26 மார்ச் 2014

மக்களவை தேர்தலில் மாநிலக் கட்சிகளை புறக்கணிப்போம்!

நம்முடைய நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சமேயில்லை.  சமீபத்திய ஆய்வின் படி கட்சிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது என்கிறார்கள்.

ஆனால் இவற்றில் நூற்றுக்கும் குறைவான கட்சிகளுக்கு மட்டுமே மாநிலங்களிலுள்ள சட்டமன்றம் மற்றும் மத்தியிலுள்ள மக்களவை/மாநிலங்களவைகளில் அங்கத்தினர்கள் உள்ளனராம். அதாவது எத்தனை முறை முயன்றாலும் இந்த மக்கள் மன்றங்களுக்கு ஒரு அங்கத்தினரைக் கூட அனுப்ப முடியாத கட்சிகள்தான் இன்று நாடு முழுவதும் பரவிக் கிடக்கின்றன. 

சமீபத்தில் காலாவதியான மக்களவையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் எண்ணிக்கை முப்பதியெட்டு!

அதில் தேசீய கட்சிகள் எனப்படும் காங்கிரஸ் , பிஜேபி மற்றும் இடதுசாரி கட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மீதமுள்ள அனைத்துமே பிராந்திய கட்சிகள் (Regional Parties) எனப்படும் மாநிலக் கட்சிகள்தான். 

கட்சிகள் எவ்வாறு தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் என கணிக்கப்படுகின்றன?

ஒரு கட்சி தேசிய கட்சி என கருதப்படுவதற்கு அதற்கு:

1. மக்களவையிலுள்ள மொத்த அங்கத்தினர்களுள் குறைந்தது இரண்டு விழுக்காடு (2%) அங்கத்தினர்கள் இருக்க வேண்டும். அதாவது மக்களவையின் தற்போதைய 543 அங்கத்தினர்களுள் குறைந்தது பதினோரு உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த அங்கத்தினர்கள் குறைந்தது மூன்று மாநிலங்களில் இருந்தாவது தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அல்லது

2. மக்களவைக்கோ அல்லது ஒரு மாநில சட்டமன்றத்திற்கோ நடத்தப்படும் பொதுத் தேர்தலில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் பதிவாகும் மொத்த வாக்குகளில்  குறைந்தது ஆறு விழுக்காடு (6%) வாக்குகள் அல்லது குறைந்த பட்சம் நான்கு இடங்களிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

ஒரு கட்சி மாநிலக் கட்சி என கருதப்படுவதற்கு அது 

1. சம்மந்தப்பட்ட மாநில சட்டமன்றத்திற்கு நடத்தப்படும் தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்த பட்சம் மூன்று விழுக்காடு (3%) வாக்குகள் பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு சட்டமன்ற இடங்களிலாவது வெற்றிபெற்றிருக்க வேண்டும். 

இந்த அடிப்படையில் நாட்டில் தற்சமயம் ஆறு (காங்கிரஸ், பாஜக, சிபிஐ, சிபிஐ (மா), BSP, NCP) தேசிய கட்சிகள் மற்றும் நாற்பது மாநிலக் கட்சிகள் உள்ளன! இவற்றுள் முப்பத்தியெட்டு கட்சிகளுக்கு மட்டுமே தற்போதைய மக்களவையில் அங்கத்தினர்கள் உள்ளனர்.

இவையல்லாமல் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சுமார் 1200!!

ஆனால், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட கட்சிகள் மாநிலக் கட்சிகள் என பட்டியலிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. பெரும்பாலான கட்சிகளின் பெயர்களைப் பார்த்தாலே அவை ஒரு குறிப்பிட்ட சாதி, மதம், மாநிலம் அல்லது மாநிலத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட மாவட்டம் அல்லது அவற்றின் ஒரு பகுதியில் வசிப்பவர்களுக்காகவே துவங்கப்பட்ட கட்சி என்பது புரிகிறது.

மாநிலக் கட்சிகள் என தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுள் மக்களவையில் கணிசமான உறுப்பினர்களைக் கொண்ட (பத்து அல்லது அதற்கு அதிகமான) கட்சிகள் பத்து மட்டுமே! இந்த பட்டியலில் நம்முடைய மாநிலத்தைச் சார்ந்த இரு பெரிய திராவிடக் கட்சிகளுள் திமுக மட்டுமே வருகிறது. அகில இந்திய கட்சி என்று பறைசாற்றிக்கொள்ளும் அஇதிமுகவுக்கு ஒன்பது இடங்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. (வரும் தேர்தலில் இந்த நிலை மாறலாம் என்பது வேறு விஷயம். ஏனெனில் இந்த இரு கட்சிகளுமே பல வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஒவ்வொரு தொகுதியிலும் பல்முனைப் போட்டியை சந்திக்கவுள்ளன.) 

தேசீய கட்சிகள் என கருதப்படும் ஆறு கட்சிகளுள் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட அங்கத்தினர்கள் உள்ளனர் என்பதும் உண்மை. மற்ற நான்கு கட்சிகளுக்கும் தலா இருபத்தைந்து அங்கத்தினர்கள் கூட இல்லை!! ஆகவே இவை நான்கும் உண்மையில் தேசிய கட்சிகள் என்று அழைக்கப்பட தகுதியற்றவை என்றும் கூறலாம்.

இன்று மக்களவையில் ஐந்துக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட மாநிலக் கட்சிகள் மட்டும் இருபது உள்ளன. அதாவது மக்களவையில் உறுப்பினர்களைக் கொண்ட மொத்த கட்சிகளுள் சரிபாதி! ஒரேயொரு உறுப்பினரைக் கொண்ட கட்சிகள் பன்னிரெண்டு! 

பலவகைப்பட்ட இனம், மதம், மொழி மற்றம் கலாச்சாரங்களை உள்ளடக்கிய இந்தியா போன்றதொரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த மக்களுக்காகவோ கட்சிகள் துவக்கப்படுவது சகஜம்தான். அதில் தவறேதும் இல்லை. ஆனால் ஒரே இனத்திலுள்ள வெவ்வேறு சாதியைச் சார்ந்த மக்களுக்காக என்று புதிது புதிதாக கட்சிகள் துவங்கப்படும்போதுதான் ஒரு குறிப்பிட்ட மாநில மக்களிடையேயும் கூட பிரிவினைகள் ஏற்பட்டுவிடுகிறது. இத்தகைய கட்சிகள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் காணப்படுகின்றன. 

21 மார்ச் 2014

இது மெகா கூட்டணியா இல்ல மொக்கை கூட்டணியா!

ரஹீம்பாய், ஜோசப் மற்றும் கணேஷ் ரஹீம்பாய் வீட்டுத் திண்ணையில் அமர்ந்துள்ளனர்.

ரஹீம்: (கேலியுடன்) என்ன கணேஷ் ஒரு வழியா தட்டுமுட்டி கூட்டணிய ஒப்பேத்திட்டீங்க போலருக்கு!

கணேஷ்: (எரிச்சலுடன்) என்னது தட்டு முட்டி ஒப்பேத்திட்டமா? என்ன நக்கலா? இது பண்ட பாத்திரமா தட்டுறதுக்கும் முட்டுறதுக்கும். தேர்தல் கூட்டணி. கூட்டணின்னா அதுல கருத்து வேற்றுமை எல்லாம் இருக்கத்தான் செய்யும். 

ஜோசப்: (சிரிக்கிறார்) கருத்து வேற்றுமை இருக்கத்தான் செய்யும், ஒத்துக்கறேன். ஆனா எதிலுமே ஒற்றுமை இல்லாத அதாவது கூட்டே இல்லாத அணி மாதிரி இல்ல தெரியுது?

கணேஷ்: எப்படி சொல்றீங்க?

ஜோசப்: அதான் நேத்து ராஜ்நாத் தலைமையில நடந்த கூட்டத்த அப்படியே லைவா காமிச்சாங்களே அத ஒரு நிமிஷம் பாத்தாலே தெரிஞ்சிருமே எந்த அளவுக்கு உங்களுக்குள்ள கூட்டு இருக்குன்னு?

கணேஷ்: இப்பவும் புரியல. அதுல அப்படியென்ன பாத்தீங்க?

ஜோசப்: என்னங்க ஒன்னுமே தெரியாத மாதிரி பாவலா பண்றீங்க? ராஜ்நாத்தோட ரைட் சைடுல கேப்டன், அவருக்கு பக்கத்துல வைகோ. ரெண்டு பேரும் கூட்டம் முடியற வரைக்கும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கவே இல்ல. வைகோ வேணும்னே கேப்டன் மேல இடிக்கிறா மாதிரி சாஞ்சிக்கிட்டு ராஜ்நாத்கிட்ட சிரிச்சி, சிரிச்சி பேசறார்.  கேப்டன் முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்கிது. கொஞ்ச நேரத்துல அன்புமணி வர்றார். அவரும் இவங்க ரெண்டு பேரையும் கண்டுக்கல. இவங்களும் அவர் வர்றத பாத்தும் பாக்காத மாதிரி ஒக்காந்துருக்காங்க. முகம் குடுத்து பேசிக்கக் கூட முடியாதவங்கள்லாம் சேர்ந்து ஒரு கூட்டணி அமைச்சிருக்கோம்னு சொன்னா ஜனங்க நம்புவாங்களாங்க?

ரஹீம்: நா கடையில இருந்ததால டிவி பாக்க முடியாம போயிருச்சி. ஆனா ராத்திரி நியூஸ்ல காட்டுனப்போ நானும் கவனிச்சேன். நீங்க சொன்னா மாதிரிதான் ஒவ்வொருத்தரும் ஒக்காந்திருந்தாங்க. 

கணேஷ்: (சலிப்புடன்) ஒங்க ரெண்டு பேருக்கும் என்னெ போட்டு நோண்டாம இருக்க முடியாதுங்க. அதனாலயே இன்னைக்கி வர்றதா வேணாமான்னு நினைச்சிக்கிட்டே வந்தேன். இதுக்கு வராமயே இருந்துருக்கலாம் போலருக்கு.

ஜோசப்: (சிரிக்கிறார்) ஒரேயடியா சலிச்சிக்காதீங்க. நாம இன்னைக்கி நேத்தா பழகிக்கிட்டிருக்கோம். இல்ல இதுக்கு முன்னால சண்டையே போட்டதில்லையா? சரி அத விடுங்க. இந்த அத்வானி விஷயத்துல எதுக்குங்க கட்சி இப்படி நடந்துக்குது?

கணேஷ்: போச்சிறா. இன்னைக்கி முழுசும் எங்க கட்சிய பத்தியேதான் பேசப் போறீங்களா? ஏன் காங்கிரஸ்லயும் சீட் அலாட் பண்றதுல சண்டை போட்டுக்கறாங்க. கலமாடி சீட் இல்லைன்னதும் தனியா போட்டி போடப் போறேங்கறார்.  RJDயில ஒருத்தன் லல்லு என் சீட்ட எடுத்து தன் பொண்ணுக்கு குடுத்துட்டாங்கன்னு கட்சிய விட்டே வெளிய போயிடறார். அதப் பத்தி எல்லாம் பேச மாட்டிங்களே?

ரஹீம்: பேசாம என்ன? உங்கள மாதிரி எங்க ரெண்டு பேருக்கும் எந்த கட்சியும் இல்லேங்க. அதனால எந்த கட்சியில என்ன கூத்து நடந்தாலும் விமர்சிப்போம். ஆனா உங்க விஷயம் அப்படி இல்லீங்களே. தமிழ்நாட்டுல நாலஞ்சி ஒப்பேறாத கட்சிங்களோட கூட்டு வச்சிக்கிட்டு மெகா கூட்டணின்னு சொல்லிக்கிறீங்களே காமடியா இல்ல?

கணேஷ்: பாய், இன்னும் ஒரே மாசம்தான் அப்புறம் தெரியும் இது மெகா கூட்டணியா இல்லையான்னு! 

ஜோசப்: (சிரிக்கிறார்) ஆனா இதுவரைக்கும் வெளியான எந்த கருத்து கணிப்புலயும் உங்க கூட்டணியில இருக்கற கட்சிங்களுக்கு சீட் கிடைக்கும்னு சொன்னா மாதிரி தெரியலையே.

கணேஷ்: அட நீங்க வேற ஜோசப். கூட்டணியே இப்பத்தான ஃபைனலஸ் பண்ணி அனவுன்ஸ் பண்ணியிருக்காங்க. இதுக்கப்புறம் வர கணிப்புல பாருங்க. நாப்பதுல பாதியாவது புடிக்கிறமா இல்லையான்னு பாருங்க.

ரஹீம்: (கேலியுடன்) நினைப்புத்தான் பொழப்ப கெடுக்கும்னு சொல்வாங்க. அதுமாதிரிதான் இருக்கு உங்க நினைப்பும். மிஞ்சிப் போனா வைகோ வழியா ஒரு சீட் கிடைக்கலாம். அன்புமணி கேஸ்ல சொல்ல முடியாது. இந்த ரெண்ட விட்டா வேற எங்கயும் கிடைக்க சான்ஸே இல்லை. என்ன ஜோசப்?

ஜோசப்: கரெக்ட். கேப்டனுக்கு இருக்கற வோட் ஷேர் இந்த கூட்டணிக்கி ஹெல்ப் பண்ணும்னு நினைச்சித்தான் இந்த கூட்டணியே அமைஞ்சிருக்கு. ஆனா இதுவரைக்கும் இல்லாம இந்த தடவ ஏறக்குறைய எல்லா இடத்துலயுமே நாலு இல்லன்னா அஞ்சி வேட்பாளர்ங்க இருக்கறதால திமுக, அதிமுக கட்சிய ஓட்டுங்கள தவிர மத்ததெல்லாம் அங்கயும் இங்கயுமா சிதறிடும்னு நினைக்கேன். பல தொகுதிகள்ல கணிசமான ஓட்டுங்க இந்த கூட்டணிக்கி கிடைச்சாலும் அது ஜெயிக்கற அளவுக்கு இருக்குமாங்கறதுதான் சந்தேகம். 

கணேஷ்: பாத்துக்கிட்டே இருங்க. நா சொல்றா மாதிரி நடக்குதா இல்லையான்னு.

ரஹீம்: பாக்கத்தான போறோம்!

ஜோசப்: கரெக்ட். வேற என்ன?

ரஹீம்: ஒருவழியா சிதமபரமும் ஜெயந்தி நடராஜனும் போட்டியிடறதுலருந்து தப்பிச்சிட்டாங்க போலருக்கு?

கணேஷ்: (கேலியுடன்) தோக்கப்போறோம்னு தெரிஞ்சும் தேர்தல்ல நிக்கிறதுக்கு ஒரு அசாத்திய துணிச்சல் வேணுங்க. 

ரஹீம்: (குறுக்கிட்டு) அதாவது உங்க ஆளுங்களுக்கு இருக்கறா மாதிரி!

