25 April 2014

தேர்தல் குளறுபடிகள் (நேற்றைய பதிவின் தொடர்ச்சி)

நான் நேற்றைய தினம் இட்டிருந்த 'தேர்தல் குளறுபடிகள்' என்ற பதிவில் கருத்துரை இட்டிருந்த பலரும் 'கடைசி நேர ஏமாற்றத்தைத் தவிர்க்க உங்களுடைய பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை இணையதளத்தில் தேடிப் பார்த்திருக்கலாமே' என்று கூறியிருந்தனர். அவர்களுக்கெல்லாம் என்னுடைய பதிலிலேயே விளக்கமளித்திருந்தாலும் அதை பலரும் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் ஒரு சிறிய விளக்கப் பதிவு.

நான் வசிக்கும் பகுதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட பகுதி ஆகும். இதில் மொத்தம் ஐந்து தெருக்கள் உள்ளன. நான் இந்த தெருக்களின் பெயர்களைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் கூறியுள்ளேன். ஏனெனில் இவை யாவுமே நாட்டின் பிரபல நதிகளின் பெயர்களைக் கொண்டுள்ளன. நகரின் பிரதான தெருவின் பெயர் யமுனா தெரு. அதிலிருந்து இரண்டு தெருக்கள் பிரிகின்றன. இவற்றின் பெயர்கள் முறையே மகாநதி தெரு மற்றும் காவேரி தெரு. காவேரி தெருவில் இடம் வலமாக இரண்டு தெருக்கள் பிரிகின்றன. இவற்றின் பெயர்கள் முறையே பவானிதெரு, பொன்னி தெரு. நான் குடியிருப்பது பவானி தெரு. இந்த தெருவில் பத்து வீடுகள் உள்ளன. என்னுடைய வீட்டைத் தவிர்த்தால் மற்ற அனைத்தும் ஐந்து வருடங்களுக்கு மேல் அங்கு உள்ளவை. நான் இங்கு புதுவீடு கட்டி குடிவந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன.

இதில் விசித்திரம் என்னவென்றால் தேர்தல் ஆணையத்திலுள்ள பட்டியல்களில் இந்த தெருக்களின் பெயர்களே இல்லை. அதில் சிந்து நகர் மெயின் ரோடு, சிந்து நகர் முதல் சாலை, சிந்து நகர் இரண்டாவது சாலை என்றே குறிப்பிடப்பட்டுள்ளன. வீட்டு எண்களும் இப்படித்தான். வீட்டு வாசல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு எண்களுக்கும் வாக்காளர்கள் பட்டியலிலுள்ள எண்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. என்னுடைய மனைவிக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டிலும் கூட  (Booth slip) என்னுடைய வீட்டு இலக்கம் காலியாக விடப்பட்டிருந்தது. இந்த தெருக்களிலுள்ள பல வீடுகள் ஐந்து, பத்து வருடங்களாக உள்ளன என்கிறார்கள். ஆகவே இங்கு நிரந்தரமாக வசிக்கும் பலருக்கும் Voter ID உள்ளது. ஆனால் அவற்றிலும் கூட வீட்டு இலக்கம் தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது. 'இதையெல்லாம் பூத்ல யாரும் செக் பண்ணப் போறதில்லை சார். இவ்வளவு ஏன், பூத் ஸ்லிப்புல இருக்கற ஃபோட்டோவுல இருக்கற ஆள்தானா நாமன்னு கூட அங்க யாரும் பாக்க மாட்டாங்க.' என்றார் என்னுடன் வாக்களிக்க வந்திருந்த ஒருவர். வாக்களித்துவிட்டு வந்த என்னுடைய மனைவியும் இதையேத்தான் சொன்னார். 'யாருமே ஃபோட்டோவையெல்லாம் பாக்கலீங்க. லிஸ்ட்ல கையெழுத்த மட்டும் வாங்கிக்கிட்டாங்க' என்றார். வீட்டு வரி ரசீது மற்றும் மின் கட்டண ரசீது மற்றும் தபால் நிலைய பதிவேடுகளில் தெருக்களின் பெயர்களும் வீட்டிலக்கங்களும் சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கும்போது தேர்தல் இலாக்காவில் மட்டும் ஏன் இந்த குளறுபடிகள்? இதற்கு யார் காரணம்? 

இனி என்னுடைய பெயர் விடுபட்ட விஷயத்திற்கு வருவோம். நான் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வேறொரு விலாசத்தில் இருந்ததாலும் என்னுடைய வீட்டு கட்டிடப் பணிகள் முடியும் தருவாயில் இருந்ததாலும் புதுவீட்டுக்கு சென்ற பிறகு பதிவு செய்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு (9.3.2014) புதிய வாக்காளர்களுடைய பெயர்களை பதிவு செய்துக்கொள்ள ஒரு சிறப்பு முகாம் எல்லா வாக்குச் சாவடிகளிலும் நடைபெறவுள்ளது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையை கேட்டதும்தான் நானும் என்னுடைய மனைவியும் என்னுடைய தெருவில் புதிதாக குடிவந்திருந்த இன்னும் சிலரும் எங்கள் பகுதி வாக்குச் சாவடிக்குச் சென்று படிவம் எண் 6ஐ சமர்ப்பித்தோம். எங்களுடன் சேர்ந்து அன்றைய தினம் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த வாக்குச் சாவடியில் விண்ணப்பித்தோம்.

அன்றிலிருந்து சுமார் ஒரு மாதம் கழித்து திருத்தப்பட்ட துணை வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளிவரும் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றார்கள். ஆனால் தேர்தல் தியதி வரையிலும் அவை வெளியிடப்படவே இல்லை. வாக்குச் சாவடிக்கு செல்லும் தினத்தன்றும் காலை எழுந்ததும் இணையதளத்தை ஆராய்ந்தேன். ஆனால் அதே நேரத்தில் பலரும் இதே வேலையை செய்துக்கொண்டிருந்தார்களோ என்னவோ தேர்தல் ஆணைய தளம் முடங்கிப் போயிருந்தது. சரி வாக்குச் சாவடிக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று சென்றோம். வாக்குச் சாவடிக்கு அருகே அதிமுக, திமுக கட்சியினர் வாக்காளர் பட்டியல் சகிதம் காத்திருந்தனர். அவர்களிடம் விண்ணப்பம் சமர்ப்பித்ததற்கு சான்றாக எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ரசீதைக் காண்பித்து கேட்டோம். ஆனால் 'இந்த புது லிஸ்ட் எங்கக்கிட்ட இல்ல சார் பூத்தில் கேட்டுப்பாருங்கள்.' என்று கூறவே வேறு வழியின்றி வாக்குச் சாவடிக்குச் சென்றோம். அங்கு ஒரு மாதத்திற்கு முன்பு எங்களிடம் புது விண்ணப்பங்களைப் பெற்ற அதே பணியாளர்கள் (உண்மையில் அவர்கள் மூவரும் அருகிலிருந்து அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களாம்!) அன்றும் பணியில் இருந்தனர். அவர்களிடம் அவர்கள் அளித்திருந்த ஒப்புதல் சீட்டைக் காட்டி எங்க பேர் லிஸ்ட்ல இல்லையே என்றோம். அவர் 'இதுல இருக்காதுங்க. இன்னைக்கி காலையிலதான் எங்களுக்கு வேற ஒரு அடிஷனல் லிஸ்ட் குடுத்துருக்காங்க. அதுல இருக்கான்னு பாக்கறேன்' என்று கூறிவிட்டு தன் கைப்பையில் பத்திரமாக வைத்திருந்த புதிய திருத்தப்பட்ட பட்டியலை எடுத்தார். அதில் ஐந்தாறு பக்கங்களே இருந்தன. அதாவது 9.3.14 அன்று அதே வாக்குச்சாவடியில் புதிதாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களுடைய பெயர்களைக் கொண்ட துணைப்பட்டியல்!

அதை வாங்கிப் பார்த்தபோதுதான் தெரிந்தது என்னைப் போலவே அன்று படிவங்களை சமர்ப்பித்த பலருடைய பெயரும் விடுபட்டுப்போயிருந்தது. பலருக்கும் அவர்களுடைய குடும்பங்களில் யாராவது ஒருவர் அல்லது இருவருடைய பெயர்கள் விடுபட்டுப் போயிருந்தன. என்னுடைய விஷயத்தில் என்னுடைய மனைவி பெயர் இருந்தது. என்னுடைய பெயர் இல்லை. எனக்கு அடுத்த வீட்டில் இருந்தவருடைய பெயரும் அவருடைய மகனுடைய பெயரும் இருந்தது. மனைவியின் பெயர் இல்லை. ஏன் என்று கேட்டால் 'எங்களுக்கே புரியலையே சார்' என்ற பதில்தான் மீண்டும், மீண்டும் வந்தது. அவர்களையும் குறை சொல்வதில் பயனில்லை. ஏனெனில் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களை தாலுக்கா அலுவலகத்தில் சமர்ப்பிப்பதுடன் அவர்களுடைய அலுவல் முடிவடைகிறது. ஆனாலும் அவர்களுடன் ஏமாற்றமடைந்த வாக்காளர்கள் சிலர் தேவையில்லாமல் கோபப்பட அவர்களும் பதிலுக்கு கோபப்பட்டனர். பிறகு அங்கு பணியில் இருந்த காவலர்கள் வந்து சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. 

எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் புதிதல்ல. பணியின் நிமித்தம் நான் பல ஊர்களில் பணியாற்ற வேண்டியிருந்தாலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் அந்தந்த ஊரில் பதிவு செய்துக்கொண்டு வாக்களிப்பது வழக்கம். மும்பையில் இருந்தபோதும் வாக்களித்துள்ளேன். அப்போதெல்லாம் கணினிகளும் இருக்கவில்லை. இருந்தாலும் இந்த அளவுக்கு பிரச்சினை இருக்கவில்லை. சென்னையிலும் கூட இருமுறை வாக்களித்துள்ளேன். இந்த முறை எனக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் பெயர்கள் விடுபட்ட அனுபவம் ஏற்பட்டுள்ளது. இன்றைய செய்தியில் மும்பையில் ஒரே விலாசத்தில் பல ஆண்டுகள் வசித்து வரும் பிரபல குற்றவியல் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் பெயரே விடுபட்டுப் போயுள்ளது என்ற செய்தியை படித்தபோது அவருக்கே இந்த நிலை என்றால் நாம் எம்மாத்திரம் என்று நினைத்துக்கொண்டேன்.

இம்முறையும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும்தான் இத்தகைய குழப்பங்கள் பல இடங்களிலும் ஏற்பட்டுள்ளதாம். இதற்கு முக்கிய காரணம் எவ்வித முன்னனுபவமோ ஆள் பலமோ (Manpower)இல்லாத ஒரு தனியார் நிறுவனத்திடம் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை ஒப்படைத்ததுதான் முக்கிய காரணம் என்கிறார்கள். இவர்களுடைய cut and paste வேலைதான் இத்தனை குழப்பத்திற்கும் காரணமாம். ஒரே விலாசத்தில் பல ஆண்டுகள் வசித்துவந்தவர்களுடைய விஷயத்தில் இவ்வித குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. என்னைப் போன்று புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படும்போதுதான் இவை நிகழ்கின்றன போலும். மேலும் இம்முறை தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும்போதுதான் புதிதாக வாக்காளர்களைச் சேர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முறை தமிழகத்தில் மட்டும் ஆறு லட்சம் புதிய வாக்காளர்கள் 9.3.14 அன்று நடத்தப்பட்ட முகாம்களில் விண்ணப்பத்திருந்தனராம். இவர்களுடைய பெயர்கள்தான் பெரும்பாலும் விடப்பட்டுவிட்டன என்கின்றனர். 

இதில் இன்னுமொரு செய்தியையும் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நேற்றைய தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில் எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்கு விகிதம் உயர்ந்திருப்பதைப் பார்க்கும்போது Bogus voting நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாகவே எண்ணுகிறேன். ஏனெனில் பூத் ஸ்லிப்பில் இருக்கும் புகைப்படத்தை வாக்குச்சாவடியில் அமர்ந்திருக்கும் பணியாளர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. பூத் ஸ்லிப்பிலோ அல்லது வாக்குச்சாவடியிலுள்ள பட்டியலிலோ வாக்காளர்களின் கையொப்ப நகல் ஏதும் இல்லை. ஆகவே யார் வேண்டுமானாலும் யாருடைய பூத் ஸ்லிப்பை வேண்டுமானாலும் கொண்டு சென்று வாக்களிக்க முடியும் என்றே தோன்றுகிறது. ஆண் பெயரிலுள்ள வாக்காளருக்கு யாராவது ஒரு ஆணும், அதே போன்று பெண் வாக்காளர் பெயரில் யாராவது பெண்ணும் சென்றால் போதும். குறிப்பாக கிராமப் புறங்களில் இம்முறையில் வாக்குகள் தவறுதலாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றே எண்ணுகிறேன். இதற்கு மோடி அலையோ லேடி அலையோ அல்லது டாடி அலையோ தேவையில்லை. கேடிகள் அலையே போதும். இவர்களுக்கு முன்னால் வாக்குச் சாவடிகளில் எவ்வித ஈடுபாடும் இல்லாமல் பணியாற்றும் அரசு ஊழியர்கள் எம்மாத்திரம்?


**********

24 April 2014

தேர்தல் குளறுபடிகள்!


இந்தியா போன்றதொரு நாட்டில் தேர்தல் அதுவும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது என்றால் மிகவும் சிரமமான காரியம்தான். ஆகவே அங்கும் இங்குமாக சிறு, சிறு தவறுகள் குறைபாடுகள் ஏற்படுவது சகஜம்தான்.
 
இன்று காலையிலேயே சென்னையில் பல வாக்குச் சாவடிகளில் ஓட்டு இயந்திரங்கள் சரிவர இயங்கவில்லை என்றும் அவற்றில் சில வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது என்றும் கூறப்படுகிறது. எப்போது சரியாகும் என்ற வாக்குறுதியும் அறிவிக்கப்படாததால் வரிசையில் காத்திருந்த பல வாக்காளர்கள் வாக்களிக்காமலே திரும்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
வாக்கு இயந்திரங்கள் பழுதடைவது ஒரு குறைபாடு என்றால் முந்தைய தேர்தல்களில் வாக்களித்தவர்களுடைய பெயர்களும் வாக்காளர் பட்டியிலிருந்து காணாமல் போவது இன்னொரு குறைபாடு. நானும் என்னுடைய மனைவியும் ஒரே நேரத்தில் பதிவு செய்தும் என்னுடைய மனைவி பெயர் மட்டுமே பட்டியலில் இருந்தது. ஏன் என்று கேட்டால் பதிலளிக்க அங்கிருந்த அரசு ஊழியர்களால் முடியவில்லை. அவர்களையும் குறை கூறுவதில் பயனில்லை என்றே தோன்றுகிறது.. அவர்கள் இருப்பதற்கு சரியான இருக்கைகள் இல்லை. கழிப்பறைகளோ, குடிநீர் வசதியோ செய்துத் தரப்பட்டிருக்கவில்லை. விடியற்காலையிலிருந்து வாக்குச்சாவடிகளில் பணியில் இருக்கும் இவர்கள் கையோடு காலை உணவு கொண்டு வந்திருந்தும் அதைக் கூட உண்ண முடியாமல் படும் அவஸ்தையைக் கண்டபோது வாக்காளர்கள் தங்களுடைய பெயரைக் காணாமல் எரிச்சலடையும்போதும் அவர்களும் திருப்பி கோபப்படுவதில் தவறேதும் இல்லையென்றே தோன்றுகிறது.
 
சுமார் ஆயிரத்து ஐந்நூறு வாக்காளர்களைக் கொண்ட என்னுடைய வாக்குச் சாவடியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாக்காளர்களுடைய பெயரைக் காணவில்லை. 'உங்க ஓட்டர் ஐடி நம்பர நெட்ல அடிச்சி பாருங்க சார்' என்ற பதிலையே திருப்பி திருப்பிச் சென்று சமாளிப்பதையே பார்க்க முடிந்தது. நான் தவீட்டுக்கு திரும்பியதும் தமிழக தேர்தல் அதிகாரியின் தளத்துக்குச் சென்று பார்த்தால் அதில் எந்த தொடுப்பும் (link) வேலை செய்யவில்லை. வாக்களிக்க வந்தவர்களை விட பெயர் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றவர்களே அதிகம் பேர் இருந்தனர்.
 
இதன் அடிப்படையில் பார்த்தால் மொத்தமுள்ள வாக்காளர்களில் குறைந்தபட்சம் பத்து விழுக்காடு வாக்காளர்களுடைய பெயர்களாவது விடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்பது தெளிவாகிறது. ஒவ்வொரு தொகுதியிலும்  பல்முனை போட்டி நடைபெறுகின்ற இந்த சூழலில் பெருமளவிலான எண்ணிக்கையில் வாக்காளர்கள் விடுபட்டு இருப்பது முடிவுகளில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
 
 
 
 

22 April 2014

பாஜகவின் விளையாட்டு ஆரம்பம்!

 
பாஜக RSSன் முகமூடி என்பதையும் பிரதமர் வேட்பாளர் RSS இயக்கத்தின் பிரதிநிதி என்பதையும் இதுவரை மறுத்து வந்தவர்களை கடந்த இரண்டு தினங்களில் பாஜகவின் கிரிராஜ் சிங் மற்றும் RSSன் டொக்காடியா ஆகியோருடைய பேச்சு சிந்திக்க வைத்துள்ளது.
 
அப்படி என்ன சொல்லிவிட்டார்கள் இவர்கள்?
 
பீஹார் மாநிலத்தில் பாஜக வேட்பாளராக களத்தில் உள்ள கிரிராஜ் சிங் நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாக்கிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்று பகிரங்கமாக பேசியுள்ளார். இவருக்கு எதிராக பீஹார் போலீசாரால்  பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைக்கு மறுமொழியாக ' நான் இஸ்லாமியர்களை குறிப்பிடவில்லை.  நரேந்திர மோடியை எதிர்ப்பவர்களைத்தான் குறிப்பிட்டேன்.' என்று இவர் அளித்துள்ள பதில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததுமே அதை எதிர்த்த அத்வானியையும் சேர்த்துத்தான் இவர் குறிப்பிட்டிருப்பார் என்று  பலரும் கிண்டலடித்துள்ளனர். இவருடைய பேச்சுக்கு ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் பாஜக இவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 
நரேந்திர மோடியின் பால்ய சிநேகிதர் டொக்காடியோவோ ஒருபடி மேலே சென்று ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இஸ்லாமியர்கள் சொத்து வாங்குவதை நாமே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தடுக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஆனால் இவருடைய பேச்சை கிரிராஜ் சிங்கின் பேச்சைப் போல் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இவர் ஒரு தீவிர RSS பேர்வழி. ஒரு காலத்தில் இவரும் நரேந்திர மோடியும் RSSன் அடிப்படை உறுப்பினர்களாக இருந்த காலத்தில் இணைபிரியா தோழர்களாக இருந்தவர்கள். ஆனால் சமீப காலமாக, அதாவது மோடி குஜராத் முதலமைச்சரான காலத்திலிருந்து, இவர்களுக்கிடையில் நல்லுறவு இல்லை என்றும்  ஆகவே இவர் மோடி பிரதமராவதை விரும்பாமல்தான் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்தை பேசியுள்ளார் என்கின்றனர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
 
ஆனால் இவ்விருவர்களுடைய பேச்சு தேர்தலுக்குப் பிறகு நடக்கவிருக்கும் மதக்கலவரங்களுக்கு ஒரு முன்னோடியாகவே காண்பதாக  பாதிக்கப்படவுள்ள இஸ்லாமிய தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இதை இஸ்லாமிய சமுதாயத்தினரின் panic reaction என்று கூறி ஒதுக்கிவிட முடியாது என்பதும் உண்மை.
 
