நான் நேற்றைய தினம் இட்டிருந்த 'தேர்தல் குளறுபடிகள்' என்ற பதிவில் கருத்துரை இட்டிருந்த பலரும் 'கடைசி நேர ஏமாற்றத்தைத் தவிர்க்க உங்களுடைய பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை இணையதளத்தில் தேடிப் பார்த்திருக்கலாமே' என்று கூறியிருந்தனர். அவர்களுக்கெல்லாம் என்னுடைய பதிலிலேயே விளக்கமளித்திருந்தாலும் அதை பலரும் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் ஒரு சிறிய விளக்கப் பதிவு.
நான் வசிக்கும் பகுதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட பகுதி ஆகும். இதில் மொத்தம் ஐந்து தெருக்கள் உள்ளன. நான் இந்த தெருக்களின் பெயர்களைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் கூறியுள்ளேன். ஏனெனில் இவை யாவுமே நாட்டின் பிரபல நதிகளின் பெயர்களைக் கொண்டுள்ளன. நகரின் பிரதான தெருவின் பெயர் யமுனா தெரு. அதிலிருந்து இரண்டு தெருக்கள் பிரிகின்றன. இவற்றின் பெயர்கள் முறையே மகாநதி தெரு மற்றும் காவேரி தெரு. காவேரி தெருவில் இடம் வலமாக இரண்டு தெருக்கள் பிரிகின்றன. இவற்றின் பெயர்கள் முறையே பவானிதெரு, பொன்னி தெரு. நான் குடியிருப்பது பவானி தெரு. இந்த தெருவில் பத்து வீடுகள் உள்ளன. என்னுடைய வீட்டைத் தவிர்த்தால் மற்ற அனைத்தும் ஐந்து வருடங்களுக்கு மேல் அங்கு உள்ளவை. நான் இங்கு புதுவீடு கட்டி குடிவந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன.
இதில் விசித்திரம் என்னவென்றால் தேர்தல் ஆணையத்திலுள்ள பட்டியல்களில் இந்த தெருக்களின் பெயர்களே இல்லை. அதில் சிந்து நகர் மெயின் ரோடு, சிந்து நகர் முதல் சாலை, சிந்து நகர் இரண்டாவது சாலை என்றே குறிப்பிடப்பட்டுள்ளன. வீட்டு எண்களும் இப்படித்தான். வீட்டு வாசல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு எண்களுக்கும் வாக்காளர்கள் பட்டியலிலுள்ள எண்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. என்னுடைய மனைவிக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டிலும் கூட (Booth slip) என்னுடைய வீட்டு இலக்கம் காலியாக விடப்பட்டிருந்தது. இந்த தெருக்களிலுள்ள பல வீடுகள் ஐந்து, பத்து வருடங்களாக உள்ளன என்கிறார்கள். ஆகவே இங்கு நிரந்தரமாக வசிக்கும் பலருக்கும் Voter ID உள்ளது. ஆனால் அவற்றிலும் கூட வீட்டு இலக்கம் தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது. 'இதையெல்லாம் பூத்ல யாரும் செக் பண்ணப் போறதில்லை சார். இவ்வளவு ஏன், பூத் ஸ்லிப்புல இருக்கற ஃபோட்டோவுல இருக்கற ஆள்தானா நாமன்னு கூட அங்க யாரும் பாக்க மாட்டாங்க.' என்றார் என்னுடன் வாக்களிக்க வந்திருந்த ஒருவர். வாக்களித்துவிட்டு வந்த என்னுடைய மனைவியும் இதையேத்தான் சொன்னார். 'யாருமே ஃபோட்டோவையெல்லாம் பாக்கலீங்க. லிஸ்ட்ல கையெழுத்த மட்டும் வாங்கிக்கிட்டாங்க' என்றார். வீட்டு வரி ரசீது மற்றும் மின் கட்டண ரசீது மற்றும் தபால் நிலைய பதிவேடுகளில் தெருக்களின் பெயர்களும் வீட்டிலக்கங்களும் சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கும்போது தேர்தல் இலாக்காவில் மட்டும் ஏன் இந்த குளறுபடிகள்? இதற்கு யார் காரணம்?
