09 June 2014

நினைவுகள் சுகமானவை!

கடந்த கால நிகழ்வுகளை அசைபோடுவதே ஒரு சுகமான விஷயம்தான். அதுவே சுகமான் நிகழ்வுகள் என்றால் கேட்கவே வேண்டாம். 

மனித மூளை சுகமான நிகழ்வுகளை மட்டுமே நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்துக்கொள்ளுமாம்! உதாரணத்திற்கு ஒரு பயணம் செய்துவிட்டு திரும்பியதும் அந்த பயணத்தில் நாம் பார்த்து ரசித்த இடங்களும் வழியில் நாம் சந்தித்து உரையாடிய நண்பர்களும்தான் நம் நினைவில் நீண்ட காலம் நிலைத்திருக்குமாம். பயணத்தில் ரயிலுக்காகவும், விமானத்திற்காகவும் பேருந்துகளுக்கும் காத்திருந்து வீணடிக்க நேர்ந்த நேரம், மிக சுமாரான உணவு, வசதியில்லாத தங்குமிடம் என்ற அசவுகரியங்கள் அனைத்துமே நாம் அனுபவித்த சுகமான நினைவுகளால் அடிபட்டுப் போயிவிடுமாம். 

இது இயற்கையாக நமக்கு அமைந்துவிட்ட குணநலன்கள். ஆனால் இதற்கு விதிவிலக்கும் இல்லாமல் இல்லை. 

தங்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சோகமான நினைவுகளையே நினைவில் வைத்திருந்து அதிலேயே உழன்றுக்கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். 

மிகச் சிறிய பின்னடைவுகளையும் கூட ஏதோ தங்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக கருதுவார்கள். 'எனக்கு மட்டும் ஏங்க எப்ப பார்த்தாலும் இப்படியே நடக்குது? இப்படித்தாங்க பத்து வருசத்துக்கு முன்னால.....' என்று என்றோ நடந்த சோகக்கதையை ஆரம்பித்துவிடுவார்கள். 'மறுபடியும் புலம்ப ஆரம்பிச்சிட்டார்யா....' என்றவாறே அவருடைய சோகத்தை வேறு வழியின்றி கேட்க நேர்ந்த சோகத்தில் இருப்பார் அவருடைய நண்பர். 

என்னுடைய நண்பர் ஒருவர் அலுவலகத்தில் வேலையே இல்லாத நாட்களிலும் கூட இரவு ஒன்பது மணிக்கு முன்னால் கிளம்பமாட்டார். அப்படியே என்றாவது ஒருநாள் அலுவலகமே பூட்டப்பட்டாலும் நேரே வீட்டிற்குச் செல்லாமல் நண்பர்களை சந்திக்க சென்றுவிட்டுத்தான் வீடு திரும்புவார். இதை பல முறை கவனித்து வந்த நான் ஒருநாள் பொறுக்க மாட்டாமல் அவரிடம் 'எதுக்கு சார் பத்து மணிக்கு மேலதான் வீட்டுக்குதிரும்பணும்னு ஏதாச்சும் வேண்டுதலா?' என்று கேட்டேன்.

'அது ஒன்னுமில்ல சார். சீக்கிரமா போனா என் மனைவி எதையாவது சொல்லி புலம்பிக்கிட்டே இருப்பா, அதான்....' என்று இழுத்தார். 

எனக்கு வியப்பாக இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு பொருளாதார குறைவு ஏதும் இருக்கவில்லை. ஒரேயொரு மகள். அவளும் பார்க்கவும் அழகு படிப்பிலும் படுசுட்டி. அவருடைய மனைவியும் நன்கு படித்தவர். வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர். அப்படியிருக்க அவருடைய மனைவி எப்போதும் புலம்புவதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று நினைத்தேன். 

'நாங்க இப்ப வசதியா இருக்கோம்கறது உண்மைதான் சார். ஆனா எங்களுக்கு மேரேஜ் ஆன புதுசுல கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கோம். என் குடும்பத்துக்கு செய்ய வேண்டியது நிறைய இருந்திச்சி. அதையே இப்பவும் சொல்லி சொல்லி புலம்பிக்கிட்டே இருக்கறதுதான் என் மனைவியோட பழக்கம். இப்போ நல்லாத்தான இருக்கோம்னு சொன்னா அப்படியெல்லாம் நீங்க பணத்த வேஸ்ட் பண்ணாம இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கலாமேன்னு சொல்றாங்க. அதச் சொல்லி, சொல்லியே இப்ப இருக்கற சந்தோஷத்தையும் கெடுத்திக்கிறியேன்னு சொன்னாலும் கேக்க மாட்டாங்க. அதான் நமக்கு எதுக்கு டென்ஷன்னு அவங்க தூங்குனதுக்கப்புறம் போவேன்....'