நரேந்திர மோடிக்கு எதிராக பேசுபவர்களை, எழுதுபவர்களை நீ கிறிஸ்த்துவன் ஆகவே நீ சோனியாவின் அடியாள் அல்லது நீ இஸ்லாமியன் ஆகவே நீ பாக்கிஸ்தானுடைய கையாள் என்றெல்லாம் விமர்சித்து எழுதும் அநாமதேய ஞான சூன்யங்கள் நம்முடைய பதிவுலகிலும் உள்ளனர் என்பது என்னுடைய கடந்த சில பதிவுகளுக்கு வந்த கருத்துரைகள் உணர்த்துகின்றன.
 
அதாவது படித்த இளைஞர்கள் மத்தியில் கூட இத்தகைய உணர்வுகள் வேரூன்றியுள்ளபோது அரசியல்வாதிகளைக் குறை கூறுவதில் என்ன பயன்?
 
**********
 
சில தேர்தல் கேலிக் கூத்துக்கள்.
 
மேற் கூறிய இருவரின் பேச்சு எதிர்வரும் மதக் கலவரங்களை கோடிட்டு காட்டுகின்றன என்றால் நம்முடையவர்களின் தேர்தல் பேச்சுக்கள் சிரிப்பை வரவழைக்கின்றன.  தமிழர்கள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் என்பதையும் இவை மீண்டு நிரூபிக்கின்றன.
 
'நாட்டின் மிகச் சிறந்த முதலமைச்சர் மோடி அல்ல, இந்த லேடிதான்.' இது நம்முடைய முதலமைச்சரின் அறை கூவல். இது ஏதோ வேத மொழி என்பதுபோல் இதே வாக்கியத்தை மீண்டும், மீண்டும் ஒலிபரப்பிக் கொண்டுள்ளது ஜெயா டிவி.
 
இதைப் பற்றி பத்திரிகையாளர்கள் கலைஞரிடம் கேட்டதற்கு அவர் அடித்த கிண்டல். 'அவர் நிலைக்கண்ணாடியில் முன் நின்றுக்கொண்டு சொல்லியிருப்பார்.'
 
'இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் கூட்டம் பாசத்துக்காக வந்த கூட்டம். க்வாட்டருக்கோ இல்ல பிரியாணிக்கோ வந்த கூட்டமல்ல.' கேப்டனின் மனைவி.
 
'இவங்க வீட்டுக்காரரையே க்வாட்டர் குடுத்துத்தான் கூட்டிக்கிட்டு வராங்க.' நாம் தமிழர் சீமான்!!
 
'மத்த கட்சி தலைவர்களைப் போல் கூட்டத்திற்கு வருகிறேன் என்று கூறிவிட்டு பிறகு வராமல் மக்களை ஏமாற்றும் தலைவனல்ல நான். இன்று எனக்கு கடுமையான காய்ச்சல். இருந்தும் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.' சென்னை அண்ணா நகர் கூட்டத்தில் ஜெயலலிதா.
 
'என்னுடைய நலனை விட நாட்டு மக்களின் நலனையே நான் பெரிதாக கருதுகிறேன். ஆகவேதான் உடல் நிலை குறைவிலும் மக்களைச் சந்திக்க தமிழகத்தில் பல பகுதிகளிலும் சென்று பேசி வருகிறேன்.' ஆவடி பொதுக்கூட்டத்தில்.
 
இவ்விருவருடைய நாட்டுப் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது!
 
'இவங்க குடுக்கற மிக்சி, க்ரைன்டருக்கெல்லாம் கரண்டே வேணாம். தானாவே ஓடும்!' பாமக நிறுவனர் இராமதாஸ்.
 
'தேர்தல் நேரத்துல நடக்கற மின் தடைக்கு சிலருடையே சதியே காரணம்!' ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு.
 
'போலீஸ் இலாக்காவை தன் கையிலேயே வைத்திருந்தும் சதியை கண்டுபிடிக்க முடியாத ஜெயலலிதா உடனே பதவி விலக வேண்டும்.' ஸ்டாலின்.
 
'ப. சிதம்பரம் ஒரு ரீக்கவுன்ட் (Recount) அமைச்சர்'  சிவகங்கை கூட்டத்தில் நரேந்திர மோடி.
 
'நரேந்திர மோடி ஒரு என்கவுன்டர் (Encounter) முதலமைச்சர்'  ப. சிதம்பரத்தின் பதிலடி.
 
'இது வெறும் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரப்போகும் தேர்தல் அல்ல. எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற உதவும் தேர்தல்.' ஜெயலலிதா. இவர் எதிரிகள் என்பது இவருடைய சொந்த எதிரிகளான ப. சிதம்பரம் போன்றவர்கள்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
 
இப்படி எழுதிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு காமடி செய்துள்ளனர் நம்முடைய அரசியல்வாதிகள்.
 
***********
 
இன்றுடன் தேர்தல் பரப்புரை முடிவடைகிறது. இதுவரை இல்லாமல் முதல் முறையாக தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்பட்டுவிட்டன.  ஆனால் கட்சித் தொண்டர்களுக்கு தேவையான சரக்கை ஏற்கனவே டோர் டெலிவரி செய்தாயிற்றாம்!!
 
மட்டன்/சிக்கன் பிரியாணி சமையல்காரர்களுக்கும் பயங்கர கிராக்கியாம். எட்டு கிலோ பிரியாணி செய்ய ஐநூறு ரூபாய் கேட்டு வந்த பிரியாணி சமையல்காரர்கள் இப்போது இரண்டாயிரம் ரூபாய் கேட்கிறார்களாம்!
 
அதனாலென்ன? ஆளுங்கட்சி வட்டச் செயலாளர் வீட்டு முற்றத்திலேயே சுடச்சுட பிரியாணி தயாரிக்கப்பட்டு வினியோகமும் செய்தாயிற்று. 
 

 
இங்கு நடப்பது தேர்தல் அல்ல. தீபாவளி தமாக்கா என்பார்களே அதுபோலத்தான். சிலருக்கு இது சீரியஸ் பிசினஸ். லட்சக் கணக்கில் முதல் போட்டு கோடிக் கணக்கில் லாபம் எடுக்கும் மொத்த வணிகம்.
 
***********
 
நீங்க என்ன சொன்னாலும் அது செவிடன் காதுல ஊதுன சங்கு போலத்தாங்க. நாங்க மோடிய தேர்ந்தெடுக்கறதுன்னு முடிவு பண்ணியாச்சி. எதுக்கு வீணா எழுதி உங்க டைம வேஸ்ட் பண்றீங்க என்று ஒரு சில தீவிர மோடி ஆதரவாளர்கள் கூறுவது காதில் விழுகிறது.
 
சரிங்க. போடறதுன்னு தீர்மானிச்சாச்சி. மக்களவையில சிம்பிள் மெஜார்ட்டிக்கு தேவையான 272 இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கறா மாதிரி செஞ்சிருங்க. இல்லன்னா மறுபடியும் கூட்டணி ஆட்சின்னு பழைய குருடி கதவ திறடிங்கறா மாதிரி ஆயிரும்.
 
கடைசியா ஒரு விஷயம்.
 
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால்தான் மத்திய அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்த முடியும் என்று பல மாநில ச்ஆட்சியாளர்கள் கூறிவருவதைக் கேட்டிருக்கிறோம். அப்படியானால் மொத்தமுள்ள 29 மாநிலம் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களில் ஐந்தே ஐந்து மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்யும் பாஜக எவ்வாறு நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் தங்களுடைய திட்டங்களை செயல்படுத்தப் போகிறது? நரேந்திர மோடி கொண்டு வர நினைக்கும் மாற்றம் மத்திய அரசோடு நின்றுவிடுமோ? 
 
மத்தியில் அமையவுள்ள ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியாக  நம்முடைய கட்சி இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு தேவையானவற்றை நம்மால் கேட்டுப் பெற முடியும் என்று ஜெயலலிதா கூறிவருவது எந்த அளவுக்கு உண்மை? அப்படியொரு சூழல் ஏற்படவில்லை என்றால் தமிழகத்தின் கதி அதோகதிதானா?
 
***************

18 April 2014

நரேந்திர மோடி சுய ஒழுக்கம் இல்லாதவர்!

தனி மனித ஒழுக்கத்தில் மிக முக்கிய அம்சமாக கருதப்படுவது உறவுகளை மதித்தல், காத்தல் மற்றும் அவற்றை பேணுதல்.
 
தனி மனித உறவுகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது தாய்-பிள்ளை உறவு. அதற்கு அடுத்தபடியாக வருவது கணவன் - மனைவி உறவு. தாய்க்குப் பின் தாரம் தானே!
 
அத்தகைய முக்கியமான, புனிதமான உறவைக் கூட மதிக்கத் தெரியாதவர் அல்லது மறுத்தவர்தான் நம்முடைய அடுத்த பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.
 
