30 ஜனவரி 2014

திண்ணை (வெட்டி?) பேச்சு!

இந்த வெட்டி திண்ணைப் பேச்சு என்ற பகுதியை சில மாதங்களாக நிறுத்தி வைத்திருந்தேன். இதற்கு முக்கிய காரணம் விவாதம் செய்ய தேவையான காரசாரமான விஷயங்கள் எதுவும் நாட்டில் நடக்காமல் இருந்ததுதான். தேர்தல் நெருங்குவதால் மீண்டும் இதை துவக்கலாம் என்ற எண்ணத்தில் இந்த வாரம் முதல் துவக்கியுள்ளேன். வழக்கம் போலவே தேர்தல் வரை எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் வரும். 

இதிலுள்ள கருத்துக்கள் பெரும்பாலும் என்னுடையவைதான் என்றாலும் அதற்கு மாற்றாக உள்ள கருத்துக்களையும் உங்கள் முன் வைக்கவே ரஹீம்பாய், கணேஷ் என்ற கற்பனை நபர்களையும் இணைத்துள்ளேன். 

*****

ரஹீம்பாய் அவருடைய வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்கிறார். ஜோசப்பும் உடன் இருக்கிறார். கணேஷ் அப்போதுதான் வருகிறார்.

ரஹீம்: என்னய்யா வழக்கம் போலவே இன்னைக்கிம் லேட்டாத்தான் வறீர் போல?

கணேஷ்: (சிரிப்புடன்) லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நியூசோட வருவோம்ல?

ஜோசப்: அதென்னங்க லேட்டஸ்ட் நியூஸ்?

கணேஷ்: நம்ம வாசன அம்போன்னு விட்டுட்டாங்களே அத சொல்ல வந்தேன்.

ரஹீம்: (சிரிக்கிறார்) ஓ அதுவா. கரெக்ட். ஒரு சீட்டுக்கு பாத்தா வர்ற தேர்தல்ல கிடைக்கற ஒன்னும் ரெண்டும் கிடைக்காம போயிருமேன்னு பாத்துருப்பாங்க. அது மட்டுமில்லீங்க. இதுல இன்னொன்னும் இருக்கு.

ஜோசப்: அதென்ன இன்னொன்னு?

ரஹீம்: மந்திரி சபையில இருந்துக்கிட்டே இது சரியில்ல, அது சரியில்லன்னு அறிக்கை விட்டுக்கிட்டே இருந்தாருல்ல? நாராயணான்னு இருந்தவரு போட்டுக் குடுத்துருப்பாரு. 

ஜோசப்: அப்படீங்கறீங்க? எனக்கென்னவோ இது திமுகவோட மறுபடியும் கூட்டணி வச்சிக்கறதுக்கு காங்கிரஸ் பண்ற அட்டெம்ப்ட்டுன்னு நினைக்கேன். என்ன சொல்றீங்க கணேஷ்?

கணேஷ்: ஆமா எனக்கும் அப்படித்தான் தோனுது. ஆனா இப்பவும் கலைஞர் இதப் பத்தி மூச்சு விடாம இருக்கார் பாருங்க. கூட்டணி வேணும்னா அவங்களே வரட்டும்னு....

ரஹீம்: அவர் கூப்ட்டும் நடிகர் பதிலே சொல்லாம இருக்காரில்லையா அந்த கடுப்பாருக்கும். 

கணேஷ்: அதான் நடிகர் வந்தா காங்கிரசோட வாங்கன்னு சொல்லிட்டாராமே.

ஜோசப்: இதத்தான் நேரம்னு சொல்றது. அறுபது வருசமா அரசியல்ல இருந்துட்டு இப்போ நேத்து பேய்ஞ்ச மழையில முளைச்ச காளான்கிட்டல்லாம் கையேந்த வேண்டியிருக்கு பாருங்க. இத என்னன்னு சொல்றது?

ரஹீம்: நீங்க என்ன ஜோசப் புரியாத ஆளாருக்கீங்க? அறுபது வருசம் இருந்து என்ன பிரயோசனம்? தனியா நின்னா ஒன்னு கூட கிடைக்காது போலருக்கே? 

கணேஷ்: அதென்னவோ உண்மைதான். வீட்ல இருக்கறவங்கள கட்டுக்குள்ள வச்சிக்க முடியாதவங்கல்லாம் நாட்டுக்கு நல்லது பண்றேன்னு வந்தா யார் நம்புவாங்க? சரி, அப்படியே இவங்க மூனு பேரும் கூட்டணி வச்சாலும் பெருசா எதுவும் கிடைக்குமா என்ன?

ஜோசப்: நல்ல கேள்வி. நாலு முனை, அஞ்சி முனை போட்டின்னு இல்லாம மும்முனை போட்டின்னு ஓட்டு சிதறாம இருக்கும். 

ரஹீம்: என்னது மும்முனை போட்டியா? எது பாஜக, பாமக, மதிமுக கூட்டணியா? நீங்க வேறங்க. அதெல்லாம் ஒரு கூட்டணின்னு சொல்லிக்கிட்டு. டெப்பாசிட் கிடைச்சா லாபம். 

கணேஷ்: (கோபத்துடன்) யோவ் பாய், ஆரம்பிச்சிராத. இன்னைக்கி நாடு முழுசும் அடிக்கற மோடி அலையில...

ரஹீம்: (குறுக்கிடுகிறார்) என்னது மோடி அலையா? எங்க, இங்கயா? ஜோக் அடிக்காதைய்யா. நார்த்ல எப்படியோ, சவுத்ல அப்படியொன்னும் காணம். குறிப்பா தமிழ்நாட்ல.... போன தடவ மாதிரிதான்... ஒன்னு கிடைச்சா லாபம். 

கணேஷ்: பாத்துக்கிட்டே இருங்க. நாப்பதையும் அள்றமா இல்லையான்னு...

ஜோசப்பும் ரஹீம்பாயும் உரக்க சிரிக்கின்றனர். கணேஷ் அவர்கள் இருவரையும் எரித்துவிடுவதுபோல் பார்க்கிறார்.

கணேஷ்: (எரிச்சலுடன்) என்ன ஜோசப், நீங்களும் இந்தாள் கூட சேந்துக்கிட்டு சிரிக்கறீங்க?

ஜோசப்: தப்பா நினைச்சிக்காதீங்க கணேஷ். ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் பேராசை. இல. கணேசனுக்கே இந்த அளவுக்கு ஆசை இருக்காது. அஞ்சோ ஆறோ கிடைச்சாப் போறும், நாமளும் ஒரு ஸ்டேட் மந்திரியாயிரலாம்னு நினைச்சிக்கிட்டிருப்பார்.

ரஹீம்: அது இருக்கட்டுங்க. திமுக-காங்கிரஸ்-தேதிமுக கூட்டணிய பத்தி சொல்லுங்க, எத்தன சீட் கிடைக்கும்?

ஜோசப்: கரெக்டா சொல்ல முடியாது. என்னெ கேட்டா இந்த கூட்டணியால அம்மாவுக்கு கிடைக்கப் போற விக்டரி மார்ஜின் வேணும்னா குறையலாம். ஆனா இவங்களுக்கு உருப்படியா இடங்க ஏதாச்சும் கிடைக்குமாங்கறது சந்தேகம்தான். மிஞ்சிப் போனா நாலஞ்சி கிடைக்கலாம். அதையும் நிச்சயமா சொல்ல முடியாது. 

ரஹீம்: எனக்கும் அப்படித்தான் தோனுது. முப்பத்தொன்பது சீட்ல முப்பதுக்கு குறையாம அம்மாவுக்கு போயிரும். வைகோ ஜெயிக்க சான்ஸ் இருக்கு. விடுதலை சிறுத்தை சரியான தொகுதியில நின்னா ஜெயிக்கலாம். மீதி மூனு சீட்டு திமுகவுக்கு கிடைக்கும். காங்கிரசுக்கும் தேதிமுகவுக்கும் ஒன்னும் கிடைக்க சான்ஸ் இல்ல. என்ன சொல்றீங்க?

கணேஷ்: (சலிப்புடன்) அடப் போங்கய்யா.... நீங்களும் ஒங்க ப்ரடிக்‌ஷனும்... பாஜகவுக்கு தமிழ்நாட்லருந்து கிடைக்கற ஒவ்வொரு சீட்டும் நம்ம ஸ்டேட்டுக்கு முக்கியம். ஏன்னா சென்ட்ரல்ல மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்ணப் போறது நாங்கதான். இங்க மட்டும் ஒன்னும் கிடைக்காம போச்சி அடுத்த அஞ்சி வருசத்துக்கு நம்மள யாரும் கண்டுக்க மாட்டாங்க. அது இலங்கை விஷயமானாலும் சரி, நம்ம ஃபிஷ்ஷர் மேன் விஷயமானாலும் சரி.... 

ரஹீம்: (நக்கலாக) அப்படி நடந்தாத்தான? 

ஜோசப்: அப்படியே நடந்தாலும் இங்க மேடத்துக்கு கிடைக்கற முப்பது, முப்பத்தஞ்சி சீட்டும் ரொம்ப பெரிய ரோல் ப்ளே பண்ணுங்க. ஏன்னா பாஜகவுக்கு 200 சீட்டுக்கு மேல கிடைக்கறதுக்கு சான்ஸே இல்லேங்கறாங்க. மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்ணணும்னா அதிமுகவோட சப்போர்ட் நிச்சயம் வேண்டியிருக்கும். என்ன சொல்றீங்க பாய்?

