21 ஜூலை 2014

உன் சமையலறையில்..... இது திரை விமர்சனம் அல்ல!

கடந்த வாரம் 'உன் சமையலறையில்......' என்ற திரைப்படத்தை பார்த்தேன். 

அதில் கதாநாயகனும் கதாநாயகியும் தற்செயலாக  தொலைபேசி மூலம் அறிமுகமாகின்றனர். கதாநாயகன் 45 வயது இளைஞர்.  இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லையா அல்லது யாரும் இவரை திருமணம் செய்துக்கொள்ள விரும்பவில்லையா என்பது  திரையில் சொல்லப்படவில்லை. கதாநாயகிக்கு 36 வயது இருக்கலாம். செவ்வாய் தோஷம் என்பதால் எந்த வரனும் கூடி வரவில்லையாம! இந்த நூற்றாண்டிலும் இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன? சில நாட்கள் கழித்து இருவரும் சந்தித்துப் பேச முடிவு செய்கின்றனர். ஆனால் இருவருமே ஒருவரையொருவர் சந்திக்க விருப்பமில்லாமல் கதாநாயகன் தன் மருமகனையும் கதாநாயகி தன் தங்கையையும் அனுப்பி வைக்க 'அவர்கள் 'இருவரிடையிலும் காதல் மலர்கிறது. 

கதாநாயகன், கதாநாயகி இருவருக்கும் தங்களை மற்றவருக்கு பிடிக்காமல் போய்விடுமோ என்கிற எண்ணம் இருந்தது போலும். இந்த எண்ணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு 'நீங்கள் அவருடன் வெளியில் சென்றால் ஒரு தந்தையும் மகளும் போவதுபோல தோன்றும்' என்று கதாநாயகனிடம் அவனுடைய மருமகனும் 'நீயும் அவரும் அக்கா தம்பி போல் இருக்கறீங்க' என்று கதாநாயகியிடம் அவருடைய தங்கையும் கூறி ஏமாற்றுகின்றனர். இறுதியில் உண்மை தெரிந்து இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும்போது இருவருக்குமே ஒருவரையொருவரை பிடித்துப்போகிறது! 

இந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் கதாநாயகனின் மருமகன் கூறுவது: 'உங்களுக்கு அவரை பிடிக்குமான்னுதான் நீங்க கவலைப்படணும். அவங்களுக்கு உங்கள பிடிக்குமான்னு நீங்க கவலைப்படக் கூடாது மாமா.'

கதாநாயகன், கதாநாயகி இருவருமே இந்த எண்ணத்துடன்தான் தங்களுடைய முதல் சந்திப்பில் தங்களுக்கு பதிலாக முறையே மருமகன், தங்கையை அனுப்பி ஆள்மாறாட்டம் செய்கின்றனர். இது இருவருக்குமே தங்களுடைய வயதான உருவத்தினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை என்பதை ஒரு இடத்தில் சூசகமாக தெரிவிக்கிறார்கள். 

உண்மைதான். 

இத்தகைய தாழ்வு மனப்பான்மை நம்மில் பலருக்கும் உண்டு. 

இது எதனால் ஏற்படுகிறது?

இது ஒரு வகை மனோவியாதியா?

இது யாருக்கெல்லாம் ஏற்படுகிறது?

நாம் அனைவருமே மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஏதாவது ஒருவகையில் அவர்களை விட தாழ்ந்தவர்களாக (inferior) இருக்க வாய்ப்புண்டு. அதாவது நம்முடைய மூளையின் அளவு அனைவருக்கும் ஒன்றுதான் என்றாலும் அதனுடைய திறன் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதுண்டு. அதன் அடிப்படையில் நாம் அனைவருமே ஒரே திறனுள்ளவர்கள் அல்ல. அதே போன்றுதான் உருவத்திலும், நிறத்திலும், அழகிலும், செல்வத்திலும்...... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஏதாவது ஒரு வகையில் நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகவும் (superior) மற்ற சிலரை விட தாழ்ந்தவர்களாகவும் (inferior) இருக்க வாய்ப்புள்ளது. 

இதற்கு நாம் மட்டுமே பொறுப்பல்ல. 