நரேந்திர மோடியின் திருமண விவகாரம் இன்று நாடு முழுவதும் பேசப்படுவதற்குக் காரணம் அதை அவர் இதுவரை அங்கீகரிக்காமல் இருந்ததுதான். தேர்தல்களின் போது சமர்ப்பிக்கப்படும் வேட்பாளர் மனுவில்  அவர் திருமணமானவர் என்பதை மறைக்கவில்லை குறிப்பிடாமல் மட்டுமே விட்டுவிட்டார் என்று வாதிடுபவர்களைப் பார்த்து ஒரு கேள்வி. ஒருவர் தான் திருமணமானவர் என்பதைக் கூடவா குறிப்பிட மறந்துவிடுவார்? அதுவும் நாடே போற்றும் அளவுக்கு நிர்வாகத் திறமை உள்ள ஒருவர்! அவருக்கு அதை வெளியிட மனமில்லை அவ்வளவுதான். அதுதான் உண்மை.
 
எதற்காக அவர் திருமணமானவர் என்பதை குறிப்பிட  மனமில்லாமல் இருந்திருப்பார்? மனைவி ஒருவேளை அழகில்லையோ? அல்லது அவருக்கு இணையாக படித்திருக்கவில்லையோ? அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்திருப்பாரோ? சாதாரணமாக இத்தகைய காரணங்களுக்காகத்தான் சிலர் தங்களுடைய மனைவியை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தாமல் இருப்பது வழக்கம்.
 
ஆனால் நரேந்திர மோடியை விடவும் எவ்விதத்திலும் குறிப்பாக, அழகில்  குறைந்தவர் அல்ல அவருடைய மனைவி யசோதபென் என்பது அவர்களுடைய இந்த திருமணப் புகைப்படத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
 
 
படிப்பை எடுத்துக்கொண்டால் நரேந்திர மோடியும் திருமணமான காலத்தில் பள்ளி இறுதி வகுப்பைக் கூட தாண்டாதவர்தான். அவருடைய மனைவி ஏழாம் வகுப்பு மட்டுமே. இதிலும் பெரிதாக எந்த குறைபாடும் தோன்றவில்லை. பொருளாதார அந்தஸ்த்திலோ என்றால் நரேந்திர மோடிக்கு அந்த வயதில் சுயமாக எந்த வருமானமும் இல்லை. அவரே தன்னுடைய மூத்த சகோதரருடைய டீக்கடையில் பணியாற்றி வந்திருந்தவர்.
 
 
பின் எதற்காக இந்த பிரிவு?
 
யசோதாபென் திருமணமானபோது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்ததால் அவருடைய பள்ளிப் படிப்பை தொடரட்டுமே என்றுதான் திருமணமான ஒரு சில மாதங்களிலேயே அவரை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தாராம் மோடி.  மோடியின் அன்பைப் பெற வேண்டுமே என்ற உறுதியுடன் பள்ளி இறுதி வகுப்பு  முடித்து அதே கிராமத்திலேயே இயங்கிவந்த ஒரு ஆரம்ப சுகாதார பள்ளியில் ஆசிரியராகவும் சேர்ந்தார் யசோதா.
 
ஆனால் மோடி?
 
எந்த வித வேலைக்கும் செல்லாமல் மனம் போன போக்கில் இமயமலை அடிவாரத்தில் ஒரு சன்னியாசியைப் போல இரண்டு வருடங்கள் சுற்றித் திரிந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினாராம். பிறகு மீண்டும் தன்னுடைய சகோதரர் நடத்திவந்த டீக்கடையில் பணியாற்றிவந்திருக்கிறார். அதன் பிறகு RSSன் சித்தாந்தத்தால் கவரப்பட்டு அவர்களுடன் தன்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறார். பள்ளியில் மிகவும் ஆவரேஜ் மாணவர் என்று கருதப்பட்டவருக்கு அப்போதே சிறந்த பேச்சாற்றலும் வாதத் திறனும் இருந்துள்ளது (நம்முடைய திராவிட தலைவர்களும் இவ்வாறு பேசி, பேசித்தானே தமிழகத்தை பிடித்தார்கள்!!).
 
ஆக, இவருடைய மனைவி இவரை விட எவ்விதத்திலும் தாழ்ந்தவர் இல்லை என்பது தெளிவாகிறது. பாஜக இதற்கு இன்னுமொரு மொக்கை வாதத்தையும் எடுத்து வைக்கிறது. அதாவது மோடிக்கு நடந்தது பால்ய திருமணமாம்! அதாவது விவரம் தெரியாத வயதில் நடந்த திருமணமாம், உண்மையில் மோடிக்கு அப்போது பதினெட்டு வயது. அவருடைய மனைவிக்கு பதினேழு வயது. ஏழு அல்லது எட்டு வயதில் நடந்திருந்தால்தான் அது பால்ய திருமணம்!
 
 
மேலும் தன்னுடைய மனைவியின் வருமான வரி அடையாள எண் (PAN) என்னவென்றோ அல்லது அவருடைய சொத்து விவரங்களோ தமக்கு தெரியாது என்றும் மோடி தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளாராம். ஏனெனில் அவருடன் இப்போது எந்த தொடர்பும் இல்லையாம்.
ஆனால் உண்மையில் அவருக்கு தன்னுடைய மனைவி எங்கிருக்கிறார், என்ன வேலை பார்க்கிறார், எந்த சூழலில் வசிக்கிறார் என்றெல்லாம் மிக நன்றாக தெரியும். ஒரு சாதாரண பத்திரிகை நிரூபரே அவரைத் தேடிப்பிடித்து பேட்டி எடுக்க சென்றபோது அடுத்த சில மணி நேரங்களில் அவர் பணியாற்றிக்கொண்டிருந்த பள்ளிக்கே தன்னுடைய அடியாட்களை அனுப்பி மிரட்டியவர்தான் இந்த மோடி.
 
 
அவரை பேட்டி எடுக்கச் சென்ற ஒரு பெண் நிரூபர் கூறுவதை கேளுங்கள்:
 
"நான் அவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருந்தவர்களிடம் அவரைப் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்த ஊரில் வெளியாகிக்கொண்டிருக்கும் ஒரு துக்கடா பத்திரிகையின் ப்ரகாஷ் பாய் என்ற நிரூபர் வந்து என்னை உடனே இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று மிரட்டினார்.
 
ஆனால் அதை நான் பொருட்படுத்தாமல் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தேன். பிறகு அவர் வசித்துக்கொண்டிருந்த, தகரத்தால் நாற்புறம் வேயப்பட்டிருந்த ஒரு அறை மட்டுமே உள்ள வீட்டை தேடிக் கண்டுபிடித்தேன்.  அங்கு கழிப்பறையோ, குளியலறையோ எதுவுமில்லை.  அவருடைய கணவர் என்கிற மோடி அப்போது அந்த மாநிலத்தின் முதலமைச்சராக மாளிகையில் வசித்துக்கொண்டிருக்கும்போது இவர் அதே மாநிலத்தின் ஒரு கோடியில் இப்படியொரு சூழலில் வாழ்ந்துக்கொண்டிருப்பது எனக்கு வருத்தத்தை அளித்தது.
 
ஒரு துவக்க பள்ளி ஆசிரியராக மாதம் பத்தாயிரம் ஈட்டிக்கொண்டிருந்தாலும் தன்னை மற்றவர்களிடமிருந்து மறைத்துக்கொள்ளவே இப்படியொரு வாழ்க்கையை அவர் வாழ்ந்துக்கொண்டிருந்தார். ஆனாலும் அவர் பணியாற்றிய பள்ளியிலும் அவர் வசித்து வந்த பகுதியிலும் அவர்தான் மோடியின் மனைவி என்பதை அனைவரும் அறிந்து வைத்திருந்தார்கள்.
 
பிறகு அவர் பணியாற்றிய பள்ளிக்கு சென்று அங்கு அவரை சந்திக்க விரும்புவதாக ஒரு பணியாளரிடம் கேட்டேன். அடுத்த சில நிமிடங்களில் யசோதாபென் தன் முகத்தை சேலை தலைப்பால் மூடியவாறு வந்து என்ன கேட்கப் போகிறீர்கள் என்றார் தயக்கத்துடன். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஏன் முகத்தை மூடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றேன். என்னை நீங்கள் புகைப்படம் எடுக்க மாட்டேன் என்று உறுதியளித்தால் முகத்துணியை அகற்றுகிறேன் என்றார்.  ஏன் இப்படி அஞ்சுகிறீர்கள் என்றதற்கு எனக்கு இந்த வேலையை விட்டால் வேறு வழியில்லை. நான் உங்களுக்கு பேட்டியளித்தது 'அவருக்கு' தெரியவந்தால் எனக்குத்தான் ஆபத்து என்று தட்டுத் தடுமாறி சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அவர் உணவு இடைவேளையின்போது வெளியில் வரும்போது மீண்டும் சந்திக்கலாம் என்று நான் வெளியில் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது சர், சர்ரென்று நான்கைந்து கார்கள் வந்து பள்ளி வளாகத்தில் நின்றன. அதிலிருந்து இறங்கிய சில அடியாட்கள் தலைமையாசிரியர் அறைக்குள் சென்று பேசிவிட்டு அடுத்த பத்து நிமிடங்களில் அங்கிருந்து சென்றார்கள்.  அவர்கள் சென்றதும் ஒரு பணியாள் என்னிடம் வந்து தலைமையாசிரியர் உங்களை இங்கிருந்து உடனே சென்றுவிட கூறுகிறார். ஆகவே சென்றுவிடுங்கள் என்று கெஞ்சினார்."
 
இதிலிருந்து என்ன தெரிகிறது?
 
