17 March 2010

என் பதின்ம வயது நினைவுகள்...

பதின்ம வயது நினைவுகள்...

முதலில் என்னை அழைத்த நண்பர் தருமிக்கு நன்றி.

கடந்தகால நிகழ்வுகளை அசைபோடுவதே ஒரு அலாதியான விஷயம். அதுவும் பள்ளிப் பருவத்தில் நடந்தவற்றை முழுமையாக அல்லாவிடினும் அரைகுறையாக, கனவுகளில் வந்து கரைந்துபோகுமே அதுபோல், அசைபோடுவதென்றால் ஆனந்தம்தான்.

நண்பர் தருமியின் மின்னஞ்சலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

என்னுடைய 'என்னுலகம்' வலைத்தளத்தில் நான் தொடர்ந்து எழுத முடியாமல் போய் சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் மட்டுமல்லாமல் 2007-08 ஆண்டில் தினம் ஒரு பதிவு என தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த பலரும் - நண்பர் தருமி உட்பட - இப்போது மாதம் ஒரு பதிவு எழுதுவதே அதிகம் என சுருங்கிப்போயுள்ளதை நான் உணர்ந்ததால் பணியிலிருந்து ஓய்வு பெற்றும் தொடர்ந்து எழுத மனமில்லாமல் இருந்தேன். அத்துடன் பணி ஓய்வு பெற்று வங்கி அளித்திருந்த குடியிருப்பில் இருந்து மாறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட 
பல அலுவல்கள், வீட்டுக்கு ஒரு தொலைபேசி, இண்டெர்நெட் இணைப்பு, ரேஷன் கார்டு, பால் கார்டு இத்யாதி, இத்யாதி என கடந்த ஒரு மாத காலமாக ஓய்வில்லாத அலைச்சல் வேறு. 

இந்த சூழலில் நண்பர் தருமியின்  கிடைத்ததும் சரி இதையே ஒரு வாய்ப்பாக கருதி மீண்டும் எழுதினால் என்ற ஒரு உந்துதலில்....

சுமார் ஐம்பதாண்டு காலம் பின்னோக்கி சென்று என்னுடைய பதின்மவயதில் நான் எப்படி இருந்தேன் என எண்ணிப் பார்க்கிறேன். 

அப்போது நான் படுபயங்கர வாலாக, சண்டித்தனம் செய்பவனாக இருந்தேன். பள்ளியிலும் நான் குடியிருந்த இடத்திலும் நண்பர்களை விடவும் எதிரிகளே அதிகம் இருந்தனர்.

அப்போது நான் அப்பா, அம்மா நான்கு சகோதரர்கள்,  தாத்தா, அம்மாச்சி (தாயாரின் அம்மா), மாமா, சித்தி, சித்தப்பா,  ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருந்ததும் நினைவிருக்கிறது.  

சென்னையில் இப்போதெல்லாம் அப்படியொரு வீட்டைக் காண்பது மிகவும் அரிது. நாங்கள் அன்று வசித்த வீடு இருந்த இடத்தில் இப்போது சுமார் அறுபது குடியிருப்புக்களைக் கொண்ட எட்டு மாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது. 

தெருவில் இருந்து சுமார் நூறடி சந்து..அதன் இறுதியில் இருபுறமும் நீண்ட திண்ணைகள் - இதுதான் தாத்தாவின் நிரந்தர குடியிருப்பு. காற்று, மழை, வெயில், குளிர் எதுவானாலும் திண்ணையில்தான் உறக்கம் - கொண்ட ஓட்டு வீடு. திண்ணையைச் சுற்றிலும்  கூரை சட்டத்திலிருந்து திண்ணை விளிம்பு வரை ஒரு நீண்ட திரை (screen) தொங்கும். தினமும் காலையில் அதை அப்படியே சுருட்டி விட்டத்திலிருந்து ஆணிகளில் மாட்டுவதுதான் குடும்பத்திலிருந்த என்னைப் போன்ற சிறுவர்களின் முதல் வேலை. கூட்டுக் குடும்பத்தில் என்னையும் சேர்த்து எட்டு சிறுவ, சிறுமிகள் - ஒன்றிலிருந்து ஒன்றரை வயது வித்தியாசத்தில். 

