08 ஜூலை 2014

தனிமையிலே இனிமை காண முடியுமா?

தனிமையும் (loneliness) பிறரால் வேண்டப்படாமையுமே (feeling of being unwanted) இன்றைய உலகின் மிகப் பெரிய கொடுமை என்றார் அன்னை திரேசா.

அதே சமயம் தனிமை என்பது மட்டுமே கொடுமையல்ல என்பதும் தனித்து இருப்பது மட்டுமே தனிமையல்ல என்பதும் உண்மைதான். 

நம்மைச் சுற்றி ஆயிரம் நபர்கள் இருக்கும் சூழலிலும் நம்மில் சிலர் தனித்து விடப்படுவதுபோல் உணர்கிறோமே அந்த தனிமைதான் கொடுமையான விஷயம். 

அதுவும் முதுமையில் வரும் தனிமை.... அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் அதன் வேதனை. 

நானும் என்னுடைய சர்வீசில் சுமார் பத்தாண்டு காலம் என் குடும்பத்தாரை விட்டு தனியாக இருந்திருக்கிறேன். 

மும்பையில் இருந்தபோது தனிமை ஒரு பாரமாக தெரியவில்லை. ஏனெனில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பவே இரவு பத்து மணி ஆகிவிடும். அதன் பிறகு எனக்கென எதையாவது சமைத்து உண்டுவிட்டு படுக்கச் செல்லும்போது நள்ளிரவாகிவிடும். நான் மேலாளராக இருந்த கிளையில் வேலைப் பளு அதிகம் என்பதால் வார இறுதி நாட்களில் கூட அலுவலகம் செல்ல வேண்டி இருக்கும். ஆகவே தனித்து இருக்கும் சூழல் மிகவும் அரிதாக இருந்தது. 

ஆனால் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து கொச்சியில் மீண்டும் தனித்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது தனிமை என்ன வாட்டி எடுத்தது. ஏனெனில் நான் பணியில் இருந்த பயிற்சிக் கல்லூரியில் பணிச்சுமை அவ்வளவாக இல்லை. மேலும் என்னுடைய குடியிருப்பு கல்லூரி கட்டடத்திலேயே இருந்ததாலும் அந்த கட்டிடம் பஜாருக்கு நடுவில் இருந்ததாலும் அண்டை அயலார் என்று யாரும் இருக்கவில்லை. மாலை ஆறு மணிக்கு கல்லூரியிலிருந்து புறப்பட்டால் ஒரு சில நொடிகளில் குடியிருப்பை அடைந்துவிடலாம். அதிலிருந்து அடுத்த நாள் காலை பணிக்குச் செல்லும்வரை தனிமைதான். வார இறுதி நாட்களில் கேட்கவே வேண்டாம். சனிக்கிழமை பகலிலிருந்து திங்கட்கிழமை காலை பத்து மணி வரையிலும் பேச்சு துணைக்குக் கூட ஆள் இருக்காது. வீட்டில் ஒரேயொரு துணை தொலைக் காட்சிப் பெட்டிதான்! எனக்கு இன்னொரு துணையாக இருந்தவை புத்தகங்கள்.  எங்கள் கல்லூரிக்கு எதிரிலேயே ஆங்கில புத்தகங்களை வாடகைக்கு விடும் ஒரு நூலகம் இருந்தது. அங்கு தங்கியிருந்த நான்காண்டு காலத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்திருப்பேன். 

ஆனாலும் எத்தனை நேரம்தான் படித்துக் கொண்டிருக்க முடியும்? அல்லது தொலைக்காட்சியை பார்க்க முடியும்? சில சமயங்களில் எதிலுமே மனம் செல்லாமல் சென்னையில் இருக்கும் மனைவி மக்களையே மனம் சுற்றி வரும். இப்படியொரு வாழ்க்கை தேவைதானா என்றெல்லாம் தோன்றும். பதவி உயர்வு தேவையில்லை என்று இருந்திருந்தால் ஊரோடு இருந்திருக்கலாமே என்று தோன்றாத நாளே இல்லை எனலாம். 

அப்போதுதான் தனிமையின் தாக்கத்தை முழுவதுமாக உணர ஆரம்பித்தேன். 