நரேந்திர மோடிக்கு தன் மனைவி எங்கிருக்கிறார், என்ன செய்துக்கொண்டிருக்கிறார், அவருடைய வருமானம் எவ்வளவு என்பதெல்லாம் மிக நன்றாகத் தெரியும். இருந்தும் வேண்டுமென்றே அவரைப்பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்பதுபோல் மனுவில் குறிப்பிடுவதும் தனக்கு குடும்பம் இல்லை என்று பொதுக்கூட்டங்களில் பேசுவதும் சிதம்பரம் சொல்வதுபோல் அவர் ஒரு compulsive lier என்பதை தெளிவாக்குகிறது.
 
மேலும் ஒருவருடன் தானும் வாழாமல் வேறு எவருடனும் வாழவிடாமல் செய்வதற்கு பெயர் என்ன தெரியுமா? வக்கிரமம்!
 
Denial of conjugal rights என்பது சட்டப்படிக் குற்றம்.  இந்து திருமணச் சட்டம் பிரிவு ஒன்பது என்ன சொல்கிறது?
 
தாம்பத்திய உரிமைகளைத் திரும்பக் கோருதல்:
 
கணவனோ அல்லது மனைவியோ எவ்வித தகுந்த காரணமும் இல்லாமல் அந்த உறவிலிருந்து பிரிந்து வாழ்ந்தால் அதனால் பாதிக்கப்படும் நபர் அந்த உரிமைகளைத் தனக்கு திரும்ப அளிக்குமாறு நீதிமன்றத்தை அணுகலாம்.
 
Section 9 in The Hindu Marriage Act, 1955
9. Restitution of cojugal right. 1[ When either the husband or the wife has, without reasonable excuse, withdrawn from the society of the other, the aggrieved party may apply, by petition to the district court, for restitution of conjugal rights land the court, on being satisfied of the truth of the statements made in such petition and that there is no legal ground why the application should not be granted, may decree restitution of conjugal rights accordingly.
 
தன்னுடைய வாழ்க்கையில் உடன் வாழ வந்த பெண்ணை அவருக்கு உரிமையுள்ள தாம்பத்திய வாழ்க்கையைக் கூட  ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் மறுத்து வரும் ஒரு நபரை எப்படி அப்பழுக்கில்லாதவர் என்று ஏற்றுக்கொள்வது?
 
சிந்தியுங்கள் நண்பர்களே!
 
****************
 
 
 

17 April 2014

ஊழலில் ஆ. இராசாவும் நரேந்திர மோடியும் ஒன்றுதான்!

ஊழல் என்றால் கையூட்டு பெறுவது என்பது மட்டுமல்ல. 

1. வேண்டுமென்றே அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது 
 2. தனிமனித ஒழுக்கம் இல்லாமலிருப்பது
 3. ஆடம்பர வாழ்க்கை நடத்துவது 
 4. உண்மைகளை மறைப்பது 
 5. மதத் துவேஷம் மற்றும் இனத்துவேஷம் காட்டுவது 

 இவை எல்லாமே ஊழலைச் சார்ந்தவைதான். 

 நாட்டின் அடுத்த பிரதமராக வருவதற்கு தகுதியானவர் என இன்று பலராலும் கருதப்படும் நரேந்திர மோடி அவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஒழுங்கீனங்களுக்கும் சொந்தக்காரர். நான் திருமணமாகாத ஒண்டிக்கட்டை, எனக்கு குடும்பம் என்று ஏதும் இல்லை. ஆகவே ஊழலில் ஈடுபட்டு பொருள் சேர்க்கும் தேவை எனக்கு இல்லை என்று நரேந்திர மோடி பல தடவை பகிரங்கமாக அறிவித்துள்ளார். 

இதே போன்றதொரு அறிவிப்பை முன்னொரு காலத்தில் நம்முடைய மேடமும் வெளியிட்டவர்தான். ஆனால் இன்று அவர் நாட்டின் மிகப்பெரிய சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பது நமக்கெல்லாம் தெரியும். இந்த வழக்கில் மட்டுமல்லாமல் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யாத வழக்கிலும் வெளிநாட்டிலிருந்து மூன்று லட்சம் டாலர்கள் நன்கொடையாக பெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கிலும் அவர் தண்டனை பெறப்போவது உறுதி. இதே நிலை நரேந்திர மோடிக்கும் ஏற்படுமா என்பதைக் காலம்தான் பதில் சொல்லும். 

ஆனால் அவர் ஊழலற்றவர் மட்டுமல்ல ஊழலுக்கு அப்பாற்பட்டவர் (incorruptible) என்றெல்லாம் பாஜகவும் கூறிவருவது எந்த அளவுக்கு உண்மை என்பதை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து ஒன்றை மட்டும் இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். 

2006ம் ஆண்டு.

தமிழகத்தைப் போலவே நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தும் மின் பற்றாக்குறையால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தது. அரசு மின் உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லாமையாலும் அரசு நிறுவனங்களின் உற்பத்தித் திறனை உடனடியாக அதிகரிக்க தேவையான நிதி அரசின் வசம் இல்லாமையாலும் தனியார் நிறுவனங்களிடமிருந்து சுமார் 3000 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவது என அரசு தீர்மானித்தது. 

இதற்காக அதே மாநிலத்தைச் சார்ந்த அடானி குழுமத்துடன் (Adani Group of Companies) தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கென இரண்டு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. அதன்படி முதல் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.2.89 என்றும் அடுத்த ஆயிரம் யூனிட் ஒன்றிற்கு ரூ. 2.35 என்றும் முடிவானது. அதாவது, அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு அதிக விலையும் உள்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு குறைந்த விலை என்றும் முடிவு செய்யப்பட்டது. 

ஆனால் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரென கருதப்படும் திரு அடானி அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களுடனான இந்த இரண்டு ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு குஜராத் மின் வினியோக கழகம் (Gujarat Urja Vikas Nigam Limited (GUVNL)-இது நம் தமிழ்நாட்டின் TANGEDCO போன்ற அரசு மின் வினியோக நிறுவனம்) டாடா குழுமத்தைச் சார்ந்த Coastal Gujarat Power Project என்ற மின் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து யூனிட் ஒன்றிற்கு ரூ. 2.26 வாங்குவதென ஒப்பந்தத்தை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் இது அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரம் என்பதுதான்.

இவ்விரண்டு நிறுவனங்கள் அல்லாமல் யூனிட் ஒன்றிற்கு ரூ.2.20க்கும் மின்சரத்தை விற்பதற்கு குஜராத் மற்றும் அண்டைய மாநிலத்தில் இயங்கிவந்த பல தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் முன்வந்தும் அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு அடானி குழமத்திற்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றிற்கு சுமார் ஐம்பதிலிருந்து அறுபது காசுகள் கூடுதலாக விலை நிர்ணயித்தது ஏன்? இந்த அடாவடியான முடிவின் மூலம் குஜராத் அரசுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.700 கோடி நஷ்டம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுடனான ஒப்பந்தம் இரண்டும் நீண்ட கால ஒப்பந்தம் என்பதால் அடுத்த இருபது ஆண்டுகளில் அரசுக்கு சுமார் ரூ.15,000/- கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது இதை முதன் முதலில் கண்டுபிடித்து அறிவித்த குலெய்ல் என்ற தான்னார்வு தொண்டு நிறுவனம்.

இது ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதற்கு ஒப்பானது. 

ஆகவே மோடி ஒன்றும் நம்மில் பலரும் நினைப்பதைப் போன்று ஊழலற்றவரோ அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக முடியாதவரோ அல்ல. ஆனால் இந்த சலுகைகள் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட வகையில் எவ்வித இலாபமும் கிடைத்திருக்க வழியில்லை என்று சிலர் வாதிடலாம். அடானி குழுமத்திற்கு மட்டுமல்லாமல் டாட்டா, அம்பானி போன்ற பல பெரும் பண முதலைகளுக்கு இவர் அளித்து வந்த சலுகைகள் ஒவ்வொன்றிற்கும் கைமாறாக பல நூறு கோடிகள் RSS மற்றும் பாஜகவுக்கு நன்கொடையாக சென்று சேர்ந்துள்ளது என கூறப்படுகிறது. 

ஆகவேதான் ஒருவகையில் பார்த்தால் ஊழலில் நரேந்திர மோடியும் நம்மூர் ஆ. இராசாவும் ஒன்றுதான் என்று தலைப்பில் குறிப்பிட்டேன். ஏனெனில் ஆ. இராசாவுக்கும் 2ஜி ஊழல் மூலம் தனிப்பட்ட வகையில் எவ்வித இலாபமும் க்டைக்கவில்லை. இலாபம் அடைந்தது கலைஞரும், அவருடைய கட்சியும், அவருடைய குடும்ப தொலைக்காட்சியும்தான். 

 இன்றைய பதிவு 'வேண்டுமென்றே அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் வகையில் செயல்படுவது' என்ற குற்றச்சாட்டிற்கு சான்று. நாளை அடுத்த குற்றச்சாட்டான தனிமனித ஒழுக்கம் இல்லாதிருப்பதைப் பற்றி...

**********

15 April 2014

நாஞ்சில் கே சம்பத்தின் அநாகரீகப் பேச்சு

தொலைக்காட்சிகளில் அரசியல் தலைவர்களை நேர்காணல் செய்வது கடந்த சில வருடங்களாக மிகவும் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக ஆங்கில தொலைக்காட்சிகள் இதில் மிகவும் சிறந்து விளங்குகின்றன.
 
