05 March 2014

தமிழ்நாட்டில் ஏப்ரல் 24ல் தேர்தல்!

ரஹீம் பாயின் வீட்டுத் திண்ணையில் அவரும் கணேஷும் அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கின்றனர். ஜோசப் அவசர, அவசரமாக வந்து அமர்கிறார்.

ரஹீம்: என்னங்க வந்தது லேட்டு ஆனா அவசரமா வரா மாதிரி ஆக்ட் குடுக்கறீங்க?

ஜோசப்: இன்னைக்கி எலெக்‌ஷன் டேட்ஸ் சொல்றாங்களே அத டிவியில பாத்துட்டு வர்றதுக்கு லேட்டாயிருச்சி.

கணேஷ்: இங்க வந்து மூனு பேரும் சேர்ந்து பாய் வீட்டு டிவியில பாக்கலாம்னு சீக்கிரமா வந்தா இந்த ஏரியாவுல பவர்கட்டாம். நாங்க ஆட்சிக்கு வந்தா ஒரே வருசத்துல பவர்கட்ட போக்கிறுவோம், தமிழ்நாட்ட மின்மிகை மாநிலமா ஆக்கிருவோம்னுல்லாம் சொன்னாங்க. ஆனா மூனு வருசம் ஆவப்போவுது இன்னும் பெருசா எதுவும் செஞ்சதா தெரியல. 

ஜோசப்: (சிரிக்கிறார்) ஆரம்பிச்சிட்டீங்களா? ஏங்க, போன மூனு மாசம் முன்னால வரைக்கும் டெய்லி ரெண்டு மணி நேரம் பவர்கட் இருந்துச்சே இப்ப இல்லேல்ல? அத மட்டும் சொல்ல மாட்டேங்கறேங்க?

கணேஷ்: அப்போ இன்னைக்கி இங்க ஏன் பவர் இல்லே?

ஜோசப்: ஏதாச்சும் ஃபால்ட்டா இருக்கும். இல்லே மாசம் ஒரு நாள் மெய்ன்ட்டனன்ஸ்சுக்கு கட் பண்ணுவானே அதுவாருக்கும். பேப்பர்ல பாத்தீங்களா பாய்?

ரஹீம்: இன்னைக்கி பேப்பர்ல ஒன்னும் போட்டா மாதிரி தெரியல.

ஜோசப்: அட என்ன பாய், இன்னைக்கி பவர்கட்டுன்னா நேத்தைக்கி பேப்பர்லதான் போட்ருப்பான். நீங்க பாக்காம விட்ருப்பீங்க.

ரஹீம்: சரி அத விடுங்க. நீங்கதான் பாத்தீங்களே சொல்லுங்க. இங்க என்னைக்கி தேர்தல்?

ஜோசப்: ஏப்ரல் 24ல. முன்னெ மாதிரில்லாம் இல்லாம இந்த தடவ ஒரே தேதியில தமிழ்நாடு முழுசுக்கும் தேர்தலாம். 

கணேஷ்: அப்போ ரிசல்ட்?

ஜோசப்: (சிரிக்கிறார்) அதுக்கு முழுசா ஒரு மாசம் காத்துக்கிட்டிருக்கணும் போலருக்கு. கடைசியா உ.பியில மே மாசம் 12ம் தேதி. அதனால மே பதினாறாம் தேதிதான் ரிசல்ட் வருமாம்.

ரஹீம்: என்ன அக்கிரமம் பாருங்க. ஓட்டு போட்டமா ரிசல்ட் வந்துதான்னு இல்லாம ஓட்டுப் போட்டு நாப்பது நாள் வரைக்கும் காத்துக்கிட்டிருக்கணும். முன்னெல்லாம் இப்படியா நடத்துனாங்க? அதாவது இருபது வருசத்துக்கு முன்னால? எல்லாம் இந்த சேஷன் வந்ததுக்கப்புறம்தான்! 