கணேஷ்: பாய், பேச்ச மாத்தாதீங்க. நாலஞ்சி டேர்ம் ஜெயிச்சி மினிஸ்ட்ரியிலருந்து நல்லா சம்பாதிச்சிட்டு இப்போ தோக்கப்போறது உறுதின்னு தெரியறப்போ கை காச செலவழிக்கணுமாங்கற எண்ணம்தான இவங்களுக்கு?

ஜோசப்: நீங்க சொல்றதும் சரிதான். ஆனா ஆரம்பத்துல அதெல்லாம் முடியாதுன்னு ராகுல் ஸ்ட்ரிக்டா சொன்னதா பேப்பர்லல்லாம் வந்துதே? திடீர்னு என்னாச்சி?

கணேஷ்: அதெல்லாம் சும்மாங்க. ராகுல் சொல்றதையெல்லாம் இவங்க ரெண்டு பேரும் சட்டை பண்ணுவாங்களா என்ன? அவரோட வயசு அளவுக்கு இவங்களுக்கு அரசியல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு! அவர் சொல்றதுக்கெல்லாம் பயந்துடற ஆளுங்களா இவங்க?

ஜோசப்: இதுவும் சரிதான். இருந்தாலும் கேக்கறதுக்கு என்னவோ மாதிரி இருக்கு. தேர்தலுக்கு முன்னாலயே தோல்விய ஒத்துக்கிட்டா மாதிரி இல்ல இருக்கு? சுதர்சன நாச்சியப்பனும் நிக்கல போலருக்கு?

ரஹீம்: அவருக்கு கட்சியே கூட சீட் குடுக்க முடியாதுன்னுட்டாங்களோ என்னவோ?

கணேஷ்: இருக்கும். அவர்தான இலங்கை விஷயத்துலயும் ராஜீவ்காந்தி கொலையாளிங்களுக்கு தூக்கு தண்டனை ரத்தானப்பவும் தேவையில்லாத ஸ்டேட்மென்ட்லாம் விட்டு குழப்பம் செஞ்சவரு. இதுக்குப் பின்னால சிதம்பரம் இருக்கறதுக்கும் சான்ஸ் இருக்கு. ஏன்னா இன்னைக்கி திமுகவும் காங்கிரசும் கூட்டு இல்லாம போனதுக்கு முக்கிய காரணமே இலங்கை தமிழாளுங்க விஷயத்துல காங்கிரஸ் நடந்துக்கிட்ட விதம்னுதான் நா நினைக்கிறேன்/.

ஜோசப்: கரெக்ட். காங்கிரஸ் இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமா இத ஹேன்டில பண்ணியிருக்கலாம். 

கணேஷ்: (கேலியுடன்) அதுதான் காங்கிரஸ்காரங்களுக்கு இருக்காதே?

ரஹீம்: எதச் சொல்றீங்க?

கணேஷ்: அதாங்க புத்திசாலித்தனம்!

ரஹீம்: ஆனா உங்கள மாதிரி குறுக்குப் புத்தியும் கிடையாதே.

கணேஷ்: (கோபத்துடன்) குறுக்குப் புத்தியா, அப்படீன்னா?

ஜோசப்: அமைதி, அமைதி. கோபப்படாதீங்க கணேஷ். பாய் என்ன சொல்ல வறார்னு கேப்போம். 

ரஹீம்: இலங்கை விஷயத்துல காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் பாலிசி அளவுல பெருசா வித்தியாசம் இருக்க சான்ஸே இல்லீங்க. ராஜீவ்காந்தி கேஸ் விஷயத்துல இங்க இருக்கற பிஜேபி ஆளுங்கதான் எதிர்ப்பு தெரிவிச்சா மாதிரி பாவ்லா பண்ணாங்க. நார்த்லருக்கற ஒரு பிஜேபி லீடர்கூட இதப்பத்தி பார்லிமென்ட்லயோ இல்ல வெளியிலயோ எதையும் பேசவே இல்ல. மீனவர்ங்க விஷயத்துலயும் வைகோவும் மருத்துவரும் நினைக்கறா மாதிரியெல்லாம் பிஜேபிகாரங்க ஆக்‌ஷன் எடுக்கப் போறதில்லை. இருந்தாலும் அதையெல்லாம் வெளிய காட்டிக்காம இந்த கட்சிங்க கூட எல்லாம் கூட்டு வச்சிக்கறத குறுக்கு புத்தின்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றது?

கணேஷ்: அப்படி பாத்தா முகவும் கூடத்தான் தமிழ் மீனவர்ங்க பேராசை புடிச்சி பார்டர தாண்டி போயி மீன் புடிக்கறதாலதான் அவங்க அரெஸ்டாவறாங்கன்னு சொல்லியிருக்கார். மேடம்? சிலோன்ல கொத்து கொத்தா தமிழாளுங்கள கொன்னு குவிச்சிக்கிட்டிருந்தப்போ போர்னு வந்தா சிவிலியன்க சாவறது சகஜம்தானேன்னு சொல்லியிருக்காங்க? அதுமட்டுமா பிரபாகரன இங்க கொண்டு வந்து பனிஷ் பண்ணணும்னு இவங்க சொல்லல? தேர்தல்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம் பாய். 

ரஹீம்: எவ்வளவு அசால்டா சொல்றார் பாருங்க ஜோசப். இதத்தான் குறுக்குப் புத்தின்னு சொன்னேன். அதுக்கும் மட்டும் கோவம் பொத்துக்கிட்டு வருது?

ஜோசப்: சரி விடுங்க பாய். அவர்தான் சொல்லிட்டாரே தேர்தல்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்னு. இதுக்கு மேல என்னத்த பேசறது? ஆனா இந்த விஷயத்துல இவர் சொல்றா மாதிரிதான திமுகவும் அதிமுகவும் நடந்துக்கிட்டாங்க. ஆனா ஜனங்க இதையெல்லாம் எப்பவோ மறந்துருப்பாங்க. அவங்களுக்கு வேண்டியதல்லாம் இலவசம். யார் என்ன குடுப்பாங்கன்னுதான் அவங்க எண்ணமெல்லாம். சட்டசபை எலக்‌ஷன்ல பொருளா கிடைச்சது இந்த எலக்‌ஷன்ல பணமா கிடைச்சா வாங்கிக்கிட்டு ஓட்டு போட்டுட்டு போய்கிட்டே இருக்கப் போறாங்க. எலக்‌ஷன்ல டைம்ல சொல்றதையெல்லாம் ஜனங்க கேக்கறாங்களா என்ன? கூட்டத்துக்கு வந்தா இவ்வளவு பணம், சாப்பாடுன்னு சொன்னா வந்து ஒக்காந்து காமரா அவங்க சைட்ல வர்றப்போ கைய ஆட்டிட்டு போயிருவாங்க. 

ரஹீம்: கரெக்டா சொன்னீங்க ஜோசப். எனக்கும் கூட தோனும், எப்படி மண்டைக்காயற வெயில்ல இந்தாளுங்க வந்து காத்துக்கிட்டிருக்காங்கன்னு. ஒருவேளை அதே ஆளுங்க எல்லா கூட்டத்துக்கும் போவாங்களோ?

ஜோசப்: இருக்கும். யார் கண்டா? ஒரு கூட்டத்துக்கு ஐந்நூறுன்னா ஒரே வாரத்துல நாலு கூட்டம் நடந்தா ஒரு ஆளுக்கு ரெண்டாயிரம் சேந்துருமே? ஒரு குடும்பத்துல அஞ்சி பேர்னு வச்சா கணக்கு பாத்துக்குங்க பாய்.

ரஹீம்: தலைய சுத்துதுங்க. நாங்க ஒரு நாளெல்லாம் கடையில ஒக்காந்தாலும் இந்த அளவுக்கு காச பாக்க முடியுமா என்ன? போறாததுக்கு எலக்‌ஷன் டைம்ல வியாபாரத்துக்குக் கொண்டுக்கிட்டு போற பணத்தையும் வழியிலயே மடக்கி புடுங்கிடறாங்க. போன ரெண்டு வாரமா கடையில வியாபாரமே இல்லீங்க. பணத்த எடுத்துக்கிட்டு போனாதான கொள்முதல் பண்ண முடியுது? க்ரெடிட்ல எவன் குடுக்கான்?

கணேஷ்: உங்கள யாருங்க சரியான ஆதாரம் இல்லாம பணத்த கொண்டு போகச் சொல்றது?

ரஹீம்: யோவ் கடுப்படிக்காத. ஆதாரம்னா? அப்படி எதையாச்சும் இவங்க சொல்லியிருக்காங்களா?

கணேஷ்: (கேலியுடன்) ஆமா சொன்னா மட்டும் கொண்டு போயிருவீங்களாக்கும்! எல்லாமே கணக்குல வராத ப்ளாக் மணிதான? இந்த மாதிரி செக்கிங் தேர்தல் டைம்ல மட்டும் பண்ணாம வருசம் முழுசும் பண்ணணுங்க. அப்பத்தான் உங்கள மாதிரி ஆளுங்கக்கிட்ட புழங்கற ப்ளாக் மணியெல்லாம் வெளியில வரும்.

ரஹீம்: (கோபத்துடன்) ஏங்க தெரியாமத்தான் கேக்கறேன். உங்க கட்சிக்காரங்க செலவழிக்கற பணமெல்லாம் ஒயிட் மணின்னு நினைப்பா? 

கணேஷ்: பின்னே? இல்லாட்டி எப்படிங்க தேர்தல் கமிஷனுக்கு கணக்கு காமிக்க முடியும்?

ஜோசப்: (சிரிக்கிறார்) எது? ஒவ்வொரு ஓட்டுக்கு ஐநூறு, ஆயிரம்னு குடுக்கறீங்களே அந்த கணக்கா? 

ரஹீம்: அப்படி கேளுங்க ஜோசப். கோடி, கோடியா கருப்புப் பணத்த வச்சிக்கிட்டு அக்கிரமம் பண்றது கட்சிக்காரங்க. மாட்டிக்கறது எங்கள மாதிரியான சில்லறை வியாபாரிங்க. தெரியாமத்தான் கேக்கறேன், இதுவரைக்கும் எந்த கட்சிக்காரன் கிட்ட இருந்தாவது பணத்த புடிச்சிருக்காங்களாய்யா?

ஜோசப்: அப்படி சொல்ல முடியாது பாய். அவங்க மாட்டிக்கிட்டா பணமும் போகும் மானமும் போகுமே, அதான் ஒங்கள மாதிரி வியாபாரிங்க வழியா குடுத்தனுப்புறாங்களோ என்னவோ? இல்லன்னா சின்ன வியாபாரிங்க எப்படிங்க லட்சக் கணக்குல அதுலயும் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் வழியால்லாம் கொண்டு போறாங்க?

ரஹீம்: என்ன ஜோசப் நீங்களும் இப்படி சொல்லிட்டீங்க? அப்படியெல்லாம் எங்கள மாதிரி ஆளுங்க செய்ய மாட்டாங்க. வழியில மாட்டிக்கிட்டா அத்தோட போயிருதா? நாளைக்கி கோர்ட், கேசுன்னு யார் அலையறது? 

ஜோசப்: அப்படின்னா நீங்க கொண்டு போற தொகைக்கு எதுக்காக உங்களால டாக்குமென்ட் எதையும் காட்ட முடியல? அதுவும் இந்த டைம்ல பணத்த கொண்டு போனா புடிச்சிக்குவாங்கன்னும் தெரியறப்போ சரியான டாக்குமென்ட் இல்லாம எதுக்கு கொண்டு போகணும்? அதுவும் லட்சக் கணக்குல!

ரஹீம் பதிலளிக்க முடியாமல் அமர்ந்திருக்க கணேஷ்: பாத்தீங்களா பதில் சொல்ல முடியாம ஒக்காந்துருக்கறத!

ரஹீம் கோபத்துடன் எழுந்து வாசலைக் கடந்து வீட்டுக்குள் திரும்ப ஜோசப்பும் கணேஷும் திடுக்கிட்டு ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர்.

ஜோசப்: நேத்து நீங்க கோபத்தோட நடுவுலயே எழுந்துப் போய்ட்டீங்க. இன்னைக்கி பாய். நாளைக்கி நானா?

கணேஷ்: (சிரிக்கிறார்) ஒங்களுக்குத்தான் எந்த கட்சியையும் சேராத ஆளாச்சே ஒங்களுக்கு எதுக்குங்க கோவம் வரப்போவுது?

ஜோசப்: அதுவும் சரிதான். சரி. இனி பாய் திரும்பி வரப்போறதில்லை. நாமளும் கெளம்புவோம். என்ன சொல்றீங்க?

கணேஷ்: அப்புறம் மறுபடியும் என்னைக்கி பாக்கலாம்?

ஜோசப்: அதான் ஒரு வழியா எல்லா கூட்டணி கலாட்டாவும் முடிஞ்சிருச்சே.... எலக்‌ஷன் முடியட்டும். அதுக்கப்புறந்தான இருக்கு உண்மையான தமாஷ். அப்போ பேசிக்கலாம்.

கணேஷ் சிரித்தவாறே சாலையில் இறங்கி நடக்க ஜோசப்பும் திண்ணையிலிருந்து இறங்கி ரஹீம் பாயின் வீட்டுக் கதவை ஒருமுறை தட்டிவிட்டு: 'பாய் அப்புறம் பாக்கலாம். போன் பண்ணிட்டு வரேன்.' என்று கூறிவிட்டு சாலையில் இறங்கி கணேஷுடன் சேர்ந்துக்கொள்கிறார்.

*********

18 மார்ச் 2014

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோழைத்தனம்!

தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து அன்றைய தினத்தாளில் மூழ்கியிருந்த ரஹீம்பாய் ஓசைப் படாமல் வந்து அமர்ந்த கணேஷை கவனியாமல் பத்திரிகையைல் இருப்பதை உரக்க வாசிக்கிறார்: 'காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் தேர்தலில் போட்டியிட தயங்குகின்றனர்.'

கணேஷ்: அது தெரிஞ்சதுதானய்யா. தோக்கப்போறோம்னு தெரிஞ்சும் நிக்கிறதுக்கு தைரியம் வேணுமே?

திடுக்கிட்டு நிமிரும் ரஹீம்பாய் கணேஷை பார்த்து முறைக்கிறார்: யோவ், அத நீ சொல்லக் கூடாது. 

அந்த நேரத்தில் வந்து சேரும் ஜோசப்: என்ன காலையிலயே பனிப்போர் ஆரம்பிச்சிருச்சா? இன்னைக்கி என்ன சப்ஜெக்ட்?

கணேஷ்: (சிரிக்கிறார்) வாங்க ஜோசப். நீங்களே சொல்லுங்க. காங்கிரஸ் சீனியர் லீடர்ஸ் நிறைய பேர் இந்த தடவை எலக்‌ஷன்ல நிக்க மாட்டேன்னு சொல்றாங்கன்னு பாய்தான் ஆரம்பிச்சார். பின்ன இருக்காதான்னு நா கேட்டேன்.

ரஹீம்: யோவ், அது நா சொன்னது இல்ல. பேப்பர்ல போட்ருக்கான்.

கணேஷ்: ஏதோ ஒன்னு. நாமதான் போன வாரமே இதப்பத்தி பேசினமே?