இளம் வயதில் தனித்திருப்பது மனத்தளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதுவே முதிய வயதில் தாங்கொண்ணா துன்பமாக தெரிகிறது. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் சென்னையில் ஒரு பலமாடி குடியிருப்பில் வசித்தபோது என்னுடைய குடியிருப்புக்கு எதிரில் ஒரு முதிர்ந்த தம்பதி குடியிருந்தனர். கனவருக்கு எண்பது வயதும் அவருடைய மனைவிக்கு எழுபத்தைந்து வயதும் இருக்கும். அவர்களுடன் அவருடைய மகனும் மருமகளும் ஒரு பேரனும் இருந்தனர். சில மாதங்களில் ஏதோ குடும்பத்தகராறில் மகன் தன் மனைவி மற்றும் மகனுடன் அவர்களை விட்டு பிரிந்து செல்ல தம்பதியினர் தனித்து விடப்பட்டனர்.  அந்த பிரிவே அவர்கள் இருவரையும் நோயில் தள்ளியது. அடுத்த ஆறு மாதத்தில் மனைவி மாரடைப்பால் மரித்துவிட மகனும் மகளும் திரும்பி வந்து தந்தையுடன் வசித்தனர். ஆனால் ஒரு சில மாதங்கள்தான். மீண்டும் பிரச்சினை. தள்ளாத வயதிலிருந்த தந்தையை மீண்டும் தனியே விட்டுவிட்டு மகன் சென்றுவிட முதியவர் தனிமையின் துயரம் தாளாமல் பல சமயங்களில் அழுவதை கேட்க முடிந்தது. மகன் மட்டும் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வார். ஆனாலும் முதியவரால் தனிமையின் பாரத்தை தாங்க முடியவில்லை. ஓரிரு மாதங்கள் கழித்து ஒருநாள் இரவு உறக்கத்திலேயே மரித்துப் போனார். அவர் மரித்த விவரமே இரண்டு தினங்கள் கழித்துத்தான் எங்களுக்குத் தெரிந்தது. 

இதுதான் தனிமையின் விளைவு.

இது நம்முடைய நாட்டில் மட்டுமல்ல. உலகெங்கும் குறிப்பாக பொருளாதாரத்தில் முன்னேறிய பல நாடுகளிலும் இதே பிரச்சினைதானாம். 

இங்கிலாந்தில் எழுபத்தைந்து வயதைக் கடந்த பலரும் இன்று தனிமையில்தான் வாடுகின்றனராம். தொலைக்காட்சி பெட்டி ஒன்றுதான் அவர்களுக்கு துணையாக உள்ளதாம். 

இந்த தனிமை நகர்ப்புறங்களில்தான் அதிகம். இதற்கு வளர்ந்துவரும் நாகரீகமும், நம்முடைய வாழ்க்கை முறையுமே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. 

தனிமை என்பதும் தனித்துவிடப்படுதல் என்பதும் வெவ்வேறு. 

நண்பர்கள் புடைசூழ இருக்கும் சூழல்களிலும் நம்மில் சிலர் தனித்துவிடப்பட்டுவிட்டதைப் போல் உணர்வதுண்டு. நானும் அதுபோல் உணர்ந்திருந்திருக்கிறேன். அதற்கு நம்முடைய அணுகு முறையும் ஒரு காரணம். நம்மில் சிலர் யாரையும் சட்டென்று நண்பர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. பிறரிடம் நாமாக சென்று பேசுவதில்லை. யாராவது வந்து நம்மிடம் பேசினால் நாமும் பதிலுக்கு பேசுவோம். அதுவும் அளவோடு. நானும் ஒருவகையில் அப்படித்தான். கொச்சியில் நான் குடியிருந்த கட்டிடத்திலேயே பல அலுவலகங்கள் இருந்தன. அதில் இயங்கிவந்த சில முக்கிய இலாக்கா அதிகாரிகளும் என்னைப் போலவே அதே கட்டிடத்தில்தான் தங்கள் குடும்பத்துடன் குடியிருந்தனர். ஆனாலும் என்னால் அவர்களுடன் சகஜமாக பழக முடியவில்லை. எங்களுக்குள் மொழி பேதம் ஏதும் இருக்கவில்லை. ஏனெனில் எனக்கும் மலையாளம் நன்றாக பேச வரும். ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம். ஒதுங்கியே இருப்பேன். அவர்களாக வந்து பேசினால் பேசுவேன். 

இந்த மனநிலையிலுள்ளவர்கள்தான் தாங்கள் தனித்துவிடப்பட்டிருப்பதாக உணர்வார்கள் போலுள்ளது. இத்தகையோர் ஒரு கூட்டத்தில் இருந்தால் இவர்களுடைய மனநிலை அவருடன் இருப்பவர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது யாரும் உடன் இல்லாவிட்டால்தான் தனிமையாக தோன்றும் என்றில்லை. 