ரஹீம்: மேடத்துக்கு முப்பது இடங்க கிடைக்கும்கறத ஒத்துக்கறேன். ஆனா நீங்க சொல்றா மாதிரி பிஜேபிக்கு இருநூறு சீட் கிடைக்கும்கறத நா ஒத்துக்க மாட்டேன். 175லருந்து 180க்கு மேல ஒப்பேறாது. அத்தோட அதிமுகவ தவிர வேற எந்த பெரிய கட்சி பிஜேபிக்கு சப்போர்ட் பண்ணுங்கறீங்க? தமிழ்நாட்ட விட்டா சொல்லிக்கறளவுக்கு சீட் கையில இருக்கப் போற கட்சிங்கள்ல எஸ்.பி, பி.எஸ்.பி, டிஎம்சி... இவங்கள்லாம் பிஜேபிய சப்போர்ட் பண்ணுவாங்களா என்ன? அப்புறம் பீஹார்ல நித்தீஷ். மோடின்னு பேர் சொன்னாலே கடுப்பாறவர். அகாலிக்கு இந்த தடவ பெருசா ஒன்னும் கிடைக்கப் போறதில்லையாம். 

ஜோசப்: என்ன பாய் ரொம்ப டீப்பாவே அனலைஸ் பண்ணி வச்சிருக்கீங்க போல?

ரஹீம்: (சிரிக்கிறார்) நம்ம கடையில வியாபாரம் நடக்குதோ இல்லையோ வர்றவங்கள்லாம் இதப்பத்தித்தான பேசிக்கிறாங்க? எல்லாம் கேள்வி ஞானம்தான். 

கணேஷ்: யோவ், ரோட்ல போற வர்றவன் சொல்றதையெல்லாம் வச்சிக்கிட்டு பேத்தாத. 225லருந்து 250 சீட்டுக்கு கீழ போறதுக்கு சான்ஸே இல்ல. மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்றதுக்கு சிம்பிள் மெஜாரிட்டி இருந்தாலே போறும். உங்க மேடம் சப்போர்ட்லாம் நமக்கு தேவையே இருக்காது. சிவசேனா சப்போர்ட் மட்டுமே போறும். 

ரஹீம்: இந்த நினைப்புலத்தான கூட்டணியில இருந்த நித்தீஷ கட் பண்ணி விட்டுட்டீங்க?

கணேஷ்: பின்னே? இன்னைக்கி நாடு முழுசும் மோடிய நம்பறத தவிர வேற வழியே இல்லேன்னு பேசிக்கிறாங்க நீங்க என்னடான்னா மேடம் அத செஞ்சிருவாங்க, இத செஞ்சிருவாங்கன்னு பேசிக்கிட்டு....

ஜோசப்: சரி கணேஷ். நீங்க சொல்ற 250 சீட் எங்கருந்தெல்லாம் கிடைக்கும்னு சொல்றீங்க? 

கணேஷ்: அதெல்லாம் கரெக்டா சொல்ல முடியாது. ஆனா கிடைக்கும். 

ரஹீம்: (சிரிக்கிறார்) அதான பாத்தேன். எந்த டீட்டெய்லும் இல்லாம மோடி வித்தை காட்ற மாதிரி பேசாதய்யா. இருக்கறதிலயே பெரிய ஸ்டேட்ஸ்ல எதுலயும் உங்களுக்கு பெருசா கிடைக்கப் போறதில்ல. அப்புறம் எப்படி 250னு சொல்றீங்க? சவுத்லருக்கற ஆந்திரா, கர்நாடகா, கேரளா அப்புறம் தமிழ்நாடு/பாண்டியிலருக்கற மொத்த இடங்க 130ல ஒங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்னாவது சொல்ல முடியுமா?

கணேஷ்: (கூரையை பார்க்கிறார்) 50 இல்லன்னா 60 கிடைக்கும்.

ரஹீம்: (சிரிக்கிறார்) யோவ், எங்க வீட்டுக் கூரைய பாக்காத. அது வெறும் ஓடு, ஓட்டு இல்ல. நா சொல்றேன். கர்நாடகாவ தவிர வேற எங்கயும் ஒன்னும் பேறாது. அங்கக் கூட போன தடவ மாதிரி டபுள் டிஜிட்ல கிடைக்காது. நாலஞ்சி கிடைச்சா லாபம். வெஸ்ட்ல மஹாராஷ்டிராவுல ஒங்களுக்கும் சிவசேனாவுக்கும் சேத்து இருக்கற 48 சீட்ல பாதி கிடைக்கலாம். அப்புறம் குஜராத், சட்டீஸ்கர், மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், ஹரியானாவுலருந்து எழுபதுலருந்து எண்பது வரைக்கும் கிடைக்கும். பீஹார், ஒரிசா, பஞ்சாப்லருந்தெல்லாம் ஒரு பத்து பதினைஞ்சி.... கொல்கொத்தாவுலருந்து நாலஞ்சி கிடைச்சா லாபம், உபியில எஸ்.பி, பிஎஸ்பிக்கு கிடைச்சதுபோக ஜாஸ்தி போனா பத்து... எல்லாத்தையும் கூட்டி கழிச்சி பாத்தா 175லருந்து 180 வரைக்கும்தான்..... 

கணேஷ்: யோவ், அது மோடி இல்லாமையே கிடைச்சிரும். மோடிதான் பிரைம் மினிஸ்டர் கேன்டிடேட்டுன்னு சொன்னதுக்கப்புறம் பெரிய அலையே வீசுதுய்யா. இதுல மேடம் கட்சிய சேத்து எல்லாமே அடிச்சிக்கிட்டுப் போயிரும். நீங்க வேணா பாருங்க. 

மீண்டும் ஜோசப்பும் ரஹீம்பாயும் சிரிக்கின்றனர்.

ஜோசப்: சரிங்க நீங்க சொல்றா மாதிரியே நடக்கட்டும். வேற ஏதாச்சும் பேசுவோம்.

கணேஷ்: (சிரிக்கிறார்) ஒங்க ராஹுல் பேபி ஒரு பேட்டி குடுத்தார அதப் பத்தி பேசலாமா? நா ரெடி. 

ஜோசப்: அரசியல பொறுத்தவரைக்கும் ராஹுல் பேபிதான் ஒத்துக்கறேன். ஆனா அன்னைக்கி அவர் சொன்னதுல விஷயம் இல்லாம இல்ல.

கணேஷ்: எது? விஷயமா? நீங்க வேற ஜோசப். அவர் அன்னைக்கி எந்த கேள்விக்கி ஒழுங்கா பதில சொன்னார்? செவிடன் காதுல விழுந்தா மாதிரி கோஸ்வாமி கேட்ட எல்லா கேள்விக்கும் ஒரே பதிலத்தான சொல்லிக்கிட்டிருந்தார்? நாட்ல இருக்கற எல்லா பொம்பளைங்களையும் எம்பவர் பண்ணப் போறாராம். அத ஏன் இந்த பத்துவருசத்துல செய்யலேன்னு கேட்டா பதில காணம். அத்தோட விட்டாரா? இவர் என்னவோ ஃபாரின்லருந்து வந்து குதிச்சா மாதிரி இங்க நடக்கற எதுவுமே சரியில்ல, நா வந்து எல்லாத்தையும் மாத்தப்போறேங்கறார். எது சரியில்ல, எத மாத்தப்போறேன்னு சொல்லாம..... என்னெ கேட்டா இவருக்கு விஷய ஞானமே இல்லீங்க... இப்படியொரு முக்கியமான இன்டர்வ்யூவுக்கு வர்றவரு எதையுமே ப்ரிப்பேர் பண்ணாம வந்து சொதப்பி இருக்கற கொஞ்ச நஞ்ச பேரையும் ரிப்பேராக்கிட்டு போனதுதான் மிச்சம். 

ஜோசப்: அப்படி ஒரேயடியா சொல்லிற முடியாதுங்க. அவர் சொன்ன நாலு விஷயத்த பத்தி சொல்றேன். கேட்டுட்டு சொல்லுங்க.

ரஹீம்: நாலு விஷயமா? அப்படியென்ன சொன்னார்?

ஜோசப்: 1. அரசியல் கட்சிங்க, ஜுடிஷியரி அப்புறம் மீடியாவையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள்ள கொண்டு வரணும். 2. குஜராத் கலவரத்துக்கு ஸ்டேட் கவர்ன்மெண்ட் சரியான ஆக்‌ஷன் எடுக்காததுதான் முக்கிய காரணம். அதனால அப்போ சீஃப் மினிஸ்டரா இருந்த மோடிதான் இதுக்கு பொறுப்பு 3. பார்லிமென்ட், கேபினட் மினிஸ்ட்ரின்னு இருக்கறப்போ ஒரு ப்ரைம் மினிஸ்டர் மட்டும் பெருசா எதையும் செஞ்சிற முடியாது. 4. மோடி சொல்ற மெத்தேட இம்ப்ளிமென்ட் பண்ணா அது அதிகாரம் முழுசையும் ஒரு சின்ன க்ரூப்கிட்ட குடுத்தா மாதிரி ஆயிரும்னு அவர் சொன்னதுல தப்பு ஏதாச்சும் இருக்காங்க?

கணேஷ்: (கோபத்துடன்) என்ன ஜோசப் நீங்களுமா? குஜராத் கலவரத்துல மோடி மேல எந்த தப்பும் இல்லேன்னு இதுக்குன்னு சுப்ரீம் கோர்ட் போட்ட டீமே சொல்லிருச்சி. அவங்க சொன்னதுல தப்பு ஒன்னும் இல்லேன்னு சுப்ரீம் கோர்ட்டும் சொல்லிருச்சி. அதுக்கப்புறமும் இதையே சொல்லிக்கிட்டிருந்தா எப்படின்னு கோஸ்வாமி கேட்டாரே? அதுக்கு ஒங்க தலைவர் என்ன சொன்னார்? கேட்டத வுட்டுப்போட்டு எதை, எதையோ சொல்ல்க்கிட்டிருந்தார். சுப்ரீம் கோர்ட் சொன்னதையெல்லாம் ஏத்துக்க முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதான?