ஆனால் இத்தகைய தாழ்வுகளுக்கு (inferiority) தாங்கள்தான் பொறுப்பு என்று எப்போதும் மருகும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. நாம் மட்டும் ஏன் அவர்களைப் போல் இல்லை என்று நினைப்பு மேலோங்கி நம்மை எந்த காரியத்திலும் திறம்பட செயலாற்ற முடியாமல் போய்விடுகிறது.

இந்த எண்ணம் எப்போது எதனால் ஏற்படுகிறது?

தாழ்வு மனப்பான்மையால் அவதியுறும் சிலரை ஆய்வு செய்தபின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில உண்மைகள் இவை:

பெரும்பாலோனோருக்கு இந்த எண்ணம் அவர்களுடைய இளம் வயதில் அவர்களுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால்தான் உருவாக்கப்படுகிறது.

குழந்தைப் பருவத்திலிருந்தே 'நீ ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன்', அல்லது 'உன்னால் முடியாது' என்றெல்லாம் கூறுவதும் 'அவனைப் பார்... இவனைப் பார்' என்று மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதிலிருந்தும்தான் 'நம்மால் ஒன்றும் முடியாது' என்ற எண்ணமும் 'நான் மற்றவர்களை விட தாழ்ந்தவன்' என்கிற எண்ணமும் நம்முடைய மனதில் விதைக்கப்படுகிறது. 

பெற்றோரின் இத்தகைய அறிவுறுத்தல்கள் அவர்களுடைய குழந்தைகளை நல்வழிப்படுத்தவோ அல்லது அவர்களை மேம்படுத்தவோ உதவுவதில்லை. மாறாக அவர்களுடைய மனதில்  தங்களைப் பற்றிய சுயமதிப்பை (self-esteem) இழக்கவே செய்துவிடுகிறது. இத்தகைய சுயமதிப்பு இல்லாதவர்கள்தான் நாளடைவில் தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களாகிவிடுகின்றனர். 

ஆனால் இத்தகைய அறிவுறுத்தல்கள் சில குழந்தைகளை நல்வழிப்படுத்துவதும் உண்டு. அதாவது தங்களுடைய குறைகளை உணர்ந்து அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் செயலில் இறங்கும் குழந்தைகள் காலப்போக்கில் சமுதாயத்தில் சாதனையாளர்களானதும் உண்டு. சரித்திரத்தில் இத்தகைய சாதனையாளர்கள் ஏராளம். பள்ளிப் பருவத்தில் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று ஆசிரியர்களால் புறக்கணிக்கப்பட்ட எத்தனையோ பேர் எதிர்காலத்தில் உலகம் போற்றும் சாதனையாளர்களாக உருவெடுத்துள்ளனர்!

மாறாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுறுத்தலால் மனம் துவண்டு தங்கள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடுபவர்கள்தான் பிற்காலத்தில் தாழ்வு மனப்பான்மை என்ற மனநோய்க்கு ஆளாகிவிடுகின்றனர்.

தாழ்வு மனப்பான்மையில் இரு வகை உண்டு.

1. குழந்தை பருவத்தில் ஏற்படும் மனப்பான்மை. அதாவது தங்களுக்கு மற்றவர்களைப் போன்று திறமை அல்லது அறிவாற்றல் இல்லை கற்பனையான எண்ணத்தாலும் ஆசிரியர், பெற்றோர் போன்றவர்களாலும் விதைக்கப்படும் எண்ணத்தாலும் ஏற்படுவது.  

இதை ஓரளவுக்கு நிவர்த்தி செய்துவிட முடியும். இதற்கு பல வழிகள் உள்ளன. இப்போது நம்முடைய சுய-மேம்பாடு மற்றும் சுய-ஊக்குவிப்புகள் (self improvement and self motivation) ஆகியவைகளை அதிகரித்துக்கொள்ள பல புத்தகங்கள் கிடைக்கின்றன. பயிற்சி பாசறைகளுக்கும் (workshops) பஞ்சமில்லை. இவை ஒரு சில நாட்களில் நம்முடைய திறனை  மேம்படுத்திவிட வாய்ப்பில்லையென்றாலும் காலப்போக்கில் நம்முடைய தரத்தை மேம்படுத்த வாய்ப்புண்டு. அதாவது இத்தகைய தாழ்வு மனப்பான்மை நம்மால், நம்முடைய முயற்சிகளால் நிவர்த்தி செய்துக்கொள்ளக் கூடியது எனலாம். இத்தகைய தாழ்வு மனப்பான்மை நம்மில் பலருக்கும் இருக்கும் இருக்கவும் வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். போட்டிகள் நிறைந்த இந்த உலகில் நம்மால் நாம் இப்போது இருக்கும் இடத்திலாவது நிலைத்து நிற்க இத்தகைய மனப்பான்மை அவசியமானதும் கூட! 