ஜோசப்: ஆமா ப. சிதம்பரமும், ஜெயந்தி நடராஜனும் நிக்கப் போறதில்லேன்னு படிச்சதா ஞாபகம். இப்ப வேற யாரு?

கணேஷ்: அதாங்க பன்சாலுக்கும் கல்மாடிக்கும் சீட்டு குடுக்கக் கூடாதுன்னு போன வாரம் கூட பப்ளிக்கா பேசினாரே மனீஷ் திவாரி!

ஜோசப்: (சிரிக்கிறார்) ஆமா. அவரும் நா நிக்கிலேன்னு சொல்றாரா என்ன? ஒருவேளை உமக்கு சீட் கிடையாதுன்னு சொல்லிட்டாங்களோ என்னவோ?

ரஹீம்: சேச்சே அப்படி இருக்காது. அவருக்கு உண்மையிலேயே ஹார்ட்ல ஏதோ ப்ராப்ளம் போலருக்கு. ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் ஆய்ட்டாராமே?

கணேஷ்: (சிரிக்கிறார்) பாய் நீங்க ஒரு குழந்தை மாதிரி ஆளுங்க. அதெல்லாம் சும்மா. முந்தியெல்லாம் அரஸ்ட் பண்ண வராங்கன்னா உடம்பு சரியில்லேன்னு ICUல அட்மிட் ஆயிருவாங்க. இப்ப என்னடான்னா சிட்டிங் காங்கிராஸ் எம்பிங்கல்லாம் எங்க எலக்‌ஷன்ல நிக்க வச்சிருவாங்களோன்னு ஆளாளுக்கு ஆஸ்பிட்டல் தேடிக்கிட்டு ஓடறாங்க போலருக்கு! சரியானை கோழைங்க, தோல்விய சந்திக்க தைரியம் இல்லாதவங்கன்னு சொல்றத தவிர வேற என்னத்த சொல்றது!!

ஜோசப்: இவ்வளவு பேசறீங்களே உங்க கூட்டணி கட்சிதான தேதிமுக? அந்த கட்சி கேன்டிடேட் ஒருத்தரும் நேத்து திடீர்னு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆய்ட்டு நா நிக்கலென்னுட்டாராமே?

ரஹீம்: அப்படி போடுங்க ஜோசப். இதுக்கு என்னய்யா சொல்லப் போறீரு? அவருக்கும் தேர்தல் தோல்வி பயம் வந்துருச்சி போலருக்கு?

கணேஷ்: அது கூட்டணி கட்சிதான, பிஜேபி இல்லையே? அவருக்கு உண்மையிலயே உடம்பு சரியில்லையோ என்னமோ?

ரஹீம்: அடப் பார்யா! உங்க கட்சி ஆளுங்கன்னா உண்மையிலயே ஒடம்பு சரியில்லேம்பீங்க. அடுத்த கட்சி ஆளுங்கன்னா டூப் அடிக்கிறாங்கம்பீங்க. நல்ல நியாயம்யா!

ஜோசப்: அவங்க பயப்படறதிலேயும் நியாயம் இருக்கு பாய். ஒரு எலக்‌ஷன்ல நிக்கிறதுன்னா சும்மாவா? அதுவும் எம்.பி எலக்‌ஷன்னா குறைஞ்ச பட்சம் ஒரு கோடி செலவாகுமாமே? தோக்கப்போறோம்னு க்ளியரா தெரியறப்போ யாருக்குத்தான் செலவு செய்ய மனசு வரும்?

கணேஷ்: அதுக்காக? இத்தன வருசம் ஜெயிச்சீங்களே? ஜெயிச்ச இடத்துலதானங்க பணத்த விடணும்? சினிமாவுல ஜெயிச்ச பணத்த சினிமாவுலதான் விடணுங்கறா மாதிரி...

ரஹீம்: அதுவும் சரிதான். ஜெயிக்கணும்னு உறுதியா தெரிஞ்சாத்தான் நா தேர்தல்ல நிப்பேன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சா..... அதுவும் ஏறக்குறைய அம்பது வருசத்துக்கும் மேல சென்ட்ரல்ல ரூல் பண்ண காங்கிரஸ் கட்சிய சேந்தவங்க இப்போ ஜகா வாங்கறது நல்லாவா இருக்கு? அதுவும் சிதம்பரம் மாதிரி ஆளுங்க செலவ பத்தி கவலப்பட்டா அத யாராலங்க நம்ப முடியும்?

ஜோசப்: அவர் கேஸ்ல பணம் ஒரு விஷயமே இல்லேங்க. போன எலக்‌ஷன்லயே முன்னூறு ஒட்டு வித்தியாசத்துலதான் ஜெயிச்சார்னு அவர் மேல போட்ட கேஸே இன்னும் முடியலையே?

கணேஷ்: (கோபத்துடன் குறுக்கிடுகிறார்) என்னது ஜெயிச்சாரா? நீங்க வேற ஜோசப். அவர் எங்க ஜெயிச்சார்? பணத்த குடுத்து அப்படி சொல்ல வச்சிருப்பார்!

ஜோசப்: ஏங்க, என்னமோ நேர்ல பாத்தா மாதிரி சொல்றீங்க? எத்தன பேருக்குங்க பணம் குடுக்க முடியும்? ஓட்டு எண்ணிக்கையே பப்ளிக்கா நடக்குது! இது போறாதுன்னு லைவா வீடியோ வேற எடுக்கறாங்க. சந்தேகம் வந்தா மறுபடியும், மறுபடியும் எண்ண சொல்லி வேற எதிர்த்து நிக்கிற கட்சி கேக்குது. இது எல்லாத்தையும் மீறி தோத்த ஆள ஜெயிச்சிட்டாருன்னு எப்படிங்க டிக்ளேர் பண்ண முடியும்? லீட் ரொம்ப கம்மியாருந்ததாலதான் எல்லா சந்தேகமும் வருது. 

ரஹீம்: இருக்கட்டுமே. அதுக்கும் இப்ப நிக்க மாட்டேன்னு சொல்றதுக்கும் என்னங்க கனெக்‌ஷன்?

கணேஷ்: பாய். போனதடவ கூட்டணி வச்சே முன்னூறு ஓட்டுதான் டிஃபரன்ஸ். இந்த லட்சணத்துல தனியா நின்னா? அதான் எனக்கு பதிலா என் பையன் நிக்கட்டும்னு சொல்றார் போலருக்கு.

ஜோசப்: இதுல இன்னொரு விஷயம் இருக்கு பாய். 

கணேஷ்: என்ன டெப்பாசிட்டே போயிரும் போலருக்கேன்னு நினைக்கிறார்னுதான?

ஜோசப்: (சிரிக்கிறார்) அப்படியும் இருக்கும். கவர்ன்மென்ட்ல சீனியர் பொசிஷன்ல இருந்தவர். ப்ரஸ்டீஜ்னு ஒன்னு இருக்குல்லே.

கணேஷ்: ப்ரஸ்டீஜாவது மண்ணாவது! இவர் அவரோட தொகுதிக்குன்னு ஒன்னுமே செய்யலியாங்க! கட்சிய விடுங்க. இவர் எத்தன டேர்ம் சிவகங்கையிலருந்து ஜெயிச்சிருக்கார்? 

ஜோசப்: அப்படி சொல்ல முடியாது. இன்னைக்கி தமிழ்நாட்டுல ஏன் இந்தியாவுலயே சிவகங்கையிலதான் பேங்க் பிராஞ்சஸ் ஜாஸ்தியாம் தெரியுமா? அத்தனூண்டு ஊர்ல இருநூறு பிராஞ்சஸ் இருக்குதாம்!

கணேஷ்: (சிரிக்கிறார்) அட நீங்க வேற ஜோசப்: பேங்க் பிராஞ்சுங்கள மூலைக்கி மூலை திறந்து வச்சி என்ன பண்றது? எல்லாமே ஈயடிச்சிக்கிட்டுத்தான் இருக்குதாம். கையில காசு இருக்கறவன்தான பேங்குக்கு போவான்?

ஜோசப்: அதுக்கு மட்டுமா பேங்குங்க இருக்கு? நிறைய கடனும் குடுப்பாங்களே?

கணேஷ்:  அப்படீன்னா அந்த தொகுதியே இத்தன வருசத்துல சொர்க்க பூமியா மாறியிருக்கணுமேங்க? கரும்பு விவசாயத்த தவிற வேற ஒன்னுமே இல்லையாமே? வாலிபப் பசங்கல்லாம் எந்த தொழிலும் செய்ய முடியாம கல்ஃப் பக்கம் போய்ட்டாங்களாமே.

ரஹீம்: அப்படியா?

15 மார்ச் 2014

ஆ ராசாவே உன்னெ நம்பி (நிறைவுப் பகுதி)

 
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறையற்றது என வழக்கு தொடுத்தவர்கள் (petitioners) நீதிமன்றத்தின் முன் வைத்தவை ஐந்து குற்றச்சாட்டுகள்.

அவற்றில் முக்கியமான இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை குறித்து என்னுடைய கருத்தை முந்தைய பகுதியில் எழுதியிருந்தேன்.
 
அதாவது
 
1. முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தொலை தொடர்பு அமைச்சகம் அலைக்கற்றைகளை ஒதுக்கியது சரியா?

என்னுடைய பார்வையில் அதில் தவறேதுமில்லை. ஏனெனில் அப்படித்தான் முந்தைய அரசும் செய்தது.  அதை குற்றமெனவோ அல்லது முறைகேடாக ஒதுக்கப்பட்டன எனவோ அதுவரை யாரும் நீதிமன்றத்தில் முறையிடவில்லை.

2. விண்ணப்பங்கள் பெறப்படும் இறுதி தியதியை விளம்பரம் வெளியிடப்பட்டப் பிறகு அறிவிக்கப்பட்ட தேதியான 1.10.07 பதிலாக 25.9.07 என்று மாற்றியது சரியா?

உண்மையில் இறுதி தியதி மாற்றப்படவில்லை என்பதுதான் என் கருத்து. விளம்பரம் வெளியிடப்பட்ட தியதி வரை தங்கள் வசமிருந்த விண்ணப்பதாரர்களுக்கு புதிய விண்ண்பங்கள் பெறப்படும் வரை காத்திருக்காமல் உடனே வழங்கிவிட்டு மீதமுள்ள அலைக்கற்றையை புதிய விண்ணப்பதாரர்களுக்கு வழங்கலாம் என்று மட்டுமே அமைச்சகம் முடிவெடுத்தது. அமைச்சகத்தின் இந்த செய்கையால் புதிய விண்ணப்பதாரர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை அணுகியிருந்தால் இத்தகைய முடிவுக்கு நீதிமன்றம் வந்திருக்கலாம். ஆனால் இந்த வழக்கை தொடுத்தவர்களுள் ஒருவர் கூட அமைச்சகத்தின் இந்த முடிவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்பதுதான் உண்மை.
 
வழக்கை தொடுத்தவர்கள் முன்வைத்த ஐந்து குற்றச்சாட்டுகளுள்  1 மற்றும் 4வது குற்றச்சாட்டுக்கள் மேற் கூறிய இரண்டு கருத்துக்களை சார்ந்திருந்தன. இதற்கு பதிலாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியில்லை என்பது என்னுடைய கருத்து.
 
வழக்கு தொடுத்தவர்கள் முன்வைத்த 2வது குற்றச்சாட்டுதான் மிகவும் அடிப்படையானது மட்டுமல்ல முக்கியமானதும் கூட.
 
"Whether the recommendations made by the Telecom Regulatory Authority of India (TRAI) on 28.8.2007 for grant of Unified Access Service Licence (for short 'UAS Licence') with 2G spectrum in 800, 900 and 1800 MHz at the price fixed in 2001, which were approved by the Department of Telecommunications (DoT), were contrary to the decision taken by the Council of Ministers on 31.10.2003?

"2001ல் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு 2007ல் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்யலாம் என்று 28.8.07 அன்று TRAI பரிந்துரை செய்தது சரியா?" .
 
இதுதான் அமைச்சகம் செய்த இமாலய தவறு. ஏனெனில் மத்திய மூத்த அமைச்சரவைக் குழு 31.10.2003ல் இம்முறை சரியல்ல என்று முடிவெடுத்திருந்தது. இதை இன்றைய சூழலில் பார்க்கும்போது வேண்டுமென்றே செய்த தவறு அல்லது தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை காட்ட வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவு என்றும் அமைச்சக தலைவரான ராசா தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றெல்லாம் எளிதாக கூறிவிட முடியும். 
 
பொருளாதார சலுகைகள் (Ecnomic or monetary consideration) - வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், 'கையூட்டு' - பெறலாம் என்ற நோக்குடன் இலாக்கா அமைச்சரால் எடுக்கப்பட்ட முடிவு இது என்பதுதான் வழக்கு தொடுத்தவர்களின் குற்றச்சாட்டு. அதை உண்மையல்ல என்று மறுக்க இராசாவின் கைவசம் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதும் உண்மை.
 
ஆனால் இன்று கபில் சிபல் கூறுவது போன்று இது தன்னிச்சையாக இராசாவால் மட்டுமே எடுக்கப்பட்ட முடிவா என்றால் நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை என்றே கூற தோன்றுகிறது. இதில் பிரதமருக்கு பங்கு உண்டா, ப.சிதம்பரத்திற்கு பங்கு உண்டா என்றால் 'ஆம்' என்று கூறுவது சற்று கடினம்தான் என்றாலும் 'இல்லை' என்று உறுதியுடன் கூறவும் முடியவில்லை. இவ்விருவர் மட்டுமல்லாமல் அன்று காபினட்டில் அங்கத்தினர்களாக இருந்த அனைவருக்குமே ஒருவகையில் இதில் பங்குண்டு என்றுதான் கூற வேண்டும்.
 
அடுத்த முக்கியமான வினா  "Whether the licences granted to ineligible applicants and those who failed to fulfil the terms and conditions of the licence are liable to be quashed?"
 
"அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற தகுதியற்றவர்களுக்கு  வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டுமா? "
 
இதற்கு உச்ச நீதிமன்றம் 'ஆம், ரத்து செய்யப்பட வேண்டியவைதான்' என முடிவெடுத்து 25.9.07 முதல் வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களையும் ரத்து செய்தது.
 
உச்ச நீதிமன்றத்திற்கு முன் வைக்கப்பட்ட வினா என்ன? அமைச்சகம் தங்களுடைய விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்ட ஷரத்துகளின்படி (conditions) உரிமங்கள் பெற தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய வேண்டுமா என்பதுதான்.
 
ஆனால் உச்ச நீதிமன்றம் தகுதியுள்ளவர்கள் அல்ல என எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்தையும் சுட்டிக்காட்டாமல் அமைச்சகம் செய்த இரண்டு தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு உரிமங்களை பெற்ற அனைத்து நிறுவனங்களுமே தகுதியற்றவர்கள்தான் என முடிவெடுத்தது சரியல்ல என்று கருதுகிறேன்.
 
