30 அக்டோபர் 2019

பாஜகவின் சரிவு....3

2ம் பாகம்

1. பணப்புழக்கத்தில் வீழ்ச்சி

இந்திய வர்த்தகத்தை என்னதான் டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு முயற்சித்தாலும் இன்று மட்டுமல்ல இனி எதிர்வரும் ஐம்பதாண்டு காலத்திற்கும் மொத்த வர்த்தகத்தில் சுமார் 96 விழுக்காடு கேஷ் அண்ட் கேரி (Cash and Carry) எனப்படும் ரொக்க வர்த்தகமாகத்தான் இருக்கும். இதுதான் இந்திய வர்த்தகத்தின் தனித்துவம். நாட்டில் எத்தனை பெரிய பல்பொருள் அங்காடிகள் (Super Stores, Hyper Stores, Malls) வந்தாலும் சாலையோர கடைகளில்தான் இந்தியாவின் பெரும்பான்மை வர்த்தகம் நடைபெறுகிறது... இனியும் நடைபெறும்.... இத்தகைய கடைகளில் நடக்கும் வர்த்தகம் அனைத்துமே ரொக்கத்தில்தான் நடைபெறுகின்றன. இத்தகைய கடைகளை நடத்துபவர்கள் கொள்முதல் செய்வதும் ரொக்க அடிப்படையில்தான். இதை மத்திய அரசு எத்தனை முயற்சித்தாலும் மாற்றுவது சாத்தியமில்லை. 

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அறிவித்த பிரதமர் எதிர்வரும் காலங்களில் நாட்டின் பணப் பயன்பாடு பெருமளவு குறையும் என்று ஆரூடம் கூறினாலும் உண்மையில் நடந்தது என்ன? 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் துவக்க நாட்களில் கையில் பணமில்லாமல் அல்லாடிய சாமான்ய மக்கள் வேறுவழியின்றி வங்கி அட்டைகளை பெருமளவில் பயன்படுத்த துவங்கியது என்னவோ உண்மைதான். அந்த காலக்கட்டத்தில் மொத்த பணப் பயன்பாடு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடுகையில் (curreny to GDP ratio) 12.01 விழுக்காடு என்ற நிலையிலிருந்து 8.8 விழுக்காடாக குறைந்தாலும் பணப்புழக்கம் அடுத்த சில மாதங்களில் சீரடைந்ததும் மீண்டும் 10.10 விழுக்காடு என்ற அளவுக்கு உயர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய கால அளவுக்கு மீண்டும் அடைந்தது என்பதுதான் உண்மை. 

மேலும் நம்முடைய நாட்டின் பொருளாதார நிலையை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 90 விழுக்காடு உள்ள சாமான்ய மக்கள். அதாவது நடுத்தரத்திற்கும் சற்று கீழே உள்ளவர்கள். இவர்களுடைய வாங்கும் திறனை வைத்துத்தான் சந்தையில் எந்த ஒரு பொருளின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோனோர் கிராமங்களில் வசிப்பவர்கள். இவர்களுடைய மாத வருமானத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை வைத்துத்தான் இந்திய பொருளாதாரத்தின் நிலை தீர்மானிக்கப்படுகிறதே தவிர. ஆன்லைனிலோ அல்லது பெரும் மால்களிலோ பொருட்களை வாங்கிக் குவிக்கும் மேல்தட்டு மக்களால் அல்ல.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பணப்புழக்கம் முற்றிலுமாக ஸ்தம்பித்து நின்ற அறிமுக மாதங்களில் முதலில் முடங்கிப்போனது இத்தகையோரை சென்றடையும் வர்த்தகம்தான். இவர்கள் கைவசம் இருந்த அனைத்து ரொக்கத்தையும் வங்கிகளில் அடைத்துவீட்டதால் பணப்புழக்கம் வெகுவாக ஏன் முற்றிலுமாக குறைந்துபோய் அதிலிருந்து மீளவே முடியாமல் தாற்காலிகமாக அடைக்கப்பட்ட சிறு குறு வர்த்தக நிறுவனங்களுக்கு அளவே இல்லை. இதன் விளைவாக இவற்றிற்கு விநியோகம் செய்துவந்த மொத்த வணிகர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர் என்பதும் உண்மை. ஆகவே தான் இந்த நடவடிக்கை நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவு மற்றும் அவற்றின் மொத்த மதிப்பு எனப்படும் GDP யும் கூட எதிர் வரும் ஆண்டுகளில் கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது என்று அன்றே முன்னாள் நிதி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல பொருளாதார வல்லுநர்கள், உலக வங்கி உட்பட கூறினார்கள்.