ஜோசப்: நீங்க சொல்றது உண்மைதான். ஆனா முன்னாலல்லாம் ஓட்டுக்கு காசு குடுக்கறது கள்ள ஓட்டு போடறதுங்கறதெல்லாம் அவ்வளவா இல்லீங்களே பாய். ஒவ்வொரு ஓட்டு பூத்துக்கு முன்னாலயும் நாலஞ்சி கான்ஸ்டபிள்ஸ் நின்னா போறும். எந்த ப்ராப்ளமும் இல்லாம நடந்து முடிஞ்சிரும். இப்ப அப்படியா? 

கணேஷ்:  எனக்கு நல்லா ஞாபகம் இருக்குங்க. எழுபதுகள்ல ஓட்டு பூத் வரைக்கும் கூட கட்சிக்காரங்க வண்டி ஏற்பாடு பண்ணி கொண்டு விடுவாங்க. இறக்கி விடறப்போ மறக்காம நம்ம சின்னத்துல குத்திருங்கன்னு சொல்வாங்க. அப்பல்லாம் நாலஞ்சி நாள்லயே ரிசல்ட் சொல்லிறுவாங்களே?

ரஹீம்: பூத் வரைக்கும் கொண்டு போய் விடுவாங்கதான். ஆனா ஓட்டுப் போட்டுட்டு திரும்பி வர்றப்ப ஒரு பயலும் கண்டுக்கமாட்டான். 

ஜோசப்: (சிரிக்கிறார்) அவங்களுக்கு வேலை ஆவணும். அதுக்கப்புறம் ஒங்க தயவு வேணாம்ல? அதான்.

கணேஷ்: சரிங்க. நேத்து CNN-IBN டிவியில தமிழ்நாட்டுல நடத்துன எலக்‌ஷன் ட்ராக்கர் ரிசல்ட்ட போட்டானே பாத்தீங்களா?

ஜோசப்: அத விட்டா நமக்கு என்ன வேலைங்க? ஆனா போன வாரம் C-Voterஐ பத்தி ஒரு நியூஸ் வெளியில வந்தது அப்படியே மனசுல நிக்கிறதால இதுவும் அப்படித்தான் இருக்குமோன்னு ஒரு டவுட்டோடயே பாக்க வேண்டியதா போச்சி. 

ரஹீம்: அதென்ன ஜோசப் C-Voter? அப்படியென்னா செஞ்சாங்க?

ஜோசப்: அது ஒரு கருத்துக் கணிப்பு கம்பெனி பாய். இந்தியா முழுசும் போய் லேட்டஸ்ட் ஓட்டர் லிஸ்ட்லருக்கற  வாக்காளர் சிலர சந்திச்சி நீங்க இந்த தடவ யாருக்கு ஓட்டுப் போடப் போறீங்கன்னு கருத்து கேட்டு அவங்க சொல்றத வச்சி அந்த தொகுதியிலருக்கற மொத்த வாக்காளர்ங்களும் யாருக்கு போடுவாங்கன்னு எஸ்ட்டிமேட் போடுவாங்க. இவங்க செய்யிற வேலை உண்மையிலேயே நம்பக்கூடியதான்னு செக் பண்றதுக்கு அவங்கள ஒரு நியூஸ் சானல் காரங்க ரகசிய மைக்கோட போயி நாங்க உங்களுக்கு இவ்வளவு தரோம் நாங்க சொல்ற பார்ட்டிக்குத்தான் ஆதரவு ஜாஸ்தின்னு சொல்லணும்னு சொல்லியிருக்காங்க. அவங்களும் இது இதுக்கு இன்னின்ன ரேட்டுங்கறா மாதிரி சொல்லியிருப்பாங்க போலருக்கு. அவங்க சொன்னது அப்படியே ரெக்கார்டாயிருச்சி. எத வச்சி வேணும்னாலும் காசு பாத்தா போறும்னு நினைச்ச அந்த சானல்காரங்க இந்த டேப்ப எல்லா நியூஸ் சானலுக்கும் அனுப்பிட்டாங்க. 