இனி என்னுடைய பெயர் விடுபட்ட விஷயத்திற்கு வருவோம். நான் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வேறொரு விலாசத்தில் இருந்ததாலும் என்னுடைய வீட்டு கட்டிடப் பணிகள் முடியும் தருவாயில் இருந்ததாலும் புதுவீட்டுக்கு சென்ற பிறகு பதிவு செய்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு (9.3.2014) புதிய வாக்காளர்களுடைய பெயர்களை பதிவு செய்துக்கொள்ள ஒரு சிறப்பு முகாம் எல்லா வாக்குச் சாவடிகளிலும் நடைபெறவுள்ளது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையை கேட்டதும்தான் நானும் என்னுடைய மனைவியும் என்னுடைய தெருவில் புதிதாக குடிவந்திருந்த இன்னும் சிலரும் எங்கள் பகுதி வாக்குச் சாவடிக்குச் சென்று படிவம் எண் 6ஐ சமர்ப்பித்தோம். எங்களுடன் சேர்ந்து அன்றைய தினம் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த வாக்குச் சாவடியில் விண்ணப்பித்தோம்.
அன்றிலிருந்து சுமார் ஒரு மாதம் கழித்து திருத்தப்பட்ட துணை வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளிவரும் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றார்கள். ஆனால் தேர்தல் தியதி வரையிலும் அவை வெளியிடப்படவே இல்லை. வாக்குச் சாவடிக்கு செல்லும் தினத்தன்றும் காலை எழுந்ததும் இணையதளத்தை ஆராய்ந்தேன். ஆனால் அதே நேரத்தில் பலரும் இதே வேலையை செய்துக்கொண்டிருந்தார்களோ என்னவோ தேர்தல் ஆணைய தளம் முடங்கிப் போயிருந்தது. சரி வாக்குச் சாவடிக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று சென்றோம். வாக்குச் சாவடிக்கு அருகே அதிமுக, திமுக கட்சியினர் வாக்காளர் பட்டியல் சகிதம் காத்திருந்தனர். அவர்களிடம் விண்ணப்பம் சமர்ப்பித்ததற்கு சான்றாக எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ரசீதைக் காண்பித்து கேட்டோம். ஆனால் 'இந்த புது லிஸ்ட் எங்கக்கிட்ட இல்ல சார் பூத்தில் கேட்டுப்பாருங்கள்.' என்று கூறவே வேறு வழியின்றி வாக்குச் சாவடிக்குச் சென்றோம். அங்கு ஒரு மாதத்திற்கு முன்பு எங்களிடம் புது விண்ணப்பங்களைப் பெற்ற அதே பணியாளர்கள் (உண்மையில் அவர்கள் மூவரும் அருகிலிருந்து அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களாம்!) அன்றும் பணியில் இருந்தனர். அவர்களிடம் அவர்கள் அளித்திருந்த ஒப்புதல் சீட்டைக் காட்டி எங்க பேர் லிஸ்ட்ல இல்லையே என்றோம். அவர் 'இதுல இருக்காதுங்க. இன்னைக்கி காலையிலதான் எங்களுக்கு வேற ஒரு அடிஷனல் லிஸ்ட் குடுத்துருக்காங்க. அதுல இருக்கான்னு பாக்கறேன்' என்று கூறிவிட்டு தன் கைப்பையில் பத்திரமாக வைத்திருந்த புதிய திருத்தப்பட்ட பட்டியலை எடுத்தார். அதில் ஐந்தாறு பக்கங்களே இருந்தன. அதாவது 9.3.14 அன்று அதே வாக்குச்சாவடியில் புதிதாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களுடைய பெயர்களைக் கொண்ட துணைப்பட்டியல்!
அதை வாங்கிப் பார்த்தபோதுதான் தெரிந்தது என்னைப் போலவே அன்று படிவங்களை சமர்ப்பித்த பலருடைய பெயரும் விடுபட்டுப்போயிருந்தது. பலருக்கும் அவர்களுடைய குடும்பங்களில் யாராவது ஒருவர் அல்லது இருவருடைய பெயர்கள் விடுபட்டுப் போயிருந்தன. என்னுடைய விஷயத்தில் என்னுடைய மனைவி பெயர் இருந்தது. என்னுடைய பெயர் இல்லை. எனக்கு அடுத்த வீட்டில் இருந்தவருடைய பெயரும் அவருடைய மகனுடைய பெயரும் இருந்தது. மனைவியின் பெயர் இல்லை. ஏன் என்று கேட்டால் 'எங்களுக்கே புரியலையே சார்' என்ற பதில்தான் மீண்டும், மீண்டும் வந்தது. அவர்களையும் குறை சொல்வதில் பயனில்லை. ஏனெனில் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களை தாலுக்கா அலுவலகத்தில் சமர்ப்பிப்பதுடன் அவர்களுடைய அலுவல் முடிவடைகிறது. ஆனாலும் அவர்களுடன் ஏமாற்றமடைந்த வாக்காளர்கள் சிலர் தேவையில்லாமல் கோபப்பட அவர்களும் பதிலுக்கு கோபப்பட்டனர். பிறகு அங்கு பணியில் இருந்த காவலர்கள் வந்து சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.
எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் புதிதல்ல. பணியின் நிமித்தம் நான் பல ஊர்களில் பணியாற்ற வேண்டியிருந்தாலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் அந்தந்த ஊரில் பதிவு செய்துக்கொண்டு வாக்களிப்பது வழக்கம். மும்பையில் இருந்தபோதும் வாக்களித்துள்ளேன். அப்போதெல்லாம் கணினிகளும் இருக்கவில்லை. இருந்தாலும் இந்த அளவுக்கு பிரச்சினை இருக்கவில்லை. சென்னையிலும் கூட இருமுறை வாக்களித்துள்ளேன். இந்த முறை எனக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் பெயர்கள் விடுபட்ட அனுபவம் ஏற்பட்டுள்ளது. இன்றைய செய்தியில் மும்பையில் ஒரே விலாசத்தில் பல ஆண்டுகள் வசித்து வரும் பிரபல குற்றவியல் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் பெயரே விடுபட்டுப் போயுள்ளது என்ற செய்தியை படித்தபோது அவருக்கே இந்த நிலை என்றால் நாம் எம்மாத்திரம் என்று நினைத்துக்கொண்டேன்.
இம்முறையும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும்தான் இத்தகைய குழப்பங்கள் பல இடங்களிலும் ஏற்பட்டுள்ளதாம். இதற்கு முக்கிய காரணம் எவ்வித முன்னனுபவமோ ஆள் பலமோ (Manpower)இல்லாத ஒரு தனியார் நிறுவனத்திடம் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை ஒப்படைத்ததுதான் முக்கிய காரணம் என்கிறார்கள். இவர்களுடைய cut and paste வேலைதான் இத்தனை குழப்பத்திற்கும் காரணமாம். ஒரே விலாசத்தில் பல ஆண்டுகள் வசித்துவந்தவர்களுடைய விஷயத்தில் இவ்வித குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. என்னைப் போன்று புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படும்போதுதான் இவை நிகழ்கின்றன போலும். மேலும் இம்முறை தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும்போதுதான் புதிதாக வாக்காளர்களைச் சேர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முறை தமிழகத்தில் மட்டும் ஆறு லட்சம் புதிய வாக்காளர்கள் 9.3.14 அன்று நடத்தப்பட்ட முகாம்களில் விண்ணப்பத்திருந்தனராம். இவர்களுடைய பெயர்கள்தான் பெரும்பாலும் விடப்பட்டுவிட்டன என்கின்றனர்.
இதில் இன்னுமொரு செய்தியையும் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நேற்றைய தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில் எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்கு விகிதம் உயர்ந்திருப்பதைப் பார்க்கும்போது Bogus voting நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாகவே எண்ணுகிறேன். ஏனெனில் பூத் ஸ்லிப்பில் இருக்கும் புகைப்படத்தை வாக்குச்சாவடியில் அமர்ந்திருக்கும் பணியாளர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. பூத் ஸ்லிப்பிலோ அல்லது வாக்குச்சாவடியிலுள்ள பட்டியலிலோ வாக்காளர்களின் கையொப்ப நகல் ஏதும் இல்லை. ஆகவே யார் வேண்டுமானாலும் யாருடைய பூத் ஸ்லிப்பை வேண்டுமானாலும் கொண்டு சென்று வாக்களிக்க முடியும் என்றே தோன்றுகிறது. ஆண் பெயரிலுள்ள வாக்காளருக்கு யாராவது ஒரு ஆணும், அதே போன்று பெண் வாக்காளர் பெயரில் யாராவது பெண்ணும் சென்றால் போதும். குறிப்பாக கிராமப் புறங்களில் இம்முறையில் வாக்குகள் தவறுதலாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றே எண்ணுகிறேன். இதற்கு மோடி அலையோ லேடி அலையோ அல்லது டாடி அலையோ தேவையில்லை. கேடிகள் அலையே போதும். இவர்களுக்கு முன்னால் வாக்குச் சாவடிகளில் எவ்வித ஈடுபாடும் இல்லாமல் பணியாற்றும் அரசு ஊழியர்கள் எம்மாத்திரம்?
**********