தகுதியற்றவர்கள் என நிர்ணயிக்கப்பட அடிப்படையான தகுதிகளுள் மிக முக்கியமான ஒன்று அவர்கள் தொலைதொடர்பு சேவையில் அனுபவம் பெற்றவர்களா என்பதுதான். ஆகவே அத்தகைய நிறுவனங்களுக்கும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை தெளிவாக, அதாவது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயர்களையும் உச்ச நீதிமன்றம் தங்களுடைய தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கலாம். ஏனெனில்  டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் அதற்கு முன்பே CDMA இணைப்புகளை வழங்கிக்கொண்டிருந்தவர்கள்தான். மேலும் அந்நிறுவனங்கள் 2ஜி அலைக்கற்றைக்கு விண்ணப்பித்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக காத்திருந்தவர்கள் என்பதும் உண்மை.
 
முந்தைய அரசு கடைபிடித்து வந்திருந்த முதலில் வந்தவர்க்கே முன்னுரிமை என்ற கொள்கையை தொடர அன்றைய அரசு முடிவெடுத்தது ஒரு கொள்கை முடிவு. அதில் சம்பந்தப்பட்ட இலாக்கா TRAIன் பரிந்துரையை ஏற்று எடுக்கப்பட்ட முடிவு. அது தவறு என்றால் அதற்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக பொறுப்பேற்க முடியாது. மேலும் முதலில் வந்தவர்கே முன்னுரிமை என்ற கொள்கையில் ஏதும் தவறில்லை. அது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைதான். விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் ஒரே தகுதியுள்ளவர்களென கருதப்படும் ஒரு சூழலில் முதலில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்குவது அனைத்து நிறுவன டென்டர்களிலும் கடைபிடிக்கப்படும் ஒரு கொள்கைதான்.
 
உச்ச நீதிமன்றம் தொலைதொடர்பு அலைக்கற்றை போன்ற தேசீய சொத்துக்களை பங்கீடு செய்யும்போது ஏல முறையை கடைப்பிடிப்பதுதான் சரியானது  என்று கூறினால் முந்தைய NDA அரசு செய்த முடிவும் தவறானதுதான் என்ற முடிவுக்கு மட்டுமே வர முடியும். உச்ச நீதிமன்றத்தின் கருத்து இனி வரும் காலத்திற்குத்தான் பொருந்தும் என்றால் இதை முன்தேதியிட்டு அமுல்படுத்துவதில் எந்த நியாயமும் இல்லை.
 
இந்த வழக்கை பொருத்தவரை நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் மிகவும் அடிப்படையான குற்றச்சாட்டு என்றால் 2001ல் செய்யப்பட்ட அதே மதிப்பீட்டின் அடிப்படையில் 2008ல் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததுதான் இதற்கு முக்கிய மற்றும் அடிப்படை காரணம். அமைச்சகம் செய்த மற்ற தவறுகள் எல்லாம் நிர்வாக தவறுகள் (procedural lapses). உதாரணத்திற்கு, தொலைதொடர்பில் அடிப்படை அனுபவம் அற்றவர்களுக்கெல்லாம் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றால் அத்தகைய முடிவால்  இத்துறையில் அனுபவமுள்ள ஆனால் உரிமம் கிடைக்கப்பெறாதவர்கள் மட்டுமே கவலைப்பட வேண்டிய ஒன்று. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படப் போவதில்லை. இதில் பொதுநலம் என்றும் ஏதுமில்லை. அதுபோன்றுதான் விண்ணப்ப தியதியை முன்கூட்டி மாற்றியதும். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும். இதனால் இந்த வழக்கில் புகார் செய்தவர்களுக்கும் அல்லது  உங்களுக்கும் எனக்கும் என்ன இழப்பு?
 
2001லிருந்து 2008 வரை ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் அடிப்படையில் அலைக்கற்றை (spectrum) உரிமத்தை மீண்டும் மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் ஏற்கனவே உரிமங்கள் வழங்கப்பட்டவர்களிடமிருந்து மீதமுள்ள தொகையை வசூலிப்பதன் மூலமே அரசுக்கு ஏற்பட்ட இழப்பின் பெரும் பகுதியை ஈடுகட்டியிருக்க முடியும். மாறாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அனைத்து உரிமங்களையும் ரத்து செய்துவிட்டு மீண்டும் ஏலம் நடத்துவது என்பது சரியல்ல.
 
மேலும் 2ஜி சேவையையும் 3ஜி சேவையையும் ஒப்பிடுவது கட்டை வண்டியையும் பென்ஸ் கார் போன்ற சொகுசு வாகனத்தையும் ஒப்பிடுவதற்கு சமம். Idea விளம்பரத்தில் கூறுவது போன்று sirf calling keliye தேவைப்படுவது 2ஜி. மிகவும் முன்னேறிய (highly advanced) சேவைகளை பெற பயன்படுவது 3ஜி. 3ஜி ஏலத்தில் இத்தனை லட்சம் கோடி கிடைத்தது, ஆகவே 2ஜியை ஏலம் விட்டிருந்தால் இத்தனை லட்சம் கோடி அரசுக்கு கிடைத்திருக்கும் என்ற முடிவுக்கு வருவது ஏற்புடையதல்ல.  இது ஒரு கணக்கு (accountancy) மட்டுமே தெரிந்த ஆடிட்டர் ஜெனரல் கூறலாகாது. மேலும் அந்த ஆடிட்டரைப் பொருத்தவரை எல்லாமே மெகா ஊழல்தான். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்னும் ரகம் இவர். எங்களுடைய வங்கியிலும் இத்தகைய தணிக்கையாளர்கள் பலரை சந்தித்திருக்கிறேன். தணிக்கைக்கு வரும்போதே கிளையில் இருப்பவர்களை கள்வர்களை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.
 
மேலும் 2ஜி யை பயன்படுத்தும் நுகர்வோரின் எண்ணிக்கையை 3ஜி சேவையை பயன்படுத்தும் நுகர்வோருடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? 2ஜி சேவையை இன்று நாட்டில் சுமார் 6 கோடி பயன்படுத்துகின்றனர் என்றால் அதில் நூற்றில் ஒரு பங்கு கூட 3ஜி சேவையை பயன்படுத்துகிறார்களா என்பதே கேள்விக் குறி!  2ஜி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் சாமான்யர்கள். அப்படியே 3ஜி அலைக்கற்றையை போன்றே 2ஜி அலைக்கற்றையையும் ஏலம் விட்டு இலட்சம் கோடி அரசுக்கு கிடைத்திருந்தாலும் அதனால் நேரடியாக பாதிக்கப்படப் போவது நம்மைப் போன்ற சாமான்ய நுகர்வோர்தான் என்பதையும் மறந்துவிடலாகாது.
 
இந்த வழக்கை தொடர்ந்தவர்களும் அல்லது  இன்று வெற்றிகண்டுவிட்டோம் என்று மகிழ்ந்து கொண்டாடும் அரசியல்வாதிகளும்  மாத வருமானத்தை நம்பியிருப்பவர்கள் அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். லட்சம் கோடி அரசுக்கு லாபம் என்றால் அதே லட்சம் கோடி சாமான்ய நுகர்வோருக்கு இழப்பு என்பதுதான் இந்த தீர்ப்பின் நேரடி தாக்கமாக இருக்கப் போகிறது!
 
மேலும் இந்த ஒதுக்கீட்டில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகளுக்கும் ஆ. ராசா மட்டுமே பொறுப்பு என்பதும் முழுப் பூசணியை சோற்றில் மறைப்பதற்குச் சமம். அன்று தலைமைப் பொறுப்பில் இருந்த பிரதமருக்கும் ஏன் அனைத்து கேபினட் அமைச்சர்களுக்கும் கூட நேரடி பொறுப்பில்லை என்றாலும் தார்மீகப் பொறுப்பு நிச்சயம் உண்டு.
 
ஆனால் இத்தகைய ஊழலுக்கு முக்கிய காரணியாக இருந்தவர் ராசாதான். அதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை. ஒருவேளை தனிப்பட்ட முறையில் அவருக்கு எவ்வித லாபமும் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் சார்ந்திருந்த கட்சிக்கும் அவர்கள் நடத்திவரும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கும் நிச்சயம் மறைமுக லாபம் கிடைத்தது என்பதை அவர்களே கூட மறுக்க முடியாது.

**************

14 மார்ச் 2014

ஆ ராசாவே! உன்னெ நம்பி.....

முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு இலாக்கா அமைச்சர் ஆ.ராசா அவர்கள் மீண்டும் மக்களவை தேர்தல் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டதிலிருந்து கடந்த இரு ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலும் அதில் ராசாவின் பங்கு என்ன என்பதும்  மீண்டும் ஊடகங்களில் விவாதிக்கப்படுவதைக் காண முடிகிறது. குறிப்பாக வட இந்திய தொலைக்காட்சிகளில் Tainted Raja nominated again என்று பேச ஆரம்பித்துள்ளன.
 
இந்த சூழலில்  2012ம் ஆண்டு இந்த வழக்கில்  உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானபோது அந்த  தீர்ப்பை நடுநிலையுடன் நான் விமர்சித்து எழுதிய பதிவை ஒரு சில மாற்றங்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன். 

 உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பது நான் ஏற்கனவே அனுமானித்திருந்தேன். மேலும் அந்த தீர்ப்பு வெளிவந்தபோது இந்த முடிவு நான் எதிர்பார்த்ததுதான் என்று சுப்பிரமணியம் சுவாமி மகிழ்ச்சியுடன் அறிவித்ததிலிருந்தே தெரிகிறது அவர் எந்த அளவுக்கு உச்ச நீதிமன்றத்தின் செயல்பாட்டை அறிந்துள்ளார் என்பது.
 
இந்த இடத்தில் நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால் ஒரு நீதிமன்றத்தின்  (அது மாநிலங்களிலுள்ள கடைநிலை நீதிமன்றமானாலும் நாட்டின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றமானாலும்) தலையாய பணி ஒரு வழக்கின் வாத பிரதிவாதங்களை கேட்டு அதன் அடிப்படையில் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவது மட்டுமே. மாறாக  நாட்டில் நடக்கும் ஊழல்களையோ அல்லது அதிகார துஷ்பிரயோகங்களையோ அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய புகார்கள் எதுவும்  இல்லாமல் விசாரணையில் நேரடியாக இறங்குவதோ அல்லது நாட்டின் புலனாய்வு கழகங்களை அவற்றை விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிடுவதோ அல்ல. ஒரு நீதிமன்றம் எவ்வித புகாரும் இல்லாமல் தாமாக முன்வந்து (suo moto) ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் ஒரு புகாரை தன்னுடைய நேரடி மேற்பார்வையில் புலனாய்வு (Investigation) செய்வது judicial override என்பதல்லாமல் வேறில்லை. அவ்வாறு நாட்டில் நடைபெறும் ஊழல்களை எல்லாம் ஒரு நீதிமன்றம் தன்னுடைய நேரடி மேற்பார்வையில் புலன் விசாரணை  நடத்துவது என தீர்மானித்து செயலில் இறங்கினால் அதன் தலையாய பணியான நீதிபரிபாலனம் செய்ய அதற்கு போதிய நேரம் இருக்காது. மேலும் ஒரு நீதிமன்றம் உத்தரவிட்ட புலனாய்வின் அறிக்கையை அதுவே தள்ளுபடி செய்துவிடுவதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயமாயிற்றே?  
 
ஆனால் அதே சமயம் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளையோ அல்லது இந்த வழக்கில் அது வழங்கியுள்ள தீர்ப்பை குறை கூறுவது என்னுடைய நோக்கமல்ல என்பதை மிகவும் தெளிவாக கூற விரும்புகிறேன். அது போன்றே 2ஜி அலைக்கற்றையை ஏ. ராசா ஒதுக்கீடு செய்த விதத்தை "நியாயப்படுத்தும் நோக்கமும் எனக்கில்லை. அவர் செய்தது இமாலய தவறுதான். இத்தகைய முறைகேட்டான ஒதுக்கீட்டால் அவர் தனிப்பட்ட முறையில் ஏதேனும் லாபம் அடைந்தாரா என்பதெல்லாம் தேவையற்ற கேள்வி. ஆனால் அவருக்கு மிகவும் நெருக்கமான ஒரு சில நிறுவனங்களுக்கு வேறு சில நெருக்கமானவர்களுடைய பரிந்துரையின் பேரில், தனிப்பட்ட முறையில் இல்லாவிட்டாலும் தான் சார்ந்திருந்த அரசியல் கட்சிக்கும் அதிலுள்ள ஒரு சில தனிநபர்களுக்கும்  பொருளாதார இலாபம் அடைந்து கொடுக்கும் நோக்கத்துடனேயே அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்தார் என்பது மட்டும் அவராலேயே மறுக்க முடியாத உண்மை.

இப்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் ஒரு சில பகுதிகளை மட்டும் ஆய்வு செய்வோம்.

1. முதலில் வந்தவருக்கே முதல் உரிமை என்ற அணுகுமுறை அரசியல் சாசனத்தின் 14வது ஷரத்துக்கு எதிரானது என்கிறது தீர்ப்பு.
 
அரசியல் சாசனத்தின் 14வது ஷரத்து என்ன கூறுகிறது?
 
"Equality before law The State shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth."
 
 
"சட்டத்தின் முன்பு எந்த இந்திய குடிமகனும் தன்னுடைய மதம், இனம், சாதி, பால் மற்றும் பிறப்பிட அடிப்படையில் வேறுபடுத்தப்படலாகாது."

சுருக்கமாக கூறினால் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். இதன்படி பார்த்தால் நாட்டில் எந்த ஒரு ஒதுக்கீட்டையும் செய்யும்போது இந்த 'முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் செய்ய முடியாதே.
 
ஆனால் இதிலும் உச்ச நீதிமன்றம் ஒரு வாதத்தை வைக்கிறது.
 
"When it comes to alienation of scarce natural resources like spectrum etc., the State must always adopt a method of auction by giving wide publicity so that all eligible persons may participate in the process. Any other methodology for disposal of public property and natural resources/national assets is likely to be misused by unscrupulous people who are only interested in garnering maximum financial benefit and have no respect..."
 
"ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை போன்ற தேசிய சொத்துக்களைப் பங்கீடு செய்யும்போது அரசு தகுதியுள்ள அனைவரும் பங்கேற்கும் விதமாக ஏல முறையை மட்டுமே கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் வேறு எந்த முறையில் அவற்றை பங்கீடு செய்தாலும் அதை பெற தகுதியற்ற ஒருசிலர் குறிப்பாக அதை உடனே விற்று இலாபம் அடைய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அதை தவறான வழியில் பெற்றுவிட வாய்ப்புள்ளது."
 
இந்த வாதத்தை சரி என்று ஏற்றுக்கொண்டால்  தேசிய முற்போக்கு கூட்டணியும் (NDA) இதே முறையில்தானே அலைக்கற்றையை பங்கீடு செய்தது?
 
அது தவறல்லவா? அப்படியானால் அந்த ஒதுக்கீட்டையும் உச்ச நீதிமன்றம் ஏன் ரத்து செய்யவில்லை என்று வாதிடுகிறார் அரசு சார்பில் வாதிட்ட சால்வே.
 
