ஆனால் பொருட்களின் தயாரிப்பு செலவும் சந்தை விலையும் எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே? ஆகவே கடந்த ஆண்டோ அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு கணக்கிடப்பட்ட GDPயுடனோ ஒப்பிட்டு எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளோம் என்று எவ்வாறு தெரிந்துக்கொள்வது?
உதாரணத்திற்கு 2000-2001ம் ஆண்டிலிருந்து நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கணக்கிடவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். 2010-11 ஆண்டில் இருந்த விலைவாசியே இப்போதும் இருக்காது அல்லவா? இப்படிப்பட்ட சூழலில் நாட்டின் உற்பத்தியில் எவ்வித வளர்ச்சியும் இல்லையென்றாலும் இந்த இடைபட்ட காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வே நாட்டின் உற்பத்தி வளர்ச்சி அடைந்துவிட்டதைப் போன்றதொரு பிரமையை ஏற்படுத்திவிடக் கூடும். அதாவது 2010-11ல் நாட்டின் தானிய உற்பத்தி 1000 கோடி டன்னாக இருந்தது என்று வைத்துக்கொள்வோம். அன்று ஒரு டன் தானியத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாய் என்ற நிலையிலிருந்து பத்து ஆண்டுகளில் ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்கும் சூழலில் 2012-13ல் நாட்டின் தானிய உற்பத்தி அதே அளவான ஆயிரம் கோடி டன்னாக இருந்தாலும் தற்போதைய சந்தை விலையில் அதன் மதிப்பு ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்குமே!
இந்த விலைவாசி உயர்வை சமநிலைக்கு கொண்டுவந்தால் மட்டுமே நாட்டின் உண்மையான உற்பத்தி நிலவரம் தெரியவரும் என்பதால் எந்த ஆண்டுடன் ஒப்பிட விரும்புகிறோமோ அந்த ஆண்டின் சந்தை விலையிலேயே நடப்பு ஆண்டின் உற்பத்தியையும் கணக்கிடுவார்கள். எந்த ஆண்டு விலைவாசியுடன் ஒப்பிடுகிறோமோ அந்த ஆண்டை தொடக்க ஆண்டாக (Base Year) வைத்துக்கொண்டு நடப்பு ஆண்டிலுள்ள (current year) உற்பத்தி அளவை தொடக்க ஆண்டின் விலைவாசியில் கணக்கிடுவார்கள். இந்த முறையை deflator method என்கிறார்கள். சாதாரணமாக ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டிற்கு முந்தைய ஆண்டை தொடக்க ஆண்டாக வைத்துக்கொண்டு அந்த ஆண்டிலிருந்த விலைவாசிக்கே அந்த திட்டத்தின் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை கணக்கிட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம்.
மேலும் நடப்பு நிதியாண்டின் ஒவ்வொரு ஆண்டிலும் உள்ள ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் எந்த அளவு உற்பத்தியை எட்ட வேண்டும் என்ற குறியீட்டையும் (Target or Estimate) நிர்ணயித்துக்கொள்வார்கள். இந்த அடிப்படையில் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation)ஒவ்வொரு ஆண்டும் தயாரித்து அளிக்கும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி பற்றிய அறிக்கையின் மாதிரி இது. இத்துடன் ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் அடுத்த மூன்று மாத காலத்தில் அடைய வேண்டிய இலக்கையும் நிர்ணயித்து அந்த கால இறுதியில் இலக்கை அடைந்தோமா இல்லையா என்ற ஆய்வையும் இந்த அமைச்சகம் நடத்துகிறது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் நாட்டின் பொருளாதார ஆய்வு (Economic Survey) அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்து வெளியிடுகிறது.
நான் கொடுத்துள்ள மாதிரி அறிக்கை நாட்டின் மொத்த உற்பத்தியை உற்பத்தி முறையிலும் (Production Method) நாட்டின் மொத்த செலவு முறையிலும் (Expenditure Method) முறையிலும் கணக்கிட்டுள்ளதை பார்க்கலாம். இவ்விரண்டு அறிக்கைகளும் ஒரே மதிப்பைத்தான் காட்டியுள்ளன என்றாலும் இரண்டாம் அறிக்கையின் (Expenditure Method) பதினாறாவது இலக்கத்தில் (No.16) காட்டப்பட்டுள்ள வித்தியாசங்கள் (discrepancies) என்ற தொகை இந்த இரண்டு முறைகள் மூலமாக கணக்கிடப்படும் இறுதி மதிப்பிலுள்ள (final figure) வேறுபாடு எனவும் கொள்ளலாம்.