2. சரக்கு போக்குவரத்தில் சிக்கல்.

இத்தகைய வணிக நிறுவனங்களின் இடைவிடா தேவைகளையே சார்ந்திருந்த சரக்கு போக்குவரத்து நிறுவனங்களும் கைவசம் ரொக்கம் இல்லாமல் பெருமளவு பாதிக்கப்பட்டன. இந்திய அளவில் சுமார் எட்டு லட்சம் சரக்கு வாகன ஓட்டுனர்கள் தங்களுடைய வாகனங்களுக்கு டீசல் கூட நிரப்ப முடியாமல் அவதியடைந்தனர். இவர்களில் எத்தனை பேரிடம் வங்கி அட்டைகள் இருந்திருக்க வாய்ப்புள்ளது? அன்றாடம் தேவைப்படும் டீசல் மற்றும் கைச்செலவுக்கு கூட ரொக்கம் இல்லாமல் அவதிப்பட்டதை மறுக்கமுடியுமா? இதன் விளைவு... வர்த்தக்ப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிப்போனது. அதில் இருந்து மீண்டு வர முடியாமல் தொழிலையே தாற்காலிகமாக கைவிட்டவர்கள் எத்தனையோ பேர். 

3.பங்கு சந்தை வீழ்ச்சி

இந்த நடவடிக்கை ரொக்கத்தில் நடக்கும் வணிகம் மட்டுமல்லாமல் இந்திய பங்கு சந்தையையும் வெகுவாக பாதித்தது. பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நாளன்று தேசிய பங்கு சந்தை சுமார் 1,700 புள்ளிகளும் நிஃப்டி சுமார் 600 புள்ளிகளும் சரிந்தன. அன்றைய சரிவிலிருந்து மீண்டு வர சுமார் மூன்று மாதங்கள் தேவைப்பட்டன. 2016 ஜூலை மாதம் துவங்கி 2017 பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட காலத்தில் சரிவை சந்திக்காத நிறுவனங்களே இல்லை என்கிறது புள்ளிவிவரங்கள் பெரும்பான்மையான நிறுவனங்கள் இன்றுவரையிலும் அதிலிருந்து மீளவில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக ரொக்கத்திலேயே நடைபெற்று வரும் கட்டுமானத் தொழில், மோட்டார் வாகனம், சில்லறை வர்த்தகம், 

3. தொழில் உற்பத்தியில் சரிவு

நாட்டிலுள்ள பெரும் தொழில் நிறுவனங்களும் கூட இதனால் பாதிக்கப்பட்டன. ஏன்.. இவை தயாரிக்கும் பொருட்களில் பெரும்பாலான விழுக்காடு இந்திய சந்தையை நம்பியே தயாரிக்கப்படுகின்றன. கடைநிலை வர்த்தக நிறுவனங்களில் ஏற்படும் பணத்தட்டுப்பாடு எஸ்கலேட்டர் (Escalator)முறையில் நாட்டிலுள்ள அனைத்து பெரிய நிறுவனங்களின் உற்பத்தியையும் பாதித்தன. கடைநிலை வர்த்தக நிறுவனங்களில் தொடர் தேவையினால்தான் (continuous demand) இத்தகைய தொழில் நிறுவனங்கள் தொடர்ச்சியாக இயங்க முடிந்தன. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டதன் விளைவு அவற்றையே நம்பியிருக்கும் பெரு நிறுவனங்களையும் பாதிக்கத்தானே செய்யும்?

4. விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி

கிராமங்களில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த அனைத்து தொழில்களிலும் ரொக்கம்தான் பெருமளவில் பயன்படுகின்றன. விதை, உரம், வேலையாட்களுக்கு கூலி என எதிலும் ரொக்க பரிவர்த்தனைகள்தான் என்பதுதான் இன்றல்ல இனிவரும் காலங்களிலும் நடக்கும். அதை எந்த தொழில்நுட்ப முன்னேற்றமும் மாற்றிவிடப்போவதில்லை. விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் கூட ரொக்கம்தான் தேவைப்படுகிறது. எந்த விவசாயி பொருட்களை விற்றுவிட்டு வங்கியில் செலுத்தப்படும் தொகைக்காக காத்திருப்பான்? இப்போதும் அரசு கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களின் மதிப்பு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்றால் விவசாயிகள் அதை ஏற்காமல் குறைந்த விலைக்கானாலும் உடனே ரொக்கம் தர தயாராக உள்ள இடைத்தரகரிடம் விற்பதையே விரும்புகின்றனர். மேலும் தங்களுடைய பொருட்களின் மொத்த மதிப்பும் வங்கியில் வரவு வைக்கப்படுமா என்கிற நிச்சயத்தன்மையும் இல்லாத சூழலில் இது முழுவதுமாக நடைமுறைக்கு வருவது சாத்தியமே இல்லை. சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது என இத்தகைய மையங்களில் பொருட்களை விற்கும் விவசாயிகள் குமுறுவது செய்திகளில் வருவதை பார்க்க முடிகிறது. 

5. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) வீழ்ச்சி

சிறு, குறு மற்றும் பெரு என அனைத்து தொழில் உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட சரிவின் விளைவு 15-16 ஆம் நிதியாண்டில் 9.00 விழுக்காடாக இருந்த நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியின் அளவு பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட 16-17 நிதியாண்டில் 5.5. விழுக்காடுக்கு சரிந்தது. அதிலிருந்து மெள்ள மெள்ள மீண்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6.5 விழுக்காடாக அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு விழுக்காடு அளவுக்கே உயர்ந்துள்ளது. இப்படியே போனால் 15-16 நிதியாண்டில் நாடு அடைந்த 9.00 விழுக்காட்டை அடையவே இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ?



6. வேலை வாய்ப்பில் இழப்பு

பணப்புழக்கம் அறவே முடக்கப்பட்டுவிட்ட நிலையில் குடிசை தொழில்கள் மற்றும் முறைசாரா தொழில் துறை (unorganised sector) நிறுவனங்களும் ஒவ்வொன்றாக மூடப்பட அதில் பணிபுரிந்த பெருவாரியான பணியாட்கள் பணி இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதில் பெருமளவு பாதிக்கப்பட்டவை கட்டுமான தொழில். இதில் அன்றாட கூலிக்கு பணிபுரிந்துவந்த லட்சக்கணக்கான பணியாட்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தங்களுடைய வேலைகளை இழந்து போயினர். கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது என்ற நிலை ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் என்றாலும் மிகையாகாது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஏற்பட்ட சரிவை மேல்காணும் படம் மிகத் தெளிவாக காட்டுகிறது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்களின் மனப்போக்கு எத்தகையதாக இருந்தது என்பது தெரியவில்லை. இத்தகைய நடவடிக்கையை தனிமனிதனாகவோ அல்லது ஒரு சிறு குழுவாகவோ தீர்மானித்து எடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களால் கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்மந்தப்பட்டவர்களின் பேச்சு திறமையாலும் அதன் எதிர்பாளர்கள் அதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளுக்கு மக்களிடத்தில் தகுந்த முறையில் எடுத்துரைக்க தவறியதாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் பாராட்டப்பட்டு முன்பைவிட அதிக அளவு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டதன் விளைவைத்தான் நாடு இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதற்கு முன்பே மத்திய அரசு எடுத்த மற்றுமொரு அவசர முடிவு தான் ஒரே நாடு ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரி அமலாக்கம்...

அதை நாளை பார்க்கலாம்

8 கருத்துகள்:

  1. புள்ளி விபரங்களோடு தந்த தகவல்கள் அருமை ஐயா.

    ஆம் எல்லோருமே வங்கி அட்டையால் வியாபாரம் செய்வது இந்தியா மட்டுமல்ல உலக அளவில் எந்த நாட்டுக்கும் செயலுக்கு கொண்டு வரஇயலாது உண்மையே...

    தொடர்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி!

      வெறும் கைப்பேசியை பயன்படுத்த தெரிந்துக்கொண்டு நாட்டையே டிஜிட்டல் மயமாக்கிடுவேன் என்று ஒருவர் எண்ணியதால் ஏற்பட்ட விளைவுகள்தான் இவை. அவர் எப்போது தன்னுடைய தவறுகளை உணர்கிறாரோ அப்போதுதான் நாடு உருப்படும்.

      நீக்கு
  2. நுணுக்கமான புள்ளி விவரங்களோடு சொல்லி வருகிறீர்கள்.  நன்று.  

    டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்பதில்  நான் என்னைப்பொறுத்து சொல்லவேண்டுமென்றால் என் பெரும்பாலான பணப் பரிவர்த்தனைகள் ரொக்கப் பரிவர்தனையிலேயே இருக்கின்றன.  வங்கிக்கணக்கு இருந்தும் நான் அவற்றை டிஜிட்டலில் பயன்படுத்துவது மிகக்குறைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. நுணுக்கமான புள்ளி விவரங்களோடு சொல்லி வருகிறீர்கள்.  நன்று.//

        
      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம். இதை எழுதி முடிக்க எனக்கு சுமார் இரண்டு வாரங்கள் எடுத்தன. ஆனால் இதை வாசிப்பதற்கு தான் ஆட்களே இல்லை. வெறும் 50 பேர் வாசிப்பதற்கு இத்தனை சிரமப்பட வேண்டுமா என்ற சோர்வும் ஏற்படுகிறது.

      என்னைப்பொறுத்து சொல்லவேண்டுமென்றால் என் பெரும்பாலான பணப் பரிவர்த்தனைகள் ரொக்கப் பரிவர்தனையிலேயே இருக்கின்றன.  //

      எனக்கு டிஜிட்டல் முறையில் வங்கி பரிவர்த்தனை செய்வதில் எவ்வித எதிர்ப்பும் இல்லை. எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் கடன் மற்றும் கழிவு அட்டைகளைத் தான் உபயோகிக்கிறேன். ஆனால் டிஜிட்டல் முறையில் வர்த்தக பரிவர்த்தனை செய்பவர்கள் நாட்டில் 10% விழுக்காடு கூட இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

      நீக்கு
  3. பொருளாதாரம் பற்றி தெரியாத, தொலைநோக்கு பார்வை இல்லாத, மக்களின் இன்னல்கள் பற்றி கவலைப்படாத அரசு இருக்கும்போது இப்படித்தான் நடக்கும். இவர்களின் குறிக்கோள் வேறு என்பதால் நாட்டின் வளர்ச்சி பற்றி இவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்?

    ‘பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரத்தில் குடியிருக்கத்தான் வேண்டும்.’ என்பது போல், பெரும்பான்மையான மக்கள் ‘விரும்பி’த் தேர்ந்தெடுத்த இந்த அரசின் செயல்களை இன்னும் நான்கு ஆண்டுகள் சகித்துக்கொண்டுதான் இருக்கவேண்டும்.

    மிகவும் சிரத்தை எடுத்து தகவல்களை திரட்டி புள்ளிவிவரங்களோடு அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது. இவ்வளவு அருமையான பதிவு எல்லோரிடமும் போய்ச் சேரவேண்டும். தங்களின் பதிவை திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் உருவாக்கியுள்ள ‘தமிழ் வலைப்பதிவகம்’ குழுவில் வெளியிடலாமே.

    பதிலளிநீக்கு
  4. இவர்களின் குறிக்கோள் வேறு என்பதால் நாட்டின் வளர்ச்சி பற்றி இவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்?//

    மிக சரியாக சொன்னீர்கள்.

    பெரும்பான்மையான மக்கள் ‘விரும்பி’த் தேர்ந்தெடுத்த இந்த அரசின் செயல்களை இன்னும் நான்கு ஆண்டுகள் சகித்துக்கொண்டுதான் இருக்கவேண்டும்.//

    அந்த பெரும்பாலானோர் முட்டாள்களாக இருப்பதால்தான் இவர்களால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடிகிறது?


    தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது//

    மிக்க நன்றி சார்.

    திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் உருவாக்கியுள்ள ‘தமிழ் வலைப்பதிவகம் '....//

    இப்போது தான் கேள்விப்படுகிறேன்.பரிந்துரைக்கு நன்றி. முயல்கிறேன்.

    உங்கள் வரவுக்கும கருத்துரை க்கும் மிக்க நன்றி சார்.


    பதிலளிநீக்கு
  5. டிஜிடல் பரிவர்த்தனை என்பதுசில ஏமாற்றுகாரர்களால் எனபோன்ற மென்பொருளை உபயோகிக்கத்தெரியாத பலருக்குமொருசாபக்கேடு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனபோன்ற மென்பொருளை உபயோகிக்கத்தெரியாத பலருக்குமொருசாபக்கேடு//

      ஆமாம் சார். காலத்தின் கோலம்.

      உங்கள் வரவுக்கும கருத்துரை க்கும் மிக்க நன்றி சார்.

      நீக்கு