அதற்கு உச்ச நீதிமன்றத்தின் பதில்:
 
"The argument of Shri Harish Salve, learned senior counsel that if the Court finds that the exercise undertaken for grant of UAS Licences has resulted in violation of the institutional integrity, then all the licences granted 2001 onwards should be cancelled does not deserveacceptance because those who have got licence between 2001 and 24.9.2007 are not parties to these petitions and legality of the licences granted to them has not been questioned before this Court"
 
"2001 முதல் 2007 வரை அலைக்கற்றையை பெற்ற நிறுவனங்கள் இந்த வழக்கில் சம்பந்தபட்டிருக்கவில்லை. மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட முறையைப் பற்றியும் இந்த நீதிமன்றத்தில் யாரும் முறையீடு செய்யவில்லை."
 
உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்ணோட்டம் எந்த வகையில் நியாயம்? அதாவது 2001முதல் 2007 வரை கடைபிடிக்கப்பட்ட 'முதலில் வந்தவருக்கே முன்னுரிமை' என்கிற முறையும் சரியில்லைதான். ஆனால் அதைப்பற்றி யாரும் இதுவரை முறையிடவில்லை என்பதால் அதை ரத்து செய்ய முடியாது என்பதுபோலல்லவா இருக்கிறது தீர்ப்பு? நாளைக்கே ஒருவர் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தால் என்னாவது? அவற்றையும் ரத்து செய்வதை தவிர உச்ச நீதிமன்றத்திற்கு வேறு வழியுள்ளதா? அவ்வாறு நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களுடையை அலைக்கற்றை உரிமங்களும் ரத்து செய்யப்படுமானால் வாடிக்கையாளர்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்? நினைத்துப்பார்க்கவே அச்சமாக உள்ளது!

2. அலைக்கற்றைக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட தேதி முன்தேதி இட்டு மாற்றியது சட்ட விரோதமானது.

தொலைதொடர்பு இலாக்கா (DOT) அதிகாரி ஏ.கே. ஸ்த்ரீவத்ஸவா (இவரும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்தான்) 24.9.2007 அன்று இலாக்கா அமைச்சரான ஏ.இராசாவுக்கு சமர்ப்பித்த குறிப்பில் அன்றைய தியதியில் இலாக்காவிடம் 12 நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட 167 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும் இத்தகைய மிக அதிக அளவிலான விண்ணப்பங்களை இலாக்கா இதுவரை பரிசீலனை செய்ய வேண்டிய சூழலை
சந்தித்ததில்லை என்றும் குறிப்பிடுகிறார். ஆகவே இனி அலைக்கற்றை ஒதுக்கீடு வேண்டி விண்ணப்பிக்க 10.10.2007ஐ இறுதி தியதியாக முடிவு செய்து
அறிவிக்கலாம் என்று அமைச்சருக்கு பரிந்துரைக்கிறார்.
 
அது என்ன 10ம் தேதி அக்டோபர் முதல் தேதி (why 10th?  It should be 1st Oct.) என்று முடிவு செய்து அறிவியுங்கள் என்று குறிப்பில் (Note) தன் கைபட எழுதி திருப்பி அனுப்புகிறார் இராசா.
 
அதன் படி 25.9.07  பத்திரிகைகளில் விளம்பரம் வெளிவருகிறது. 
 
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஏற்கனவே அதாவது 1.10.2007 இறுதி தேதி என்ற அறிவுப்பு வெளிவருகின்ற நேரத்தில், வோடாஃபோன் எஸ்சார், ஐடியா செல்லுலார், டாடா டெலி சர்வீசஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் 2006ல் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் இலாக்காவிடம் பைசல் செய்யப்படாமல் நிலுவையில் இருந்தன! மேலும் இந்த இலாக்கா உச்ச நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த விளக்கம் ஒன்றில் 25.9.07 வரை சுமார் 22 நிறுவனங்கள் 232 உரிமங்களுக்காக விண்ணப்பத்திருந்தன என்று தெரிவித்திருந்தது. இந்த விண்ணப்பங்கள் புதிய விண்ணப்பங்கள் பெற வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கே முன்பே நிலுவையில் இருந்ததால் அவையும் 25.9.07 முதல் 1.10.2007 வரை பெறப்பட்ட 467 விண்ணப்பங்களுடன் சேர்க்கப்பட்டன!
 
அதாவது, முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அரசின் கொள்கையின்படி 2006ல் இலாக்காவின் வசம் நிலுவையிலிருந்த விண்ணப்பங்களை சமர்ப்பித்த நிறுவனங்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில்  உரிமங்களை வழங்கலாம் என்றும்  மீதமுள்ள அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வது குறித்து  பிறகு தீர்மானித்துக்கொள்ளலாம் என்றும் முடிவெடுத்து கைவசமிருந்த விண்ணப்பங்களை பரிசீலித்து பைசல் செய்கிறது இலாக்கா.
 
சுருக்கமாக கூற வேண்டுமென்றால் விளம்பரம் வெளியிடப்பட்ட தியதியான 25.9.2007 வரை பெறப்பட்டிருந்த விண்ணப்பதாரர்கள் அதற்கு பிறகு சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்பாக ஒதுக்கீட்டைப் பெற தகுதியுள்ளவர்களாக கருதப்பட்டு பயனடைகின்றனர். இதைத்தான் சட்டத்திற்கு புறம்பானது என்கிறது உச்ச நீதிமன்றம்.
 
ஏனெனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க புதிதாக ஒரு தியதியை அதாவது 1.10.2007 என்று அறிவித்துவிட்டு திடீரென 25.9.2007 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு முன்னுரிமையிட்டு உரிமம் வழங்கியது நியாயமற்றது, இது ஒரு போட்டியை அறிவித்துவிட்டு அதன் ஷரத்துக்களை மாற்றுவதற்கு சமம் என்கிறது நீதிமன்றம். ஏனெனில் முன் தேதியிட்டு உரிமங்களை வழங்கியதன்மூலம் 25.9.07க்குப் பிறகு சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களை தகுதியற்றவர்களாக்கிவிட்டதே. ஆகவே இது  சட்டத்திற்கு புறம்பானது என்பது நீதிமன்றத்தின் வாதம்.
 
இது சரிதானா? அப்படியானால் 25.9.07க்குப் பிறகு பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டனவா என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததா என்ற கேள்வி எழுகிறது. மாறாக, அவற்றில் ஒருவருக்கேனும் உரிமம் வழங்கப்பட்டிருந்தால் நீதிமன்றத்தின் இத்தகைய வாதம் செல்லுபடியாகாதே? மேலும் 25.9.07 அன்று இலாக்கா வசமிருந்த விண்ணப்பங்களும் கூட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முந்தைய ஒதுக்கீட்டுக்குப் பிறகு பெறப்பட்டு அடுத்த ஒதுக்கீட்டிற்காக நிலுவையில் வைக்கப்பட்டிருந்தவை என்பதால் அவற்றை எப்படி இலாக்கா நிராகரித்திருக்க முடியும்?
 
நியாயமாக பார்த்தால், புதிதாக அலைக்கற்றை ஒதுக்கீட்டை பகிர்ந்தளிக்க முடிவெடுக்கும் சமயத்தில் அதுவரை பெறப்பட்டு முடிவெடுக்கப்படாமல் உள்ள விண்ணப்பங்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டு மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க இலாக்கா உத்தரவிட்டிருக்க வேண்டும். பிறகு அரசின் கொள்கைப்படி முன்வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உரிமம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இப்படியொரு வாதத்தை உச்ச நீதிமன்றம் வைத்திருந்தால் அதை ஏற்றுக்கொண்டிருக்கலாம்.
 
நாளையுடன் முடியும்

13 மார்ச் 2014

யார் தலைமைன்னு தெரியாமலே ஒரு கூட்டணி!

ரஹீம்: போனவாரமே கேக்கணும்னு நினைச்சேன் ஆனா நீங்க இத்தோட நிறுத்திக்கலாம்னு சொன்னதும் விட்டுட்டேன்.

ஜோசப்: இப்ப கேளுங்களேன்? என்ன விஷயம்?

ரஹீம்: அதாங்க இந்த பிஜேபி கூட்டணி விஷயம். பிஜேபிக் காரங்க எங்க தலைமையிலதான் கூட்டணின்னு சொல்றாங்க. ஆனா கேப்டன் எங்க தலைமையிலதான்னு சொல்றாரு. இந்த கூட்டணியே ஒரு தமாஷான கூட்டணி. இதுல யார் தலைமையிலங்கறது வேற பிரச்சினையா?

கணேஷ்: (எரிச்சலுடன்) பாய், ஒவ்வொரு வாரமும் என்னெ கடுப்படிக்கறதே ஒங்களுக்கு வேலையா போச்சி. நாங்க ஒரு தேசிய கட்சி. அதுவுமில்லாம ஏறக்குறைய அம்பது வருசத்துக்கும் மேல பாலிடிக்ஸ்ல ஆக்டிவா இருக்கோம். நேத்து பேய்ஞ்ச மழையில முளைச்ச கட்சி கீழ கூட்டணி அமைக்கறதுக்கு எங்களுக்கென்ன தலையெழுத்தா? 

ஜோசப்: (சிரிக்கிறார்) கேப்டன் சொல்றதுலயும் நியாயம் இருக்கில்ல? அவர்தான இந்த கூட்டணியில ஜாஸ்தி எடங்கள்ல போட்டியிடறாரு? அதனாலதான் எங்க கூட்டணின்னு சொல்றாரு.

கணேஷ்: என்ன ஜோசப் நீங்களும் விவரம் இல்லாம பேசறீங்க. அப்படீன்னா அவரில்லைங்க எங்களை கூட்டணிக்கு வாங்கன்னு கூப்ட்ருக்கணும்? ஒரு கூட்டணிய அமைச்சி அதுல மதிமுக, பாமகன்னு தமிழகத்துல ரெண்டு முக்கிய கட்சிங்கள சேர்த்துட்டு இதுல நீங்களும் கலந்துக்க வாங்கன்னு தேதிமுகவ கூப்ட்டதே நாங்கதான? அப்புறம் எப்படி அவர் நாங்கதான் கூட்டணிக்கி தலைமைன்னு சொல்லிக்கறது?

ஜோசப்: நீங்க சொல்றதுலயும் பாய்ன்ட் இல்லாம இல்ல. ஆனா இத முதல்லயே தேதிமுகக் கிட்ட சொல்லிட்டில்ல பேச்சு வார்த்தைய துவக்கியிருக்கணும்?

ரஹீம்: கரெக்ட் ஜோசப். இதுல இன்னொரு தமாஷும் இருக்கு, பாத்தீங்களா?

கணேஷ்: (கோபத்துடன்) இதுல என்னங்க தமாஷ் இருக்கு? சும்மா எதையாச்சும் சொல்லணுமேன்னு சொல்லாதீங்க.

ஜோசப்: இருங்க கணேஷ். பாய் என்ன சொல்ல வறார்னு கேப்போம்.

ரஹீம்: பாமக மருத்துவருக்கு சினிமா நடிகர்னாலே புடிக்காது. கேப்டன பல தடவ வெளிப்படையாவே கிண்டலடிச்சிருக்கார். அது மட்டுமா? திராவிடக் கட்சிகளோட இனி ஒரு காலத்துலயும் பாமக கூட்டு வச்சிக்காதுன்னு சொல்லிக்கிட்டிருந்தார். அப்படீன்னா மதிமுக, தேதிமுக ரெண்டும் திராவிடக் கட்சி இல்லேன்னு சொல்றாரா? இதுல இன்னொரு தமாஷும் இருக்கு. நடிகர் பேசற கூட்டம் எதுலயும் நா கலந்துக்க மாட்டேன்னு வேற மருத்துவரே சொல்லிட்டாராம். அவங்க அவங்களுக்கு அலாட் பண்ண தொகுதியில அந்தந்த கட்சிங்க பிரச்சாரம் செஞ்சிக்குவாங்கன்னு வேற பிஜேபி சொல்றாங்க! இதுவா கூட்டணிங்கறது? இப்படி அடிப்படை விஷயத்துல கூட ஒத்துப்போகாத கட்சிங்க இருக்கற கூட்டணிய எப்படிங்க ஜனங்க ஏத்துக்குவாங்க?

கணேஷ்: இங்க பாருங்க பாய். நா பல தடவை செல்லிட்டேன். இப்ப வீசுற மோடி அலைக்கு முன்னால நீங்க சொல்ற விஷயமெல்லாம் அடிபட்டுப் போயிரும். அது மட்டுமில்ல. நீங்க சொல்றபடி கருத்தொற்றுமை இருக்கற கட்சிங்க சேர்ந்துதான் எலக்‌ஷன சந்திக்கணும்னு பாத்தா நம்ம நாட்டுல எந்த கட்சியும் எந்த கட்சியோடயும் கூட்டணி வச்சிக்க முடியாது. அதனாலதான் அரசியல்ல நிரந்தர எனிமியும் இல்ல நிரந்தர ஃப்ரென்டும் இல்லேன்னு சொல்றாங்க.

ஜோசப்: சரிங்க ஒத்துக்கறேன். ஆனா பாமக, தேதிமுக ரெண்டு கட்சிங்களுக்குமே தமிழ்நாட்டுல ஒரு சில பாக்கெட்ஸ்லதான் ஜெயிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. இது அவங்க ரெண்டு பேருக்குமே நல்லா தெரியும். அதனாலதான் பாமக கேக்கற பல தொகுதிகளை தேதிமுகவும் கேக்கறாங்க. இதுல ரெண்டு பேருமே மத்தவங்களுக்கு விட்டுக்குடுக்கப் போறதில்லங்கறது உங்களுக்கும் தெரியும். அதனாலதான் பாய் இது ஒரு யதார்த்த கூட்டணியே இல்லேங்கறார். ஏன்னா ஒரு கூட்டணியில ஒரு கட்சி அதே கூட்டணியிலருக்கற இன்னொரு கட்சியோட போட்டியாளரா இருக்கக் கூடாதுங்கறது கூட்டணியோட அடிப்படை கன்டிஷன். அதுவே இல்லாதப்போ அத எப்படிங்க கூட்டணின்னு சொல்ல முடியும்?

கணேஷ்: அதெல்லாம் நாங்க சுமுகமா பேசித் தீத்துக்குவோம். இன்னும் ரெண்டு மூனு நாள்ல ஃபைனலைஸ் செஞ்சிருவோம்னு சொல்லியிருக்காங்களே. அது வரைக்கும் பொறுத்திருந்துட்டு பேசுங்க.

ரஹீம்: நா சொல்றத குறிச்சி வச்சிக்குங்க கணேஷ்: பாமக, தேதிமுக வுக்கு இடையிலருக்கற சீட் பிரச்சினை தீரவே தீராது. இதனாலயே தேதிமுக கடைசி நேரத்துல விலகிக்கிட்டாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. 

கணேஷ்: (சிரிக்கிறார்) அதெல்லாம் ஒன்னும் நடக்காதுங்க. நீங்க வேணா பாருங்க. 