ரஹீம்: அடப்பாவிங்களா? இதனாலதான் இது கருத்து கணிப்பு இல்ல கருத்து திணிப்புன்னு காங்கிரஸ் காரங்க சொல்றாங்களா?  

கணேஷ்: (சிரிக்கிறார்) அட நீங்க வேற பாய் எல்லா கணிப்புமே அவங்களுக்கு எதிரா வர்றதால அப்படி சொல்றாங்க. இதுவே அவங்களுக்கு சாதகமா வந்திருந்தா இப்படியெல்லாம் புலம்ப மாட்டாங்க.

ஜோசப்: அப்போ நீங்க புலம்புவீங்க அப்படித்தானங்க?

ரஹீம்: (சிரிக்கிறார்) அப்படி போடுங்க அருவாள!

கணேஷ்: (கடுப்புடன்) எல்லாத்துக்கும் ஜால்ரா போடாதீங்க பாய். 

ரஹீம்: சரி நம்ம சண்டைய அப்புறம் வச்சிக்கலாம். ஜோசப் நேத்து தமிழ்நாட்ட பத்தி சொன்னாங்கன்னு சொன்னீங்களே அத சொல்லுங்க.

கணேஷ்: (குறுக்கிட்டு) அதான் நீங்களே சொல்லிட்டீங்களே பாய் கருத்து திணிப்புன்னு இதுவும் அத மாதிரிதான். விட்டுத்தள்ளுங்க வேற எதைப் பத்தியாவது பேசலாம்.

ரஹீம்: யோவ் நீ இப்படி சொல்றதுலருந்தே இதுல ஏதோ வில்லங்கம் இருக்கும்னு தோனுது. ஜோசப் நீங்க சொல்லுங்க, யார் ஜெயிப்பாங்களாம்?

ஜோசப்: கணேஷ் சொல்றா மாதிரிதான் இருக்குமோன்னு எனக்கும் தோனத்தான் செய்யிது பாய். ஏன்னா ரெண்டு மாசம் முன்னால வரைக்கும் அதிமுகவுக்குத்தான் எங்க ஓட்டுன்னு சொல்லிக்கிட்டிருந்தவங்க அவ்வளவு சீக்கிரம் மாறிருவாங்களா என்ன?

ரஹீம்: (பொறுமையிழந்து) அது இருக்கட்டுங்க. யாருக்கு எத்தன சீட் கிடைக்குமாம்? அதச் சொல்லுங்க.

ஜோசப்: சொல்றேன், சொல்றேன், அதிமுகவுக்கு 16லருந்து 20 சீட் கிடைக்குமாம், அதாவது மொத்த சீட்டுல அம்பது பர்சன்ட். திமுகவுக்கு பத்துலருந்து பதினாறு சீட் கிடைக்குமாம், காங்கிரசுக்கு நாலு சீட் வரைக்கும் கிடைக்குமாம். மீதி இருக்கறது தேதிமுக, மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் மாதிரி கட்சிங்களுக்கு கிடைக்குமாம்.

ரஹீம்: அப்போ பாஜகவுக்கு?

ஜோசப்: ஓ! அத விட்டுட்டேனா? அவங்களையும் மீதி இருக்கற கட்சிங்களோட சேத்துக்கலாம். ஒன்னோ ரெண்டோ கிடைச்சா லாபம்.

கணேஷ்: அட நீங்க ஒன்னுங்க. நாடு முழுசும் மோடி அலை வீசுதுங்கறாங்க. இங்க மட்டும் வீசாதாக்கும்? இதெல்லாம் சும்மா...