அதே சமயம் தனிமையில் இருப்பவர்கள் அனைவரும் தனிமையாக உணர்வார்கள் என்றும் இல்லை. தனிமையில்  இருப்பதை விரும்புவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக படைப்பாளிகள், ஓவியர்கள், இசைக் கலைஞர்கள்.... இவர்களுக்கு தனிமையில்தான் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தோன்றுமாம். 

உண்மைதான். சிறையில் இருந்த காலத்தில்தானே நேரு, அண்ணா போன்றவர்கள் தங்களுடைய மிகச் சிறந்த படைப்புகளை படைத்திருக்கின்றனர்!

ஆக தனிமை என்பது நோயல்ல. அதாவது தனிமையிலும் இன்பம் காண்கின்ற மனப்பாங்கு உள்ளவர்களுக்கு இது ஒரு பிரச்சினையே அல்ல. 

ஆனால் நண்பர்கள், உற்றார் உறவினர் தங்களைச் சுற்றிலும் இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் தனித்து விடப்படும்போது அதாவது அவர்கள் பிறரால் வேண்டப்படாதவர்களாக கருதப்படும்போது அது அவர்களுடைய உயிரையே குடிக்கும் அளவுக்கு வேதனையாக மாறிவிடுகிறது. 

"Loneliness has also been described as social pain — a psychological mechanism meant to alert an individual of isolation and motivate him/her to seek social connections." என்கிறது ஒரு ஆய்வுக் கட்டுரை.

அதாவது தனிமை ஒரு சமுதாயம் ஒருவருக்கு அளிக்கும் துன்பம் என்றும் கூறலாமாம். ஒருவர் தன்னை சார்ந்தவர்களால் வேண்டுமென்றே தனிமைப் படுத்தப்படும்போது சம்மந்தப்பட்டவரால் அதை எளிதில் தாங்கிக்கொள்ள முடியாதாம். தனிமையின் துயரம் வயது ஆக, ஆக கூடிக்கொண்டே போகிறதாம். 

தனிமை என்பது மனிதனுக்கு புதிதல்ல. அவன் இவ்வுலகில் வரும்போதும் தனியாகத்தான் வருகிறான். உலகை விட்டு பிரியும்போதும் தனியாகத்தான் செல்கிறான். இதை உணர்ந்துக்கொள்பவர்களுக்கு தனிமை பழகிப்போய்விடும் என்கிறது இன்னொரு ஆய்வு.  

தனிமையிலே இனிமைக் காண முடியுமா என்றார் கண்ணதாசன். அது இரவினிலே சூரியனைக் காண நினைப்பதுபோலத்தான் என்கிறார். 

இதில் உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம் தனிமையை எவராலும் தவிர்க்க முடியாது என்பதும் உண்மை. ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் நாம் அனைவருமே தனிமையை தனியாக சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவது நிச்சயம். ஆகவே அதை எதிர்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த தனிமை உணர்வு சற்று அதிகமாகவே இருக்கும். தினசரி அலுவகள் ஏதும் இல்லாத சூழல் மட்டுமல்லாமல் வளர்ந்துவிட்ட குழந்தைகள் தங்களுடன் இல்லை என்கிற உணர்வும் இத்தகைய உணர்வுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுதான் வாழ்க்கை, இதுதான் நிதர்சனம் என்று ஏற்றுக்கொள்கிறவர்கள் தங்களுடைய சிந்தனைகளை பல ஆக்கப்பூர்வமான வழிகளில் செலுத்தி தனிமையை எதிர்கொள்கின்றனர். ஆனால் நட்பு, சுற்றம், சூழல் என்று கலகலப்பாக இருந்து பழகிப் போனவர்களால் அதை அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை. 

இத்தகையோர் நட்பும் சொந்தமும் நம்முடைய வாழ்வின் இறுதிவரையிலும் உடன் வருவதில்லை என்கிற யதார்த்தத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். தனிமை என்பது பிறரால் ஏற்படுவதல்ல. நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்வது என்பதையும் உணர வேண்டும். கடமைகளை செவ்வனே செய்து முடித்துவிட்ட நிம்மதியை தனிமையில்தான் முழுமையாக அனுபவிக்க முடியும். கடந்த கால சுகமான நினைவுகளை அசைபோடுவதே தனிமையை முறியடிக்க உதவும் நல்லதொரு ஆயுதம். அதை யாரும் நமக்கு மறுக்க முடியாதே. 