ஆங்கிலத் தொலக்காட்சி சானல்களில் அரசியல் தலைவர்களை நேர்காணல் செய்தே மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் பிரபல ஆங்கில தொலைக்காட்சிகளில் DEVIL'S ADVOCATE என்ற நிகழ்ச்சியை நடத்திவரும் கரண் தாப்பர்.  TIMESNOWன் அர்னாப் கோஸ்வாமியும்  CNN-IBN தொலைக்காட்சியைச் சார்ந்த ராஜ்தீப் சர்தேசாயும் நேர்காணல்கள் மூலம் பிரபலமடைந்தவர்களுள் சிலர். இவர்கள் மூவருக்கும் தனிப்பட்ட பாணி இருப்பதைக் காணலாம். அர்னாப் கோபத்துடன் உரத்த குரலில் கேள்விகளை தொடுப்பது வழக்கம். இந்த கோபம்தான் எதிராளியை பணிய வைக்க அவர் பயன்படுத்தும் ஆயுதம். ஆனால் கரண் தாப்பர் நிதானமாக அதே சமயம் ஒவ்வொரு கேள்வியையும் அழுத்தம் திருத்தமாக கேட்பார். ராஜ்தீப் சற்று விஷய ஞானம் இல்லாதவர் போல் தெரியும். ஏனெனில் இவருடைய பல கேள்விகள் பாமரத்தனமாக இருக்கும். பல தலைவர்களிடம் குட்டுப்படுபவர் இவர். 
 
இவர்களிடம் சிக்கிக்கொண்டு பதிலளிக்க முடியாமல் விழித்த அரசியல் தலைவர்கள் பல உள்ளனர்.  உதாரணத்திற்கு அர்னாப் கோஸ்வாமியின் எந்த கேள்விக்கும் நேரடியாக பதிலளிக்க முடியாமல் திணறிய ராகுலைக் குறிப்பிடலாம்.  அதே நேரத்தில் இவர்களை தங்களுடைய அறிவாற்றலாலும், வாதத் திறமையாலும் திணறடித்த தலைவர்களும் இல்லாமல் இல்லை. உதாரணம்: மத்திய நிதியமைச்சராகவுள்ள ப.சிதம்பரம்.  இவரிடம் சிக்கித் திணறி தோல்வியடைந்தவர்கள் பலர் உள்ளனர். 
 
இத்தகைய நேர்காணல் ஒன்றில் இடையிலேயே எழுந்து ஓடிய தலைவர்களும் உள்ளனர். அதில் மிக பிரபலமானவர் நம்முடைய வருங்கால பிரதமர் நமோ என்றால் நம்ப முடிகிறதா?
 
 
பந்தாவாக ஆங்கிலத்தில் பதிலளிக்க துவங்கி பிறகு அதை தொடர முடியாமல் இந்திக்கு தாவி பிறகு அதிலும் சமாளிக்க முடியாமல் பாதியிலேயே அவர் எழுந்து ஓடுவதைப் பார்த்தால் இவர் பிரதமராகி பிபிசி போன்ற அயல்நாட்டுத் தொலைக்காட்சிகள் இவரை நேர்காணல் செய்ய வேண்டும் என்று கேட்டால் என்னாவது என்று நினைக்கத் தோன்றுகிறது. அதனால்தான் அவர் எந்த தொலைக்காட்சி  நேர்காணல்களுக்கும் குறிப்பாக, ஆங்கில தொலைக்காட்சிகளுக்கு  ஒத்துக்கொள்வதில்லை போலிருக்கிறது.
 
தொலைக்காட்சி நேர்காணல்களை எதிர்க்கொள்ள நல்ல விஷய ஞானம் இருக்க வேண்டும். அத்துடன் எத்தகைய தர்மசங்கடமான கேள்விகளையும் உணர்ச்சிவசப்படாமல் எதிர்கொள்ளும் திறனும் வேண்டும். இந்த இரண்டுமே மோடிக்கு இல்லை என்பதால்தான் நேர்காணல்களை அவர் தவிர்த்துவருகிறார் என்று நினைக்கிறேன்.  சரி, இந்த கட்டுரை மோடியை விமர்சிக்க எழுதப்பட்டதல்ல என்பதால் இதை இத்துடன் விட்டுவிட்டு தொடர்வோம்.
 
தமிழ் தொலைக்காட்சி சானல்களை எடுத்துக்கொண்டால் நேர்காணல்களை சுவாரஸ்யமாக வழங்குவதில் பெயர்பெற்றவர் ரவி பெர்னார்ட் என்று கூறலாம். பல வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சியை நடத்தி புகழ் பெற்றவர் அவர். ஆனால் காலப்போக்கில் அவருடைய இந்த திறனே பல விரோதிகளை உருவாக்க சன் டிவியிலிருந்து இடம் பெயர்ந்து தற்போது  ஜெயா டிவியில்.... ஆனால் முன்பிருந்த வேகம் இப்போது இல்லை என்றுதான் கூறவேண்டும்.
 
இந்த வரிசையில் சமீப காலங்களில் தந்தி தொலைக்காட்சியில் நேர்காணல்களை நடத்திவரும்  ரங்கராஜ் பாண்டேயை குறிப்பிடலாம். இவர் நேர்காணல்கள் நடத்தும் விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் நேர்காணல்கள் நடத்துபவர்களைப் போல் உணர்ச்சிவசப்படாமலும் நிதானம் இழக்காமலும் கேள்விகளை தூய தமிழில் அழகான உச்சரிப்புடன் தொடுப்பதில் வல்லவர் இவர். 
 
தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இவர் நடத்திவரும் நேர்காணல்களை தவறாமல் பார்த்துவந்ததில் கடந்த வாரத்தில் ஒளிபரப்பான மூன்று நேர்காணல்களைப் பற்றி இங்கு விமர்சிக்கலாம்.
 
இதில் முதல் நேர்காணல் மதிமுகவிலிருந்து சமீபத்தில் அதிமுகவுக்கு தாவிய நாஞ்சில் கே. சம்பத் அவர்களுடனான சந்திப்பு.
 
இது நான் சற்று முன்னர் குறிப்பிட்ட பாதியிலேயே கைவிடப்பட்ட மோடியின் நேர்காணல் போலிருந்தது.  இத்தகைய நேர்காணல்களுக்கு வரும்போது நேர்காணலுக்கு உள்ளாகிறவர் சரியாக தயார் செய்துக்கொண்டு வரவேண்டும். அல்லது நல்ல விஷய ஞானம் உள்ளவராக இருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாமல் வெறும் வாதத்திறமையை மட்டுமே நம்பி வந்தால் என்னாகும் என்பதற்கு உதாரணம்தான் நாஞ்சிலாருடனான இந்த சந்திப்பு காட்டியது.
 
ஒருவருடைய பேச்சுத் திறன் மேடைப் பேச்சுக்கு வேண்டுமானால் கைகொடுக்கலாம். ஆனால் நேருக்கு நேர் என்ற நேர்காணல்களில் அது பயனளிக்காது என்பதும் அவர் ரங்கராஜ் பாண்டேயின் பல கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் திணறியதைக் காண முடிந்தது. வடி கொடுத்து அடி வாங்குவது என்பார்கள் மலையாளத்தில். அதாவது தன்னுடைய பதில்களாலேயே பல இடங்களில் சங்கடத்தில் சிக்கிக்கொண்டு அவர் தவித்ததைக் காண பரிதாபமாக இருந்தது. ஒரு இடத்தில் நாகரீகமில்லாமல் ஸ்டாலினையும் அழகிரியையும் ஒருமையில் விளித்தபோது ஒரு முதிர்ந்த அரசியல் தலைவருக்கு இது அழகில்லையே என்று பாண்டே சுட்டிக்காட்டியபோது சிவனையும் நாம் அவன், இவன் என்றுதானே அழைக்கிறோம் என்று சமாளிக்க துவங்கி மக்கள் இதை விடவும் மோசமாக பேசுவதை விரும்புகின்றனர் என்று தரம் தாழ்ந்து நின்றபோது இவர் அரசியல் நாகரீகம் இல்லாதவர் மட்டுமல்லாமல் ஒரு அடிப்படை மனித பண்பும் கூட இல்லாதவர் என்பதை காண முடிந்தது.  ஒரு மூன்றாம் தர அரசியல்வாதியைப் போல நொடிக்கொருமுறை அம்மா, அம்மா என்று அம்மா ஜெபம் செய்தே நேர்காணலை சமாளித்தார்.  தான் சார்ந்துள்ள கட்சியின் நோக்கம் என்ன என்பதைக் கூட தெளிவாக சொல்ல முடியாமல் அவர் திணறிய விதம் அவருடைய 'அம்மா'வின் கண்டனத்திற்கும் உள்ளாகியிருக்கும் என்பது நிச்சயம்.
 
அடுத்தது தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருட்டினனுடனான நேர்காணல். இவரும் பல கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் திணறியதைக் காண முடிந்தது. அதற்கு அவருடைய கட்சி அமைத்துள்ள சந்தர்ப்பவாத கூட்டணிதான் காரணம். கொள்கையளவில் எவ்வித ஒற்றுமையும் இல்லாத இரண்டு மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதை நியாயப்படுத்த முடியாமல் திணறியதைக் காண பாவமாக இருந்தது. ஆனாலும் விட்டுக்கொடுக்காமல் சமாளித்த விதமும் தற்போது நாட்டில் வீசும் மோடியின் அலை தமிழகத்திலும் தங்களுடைய கூட்டணியை நிச்சயம் காப்பாற்றும் என்று சொல்லி முடித்ததும் என்னைக் கவர்ந்தது. பாண்டேயின் பல தர்மசங்கடமான கேள்விகளை அவர் பொறுமையுடன் கையாண்டவிதமும் என்னைக் கவர்ந்தது.
 
இறுதியாக ப. சிதம்பரத்துடனான நேர்காணல்.
 