ஜோசப்: நீங்க சொல்றா மாதிரியும் நடக்கலாம். தமிழ்நாட்ட பொறுத்தவரைக்கும் இது வரைக்கும் எந்த எலக்‌ஷன் கருத்துக் கணிப்பும் கரெக்டா இருந்ததில்லையாம். அவங்களே ஒத்துக்கறாங்க. 

ரஹீம்: அப்படியா? அப்பறம் எதுக்குங்க மறுபடியும் மறுபடியும் இப்படி சொல்லி கன்ஃப்யூஸ் பண்றாங்க?

கணேஷ்: இதெல்லாம் காசு பண்ற வேலைங்க. எலெக்‌ஷன் டைம்ல இப்படியெல்லாம் செஞ்சாத்தான் நியூஸ் சேனல்காரங்களுக்கு விளம்பரம்லாம் வரும். ஜனங்களுக்கும் இதுல பயங்கர இன்ட்ரஸ்ட் இருக்கே. நடக்குதோ இல்லையோ யாருக்கு சாதகமா கணிப்பு வருதோ அந்த கட்சிக்காரங்களுக்கு சந்தோஷம். 

ஜோசப்: இத விட தமாஷ் என்னன்னா நாடு முழுசும் மோடிதான் பிரதமரா வரணும்னு சொல்றப்போ தமிழ்நாட்டுல மட்டும் ராகுலுக்கு ஜாஸ்தி ஆதரவாம்? இத என்னன்னு சொல்றது?

ரஹீம்: அப்படியா? இருக்கும்ங்க. நம்ம ஆளுங்களுக்கு இந்திரா காந்தி குடும்பம்னாலே ஒரு அட்ராக்‌ஷந்தான். அதுமட்டுமில்லாம ராஜீவோட சாவுக்கும் நாமளும் ஒரு காரணம்தானே. நம்ம போலீஸ் மட்டும் இன்னும் கொஞ்சம் உஷாரா இருந்துருந்தா அது நடந்துருக்காதுங்கற எண்ணமும் நம்ம ஆளுங்க மனசுல இப்பவும் இருக்குதே?

கணேஷ்: அட நீங்க வேற பாய். அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. இது முழுக்க முழுக்க ஒரு பேய்ட் (paid) சர்வே. வேற ஏதாச்சும் இருந்தா பேசுவோம் இல்லன்னா நாளைக்கி பாக்கலாம். 

ஜோசப்: சிரித்தவாறே எழுந்திருக்கிறார். சரிங்க நாளைக்கி மீட் பண்லாம். இப்ப கணேஷ் இருக்கற மூடுல போன வாரம் செஞ்சா மாதிரி எழுந்து போயிருவார் போலருக்கு. 

கணேஷ்: அதெல்லாம் ஒன்னுமில்லீங்க. இந்த மாதிரி முழு பூசணிக்காய சோத்துல மறைக்கிறா மாதிரி பேத்தலாருக்கேன்னு சொல்ல வரேன். 

ரஹீம்: சரி விடுங்க ரொம்பத்தான் டல்லாய்ட்டீங்க? மீதிய நாளைக்கி பேசிக்கலாம்.

**********

பி.கு. கடந்த இரு வாரங்களாக திண்ணை பதிவின் நீளம் அதிகமாக இருப்பதாக சில நண்பர்கள் கூறியதால் இந்த வாரம் முதல் வாரம் இரண்டு அல்லது மூன்று பதிவுகளாக இடலாம் என்று எண்ணியுள்ளேன்.  

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னது...! நாப்பது நாள் வரைக்கும் காத்துக்கிட்டிருக்கணுமா...?

CNN-IBN டிவியில் எலக்‌ஷன் ட்ராக்கர் ரிசல்ட் பார்க்கவில்லை... C-Voter தகவலுக்கும் நன்றி...

எல்லாமே காசு பண்ற வேலை தான் போங்க...!

தருமி said...