ரஹீம்: பாக்கத்தான போறோம்?

ஜோசப்: சரிங்க. எனக்கு ஒரு டவுட்டு. 

ரஹீம்: (சிரிக்கிறார்) உங்களுக்குமா? 

ஜோசப்; வாசன் திடீர்னு நா இந்த தேர்தல்ல போட்டியிடப் போறதில்லைன்னு சொல்றாரே, என்ன விஷயம்?

கணேஷ்: (சிரிக்கிறார்) நிச்சயமா தோத்துருவோம்கறது அவருக்கு தெரிஞ்சிருக்கும். 

ரஹீம்: யோவ், அவர் நாப்பது தொகுதியிலயும் பிரச்சாரம் பண்ணப் போறாராம். அதுக்காகத்தான் நிக்கலேன்னும் சொல்லியிருக்காரே படிக்கலையா?

கணேஷ்: (கேலியுடன்) அதெல்லாம் சும்மா. அவர் மட்டுமா சொல்றார்? சிதம்பரம் அப்புறம் ஜெயந்தி நடராஜன் ரெண்டு பேரும் இதையே சொல்லியாச்சி... இப்படி தினத்துக்கு ஒருத்தரா சொல்லிக்கிட்டே இருக்கப் போறாங்க பாருங்க. அப்புறம் ரோட்ல போற எவனையாவது புடிச்சி நீதான் கேன்டிடேட்டுன்னு நிறுத்துனாலும் நிறுத்துவாங்க. 

ஜோசப்: இந்த விஷயத்துல கணேஷ் சொல்றதுதான் என்னுடைய கருத்தும். இந்தத் தடவ காங்கிரசுக்கு ஒரு சீட் கூட கிடைக்கப் போறதில்லேங்கறத விட எந்த சீட்லயும் டெப்பாசிட்ட கூட காப்பாத்திக்க முடியுமாங்கறதே சந்தேகம்தான்னு தோனுது. இதுக்கு அவங்க யாரையும் குத்தம் சொல்லி பிரயோஜனம் இல்லே. ஏதாவது ஒரு திராவிடக் கட்சியோட சேந்த்துக்கிட்டு நாலஞ்சி சீட் கிடைச்சாப் போறும்னு போன இருபது வருசமா அவங்க கட்சிய வளக்கவே இல்லையே? இந்த தடவ மட்டுமில்ல இன்னும் பத்து வருசத்துக்கு அவங்களுக்கு இங்கருந்து ஒரு சீட் கூட கிடைக்கப் போறதில்ல. 

கணேஷ்: கரெக்ட்டுங்க. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த கட்சி, ஏறக்குறைய அம்பது வருசமா ரூலிங் பார்ட்டியா இருக்கற கட்சிக்கு இந்த நிலைமை. கேவலமா இருக்கு!

ரஹீம்: (கோபத்துடன்) என்னமோ உங்க கட்சிக்கி இங்க பெரிய ஆதரவு இருக்கறா மாதிரி பேசறீங்க? உங்க கதியும் அதே கதிதானங்க? 

ஜோசப்: (சிரிக்கிறார்) சரியா புடிச்சீங்க பாய். இதுக்குத்தான் எக்குத்தப்பா பேசக் கூடாதுங்கறது. 

கணேஷ் பதில் பேசாமல் ரஹீம் பாயை  எரித்துவிடுவதுபோல் பார்க்கிறார்.

ரஹீம்: (கேலியுடன்) யோவ் இந்த பார்வையெல்லாம் பாத்து பயப்படற ஆள் நா இல்லை.

ஜோசப்: சரி விடுங்க பாய். இன்னொரு விஷயம்.

ரஹீம்: சொல்லுங்க. 

ஜோசப்: ரெண்டு நாளைக்கி முன்னால ராகுல் மோடிய ஹிட்லர்னு சொன்னத வச்சி ஒரு பெரிய சர்ச்சையே வந்துருச்சே படிச்சீங்களா? ஒரு வட இந்தியா டிவியில இதுக்குன்னு தனியா ஒரு டிபேட் (debate) வச்சி ஒரு பெரிய கலாட்டாவே பண்ணிட்டாங்க தெரியுமா?

ரஹீம்: அப்படியா சொன்னார், நீங்க கேட்டீங்களா?

கணேஷ்: நான் கேட்டேன். அவர் அப்படித்தான் சொன்னார். 

ஜோசப்; (சிரிக்கிறார்) சும்மா சொல்லாதீங்க கணேஷ். நானும் அவர் பேசின முழுப் பேச்சையும் கேட்டேன். மோடின்னு ஒரு தடவ கூட சொல்லலை. அவர் சொன்னது இதுதான். நம்ம நாட்டுல சிலர் காந்திய வழியில போறாங்க. வேற சிலர் ஹிட்லர் மாதிரி பிஹேவ் பண்றாங்கன்னு சொன்னார். எங்கப்பன் குதிருக்குள்ள இல்லேங்கறா மாதிரி இவர் மோடியத்தான் சொல்றார்னு பிஜேபிக்காரங்க சொன்னதுக்கப்புறந்தான் ஜனங்களுக்கும் அட இவர் சொல்றது சரிதான் போலருக்கேன்னு தோனும். அது மட்டுமில்லீங்க. நான் மோடியோட பேச்சையும் தொடர்ந்து கேட்டுக்கிட்டுத்தான் வரேன். அவரோட பேச்சுல ஒரு திமிர்தான் தெரியுது. சில சமயத்துல ஒரு மூனாந்தர அரசியல்வாதி மாதிரி உங்க மாமா வீட்லருந்தா கொண்டு வந்து குடுத்தீங்கன்னுல்லாம் பேசறாரு. இதெல்லாம் ஒரு பி.எம் கேன்டிடேட்டுக்கு அழகாங்க? அவர மாதிரியே இங்கயும் ஒரு தலைவர் பேசிக்கிட்டுத்தான் இருக்கார். நா பேர சொல்லாமயே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கேன். 

ரஹீம்: (நமட்டுச் சிரிப்புடன்) என்ன கணேஷ் இவர் யார சொல்றார்னு தெரியுதா?

கணேஷ்: (எரிச்சலுடன்) தெரியாம என்ன?

ஜோசப்: நீங்க யார நினைச்சிக்கிட்டீங்களோ எனக்கு தெரியல. ஆனா ரெண்டு பேரும் ஒரே ஆளப் பத்தித்தான் சொல்றோம்னு சொல்ல முடியாது. ஏன்னா உங்க கூட்டணியில இருக்கற இன்னொருத்தர் பேசறதும் அதே மாதிரிதான் இருக்கு.

ரஹீம்: அப்போ நீங்க சொன்னது அவர இல்லையா?

ஜோசப் இல்லையென்பதுபோல் தலையை அசைக்கிறார்.

ரஹீம்: அப்போ நீங்க யார சொல்றீங்க?

ஜோசப்: வேணாம். நீங்க ஒக்காந்து யோசிச்சி வைங்க. கண்டு பிடிக்க முடியலன்னா ஃபோன்ல கூப்டுங்க, சொல்றேன். என்ன கணேஷ்?

கணேஷ்: நீங்க சொல்ல வர்றது யாருன்னு எனக்கு தெரியும். 

ரஹீம்: யோவ் சும்மா உடாதீங்க. யார்னு சொல்லுங்க பாப்போம். 

கணேஷ்: (சிரிக்கிறார்) அவர் சொன்னா நானும் சொல்றேன். 

ரஹீம்: கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலேங்கற ஆள்யா நீரு. ஜோசப் யாரச் சொன்னாலும் அவரத்தான் நானும் நினைச்சிக்கிட்டிருந்தேன்னு சொல்லிறலாம்னு ஐடியா, அதான?

கணேஷ்: அந்த மாதிரி ஏமாத்தறதெல்லாம் நீங்க பண்ற வேலை. 

ரஹீம் பாய் கோபத்துடன் பதிலளிப்பதற்கு முன்பு ஜோசப் குறுக்கிடுகிறார்: சரி, சரி. இது இன்னொரு சண்டைக்கி போறா மாதிரி தெரியுது. அதனால இன்னைக்கி இத்தோட முடிச்சிக்குவோம். நாளைக்கி பாக்கலாம். 

*********

11 மார்ச் 2014

கம்யூனிஸ்ட்டுகளின் கஷ்டகாலம்!

ஜோசப் வந்தும் வராததுமாக ரஹீம் பாய்: என்ன ஜோசப் நேத்து அவ்வளவு சீக்கிரமா இறங்கிப் போனீங்களே, போன வேலை முடிஞ்சிதா?

ஜோசப்: (சிரிக்கிறார்) அதெல்லாம் அர்ஜன்டா ஒன்னும் இல்லீங்க பாய். நாம தினமும் டிஸ்கஸ் பண்றத அப்படியே வாரம் ஒரு தரம் என்னோட ப்ளாக்ல எழுதுறது வழக்கம். நிறைய விஷயங்கள டிஸ்கஸ் பண்ணா பதிவு ரொம்ப நீளமா போயிருது. படிக்கறவங்களுக்கு கஷ்டமா இருக்காம். அதான் அன்னைக்கி டிஸ்கஸ் பண்ண வரைக்கும் போதும்னு எழுந்து போய்ட்டேன்.

கணேஷ்: (கோபத்துடன்) ஏங்க, அதெப்படிங்க எங்க பர்மிஷன் இல்லாம நாங்க சொல்றதையெல்லாம் அப்படியே நெட்ல போடுவீங்க? அப்புறம் எங்கள பத்தி ஜனங்க என்ன நினைப்பாங்க?

ரஹீம்: (கேலியுடன்) யோவ் நீ என்ன எலக்‌ஷன்லயா நிக்க போற? நம்மள பத்தி யார் என்ன நினைச்ச நமக்கென்ன?

ஜோசப்: (சிரிக்கிறார்) அதான?

ரஹீம்: ஒருவேளை இவர் பிஜேபி ஆளுடான்னு நினைச்சி யாராச்சும் போட்டு தள்ளிருவாங்களோன்னு பயப்படறீரா ஓய்?

கணேஷ்: (கோபத்துடன்) பாய், ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைப்போ?

ஜோசப்: சரி, சரி மறுபடியும் சண்டை வேணாம். பாய் அன்னைக்கி கடைசியா நீங்க என்ன கேட்டீங்க?

ரஹீம்: அதாங்க கெஜ்ரிவால் குஜராத்ல போயி ஒரு கலாட்டாவே பண்ணிட்டு வந்தாருன்னு போட்டுருந்தானே அதப்பத்தித்தான்.

கணேஷ்: அதப் பத்தி பேசறதுக்கு முன்னால நேத்து திமுக வேட்பாளார் பட்டியல்ல மறுபடியும் 2ஜி ராஜாவுக்கு இடம் குடுத்துருக்காங்களே அதப்பத்தி பேசுவோம்.

ஜோசப்: அதப் பத்தியும் பேசலாம். முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க. எதுக்கு மோடி கெஜ்ரிவால அரெஸ்ட் பண்ண வச்சார்?

கணேஷ்: ஏங்க, இதுக்கு எதுக்குங்க மோடி? ரோட்ல நின்னுக்கிட்டு போராட்டம்கற பேர்ல அடாவடி பண்ணா போலீஸ் அரெஸ்ட் பண்றாங்க.

ரஹீம்: இல்லையே. என்னெ அரெஸ்ட் பண்ணச் சொல்லி டாப்லருந்து ஆர்டர் வந்துதுன்னு கெஜ்ரிவால் பப்ளிக்கா சொன்னாரே?

கணேஷ்: அவர் சொன்னா அது உண்மையா ஆயிருமா? 

ஜோசப்: (கேலியுடன்) என்ன இருந்தாலும் அவர் முன்னாள் முதலமைச்சராச்சிங்களே?

கணேஷ்: (எரிச்சலுடன்) கடுப்படிக்காதீங்க ஜோசப். நாப்பது நாள் முதலமைச்சரா இருந்தா முன்னாள் முதலமைச்சராயிருவாரா? மோடி நாலு டேர்ம் முதலமைச்சரா சக்சஸ்ஃபுல்லா ஆட்சி பண்ணவர். இவர் யாருங்க அவர் ஒன்னுமே செய்யலேன்னு சர்ட்டிஃப்க்கேட் குடுக்கறதுக்கு? அதுவும் அவர் இருபது வருசம் செஞ்சத இவர் நாலு நாள் டூர் பண்ணி கண்டுபிடிச்சிருவாராம். போறப்பவே இவர் இப்படித்தான் சொல்லப் போறார்னு மீடியாவுக்கு மட்டுமில்லீங்க நம்மள மாதிரி சாதாரணவங்களுக்கும் தெரிஞ்சதுதானே? 

ஜோசப்: நீங்க சொல்றதும் ஒரு வகையில சரிதான். எனக்கும் அவர் அங்க போயி திடுதிடுப்புன்னு மோடிய மீட் பண்ணணும்னு சொன்னது சரியான கோமாளித்தனம்னுதான் தோனுது. பர்மிஷன் கிடைக்காதுன்னு தெரிஞ்சிதான் அந்த டிராமாவ போட்டார்னு நினைக்கேன். அவருக்கு வேண்டியதெல்லாம் தினமும் ஏதாவது ஒருவகையில மீடியா பப்ளிசிட்டி. 

கணேஷ்: அதுக்குன்னு இந்த மாதிரியெல்லாமா செய்வாங்க? ஒரு படிச்ச ஆள், அரசாங்கத்துல கொஞ்ச நாள் அதிகாரியா இருந்தவரு செய்யிற காரியமாங்க இது? கேவலமா இருக்கு.

ரஹீம்: சரிங்க. அவர் செஞ்சது சரின்னு நா சொல்ல வரலை. ஆனா மோடி நினைச்சிருந்தா கெஜ்ரிவால மீட் பண்ணி அவர் என்னதான் கேக்கறார்னு பாத்துருக்கலாமே?

கணேஷ்: அட நீங்க வேற பாய்! ரெண்டு பேருக்கும் இடையில தேவையில்லாத ஆர்க்யுமென்ட்தான் நடந்துருக்கும். இந்த மாதிரி நேருக்கு நேர் வா யார் பெரிய ஆள்னு பாத்துறலாம்கறதெல்லாம் சுத்த முட்டாத்தனம். இவருக்கு வேணும்னா அதெல்லாம் சாதாரண விஷயமா இருக்கலாம். ஆனா மோடி ரொம்ப சீரியசான ஆளு. இந்த மாதிரி சீப் பப்ளிசிட்டியெல்லாம் அவருக்கு தேவையே இல்ல.

ஜோசப்: (கேலியுடன்) அப்போ இந்த ச்சாய் பே சர்ச்சான்னு ஊர்ல இருக்கற டீக்கடையிலல்லெம் டிவிய வச்சிக்கிட்டு பேசறாரே அது ரொம்ப சீரியசான விஷயம்னு நினைக்கிறீங்களா கணேஷ்? 

கணேஷ்: அதுவும் ஒரு கேம்பெய்ன் ஐடியாதாங்க. ஃபேஸ்புக், ட்விட்டர் வழியா பண்றா மாதிரிதான் இதுவும்.