ஒரு பெரிய இலாக்காவின் தலைவர் பொறுப்பில் இருந்தவருடைய நிலமை அப்படி!

இத்தகையோர் நம் குடும்பத்திலோ அல்லது நண்பர், உறவினர் வட்டத்திலோ இருக்கக் கூடும். கலகலப்பான இடத்தில் இத்தகையோர் ஒருவர் இருந்தால் போதும் அந்த இடத்தில் அதுவரையிலும் இருந்த மகிழ்ச்சி நொடிப் பொழுதில் பறந்துவிடும். 

கடந்து போனவைகளைப் பற்றி வருத்தப்படுவதில் எவ்வித பயனும் இருக்கப் போவதில்லை என்பதை இத்தகையோர் உணர்வதே இல்லை. ஆனால் கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் அலசிப் பார்ப்பதால் அவை சரியாகிப் போய்விடுவதில்லை என்பதை இவர்கள் உணராமல் இல்லை. ஆனாலும் அதிலேயே உழன்று தங்களையும் வருத்திக்கொண்டு தங்களைச் சுற்றியுள்ளோரையும் வருத்துவார்கள். இதை அவர்கள் வேண்டுமென்றே செய்வதாக கூறிவிட முடியாது. துவக்கக் காலத்தில் சிறிதாக தோன்றும் இந்த குணநலன் நாளடைவில் பெரிதாகி அவர்களுடைய மனநலத்தையே பாதிக்கக் கூடும் என்பதை அவர்களும் அவர்களுடன் இருப்பவர்களும் உணர்வதில்லை. அல்லது அவர்கள் உணரும் சமயத்தில் அது எளிதில் தீர்வு காண முடியாத அளவுக்கு தீவிரமடைந்திருக்கும். 

இவ்வாறு கடந்த காலத்தைப் பற்றிய வருத்தங்களில் உழல்வோரில் இரண்டு வகை உண்டாம்!

1. கடந்தகாலத்தில் தாங்கள் செய்த தவறுகளை நினைத்து வருந்துவோர்.
2. பிறருடைய தவறுகளால் தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை நினைத்து வருந்துவோர்

இவர்களுள் முதல் ரகத்தைச் சார்ந்தவர்களாவது பரவாயில்லை. கடந்த காலத்தில் தாங்கள் செய்த தவறுகளை நினைத்து வருந்துவது அவற்றை மீண்டும் செய்யாமலிருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்ற சிந்தனையில் சென்றடைந்து  அத்தகைய தவறுகளை தவிர்க்கும் முயற்சியில இறங்க வாய்ப்புள்ளது. 

ஆனால் பிறருடைய தவறுகளால் தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை நினைத்து நினைத்து வருந்துவோரால் அதிலிருந்து மீளவே முடியாதாம். நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நிகழ்வுகளைப் பற்றி நினைத்து நினைத்து மருகுவதால் நமக்கு எந்த பயனும் இல்லை என்பதை அவர்களால் புரிந்துக்கொள்ளவே முடிவதில்லை. ஆகவே அந்த நினைவுச் சக்கரத்திலிருந்து இவர்களால் மீண்டு வர முடிவதில்லை, அதாவது அவரை சுற்றியுள்ளவர்களுடைய உதவி இல்லாமல்..

இத்தகைய கவலைகளிலிருந்து விடுபட நமக்கு 'மிருக குணம்' வேண்டும் என்கின்றனர் சில மன நல ஆய்வாளர்கள். 

அது என்ன மிருக குணம்?

நம்மைச் சுற்றி வாழும் வீட்டு விலங்குகளான நாய், பூனை, ஆடு, மாடு, கோழி எதுவுமே கவலைப் படுவதில்லை. ஏனெனில் அவை நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கின்றன. நடந்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவோ அல்லது நடக்கப் போவது என்ன என்று சிந்திக்கவோ அவற்றிற்கு தெரிவதில்லை. 

ஆகவேதான் 'Live for the present' என்கிறார்கள். நேற்று நடந்தவைகளைப் பற்றியும் நாளைக்கு நடக்கவிருப்பதைப் பற்றியும் கவலைப்பட்டு இன்றைய தினத்தை ஏன் வீணடிக்க வேண்டும்? நேற்றைய தோல்விகளைப் பற்றியே சிந்தித்து இன்றைய தினத்தை வீணடித்துவிட்டால் நாளையும் இதே கவலைதான் நம்மை ஆட்டிப் படைக்கும். 