இத்தகைய நேர்காணல்களில் பழம் தின்று கொட்டைப் போட்டவர் என்பதை மிகத் தெளிவாக மீண்டும் ஒருமுறை ப. சிதம்பரம் நிரூபித்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய அரசியல் செயல்பாடுகளில் எனக்கு பல கருத்து பேதங்கள் இருப்பினும் அவருடைய விஷய ஞானமும், பொறுமையும் வாதத்திறனும் அபாரம்.  அவருடைய பல பதில்கள் நேர்காணல் நடத்திய பாண்டேயின் உதடுகளில் புன்னகையை வருவித்தது. அவருடைய பதில்களை ஆமோதிக்கவும் வைத்தது.
 
இந்த மூன்று நேர்காணல்களின் நகல்களும் இதோ.
 
 
ப.சிதம்பரம் தமிழராக பிறந்ததால்தான் அவரால் இன்னும் பிரதமராக முடியவில்லை என்று நினைக்கும் அளவுக்கு அவருடைய பல நேர்காணல்களும் அமைந்துள்ளதை அவற்றைப் பார்த்து ரசித்தவர்களுக்குத்தான் தெரியும். பொருளாதார துறையில் மட்டுமல்லாமல் மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் அவருக்கு இணையாக விஷய ஞானம், நிர்வாகத் திறனுள்ள அரசியல் தலைவர்கள் இந்தியாவில் மிகச் சிலரே உள்ளனர் என்றாலும் தவறில்லை என்பது என்னுடைய கருத்து.

சில மாதங்களுக்கு முன்பு அவர் கரண் தாப்பாருக்கு அளித்த நேர்காணலின் உரையாடல் நகலைப் படித்தாலே இது புரிந்துவிடும்.  தன்னுடைய

 கட்சியில் தனக்கு இணையாக உள்ள தலைவர்களை அனுசரித்துச் செல்லவியலாத அவருடைய குணம்தான் திறமையிருந்தும் பிரதமர் பதவிக்கு வருவதற்கு தடையாக உள்ளது என்று கருதுகிறேன். மக்கள் மத்தியில் செல்வாக்கில்லாத தலைவர் என்றெல்லாம் கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்பதும் என்னுடைய கருத்து. நல்ல விஷயஞானம், திறமை அதே சமயம் மக்கள் மத்தியில் செல்வாக்கும் உள்ள தலைவர்கள் யாரேனும் இந்தியாவில் உள்ளனரா என்று தேடிப்பார்த்தால் யாரும் இல்லை என்றே பதில் வரும். 
 
இது நாட்டுக்கு மட்டுமல்ல நிறுவனங்களுக்கும் பொருந்தும். விஷயஞானம், திறமை, நேர்மை, செல்வாக்கு என்று அனைத்தையும் பெற்றிருக்கும் தலைவர்கள் அல்லது அதிகாரிகள் நாட்டின்/நிறுவனத்தின் உயர்ந்த பதவியை அடைவது மிக, மிக அபூர்வம். என்னுடைய அனுபவத்தில் இவை ஏதுமே இல்லாமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள தலைவர்கள்தான் அதிகம் என்பேன்.  திராவிடக் கட்சிகளின் பல தலைவர்களும் இத்தகையோரே.  ஆகவேதான் இத்தனை வளம் இருந்தும் தமிழகம் இன்னும் இந்திய அளவில் முதலாம் இடத்திற்கு வர முடியாமல் திணறுகிறது. இதிலிருந்து விடுபட வழியே இல்லை என்னும் அளவுக்கு தேசிய கட்சிகள் இங்கு வலுவிழந்துப்போய் விட்டன என்பதுதான் வேதனை.
**************
 
 

 

03 April 2014

அரசியல்வாதியாக என்ன தெரிந்திருக்க வேண்டும்?

அரசியலில் முட்டாள்தனம் ஒரு குறைபாடல்ல என்றார் பிரான்ஸ் தேசத்தின் முதலாம் பேரரசர் நெப்போலியன் போனபார்ட். ஏனெனில் ஒரு முட்டாளால்தான் இன்னொரு முட்டாளை இனம் கண்டுக்கொள்ள முடியுமாம்! 

ஆனால் அரசியல்வாதிகள் மட்டும்தான் அரசியல் செய்கின்றனரா?

அரசியல் எதில்தான் இல்லை? அது நாட்டிலும் உள்ளது வீட்டிலும் உள்ளது. அது இல்லாத இடமே இல்லை. இறைவனை வழிபடச் செல்லும் வழிபாட்டுத்தலங்களிலும் கூட உள்ளதே! VIP சாமி தரிசனம் என்று கேள்விப்பட்டதில்லை?

ஆகவே அங்கிங்கினாதபடி எங்கும் நீக்கமற கலந்திருப்பது அரசியல். 

'அரசியல் செய்யாம பிழைக்க முடியாதுங்க' என்பது இன்று மிகவும் சகஜமாக நாம் கேட்கும் பேச்சு. இன்று அரசியல் செய்யாத மனிதனே இல்லை எனலாம்.

ஆகவேதான் கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் மனிதன் ஒரு அரசியல் மிருகம் (political animal) என்றார். ஆனால் மிருகங்கள் அரசியல் செய்வதில்லை. ஏனெனில் அவற்றிற்கு அதற்கேற்ற ஐந்தாம் அறிவு இல்லை. ஆனால் இந்த 'அறிவை' தேவைக்கு அதிகமாகவே பெற்றிருப்பதால்தான் எங்கும் அரசியல் எதிலும் அரசியல் என்று நம்மில் பலரும்  அலம்பல் செய்கிறோம்!

அரசியல் என்றால் அரசு + இயல் என்று பொருளாம்! ஆட்சி செய்யும் கலை என்றும் கூறலாம். இதுதான் இந்த வார்த்தையின் நேர்மறையான (positive) பொருள். ஆனால் நம்மில் பலரும் இதை எதிர்மறையாகத்தான் பொருள் கொள்கிறோம் அரசியல் செய்வது என்றால் ஆட்சி செலுத்துவது என்ற பொருள் மறைந்து இப்போது ஆட்டிப்படைப்பது, ஆதாயம் தேடுவது, அடுத்துக் கெடுப்பது என்றாகிவிட்டது. 

அரசியல் செய்பவரெல்லாம் ஒருவகையில் அரசியல்வாதிகள்தான். ஆட்சி செய்வதில் அரசியல் செய்பவர்களைத்தான் அரசியல்வாதிகள் என்கிறோம். ஆனால் அலுலவகங்களிலும் ஏன் குடும்பங்களிலும் சுயலாபத்திற்காக அரசியல் செய்பவர்களும் அரசியல்வாதிகள்தான். மாமனார் மாமியாரை வீட்டை விட்டு விரட்ட அரசியல் செய்யும் மருமகளும் அரசியல்வாதிதான் என்றால் முதிய வயதில் தன்னை மட்டுமே நம்பியிருக்கும் பெற்றோரை மனைவியின் தூண்டுதலால் முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட நினைக்கும் மகனும் அரசியல்வாதிதான். 

'எனக்கு பாலிட்டிக்ஸ்னால புடிக்காதுங்க. அதுவும் அரசியல்வாதிங்கனா கேக்கவே வேணாம். அரசியல பத்தியும் அரசியல்வாதிங்கள பத்தியும் பேசறது சுத்த வேஸ்ட்.' இப்படி சலித்துக்கொள்பவர்கள்தான் தங்களுக்கு தேவை என்று வருகிறபோது வீட்டிலும் வெளியிலும் அரசியல் செய்ய தயங்கமாட்டார்கள், தங்களுக்குத் தெரிந்த அரசியல்வாதியின் உதவியையும் கேட்டுப் பெற தயங்கமாட்டார்கள். இதைத்தான் பத்தாம்பசலித்தனம் (hypocrisy) என்கிறார்கள். 

ஆனால் அரசியல் செய்யத் தெரியாத அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு மறைந்த தமிழக அரசியல் தலைவர்களுள் ஒருவரான கக்கன் அவர்களைச் சொல்லலாம். ஏறத்தாழ ஐம்பதாண்டுகள் அரசியலிலும் ஆட்சியிலும் இருந்தும் கூட சொந்தமாக ஒரு வீடோ, வாகனமோ இல்லாமல் மறைந்தவர் அவர். இத்தகையோரை பிழைக்கத் தெரியாதவர்கள் என்பார்கள். அதாவது அரசியல் செய்யத் தெரியாதவன் பிழைக்கத் தெரியாதவன்!

இன்று அரசியல் செய்யாத மனிதனே இல்லை என்கிறபோது எதற்காக அரசியலையும் அரசியல்வாதிகளை மட்டும் நாம் வெறுக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது!

நம்முடைய வீடுகளிலும் அலுவலகங்களிலும் நாம் செய்யும் அதே அரசியலைத்தான் பொதுவாழ்வில் இன்று அரசியல்வாதிகள் செய்கிறார்கள். அரசியல் செய்யும் அளவில்தான் மாறுபடுகிறோம். நாம் சிறிய அளவில் செய்கிறோம். அவர்கள் பெரிய அளவில் செய்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். இந்த குணநலனைத்தான் அரிஸ்டாட்டில் நாம் அனைவருமே அரசியல்வாதிகள்தான் என்று அன்றே சொல்லிச் சென்றுவிட்டார். 

ஆனால் ஒரு சராசரி மனிதன் வீட்டிலும் அலுவலகங்களிலும் செய்யும் அரசியல் அவனையும் அவனைச் சார்ந்தவர்களை மட்டுமே பாதிக்கிறது. ஆனால் பொதுவாழ்விலோ அல்லது அரசு பொறுப்பிலோ உள்ளவர்கள் செய்யும் அரசியல் ஒரு நாட்டையே பாதிக்கிறது. 