ரஹீம்: யோவ் என்னய்யா பெரியா டீம்? அவனுங்க யார் கிட்ட விசாரிச்சாங்க? கலவரம் நடந்தப்போ அதிகாரத்துல இருந்தவங்கக் கிட்டத்தான? பாதிக்கப்பட்ட யாரையாச்சும் விசாரிச்சாங்களா? எல்லா இடத்துலயும் போலீஸ் இருந்தும் ஒன்னுமே செய்யாம வேடிக்கைப் பாத்துக்கிட்டிருந்தாங்களே அதுக்கு யார்யா பொறுப்பு? ஃபீல்டுல இருக்கற போலீஸ் டீம் அவங்க மேலதிகாரிங்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும் கலவரம் ஜாஸ்தியாய்ட்டே இருக்கு நாங்க என்ன பண்ணணும் சொல்லுங்கன்னு மெசேஜ் மேல மெசேஜா அனுப்பியும் மேலருந்து ஒன்னும் பதிலே வராம இருந்துதுன்னு பேப்பர்ல எல்லாம் போட்டுருந்தானே அது பொய்யா? இவ்வளவு ஏன், மோடியோட டைரக்ட் சூப்பர்விஷன்ல இருந்த போலீஸ் அதிகாரிகளே அவர் சொல்லித்தான் நாங்க செஞ்சோம்னு அஃபிடவிட்லாம் தாக்கல் பண்ணாங்களே அதெல்லாம் பொய்யின்னா அவங்க மேல எதுக்கு இதுவரைக்கும் ஆக்‌ஷன் எடுக்காம இருக்காங்க? ஒன்னு சொல்றேன் கேளு. அடுத்த எலெக்‌ஷன்ல பிஜேபி தோக்கணும். மோடி குஜராத் சீஃப் மினிஸ்டர் போஸ்டலருந்து ராஜினாமா பண்ணணும். அதுக்கப்புறம் ஒரு இன்வெஸ்ட்டிகேஷன் நடக்கட்டும். அப்புறம் பாருங்க. ஒவ்வொரு அதிகாரியும் கதறிக்கிட்டு உண்மைய சொல்றத. இதுக்கு பயந்துதானய்யா மோடி இன்னும் கூட அந்த போஸ்டலருந்து ரிசைன் பண்ண மாட்றாரு? 

கணேஷ்: (கோபத்துடன்) யோவ் எதையாவது ஒளறாத. சுப்ரீம் கோர்ட்டே அவங்க ரிப்போர்ட்ட படிச்சிட்டு எல்லாம் சரிதான்னு சொல்லியாச்சி....

ஜோசப்: கணேஷ் கோபப்படாதீங்க. ரஹீம் பாய் சொல்றதுலயும் நியாயம் இருக்கு. ஒரு சீஃப் மினிஸ்டர் பதவியில இருக்கறப்பவே அவருக்கு எதிரா எந்த அதிகாரிங்க பேசுவாரு? நியாயமா இவர் மேல அலிகேஷன் வந்தப்பவே இவர் ராஜினாமா செஞ்சிட்டு என்ன இன்வெஸ்ட்டிகேஷன் வேணும்னாலும் செஞ்சிக்குங்கனு சொல்லியிருக்கணும். சரி அப்பத்தான் செய்யல. பி.எம். கேன்டிடேட்டுன்னு அனவுன்ஸ் பண்ணதுக்கப்புறமாவது செஞ்சிருக்கலாம்லே? பாய் சொல்றா மாதிரி அவர் பதவியில இல்லாட்டி எந்த அதிகாரி என்ன விட்னெஸ் குடுப்பாரோங்கற பயத்துலதான் இன்னமும் அந்த போஸ்ட்ல ஒட்டிக்கிட்டுருக்கார். அந்த மாதிரி அதிகாரிங்க சொன்னத வச்சித்தான் சுப்ரீம் கோர்ட் அப்பாய்ன்ட் பண்ண இன்வெஸ்ட்டிகேஷன் டீமும் அவங்க ரிப்போர்ட ப்ரிப்பேர் பண்ணியிருப்பாங்க. அவங்க ரிப்போர்ட்ல டிஃபெக்ட் எதுவும் இல்லேன்னுதான் சுப்ரீம் கோர்ட் சொல்லுதே தவிர மோடி குத்தம் இல்லாதவர்னு சொல்லல. ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

கணேஷ் சலிப்புடன் எழுந்து நிற்கிறார்: இதுக்கு மேலயும் இங்க இருந்தா எதையாவது எக்குத்தப்பா சொல்லிருவேனோன்னு பயமா இருக்குங்க. நா வரேன்.... அடுத்த வாரம் பாக்கலாம்.

அத்துடன் அவர் எழுந்து அவர்களுடைய பதிலுக்கு காத்திராமல் சென்றுவிட ஜோசப்பும் ரஹீம்பாயும் செய்வதறியாது அமர்ந்திருக்கின்றனர்.

********


22 ஜனவரி 2014

நாடாளுமன்ற தேர்தல் ஆரூடம் (நிறைவுப் பகுதி)

இதே அடிப்படையில்  காங்கிரஸ் கடந்த தேர்தலில் கணிசமான இடங்களைப் கைப்பற்றிய  உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, தில்லி, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இம்முறை அதே அளவு இடங்களை கைப்பற்ற வாய்ப்பே இல்லை. இவற்றுடன் மஹாராஷ்டிரா,  மேற்கு வங்க மாநிலங்களையும் இணைத்துப் பார்க்கும்போது இந்த பத்து மாநிலங்களில் மட்டும் சுமார் நூறு இடங்களை காங்கிரஸ் இழக்க வாய்ப்புள்ளது. 

மேலும் தற்போது காங்கிரஸ் அல்லது பாஜக கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதாவது மாநில கட்சிகளின் ஆதிக்கம் இல்லாத மாநிலங்களில், இதுவரை காங்கிரஸ்-பாஜக கட்சிகளுக்கிடையில் இருந்துவந்துள்ள நேரடி போட்டி ஆம் ஆத்மி கட்சியினரின் வருகையால் மும்முனை போட்டியாக மாறவும் வாய்ப்புள்ளது. சமீபத்தில் தில்லி சட்டமன்ற தேர்தலில் நடந்தது போன்று வாக்குகள் சிதறும் சூழலில் இரு கட்சிகளுக்குமே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக காங்கிரசுக்கு இது ஒரு பெரும் சவாலாக அமையக் கூடும். 

இத்தகைய சூழலில் நடைபெறவிருக்கும் தேர்தலில் பாஜக விரும்பும் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் அது கீழ்காணும் வாக்காளர்களால் மட்டுமே சாத்தியமாகும்.

1. காங்கிரசின் ஆட்சியில் கடந்த ஐந்தாண்டு காலமாக நடைபெற்ற ஊழல்களினால் சலிப்படைந்து போயிருக்கும் என்னைப் போன்ற நடுநிலை வாக்காளர்கள் 

2. வாக்களிக்கும் வயதை அடைந்தும் வாக்களிக்க மனமில்லாமல் இருந்த வாக்காளர்கள் மற்றும்

3. புதிதாக வாக்குரிமை பெற்றுள்ள வாக்காளர்கள். 

இதில் மூன்றாவது வகையினர், அதாவது முதல் முறையாக வாக்களிக்கவிருக்கும் இளைஞர்களின் வாக்குகள்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது நிச்சயம் என்று பரவலாக பேசப்படுகிறது.. ஆகவேதான் இத்தகையோரை குறிவைத்து தன்னுடைய பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருக்கிறார் மோடி.

ஆனால் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் இவர்களுடைய வாக்குகள் கணிசமான அளவுக்கு இடங்களை எந்த ஒரு கட்சிக்கும் பெற்றுத்தர வாய்ப்பில்லை என்கின்றனர் தேர்தல் கணிப்பாளர்கள். மேலும் இத்தகையோரில் எத்தனை விழுக்காடு வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பார்கள் என்பதும் புரியாத புதிராக உள்ளது. சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவதில் வல்லவர்களாக உள்ள இவர்களுள் பலரும் வெளிநாடுகளில் அல்லது வெளியூர்களில் பணியாற்றுவதால் வாக்களிப்பதற்கென்றே தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வார்களா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 

நாட்டின் இரு  முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாத  சூழலில் இவ்விரு கட்சிகளும் அமைக்கவிருக்கும் கூட்டணியில் இடம் பெறவுள்ள மாநில கட்சிகளைப் பொறுத்தே இக்கட்சிகளுடைய வெற்றி-தோல்வி அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று அறிஞர் அண்ணா அவர்கள் அன்று கூறியபோது இது சாத்தியமா என்று எள்ளி நகையாடியவர்கள் இன்று அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கூற்று என்பதை உணர ஆரம்பித்துள்ளனர். ஆகவேதான் கூட்டணி கட்சிகளை தெரிவு செய்வதில் இவ்விரு தேசீய கட்சிகளுடைய அணுகுமுறை முக்கியத்துவம் பெறுகிறது.

காங்கிரசின் கடந்த ஐந்தாண்டு கால ஊழல்கள் மற்றும் பொருளாதார பின்னடைவுகள் பல மாநில கட்சிகளையும் அதிருப்தியடையச் செய்துள்ளன என்பதை வைத்து பார்க்கும்போது இப்போது அவர்களுடன் கூட்டு வைத்துள்ள கட்சிகளுள் மஹாராஷ்டிராவின் NCP காஷிமீரில் ஆட்சியிலுள்ள J&K தேசிய காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளைத் தவிர வேறெந்த கட்சியும் அவர்களுடைய கூட்டணியில் சேர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. பீஹாரிலுள்ள லல்லு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி வலிய சென்று சேரலாம். ஆனால் அதனால் காங்கிரசுக்கு பலன் ஏதும் இருக்கப் போவதில்லை.

கூட்டணி விஷயத்தில் பாஜகவின் நிலையும் ஏறக்குறைய இதே நிலைதான். பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள சில சில்லறைத் தமிழக கட்சிகள் அதாவது அதிமுகவுடன் கூட்டு வைத்துக்கொள்ள இயலாத கட்சிகளான தேதிமுக, மதிமுக போன்ற கட்சிகள் வேண்டுமானால் பாஜகவுடன் கூட்டு வைத்துக்கொள்ள விருப்பப் படலாம். ஆனால் மற்ற மாநில கட்சிகள் எவையும் கூட்டு வைத்துக்கொள்ள வாய்ப்பில்லை. இதற்கு மோடியை பிரதமராக முன்னறிவித்ததும் ஒரு காரணம் என்று கூறலாம். திமுக விரும்பினாலும் அதை பாஜக ஏற்றுக்கொள்ளாது என்றே தோன்றுகிறது. 