இந்த அறிக்கையின் இறுதியில் 31 மற்றும் 32 வது இலக்கங்களில் காட்டப்பட்டிருக்கும் எண்களைப் பாருங்கள். 31ல் இந்தியாவின் மக்கள் தொகையும் 32ல் per capita income என்று நம் நாட்டிலுள்ள ஒரு நபரின் வருமானத்தையும் காட்டப்பட்டுள்ளது.
எண் 32ல் காட்டப்பட்டுள்ள தொகைதான் மிக முக்கியமான தொகை. இதன் அடிப்படையில்தான் நம்முடைய நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மற்ற நாடுகளிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட வகை செய்கிறது. இதன் அடிப்படையில் ஐ.நா, உலக வங்கி போன்ற அகில உலக அமைப்புகள் உலகிலுள்ள நாடுகளை வரிசைப் படுத்துகின்றன. அதன் ஒரு மாதிரியையும் அளித்துள்ளேன்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பின் அடிப்படையில் இந்தியா பத்தாவது இடத்திலுள்ளதை காண முடிகிறது. ஆனால் இது நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை மட்டுமே வைத்து கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது. நம்மையும் விட வளர்ந்த நாடுகளாக கருதப்படும் பல ஐரோப்பிய நாடுகளைவிடவும் நம்முடைய ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நம்முடைய நாட்டின் விஸ்தீரணமும் (Georgraphical Area)மக்கள் தொகையும் (Working Population)என்று கூறலாம். ஆனால் Per Capita Income அடிப்படையில் நம்முடைய நாடு நம்மை விடவும் சிறிய நாடுகள் பலவற்றிலும் இருந்து பின்தங்கியிருப்பதை காண முடிகிறது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பீட்டின் அளவுக்கு முக்கிய காரணமாக இருக்கும் நம்முடைய மக்கள்தொகையே இதற்கும் காரணமாக அமைந்துள்ளதுதான் வேதனை. இதே அளவு உற்பத்தியும் தற்போதுள்ள மக்கள் தொகையில் பாதியும் இருந்திருந்தால் நம்முடைய நாடு உலக அரங்கில் முதல் இடத்தில் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடந்த சுமார் பதினைந்து ஆண்டுகளாக நம்முடைய மக்கள் தொகை அதிகரிக்கும் விழுக்காடு (Percentage increase in population) குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு இனிவரும் இருபத்தைந்தாண்டுகளில் இதே நிலையிலோ அல்லது இதை விட குறைவான விழுக்காட்டிலோ மக்கள் தொகை கூடுமானால் 2035ம் ஆண்டு வாக்கில் நம்முடைய நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேற்கத்திய நாடுகள் பலவற்றை விடவும் உயர்ந்திருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம். ஆகவேதான் 2050ம் ஆண்டில் உலகின் மிக பலம் பொருந்திய நாடாக இந்தியா இருக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.
சரி. கடந்த சில ஆண்டுகளாக நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP)யின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விடவும் குறைந்து வருகிறது என்று ஏன் கூறுகிறார்கள்?
இந்த நிலைக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள்தான் காரணம் என்கிறார்களே?
இவை சரிதானா?
என்னைக் கேட்டால் இப்போது கடைபிடித்துவரும் பொருளாதார கொள்கையை நரசிம்மராவ் அவர்கள் பிரதமராவதற்கு முன்பிருந்தே (அதாவது இந்திரா காந்தி அம்மையார் ஆண்ட காலத்திலிருந்து) கடைபிடித்து வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பேன்.
எதிலும் தன்னிறைவு எல்லாவற்றிலும் தன்னிறைவு என்ற சித்தாந்தம், என்னால் முடியாதது எதுவும் இல்லை என்கிற மனப்போக்கு, ஒரு நூறு ஆண்டுக்கும் மேலாக ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டுக் கிடந்து அனுபவித்த துன்பங்கள் ஆகியவைதான் உலகமயமாக்கல் (Globalisation) கொள்கையை நாம் எதிர்க்க காரணங்கள். Iron Curtain என வர்ணிக்கப்பட்டு வந்த ரஷ்யா போன்ற நாடுகளும் பொதுவுடமை கொள்கையை விடாமல் கட்டிக்காத்துவந்த சீனா போன்ற கம்யூனிச நாடுகளுமே உலகமயமாக்கலை இருகரம் விரித்து வரவேற்கிற சூழலிலும் இன்றும் இந்த கொள்கையை எதிர்த்துவரும் சிலரைக் கண்டால் எரிச்சலாகத்தான் வருகிறது.