2. வாலிபப் பருவத்தில் அதாவது கல்லூரி காலத்தில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை. 

இத்தகைய மனப்பான்மை பெரும்பாலும் நாமாகவே ஏற்படுத்திக்கொள்வது. இதற்கு அடிப்படையான குறைபாடு என்று நாம் கருதுவது பல சமயங்களில் மிகவும் அற்ப விஷயமாகக் கூட இருக்கக் கூடும். 

நான் உயரத்தில் குட்டை அல்லது நான் கருப்பு அல்லது என் முகம் பார்ப்பதற்கு அழகாக இல்லை அல்லது என் தலை மூடி அவளைப் போல நீளமாக இல்லை இது மாதிரியான உருவ ரீதியான குறைபாடுகளால் ஏற்படுவதுண்டு. 

இன்னும் சிலருக்கு தங்களுடைய ஏழ்மை மற்றும் தாங்கள் சார்ந்திருக்கும் சாதி கூட தங்களை மற்றவர்களை விட தாழ்ந்தவர்களாக கருத  வைத்துவிடுவதுண்டு. 

உண்மையில் பார்க்கப் போனால் இவை எதுவும் ஒரு குறைபாடே இல்லை என்பதும் இதனால் எல்லாம் யாரும் இவர்களை ஒதுக்குவதில்லை என்பதும் இவர்களுக்கு எத்தனை முறை எடுத்துக் கூறினாலும் தெரிவதில்லை. இவை ஏதோ தங்களுக்கு மட்டுமே உள்ள குறைபாடாக எண்ணி, எண்ணி மருகுவார்கள். இதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை நாளடைவில் இவர்களுடைய முன்னேற்றத்தையே பாதிக்கும் அளவுக்கு தீவிரம் அடைந்துவிடுவதுண்டு. 

மேலும் இத்தகைய மனப்பான்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றவர்களுடைய அதாவது தங்களை தாழ்ந்தவர்களாக கருதி ஒதுக்குபவர்களை (இதுவும் கூட இவர்களுடைய கற்பனைதான்) கவர்வதற்காகவே தங்களுடைய சக்திக்கு மீறியதை செய்து சாதிக்க விரும்புவார்கள். அதாவது தங்களை உயர்ந்தவர்களாக (superior) காட்டிக்கொள்ள முயற்சிப்பார்கள். 

இத்தகையோரை பல அலுவலகங்களிலும் பார்க்கலாம். இவர்களுள் பெரும்பாலும் சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு அலுவலிலும் வெற்றியடைந்தால் அதற்கு தாங்கள் மட்டுமே காரணம் என்றும் தோல்வியில் முடிந்தால் மற்றவர்கள்தான் காரணம் என்று கூறுவார்கள். 

இத்தகையோர் மற்றவர்களுடைய கவனத்தை தங்கள் பால் ஈர்க்க எத்தகைய தில்லுமுல்லுகளிலும் ஈடுபட தயங்க மாட்டார்கள். எப்போதும் பிறர் தங்களை மட்டுமே வஞ்சிப்பதாக எண்ணிக் கொள்வார்கள். எல்லா துயரங்களும் தங்களுக்கு மட்டுமே நடப்பதாக சொல்லி சொல்லி புலம்புவார்கள். பிறருடைய சிறிய தவறுகளுக்கும் அவர்களை குறை கூறுவதில் முனைப்பாய் இருக்கும் இவர்களால் தங்களை மற்றவர்கள் குறை கூறுவதை பொறுத்துக்கொள்ள  முடியாது. சொந்த சகோதரனைக் கூட தன்னுடைய போட்டியாளனாக கருதும் இவர்கள் வாழ்க்கை முழுவதையும் மற்றவர்களுடன் போட்டி போடுவதிலேயே கழித்துவிடுகிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். இத்தகைய மனப்பாங்கை துவக்கத்திலேயே கண்டுபிடித்து களையாவிட்டால் நாளடைவில் தீராத மன அழுத்தத்திற்கும் இவர்கள் ஆளாக வாய்ப்புண்டாம்!

