தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டண அறிவுப்பு பெற்றோர்களிடையே வரவேற்பையும் பள்ளி நிர்வாகிகளிடையே சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய அரசு அறிவிப்பின்படி தமிழகத்திலுள்ள பள்ளிகள் கீழ்காணும் அதிகபட்ச தொகையை மட்டுமே ஆண்டுக் கட்டணமாக வசூலிக்க வேண்டும்.
1. துவக்கப் பள்ளிகள் - ரூ.5,000/-
2. நடுநிலைப் பள்ளிகள் - ரூ.8,000/-
3. உயர்நிலைப் பள்ளிகள் - ரூ.9,000/-
4. மேல்நிலைப் பள்ளிகள் - ரூ.11,000/-
கிராமப்புறங்களிலுள்ள துவக்கப் பள்ளிகளுக்கு ரூ.3,500/- என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி அறிவிப்பைத் தொடர்ந்து வந்துள்ள இந்த அறிவிப்பு எதிர்பார்த்தபடியே பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமச்சீர் கல்வித்திட்டம்
ஒரு மாநிலத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது நல்ல கொள்கைதான்.
ஆனால் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சமச்சீர் கல்வி திட்டம் என்கிற பெயரில் அரசு அல்லாத பள்ளிகளின் கல்வித் தரத்தை குறைத்துவிடுவது சரியா?
இன்றைய கல்வி முறையில், சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பாட திட்டங்களில் ஆறாவது படிக்கும் மாணவன், அரசு பள்ளியில் 12வது படிக்கும் மாணவனின் அறிவை பெற்று விடுகிறான் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படியென்றால், தற்போதிருக்கும் அரசு பள்ளிகளில் பின்பற்றப்படும் பாடத்திட்டங்கள் எந்த அளவிற்கு பின் தங்கி உள்ளது என்பதை பாருங்கள்.
சமச்சீர்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அரசு பள்ளிகளின் தரத்தை மிகவும் உயர்த்துவது அவசியமாகிறது என்பது இதிலிருந்து தெரிகிறது இல்லையா?
அதை விடுத்து அரசு பள்ளிகள் பின்பற்றும் மிகவும் தரம் குறைந்த பாடத் திட்டத்தையே பின்பற்றி மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளும் தங்களுடைய பாடத்திட்டங்களை வடிவமைத்துக்கொள்வதால் யாருக்கு லாபம்?
இத்தகைய தனியார் பள்ளிகள் நாட்டின் மற்ற மாநிலங்களிலுள்ள தனியார் பள்ளிளுக்கு ஈடான பாடத்திட்டங்களை வடிவமைத்து தங்களுடைய மாணவர்களை பயிற்றுவிப்பதற்கு அரசு எதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கேள்வி சம்பந்தப்பட்ட மாணவர்களுடைய பெற்றோர்களின் மனதில் எழத்தான் செய்கிறது.
குறிப்பாக மாநிலம் விட்டு மாநிலம் அலுவலக மாற்றங்கள் நிமித்தம் குடிபெயரும் மாணவர்களின் கதியை நினைத்துப் பார்த்தால் வேதனையாகத்தான் இருக்கிறது. உதாரணத்திற்கு என்னுடைய அனுபவத்தையே கூறுகிறேன். நான் 1984ம் வருடம் சென்னையிலிருந்து மும்பைக்கு மாற்றலாகிச் சென்றபோது என்னுடைய இளைய மகள் சென்னையிலுள்ள மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டத்தில் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தாள். நான் செப்டம்பர் மாதத்தில் மாற்றப்பட்டிருந்ததால் என்னுடைய் மகள் படித்துக்கொண்டிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை இந்த நேரத்தில் சென்றால் அங்குள்ள பள்ளிகளில் இடம் கிடைப்பது கடினமாயிருக்குமே என்றார்கள். மும்பையில் தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் சமயத்தில் புதிதாக மாறிவரும் மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்குவது வழக்கம் என்பதை நான் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்ததால் அவர்களை வற்புறுத்தி மாற்ற சான்றிதழுடன் என் மகள் காலாண்டு தேர்வில் பெற்றிருந்த மதிப்பெண் பட்டியலையும் பெற்று அழைத்துச் சென்றேன். மும்பையில் என் நண்பர்கள் பரிந்துரைத்த பள்ளியை அணுகி என்னுடைய நிலையை விளக்கி என் மகளுடைய மதிப்பெண் பட்டியலையும் அளித்தேன். ஆனால் பள்ளி தலைமையாசிரியர் தமிழக பள்ளிகளை விட எங்களுடைய பள்ளியின் கல்வித்தரம் அதிகமாயிருக்கும் ஆகவே உங்களுடைய மகளை ஒரு வகுப்பு குறைத்து சேர்த்துக்கொள்கிறேன் என்றார். எனக்கோ பெண்பிள்ளைதானே ஒரு வருடம் போனால் என்ன என்று தோன்றியது. ஆனால் என் மகளோ தைரியத்துடன் தலைமையாசிரியரிடமே என்னை ஐந்தாம் வகுப்பு தகுதியானவள்தானா என்று பரிசோதித்துவிட்டு கூறுங்கள் என்றாள். அவளுடைய பதில் தலைமையாசிரியருக்கு நிச்சயம் கோபத்தை வரவழைத்திருக்க வேண்டும். உடனே அவர் ஐந்தாம் வகுப்பு ஆசிரியரை அழைத்து இந்த மாணவியை பரிசோதித்து பாருங்கள் என்றார். சுமார் ஒரு மணி நேரம் என்னை காக்க வைத்துவிட்டு அவரே மீண்டும் அழைத்து 'your daughter's standard is really good. I'll admit her in V standard' என்று சம்மதித்தார்!