*********** 



33 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. இளமையில் தனிமை அத்தனை கொடியதில்லை அப்பட்டமான உண்மை. ஆனால் பணமும் வேண்டும். தனிமையில் வருமை மிகவும் கொடுமை. தற்காலத்தில் பேஸ் புக், வாட்ஸ் அப், ஸ்கைப், தொலைக்காட்சிகளின் சத்தத்தில் நாம் தனியாக இருந்தாலும் தனிமை வாய்ப்பதில்லை. கடந்த ஒரு வருடமாக நான் இங்கு தனியாக இருந்தாலும்,மனதின் எண்ணங்களின் இரைச்சல் தனிமையின் சுவையை இதுவரை அனுபவிக்க முடியாமல் செய்துவிடுகிறது. பல சமயம் சொந்தங்களின் நடுவில் வாழும் சத்தத்தைவிட தனிமையின் இரைச்சல் மிக அதிகம் என்பது என்னுடைய அனுபவம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.

    நல்லதலைப்பு தனிமை என்பது ஒரு நோய்தான் சொந்தங்களுடன் கலகலப்பாக சிரித்து வாழ்ந்த நாம தனியாக அதாவது வெளிநாடுகளில் வசிக்கும் போது 4பக்க சுவர்தான்நமக்கு சொந்தகாரன் என்பதை நினைக்ககூடும் அப்படிப்பட்டது தனிமை
    தனித்து வாழ்வது கடினம் என்னைப்பொறுத்த மட்டில்... சிலருக்கு தனிமை சொர்க்கமாக இருக்கும்... என்னசெய்வது அவர்அவர் தகுத்து ஏற்ப வாழ்க்கை பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. இடைவெளி கொடுத்து பதிவிட்டாலும் ஒவ்வொரு முக்கியமான பிரச்சனையையும் நன்றாக அலசியிருக்கிறீர்கள். மனிதனுடைய உடலும், உள்ளமும் வயதிற்கேற்ப முதிர்ச்சியடைகிறது. அந்த முதிர்ச்சி சரியாக அமைய வாய்ப்பு இல்லாவிட்டால் சிரமம்தான். தாங்கள் கூறுவதுபோல “தனிமை என்பது பிறரால் ஏற்படுவதல்ல. நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்வது என்பதையும் உணர வேண்டும்.” ஒரு வயதுக்குமேல் தான் தனது என்று இல்லாமல், அனைவரையும் ஒன்றுபோல நேசித்தால் ஓரளவுக்கு தனிமையையும், பிரச்சனையையும் குறைக்கலாம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

  4. தனிமை பற்றியும் தனித்து விடப்படுவது பற்றியும் ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதி விட்டீர். முதுமையில் தனியே இருக்கும்போது நினைவுகளே துணை. அதுசுகமாகவும் இருக்கலாம். சுமையாகவும் இருக்கலாம் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. உண்மையான மன ஓட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  6. // தனிமையை எவராலும் தவிர்க்க முடியாது என்பதும் உண்மை. ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் நாம் அனைவருமே தனிமையை தனியாக சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவது நிச்சயம்.//

    உண்மைதான் முதன் முதல் 21 வயதில் பணியில் சேர்ந்தபோது கர்நாடகாவில் கதக் என்ற ஊரில் மொழி தெரியாமல் தனித்து இருந்தபோது தனிமை அப்போது தெரியவில்லை. காரணம் இளம் வயது. ஆனால் திருமணமாகி குழந்தைகள் பிறந்து அவர்கள் பள்ளிக்கு செல்லும்போது பணி நிமித்தம் கோட்டயம், கண்ணூர், உடுப்பி போன்ற இடங்களில் 8 ஆண்டுகளுக்கு மேல் தனியாக இருந்தபோது தனிமையை உணர்ந்திருக்கிறேன். அதுவும் ஞாயிறு வந்தால் ஏன் வருகிறது என இருக்கும். ஒருவேளை வயதாக வயதாக தனிமை ஒரு கொடுமையோ?

    என்னதான் புத்தகங்கள் துணையாக இருந்தாலும் பேச்சுத் துணைக்கு ஆட்கள் இல்லையென்றால் வாழ்க்கை நரகம் தான்.அப்படிப்பட்ட நேரத்தில் ஏதேனும் ஒரு விருப்ப வேலையைத் (Hobby) தேர்ந்தெடுத்து அதில் ஈடுபடுத்திக்கொள்வது நல்லது.