//போன மூனு மாசம் முன்னால வரைக்கும் டெய்லி ரெண்டு மணி நேரம் பவர்கட் இருந்துச்சே இப்ப இல்லேல்ல?/

அதெல்லாம் செல்லமான சென்னையில் மட்டும் தான். எங்களுக்கு இப்போ ‘கன்னா பின்னா’ன்னு பவர் கட். மாறி மாறி வருது. மார்ச் ஆரம்பம் இப்படி. இன்னும் இருக்கவே இருக்கு கோடை காலம்!

தி.தமிழ் இளங்கோ said...

நண்பர்கள் ஒருவருக்கொருவர் உரையாடுவது போல அரசியல் அலசல்! ஒவ்வொருவருக்கும் ஒரு நடை. உங்கள் பாணியில் நீங்கள் எழுதுகிறீர்கள். நான் ஒன்றும் சொல்லக் கூடாதுதான். இருந்தாலும், எனக்கென்னவோ அரசியல் சம்பந்தப்பட்ட உங்கள் கருத்துக்களை கட்டுரை நடையிலேயே ( ஒவ்வொரு பதிவையும் ஒரு தலைப்பில் ) தருவதுதான் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்!

வே.நடனசபாபதி said...


எனக்கென்னவோ இந்த கருத்துக் கணிப்பின் பேரில் நம்பிக்கை இல்லை. Sample survey மூலம் பெறப்படும் தகவல், மொத்த மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் என்பது சரியல்ல. மேலும் மக்கள் survey எடுக்க வருபவர்களிடம் தங்களின் உண்மையான எண்ணத்தை தெரிவிப்பார்கள் என்பது சந்தேகமே. நிச்சயம் இது தடை செய்யப்பட வேண்டிய ஒன்று.

தமிழ் நாட்டைப் பொருத்தவரை 2004 இல் நடந்தது போல் ஒரே கூட்டணி எல்லா தொகுதிகளையும் கைப்பற்றும் என்பது நடக்காது. ஆக்கப் பொறுத்த நாம் ஆறும் வரை காத்திருக்க வேண்டாமா? எனவே காத்திருப்போம் மே 16 வரை!

s suresh said...

எலக்‌ஷன் ரிசல்ட் தள்ளிப்போவது வருத்தமாகத்தான் உள்ளது. எதுவுமே உடனே தெரிஞ்சாத்தான் நல்லா இருக்கும்! இப்ப எலக்‌ஷன் நடக்கிற முறை ரொம்ப நல்லா இருந்தாலும் ரிசல்ட் வர இத்தனை நாள் காக்க வைக்கிறது ரொம்ப கொடுமை!

G.M Balasubramaniam said...

இந்த ஸ்டாடிஸ்டிஸ் என்பதே எடுக்கும் சாம்பிள் சைசைப் பொறுத்தும் இடத்டைப் பொறுத்தும் மாறும். இன்று மழை வந்தாலும் வரலாம் என்பது போல்தாந்தமிழ் நாட்டில் ஆமாத்மி இல்லையா. அவர் கருத்தைக் கேட்பது இல்லையா.?

டிபிஆர்.ஜோசப் said...

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாமே காசு பண்ற வேலை தான் போங்க...!//

கரெக்டா சொன்னீங்க. இதுல என்ன வேடிக்கைன்னா சொல்றது முழுசும் உண்மையில்லைன்னு தெரிஞ்சும் ரொம்ப சீரியஸ்சா டிஸ்கஸ் பண்ணுவாங்க.