இரவும் பகலும் சேர்ந்ததுதான் ஒரு நாள் என்பது எவ்வளவு நிச்சயமோ அதுபோலத்தான் கடந்த கால நினைவுகளும். சுகமும் இருக்கும் சோகமும் இருக்கும். சோகமான சிந்தனைகளைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பதால் சோகம் குறையப் போவதில்லை. ஆனால் சுகமான நினைவுகளை அசைபோடும் போது மகிழ்ச்சி கூடும். அதே போன்ற நினைவுகள் மீண்டும் அதே போன்ற சாதனைகளைச் செய்ய நம்மை ஊக்குவிக்கும். 

ஆகவே சுகமான நினைவுகளை உள்ளத்தில் வைத்திருக்க முயல்வோம். முயன்றால் முடியாதது உண்டா என்ன? 


********* 

23 comments:

kuppu sundaram said...

// ஆகவே சுகமான நினைவுகளை உள்ளத்தில் வைத்திருக்க முயல்வோம். முயன்றால் முடியாதது உண்டா என்ன? //

நிச்சடம் அய்யா!
அருமையான பகிர்வு

ராஜி said...

அவங்க மட்டுமில்ல அதிகப் பட்ச பென்கள் இப்படித்த்தான். நானும் சில சமயம் இப்படிப் புலம்புவதுண்டு. இயலாமை புலம்பலாய் வெளிப்படுகிறதுன்னு என்னை நானே தேத்திக்குவேன்.

Anonymous said...

வணக்கம்
ஐயா

இரவும் பகலும் சேர்ந்ததுதான் ஒரு நாள் என்பது எவ்வளவு நிச்சயமோ அதுபோலத்தான் கடந்த கால நினைவுகளும். சுகமும் இருக்கும் சோகமும் இருக்கும்

நன்றாக சொல்லியுள்ளீர்கள் நினைவுகள் பற்றி.வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வே.நடனசபாபதி said...

//சுகமான நினைவுகளை அசைபோடும் போது மகிழ்ச்சி கூடும். அதே போன்ற நினைவுகள் மீண்டும் அதே போன்ற சாதனைகளைச் செய்ய நம்மை ஊக்குவிக்கும். //

நூற்றுக்கு நூறு உண்மை.அனுபவித்து சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். நானும் அதை கடைபிடிக்க முயற்சிக்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

நினைவுகள் என்றும் சுகமானவையே

G.M Balasubramaniam said...


நினைவுகளில் சுகமானவையும் சுமையானவையும் உண்டு. நினைவுக்கும் வரும். சுகமான நினைவுகளில் நீந்தி இன்பம் காண்பது சிறந்தது. பகலுமிரவும்போல இரண்டுமே நிகழ்ந்திருக்கும். நல்லதை நினைத்து அல்லாததைபுறக்கணிக்கக் கற்க வேண்டும். நல்ல அலசல்

திண்டுக்கல் தனபாலன் said...

எண்ணம் போல் வாழ்வு...!

பழனி. கந்தசாமி said...

இதுதான் மனித இயற்கை. இந்த பழக்கத்தை மாற்றுபவன்தான் உண்மையில் மனிதன்.

டிபிஆர்.ஜோசப் said...

kuppu sundaram said...
// ஆகவே சுகமான நினைவுகளை உள்ளத்தில் வைத்திருக்க முயல்வோம். முயன்றால் முடியாதது உண்டா என்ன? //

நிச்சடம் அய்யா!
அருமையான பகிர்வு//
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

ராஜி said...
அவங்க மட்டுமில்ல அதிகப் பட்ச பென்கள் இப்படித்த்தான். நானும் சில சமயம் இப்படிப் புலம்புவதுண்டு. இயலாமை புலம்பலாய் வெளிப்படுகிறதுன்னு என்னை நானே தேத்திக்குவேன்.//

இந்த மாதிரி புலம்பாதவங்களே இருக்க முடியாதுங்க, என்னையும் சேர்த்து. அதனாலதான் இதுலருந்து விடுபட முயற்சிக்கணும்னு சொல்றேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

2008rupan said...
வணக்கம்
ஐயா

இரவும் பகலும் சேர்ந்ததுதான் ஒரு நாள் என்பது எவ்வளவு நிச்சயமோ அதுபோலத்தான் கடந்த கால நினைவுகளும். சுகமும் இருக்கும் சோகமும் இருக்கும்

