13 மார்ச் 2014

யார் தலைமைன்னு தெரியாமலே ஒரு கூட்டணி!

ரஹீம்: போனவாரமே கேக்கணும்னு நினைச்சேன் ஆனா நீங்க இத்தோட நிறுத்திக்கலாம்னு சொன்னதும் விட்டுட்டேன்.

ஜோசப்: இப்ப கேளுங்களேன்? என்ன விஷயம்?

ரஹீம்: அதாங்க இந்த பிஜேபி கூட்டணி விஷயம். பிஜேபிக் காரங்க எங்க தலைமையிலதான் கூட்டணின்னு சொல்றாங்க. ஆனா கேப்டன் எங்க தலைமையிலதான்னு சொல்றாரு. இந்த கூட்டணியே ஒரு தமாஷான கூட்டணி. இதுல யார் தலைமையிலங்கறது வேற பிரச்சினையா?

கணேஷ்: (எரிச்சலுடன்) பாய், ஒவ்வொரு வாரமும் என்னெ கடுப்படிக்கறதே ஒங்களுக்கு வேலையா போச்சி. நாங்க ஒரு தேசிய கட்சி. அதுவுமில்லாம ஏறக்குறைய அம்பது வருசத்துக்கும் மேல பாலிடிக்ஸ்ல ஆக்டிவா இருக்கோம். நேத்து பேய்ஞ்ச மழையில முளைச்ச கட்சி கீழ கூட்டணி அமைக்கறதுக்கு எங்களுக்கென்ன தலையெழுத்தா? 

ஜோசப்: (சிரிக்கிறார்) கேப்டன் சொல்றதுலயும் நியாயம் இருக்கில்ல? அவர்தான இந்த கூட்டணியில ஜாஸ்தி எடங்கள்ல போட்டியிடறாரு? அதனாலதான் எங்க கூட்டணின்னு சொல்றாரு.

கணேஷ்: என்ன ஜோசப் நீங்களும் விவரம் இல்லாம பேசறீங்க. அப்படீன்னா அவரில்லைங்க எங்களை கூட்டணிக்கு வாங்கன்னு கூப்ட்ருக்கணும்? ஒரு கூட்டணிய அமைச்சி அதுல மதிமுக, பாமகன்னு தமிழகத்துல ரெண்டு முக்கிய கட்சிங்கள சேர்த்துட்டு இதுல நீங்களும் கலந்துக்க வாங்கன்னு தேதிமுகவ கூப்ட்டதே நாங்கதான? அப்புறம் எப்படி அவர் நாங்கதான் கூட்டணிக்கி தலைமைன்னு சொல்லிக்கறது?

ஜோசப்: நீங்க சொல்றதுலயும் பாய்ன்ட் இல்லாம இல்ல. ஆனா இத முதல்லயே தேதிமுகக் கிட்ட சொல்லிட்டில்ல பேச்சு வார்த்தைய துவக்கியிருக்கணும்?

ரஹீம்: கரெக்ட் ஜோசப். இதுல இன்னொரு தமாஷும் இருக்கு, பாத்தீங்களா?

கணேஷ்: (கோபத்துடன்) இதுல என்னங்க தமாஷ் இருக்கு? சும்மா எதையாச்சும் சொல்லணுமேன்னு சொல்லாதீங்க.

ஜோசப்: இருங்க கணேஷ். பாய் என்ன சொல்ல வறார்னு கேப்போம்.

ரஹீம்: பாமக மருத்துவருக்கு சினிமா நடிகர்னாலே புடிக்காது. கேப்டன பல தடவ வெளிப்படையாவே கிண்டலடிச்சிருக்கார். அது மட்டுமா? திராவிடக் கட்சிகளோட இனி ஒரு காலத்துலயும் பாமக கூட்டு வச்சிக்காதுன்னு சொல்லிக்கிட்டிருந்தார். அப்படீன்னா மதிமுக, தேதிமுக ரெண்டும் திராவிடக் கட்சி இல்லேன்னு சொல்றாரா? இதுல இன்னொரு தமாஷும் இருக்கு. நடிகர் பேசற கூட்டம் எதுலயும் நா கலந்துக்க மாட்டேன்னு வேற மருத்துவரே சொல்லிட்டாராம். அவங்க அவங்களுக்கு அலாட் பண்ண தொகுதியில அந்தந்த கட்சிங்க பிரச்சாரம் செஞ்சிக்குவாங்கன்னு வேற பிஜேபி சொல்றாங்க! இதுவா கூட்டணிங்கறது? இப்படி அடிப்படை விஷயத்துல கூட ஒத்துப்போகாத கட்சிங்க இருக்கற கூட்டணிய எப்படிங்க ஜனங்க ஏத்துக்குவாங்க?