தாழ்ச்சியும் (Humility) தாழ்வு மனப்பான்மையும் 

தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் பலரும் தங்களை தாழ்ச்சியுள்ளவர்களைப் போல் காட்டிக்கொள்வார்களாம். அதாவது மற்றவர்கள் தங்களை புகழ வேண்டும் என்று உள்ளூர நினைத்தாலும் தாங்கள் அத்தகைய புகழ்ச்சிக்கு ஏற்றவர்கள் அல்ல என்று வெளியில் காட்டிக்கொள்வார்கள். 

தங்களைத் தாங்களே முழுமையாக உணர்ந்துக்கொள்பவர்களால் மட்டுமே தாழ்ச்சியுள்ளவர்களாக இருக்க முடியும் என்கிறார் நம்முடைய தேசப் பிதா மகாத்மா காந்தி அவர்கள். 'என்னை நானே தெரிந்து வைத்திருக்கவில்லையென்றால்...' அதாவது என்னுடைய பலம் எது பலவீனம் எது என்று எனக்கே தெரிந்திருக்க வேண்டும். 

மேலும் தாழ்ச்சியுள்ளவர்கள் தன்னை மட்டுமல்லாமல் தன்னுடன் பழகுபவர்களையும் நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள். இத்தகையோர் மற்றவர்களுடைய வலிமையையும் (positives) வலிவின்மையையும் (negatives) நன்கு அறிந்து வைத்திருந்து அவர்களுடைய வலிமையை பயன்படுத்திக்கொள்வதுடன் அவர்களுடைய வலிவின்மைகளை களையவும் உதவுவார்கள். தங்களுடைய சாதனைகள் அனைத்துக்கும் தங்களுடன் உழைத்தவர்களையும் சொந்தக்காரர்களாக்கும் பெருந்தன்மையும் இவர்களிடம் இருக்கும். 

இப்போதெல்லாம் இத்தகைய எந்த நற்குணங்களும் இல்லாத தாழ்வு மனப்பான்மையுள்ளவர்கள் தங்களையும் தாழ்ச்சியுடையவர்கள் போல் காட்டிக்கொண்டு நடப்பதை நம் அன்றாட வாழ்க்கையில் மிக அதிக அளவில் காண முடிகிறது. 

சுருக்கமாக கூற வேண்டுமென்றால் 'கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு' என்பதை நம்புவோர் தாழ்ச்சியுடையோர். இதற்கு நேர் எதிரான சிந்தனையுடையோர் தாழ்வு மனப்பான்மையுடையோர்!

********

23 கருத்துகள்:

  1. ஆஹா! சினிமா பார்க்கும்போது இப்படியெல்லாம் கூட சிந்திப்பீங்களா!?

    பதிலளிநீக்கு
  2. //செவ்வாய் தோஷம் என்பதால் எந்த வரனும் கூடி வரவில்லையாம்! இந்த நூற்றாண்டிலும் இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன?//

    உண்மையில் நடப்பதைத்தான் திரையில் காட்டியிருக்கிறார்கள்.

    தாழ்வு மனப்பான்மை பற்றி ஆய்வு செய்து ஒரு வகுப்பே எடுத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

    Humility என்பதற்கு தாழ்ச்சி என்பதற்கு பதிலாக பணிவு அல்லது தாழ்வுணர்ச்சி என சொல்லலாமே.

    பதிலளிநீக்கு
  3. உங்களின் நல்ல விளக்கம் ,இது அனைவருக்கும் போய் சேர வேண்டுமென்ற விருப்பத்தில்,பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன் !
    த ம 1

    பதிலளிநீக்கு

  4. மனோதத்துவமான பதிவு இந்தப்பதிவால் எனக்குள் சிலவிசயங்களை திருத்திக்கொள்ளும் வாய்ப்பினை கொடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி

    தற்போது எனது பதிவு ''தாலி''