நம்முடைய நாடு இன்று கணினி துறையில் அதீத வளர்ச்சியடைந்திருந்தாலும் இன்றும் நம்முடைய நாட்டு நிறுவனங்கள் ஒரு கணினி சேவை நிறுவனங்களாகவே (Services) கருதப்பட்டு வருகின்றனவே தவிர மைக்ரோ சாஃப்ட் போலவோ அல்லது ஆப்பிள் போலவோ ஒரு உற்பத்தி (Product Company) நிறுவனமாக கருதப்படாததற்கு முக்கிய காரணம் தொழில்துறையில் நம்முடைய நாடு இன்னும் முன்னேறாததுதான்.
ஒரு நாட்டின் தொழில்துறை தொடர்ந்து முன்னேறுவதற்கு தொடர் முதலீடுகள் அவசியம் தேவை. நம்முடைய நாட்டிலுள்ள தனிநபர் சேமிப்பில் ஏறக்குறைய எழுபது விழுக்காடு முதலீடாக மாறுவதில்லை. அப்படியே மாறினாலும் அவற்றில் பெரும் பங்கு தங்கம் மற்றும் அசையா சொத்துக்களில்தான் முதலீடு செய்யப்படுவதை பார்க்கிறோம்.
இவையும் முதலீடுகள்தான் என்றாலும் அதனால் நாட்டின் உற்பத்தி பெருகப்போவதில்லை. ஏனெனில் நம்முடைய சேமிப்பை பெருமளவில் விழுங்கும் தங்கம் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல்.
நான் ஏற்கனவே கூறியுள்ளபடி நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிக்கு செலவிடப்படும் தொகை நாட்டின் GDP கணக்கிலிருந்து குறைக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் GDP என்ற மூன்றெழுத்தில் நடுவிலுள்ள 'D' அதாவது Domestic என்ற ஆங்கில வார்த்தை உள்நாட்டை குறிக்கிறது. அதாவது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலேயே பயன்பாட்டுக்கு வரும் பொருட்களின் மதிப்பு மட்டுமே இந்த கணக்கீட்டில் உட்படுத்தப்படுகிறது. ஆகவேதான் தங்கத்தில் செய்யும் முதலீடுகளை தயவு செய்து குறைத்துக்கொள்ளுங்கள் என்கிறது மத்திய நிதியமைச்சகம்.
அப்படியானால் சீனா இந்தியாவை விடவும் அதிக தங்கத்தை இறக்குமதி செய்வதாக கூறுகிறார்களே என்கின்றனர் சில அறிவுஜீவிகள். உண்மையில் சீனாவில் தனிநபர் எவரும் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு அரசாங்கம்தான் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. ஏனாம்? தங்களுடைய நாட்டின் சொத்தை மற்ற நாடுகளைப் போன்று அமெரிக்க டாலர்களில் வைக்க அவர்களுக்கு விருப்பமில்லையாம். ஆகவேதான் நாட்டின் கையிருப்பின் பெரும் பகுதியை தங்கத்தில் முடக்கி வைக்கின்றனர். மேலும் அமெரிக்க வங்கிகளில் வைத்தால் நாளை ஏதாவது ஒரு காரணத்திற்காக அவற்றை அமெரிக்க அரசு முடக்கிவிட்டால்?
இதுதான் தங்க முதலீட்டில் நமக்கும் சீனாவுக்கும் உள்ள வித்தியாசம்.
சரி அடுத்தபடியாக நம்முடைய GDPஐ எப்படியெல்லாம் உயர்த்த முடியும் என்று பார்ப்போம்.
நம்முடைய நாட்டின் மொத்த உற்பத்தி (GDP) குறையும்போதெல்லாம் அதை தூக்கி நிறுத்துவதற்கு அரசு தன்னுடைய செலவை (Expenditure) கூட்ட வேண்டும். ஏனெனில் இந்த கணக்கீட்டில் தனிநபர் மற்றும் கார்ப்பரேட் எனப்படும் நிறுவனங்களின் செலவு மற்றும் முதலீடுகள் (Savings and Investment) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு வாய்ப்புகள் குறைவு. பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் சூழலில் தனிநபர் வருமானமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. பிறகு எப்படி சேமிப்பது? தனிநபர் சேமிப்பு குறைந்து போனால் அவர்களுடைய வாங்கும் திறனும் (purchasing power) குறைகிறது. வாங்கும் திறன் குறைந்தால் உற்பத்தியாகும் பொருட்கள் சந்தையில் தேங்கிவிடுகின்றன. சந்தையிலேயே பொருட்கள் விற்காமல் இருக்கும் சூழலில் அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுடைய விற்பனை குறைந்துவிடுகிறது... விற்பனைக் குறைவு அவர்களுடைய வருமானத்தை குறைக்கிறது... குறைந்த வருமானம் அவர்களுடய சேமிப்பையும் அதன் விளைவாக முதலீட்டையும் பாதிக்கிறது..... இது ஒரு சுழற்சி (cycle) இதில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவதென்பது அத்தனை எளிதல்ல.