ஜோசப்: சரிங்க. இன்னொரு விஷயம் முந்தியெல்லாம் பிஜேபி எலெக்‌ஷன் கூட்டம்னா அத்வானி, சுஷ்மா, யஷ்வந்த், ஜெட்லி மாதிரி ஆளுங்கல்லாம் பேசுவாங்க. ஆனா இப்ப என்னடான்னா மோடிய தவிர யாருமே பேசறா மாதிரி தெரியலையே? 

ரஹீம்; கரெக்ட்டுங்க. இதப் பத்தி அத்வானியே கூட சொல்லி குறைபட்டுக்கிட்டாராமே?

கணேஷ்: அது என்னவோ சரிதாங்க. எதுக்கு இந்த மனுஷன் எல்லாத்தையும் தலைமேல போட்டுக்கிறாரோ தெரியல. கடைசியில இவர் நினைக்கிறா மாதிரி சீட்டு எண்ணிக்கை வரலைன்னா இவர ஓரங் கட்டுனாலும் கட்டிறுவாங்க போலருக்கு.

ஜோசப்: நா சொல்லலாம்னு நினைச்சேன், நீங்களே சொல்லிட்டீங்க. அப்படி நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. ஏன்னா  இவர் தேவையில்லாம கட்சியிலருக்கற எல்லா சீனியர்ஸையும் பகைச்சிக்கிட்டார் போலருக்கு. 

ரஹீம்: சரியா சொன்னீங்க ஜோசப். அதனாலதான இவர் போட்டி போடறதுக்கு தன்னோட தொகுதிய கூட மனோகர் ஜோஷி விட்டுக்குடுக்க முடியாதுங்கறார்? உண்மையிலயே இவர்தான் அடுத்த பிரதமர்னா இவங்கல்லாம் இப்படி பிஹேவ் பண்ணுவாங்களா?

ஜோசப்; ஆமாங்க தெரியாமத்தான் கேக்கறேன். இவர்தான் குஜராத்ல கிங்குன்னீங்க? அதுக்கப்புறம் எதுக்கு இவர் அங்க போட்டி போடாம உ.பிக்கு போறார்? 

ரஹீம்: அதான?

கணேஷ் பதிலளிக்காமல் அமர்ந்திருக்கிறார்.

ஜோசப்: சரி விடுங்க பாய். வேற ஏதாச்சும் பேசுவோம்.

ரஹீம்: அதான் கணேஷ் கொஞ்ச முன்னால கேட்டாரே ராஜாவ பத்தி!

கணேஷ்: கரெக்ட். அந்த ஊழலுக்கே இவர்தான் முக்கிய காரணம்னு பார்லி கமிட்டி ரிப்போர்ட்டே சொல்லுது. ஏறக்குறைய ஆறு மாசத்துக்கு மேல ஜெயில்ல வேற இருந்துருக்கார். இவர எப்படிங்க மறுபடியும் நாமிநேட் பண்ணலாம்?

ஜோசப்: (சிரிக்கிறார்) இதுக்கு மட்டும் எவ்வளவு லவுடா குரல் வருது  பாருங்க பாய்.

கணேஷ்: பேச்ச மாத்தாதீங்க. பதில சொல்லுங்க.

ஜோசப்: சரியில்லைதாங்க. ஆனா இதே கேஸ்ல ஜெயில்ல இருந்துட்டு வந்த கனிமொழிய ராஜ்யசபா மெம்பராக்கின மு.க.வுக்கு இத விட்டா வேற வழி இல்லீங்களே. அதான் அவர் மேல எந்த குற்றச்சாட்டும் இன்னும் நிரூபிக்கப்படலேன்னு சப்பைக் கட்டு கட்றார். 

ரஹீம்: ஜோசப். இவர் கட்சியில மட்டும் என்னங்க வாழுது? எட்டியூரப்பாவும் ஜெயில்ல இருந்துட்டு வந்தவர்தான? அப்புறம் அந்த ரெட்டி பிரதர்ஸ். அவங்களையும் மறுபடியும் கட்சியில சேத்துக்க மோடி ஒன்னும் அப்ஜக்‌ஷன் பண்லையாமே?

ஜோசப்: (சிரிக்கிறார்) கரெக்டா பாய்ன்ட புடிச்சிட்டீங்க பாய்.  காங்கிரஸ்லயும் கல்மாடி, பன்ஸால் மாதிரி ஆளுங்களுக்கு மறுபடியும் சீட் குடுக்கப் போறாங்களாமே? ஆனா ஒன்னுங்க, இப்படியெல்லாம் பாத்தா தேர்தல்ல நிக்கிறதுக்கு யாருமே கிடைக்க மாட்டாங்க போலருக்கே. ஊழல் வழக்குல சிக்காம இருக்கறவங்கல்லாம் நேர்மையானவங்கன்னு சொல்லிற முடியாது பாய். அவங்க இதுவரைக்கும் மாட்டலைன்னு கூட சொல்லலாம். 

ரஹீம்: நீங்க சொல்றதும் சரிதான். இதுவரைக்கும் ஊழல் பண்ணாதவங்கன்னு சொல்லித்தான் டெல்லியில புதுசா ஒரு கட்சிக்கு ஆளுங்க ஓட்டுப் போட்டாங்க. ஆனா என்ன ஆச்சி? எங்களுக்கு ஊழலுக்கு எதிரா கோஷம் போடத்தான் தெரியும் ஆட்சி பண்ணத் தெரியாதுன்னுட்டு அம்பது நாளைக்குள்ள வாபஸாய்ட்டாங்க. பேசறப்போ நல்லா பேசு எழுதறப்போ கோட்ட விட்ருன்னு நாகேஷ் சொல்வாரே அது மாதிரி மேடையில பேசறப்போ ஆவேசமா பேசினாங்க. ஆனா ஆட்சி பண்ண தெரியலையே?

ஜோசப்: (சிரிக்கிறார்) பாய் இன்னைக்கி ரொம்ப ஃபார்ம்ல இருக்கீங்க போலருக்கு ஒரே தத்துவமா அடிச்சி விடறீங்க?

மூவரும் சிரிக்கின்றனர். 

கணேஷ்: அப்புறம் இந்த கம்யூனிஸ்ட்டுங்க எதுக்கு தனியா நிக்கறதுன்னு டிசைட் பண்ணிட்டங்க? 

ஜோசப்: வேற என்ன செஞ்சிருக்க முடியும்னு நினைக்கிறீங்க? திமுக கூட சேர முடியாது. ஏன்னா 2ஜி. காங்கிரஸ் கூடயும் சேர முடியாது. ஏன்னா 2ஜி மாதிரி இன்னும் என்னென்னமோ இருக்கு. எனக்கென்னவோ இந்த டிசிஷந்தான் சரியான டிசிஷன்னு தோனுது. அவங்களுக்கு எங்க ஸ்ட்ரெங்த் இருக்கோ அங்க மட்டும் நின்னுக்க வேண்டியதுதான். ஜெயிச்சா லாபம். இல்லன்னா பெருசா நஷ்டம் எதுவும் இல்லை. ஜெயிக்கறதுக்காக எங்க வேணும்னாலும் போய் சேந்துக்குவாங்கன்னு நாளைக்கி யாரும் சொல்ல முடியாதுல்ல?

கணேஷ்: லாஜிக் நல்லாத்தான் இருக்கு. ஆனா மத்த எடங்கள்ல யார சப்போர் பண்ணுவாங்கன்னு நீங்க நினைக்கறீங்க?

ரஹீம்: அவங்க சப்போர்ட்டல்லாம் ஒரு சப்போர்ட்டா? நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்கள தவிர வேற எங்கயும் இவங்களுக்குன்னு யாரும் கிடையாது. அதிமுகக்கிட்ட கேட்ட மூனு தொகுதிங்கள்ல நின்னுக்க வேண்டியதுதான். அதுலயும் ஒன்னுலயும் இவங்க ஜெயிக்கப் போறதில்லேங்கறது வேற விஷயம். என்ன ஜோசப்?

ஜோசப்: கரெக்ட் பாய். இன்னைக்கி நீங்க சொல்றதெல்லாமே கச்சிதமா இருக்கு.

ரஹீம்: (சிரிக்கிறார்) எல்லாம் குருட்டாம் போக்குல அடிச்சி விடறதுதான். 

கணேஷும் ஜோசப்பும் அவருடைய சிரிப்பில் கலந்துக்கொள்கின்றனர்.

ஜோசப்: சரிங்க இந்த மூட்லயே இன்னைக்கி முடிச்சிக்கலாம். என்ன கணேஷ்?

கணேஷ்: (எரிச்சலுடன்) ஏங்க நா என்னவோ டெய்லி சண்டை போடறா மாதிரி சொல்றீங்க?

ரஹீம்: யோவ் ஆரம்பிச்சிறாத. நாளைக்கி பாக்கலாம். 

ஜோசப் சிரித்தவாறே எழுந்திருக்க கணேஷும் முனுமுனுத்தவாறே எழுந்து அவருடன் செல்கிறார். 

*********




07 மார்ச் 2014

ஜெயலலிதா பிரதமரானால் ஆதரிப்பேன் - மமதா!

தேர்தல் தேதிகள் அறிவித்துவிட்ட சூழலில் தமிழகத்திலும் சரி இந்திய அளவிலும் சரி அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்த வார துவக்கத்திலிருந்தே கூட்டணி விஷயமாக முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வந்தவண்ணம் இருப்பதைக் காண முடிகிறது. கூட்டணியில் இருப்பவர்கள் பிரிந்து செல்வது, பின்னர் எதிரணியிலிருந்து சாதகமான பதில் வராத சூழலில் மீண்டும் அதே அணிக்கு திரும்புவதையெல்லாம் பார்க்கும்போது இவர்களுக்கெல்லாம் சூடு சுரணையே இருக்காதோ என்றெல்லாம் கேட்க தோன்றுகிறது. கேட்டால் அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை நிரந்தர நண்பனும் இல்லை என்று சமாளிக்கிறார்கள். கவுண்டமனி பாணியில் இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா என்று ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் போலுள்ளது.

ஆகவேதான் இத்தகைய அரசியல் நிகழ்வுகளை விமர்சனம் செய்வதில் பலரும் முன்வருவதில்லை. ஆனாலும் நான் பதிவு எழுதத் துவங்கிய காலத்திலிருந்தே அரசியல் மற்றும் நாட்டு நடப்புகளை விமர்சித்து எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளேன். என்னுடைய தளத்தின் Tag Lineஏ 'உலகின் நடப்பவை என் பார்வையில்' என்பதுதான். துவக்கத்தில் இத்தகைய நிகழ்வுகள் என்னை எவ்வாறு பாதித்தன அல்லது இவைகளைப் பற்றிய என்னுடைய கருத்து என்ன என்பதை மட்டுமே பதிவு செய்து வந்திருந்தேன். ஆனால் இணையத்தில் வெளிவரும் பல பிரபல பத்திரிகைகளின் மின் பதிப்புகளில் வெளியாகும் பல அரசியல் கட்டுரைகளைப் படிக்கும்போது கட்டுரைகளை விடவும் சுவாரஸ்யமாக தெரிந்தது அவற்றிற்கு வரும் வாசகர்களின் எதிரும் புதிருமான கருத்துக்களே என்றால் மிகையாகாது. அப்போதுதான் என்னுடைய அரசியல் கட்டுரைகளையும் நண்பர்கள் சிலர் விவாதிக்கும் விதமாக அமைத்தால் என்ன தோன்றியது. இந்த பாணியில் எழுதும்போது என்னுடைய கருத்துக்களை மட்டுமல்லாமல் அதற்கு மாற்றாக எழக்கூடிய கருத்துக்களையும் கூட எழுத முடிகிறது. இத்தகைய மாற்றுக் கருத்துக்கள் இணையத்தில் வாசகர்கள் எழுதும் கருத்துக்களின் சாராம்சமே அல்லாமல் முழுக்க முழுக்க என்னுடைய கற்பனையல்ல. 

ஆகவே இனி வரும் அரசியல் விமர்சன பதிவுகளையும் இதே பாணியில் எழுதவே விரும்புகிறேன். என்னுடைய இந்த பாணியை மாற்றினால் நல்லது என்று கருத்துரைகளில் பதிவிட்ட பதிவுலக நண்பர்களின் பரிந்துரையை இந்த முடிவின் மூலம் அலட்சியப்படுத்துகிறேன் என்று யாரும் எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து படித்து தங்ககளுடைய மேலான கருத்துக்களை அவை மாற்றுக் கருத்துக்களாக இருந்தாலும் பதிவிட வேண்டுகிறேன்.

இனி கடந்த இரு நாட்களாக நடந்த அரசியல் கூத்துக்களை பார்க்கலாம்.

ரஹீம்: (கேலியுடன்) என்ன கணேஷ், கடைசியா கேப்டன இழுத்துப் போட்டுட்டீங்க போலருக்கு?

கணேஷ்: என்னங்க கேள்வியே நக்கலா இருக்கு? நாங்க என்னவோ அவர தேடிப் போய் சேத்துக்கிட்டா மாதிரி சொல்றீங்க?

ஜோசப்: (கேலியுடன்) அதானங்க உண்மை? பாய் கேக்கறதுல என்ன தப்பு?

கணேஷ்: சரிங்க அப்படியே வச்சிக்குவோம். அதுல என்ன தப்பு? ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாயி ஜெயிலுக்கு போய்ட்டு வந்திருக்கற லல்லு கூட ராகுல் கூட்டு வச்சிக்கலாம்னா நாங்களும் கேப்டன் கூட கூட்டு வச்சிக்கலாம் தப்பே இல்ல.

ஜோசப்: இங்க பாருங்க. அதைப் பத்தி அப்புறம் பேசலாம். நா கேக்கற கேள்விக்கி பதில் சொல்லுங்க.

கணேஷ்: (சலிப்புடன்) இதுல என்னங்க கேக்கறதுக்கு இருக்கு?

ஜோசப்: தேர்தல் நேரத்துல யார் கூட யார் கூட்டணி வச்சிக்கறதுங்கற விவஸ்தையே இல்லாம போயிருச்சிங்கறது வாஸ்தவந்தான். அதனால பிஜேபி கேப்டன் கூட கூட்டணி வச்சிக்கறதுல ஒன்னும் பெருசா தப்பு இல்லதான். ஆனா இந்த கூட்டணியால கேப்டனுக்குத்தான் லாபமே தவிர உங்க கட்சிக்கு பெருசா எதுவும் கிடைக்கப் போறதில்லை. அது ஏங்க உங்களுக்கு தெரிய மாட்டேங்குது?

கணேஷ்: எதுக்கு அப்படி சொல்றீங்க?