வீட்டுக்கு நடுவில் வாணம் பார்த்த நீள்-சதுர வடிவத்தில் முற்றம் - தோராயமாக முப்பது அடி நீளமும் இருபது அடி அகலமுமாய் விசாலமாய் கடப்பா கல் வேயப்பட்ட தரை - அதைச் 

சுற்றிலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக அறைகள் - அவற்றை இதற்குத்தான் என்றில்லாமல் இப்போதுள்ள பாஷையில் Multi-purpose அறைகள் என்று படுக்க, படிக்க, சாப்பிட என அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள. எல்லா குடும்பத்திற்கும் பொதுவாக ஒரு பெரிய ஹால் - இங்குதான் குடும்ப விசேஷங்கள் அனைத்தும் நடைபெறும் - மஞ்சள் நீராட்டிலிருந்து, இரண்டு சித்திமார்களின் நிச்சயதார்த்தங்கள், ஒரு திருமணம் - தாத்தா இறந்துபோன போதும் அவரது சடலமும் இங்குதான் கிடத்தியிருந்தார்கள் - அவர் கிடத்தப்பட்டிருந்த மரப்பெஞ்ச்சை சுற்றிலும் கையில் எரியும் மெழுகு திரியுடன் பாதிரியாருடன் சேர்ந்து அழுதவாறே ஜெபித்தது இதோ இப்போதும் கண் முன்னே விரிகிறது.

முற்றத்தில் குளியல். குளியல் என்றால் ஜலகிரீடைப் போலத்தான். முற்றத்தின் நெட்டில் ஒரு நீண்ட தொட்டி இருந்தது. அதையொட்டியிருந்த கிணற்றில் இருந்து குடும்பத்து ஆண்கள் - அப்பா, சித்தப்பா, இரண்டு மாமன்மார்கள் - நால்வரும் அதிகாலையில் எழுந்ததும் மாறி, மாறி இறைத்து ஊற்றி வைத்துவிடுவார்கள். அதுதான் நாள் முழுவதும் செலவுக்கு. குளியல், துணி துவைத்தல் - இது அம்மா மற்றும் மூன்று சித்திமார்கள் வேலை - எல்லாம். கூட்டுக்குடும்பம் போலவே குளியலும் கூட்டுக் குளியல்தான். என்னுடைய மூத்த சகோதரரைத் தவிர - அப்போது அவருக்கு பதினெட்டு வயதிருக்கும் - மீதமுள்ள சிறுவர்கள் அனைவர் மீதும் அப்பா தொட்டியிலிருந்து தண்ணீரை குவளையில் அள்ளி வீசுவார். முதலில் உடலையும்,  தலையையும் நனைத்துக்கொள்ள - பிறகு இறுதியில் தலைமுதல் கால்வரை உள்ள சோப்பை கழுவ - இதற்கு இரண்டுக்கும் இடைபட்ட வேளை ஒரு நிமிடம் இருக்குமா என்பது சந்தேகமே - அதற்குள் சோப்பை உடல் முழுவதும் தேய்த்து முடித்திருக்க வேண்டும் - கடைக்குட்டிகளுக்கு மட்டும் கடைக்குட்டி சித்தி தலையை தேய்த்து விடுவார் - மொத்த குளியலும் இரண்டு நிமிடத்திற்குள் முடித்துவிட வேண்டும். 