ஆகவே இவ்விரு கட்சிகளுக்குமே அவர்கள் அமைக்கவிருக்கும் கூட்டணியால் பெரிதாக ஏதும் லாபம் இருக்க வாய்ப்பில்லை. 

அப்படியானால் என்னதான் வழி?

கடந்த தேர்தலின் முடிவில் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 533 இடங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றிய மாநில கட்சிகள் நடைபெறவிருக்கும் தேர்தலில் பெறும் இடங்களின் எண்ணிக்கையே நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் என்கின்றனர் தேர்தல் கணிப்பாளர்கள்.   

இதை நன்கு உணர்ந்துள்ளதால்தான் தமிழக முதல்வர் அடுத்து மத்தியில் அமையவிருக்கும் ஆட்சியை வழிநடத்தும் வலிமையை தன்னுடைய கட்சிக்கு பெற்றுத் தர பாடுபட வேண்டும் என்று சமீபத்தில் தன்னுடைய கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார் . இது அவருடைய பிரதமர் கனவு என்று ஒதுக்கி விட முடியாது. இப்போதுள்ள குழப்பமான சூழல் தொடருமானால் தமிழகத்தில் அதிமுக பெறும் இடங்களின் எண்ணிக்கை அவருக்கு அந்த வலிமையை பெற்றுத் தந்தாலும் வியப்பில்லை. 

நம்முடைய தமிழக முதல்வரைப் போன்றே மேற்கு வங்க முதல்வருக்கும் இத்தகைய கனவு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. நாற்பதும் நமதே என்கிற தமிழக முதல்வர் கூறுவதைப் போன்றே சமீப காலங்களில்  மமதா மேடமும் கூறி வருகிறார்! உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரர் மாயாவதிக்கும் இது ஒரு நீண்ட நாள் கனவு. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் கிடைத்த அடி அவரை தற்போதைக்கு எழுந்திருக்க விடாது. 

மேலே விவாதித்துள் அனைத்தையும் கருத்தில் கொண்டு நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை தோராயமாக கீழே பட்டியலிட்டுள்ளேன்.  



தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருப்பதால் அதற்கு முன் இந்த போக்கு மாறலாம். ஆனாலும் பெரிதாக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. 

பாஜக தனிப்பெரும் கட்சியாக வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்பது உண்மைதான். ஆனால் பிரதமராக நரேந்திர மோடி வர முடியுமா என்பது பாஜக எத்தனை இடங்களைக் கைப்பற்றப் போகிறது என்பதைப் பொறுத்தே அமையும். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஷட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் கிடைக்கவிருக்கும் இடங்களுக்கு மோடி பொறுப்பேற்க முடியாது என்பதால் அதை தவிர்த்துள்ள மற்ற மாநிலங்களில் கிடைக்கவிருக்கும் இடங்கள் அவரைப் பொறுத்தவரை மிக முக்கியத்துவம் பெறுகின்றன. பல அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டுமென்றால் பாஜக குறைந்தபட்சம் 225 இடங்களயாவது கைப்பற்ற வேண்டும். இப்போதைய சூழலில், அதாவது ஆம் ஆத்மி கட்சியின் சமீபத்திய தில்லி வெற்றிக்குப் பிறகு இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

காங்கிரஸ் மற்றும் பாஜகவினரின் இந்த அவல நிலைக்கு தேசிய கட்சிகள் என்ற நிலையில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தங்களுடைய கட்சிகள் வளர தேவையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் எந்த தேர்தலில் எந்த மாநில கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் வெற்றி கிடைக்கும் என்கிற குறுகிய கால கண்ணோட்டத்திலேயே இருந்து வந்ததுதான் முக்கிய காரணம். 

நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் எவ்வித அடித்தளமும் இல்லாத பாஜக தனித்து ஆட்சி அமைக்க தேவையான இடத்தை யாருடைய தயவும் இல்லாமல் கைப்பற்றிவிட முடியும் என்பதும் அது சாத்தியம்தான் என்று அனைவரும் கூப்பாடு போடுவதும் வேடிக்கையாகத்தான் உள்ளது. 

காங்கிரசின் மீதுள்ள கோபம் மட்டுமே பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்துவிட உதவாது. ஏனெனில் காங்கிரஸ் இழக்கும் ஒவ்வொரு ஓட்டையும் பெற இன்று பல வலிமை வாய்ந்த மாநில கட்சிகள் உள்ளன. இது போதாது என்பதுபோல் புதிதாய் முளைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியும் இம் மாநில கட்சிகளுடன் இணைந்து பாஜக மற்றும் மோடியின்  இலட்சியத்தை வெறும் பகற்கனவாக்கிவிடுமோ! 

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

*********** 

21 ஜனவரி 2014

நாடாளுமன்ற தேர்தல் ஆரூடம்



எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தல் இந்திய அரசியல் சரித்திரத்தில் ஒரு பெரும் மாற்றத்தை  ஏற்படுத்தும்  என்று பாஜகவும் சில எதிர்கட்சிகளும் கூறி வருகின்றன. இதை சமீபத்தில் நடந்து முடிந்த நான்கு மாநில சட்டசபை தேர்தல் எடுத்துக் காட்டியுள்ளன என்றும் நாள்தோறும் தன்னுடைய பொதுக்கூட்டங்களில் கூறிவருகிறார் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.

அவர் கூறுவது எந்த அளவுக்கு உண்மை, அப்படியே பாஜக தேர்தலில் ஜெயித்தாலும் அது தனிக் கட்சியாக ஆட்சியை அமைக்க முடியுமா, அப்படியே அமைத்தாலும் நமோ பிரதமராக முடியுமா என்பதை சற்று விரிவாக ஆய்வு நடத்தினால் என்ன என்று தோன்றியதன் விளைவே இந்த பதிவு. 

ஆனால் இதில் எழுதியுள்ளது போலவே நடக்கும் என்று ஆருடம் கூறுவதல்ல என்னுடைய நோக்கம்.  கடந்த பொதுத் தேர்தலில் நாட்டின் இரு பெரும் கட்சிகளான காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் கிடைத்த நாடாளுமன்ற இடங்களின் அடிப்படையிலும் அதன் பிறகு இந்திய அரசியலில் ஏற்பட்ட ஒரு சில நிகழ்வுகளால் ஏற்பட்ட தாக்கங்களின் அடிப்படையிலும் இந்த கணிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இது ஒரு கணிப்பு மட்டுமே. 

இந்த கணிப்பு முழுக்க, முழுக்க என்னுடையதல்ல. பல ஆங்கில பத்திரிகை மற்றும் மின்சஞ்சிகைகளில் வெளிவந்துள்ள பிரபல அரசியல் கண்ணோட்டகர்களின் (observers) கட்டுரைகளை சார்ந்து செய்யப்பட்ட கணிப்பு என்றும் கூறலாம்.

இந்த கணிப்பின் அடிப்படை தத்துவமாக  நான் எடுத்துக்கொண்டது இதுதான்:

1. மாநில கட்சிகளான திமுக, அதிமுக, தெலுங்கு தேசம், திரினாமூல்,  எஸ்.பி, பி.எஸ்.பி, ஆர்.ஜே.டி. போன்ற மாநில கட்சிகள் மற்றும்  தேசிய கட்சிகள் என்று கருதப்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் அதே கட்சிகளுக்கே தொடர்ந்து வாக்களிப்பார்கள். இத்தகையோருக்கு மாநில தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களுக்கு இடையிலுள்ள வேறுபாடு ஒரு பெரிய பொருட்டல்ல.

2. பாஜகவுக்கு வாக்களித்து வந்துள்ளவர்களும் இம்முறை மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்க வாய்ப்பில்லை. 

3. காங்கிரசின் தொண்டர்களும் அதன் தீவிர ஆதரவாளர்களும் தங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள் மாட்டார்கள். 

4.  ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றி எதிர்வரும் பொதுத்தேர்தலிலும்  தாக்கத்தை ஏற்படுத்தும்.


இந்த கணிப்பில் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கோ அல்லது தனிப் பெரும் கட்சியாகவோ வரக் கூடிய தகுதியுள்ள இருபெரும் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவினருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கக் கூடும் என்பதை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளேன்.  ஏனெனில் இவ்விரு கட்சிகளாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் போனாலும் இவர்களுடைய தலமையில் மட்டுமே கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. இவர்களைத் தவிர்த்து மூன்றாம் அணி என்பதெல்லாம் சாத்தியமில்லை என்பது என் கருத்து. 

இதற்கு முதலில் இவ்விரு கட்சிகளுக்கும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு மாநிலங்களிலும் கிடைத்த இடங்களை கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் பார்க்கலாம். 



இதன்படி நாட்டிலுள்ள 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்திய தேசீய காங்கிரஸ் 26ல் மட்டுமே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதாவது மீதமுள்ள பதினோறு மாநிலங்களில் இந்த கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. 

பாஜகவோ 14 மாநிலங்களில் மட்டுமே இடங்களை வென்றுள்ளது. அதாவது மூன்றில் ஒரு பங்கு மாநிலங்களில் மட்டுமே அதற்கு இடங்கள் உள்ளன.   நாட்டிலுள்ள மாநிலங்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களில் இவர்கள் ஒரு பொருட்டே இல்லை. இதில் தமிழகமும் அடங்கும். 