    பதிலளிநீக்கு
  5. ஆங்கிலத்தில் "spotlight effect " என்று கூறுவார்கள். இதன்படி ஒவ்வொருவரும் உலகமே தன்னை கவனித்துக்கொண்டிருப்பதாக, நினைப்பார்களாம். அதாவது ஒருவரது perception உண்மையான நிலையை விட அதிகமாக இருக்குமாம். இந்த மனநிலையிலிருந்து தாழ்வு மனப்பான்மை உருவாக சாத்தியமிருக்கிறது. தாங்கள் கூறுவதுபோல குறிப்படத்தக்க அளவுக்கு வளர்ப்பும், மரபணுவும் காரணமாக இருக்கலாம். வட மாநிலத்தைவிட, தென் மாநிலக்காரர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமென்று நினைக்கிறேன்.
    தாழ்வு மனப்பான்மையும் தவறு. அதற்கு எதிரான மனப்பான்மையும் தவறு. தாழ்ச்சி என்பதற்கு அடக்க, ஒடுக்கமானவர்கள் என்பது சரியாகத் தோன்றுகிறது. இது மிகப்பெரிய சப்ஜெக்ட். ஒரு பதிவில் சொல்லிவிட முடியாது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. // மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் // - இது ஒன்றே மனிதனின் பிரச்சனைக்கு காரணமான குணம் எது ? [http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post_28.html]

    சரியான அலசல் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  7. Blogger ராஜி said...
    ஆஹா! சினிமா பார்க்கும்போது இப்படியெல்லாம் கூட சிந்திப்பீங்களா!?//

    படம் பாக்கறப்போ இப்படியெல்லாம் சிந்திக்க முடியுமா? வீடு திரும்பியதும் அடுத்ததாக எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்தபோது தோன்றிய எண்ணம் இது.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. Blogger வே.நடனசபாபதி said...
    //செவ்வாய் தோஷம் என்பதால் எந்த வரனும் கூடி வரவில்லையாம்! இந்த நூற்றாண்டிலும் இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன?//

    உண்மையில் நடப்பதைத்தான் திரையில் காட்டியிருக்கிறார்கள். //

    இப்போதும் நடைமுறையில் உள்ளதா? நல்லவேளை எங்கள் குடும்பத்தில் ஜாதகம் பார்க்கும் பழக்கம் இல்லை.

    Humility என்பதற்கு தாழ்ச்சி என்பதற்கு பதிலாக பணிவு அல்லது தாழ்வுணர்ச்சி என சொல்லலாமே. //

    பணிவு என்பதற்கு Respectful என்றும் அர்த்தம் உள்ளதே என்று நினைத்தேன். தாழ்வுணர்வு என்பது inferioty என்றாகாதோ!

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. Blogger Bagawanjee KA said...
    உங்களின் நல்ல விளக்கம் ,இது அனைவருக்கும் போய் சேர வேண்டுமென்ற விருப்பத்தில்,பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன் !
    த ம 1//

    சாதாரணமாக நானே இதை செய்துவிடுவேன். நேற்று மறந்துபோனேன். நன்றி.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. Blogger KILLERGEE Devakottai said...

    மனோதத்துவமான பதிவு இந்தப்பதிவால் எனக்குள் சிலவிசயங்களை திருத்திக்கொள்ளும் வாய்ப்பினை கொடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. Blogger Packirisamy N said...
    வட மாநிலத்தைவிட, தென் மாநிலக்காரர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமென்று நினைக்கிறேன்.//

    இது பெரும்பாலும் உடல் நிறத்தால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையாக இருக்கலாம். திராவிடர்களுள் பெரும்பாலோனோர் வட இந்திய ஆரியர்களை விட நிறத்தில் மட்டுதானே :)

    தாழ்வு மனப்பான்மையும் தவறு. அதற்கு எதிரான மனப்பான்மையும் தவறு. தாழ்ச்சி என்பதற்கு அடக்க, ஒடுக்கமானவர்கள் என்பது சரியாகத் தோன்றுகிறது. இது மிகப்பெரிய சப்ஜெக்ட். ஒரு பதிவில் சொல்லிவிட முடியாது என்று நினைக்கிறேன்.//

    உண்மைதான்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. Blogger கரந்தை ஜெயக்குமார் said...
    பயனுள்ள பதிவு

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  13. Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    // மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் // - இது ஒன்றே மனிதனின் பிரச்சனைக்கு காரணமான குணம் எது ? [http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post_28.html]

    சரியான அலசல் ஐயா... நன்றி...