கணேஷ்: இங்க பாருங்க பாய். நா பல தடவை செல்லிட்டேன். இப்ப வீசுற மோடி அலைக்கு முன்னால நீங்க சொல்ற விஷயமெல்லாம் அடிபட்டுப் போயிரும். அது மட்டுமில்ல. நீங்க சொல்றபடி கருத்தொற்றுமை இருக்கற கட்சிங்க சேர்ந்துதான் எலக்‌ஷன சந்திக்கணும்னு பாத்தா நம்ம நாட்டுல எந்த கட்சியும் எந்த கட்சியோடயும் கூட்டணி வச்சிக்க முடியாது. அதனாலதான் அரசியல்ல நிரந்தர எனிமியும் இல்ல நிரந்தர ஃப்ரென்டும் இல்லேன்னு சொல்றாங்க.

ஜோசப்: சரிங்க ஒத்துக்கறேன். ஆனா பாமக, தேதிமுக ரெண்டு கட்சிங்களுக்குமே தமிழ்நாட்டுல ஒரு சில பாக்கெட்ஸ்லதான் ஜெயிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. இது அவங்க ரெண்டு பேருக்குமே நல்லா தெரியும். அதனாலதான் பாமக கேக்கற பல தொகுதிகளை தேதிமுகவும் கேக்கறாங்க. இதுல ரெண்டு பேருமே மத்தவங்களுக்கு விட்டுக்குடுக்கப் போறதில்லங்கறது உங்களுக்கும் தெரியும். அதனாலதான் பாய் இது ஒரு யதார்த்த கூட்டணியே இல்லேங்கறார். ஏன்னா ஒரு கூட்டணியில ஒரு கட்சி அதே கூட்டணியிலருக்கற இன்னொரு கட்சியோட போட்டியாளரா இருக்கக் கூடாதுங்கறது கூட்டணியோட அடிப்படை கன்டிஷன். அதுவே இல்லாதப்போ அத எப்படிங்க கூட்டணின்னு சொல்ல முடியும்?

கணேஷ்: அதெல்லாம் நாங்க சுமுகமா பேசித் தீத்துக்குவோம். இன்னும் ரெண்டு மூனு நாள்ல ஃபைனலைஸ் செஞ்சிருவோம்னு சொல்லியிருக்காங்களே. அது வரைக்கும் பொறுத்திருந்துட்டு பேசுங்க.

ரஹீம்: நா சொல்றத குறிச்சி வச்சிக்குங்க கணேஷ்: பாமக, தேதிமுக வுக்கு இடையிலருக்கற சீட் பிரச்சினை தீரவே தீராது. இதனாலயே தேதிமுக கடைசி நேரத்துல விலகிக்கிட்டாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. 

கணேஷ்: (சிரிக்கிறார்) அதெல்லாம் ஒன்னும் நடக்காதுங்க. நீங்க வேணா பாருங்க. 

ரஹீம்: பாக்கத்தான போறோம்?

ஜோசப்: சரிங்க. எனக்கு ஒரு டவுட்டு. 

ரஹீம்: (சிரிக்கிறார்) உங்களுக்குமா? 

ஜோசப்; வாசன் திடீர்னு நா இந்த தேர்தல்ல போட்டியிடப் போறதில்லைன்னு சொல்றாரே, என்ன விஷயம்?

கணேஷ்: (சிரிக்கிறார்) நிச்சயமா தோத்துருவோம்கறது அவருக்கு தெரிஞ்சிருக்கும். 

ரஹீம்: யோவ், அவர் நாப்பது தொகுதியிலயும் பிரச்சாரம் பண்ணப் போறாராம். அதுக்காகத்தான் நிக்கலேன்னும் சொல்லியிருக்காரே படிக்கலையா?

கணேஷ்: (கேலியுடன்) அதெல்லாம் சும்மா. அவர் மட்டுமா சொல்றார்? சிதம்பரம் அப்புறம் ஜெயந்தி நடராஜன் ரெண்டு பேரும் இதையே சொல்லியாச்சி... இப்படி தினத்துக்கு ஒருத்தரா சொல்லிக்கிட்டே இருக்கப் போறாங்க பாருங்க. அப்புறம் ரோட்ல போற எவனையாவது புடிச்சி நீதான் கேன்டிடேட்டுன்னு நிறுத்துனாலும் நிறுத்துவாங்க. 