மேலும் இந்த 14 மாநிலங்களில் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பாஜக கர்நாடகாவில் ஆட்சியை இழந்துள்ளதையும் பீகாரில் இதுவரை தங்களுடைய கூட்டணியில் இருந்த ஜனதாதளத்தின் ஆதரவை இழந்துள்ளதையும் கருத்தில் கொள்ளும்போது இவ்விரு மாநிலங்களில் கிடைத்த 25 இடங்களும் கூட பறிபோய்விட வாய்ப்புள்ளதையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில் சாதாரணமாக, மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் கட்சிக்கே நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் வாக்களிப்பது வழக்கம்.

அதே சமயம் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பெருமளவில் வெற்றி பெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம். சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருடைய  சொந்த மாநிலமான குஜராத்திலும் கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக அளவு இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால் மாநில கட்சிகளின் ஆட்சி நடைபெறும்  ஒடிசா, உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம், ஆந்திரா, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு ஏற்படும் இழப்பு பாஜகவுக்கு சாதகமாக அமைய வாய்ப்பில்லை என்பதும் உண்மை! காங்கிரஸ் இழக்கும் இடங்கள் அந்தந்த மாநில கட்சிகளான பிஜு ஜனதா தளம், எஸ்.பி அல்லது பிஎஸ்பி, திரினாமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் அல்லது YSR காங்கிரஸ், திமுக அல்லது அதிமுக, அகாலிதளம் மற்றும் ஜனதா தளம் போன்ற கட்சிகளுக்கே கிடைக்க வாய்ப்புள்ளது.

நாளையுடன் முடிவு பெறும்..

13 ஜனவரி 2014

எதற்கு இந்த பெயர் மாற்றங்கள்?

உழவனுக்கு
நன்றின்னு சொல்ல
ஒரு நாள் !

அது பொங்கல் திருநாள்.


உழவனின் தோழன் மாட்டுக்கு
நன்றி சொல்லவும் ஒரு நாள்!

மாட்டுப் பொங்கல்.

இப்போ அதுக்கு பேர்
திருவள்ளுவர் தினமாம்!!

பெரியவங்களுக்கு
நன்றி சொல்றதுக்கு
ஒரு நாள்

காணும் பொங்கல்.

அதுக்கு பேர்
இப்போ உழவர் தினமாம்!!

அப்போ பொங்கல் திருநாளுக்கும்
உழவனுக்கும் உறவில்லையோ?

எதற்கு இந்த பெயர் மாற்றங்கள்?

எந்த பேர்ல வந்தாலும்
இந்த மூனு நாளுமே
திருநாள் தினங்கள்தான்.

பானை வாயிலிருந்து நுரையுடன்
பொங்கும் சோறு
நம் உள்ளங்களிலும்
பொங்கி எழச் செய்யட்டும்
நல்ல எண்ணங்களை!

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!



  

07 ஜனவரி 2014

INSOMNIA என்றால் என்னாங்க - நிறைவுப் பகுதி


சாதாரணமாக இரவில் நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆக குறைந்தது இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது. அதிலும் spicy food  எனப்படும் காரசாரமான நம்முடைய உணவு செரிமானம் இன்னும் சற்று கூடுதல் நேரம் தேவை. ஆகவே பத்து மணிக்கு உறங்க செல்லும் பழக்கம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் எட்டு மணிக்காவது தங்களுடைய இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும். இது சாத்தியமில்லை என்பவர்கள் உறக்கம் வரவில்லையே என்று புலம்புவதில் பயனேதும் இல்லை. வயிற்றில் உள்ள உணவை செரிமானம் செய்யும் வேலையில் மும்முரமாக இருக்கும் நம்முடைய மூளையிடம் நான் உறங்க வேண்டும் என்று கட்டளையிட்டாலும் அது பொருட்படுத்தாது. இன்னும் சிலர் படுத்தவுடனே உறங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உணவுடன் சேர்த்து மதுவையும் அருந்துவார்கள். மதுவின் தாக்கம் மூளையின் செயல்பாட்டையும் பாதிப்பதால் உடனே உறக்கம் வந்துவிடும் என்பது உண்மைதான். ஆனால் மதுவின் தாக்கம் குறைந்ததும் மீண்டும் மூளை விழித்தெழுந்து உணவை ஜீரணிக்கும் வேலையில் இறங்கும். நம்முடைய உறக்கமும் கலைந்துவிடும். அப்புறம் சிவராத்திரிதான். 

உணவு மட்டுமல்லாமல் நாம் பகலில் பருகும் குடிநீரின் அளவும் நம்முடைய உறக்கத்தை பாதிக்குமாம். நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் அளவு குடிநீரை பருக வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் அதே சமயம் இரவு ஏழு மணிக்குப் பிறகு நாம் பருகும் நீரின் அளவை படிப்படியாக குறைத்துவிட வேண்டும். உதாரணத்திற்கு இரவு உணவின்போது இரண்டு டம்ளர் நீருக்கு மேல் (அரை லிட்டர்) பருகக் கூடாது. இல்லையெனில் அதுவே நம்முடைய உறக்கத்தை கலைத்துவிடும். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களும் சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களும் இரவு ஏழு மணிக்குப் பிறகு பருகும் நீரின் அளவில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். இரவு நேரங்களில் மது அருந்தும் பழக்கம் உடல்நலத்திற்கு மிகவும் கேடு என்பதற்கு இதுவும் ஒரு காரணம். குடிநீரைப் போலவே காப்பி/தேநீர் அருந்தும் பழக்கத்திலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். வயது ஏற, ஏற இவற்றின் அளவைக் குறைத்துவிடுவது நல்லது. அறுபது வயதுக்கு மேலுள்ளவர்கள் காலையில் அருந்தும் காப்பி அல்லது தேநீருடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். பதினோரு மணிக்கு ஒன்று மாலை நான்கு மணிக்கு என்று மூன்று வேளையும் அருந்தும் பழக்கம் தொடர்ந்தால் அதுவே இரவில் உறக்கத்தை பாதிக்க வாய்ப்புண்டு. 

படுக்கையறை அமைப்பு

நம்முடைய படுக்கையறையின் அமைப்பும் இரவு உறக்கத்தை கூட்டவோ குறைக்கவோ செய்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். நம்முடைய படுக்கை உறங்குவதற்கு மட்டுமே என்பதை நம்மில் பலரும் புரிந்துக்கொள்வதில்லை. ஆங்கிலத்தில் இதை Bed is for sleep and sex only என்கின்றனர் வேடிக்கையாக. படுக்கையில் அமர்ந்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது, கணினியில் அலுவலக வேலையை பார்ப்பது, ஐ பேடில் இணையத்தில் உலவுவது ஏன் புத்தகம் படிப்பது போன்ற எந்த அலுவலையும் செய்யக் கூடாது. 

படுக்கையறையை வடிவமைக்கும்போதே இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். படுக்கையின் அளவு ஆறடிக்கு நான்கடி என்றால் படுக்கையறையின் அளவு பதினைந்துக்கு பத்து அடி என்ற அளவுக்கு மேல் (அதாவது நீளத்தில் பதினைந்து அகலத்தில் பத்திலிருந்து பன்னிரண்டு) இருக்கலாகாதாம். அதாவது படுக்கையை சுற்றிலும் இலகுவாக சென்றுவர தேவையான  இடம் மட்டுமே இருக்க வேண்டுமாம். படுக்கையை அடுத்து ஒரு சிறிய சாய்வு நாறிகாலி (ஈசிச் சேர் அல்ல) படுக்கைத் தலைமாட்டில் இருபுறமும் சிறு அலமாரிகளைக் கொண்ட மரத்தால் ஆன இணைப்பு (டார்ச், குடிநீர் ஆகியவை வைத்துக்கொள்ள) என ஒரு சில பொருட்கள் மட்டுமே இருக்க வேண்டும். சுவரில் மணிக்காட்டி நிச்சயம் இருக்கக் கூடாது. மணிக்காட்டியே தேவையில்லை என்று சொல்லும்போது டிவி பெட்டிக்கோ அல்லது கணினிக்கோ அங்கு நிச்சயம் இடம் இல்லை.

அடுத்ததாக அறையில் cross ventilation வசதிக்காக இரண்டு ஜன்னல்கள் இருக்க வேண்டும் (இது குடியிருப்புகளில் சாத்தியமில்லை என்பது உண்மைதான்). அதில் ஒரு ஜன்னல் தலைப் பக்கமும் மற்றொன்று இடம் அல்லது வலப்பக்கத்திலும் இருக்கலாம். அதாவது கிழக்கு திசையில் ஒரு ஜன்னல் என்றால் இரண்டாவது ஜன்னல் மேற்கு திசையில் இருக்கலாகாது. வடக்கிலோ அல்லது தெற்கிலோ இருக்க வேண்டும். ஏனெனில் ஜன்னல்கள் எதிரெதிர் திசையில் இருப்பதால் பயன் ஏதும் இல்லையாம்! ஏசி வசதி செய்யும் பட்சத்தில் அது ஒரு ஜன்னலின் மேற்புறத்தில் பொருத்தப்பட வேண்டும். அது கட்டிலின் தலைப்பக்கத்தில் இருந்தால் நல்லது. ஏசியின் குளிர்ந்த காற்று நேரடியாக தலையை தாக்காது. 

அடுத்தது  அறையின் லைட்டிங் (lighting). உறக்கத்திற்கு மிகவும் அவசியமானது இருட்டு. ஆகவே ஜன்னல்களில் நல்ல தடிமனான திரைச்சீலை அவசியம் தேவை. படுக்கை தலைமாட்டில் கையடக்க டார்ச் லைட் இருந்தால் போதும். ஏனெனில் இரவு நேரங்களில் எழுந்திருக்க நேரும்போது மின்விளக்கை எரியவிடுவதும் கூட நம்முடைய உறக்கத்தை பாதிக்க வாய்ப்புண்டாம். Night lamp பழக்கமுள்ளவர்கள் அதை படுக்கைக்கு கீழே அதாவது தரையிலிருந்து ஒரு அடிக்குள் அமைத்துக்கொள்வது நல்லது. இப்போதெல்லாம் இரவில் கண்களை தேவையில்லாத வெளிச்சத்திலிருந்து பாதுகாக்க Eye Pads நிறைய வந்துவிட்டன. அவற்றை வாங்கி அணிந்துக்கொள்ளலாம். அவை கறுப்பு நிறத்தில் இருப்பதால் கண்களுக்கு இதமாக இருப்பதுடன் வெளிச்சத்தை முற்றிலுமாக மறைத்துவிடுகின்றன. கடைகளில் கிடைக்காத பட்சத்தில் நாமாகவே கூட தயாரித்துக்கொள்ளலாம். 

