமர் தனிப்பட்ட முறையில் நாணயஸ்தன், நேர்மையானவர் என்று கூறிக்கொள்வதில் பெருமையில்லை தன் கண் எதிரே
நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு ஊழலை, முறை கேட்டை, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தக் கூடிய ஒரு செயலை கண்டும் காணாதவாறு இருந்ததன்
மூலம் ஒரு accomplice என்கிற நிலைக்கு உள்ளாகிறார். ராஜாவுக்கும் அவருடைய அதிகாரிகளுக்கும் சிறை என்றால் குறைந்தபட்சம் பிரதமருக்கும்
மூத்த அமைச்சர்களுக்கும் பதவி இழப்பாவது ஏற்பட வேண்டும்.. அதுதான் நியாயம்.

இந்த காரணத்திற்காகவே திமுக அமைச்சரவையிலிருந்து விலகாமல் பிரதமருக்கும் சோனியாவுக்கும் ராஜாவின் முடிவுகளுக்கு பங்கு உண்டு
என்பதை உரத்தக் குரலில் கூற வேண்டும். அரசியல் ரீதியாக அவர்களுடன் ஒத்துழையாமல் இருக்க வேண்டும். வேறு வழியின்றி பதவி விலகுவது
என்று தீர்மானிக்கும்பட்சத்தில் அரசுக்கு அளித்துவரும் ஆதரவையும் ஒருசேர விலக்கிக்கொள்ள வேண்டும். அமைச்சரவையில் பங்கில்லை ஆனால்
ஆதரவு வெளியிலிருந்து என்பதுபோன்ற அங்கும் இல்லை இங்கும் இல்லை என்பதுபோன்ற முடிவு எடுப்பதால் திமுகவுக்கு எவ்வித நன்மையும்
இல்லை.

இறுதியாக ஒன்று. இனியும் கனிமொழி, ராஜா போன்றவர்கள் நிரபராதிகள் என்கிற பத்தாம்பசலி போக்கை முக கைவிட்டுவிட வேண்டும்.
இருவருமே ஒருவேளை போதிய ஆதாரங்கள் இல்லை என்று உச்சநீதிமன்றத்தால் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படலாம்... டான்சி வழக்கில் ஜெயலலிதா தன் மனசாட்சிக்கு எதிராக தன்னுடைய கையொப்பத்தை தன்னுடையதல்ல என்று கூறியதால்தான் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் குற்றவாளி என்பது அவருக்கும் தெரியும் உச்சநீதிமன்றத்திற்கும் தெரியும். அதுபோன்று கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்ட தொகையில் கனிமொழியை சம்மந்தப்படுத்த எந்த ஆவணங்களும் இல்லை என்கிற அடிப்படையில் கனிமொழி விடுவிக்கப்பட வாய்ப்புண்டு. அதுபோன்றே ராஜா எடுத்த முடிவுகளால் மத்திய அரசுக்கு இத்தனை லட்சம் கோடி இழப்பு என்ற வாதத்தை மெய்ப்பிக்க சிபிஐயிடம் எவ்வித ஆவண ஆதாரமும் இல்லை... மத்திய அரசே இழப்பு ஏதும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கூறவும் வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலில் ராஜாவை விடுவிப்பதை தவிர வேறு வழியிருக்காது. ஆயினும் இருவருக்குமே தெரியும் தாங்கள் குற்றவாளிகள்தான் என்பது தெளிவாக தெரியும்...

எனவே இனியும் என் மகள் நிரபராதி, திமுகவை அழித்தொழிக்க காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்றெல்லாம் முக புலம்புவதை தவிர்த்து இந்த சிக்கலில் இருந்து கட்சியை மீட்க என்ன வழி என்பதை ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

6 comments:

கோவி.கண்ணன் said...

//காரணம் எதுவானாலும் அத்தகையதொரு முடிவு கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதையும் முகவும் கட்சியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். //

காங்கிரசு கழட்டிவிடும் முன் இவர்களாக கழண்டு கொண்டால் கவுரவம் என்று நினைக்கிறார்கள்,அதுவும் சரி தானே ?

bandhu said...

கருணாநிதி மனதிற்குள் "நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்! நாம் என்ன செய்தாலும் அதை எப்படியாவது மற்றவர் மட்டும் ஒழுங்கா என்று சொல்லியே நியாயப்படுத்திவிடுவார்கள்!" என்று இந்த பதிவை பார்த்து நினைத்துக்கொள்ளலாம்!

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

காங்கிரசு கழட்டிவிடும் முன் இவர்களாக கழண்டு கொண்டால் கவுரவம் என்று நினைக்கிறார்கள்,அதுவும் சரி தானே ?//

திமுகவை கழற்றிவிடக் கூடிய துணிவு காங்கிரசுக்கு தற்போது இல்லை. அடுத்த பார்லி தேர்தலுக்குள் மேடத்தின் கதி என்னவாகுமோ. கர்நாடகா நீதிமன்றம் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்துவிட்டால்?

டி.பி.ஆர்.ஜோசஃப் said...

நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்!//

நான் திராவிடக் கட்சிகளுக்கு என்றுமே அடிமையில்லை. இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான், காமராஜர் கூறியதுபோல. ஆனால் மேடத்தின் அடாவடி அரசியலுடன் ஒப்பிடுகையில் கருணாநிதி தேவலை என்பதாலும் நான் காங்கிரஸ் அனுதாபி என்பதாலும் திமுகவை விரும்புகிறேன்.

சரி என்னைப்போன்றோ திமுகவுக்கு அடிமைகள் என்றால் நீங்கள் ஊழல் ராணி ஜெயலலிதாவின் கொத்தடிமைகளா?

துளசி கோபால் said...

அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காய்கள்தானே அரசியல் வியாதிகள்?

வியூகம் வகுக்க மனக்கணக்குப் போட்டுக்கிட்டு இருக்கலாம் மு.க.

பொறுத்திருந்து பார்க்கணும்.

ரொம்ப நாட்களுக்குப்பிறகு பதிவு போட்டுருக்கீங்க போல! நலமா?

டி.பி.ஆர் said...

ரொம்ப நாட்களுக்குப்பிறகு பதிவு போட்டுருக்கீங்க போல! நலமா?

இந்த பதிவு போட்டே ரெண்டு மாசமாயிருச்சே, இன்றைக்குத்தான் பார்த்தீர்கள் போலிருக்கிறது:))

வலது தோள்பட்டை எலும்பு தேய்மானம் காரணமாக என்னால் முன்பு போல் கணினியில் எழுத முடியவில்லை ஆகவே இப்போதெல்லாம் பதிவுகளை படிப்பதுடன் நிறுத்திக்கொள்கிறேன்:((