இந்த முற்றம் இதற்கு மட்டுமல்லாமல் எங்களை தண்டிக்கும் சிறைக்கூடமாகவும் பயன்படும். இதில் மிக அதிகமாக சித்திரவதைப் பட்டவன் அடியேந்தான். ஒவ்வொரு சண்டித்தனத்தின் வீரியத்தைப் பொருத்து தண்டனையின் வீரியமும் இருக்கும். மிக அதிக தண்டனை உச்சி வெயிலில் நெருப்பென சுடும் கடப்பா தரையில் கல் உப்பை பரப்பி அதன் மீது முட்டியில் நிற்பது. ஒரு நிமிடம் முட்டியில் நின்றால் இரண்டு முட்டியும் கொப்பளித்துப் போய் ஆறுவதற்கே ஒரு வாரம் ஆகிவிடும். அதற்கிடையில் மீண்டும் ஏதாவது வம்பில் சிக்கிக்கொண்டால் முட்டிப்புண் ஆறியதும் மீண்டும் தண்டனைதான்... 'எதுக்குடா கரியா முட்டாத்தனமா செஞ்ச தப்பையே செஞ்சிட்டு இப்படி வந்து நிக்கே..' என்று அங்கலாய்ப்பார் அம்மாச்சி. 'ஐயோ எம் மவனெ போட்டு இப்படி அப்பா கொடுமை படுத்தறாங்களே.. நீங்க போய் கேட்டா என்ன?' கண்ணீர் வடித்தவாறே அம்மா அழுவது இப்போதும் தெரிகிறது. அப்பா என் தாத்தாவின் மூத்த சகோதரியின் மகன் - மாமாக்கிட்ட போய் சண்டைக்கு நிக்க என்னால முடியாதுடி' என்று ஒதுங்கிவிடுவார். தாத்தாவிடம் என்னுடைய கடைக்குட்டி சித்தியைத் தவிர யாருக்கும் போய் பேசவே துணிவிருக்காது.  தாத்தாவுக்கு தன்னுடைய கடைசி மகள் - என் சித்தி - கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறுவதை காணும்போது குடும்பத்து சிறுவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். 'நீங்க என்ன ஹெட்மாஸ்டராப்பா? இது வீடா ஸ்கூலான்னே தெரியல.' என்பார் பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சித்தி - என்னை விட ஆறு வயது பெரியவர்- என்னுடைய மூத்த அண்ணாவைவிட இரண்டு வயது இளையவர் - தாயும் மகளும் ஒரே நேரத்தில் பிரசவிப்பதும் - பேரன், பேத்தி பிறந்த பிறகும் பிரசவிப்பதும் அந்த காலத்தில் மிகவும் சகஜம் - தாத்தாவால் நேரடியாக பதில் சொல்ல முடியாது. தடுமாறுவார். கடைக்குட்டி என்பதால் அப்படியொரு செல்லம். படிப்பிலும் அவர் படுச்சுட்டி என்பதால் அவர் என்ன கேட்டாலும் உடனே கிடைத்துவிடும். எங்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தாத்தாவுக்கு சித்தி ஒரு சொம்ம சிப்பனம் என்றால் மிகையல்ல. அவர் பின்னாளில் சென்னையிலேயே ஒரு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு தலைமையாசிரியையாக ஓய்வு பெற்றார். இதைத்தான் விளையும் பயின் முளையிலேயே தெரியும் என்பார்கள் போலிருக்கிறது. 

அந்த வயதில் என்னுடைய சித்திக்கு மஞ்சள் நீராட்டு சம்பவம் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் நடந்ததுதான் இப்போதும் நினைவில் நிற்கும் முக்கியமான நிகழ்வுகள். 

அப்போதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளியாகியிருந்தது. நடிகர் திலகமும் (கட்டபொம்மன்) ஜாவர் சீத்தாராமும் (ஜாக்சன் துரை) ஆவேசமாக மோதிக்கொள்ளும் (வார்த்தைகளில்தான்) வசனம் அப்போது மிகவும் பிரசித்தம். சித்திக்கி சடங்கெல்லாம் முடிந்து உறவினர் புடைசூழ ஹாலிலும் முற்றத்திலும் அமர்ந்திருக்க நானும் என்னுடைய இளைய சகோதரரும் - என்னைவிட ஒரு வருடம் இளையவர் - அந்த வசனத்தை பேசி நடித்ததை மறக்க முடியவில்லை. நான் அப்போதெல்லாம் பள்ளி நாடகங்களில் பங்கேற்று நடிப்பவன் என்பதை ஏற்கனவே என்னுடைய கடந்து வந்த பாதை என்கிற தொடரில் 'செல்வராணி டீச்சர்' என்ற பதிவில் எழுதியுள்ளேன்.

தாத்தாவுக்கு இரவு நேர உணவு நாலு இட்டிலி. அதுவும் அவருக்கு பிடித்த ஓட்டலில் இருந்துதான் வாங்க வேண்டும். 'நீ சுடற இட்லிய மனுசன் திம்பானா?' என்று எரிந்து விழுவார் என் அம்மாச்சியிடம்! எங்க வீட்டில் தாத்தா ஆட்சிதான். அம்மாச்சி பாவம் வாயில்லா பூச்சி. இருவருக்கும் இடையில் பத்து வயது வித்தியாசம் இருந்ததும் ஒரு காரணம். தாத்தா இருந்த திசைக்கே திரும்பமாட்டார். தாத்தா வீட்டு வாசலிலிருந்த திண்ணையென்றால் அம்மாச்சி வீட்டு புழக்கடையிலிருந்த சமையல்கட்டில் - ச்சாய்ப்பு என்பார்கள் - இருவரும் அருகருகில் அமர்ந்து பேசி நான் பார்த்த நினைவேயில்லை. 