அதற்கடுத்தது அறையினுள் ஒலியின் அளவு. வெளிச்சத்திற்குப் பிறகு நம்முடைய உறக்கத்திற்கு தேவையானது நிசப்தம். சாதாரணமாக நம்முடைய செவி தலைக்கு மேல் சுற்றும் மின்விசிறியின் ஓசைக்கு பழகிப்போய்விடும். அது எத்தனை கடகடவென்று ஓசையிட்டாலும் அது நம்முடைய உறக்கத்தை பாதிப்பதில்லை. அதுபோலவே ஏசி பெட்டியின் ஓசையும் எளிதில் பழகிவிடும். ஆனால் அறைக்கு வெளியிலிருந்து வரும் ஓசைகள் அவற்றின் ஒலி அளவு குறைவாக இருப்பினும் அது நம்முடைய மூளைக்கு பழக்கமில்லாத ஓசை என்பதால் அது நம்முடைய உறக்கத்தை பாதிக்கிறது. ஆகவே இத்தகைய ஒலிகளை எந்த அளவுக்கு தடுக்க முடியுமோ அந்த அளவுக்கு தடுத்துவிடுவது நல்லது. Eye Padகளைப் போலவே Ear Plugs/Shieldகளும் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை அணிந்துக்கொள்ளலாம். 

நம்முடைய மூளையையும் உடலையும் உறக்கத்திற்கு தயாரிப்பது

நான் மேலே குறிப்பிட்டவற்றையெல்லாம் செய்தாலும் சில நேரங்களில் உறக்கம் எளிதில் வருவதில்லை. இதற்கு நம்முடைய மூளையும் உடலும் உறக்கத்திற்கு தயாராக இல்லை என்று பொருள். அன்றைய தினம் நாம் செய்த ஏதோ ஒரு செயலோ அல்லது கேட்ட ஏதோ ஒரு செய்தியோ நம்முடைய மூளையை (மனதை) பாதித்திருக்கும் பட்சத்தில் அதையே நினைத்து மனது அலைபாய்ந்துக்கொண்டிருக்கக் கூடும். ஆகவே உறங்கும்க நேரம் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகிலும் படுக்கையறைக்கு சென்றுவிடுவது நல்லது. ஆனால் உடனே படுக்கையில் வீழ்ந்துவிடாமல் படுக்கைக்கு அருகில் உள்ள சாய்வு நாற்காலியில் அமர்ந்து விளைக்கை அணைத்துவிட்டு, கண்களை மூடி அமர்ந்திருக்கலாம். மனம் அப்போதும் ஒரு நிலையில் வராமல் அன்று நடந்தவற்றையே நினைத்து உழன்றுக்கொண்டிருக்குமானால் அதை அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். இப்படி செய்திருக்கலாமோ அப்படி செய்திருக்கலாமோ அல்லது நாம் அவ்வாறு பேசியிருக்கலாகாதோ, சினம் கொண்டிருக்கலாகாதோ என்றெல்லாம் மனம் அலைபாயும்போது அதனுடன் நாமும் சேர்ந்துக்கொண்டு அதன் போக்கிலேயே செல்ல வேண்டும். பத்து அல்லது பதினைந்து நிமிடத்திற்குள் மனம் தானாக அமைதியடையும். இதற்கு ஏதுவாக நமக்கு பிடித்த இசையை மெலிதாக வைத்து கேட்கலாம். அதற்கென அறையெங்கும் ஸ்டீரியோ வசதி செய்துக்கொள்ள வேண்டும் என்று பொருளில்லை. கையடக்க டேப் ரிக்கார்டரோ அல்லது நம்முடைய செல்ஃபோனிலோ நமக்கு பிடித்த இசையை (Instrumental music is preferable) கேட்கலாம். அல்லது மனதில் அமைதி ஏற்படுத்தக் கூடிய புத்தகத்தை வாசிக்கலாம். மிதமான சூட்டில் குளிக்கலாம். இவ்வாறு எதையாவது செய்து நம்முடைய மூளையை உறங்கும் நேரம் வந்துவிட்டது என்று அறிவுறுத்தி தயாரிப்பதும் ஒரு கலை. 

அதை விடுத்து படுக்கையில் படுத்துக்கொண்டு அடுத்த நாள் அலுவலகத்தில் செய்ய வேண்டியவற்றைப் பற்றி ஆலோசிப்பது மூளையை அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக தூண்டிவிடுவதற்கு ஒப்பாகும். 'இன்னைக்கி செய்ய வேண்டியத பத்தியே நினைச்சி நினைச்சி நேத்து தூக்கமே போயிருச்சிப்பா.' என்று கூறுபவர்களை பார்த்திருக்கிறேன். எல்லாவற்றையும் யோசித்து முடிவெடுத்திருப்பார்கள்.  ஆனால் அதை நிறைவேற்றும் சமயம் வரும்போது உடலும் மூளையும் அதீத அசதியின் காரணமாக ஒத்துழைக்க மறுத்துவிடும். பிறகென்ன, சொதப்பல்தான். மேலதிகாரிகளின் கோபத்தையும் ஏச்சையும் கேட்க வேண்டியதுதான். 

நாம் நம்முடைய தினசரி அலுவல்களை திறம்பட செய்து முடிக்க நமக்கு மிகவும் அத்தியாவசியமானது உறக்கம். அது நம்முடைய உடலுக்கு மட்டுமல்லாமல் மூளைக்கும் ஓய்வு அளிக்கிறது. அடுத்த நாள் உற்சாகத்துடன் எழுந்து நம்முடைய அன்றைய அலுவல்களை செய்து முடிக்க இத்தகைய ஓய்வு மிகவும் அவசியம். 'தூங்குறதுக்குக் கூட நேரம் கிடைக்க மாட்டேங்குதுப்பா, அவ்வளவு வேலை.' என்பவர்கள் நிச்சயம் அவர்களுடைய அலுவல்களில் திறனுள்ளவர்களாக இருக்க வாய்ப்பில்லை. எத்தனை அலுவல்கள் இருந்தாலும் நேரத்திற்கு படுத்து நேரத்திற்கு எழுபவர்களால் மட்டுமே அதே திறனுடன் வருடக் கணக்கில் செயலாற்ற முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கனவுகளில்லா உறக்கம் என்பது சாத்தியமில்லை என்பதும் உண்மை. அதுபோலவே யாராலும் எட்டு மணி நேரம் தொடர்ந்து உறங்கவும் முடியாது. உறக்கத்தின் இடையே பல சுழற்சிகள் (cycles) உண்டு என்கின்றனர் மருத்துவர்கள். அது உண்மைதான். உறக்கம், விழிப்பு,  மீண்டும் உறக்கம் என்னும் சுழற்சி முறையில்தான் உறக்கம் வரும். மேலும் மாதத்தில் ஒரு வாரம் ஆழ்ந்த உறக்கம் அடுத்த வாரம் மிதமான உறக்கம் மீண்டும் அடுத்த வாரம் ஆழ்ந்த உறக்கம் என்பதும் உண்டு. ஆகவே ஒரு சில நாட்கள் ஆழ்ந்த உறக்கம் இல்லை என்றவுடன் அதையே நினைத்து மனதை குழப்பிக் கொள்வதில் அர்த்தமில்லை. அதுபோன்றே எனக்கு உறக்கம் வரவில்லையே, வரவில்லையே என்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கவலைப்படுவதிலும் பொருளில்லை. உறக்கம் வராத சூழலிலும் கண்களை இறுக மூடி படுத்திருக்க வேண்டும். அந்த சூழலில் நம்மையுமறியாமல் மனம் எங்கெங்கோ அலைந்துக்கொண்டிருக்கும். அதை அதன் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது. அதுவாக தன்னால் மீண்டும் தன்னிலைக்கு திரும்பி வரும்போது மீண்டும் உறக்கம் நம்மை ஆட்கொள்ளும். 

எந்த சூழலிலும் படுத்த உடனே உறங்கும் பலரை நானும் பார்த்திருக்கிறேன். அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஆனால் நம்மில் பலருக்கும் அந்த வரம் கொடுக்கப்படவில்லை. அதில் நானும் ஒருவன். சர்வீசில் இருந்தபோது குறிப்பாக கடைசி பத்துவருடங்கள் வங்கியின் கணினி மையத்தின் தலைவராக இருந்தபோது உறக்கம் வராமல் கழித்த இரவுகள் எத்தனை! ஆகவே இப்போதும் சர்வீசில் உள்ளவர்களுக்கு அதுவும் அதிகார பொறுப்பிலுள்ளவர்களுக்கு நான் இதுவரை சொன்ன எந்த டெக்னிக்கும் செல்லுபடியாகாமல் போகவும் வாய்ப்புள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனாலும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை. உடனே தீர்வு ஏற்படவில்லயென்றாலும் நாளடைவில் ஆழ்ந்த உறக்கம் கைவசப்பட வாய்ப்புள்ளது.

*******

06 ஜனவரி 2014

INSOMNIA என்றால் என்னங்க?

'இரவு உறக்கமின்மை' (insomnia) என்பது ஒரு வியாதி இல்லை என்றாலும் அதை அலட்சியப்படுத்துவது முறையல்ல என்கின்றனர் மருத்துவர்கள். நிம்மதியற்ற உறக்கம் (restless sleep) என்று துவங்கி நாளடைவில் உறக்கமின்மையில் (insomnia) கொண்டு விட்டுவிடும் . உறக்கமின்மைதான் நம் உடலில் ஏற்படும் பலவித நோய்களுக்கும் உபாதைகளுக்கும் மூல காரணம்  என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதுவே நாளடைவில் மனத்தளவிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமாம்!