    தனிமையில் இனிமை காணமுடியுமா என்பது பற்றி அருமையாக அலசியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு

  7. இப்பதிவு என்மனதை பிசைந்து விட்டது ஐயா காரணம் நான் கடந்த இருபது ஆண்டுகாலமாக தனிமைவாதியாக ஆனது மட்டுமல்ல இனியும்கூட என்ற நிலையில் தங்களது பதிவை கண்டேன் வாழ்க்கை வாழ்வதற்க்கே என்பதை வாழ்க்கை முடியும் தருணத்தில் அறிந்து கொண்டேனோ ? எனத்தோன்றுகிறது... பதிவுக்கு நன்றி.
    ஐயா எனது பதிவு தற்போது ''எனக்குள் ஒருவன்'' கண்டிப்பாக படிக்க எனவேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. பதிவு அருமை. தனிமை குறித்த அத்தனை நிகழ்வுகளையும் அசை போட்டிருக்கிறீர்கள். நானும் கூட இதே தலைப்பில் ஒரு பதிவு எழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. கண்டிப்பாக காண முடியும்...!

    திருத்தும் போது திருந்தவும் செய்தது பலரை - எனது அனுபவத்தில்....

    பதிலளிநீக்கு
  10. அருமையான பதிவு.
    முதிய வயதில் தான் இப்படி ஒரு பிரச்சனை தொடங்குவதாக நானும் நினைக்கிறேன்.

    //இது நம்முடைய நாட்டில் மட்டுமல்ல. உலகெங்கும் குறிப்பாக பொருளாதாரத்தில் முன்னேறிய பல நாடுகளிலும் இதே பிரச்சினைதானாம்.//
    நம்ம நாட்டு தரமுடைய நாடுகளின் வயதான முதியவங்களோடு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் வயதானவங்களை ஒப்பிடுவது எனக்கு சரியாக தெரியல்ல.
    எமது நாட்டிலும்,அதே மாதிரியான தரத்திலும் உள்ள நாடுகளை சேர்ந்த முதியவங்க தான் தான் ரொம்ப பாவங்க. வறுமையில் முதியவங்க நிலை ரொம்ப கொடுமை.

    பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் வயதானவங்க பிரச்சனை என்பது இன்று ஜேர்மனி - பிரேசில் விளையாடுவதை இத்தனை வேலை பழு,போதுமான நித்திரையின்மை இவற்றுக்கிடையே நான் எப்படி தான் பார்க்க முடியுமோ என்ற எனது இன்றைய கவலைகழுக்கு ஒப்பானது.

    பதிலளிநீக்கு
  11. தனிமை...... பல சமயங்களில் தனிமை கொடுமை தான். ஆனாலும் தனிமை பற்றிய சிந்தனை இல்லாது எதாவது பிடித்த விஷயத்தில் ஈடுபட்டு தனிமையின் கொடுமையை போக்க முயற்சி செய்யலாம்...

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  12. of late you sound either more psychological or philosophical.
    age ...? could be!

    ஆனா ‘நல்லா பிரிச்சி மேஞ்சிருக்கீங்க’!

    பதிலளிநீக்கு
  13. தனிமை பற்றியும், தனித்து விடப்படுதல் பற்றியும் அருமையான கருத்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு

  14. Blogger Thanigai Arasu said...
    அருமையான பதிவு. இளமையில் தனிமை அத்தனை கொடியதில்லை அப்பட்டமான உண்மை. ஆனால் பணமும் வேண்டும். தனிமையில் வருமை மிகவும் கொடுமை. தற்காலத்தில் பேஸ் புக், வாட்ஸ் அப், ஸ்கைப், தொலைக்காட்சிகளின் சத்தத்தில் நாம் தனியாக இருந்தாலும் தனிமை வாய்ப்பதில்லை. கடந்த ஒரு வருடமாக நான் இங்கு தனியாக இருந்தாலும்,மனதின் எண்ணங்களின் இரைச்சல் தனிமையின் சுவையை இதுவரை அனுபவிக்க முடியாமல் செய்துவிடுகிறது. பல சமயம் சொந்தங்களின் நடுவில் வாழும் சத்தத்தைவிட தனிமையின் இரைச்சல் மிக அதிகம் என்பது என்னுடைய அனுபவம்//