"Glimpses of World History" என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் மறைந்த பிரதமர் நேரு அவர்கள் இவ்வாறு கூறுவார்: "அரசியல்வாதிகள் தங்களுடைய உண்மையான நோக்கத்தை மறைத்துக்கொண்டு வெளியில் நீதி, நேர்மை, மதச் சார்பின்மை ஆகியவற்றைப் பற்றி பேசுவதில் சமர்த்தர்கள். அவர்களுடைய பேச்சில் மயங்கி அவர்கள் கூறுவதை உண்மை என்று நம்பி ஏற்றுக்கொள்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்." இதே கருத்தை வலியுறுத்தி பிரான்ஸ் நாட்டு முன்னாள் அதிபர் சார்லஸ் டிகால் சொன்னது: 'தன்னுடைய பேச்சை தானே நம்பாத அரசியல்வாதி தான் சொல்வதை அப்படியே நம்பும் மக்களைப் பார்த்து வியப்பதில் வியப்பென்ன?' 

அவர் இதை எழுதி சுமார் அரை நூற்றாண்டுகளாகிவிட்டன என்றாலும் அவர் அன்று கூறியது இன்றளவும் பொருந்துகிறது. நேருவின் சோசலிஸ கொள்கைகள்தான் நாடு இன்னும் வறுமை நாடாகவே இருப்பதற்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு இன்றளவும் கூறப்பட்டு வந்தாலும் அவர் ஒரு சராசரி அரசியல்வாதியாக இருக்கவில்லை என்பதென்னவோ உண்மை. ஆனால் அவருடைய வாரிசுகள் அப்படி இருக்கவில்லை என்பது வேறு விஷயம். 

ஆகவேதான் அரசியல்வாதிகளின் நம்பகத்தன்மை நாளுக்குநாள் குறைந்துக்கொண்டே வருகிறது எனலாம். இது நம்முடைய நாட்டுக்கு மட்டுமே உரித்தானது என்று கூற முடியாது. இன்று உலகெங்கும் உள்ள அரசியல்வாதிகள் ஏறத்தாழ இதே ரகம்தான். கடந்த சில ஆண்டுகளாக நாட்டு மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் பதவியை இழக்க நேர்ந்த அதிபர்கள் எத்தனை பேர்? சொந்த நாட்டை விட்டே விரட்டப்பட்ட அரசியல் தலைவர்கள் எத்தனை பேர்? 

இந்திய அரசியலில் அப்பழுக்கற்ற தலைவர்களை காண்பது அரிதானதுதான் என்றாலும் ஓரிரு ஆண்டுகள் கூட ஒரே நாடாக நிலைத்திருக்க முடியாது என்ற ஆங்கிலேயர்களை மட்டுமல்லாமல் உலகமே பார்த்து வியக்கும் வண்ணம் இன்றளவும் ஒரே சுதந்திர நாடாக நிலைத்திருக்கிறோமே அதுவே ஒரு பெரிய சாதனையல்லவா?

அரசியல் ஒரு சாக்கடை, அதில் விழாமல் இருக்கும் வரை நல்லது என்று நம்மில் பலரும் அதிலிருந்து விலகியதால்தான் இன்று விரும்பத்தகாதவர்கள் எல்லாம் அதில் நுழைந்து நாட்டையே ஊழல் கரை படிந்த நாடாக மாற்றிவிட்டனர். இன்று இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துக்கொள்ளவே பல பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் தயங்கும் அளவுக்கு உள்ளது இந்திய அரசியல்வாதியின் நேர்மைத்தனம். எந்த நேரத்தில் எந்த விசாரணை வரும் எந்த நேரத்தில் நாம் பெற்ற வர்த்தக உரிமம் ரத்தாகும் என்ற அச்சத்துடனே எத்தனை காலத்திற்குத்தான் வர்த்தகம் செய்வது என்ற எண்ணத்துடன் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஒதுங்குகின்றனராம். குறிப்பாக 2ஜி வழக்கில் ஆ இராசா அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டதிலிருந்துதான் இத்தகைய தயக்கம் காட்டப்படுகிறது என்கிறார்கள். இந்த வகையில் இந்திய அரசியலில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயரைப் பெற்றவர் நம்முடைய ஆ.இராசா!!

இந்திய அரசியல்வாதிகளின் 'நேர்மை' இந்த அளவுக்கு சந்தேகத்திற்குள்ளாகியுள்ள சூழலில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அத்தனை எளிதில் மாற்றம் ஏற்படப் போவதில்லை என்பது என்னவோ உண்மை. 'எல்லாமே ஒரே குட்டையில ஊறுன மட்டைதானே' என்ற மறைந்த பெருந்தலைவர் காமராஜர் அன்று வேத வாக்காக கூறிச் சென்றது நினைவுக்கு வருகிறது. 

இன்றுள்ள கட்சிகளில் எந்த கட்சிக்கு அதற்கென்று பிரத்தியேக 'கொள்கை' (Policy), 'சித்தாந்தம்' (Ideology) உள்ளது என்று கேட்டால் 'அப்படியென்றால்?' என்ற கேள்விதான் பதிலாக வருகிறது. 

மக்களை மயக்கும் பேச்சுத்திறன், எதிரணியினரை இகழ்ந்து பேசும் திறன், அடுத்தவர்கள் அடைந்த தோல்வியையே பெரிதாக்கி காட்டும் திறன் இவை மட்டுமே போதும் என்று நினைத்து செயல்படும் கட்சிகள்தான் இன்று அதிகம்! 

நேற்றைய தினம் ராகுலின் அமேதி தொகுதியில் பல நல்ல மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதை காண முடிகிறது என்று பாஜகவின் வருண் காந்தி புகழ்ந்ததும் அதை எதிர்த்து பாஜகவிலிருந்து பல குரல்கள் எழுந்தன. எதிரி எத்தனை நன்மைகள் செய்திருந்தாலும் அதை நாமே வெளியில் கூறலாகாது என்கிற காழ்ப்புணர்வுதானே காரணம்? 

இதுதான் இன்றைய அரசியல்! 

சென்னையிலுள்ள பறக்கும் சாலை பலருக்கும் நன்மை பயக்கும் என்றாலும் அது 'பலான' கட்சியால் கொண்டு வரப்பட்டது ஆகவே அதை எப்படியாவது முடக்க வேண்டும். 

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் தென்னிந்தியாவுக்கே பல நன்மைகளைக் கொண்டுவரக் கூடிய திட்டம் என்று ஒருகாலத்தில் புகழப்பட்ட சேதுசமுத்திர திட்டம் இன்று வேண்டவே வேண்டாம். ஏனெனில் இதுவும் அதே 'பலான' கட்சியால் கொண்டுவரப்பட்டது. 

இது அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று அலறுகிறது அந்த 'பலான' கட்சி. 

இதுதான் அரசியல்!

இது தமிழகத்தில் மட்டுமல்ல நாட்டிலுள்ள பல மாநிலங்களிலும் இதே நிலைதான். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் ஆட்சி மாற்றங்கள்தான் பல நல்ல திட்டங்களும் நிறைவேறாமல் போவதற்கு முக்கிய காரணம். 

இத்தகைய பல 'நல்ல' குலநலன்களுக்காகத்தான் இன்று அரசியல்வாதிகளை பலரும் கேலியாக வர்ணிக்கின்றனர். 

இணையத்திலிருந்து எடுத்த சில மேற்கோள்கள் உங்களுக்காக:

1. பிரபல அரசியல் விமர்சகர் லாரி ஹார்டிமேன்: இவர் அரசியல் என்ற ஆங்கில வார்த்தையை POLI + TICS என்று பிரித்து விளக்கம் அளிக்கிறார். அதாவது POLI என்றால் 'பல' (Many) என்று பொருள். TICS என்றால் உயிரைக் குடிக்கும் கிருமி (parasites) அல்லது ஒட்டுன்னி என்று பொருள். ஆகவே POLITICS என்றால் உயிரைக் குடிக்கும் பல கிருமிகள் என்று அர்த்தமாம்! 

2.ஈசோப்: நாம் பெட்டித் திருடர்களை சிறையில் தள்ளுகிறோம் ஆனால் அவர்களுள் மிகப் பெரிய திருடர்களை அரசாள தெரிவு செய்கிறோம்.

3. முன்னாள் ரஷ்ய அதிபர் குருஷேவ்: அரசியல்வாதிகள் எந்த நாட்டைச் சார்ந்தவரானாலும் ஒரே ரகம்தான். ஆறே இல்லாத இடத்திலும் பாலம் கட்டுவேன் என்பார்கள்.

4. ஐரோப்பிய அரசியல் விமர்சகர்: நீங்கள் மருத்துவராக வேண்டுமென்றால் மருத்துவம் படிக்க வேண்டும். பொறியாளர் ஆக பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வழக்குரைஞர் ஆக வேண்டுமென்றால் சட்டம் படித்திருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதியாக வேண்டுமென்றால் ஒன்றே ஒன்றை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதும். 'எனக்கு என்ன வேண்டும்?' 
இறுதியாக சார்லஸ் டிகால்: அரசியல் என்பது அரசியல்வாதிகள் வசம் ஒப்படைக்கப்படும் அளவுக்கு  அத்தனை எளிதான விஷயமல்ல.

உண்மைதான். அரசியல் அதாவது ஆட்சி செய்வது என்றால் என்ன என்பதே தெரியாதவர்கள்தான் இன்று அரசியலில் உள்ளனர்! அவர்களுக்கு தெரிவதெல்லாம் குட்டையை குழப்புவது பிறகு அதே குட்டையில் மீன் பிடிப்பது.

இந்த இரண்டு விஷயத்தை மட்டும் தெரிந்துவைத்திருந்தால் போதும். தவறு. அத்துடன் நன்றாக பேசவும் தெரிந்திருக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியாகிவிட முடியும்!

வாழ்க அரசியல்! வாழ்க ஜனநாயகம்!

******