சாதாரணமாக, அதிக உடல் உழைப்பு இல்லாதவர்களிடையில்தான் உறக்கமின்மை அதிகம் காணப்படுகிறது என்றாலும் நம்முடைய மூளை தொடர்ந்து அதிக அளவில் செயல்படும்போதும் (hyper-active) உறக்கமின்மை ஏற்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஒரு திடகாத்திரமான மனிதனுக்கு தினமும் குறைந்தபட்சம் எட்டு மணி நேர உறக்கம் தேவை. எட்டு மணி நேர உறக்கம் என்று கூறும்போது அது 'இரவு உறக்கத்தை' (Night sleep) மட்டுமே குறிக்கிறது. மேலும் இரவில் எட்டு மணி நேரம் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். பகல் நேர உறக்கத்தையோ அல்லது நாள் முழுவதும் அவ்வப்போது உறங்குவதையோ குறிப்பிடவில்லை.

ஆனால் இன்றைய அவசர உலகில் இத்தகைய தடையில்லா இரவு உறக்கம் (undisturbed night sleep) என்பது அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை. குறிப்பாக நம்முடைய இளைய தலைமுறையினருக்கு - அதிலும் குறிப்பாக கணினி தொடர்பான அலுவல்களில் உள்ளவர்களுக்கு -  இது சாத்தியமில்லை. BPO போன்ற சேவை துறையில் பணியாற்றும் பல இளைஞர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் பணியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் வார இறுதி நாட்களில் தவிர இரவு உறக்கம் என்பது கற்பனையிலும் சாத்தியமில்லை. 

ஆகவே இந்த கட்டுரையில் நான் கூறவிருக்கும் எதுவும் BPO அல்லது இரவு நேரத்தில் (Night duty) பணிக்கு செல்பவர்களுக்கு பொருந்தாது. அவர்களைப் பொருத்தவரை உறக்கமின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. இத்தகையோர் காலையில் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் உணவையும் மறந்து உறங்குவதைப் பார்த்திருக்கிறேன். 

இவர்களுடன் இன்றைய தலைமுறையினரையும் சேர்த்துக்கொள்ளலாம். இவர்களுக்கு வார நாட்களில் உறக்கத்தை சேமித்து வைத்து வார இறுதி நாட்களில் அவற்றை பயன்படுத்திக்கொள்ளும் வித்தையும் கைவந்த கலையாகிவிட்டது. மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிக் காலங்களில் வேறு வழியில்லாமல் துவங்கும் இப்பழக்கம் நாளடைவில் பழகிப்போய்விடுகிறது. ஆனால் இளம் வயதில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தாத இந்த பழக்கம் நடுத்தர வயதை எட்டும்போதே பல நோய்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்பதும் உண்மை. 

ஆனால் இரவு உறக்கத்தில் மூளைக்கும் உடலுக்கும் கிடைக்கக் கூடிய ஓய்வு பகல் உறக்கத்தில் கிடைப்பதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆகவேதான் insomania என்றால் அது இரவு உறக்கமின்மையை மட்டுமே குறிக்கின்றது என்கின்றனர்.

உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஆழ்ந்த இரவு உறக்கம் கிடைக்க என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று சுருக்கமாக பார்க்கலாம்.

1. குறித்த நேரத்தில் உறங்கச் செல்ல வேண்டும். 

நம்முடைய உடலுக்குள் body clock என்ற ஒரு அம்சம் உள்ளது. அது மூளையின் ஒரு பாகத்தில் உள்ளதாம்.  மூளையின் இந்த பகுதிதான் அதை இயக்குகிறது என்று இதுவரையிலும் உறுதியாக சொல்லப்படவில்லை. ஆனால் அத்தகைய மணிக்காட்டி நம் உடலுக்குள் இருப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதை நம்மால் பல சமயங்களிலும் உணர்ந்துக்கொள்ள முடியும். குறிப்பாக ஒருவர் தினமும் எட்டு மணிக்கு உறங்க செல்வது வழக்கமாகிவிட்டால் அவரையும் அறியாமல் எட்டு மணிக்கு கண்கள் அசத்தும். அவர் அந்த நேரத்தில் வீட்டில் இருந்தாலும் சரி அல்லது வெளியில் வேறெந்த அலுவலில் இருந்தாலும் சரி அவருடைய மூளை 'இது நீங்கள் உறங்கும் நேரம்' என்று சொல்லிவிடும். அதை பொருட்படுத்தாமல் அவர் செய்துக்கொண்டிருக்கும் அலுவலிலேயே குறியாக இருந்தால் ஒரு சில நிமிடங்களில் மூளை அதை புரிந்துக்கொள்ளும். எட்டு மணிக்கு உறங்கிக்கொண்டிருந்தவர் அடுத்து சில தினங்களுக்கு தொடர்ந்து ஒன்பது மணிக்கோ அல்லது பத்து மணிக்கோ உறங்கும் பழக்கத்தை துவங்குவாரேயாகில் மூளை அதை புரிந்துக்கொண்டு அன்றிலிருந்து உறக்க நினைவுறுத்தலை மாற்றிக்கொள்ளும். அதே போன்று இரவு உறக்கத்தின் இடையில் சிறுநீர் கழிக்கவோ அல்லது வேறெந்த தேவைகளுக்கோ ஒருவர் படுக்கையிலிருந்து எழுந்து செல்ல நேரிடும்போது அப்போது எத்தனை மணி என்று தெரிந்துக்கொள்ள படுக்கையறை கடிகாரத்தில் பார்த்தால் அந்த நேரத்தை மூளை குறித்துக்கொள்ளுமாம்! பிறகு அதே நேரத்தில் அடுத்த நாளும் விழிப்பு வருமாம்! சந்தேகமிருந்தால் பரீட்சித்து பாருங்கள்! இதைத்தான் 'உடல் மணிக்காட்டி' (body clock) என்கின்றனர்.  

2. உடல் உழைப்பு தேவை

அதிக உடலுழைப்பு உள்ளவர்களுக்கு உடல் அசதியால் உறக்கம் எளிதாக வந்துவிடுகிறது. அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு அவர்களுடைய அலுவல்களில் உடலை விட மூளையைதான் அதிகம் பயன்படுத்த வேண்டியுள்ளது. 

உடல் சோர்வைப் போலவே மூளையும் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்குப் பிறகு சோர்வடைகிறது என்றாலும் அது உடல் சோர்வை ஏற்படுத்துவதில்லை. ஆகவேதான் இத்தகையோருக்கு இரவில் எட்டு மணி நேர தடையில்லா உறக்கம் சாத்தியப்படுவதில்லை. 

ஆகவேதான் உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு தினசரி ஒரு குறிப்பிட்ட அளவு உடற்பயிற்சி அல்லது நாற்பது நிமிட நடை ஆகியவை தேவை என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். 

3. உணவு பழக்கம்

அதுமட்டுமல்லாமல் நம்முடைய இரவு நேர உறக்கம் நம்முடைய உணவுப் பழக்க வழக்கத்தையும் சார்ந்ததுதானாம். 

நம்முடைய சிறு வயது முதலே வயிறு நிறைய உண்ண வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றனர் நம்முடைய பெற்றோர். இப்போதும் பல பெற்றோர்கள் தங்களுடைய குழந்தை சற்று குண்டாக இருப்பதையே விரும்புகின்றனர். அத்தகைய குழந்தைகள்தான் ஆரோக்கியமான குழந்தை என்ற நினைப்பு இன்னும் நம்மில் பலரிடமும் உள்ளதை காண முடிகிறது. இந்த வயிறு முட்ட சாப்பிடும் பழக்கம் நம்முடைய மனதில் நன்றாக ஊன்றப்படுவதால் அதுவே பிற்காலத்தில் உறக்கமின்மைக்கும் அதன் விளைவாக சகல நோய்களுக்கும் மூல காரணமாகிவிடுகிறது. 

குறிப்பாக, இன்றைய நவீன அதிவேக யுகத்தில் ஒரு நாளின் முக்கிய உணவாக கருதப்படும் காலை உணவு (Break fast) பலராலும் புறக்கணிக்கப்படுவதை காண்கிறோம். பள்ளிப்பருவத்தில் துவங்கும் இந்த பழக்கம் கல்லூரி முடிக்கும்வரை மட்டுமல்லாமல் அலுவலகங்களுக்கு செல்லும் வயது வரையிலும் கூட தொடர்வதுண்டு. காலை உணவு அறவே புறக்கணிக்கப்படுகிறது என்றால் பள்ளி/கல்லூரி/அலுவலகங்களுக்கு கொண்டு செல்லும் மதிய உணவோ கையடக்க டப்பாவில்! கால் வயிறுக்கும் கூட போறாத நிலை. காலை மற்றும் மதிய உணவில் சேர்க்க முடியாத அனைத்தையும் இரவு உணவில் சேர்த்து உண்ணும் நம்முடைய பழக்கமே இரவு நேர உறக்கத்தை பாதிக்கும் முக்கிய காரணம் என்றாலும் மிகையாகாது. காலையில் ஒரு மகாராஜாவைப் போலவும் இரவில் ஒரு பிச்சைக்காரனைப் போலவும் உண்ண வேண்டுமாம்!

மேலும் இரவு உணவு என்பது நம்மில் பலருக்கும் படுக்கைக்கு செல்வதற்கு அரை மணி முன்புதான் சாத்தியப்படுகிறது. இரவு பத்து மணிக்கு வீடு திரும்பி உடை மாற்றி குளித்து உணவு மேசையில் அமர்ந்து உண்டு முடிக்கும்போது மணி பதினொன்றாகிவிடும். உண்டு முடித்து சில நிமிடங்கள் (அதிகபட்சம் செய்தியை பார்க்க அரை மணி நேரம்). அதன் பிறகு படுக்கைதான். 