1:32 PM
தருமி said...
//போன மூனு மாசம் முன்னால வரைக்கும் டெய்லி ரெண்டு மணி நேரம் பவர்கட் இருந்துச்சே இப்ப இல்லேல்ல?/

அதெல்லாம் செல்லமான சென்னையில் மட்டும் தான். எங்களுக்கு இப்போ ‘கன்னா பின்னா’ன்னு பவர் கட். மாறி மாறி வருது. மார்ச் ஆரம்பம் இப்படி. இன்னும் இருக்கவே இருக்கு கோடை காலம்!//

தெரியும். நான் சொன்னது சென்னையில. ஆனால் சென்னை தவிர மத்த இடங்கள்ல இப்பல்லாம் ராத்திரியில கட் பண்றதே இல்லையாமே. அந்த அளவுக்கு முன்னேறியிருக்கேன்னு தேத்திக்க வேண்டியதுதான். வர்ற தேர்தல்ல அந்தம்மாவுக்கு நினைச்ச சீட் கிடைக்கலேன்னா பவர்கட் இன்னும் தீவிரமாகுமாம் ஜாக்கிரதை! அதனால ஓட்டு இருக்கறவங்கள்லாம் அவங்களுக்கே தங்களுடைய பொன்னான வாக்குகளை போட்டுடணும்னு கேட்டுக்கறேன். தமிழ் ஆள் ஒருத்தர் பி.எம் ஆவறதுக்கு நமக்கெல்லாம் பெருமைதானே :))

1:50 PM
தி.தமிழ் இளங்கோ said...
நண்பர்கள் ஒருவருக்கொருவர் உரையாடுவது போல அரசியல் அலசல்! ஒவ்வொருவருக்கும் ஒரு நடை. உங்கள் பாணியில் நீங்கள் எழுதுகிறீர்கள். நான் ஒன்றும் சொல்லக் கூடாதுதான். //

ஏன் சொல்லக் கூடாது? தாராளமா சொல்லலாம்.

இருந்தாலும், எனக்கென்னவோ அரசியல் சம்பந்தப்பட்ட உங்கள் கருத்துக்களை கட்டுரை நடையிலேயே ( ஒவ்வொரு பதிவையும் ஒரு தலைப்பில் ) தருவதுதான் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்!//

இந்த மாதிரி எழுதணும்கற ஐடியா வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு. சாதாரணமா இந்த மாதிரியான நியூஸ் ஸ்டோரிங்கள பிரபல பத்திரிகைகளின் மின் பதிப்பில்தான் நான் அதிகம் படிப்பது வழக்கம். அந்த கட்டுரைகளுக்கு வரும் பல கருத்துரைகள் எதிரும் புதிருமாக படிப்பதற்கு கட்டுரைகளை விட சுவாரஸ்யமாக இருக்கும். பல சமயங்களில் வாசகர்களுக்குள் ஏற்படும் கடும் மோதல்களால் சம்மந்தப்பட்ட பத்திரிகைகள் அந்த கட்டுரைக்கான கருத்துரை பெட்டியையே கூட மூடி விடுவதை பார்த்திருக்கிறேன். இத்தகைய எதிரும் புதிருமான கருத்துக்களை ஒரே இடத்தில் பதிந்தால் என்ன என்று ஆலோசித்தபோதுதான் கற்பனையாக மூன்று நபர்களுக்குள் நடக்கும் விவாதம் போல் என்னுடைய அரசியல் விமர்சன பதிவுகளை அமைக்கலாம் என்று முடிவு செய்தேன். ஏனெனில் என்னுடைய கருத்துக்களை மட்டும் முன்வைத்தால் அதில் சுவாரஸ்யம் இருக்காது. எதிர்வரும் மக்களவை தேர்தல் வரையில் மட்டுமே இந்த பாணி தொடரும்.


2:21 PM
வே.நடனசபாபதி said...