    மிக அருமையாக கூறியுள்ளீர்கள். இந்த பதிவை எழுதும்போது நீங்கள் அங்கு தனியாக இருப்பதும் நினைவிற்கு வந்தது. உங்களைப் போல் எத்தனையோ இளைஞர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு வெளிநாடுகளில் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். பணமும் வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லைதான். ஆனால் நம்முடைய வயதையும் வாலிபத்தையும் விற்றுத்தான் இதை ஈட்ட வேண்டியுள்ளது என்பதுதான் வேதனை. 'பல சமயங்களில் சொந்தங்களின் நடுவில் வாழும் சத்தத்தை விட தனிமையின் இரைச்சல் மிக அதிகம்' என்ற வாக்கியம் என்னை மிகவும் கவர்ந்தது.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அரசு!

    பதிலளிநீக்கு
  15. Blogger ரூபன் said...
    வணக்கம்
    ஐயா.

    நல்லதலைப்பு தனிமை என்பது ஒரு நோய்தான் சொந்தங்களுடன் கலகலப்பாக சிரித்து வாழ்ந்த நாம தனியாக அதாவது வெளிநாடுகளில் வசிக்கும் போது 4பக்க சுவர்தான்நமக்கு சொந்தகாரன் என்பதை நினைக்ககூடும் அப்படிப்பட்டது தனிமை
    தனித்து வாழ்வது கடினம் என்னைப்பொறுத்த மட்டில்... சிலருக்கு தனிமை சொர்க்கமாக இருக்கும்... என்னசெய்வது அவர்அவர் தகுத்து ஏற்ப வாழ்க்கை பகிர்வுக்கு நன்றி


    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  16. Blogger Packirisamy N said...
    இடைவெளி கொடுத்து பதிவிட்டாலும் ஒவ்வொரு முக்கியமான பிரச்சனையையும் நன்றாக அலசியிருக்கிறீர்கள். . //

    இப்போதெல்லாம் என்னால் தொடர்ந்து எழுத முடிவதில்லை. தோள்பட்டை எலும்பில் தேய்மானம் அதிகமாகியுள்ளது என்கிறார் மருத்துவர். ஆகவே தினமும் அரை மணி நேரத்திற்கு மேல் எழுதுவதில்லை. ஒரு பதிவு எழுதி முடிக்க ஒரு வாரம் ஆகிவிடுகிறது.

    ஆகவே எழுத முடிகிற நேரத்தில் பயனுள்ளதாக எழுதுவோமே என்ற எண்ணத்தில்தான் அனைவருக்கும் பயனுள்ள விஷயங்களை எழுத முயல்கிறேன்.

    ஒரு வயதுக்குமேல் தான் தனது என்று இல்லாமல், அனைவரையும் ஒன்றுபோல நேசித்தால் ஓரளவுக்கு தனிமையையும், பிரச்சனையையும் குறைக்கலாம் என்று நினைக்கிறேன்//

    மிகச் சரியாக கூறியுள்ளீர்கள். இதை அனைவரும் கடைபிடித்தால் தனிமையின் தாக்கத்தை ஓரளவுக்கு குறைக்க முடியலாம்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  17. Blogger G.M Balasubramaniam said...

    தனிமை பற்றியும் தனித்து விடப்படுவது பற்றியும் ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதி விட்டீர். முதுமையில் தனியே இருக்கும்போது நினைவுகளே துணை. அதுசுகமாகவும் இருக்கலாம். சுமையாகவும் இருக்கலாம் வாழ்த்துக்கள். //
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  18. Blogger பழனி. கந்தசாமி said...
    உண்மையான மன ஓட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நல்ல பதிவு.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  19. Blogger வே.நடனசபாபதி said...
    // தனிமையை எவராலும் தவிர்க்க முடியாது என்பதும் உண்மை. ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் நாம் அனைவருமே தனிமையை தனியாக சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவது நிச்சயம்.//

    உண்மைதான் முதன் முதல் 21 வயதில் பணியில் சேர்ந்தபோது கர்நாடகாவில் கதக் என்ற ஊரில் மொழி தெரியாமல் தனித்து இருந்தபோது தனிமை அப்போது தெரியவில்லை. காரணம் இளம் வயது. ஆனால் திருமணமாகி குழந்தைகள் பிறந்து அவர்கள் பள்ளிக்கு செல்லும்போது பணி நிமித்தம் கோட்டயம், கண்ணூர், உடுப்பி போன்ற இடங்களில் 8 ஆண்டுகளுக்கு மேல் தனியாக இருந்தபோது தனிமையை உணர்ந்திருக்கிறேன். அதுவும் ஞாயிறு வந்தால் ஏன் வருகிறது என இருக்கும். ஒருவேளை வயதாக வயதாக தனிமை ஒரு கொடுமையோ?//