நன்றாக சொல்லியுள்ளீர்கள் நினைவுகள் பற்றி.வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
//சுகமான நினைவுகளை அசைபோடும் போது மகிழ்ச்சி கூடும். அதே போன்ற நினைவுகள் மீண்டும் அதே போன்ற சாதனைகளைச் செய்ய நம்மை ஊக்குவிக்கும். //

நூற்றுக்கு நூறு உண்மை.அனுபவித்து சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.//

என்னுடைய அனுபவத்தில் கற்றறிந்தவைதான் இவை. நானே என்னுடைய கடந்த கால தவறுகளை நினைத்து மருகி நிகழ்கால நிம்மதியை பலநாட்கள் இழந்திருக்கிறேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

கரந்தை ஜெயக்குமார் said...
நினைவுகள் என்றும் சுகமானவையே

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...

நினைவுகளில் சுகமானவையும் சுமையானவையும் உண்டு. நினைவுக்கும் வரும். சுகமான நினைவுகளில் நீந்தி இன்பம் காண்பது சிறந்தது. பகலுமிரவும்போல இரண்டுமே நிகழ்ந்திருக்கும். நல்லதை நினைத்து அல்லாததைபுறக்கணிக்கக் கற்க வேண்டும். //

சரியாக சொன்னீர்கள்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

திண்டுக்கல் தனபாலன் said...
எண்ணம் போல் வாழ்வு...!//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

பழனி. கந்தசாமி said...
இதுதான் மனித இயற்கை. இந்த பழக்கத்தை மாற்றுபவன்தான் உண்மையில் மனிதன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

சுகமான சிந்தனைகள் பற்றி நல்ல அலசல். அதென்ன மிருக குணம்? Technical Term Word இருந்தால் சொல்லவும். மேற்கொண்டு தெரிந்து கொள்ள உதவும்.

வெங்கட் நாகராஜ் said...

நினைவலைகள்......

ஒரு சிலர் புலம்பல் மட்டுமே வாழ்க்கை என புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல அலசல்....

KILLERGEE Devakottai said...


மலரும் நினைவுகள் சுகமானதாகவே இருந்தது ஐயா,
Killergee
www.killergee.blogspot.com

Packirisamy N said...

கடந்த கால கசப்பான நினைவுகளை, ஒரு ஓரத்தில நிறுத்தி வைத்துவிடுவது நல்லது. மீண்டும் அதே நிலை வராமல் பார்த்துக்கொண்டால் போதும். பழியை விதியின் மீது போட்டுவிட்டு அடுத்த காரியத்தைப் பார்ப்பதே நல்லது. ஆங்கிலத்தில் don't cry over spilled milk
என்று சொல்வதம் இருக்கிறதே.

டிபிஆர்.ஜோசப் said...


6:49 PM
Delete
Blogger Packirisamy N said...
கடந்த கால கசப்பான நினைவுகளை, ஒரு ஓரத்தில நிறுத்தி வைத்துவிடுவது நல்லது. மீண்டும் அதே நிலை வராமல் பார்த்துக்கொண்டால் போதும். பழியை விதியின் மீது போட்டுவிட்டு அடுத்த காரியத்தைப் பார்ப்பதே நல்லது. ஆங்கிலத்தில் don't cry over spilled milk
என்று சொல்வதம் இருக்கிறதே.
//
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

Delete
Blogger தி.தமிழ் இளங்கோ said...
சுகமான சிந்தனைகள் பற்றி நல்ல அலசல். அதென்ன மிருக குணம்? Technical Term Word இருந்தால் சொல்லவும். மேற்கொண்டு தெரிந்து கொள்ள உதவும்.

Animalistic character என்பதைத்தான் அவ்வாறு மொழிமாற்றம் செய்தேன். மிருக குணாதிசயங்கள் என்றாலும் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மிக சரியாக சொன்னீர்கள்.அவர் செய்தது ஒரு தப்பித்தல் முயற்சியே. மனைவியின் பார்வையில் இருந்து பார்த்ததால் சில விஷயங்கள் தெளிவாகக் கூடும். அலுவலகத்திலும் நிர்வாகத்திலும் திடமான முடிவு எடுப்பவர்கள் குடும்ப வாழ்கையில் அப்படி எடுக்க முடியாமல் இருப்பதை பார்க்க முடிகிறது.
பலருடைய நிலை நண்பரின் நிலையைப் போலவே பரவலாக இருக்கிறது