சென்னையில் மெட்ரிக் பள்ளியில் பயின்றிருந்த என்னுடைய மகளுடைய ஐந்தாவது வகுப்பு புத்தகங்களும் மும்பையில் சமச்சீர்கல்வித்திட்டத்தில் எட்டாம் வகுப்பு பாட புத்தகங்களும் ஏறக்குறைய ஒன்றாயிருந்ததை பார்த்தபோது எனக்கு மிகவும் வியப்பாயிருந்தது. அதாவது சென்னையில் ஐந்தாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த என் மகள் மீண்டும் மூன்றாவது வகுப்பிலிருந்து படிக்க வேண்டியிருந்தது! ஆகவே அந்த ஆண்டு இறுதியிலேயே என்னுடைய மகளை மீண்டும் சென்னையில் கொண்டு வந்து சென்னை சர்ச் பார்க் பள்ளியில் சேர்த்துவிட்டேன்.
தமிழகத்தில் சமச்சீர்கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் இதே நிலைதான் இன்றைய மாணவர்களூக்கும்.
சமச்சீர் கல்வித்திட்டத்தை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கட்டண அறிவுப்பு அரசு பள்ளிகளின் அவலநிலைக்கு தனியார் பள்ளிகளையும் இறக்கிவிடும் என்பதில் ஐயமில்லை.
அடாவடியாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தெம்பில்லாத ஒரு அரசால் மட்டுமே இப்படி கண்மூடித்தனமாக across the board என்பார்களே அதுபோல் ஒரேயடியாக கட்டணத்தை குறைக்க முடியும் என்பதற்கு இந்த அறிவிப்பு ஒரு நல்ல உதாரணம்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து நகரத்திலுள்ள தனியார் பள்ளிகளில் மிகவும் ஜரூராக நடைபெற்றுக்கொண்டிருந்த நுழைவுத் தேர்வுகள் எல்லாம் நின்றுபோயுள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் புதிய சேர்ப்புகளும் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அரசின் எதிர்ப்பை எதிர்த்து தனியார் பள்ளிகள் அனைத்தும் இணைந்து கூட்டத்தை கூட்டி கட்டண விகிதத்தை 30லிருந்து 40 விழுக்காடு வரை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன. இந்த கோரிக்கைகள் நியாயமானதுதானா இல்லையா என்பதல்ல இப்போதைய பிரச்சினை. தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி தங்களுடைய பள்ளிகளை காலவரையின்றி மூடவோ அல்லது நீதிமன்றங்களை நாடவோ செய்தால் மாணவர்களின் கதி என்ன?
மேலும் பல பள்ளிகள் தங்களுடைய மாணவர்களுக்கென வழங்கிவரும் பல extra curricular திட்டங்களையும் நிறுத்திவிட உத்தேசித்துள்ளன. மேலும் தங்களுடைய ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்துள்ளன. இதன் விளைவாக இப்பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதம் கூடவும் வழியுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் நாற்பதுக்கும் குறைவாக மாணவர்களைக் கொண்டிருந்த பள்ளிகளில் ஐம்பதிலிருந்து அறுபதுவரை கூட வாய்ப்புள்ளது. கல்வியறை பயிற்சியுடன் நீச்சல், விளையாட்டு, பாட்டு, இசை, பேச்சு மற்றும் கவிதை போட்டிகளை நடத்துவதும் நின்றுபோகும். அரசின் சமச்சீர்கல்வித் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள பாடங்களையல்லாமல் வேறெதையும் மாணவர்களுக்கு போதிக்க எந்த தனியார் பள்ளியும் முன்வரப்போவதில்லை என்பதும் உண்மை!
இதற்கு விடிவுதான் என்ன?
தமிழகத்தில் இயங்கிவரும் அனைத்து தனியார் பள்ளிகளையும் அவரவரகளுடைய தரத்தைப் பொருத்து வகைப்படுத்த வேண்டும். அதாவது மிகச் சிறந்த, சிறந்த, சுமாரான என்று வகைப்படுத்தி அவற்றிற்கேற்ற முறையில் கல்விக்கட்டணத்தையும் நிர்ணயிக்க வேண்டும். இத்தகைய திட்டம் பெற்றோர் அவரவர் தகுதிக்கேற்ப பள்ளிகளை தெரிவு செய்து தங்களுடைய குழந்தைகளை சேர்த்துக்கொள்ள வழிவகுக்கும்.
குப்பனும் சுப்பனும் ஒன்று என்று வாதத்திற்கு வேண்டுமானால் சுவையாயிருக்கும். ஆனால் நடைமுறைக்கு ஒத்துவராது.
இன்றைய கல்விக்கட்டண குறைப்பை வரவேற்கும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் கல்வித்தரம் குறைவதை அறிந்து இதையே குறை கூற துவங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது என் கருத்து.
ஏழை மற்றும் நடுத்தரத்திற்கும் சற்று குறைந்த மாணவர்களையும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு உதவ எண்ணும் அரசு அதிகபட்ச கட்டணத்தை ஒரே சீராக அனைத்து பள்ளிகளுக்கும் நிர்ணயித்து இப்போதுள்ள கட்டணத்தை செலுத்த முடிந்த நடுத்தர மற்றும் அதற்கு மேலேயுள்ளவர்களை தண்டனைக்குள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயம்?