    இளம் வயதில் நம்முடைய கவனத்தை நம் அன்றாட அலுவல்கள் குறிப்பாக அலுவலக அலுவல்கள் ஈர்க்கின்றன. அலுவலக வாழ்க்கையில் நாம் அடைய வேண்டிய உயர்வை நோக்கியே நம்முடைய வாழ்க்கை நகர்கிறது. அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க தேவையான பணத்தை ஈட்ட வேண்டும் என்கிற எண்ணமும் நமக்கு பிரதானமாக தெரிவதால் தனிமை நமக்கு பெரிதாக தெரிவதில்லை.

    என்னதான் புத்தகங்கள் துணையாக இருந்தாலும் பேச்சுத் துணைக்கு ஆட்கள் இல்லையென்றால் வாழ்க்கை நரகம் தான்.அப்படிப்பட்ட நேரத்தில் ஏதேனும் ஒரு விருப்ப வேலையைத் (Hobby) தேர்ந்தெடுத்து அதில் ஈடுபடுத்திக்கொள்வது நல்லது. //

    நீங்கள் சொல்வது மிகவும் சரி.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  20. Blogger KILLERGEE Devakottai said...

    இப்பதிவு என்மனதை பிசைந்து விட்டது ஐயா காரணம் நான் கடந்த இருபது ஆண்டுகாலமாக தனிமைவாதியாக ஆனது மட்டுமல்ல இனியும்கூட என்ற நிலையில் தங்களது பதிவை கண்டேன் வாழ்க்கை வாழ்வதற்க்கே என்பதை வாழ்க்கை முடியும் தருணத்தில் அறிந்து கொண்டேனோ ? எனத்தோன்றுகிறது... பதிவுக்கு நன்றி.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  21. Blogger கவிப்ரியன் கலிங்கநகர் said...
    பதிவு அருமை. தனிமை குறித்த அத்தனை நிகழ்வுகளையும் அசை போட்டிருக்கிறீர்கள். நானும் கூட இதே தலைப்பில் ஒரு பதிவு எழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  22. Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    கண்டிப்பாக காண முடியும்...!

    திருத்தும் போது திருந்தவும் செய்தது பலரை - எனது அனுபவத்தில்....
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  23. logger வேகநரி said...
    அருமையான பதிவு.
    முதிய வயதில் தான் இப்படி ஒரு பிரச்சனை தொடங்குவதாக நானும் நினைக்கிறேன்.

    //இது நம்முடைய நாட்டில் மட்டுமல்ல. உலகெங்கும் குறிப்பாக பொருளாதாரத்தில் முன்னேறிய பல நாடுகளிலும் இதே பிரச்சினைதானாம்.//
    நம்ம நாட்டு தரமுடைய நாடுகளின் வயதான முதியவங்களோடு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் வயதானவங்களை ஒப்பிடுவது எனக்கு சரியாக தெரியல்ல.
    எமது நாட்டிலும்,அதே மாதிரியான தரத்திலும் உள்ள நாடுகளை சேர்ந்த முதியவங்க தான் தான் ரொம்ப பாவங்க. வறுமையில் முதியவங்க நிலை ரொம்ப கொடுமை. //

    உண்மைதான். தனிமையும் வறுமையும் இரண்டு கொடிய நண்பர்கள்.


    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  24. Blogger வெங்கட் நாகராஜ் said...
    தனிமை...... பல சமயங்களில் தனிமை கொடுமை தான். ஆனாலும் தனிமை பற்றிய சிந்தனை இல்லாது எதாவது பிடித்த விஷயத்தில் ஈடுபட்டு தனிமையின் கொடுமையை போக்க முயற்சி செய்யலாம்...