எனக்கென்னவோ இந்த கருத்துக் கணிப்பின் பேரில் நம்பிக்கை இல்லை. Sample survey மூலம் பெறப்படும் தகவல், மொத்த மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் என்பது சரியல்ல. மேலும் மக்கள் survey எடுக்க வருபவர்களிடம் தங்களின் உண்மையான எண்ணத்தை தெரிவிப்பார்கள் என்பது சந்தேகமே. நிச்சயம் இது தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. //

கரெக்டா சொன்னீங்க. உங்க கருத்தைத்தான் இன்று நாட்டில் பலரும் கூறுகின்றனர். ஆனால் தேர்தல் ஆணையம் இதை தடை செய்ய ஏன் தயங்குகிறது என்பது விளங்கவில்லை. இதற்கு பின்னாலும் ஏதேனும் ஊழல் இருக்குமோ என்கிற ஐயம் ஏற்படுகிறது. ஏனெனில் பல தொலைக்காட்சி சானல்களில் இத்தகைய கருத்துக் கணிப்புகளுக்கும் அதனை தொடர்ந்து நடைபெறும் விவாதங்களும் மிக அதிக அளவிலான விளம்பரங்கள் ஒளிபரப்பப் படுவதைக் காணும்போது இது ஒருவகையான பணம் சம்பாதிக்கும் தொழிலாகத்தான் தெரிகிறது. இத்தகைய ஒளிபரப்புகள் தடைசெய்யப்பட்டால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பு கோடிகளில் இருக்குமே.

தமிழ் நாட்டைப் பொருத்தவரை 2004 இல் நடந்தது போல் ஒரே கூட்டணி எல்லா தொகுதிகளையும் கைப்பற்றும் என்பது நடக்காது..//

ஆனா மேடம் அப்படி நினைக்கல போலருக்கு. அவங்களுக்கு பாஜக, காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைக் கைப்பற்றும் கட்சி தன்னுடைய கட்சியாக இருக்க வேண்டும் என்ற ஆவல் மிக தெளிவாக தெரிகிறது. ஆகவேதான் இடதுசாரிகளைக் கூட கழற்றி விட்டுவிட்டார்.

ஆக்கப் பொறுத்த நாம் ஆறும் வரை காத்திருக்க வேண்டாமா? எனவே காத்திருப்போம் மே 16 வரை! //

வேறு வழியில்லையே. ஆனாலும் சமீபகாலமாக தேர்தல்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் மிக அதிக அளவிலான பொருட்செலவு செய்யப்படுகிறதோ என்று தோன்றுகிறது. தேர்தலை இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு ஒன்பது கட்டங்களாக நடத்தத்தான் வேண்டுமா என்ன? இதனால்தானே தேர்தல் முடிவுகள் தள்ளி வைக்கப்படுகின்றன?

டிபிஆர்.ஜோசப் said...


s suresh said...
எலக்‌ஷன் ரிசல்ட் தள்ளிப்போவது வருத்தமாகத்தான் உள்ளது. எதுவுமே உடனே தெரிஞ்சாத்தான் நல்லா இருக்கும்! இப்ப எலக்‌ஷன் நடக்கிற முறை ரொம்ப நல்லா இருந்தாலும் ரிசல்ட் வர இத்தனை நாள் காக்க வைக்கிறது ரொம்ப கொடுமை!//

சரியா சொன்னீங்க. அதுமட்டுமில்லை. வாக்குப் பெட்டிகளை சுமார் ஒரு மாத காலம் காவல் காத்துக்கொண்டிருக்க மட்டுமே எத்தனை கோடிகள் விரயம் செய்யப்படுகின்றன? இது எல்லாம் பொதுமக்களின் வரிப்பணம்தானே?

5:04 PM
G.M Balasubramaniam said...
இந்த ஸ்டாடிஸ்டிஸ் என்பதே எடுக்கும் சாம்பிள் சைசைப் பொறுத்தும் இடத்டைப் பொறுத்தும் மாறும். இன்று மழை வந்தாலும் வரலாம் என்பது போல்தாந்தமிழ் நாட்டில் ஆமாத்மி இல்லையா. அவர் கருத்தைக் கேட்பது இல்லையா.?//

கரெக்ட். ஆனா அது இயற்கையின் செயல்பாடுகள். அவற்றை கணிப்பதென்பது மனித மூளையல் முடியாத காரியம். ஆனால் இது வேண்டுமென்றே பணத்துக்காகவும் இன்னபிற ஆதாயங்களுக்காகவும் செய்யப்படும் ஏமாற்று வேலையாயிற்றே? ஆகவேதான் இதை தடை செய்ய வேண்டும் என்று பலரும் கோருகின்றனர்.