ஜோசப்: இந்த விஷயத்துல கணேஷ் சொல்றதுதான் என்னுடைய கருத்தும். இந்தத் தடவ காங்கிரசுக்கு ஒரு சீட் கூட கிடைக்கப் போறதில்லேங்கறத விட எந்த சீட்லயும் டெப்பாசிட்ட கூட காப்பாத்திக்க முடியுமாங்கறதே சந்தேகம்தான்னு தோனுது. இதுக்கு அவங்க யாரையும் குத்தம் சொல்லி பிரயோஜனம் இல்லே. ஏதாவது ஒரு திராவிடக் கட்சியோட சேந்த்துக்கிட்டு நாலஞ்சி சீட் கிடைச்சாப் போறும்னு போன இருபது வருசமா அவங்க கட்சிய வளக்கவே இல்லையே? இந்த தடவ மட்டுமில்ல இன்னும் பத்து வருசத்துக்கு அவங்களுக்கு இங்கருந்து ஒரு சீட் கூட கிடைக்கப் போறதில்ல. 

கணேஷ்: கரெக்ட்டுங்க. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த கட்சி, ஏறக்குறைய அம்பது வருசமா ரூலிங் பார்ட்டியா இருக்கற கட்சிக்கு இந்த நிலைமை. கேவலமா இருக்கு!

ரஹீம்: (கோபத்துடன்) என்னமோ உங்க கட்சிக்கி இங்க பெரிய ஆதரவு இருக்கறா மாதிரி பேசறீங்க? உங்க கதியும் அதே கதிதானங்க? 

ஜோசப்: (சிரிக்கிறார்) சரியா புடிச்சீங்க பாய். இதுக்குத்தான் எக்குத்தப்பா பேசக் கூடாதுங்கறது. 

கணேஷ் பதில் பேசாமல் ரஹீம் பாயை  எரித்துவிடுவதுபோல் பார்க்கிறார்.

ரஹீம்: (கேலியுடன்) யோவ் இந்த பார்வையெல்லாம் பாத்து பயப்படற ஆள் நா இல்லை.

ஜோசப்: சரி விடுங்க பாய். இன்னொரு விஷயம்.

ரஹீம்: சொல்லுங்க. 

ஜோசப்: ரெண்டு நாளைக்கி முன்னால ராகுல் மோடிய ஹிட்லர்னு சொன்னத வச்சி ஒரு பெரிய சர்ச்சையே வந்துருச்சே படிச்சீங்களா? ஒரு வட இந்தியா டிவியில இதுக்குன்னு தனியா ஒரு டிபேட் (debate) வச்சி ஒரு பெரிய கலாட்டாவே பண்ணிட்டாங்க தெரியுமா?

ரஹீம்: அப்படியா சொன்னார், நீங்க கேட்டீங்களா?

கணேஷ்: நான் கேட்டேன். அவர் அப்படித்தான் சொன்னார். 

ஜோசப்; (சிரிக்கிறார்) சும்மா சொல்லாதீங்க கணேஷ். நானும் அவர் பேசின முழுப் பேச்சையும் கேட்டேன். மோடின்னு ஒரு தடவ கூட சொல்லலை. அவர் சொன்னது இதுதான். நம்ம நாட்டுல சிலர் காந்திய வழியில போறாங்க. வேற சிலர் ஹிட்லர் மாதிரி பிஹேவ் பண்றாங்கன்னு சொன்னார். எங்கப்பன் குதிருக்குள்ள இல்லேங்கறா மாதிரி இவர் மோடியத்தான் சொல்றார்னு பிஜேபிக்காரங்க சொன்னதுக்கப்புறந்தான் ஜனங்களுக்கும் அட இவர் சொல்றது சரிதான் போலருக்கேன்னு தோனும். அது மட்டுமில்லீங்க. நான் மோடியோட பேச்சையும் தொடர்ந்து கேட்டுக்கிட்டுத்தான் வரேன். அவரோட பேச்சுல ஒரு திமிர்தான் தெரியுது. சில சமயத்துல ஒரு மூனாந்தர அரசியல்வாதி மாதிரி உங்க மாமா வீட்லருந்தா கொண்டு வந்து குடுத்தீங்கன்னுல்லாம் பேசறாரு. இதெல்லாம் ஒரு பி.எம் கேன்டிடேட்டுக்கு அழகாங்க? அவர மாதிரியே இங்கயும் ஒரு தலைவர் பேசிக்கிட்டுத்தான் இருக்கார். நா பேர சொல்லாமயே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கேன். 