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  14. என்னதான் எழுதினாலும் படித்தாலும் அவரவர் பற்றிய சிந்தனைகள் பாசிடிவ் ஆக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும் நெகடிவ் ஆக இருந்தால் தாழ்வுணர்ச்சியும் பாசிடிவாக இருந்தால் உயர்வுணர்ச்சியும் தோன்ற வாய்ப்பு அதிகம். வாழ்க்கை வாழ்வதே ஒரு handicap race போலத்தான் குறைகளை உணர்ந்து களைபவன் வெற்றி பெறுகிறான் எனக்கென்னவோ இந்த மாதிரி உணர்ச்சிகள் ஏதும் இல்லாதவர் இருக்கிறாரா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. நல்ல அலசல்.

    பதிலளிநீக்கு
  15. //பணிவு என்பதற்கு Respectful என்றும் அர்த்தம் உள்ளதே என்று நினைத்தேன். தாழ்வுணர்வு என்பது inferioty என்றாகாதோ!//


    Humility என்பதற்கு பணிவு, தாழ்வுணர்ச்சி, அடக்கம், அமரிக்கை என்றும் சொல்லாம். ஆனால் Inferiority என்பதற்கு தாழ்வு மனப்பான்மை என்று சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  16. Delete
    Blogger வே.நடனசபாபதி said...

    Humility என்பதற்கு பணிவு, தாழ்வுணர்ச்சி, அடக்கம், அமரிக்கை என்றும் சொல்லாம். ஆனால் Inferiority என்பதற்கு தாழ்வு மனப்பான்மை என்று சொல்வார்கள்//

    உங்கள் விளக்கத்திற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  17. Delete
    Blogger G.M Balasubramaniam said...

    எனக்கென்னவோ இந்த மாதிரி உணர்ச்சிகள் ஏதும் இல்லாதவர் இருக்கிறாரா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. //

    மிக, மிக குறைவுதான்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  18. சார் என்ன ஆச்சு? பல மாதங்களாக வலைப் பக்கம் வரவே இல்லை. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  19. Blogger தி.தமிழ் இளங்கோ said...
    சார் என்ன ஆச்சு? பல மாதங்களாக வலைப் பக்கம் வரவே இல்லை. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.//
    வலது கையில் வலியிருப்பதால் எழுத முடிவதில்லை. அதுதான் காரணம்.

    உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. ஒரு சினிமாவைப் பார்த்ததால் நல்ல கட்டுரை கிடைத்ததுள்ளது. சிறப்பான அலசல் .
    சில நேரங்களில் தாழ்வு மனப்பான்மையும் சில நேரங்களில் உயர்வு மனப்பான்மையும் ஏற்படுவது உண்டு.

    பதிலளிநீக்கு
  21. பதவி.காம் இலிருந்து இங்கே வந்தேன். நகைச்சுவைக்கு தனி ப்ளாக் இருப்பது தேடினாலும் கிடைக்காது என்ற நிலையில் உங்களுடையது சற்றே ஆறுதலளிக்கிறது. தமிழர்கள் கேள்வி கேட்டு பதில் பெறும் தளமொன்றை துவக்கியிருக்கிறேன். TamilKB.com - அதில் நும் போன்றவர் வந்து ஆதரவளித்தால் இணையத்தில் ஓர் நல்ல கருவூலத்தை ஏற்படுத்தலாம் என்று பேராசை (தமிழ் என்று தமிழில் டைப் அடித்துப் பாருங்கள் கூகுளில், வரும் விடைகள் அவ்வளவு சொல்லுந்தரமாக இல்லை சகோ). உதவுவீர்களா?

    பதிலளிநீக்கு
  22. பதவி.காம் இலிருந்து இங்கே வந்தேன். நகைச்சுவைக்கு தனி ப்ளாக் இருப்பது தேடினாலும் கிடைக்காது என்ற நிலையில் உங்களுடையது சற்றே ஆறுதலளிக்கிறது. தமிழர்கள் கேள்வி கேட்டு பதில் பெறும் தளமொன்றை துவக்கியிருக்கிறேன். அதில் நும் போன்றவர் வந்து ஆதரவளித்தால் இணையத்தில் ஓர் நல்ல கருவூலத்தை ஏற்படுத்தலாம் என்று பேராசை (தமிழ் என்று தமிழில் டைப் அடித்துப் பாருங்கள் கூகுளில், வரும் விடைகள் அவ்வளவு சொல்லுந்தரமாக இல்லை சகோ). உதவுவீர்களா?

    பதிலளிநீக்கு