இங்கு வந்து கருத்துரை வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் அவர்களுடைய வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

Avargal Unmaigal said...

"""*********தி.தமிழ்.இளங்கோ சொல்வதும் சரியென்றே என் மனதிற்கு படுகிறது*********'' உங்களது திண்ணையை படிக்கும் போது தினமலரின் டிக்கடை பெஞ்சுதான் ஞாபகம் வருகிறது

இது எங்களின் கருத்து. நாங்கள் சொல்வதற்காக நீங்கள் மாற்ற வேண்டாம்.. உங்கள் மனதில் என்ன எப்படி தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதி வாருங்கள் யாருக்காவும் மாற்ற வேண்டாம். இதை நான் எத்ற்கு சொல்கிறேன் என்றால் நான் யாருக்காவும் எனது நடையை அல்லது சொல்லும் முறையை சொல்லும் தகவல்களை மாற்ற மாட்டேன். விருப்பம் உள்ளவர்கள் வரலாம் இல்லயென்றால் வராமலும் இருக்கலாம் அதற்காக கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை

Avargal Unmaigal said...

பதிவின் நீளத்தை குறைத்து சுவைபட தகவல்களை தருவதற்கு நன்றி

டிபிஆர்.ஜோசப் said...

*தி.தமிழ்.இளங்கோ சொல்வதும் சரியென்றே என் மனதிற்கு படுகிறது*********'' உங்களது திண்ணையை படிக்கும் போது தினமலரின் டிக்கடை பெஞ்சுதான் ஞாபகம் வருகிறது//

உண்மைதான். ஆனாலும் அரசியல் விமர்சனங்கள் ஒரு விவாதமாக அமைவதில்தான் சுவாரஸ்யமே. இந்த மூவரின் கருத்துக்களில் இருந்து மாறுபட்ட சூடான விவாதங்கள் கருத்துரைகளில் எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை.

உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

8 AM Delete
Blogger Avargal Unmaigal said...
பதிவின் நீளத்தை குறைத்து சுவைபட தகவல்களை தருவதற்கு நன்றி//

எனக்கும் எழுதுவதற்கு எளிதாக உள்ளது. உங்கள் சஜ்ஜஷனுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

பதிவின் நீளம் குறைத்தது நன்று.....

பொதுவாகவே இந்த கருத்துக் கணிப்புகளை நான் நம்புவதில்லை. சில ஆயிரம் மக்களை சந்தித்து அவர்களின் வாக்குகளை வைத்து பல கோடி மக்களின் மனதினை அறிந்து விட முடியும் எனத் தோன்றவில்லை....

டிபிஆர்.ஜோசப் said...

வெங்கட் நாகராஜ் said...
பதிவின் நீளம் குறைத்தது நன்று.....

பொதுவாகவே இந்த கருத்துக் கணிப்புகளை நான் நம்புவதில்லை. சில ஆயிரம் மக்களை சந்தித்து அவர்களின் வாக்குகளை வைத்து பல கோடி மக்களின் மனதினை அறிந்து விட முடியும் எனத் தோன்றவில்லை....//

சரியாக சொன்னீர்கள். இவற்றை தடைசெய்ய வேண்டுமென்று சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தும் இன்றுவரை அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்துவிட்டு இப்போது மீண்டும் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் முறையிடுகிறது. கேட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையே திருத்தம் செய்ய வேண்டும் அது அத்தனை எளிதல்ல என்கிறார்கள். பார்லிமென்ட் நடப்பதையே உறுதிசெய்ய முடியாதவர்களால் இதை எப்படி செய்ய முடியும்?