இரவு ஏழு மணி அடித்ததும், 'எலேய் ஓடு. இப்ப போனாத்தான் முதல் ஈடு இட்டிலி கிடைக்கும்.' என்பார். அவருக்கு இத்தகைய வேலை என்றால் என் பெயர்தான் உடனே நாக்கில் வரும். 'நீதாம்ல நல்லா தின்னு கொழுத்துப் போயிருக்கே. ஓடு' என்பார். 'மொளகு பொடி எண்ணெய் ஊத்தி, மறந்தே பழுவடியும் நீதான் ஓடணும் சொல்லிட்டேன்' என்ற எச்சரிக்கையுடந்தான் அனுப்புவார். வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும் உடுப்பி ஓட்டல் வரை அதையே சொல்லிக்கொண்டு ஓடுவேன். என்னுடன் அதே தெருவில் வசித்த நண்பன் ஒருவனும் தவறாமல் என்னுடன் வருவான் - இவனைப் பற்றியும் எழுதியிருக்கிறேன் 'அப்பளப்பூ அண்ணாசாமிதான் இவன் என்னை விடவும் சற்று மூத்தவன். சில தினங்களில் பேச்சு சுவாரஸ்யத்தில் தாத்தா சொன்னதை மறந்துபோய் எண்ணெய் ஊற்றாத மிளகுப் பொடியுடன் வந்து நிற்பேன். அப்படியே மடித்து என் கையில் திணித்து, 'எத்தனை தரம் சொன்னேன். கரிப்பயலே பழுவடியும் ஓடு.' என்ற ஏச்சுடன் தலையுடன் பலமாய் ஒரு குட்டும் இடியாய் இறங்கும். ''வீட்லருக்கற எண்ணெய ஊத்துனா வாய்க்குள்ள இறங்காதாக்கும். எதுக்குத்தான் இவனெ இப்படி பாடா படுத்தறாகளோ தெரியலயே' என்று அம்மாச்சி அவருக்கு பின்னால் புலம்பியவாறே என்னுடைய தலையை தடவி விட்டதையும் மறக்க முடியவில்லை. அம்மாவால் என்னை ஆறுதலாய அணைத்துக்கொள்ளத்தான் முடியுமே தவிர தாத்தாவை எதிர்த்து கேட்டால் சமயங்களில் அவருடைய கன்னத்தையே பதம் பார்த்துவிடுவார் தாத்தா. அவரைப் பொருத்தவரை மகளும் பேரனும்  ஒன்றுதான். எங்களுக்கு முன்னாலேயே சித்திமார்களை கன்னத்தில் அறைந்ததை பலமுறை பார்த்திருக்கிறேன்.

வாரம் ஒருமுறை சனிக்கிழமைகள் நடக்கும் எண்ணெய் குளியலை மறக்க முடியுமா. தாத்தாவும் பேரன்களும் தலைமுதல் எண்ணெய் தேய்த்து கால் மணி நேரம் அப்படியே அமர்ந்திருந்துவிட்டுத்தான் தலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். கண்கள் இரண்டும் திகு, திகுவென எரியும். ஆனால் வாய் திறக்க முடியாது. 

இதே எண்ணெய் குளியல்தான் என்னுடைய பதின்ம வயதின் இறுதியில் தாத்தாவின் உயிரையும் குடித்தது. தாத்தா உடம்புக்கு முடியாமல் படுத்து நாங்கள் பார்த்ததேயில்லை. எந்த குளிரிலும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்கும் பழக்கம் உள்ளவர் யாரும் எதிர்பாரா விதமாக ஒரு வார ஜுரத்தில் விழுந்தார். அதிலிருந்து முழுவதுமாக விடுபடும் முன்னரே எத்தனை எச்சரித்தும் கேளாமல் அடுத்த ஞாயிறு வழக்கம்போல் எண்ணெய் குளியல் செய்ய அன்றிரவே ஜன்னி ஜூரம் பிடித்து அதிலிருந்து விடுபடாமலே அவ்வார இறுதியிலேயே மரித்துப்போனார் தாத்தா. 

இப்போதும் என்னுடைய அம்மா, சித்தி எல்லாரும் 'நீ இப்ப பாக்கறதுக்கு தாத்தா மாதிரியே இருக்கேடா' என்று கூறும்போது தாத்தா நடு ஹாலில் மரபெஞ்சில் உயிரற்ற உடலாய் கிடந்ததுதான் நினைவில் வருகிறது.. என்னையும்றியாமல் கண்கள் கலங்கிப் போகின்றன....

எத்தனை தண்டித்தாலும் தாத்தா, தாத்தாதான் என்று நினைவு கூர்கிறேன்...

பேத்தியை வாரம் ஒருநாள் வெப் கேமரா மூலம் மட்டுமே பார்க்க கொடுத்து வைத்த இந்த தாத்தா..

இந்த சுகமான நினைவுகளை மீண்டும் ஒருமுறை அசைபோட வைத்த நண்பர் தருமி அவர்களுக்கு மீண்டும் ஒரு நன்றி...
10 comments:

நாமக்கல் சிபி said...

சுகமான நினைவுகள்!

அருமை!

நலமா?

டி.பி.ஆர் said...

வாங்க சிபி, நலமா? // நலமாக இருக்கிறேன். நீங்களும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

மஞ்சூர் ராசா said...

பேத்தியை வாரம் ஒரு முறை வெப் காமிராமூலம் பார்க்கும் இந்த தாத்தா.... பாசமும், இயலாமையும், பிரிவும் இன்னும் என்னென்னமோ மனதில் வந்து போகிறது நண்பரே.

நல்லதொரு மலரும் நினைவுகள்

தருமி said...

என்னங்க ஜோசப் ... இப்படி ஒரு எழுத்தை வச்சிக்கிட்டு ...
"நொண்டிக்காரணம்" சொல்லிக்கிட்டு எழுதாம இருந்தா எப்படி?

வாங்க .. மீண்டும் வாங்க .. உங்ககிட்ட கேக்கிறதுக்கு நிறைய இருக்குன்னு தெரியும். அட .. போனா போகுது.. மாசத்துக்கு ஒண்ணு எழுதுவோம். சரியா?

நல்ல பதிவு.

நன்றிக்கு நன்றி.

டி.பி.ஆர் said...

வாங்க மஞ்சூர் ராசா,

பேத்தியை வாரம் ஒரு முறை வெப் காமிராமூலம் பார்க்கும் இந்த தாத்தா.... பாசமும், இயலாமையும், பிரிவும் இன்னும் என்னென்னமோ மனதில் வந்து போகிறது நண்பரே.//

இந்த ஆதங்கத்தைக் குறித்தும் தனியாய் ஒரு பதிவு எழத வேண்டும் போலிருக்கிறது. கடந்த வாரத்தில் ஹிந்துவிலும் ஒரு கட்டுரை இந்த தனிமையைப் பற்றி வந்திரூந்தது.

நல்லதொரு மலரும் நினைவுகள்/

நன்றி நண்பரே.

டி.பி.ஆர் said...

வாங்க தருமி,

வாங்க .. மீண்டும் வாங்க .. உங்ககிட்ட கேக்கிறதுக்கு நிறைய இருக்குன்னு தெரியும். அட .. போனா போகுது.. மாசத்துக்கு ஒண்ணு எழுதுவோம். சரியா?/

சரி:))

மஞ்சூர் ராசா said...

வருசத்துக்கு ஒண்ணாவது எழுதலாம்னு நானும் யோசிச்சிகிட்டிருக்கேன். (பதிவு கும்பகர்ண் தூக்கத்திலிருந்து இன்னும் விடுபடலெ)

தருமி said...

//கடந்த வாரத்தில் ஹிந்துவிலும் ஒரு கட்டுரை இந்த தனிமையைப் பற்றி வந்திரூந்தது.//

அந்தக் கட்டுரைக்கு எதிர்த்து எழுத நான் ரெடி!

அப்ப நீங்க ...?

டி.பி.ஆர் said...

அந்தக் கட்டுரைக்கு எதிர்த்து எழுத நான் ரெடி!

அப்ப நீங்க ...?//

அந்த கட்டுரை ஒருதலைபட்சமாக அதாவது இன்றைய தலைமுறையினரின் சார்பாக எழுதப்பட்டது என்பது என் கருத்து. அதை எதிர்த்தும் ஆதரித்தும் வந்த பல வாசகர் கடிதங்களையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கட்டுரையில் கூறப்பட்ட கருத்து என்னவோ தர்க்கிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். நீங்கள் உங்களுடைய கருத்தை முன் வையுங்கள். அது சரியா தவறா என்பதை நான் பிறகு கூறுகிறேன் :))

டி.பி.ஆர் said...

வருசத்துக்கு ஒண்ணாவது எழுதலாம்னு நானும் யோசிச்சிகிட்டிருக்கேன். (பதிவு கும்பகர்ண் தூக்கத்திலிருந்து இன்னும் விடுபடலெ)//

சீக்கிரமா தூக்கத்திலிருந்து எழுந்து வாங்க:))