ரஹீம்: (நமட்டுச் சிரிப்புடன்) என்ன கணேஷ் இவர் யார சொல்றார்னு தெரியுதா?

கணேஷ்: (எரிச்சலுடன்) தெரியாம என்ன?

ஜோசப்: நீங்க யார நினைச்சிக்கிட்டீங்களோ எனக்கு தெரியல. ஆனா ரெண்டு பேரும் ஒரே ஆளப் பத்தித்தான் சொல்றோம்னு சொல்ல முடியாது. ஏன்னா உங்க கூட்டணியில இருக்கற இன்னொருத்தர் பேசறதும் அதே மாதிரிதான் இருக்கு.

ரஹீம்: அப்போ நீங்க சொன்னது அவர இல்லையா?

ஜோசப் இல்லையென்பதுபோல் தலையை அசைக்கிறார்.

ரஹீம்: அப்போ நீங்க யார சொல்றீங்க?

ஜோசப்: வேணாம். நீங்க ஒக்காந்து யோசிச்சி வைங்க. கண்டு பிடிக்க முடியலன்னா ஃபோன்ல கூப்டுங்க, சொல்றேன். என்ன கணேஷ்?

கணேஷ்: நீங்க சொல்ல வர்றது யாருன்னு எனக்கு தெரியும். 

ரஹீம்: யோவ் சும்மா உடாதீங்க. யார்னு சொல்லுங்க பாப்போம். 

கணேஷ்: (சிரிக்கிறார்) அவர் சொன்னா நானும் சொல்றேன். 

ரஹீம்: கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலேங்கற ஆள்யா நீரு. ஜோசப் யாரச் சொன்னாலும் அவரத்தான் நானும் நினைச்சிக்கிட்டிருந்தேன்னு சொல்லிறலாம்னு ஐடியா, அதான?

கணேஷ்: அந்த மாதிரி ஏமாத்தறதெல்லாம் நீங்க பண்ற வேலை. 

ரஹீம் பாய் கோபத்துடன் பதிலளிப்பதற்கு முன்பு ஜோசப் குறுக்கிடுகிறார்: சரி, சரி. இது இன்னொரு சண்டைக்கி போறா மாதிரி தெரியுது. அதனால இன்னைக்கி இத்தோட முடிச்சிக்குவோம். நாளைக்கி பாக்கலாம். 

*********

5 கருத்துகள்:



  1. கடைசி நேரத்துல விலகுறது கன்பார்ம்...! எல்லாமே தமாஷா தான் இருக்கு போங்க...!

    பதிலளிநீக்கு
  2. //கண்டு பிடிக்க முடியலன்னா ஃபோன்ல கூப்டுங்க, சொல்றேன். //

    போன் போட்டுற வேண்டியது தான்!

    பதிலளிநீக்கு
  3. தேர்தல் வரைக்கும் ஒரே குழாயடி சண்டையாதான் இருக்கும் போல இருக்கு. முடிஞ்சா சரியாயிடுமான்னு கேக்காதீங்க. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. உங்கள் பதிவில் இருப்பதுபோல ஒவ்வொருத்தரும் தான் சப்போர்ட் செய்யும் கட்சி வெற்றி பெற்றுவிடும் என்று பெருத்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கூட்டணி பேச்சு வார்த்தைக்கு பாஜக தான் தேமுதிக அலுவலகத்திற்கு சென்றது. ஆனால் பாமவை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பேசியது. இதுவே போதும் யார் De facto தலைமை யார் De jure தலைமை என்று.

    துரதிர்ஷ்டவசமாக நம் தலைவர்களில் அநேகம் பேருக்கு நாவடக்கம் இல்லை. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல வேடிக்கைகளை காண/பார்க்க போகிறோம்.தேர்தல் முடியும் வரை திண்ணையில் காரசாரமான விவாதங்களை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு

  5. இதுவரை அரசியல் பதிவு எழுதவில்லை. உங்கள் பதிவு நானும் எழுதத்தான் வேண்டும் என்று நினைக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு