கடந்த வாரம் என் நண்பர் முத்து(தமிழினி) அவர்களின் 'அந்த காலத்தில்' என்ற தலைப்பில் எழுதிய பதிவை வாசித்ததும் எனக்குத் தோன்றியவைகளை ஒரு தனி பதிவாக எழுத வேண்டும் என்று நினைத்தேன்.
முத்துவின் பதிவைப் படிப்பதற்கு முந்தைய நாள் இரவு என்னுடைய மகள் படிக்கும் கல்லூரி மாணவர் ஒருவர் (என் மகள் இறுதியாண்டு. இம்மாணவர் மூன்றாம் ஆண்டு. ஆனாலும் என் மகள் தலைமையில் உள்ள சுமார் இருபத்தைந்து மாணவ/மாணவியர் கொண்ட குசும்பு குழுவின் உறுப்பினர்களுள் ஒருவராம்!) தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது அவருடைய கல்லூரி பேருந்துடனேயே மோதி, விபத்துக்குள்ளாகி சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.
அவருடைய வயது 22.
‘எப்ப பார்த்தாலும் சிரிச்சிக்கிட்டே இருப்பாம்ப்பா. நல்லா வேற படிப்பான். அவங்க பேட்சில அவந்தான் ஃபர்ஸ்ட் செமஸ்டர்லருந்து ஃபர்ஸ்ட் ராங்க் வருவான்.. நல்ல சிவப்பா இருப்பான். என்னெ எப்ப பார்த்தாலும் என்னக்கா மூஞ்சில கொஞ்சம் வெள்ள பெயிண்ட் அடிச்சிக்கிட்டா நீங்களும் என்ன மாதிரி ஆயிரலாம் இல்லேம்பான்.. பாவம்ப்பா அவன்.. அவங்கப்பாவும் அம்மாவும் டைவோர்ஸ் பண்ணிக்கிட்டு அப்பா அமெரிக்காவுல, அம்மா துபாய்ல, தங்கச்சி ஊட்டியில, இவன் மெட்றாஸ்ல.. ஆனாலும் அந்த வருத்தத்த வெளிய காமிச்சிக்காம எப்ப பார்த்தாலும் சிரிச்சிக்கிட்டு.. அவனுக்கு ஏம்ப்பா இப்படி நடந்தது?’ என்றாள் என் மகள். ‘இறைவன், இறைவன்னு எப்ப பார்த்தாலும் எழுதிக்கிட்டிருக்கீங்களே.. நீங்க சொன்ன இறைவனாப்பா இந்த மாதிரியெல்லாம் பண்றார்? எல்லாம் சுத்த வேஸ்ட்ப்பா..’
இப்படி மணிக்கணக்காய் அரற்றிக்கொண்டிருந்த என் மகளை எப்படி தேற்றுவதென தெரியாமல்..
நேற்று, ஞாயிறன்று என்னுடைய தேவாலயத்தில் ஆங்கில திருப்பலி நேரத்தில் நான் கேட்ட பிரசங்கமும் (பாதிரியார் மிக அருமையான ஆங்கிலப் புலமை பெற்றிருந்ததால் அவரால் உணர்ச்சி ததும்ப சொற்பொழிவாற்ற முடிந்தது) இதையொட்டியே இருந்தது ஒரு தற்செயலான காரியம்தான் என்றாலும் அவர் எடுத்துரைத்த இரண்டு சம்பவங்களும் கூட இப்பதிவை எழுத தூண்டியது எனலாம்.
முதலாவது: என்னுடைய கோடம்பாக்கம் பங்கில் அங்கத்தினர்களாகவிருந்த அப்பா, அம்மா, மகள் என்ற ஒரு சிறு குடும்பம். கடந்த வாரத்தில் +2 பரீட்சையில் முதல் இரண்டு பரீட்சைகள் எழுதி முடித்துள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ‘உடம்பெல்லாம் பயங்கரமா வலிக்குதப்பா..’ என்று புகார் செய்த மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்களுக்கு அதிர்ச்சி.. தங்களுடைய ஒரே செல்ல மகளுக்கு ப்ளட் கான்சர்..! கலங்கி நின்ற பெற்றோர் என்னுடைய பங்கு குருவிடம் கேட்ட கேள்வி.. ‘ஏன் ஃபாதர் எங்களுக்கு இந்த சோதனை?’
இரண்டாவது: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி சரித்திரத்தின் ஒரே கறுப்பு சாம்பியன் தான் ஒரு HIV Positive என அறிந்தபோது ஆர்தர் ஆஷ் தன்னுடைய நெருங்கிய மத போதகர் ஜெஸ்சி ஜாக்சனிடம் கேட்ட கேள்வி ‘I thought God gave me the brightest crown in the world when I won the Wimbledon. Why now, this Cross to me?’
ஏன்... ஏன் ... ஏன்?
மூன்று சம்பவங்கள், மூன்று கேள்விகள்..
ஏன்?
‘பதினெட்டு வயசு வரைக்கும் எல்லா க்ளாஸ்லயும் எங்க பொண்ணுதான் ஃபாதர் ஃபர்ஸ்ட். கவிதைப் போட்டி, கதைப் போட்டி, பாட்டு போட்டின்னு எல்லா போட்டிகள்லயும் ஃபர்ஸ்ட் வந்து எங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷத்துக்கு மேல சந்தோஷத்த வாரிக் குடுத்த எங்க பொண்ணுக்கா ஃபதர் இந்த சோதனை? என்ன கொடுமை ஃபாதர்..?
மருத்துவமனையில் இரத்த புற்று நோய்க்கு சிகிச்சைக்கு தயாராகிவரும் இளம் மாணவியின் பெற்றோர் கேட்கும் கேள்வி இது..
அமெரிக்காவிலிருந்து வந்த தந்தை முகத்தில் எந்தவித வருத்தத்தின் சாயலும் இல்லாமல் நிற்க.. ‘நீங்க செஞ்ச அக்கிரமந்தாங்க எம்புள்ளய இப்படி அநியாயமா கொன்னுருச்சி..’ என்று அரற்றும் தாயின் குரல் என் மகளை நேற்றும், அதற்கு முந்தைய நாளும் உறங்க விடாமல் செய்கிறதே..
தான் எந்தவித தவறும் செய்யாதிருந்தும் தன்னுடைய முந்தைய இரண்டு இருதய அறுவைச் சிகிச்சைகளின்போது எய்ட்ஸ் நோய்க் கிருமிகளுடனான இரத்தம் ஏற்றப்பட்டதன் மூலம் எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் இள வயதிலேயே மரிக்க நேர்ந்த ஆர்தர் ஆஷின்.. Why me? என்ற கேள்வி..
சும்மாவா சொல்கிறார்கள்?
Inscrutable are the ways of God என்று..
(இதை என்னுடைய 'என்பைபிள்' வலைப்பதிவில் இடலாம் என்றுதான் தயார் செய்தேன். ஆனால் ஆன்மீகப் பதிவுகளை படிப்பதில் மிகச் சிலரே விருப்பம் காட்டுவதால் இப்பதிவில் இடுகிறேன்.)