சாதாரணமாக இரவில் நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆக குறைந்தது இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது. அதிலும் spicy food  எனப்படும் காரசாரமான நம்முடைய உணவு செரிமானம் ஆக இன்னும் சற்று கூடுதல் நேரம் தேவை. ஆகவே பத்து மணிக்கு உறங்க செல்லும் பழக்கம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் எட்டு மணிக்காவது தங்களுடைய இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும். இது சாத்தியமில்லை என்பவர்கள் உறக்கம் வரவில்லையே என்று புலம்புவதில் பயனேதும் இல்லை. வயிற்றில் உள்ள உணவை செரிமானம் செய்யும் வேலையில் மும்முரமாக இருக்கும் நம்முடைய மூளையிடம் நான் உறங்க வேண்டும் என்று கட்டளையிட்டாலும் அது பொருட்படுத்தாது. இன்னும் சிலர் படுத்தவுடனே உறங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உணவுடன் சேர்த்து மதுவையும் அருந்துவார்கள். மதுவின் தாக்கம் மூளையின் செயல்பாட்டையும் பாதிப்பதால் உடனே உறக்கம் வந்துவிடும் என்பது உண்மைதான். ஆனால் மதுவின் தாக்கம் குறைந்ததும் மீண்டும் மூளை விழித்தெழுந்து உணவை ஜீரணிக்கும் வேலையில் இறங்கும். 

நம்முடைய உறக்கமும் கலைந்துவிடும். அப்புறம் சிவராத்திரிதான். 

நாளை நிறைவுபெறும். 

01 ஜனவரி 2014

வருசத்துல முதல் நாளும் அதுவுமா.....

என்னுடைய இரண்டு மகள்களும் எங்களுடன் இல்லாத முதல் ஆங்கிலப் புத்தாண்டு தினம்!

இருவருக்குமே தொலைபேசி வழியாக புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லியாகிவிட்டது. 

ஆயினும் மனதுக்குள் ஏதோ இனம் புரியாத சோகம். காலையிலிருந்தே மனம் சரியாக இல்லை. அசதி. சோர்வு.

நண்பகல் என்கிறது சுவர்க்கடிகாரம். 

இணையத்தில் சற்று மேயலாம் என்றால் நேற்று செய்திருந்த உறுதிமொழி பயமுறுத்தியது. சரி வேண்டாம் என்று ஏற்கனவே படித்து முடித்திருந்த ஆங்கில நாவல் ஒன்றை மீண்டும் படித்தால் என்ன தோன்ற எடுக்கிறேன். முதல் ஐந்தாறு பக்கத்திலேயே முழு கதையும் நினைவுக்கு வர சலிப்புடன் மூடி வைக்கிறேன்.

சமையலறையிலிருந்து மனைவியின் கைமணத்தில் பிரியாணி வாசனை. இன்னும் குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும் என்கிறார்கள் மனைவி. 

அதுவரை ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்று நினைப்புடன் மாடிப்படி ஏறுகிறேன். 

'ஏங்க எங்க போறீங்க, தூங்கத்தான' மனைவியின் குரல் மையலறையிலிருந்து.

'ஆமா....ஆஃபனவர்தான்.'

'வருசத்துல முதல் நாளும் அதுவுமா.....எதுக்குங்க.... அப்புறம் வருசம் முழுசும் தூங்கிக்கிட்டேதான் இருப்பீங்க... டிவிய பாருங்க.'

காலை டிஃபனுக்கு அரை மணிக்கு முன்னால் சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்த போதும் இதே பல்லவிதான்.

'இன்னைக்கி ஒரு நாளைக்கி போடாட்டித்தான் என்ன?' 

'இன்னைக்கி போட்டாலும் போடாட்டாலும் வருசம் முழுசும் போடத்தானம்மா போறேன்?'

'அது பரவால்லை.. இன்னைக்கி வேணாம்.'

'சரி' என்பதை தவிர வேறு வழியில்லாமல் மாத்திரை டப்பாவை மூடியாயிற்று. சர்க்கரைக்கு ஒரு நாள் சாப்பிடாவிட்டால் பரவாயில்லை. ஆனால் ரத்த அழுத்ததிற்கு அப்படியில்லையே? டிஃபன் சாப்பிட்டு முடித்ததும் மனைவிக்கு தெரியாமல் அதை சாப்பிட்டாயிற்று. 

வீட்டின் பின்வாசல் கிழக்கு திசையில். காலை வெயில் கீழ் பெட்ரூமை நிறைத்திருந்தது. வெளியில் இதுவரை வீடுகள் எதுவும் கட்டப்படாமல் இருக்கும் வெற்று நிலம். சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் புல் வெளி. அதற்கு அடுத்து சாலை அமைக்க முனிசிபாலிட்டி குவித்துப் போட்டிருந்த செம்மண் காற்றில் எழும்பி திறந்திருந்த பின்வாசல் வழியாக வருவது நன்றாக தெரிகிறது.... மூடி வைத்தால் என்ன என்று தோன்ற ஸ்டாப்பரை இளக்கி மூடுகிறேன்.

'வருசம் முதல் நாள் அதுவுமா வெயில் வரட்டுமே.... எதுக்கு மூடறீங்க?'

இப்படி எதற்கெடுத்தாலும் வருசம் முதல் நாளை காட்டி பேசுவது மூட நம்பிக்கையின் உச்சக்கட்டமல்லவா என்று கேட்க தோன்றுகிறது. ஆனால் அதை மனைவியிடம் கேட்பதில் எவ்வித பயனும் இருக்கப் போவதில்லை என்பதும் புரிகிறது.

சரி இதை நம்முடைய வலை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் மீண்டும் மாடி ஏறுகிறேன்.  

'லஞ்ச் ரெடியானதும் சொல்லு... சிட் அவுட்ல இருக்கேன்.' 

'எதுக்குங்க சிட் அவுட்னு டூப் அடிக்கிறீங்க? வருசத்துல முதல் நாள் அதுவுமா பொய் பேசணுமா? நெட்ல எழுதப்போறேன்னுதான் சொல்லிட்டு போங்களேன்.'

பதில் பேசினால் வம்பு... நாம் நினைத்த காரியம் நடக்காது என்ற நினைப்புடன் என் படுக்கையறைக்குள் நுழைந்து கணினியை திறந்து இணையத்துக்குள் நுழைகிறேன். நேற்று எடுத்த உறுதிமொழி நினைவுக்கு வருகிறது. ஒரு அரை மணி நேரம்தானே..... நாளையிலிருந்து என்று வைத்துக்கொள்ளலாம் என்று சமாதானம் சொல்கிறது மனசு. 

வருடத்தின் முதல் நாள் எது செய்தாலும் அதுவே தொடர்ந்து அந்த வருடம் முழுவதும் செய்ய நேரிடுமா என்ன?

அதுபோலவே 'வருசத்துல முதல் நாள் எத செய்யிறமோ இல்லையோ கோவிலுக்கு போயி சாமிய தரிசிச்சிறணும். அப்பத்தான் இந்த வருசம் முழுசும் சாமியோட அருள் கிடைக்கும்.' என்பார்கள். 

'வருடத்தின் முதல் நாள் என்னை வந்து கேட்பவர்களுக்குத்தான் அருள் பாலிப்பேன் என்று எந்த கடவுள் நேரில் வந்து சொன்னார்?' என்று கேட்டால் நாத்திகன் என்பார்கள். 

எங்களுடைய தேவாலயங்களிலும் சொல்லப்படும் அனைத்து பிரார்த்தனைகளிலுமே இறுதியில் 'எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்' என்ற சொல் இருக்கும். அதாவது இறைவனை தொழுவதே எதையாவது கேட்டுப் பெறுவதற்காகத்தான் என்கிற மனப்பாங்கு அனைத்து மத்ததினரிடமே இருப்பதைத்தான் இது காட்டுகிறது.

அதுமட்டுமல்ல. வேண்டியதை எல்லாம் புத்தாண்டின் முதல் நாள் அன்றே இதை பட்டியலிட்டுவிட வேண்டுமாம். 

நேற்று நள்ளிரவிலிருந்தே அனைத்து கோவில்களும் தேவாலயங்களும் நிறம்பி வழிகின்றன. 

இன்னும் சிலர் தமிழ் புத்தாண்டு பிறப்பதற்கு முந்தைய நாள் இரவில் தங்க நகைகளை எல்லாம் கழற்றி சாமியறையில் வைத்துவிட்டு கண்விழித்ததுமே தங்கத்தில் விழிக்க வேண்டும் என்பார்கள். அப்போதுதான் அந்த வருடம் முழுவதும் தங்கம் தங்கமாய் வீடு வந்து சேரும் என்கிற நம்பிக்கை. 

மாத சம்பளவாசிக்கு ஆண்டின் முதல் நாளில் தங்கத்தில் கண் விழித்தால் மட்டுமே அந்த ஆண்டில் தங்கம் வந்து குவிந்துவிடப் போவதில்லை. ஆனாலும் அப்படி ஏதும் நடக்காதா என்கிற நப்பாசைதான் இத்தகைய நம்பிக்கைகளுக்கு மூல காரணம். 

வருடத்தின் முதல் நாளில் நல்லவை எத்தனை நடந்தாலும் அந்த வருடம் முழுவதுமாக நன்மைகளாகத்தான் நடக்கும் என்பதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதுபோலவே வருடத்தின் முதல் நாளில் எத்தகைய தோல்விகள் ஏற்பட்டாலும் அந்த ஆண்டு தோல்வியாகவே முடியும் என்பதிலும் உண்மை இல்லை. 

வெற்றியும் தோல்வியும் நாம் எடுக்கும் முயற்சிகளைப் பொருத்தே அமைகின்றன என்ற புத்துணர்வுடன் இந்த வருடத்தில் அடியெடுத்து வைப்போம். 

உங்களுடைய அனைத்து முயற்சிகளும் நிச்சயம் வெற்றி பெறட்டும் என்ற வாழ்த்துக்களுடன்....