    நல்ல பகிர்வு.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  25. Blogger தருமி said...
    of late you sound either more psychological or philosophical.
    age ...? could be!//

    வயதும் ஒரு காரணம் என்று வேண்டுமானால் கூறலாம்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  26. Blogger கரந்தை ஜெயக்குமார் said...
    தனிமை பற்றியும், தனித்து விடப்படுதல் பற்றியும் அருமையான கருத்துக்கள் ஐயா

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  27. // தோள்பட்டை எலும்பில் தேய்மானம் அதிகமாகியுள்ளது //

    வாழ்க்கையில் உடல்,உள்ளம் பணம், நேரம் (health, time & money) மூன்றும் ஒருசேர கிடைப்பதென்பது மிகவும்
    அரிது. ஒன்றிருந்தால் மற்றொன்று சேராது. டாக்டரை நம்புவதைவிட கூகுளை நம்புங்கள். கூகுளில் இதே பிரச்சனை உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். சில Himalayaas natural products பயன்தர வாய்ப்புள்ளது. நலனுக்கு பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. 3 AM Delete
    Blogger Packirisamy N said...
    // தோள்பட்டை எலும்பில் தேய்மானம் அதிகமாகியுள்ளது //

    வாழ்க்கையில் உடல்,உள்ளம் பணம், நேரம் (health, time & money) டாக்டரை நம்புவதைவிட கூகுளை நம்புங்கள். கூகுளில் இதே பிரச்சனை உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்.//

    இதைப் பற்றி கடந்த ஓராண்டில் படிக்காத இணைய பக்கங்கஎளே இல்லை என்னும் அளவுக்கு படித்தாயிற்று. பலரும் பரிந்துரைப்பது ஃபிசியோ தெரப்பிதான். அதைத்தான் அவ்வப்போது செய்துக்கொண்டிருக்கிறேன். பிறகு தோளுக்கு அதிக வேலை கொடுக்காதிருப்பது. குறிப்பாக கணினி கீபோர்டை அதிகம் பயன்படுத்தாதிருப்பது....
    Himalayaas natural products பயன்தர வாய்ப்புள்ளது.//

    பெரும்பான்மையான மருந்துகள் வலிநிவாரணி (pain killers) ஆகவே உள்ளன. ஆகவே அவற்றை எடுத்துக்கொள்வதில்லை.

    நலனுக்கு பிரார்த்திக்கிறேன்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  29. சார் ரொம்ப அருமையாகக் கூறி இருக்கீங்க. நான் வாழ்க்கையில் வீட்டை விட்டு தள்ளி இருந்த நாட்களே அதிகம். தனியாக இருந்தது இருப்பது சில வருடங்கள். இணையமும் திரைப்படங்களும் இல்லை என்றால் பைத்தியம் தான் பிடிக்கும்.

    நீங்கள் கூறுவது போல இளமையில் தனிமை பெரிய அளவில் பாதிக்காது. வயதான காலத்தில் தான் நீங்கள் கூறுவது போல இருக்கும் என்று தோன்றுகிறது.

    முக்கியமான விஷயம் ஒன்று கூறி இருக்கிறீர்கள்.

    "நண்பர்கள் புடைசூழ இருக்கும் சூழல்களிலும் நம்மில் சிலர் தனித்துவிடப்பட்டுவிட்டதைப் போல் உணர்வதுண்டு. நானும் அதுபோல் உணர்ந்திருந்திருக்கிறேன். அதற்கு நம்முடைய அணுகு முறையும் ஒரு காரணம். நம்மில் சிலர் யாரையும் சட்டென்று நண்பர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. பிறரிடம் நாமாக சென்று பேசுவதில்லை. யாராவது வந்து நம்மிடம் பேசினால் நாமும் பதிலுக்கு பேசுவோம். அதுவும் அளவோடு. நானும் ஒருவகையில் அப்படித்தான்"

    நாமாக முயன்று நமக்கு சரி வரும் நண்பர்களை சேர்த்துக்கொண்டால் இந்தத் தனிமையில் இருந்து விலகலாம்.

    பதிலளிநீக்கு
  30. அனுபவத்தின் மூலம் தனிமை பற்றிய பல்வேறு கோணங்களை அறிய முடிந்தது.
    முதுமையில் தனிமையை சந்திக்க தயார் படுத்திக் கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையை வைத்துள்ளீர்கள்.நிச்சயம் கவனத்தில் கொள்ளவேண்டிய சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
  31. அருமை.. தெளிவான பதிவு.. பகிர்வினிற்கு நன்றி..

    Happy Friendship Day 2014 Images

    பதிலளிநீக்கு
  32. அருமை.. தெளிவான பதிவு.. பகிர்வினிற்கு நன்றி..

    Happy Friendship Day 2014 Images

    பதிலளிநீக்கு