இந்த சூழலில்தான் அரசு தலையிட்டு தன்னுடைய செலவை (Public Spending) அதிகரிக்க வேண்டும். அதுவும் கூட ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். இந்த சூழலில்தான் அன்னிய நாட்டின் முதலீடுகள் அவசியமாகின்றன. இதைத்தான் நம்மால் செய்ய முடியாதவற்றை மற்றவர்களைக் கொண்டு செய்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். நம்மால் முடியாதது எதுவுமில்லை என்கிற வாதம் எவ்வளவு வெற்று வாதம் (empty argument) என்பது புரிகிறதா?
நம்முடைய நிறுவனங்களாலும் அரசாலும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத தொகையை முதலீடாக நம்முடைய நாட்டில் செய்ய வருபவர்கள் ஏதோ நம்முடைய நாட்டு பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற தேசப்பற்றுடன் வருவதில்லை. எங்கு விதைத்தால் நல்ல பலன் கிடைக்குமோ அங்குதானே விவசாயி விதைக்கிறான்? அதுபோன்றுதான் அன்னிய முதலீடும். அன்னிய நிறுவனங்கள் இங்கு வருவதற்கான காரணத்தை ஆராயாமல் அதன் மூலம் கிடைக்கின்ற, நம்மால் செய்ய முடியாத, முதலீட்டால் நம்முடைய நாட்டின் தொழில் வளமும் உற்பத்தியும் பெருகுகிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
அன்னிய முதலீடு அறவே இல்லாமல் நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை. இன்று நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தொழில்துறையின் பங்கு 25 விழுக்காடு மட்டுமே தானாம். எட்டு விழுக்காடு விவசாயத்துறையும் மீதமுள்ள 67 விழுக்காடு சேவைத் துறையும் அளிக்கிறதாம். இந்த சேவைத் துறையிலும் பெரும்பங்கு அளிப்பது சமீப ஆண்டுகளில் வளர்ந்துவரும் கணினி மற்றும் தொழில்நுட்ப துறைகளாம். இந்த நிலை மாற வேண்டும். நாட்டின் உற்பத்தி திறன் உயர வேண்டுமென்றால் நாட்டின் முதலீடும் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். இன்று பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் (Developed Countries) எனக் கருதப்படும் அனைத்து நாடுகளுமே தொழில்துறையிலும் வளர்ந்த நாடுகளே (Industrialised Countries). இன்று சீனா அவர்களுடைய கொள்கைகளுக்காக உலகளவில் வெறுக்கப்பட்டாலும் அவர்களுடைய பொருளாதார வலிமை அவர்களைக் கண்டு அச்சமடைய வைத்துள்ளது.
உலக நாடுகளின் தர வரிசையில் இந்தியா உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் அளவும் மதிப்பும் உயர்ந்துக்கொண்டே செல்ல வேண்டும். நாட்டின் மக்கள்தொகையும் கட்டுக்குள் நிற்க வேண்டும்.
மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும் இப்போதுள்ள பொருளாதார கொள்கைகளிலிருந்து அடியோடு மாறிவிட வாய்ப்பே இல்லை. தேர்தல் நேரத்தில் என்ன சொன்னாலும் இதுதான் இன்றைய நிதர்சனம். இன்று மத்தியில் கொள்கைகளை வகுப்பது அரசியல்வாதிகள் அல்ல என்பதும் உண்மை. நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்திய மற்றும் அன்னிய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களே....
இந்த தொடரில் இனியும் பல பொருளாதார பதிவுகளை இடலாம் என்று நினைத்துள்ளேன்..... ஒவ்வொரு பதிவும் எழுதி முடிக்க பல இணையதளங்களிலுள்ளவைகளை தேடிப்பிடிக்க வேண்டியுள்ளதால் பல நாட்கள் தேவைப்படுகின்றன. ஆகவே அடிக்கடி இல்லாவிடினும் அவ்வப்போது எழுதுவேன்...
*********