ஜோசப்: சொல்றேன். கேப்டனுக்குன்னு முன்னால இருந்த ஓட் ஷேர்லாம் இப்ப இல்ல. அத்தோட ஏற்கனவே கேப்டன தீவிரமா எதிர்த்துக்கிட்டிருந்த கட்சி பாமக. அதே கூட்டணியில கேப்டன் கட்சியையும் சேர்த்தா இது வெறும் சந்தர்ப்பவாத கூட்டணின்னு ஜனங்க ரிஜெக்ட் பண்ணிருவாங்க. அது கேப்டனுக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் அவர் இந்த கூட்டணிக்கு ஒத்துக்கிட்டார்னா அதுக்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். பிஜேபியோட கூட்டணி வச்சி தமிழ்நாட்டுல பெருசா எதுவும் சாதிக்க முடியலைன்னாலும் சென்ட்ரல்ல அடுத்த மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்ணப் போறது பிஜேபின்னு கேப்டனுக்கு நல்லா தெரியும். அப்போ நாங்க உங்களோட சேர்ந்ததாலதான் எங்களுக்கு கிடைக்கறதா இருந்த ஒன்னு ரெண்டு சீட்டும் போயிருச்சி. அதனால மினிஸ்ட்ரியில ஒன்னோ ரெண்டோ போஸ்ட்டிங் எங்களுக்கு குடுங்கன்னு கேக்கலாமில்ல? அதான். 

ரஹீம்: கரெக்ட். இவர் மட்டுமில்ல பாஜக, மதிமுகன்னு ஆளாளுக்கு கேக்கத்தான் போறாங்க, பாத்துக்கிட்டே இருங்க.

கணேஷ்: (அலட்சியத்துடன்) அத அப்போ பாத்துக்குவோம், உங்களுக்கு எதுக்குங்க அந்த கவலையெல்லாம்?

ஜோசப்ள் (சிரிக்கிறார்) அதாவது ஜெயிக்கறப்போ பாத்துக்கலாம்கறீங்க. அப்போ உங்களுக்கே மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்றதுல நம்பிக்கையில்ல, அப்படின்னு எடுத்துக்கலாமா?

கணேஷ்: அட நீங்க வேற. நா சொல்ல வந்தது மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்றப்போ பாத்துக்கலாம்னு...

ரஹீம்: ஜோசப் இவர் சொல்ல வர்றது புரியுதா? அதாவது மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்றப்போ இவங்கள யார் கண்டுக்கப்போறா, அப்படித்தானங்க?

ஜோசப்: (சிரிக்கிறார்) அப்படியும் வச்சிக்கலாம். ஆனா ஒன்னுங்க, தேதிமுக திமுகவோட சேர்ந்திருந்தா நாலஞ்சி இடத்துலயாவது ஜெயிச்சிருக்கலாம். ஏன்னா திமுகவுக்குன்னு இருக்கற வோட் ஷேர் இவங்களுக்கு வந்துருக்கும். இவர் சேர்ந்துருக்கற கூட்டணியில இருக்கற எந்த கட்சிக்குமே பெருசா வோட் ஷேர் இருக்கறா மாதிரி தெரியல. 

கணேஷ்: (எரிச்சலுடன்) இங்க பாருங்க. ஒன்னு சொல்லிக்கறேன். இப்ப வீசுறது மோடி அலை. நீங்க சொல்றது இதுவரைக்கும் நடந்த தேர்தலுங்களுக்கு வேணும்னா பொருத்தமா இருந்துருக்கலாம். இந்த தடவை இந்த மாதிரி கேல்குலேஷன்லாம் மோடி அலையில அடிபட்டுப் போயிரும். 

ரஹீம்: சரி ஜோசப் இவர் சொல்றதையேத்தான் சொல்லிக்கிட்டிருப்பார். வேற விஷயத்த பேசுவோம்.

கணேஷ்: ஏன் ஒங்க மேடம் கம்யூனிஸ்ட்டுங்கள கழட்டி விட்டுட்டாங்களே அதப் பத்தி பேசுங்களேன்.

ரஹீம்: என்னது எங்க மேடமா? 

ஜோசப்: (சிரிக்கிறார்) அவங்க இவங்களோட மேடம் இல்லையே. அதான் உங்க மேடம்னு சொல்றார். அதானங்க?

கணேஷ்: கடுப்படிக்காதீங்க ஜோசப். மேட்டருக்கு வாங்க. கம்யூனிஸ்ட்டுங்களுக்கு இத விட அவமானம் வேணுமா?

ஜோசப்: அதென்னவோ உண்மைதான். ஆளுக்கு ஒரு சீட்டுதான், வேணும்னா இருங்க இல்லன்னா ஓடுங்கன்னு சொன்னா மாதிரிதான இருக்கு?

ரஹீம்: இது மேடம் நாப்பது சீட்டுக்கும் வேட்பாளர்ங்கள அறிவிச்சப்பவேதான் க்ளியரா தெரிஞ்சிருச்சே. இவங்கதான் வெக்கங்கெட்டுப் போய் காத்துக்கிட்டே இருந்தாங்க. அதுக்கு மேடம் என்ன பண்ணுவாங்க? நாசூக்கா சொல்றப்பவே வெளியேறியிருக்கணும். 

கணேஷ்: சரிங்க. ஆனா நீங்க எங்கக்கிட்ட வந்தா நாங்க சேத்துக்கறோம்னு கலைஞர் சொல்றது கலைஞ்சிருக்கற குட்டையில மீன் புடிக்க நினைக்கிறாமாதிரிதான அதுக்கு என்ன சொல்றீங்க?

ஜோசப்: அதுவும் அரசியல்தான். ஆனா ஒன்னு, குட்டைய கலக்கிவிட்டது அவர் இல்ல. 

ரஹீம்: எனக்கென்னவோ கம்யூனிஸ்ட்டுங்க இந்த தடவ தனியாத்தான் நிப்பாங்கன்னு தோனுது. 

ஜோசப்: என்னவோ போங்க. ஒவ்வொரு சீட்டுலயும் மும்முனை நால்முனை போட்டின்னு வந்தா அது அதிமுகவுக்குத்தான் லாபம். மேடம் சொல்லிக்கிட்டிருந்தா மாதிரி நாப்பதும் அவங்களுக்கே போனாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. அதனாலதானோ என்னவோ மமதா மேடம் பிரதமர் பதவிக்கு ஜெயா மேடம் வர்றத நா ஆதரிக்கிறேன்னு திடீர்னு ஒரு குண்ட தூக்கி போட்டுட்டாங்க.

ரஹீம்: அப்படியா? எப்போ?

ஜோசப்: நேத்து ஒரு டிவி இன்டர்வ்யூவுல மமதா ரொம்ப க்ளியராவே சொல்லிட்டாங்க.

கணேஷ்: அட நீங்க வேறங்க. அதிமுக கம்யூனிஸ்ட்ட நோஸ் கட் பண்ணி அனுப்பிட்டாங்கன்னு அவங்க கேள்விப்பட்டிருப்பாங்க. அதான் எதிரிக்கி எதிரி நண்பன்ங்கறா மாதிரி ஜெயா மேடத்த ஆதரிக்கிறா மாதிரி...

ஜோசப்: அப்படியும் இருக்கலாம். ஆனா கொஞ்ச நாள் முன்னால வரைக்கும் என் தலைமையிலான கூட்டணிதான் அடுத்த மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்ணும்னு சொல்லிக்கிட்டிருந்தவங்க திடீர்னு ஜெயா மேடம் தலைமைக்கு ஆதரவுன்னு சொல்றதுக்குப் பின்னால ஏதோ இருக்குன்னுதான் தோனுது. 

கணேஷ்: (எரிச்சலுடன்) அந்தம்மா ஒரு நாளைக்கி ஒன்னு பேசுவாங்க ஜோசப். அதையெல்லாம் பெருசா எடுத்துக்கறதுல அர்த்தமே இல்ல. அப்படியொரு சிச்சுவேஷன் வரவே வராது. நீங்க வேணா பாருங்க.

ரஹீம்: அப்புறம் இன்னொசு விஷயம் கேள்விப்பட்டேனே. இன்னைக்கி தந்தி டிவியில கூட சொன்னாங்க.

ஜோசப்: தந்தி டிவியிலயா? நியூஸ்லயா? நான் பாக்கலையே!

ரஹீம்: நியூஸ்ல இல்ல. காலையில மெய்பொருள் காண்பதறிவுன்னு ஒரு ப்ரோக்ராம் வருமே. அதாங்க நியுஸ் பேப்பர்ங்கள்ல அன்னைக்கி காலையில வந்திருக்கற எல்லா நியூஸ் ஐட்டம பத்தியும் ரெண்டு பேர் அலசறா மாதிரி....

ஜோசப்: ஓ அதுவா? நா அந்த ப்ரோக்ராம பாக்கறதில்லை. அதுல சும்மா வம்படிக்கறதுதான் நடக்குமே தவிர உருப்படியா எதுவும் பேச மாட்டாங்களே?

கணேஷ்: (சிரிக்கிறார்) அந்த மாதிரி வம்பு பேச்சுத்தான் பாய்க்கு ரொம்ப புடிக்கும். என்ன பாய்?

ரஹீம்: யோவ், என்ன நக்கலா?

ஜோசப்: அவர விடுங்க. அதுல என்ன சொன்னாங்க, சுருக்கமா சொல்லுங்க.

ரஹீம்: போன வாரம் நம்ம சிதம்பரம் ஸ்டாலின கூப்ட்டு நாம ரெண்டு பேரும் மறுபடியும் சேர்ந்து போட்டி போட்டா நம்ம ரெண்டு பேருக்குமே நல்லதுங்கறா மாதிரி சொன்னாராம். 

ஜோசப்: உண்மையாவா?

ரஹீம்: அப்படித்தான் சொன்னாங்க. அதுக்கு ஸ்டாலின் இல்லைங்க அதெல்லாம் சரி வராது. இப்ப இருக்கற சூழ்நிலையில நாம கூட்டு சேர்ந்தா நல்லாருக்காதுன்னுதான் தலைவர் ஏற்கனவே சொல்லிட்டாரே. பொதுக்குழுகூட்டத்துலயும் அந்த மாதிரிதான் எல்லா தொண்டர்களும் சொன்னாங்க. அதனால தேர்தல் முடியட்டும் அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லி கட் பண்ணிட்டாராம்.

ஜோசப்: ஸ்டாலின் சொல்றதுல தப்பே இல்லைங்க. இப்ப இருக்கற சிச்சுவேஷன்ல இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா அதப்பாத்து சந்தோஷப்படப் போறது மேடம்தான். அது ஸ்டாலினுக்கு நல்லாவே தெரியும். 

கணேஷ்: ஆனா கலைஞருக்கு இப்பவும் அந்த ஐடியா இல்லாம இல்லேன்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க?

ஜோசப்: இருக்கலாம். ஆனா இப்ப ஸ்டாலின் சொல்றத எதிர்த்து பேசற தைரியம் அங்க யாருக்குமே இல்ல போலருக்கு. அதனால இப்படியொரு கூட்டணி அமையறதுக்கு சான்ஸே இல்லை.

ரஹீம்: அப்படியும் சொல்ல முடியாதுங்க. திமுக வேட்பாளர் லிஸ்ட் வர்ற வரைக்கும் என்ன வேணும்னா நடக்கலாம். ஏன்னா ஒருவேளை காங்கிரஸ் யாரும் எதிர்பார்க்காம ஜெயிச்சி வந்துட்டா பென்டிங்ல இருக்கற 2G கேஸ்ல மாட்டிக்கிட்டிருக்கற கனிமொழி பாடெல்லாம் திண்டாட்டமாயிருமே?

கணேஷ்: (சிரிக்கிறார்) வந்தாத்தான? அதுக்கு சான்ஸே இல்லை. இது உங்களுக்கு தெரியுதோ இல்லையோ ஸ்டாலினுக்கு நல்லாவே தெரியும். அதான் சிதம்பரத்துக்கிட்டவே அப்படி பேசியிருக்கார். 

ஜோசப்: நீங்க சொல்றதும் ஒருவகையில சரிதான். மீதிய நாளைக்கி பேசிக்கலாமா?

ரஹீம்: இருங்க ஜோசப். ஒன்னேயொன்னு. 

ஜோசப்: சொல்லுங்க.

ரஹீம்: நம்ம கெஜ்ரிவால் குஜராத்ல போயி ஒரு பெரிய கலாட்டாவே பண்ணிருக்காரே?

ஜோசப்: ஐயோ, அதப் பத்தி பேசினா இன்னைக்கி முழுசும் போயிருமே.... எனக்கு அர்ஜன்டா போகணுங்க... நாளைக்கி பேசிக்கலாம். 

ஜோசப் எழுந்து நிற்க வேறு வழியில்லாமல் ரஹீம் பாயும் கணேஷும் எழுந்து அவரை வழியனுப்புகின்றனர்.

******** 




05 மார்ச் 2014

தமிழ்நாட்டில் ஏப்ரல் 24ல் தேர்தல்!

ரஹீம் பாயின் வீட்டுத் திண்ணையில் அவரும் கணேஷும் அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கின்றனர். ஜோசப் அவசர, அவசரமாக வந்து அமர்கிறார்.

ரஹீம்: என்னங்க வந்தது லேட்டு ஆனா அவசரமா வரா மாதிரி ஆக்ட் குடுக்கறீங்க?

ஜோசப்: இன்னைக்கி எலெக்‌ஷன் டேட்ஸ் சொல்றாங்களே அத டிவியில பாத்துட்டு வர்றதுக்கு லேட்டாயிருச்சி.

கணேஷ்: இங்க வந்து மூனு பேரும் சேர்ந்து பாய் வீட்டு டிவியில பாக்கலாம்னு சீக்கிரமா வந்தா இந்த ஏரியாவுல பவர்கட்டாம். நாங்க ஆட்சிக்கு வந்தா ஒரே வருசத்துல பவர்கட்ட போக்கிறுவோம், தமிழ்நாட்ட மின்மிகை மாநிலமா ஆக்கிருவோம்னுல்லாம் சொன்னாங்க. ஆனா மூனு வருசம் ஆவப்போவுது இன்னும் பெருசா எதுவும் செஞ்சதா தெரியல. 

ஜோசப்: (சிரிக்கிறார்) ஆரம்பிச்சிட்டீங்களா? ஏங்க, போன மூனு மாசம் முன்னால வரைக்கும் டெய்லி ரெண்டு மணி நேரம் பவர்கட் இருந்துச்சே இப்ப இல்லேல்ல? அத மட்டும் சொல்ல மாட்டேங்கறேங்க?

கணேஷ்: அப்போ இன்னைக்கி இங்க ஏன் பவர் இல்லே?

ஜோசப்: ஏதாச்சும் ஃபால்ட்டா இருக்கும். இல்லே மாசம் ஒரு நாள் மெய்ன்ட்டனன்ஸ்சுக்கு கட் பண்ணுவானே அதுவாருக்கும். பேப்பர்ல பாத்தீங்களா பாய்?

ரஹீம்: இன்னைக்கி பேப்பர்ல ஒன்னும் போட்டா மாதிரி தெரியல.

ஜோசப்: அட என்ன பாய், இன்னைக்கி பவர்கட்டுன்னா நேத்தைக்கி பேப்பர்லதான் போட்ருப்பான். நீங்க பாக்காம விட்ருப்பீங்க.

ரஹீம்: சரி அத விடுங்க. நீங்கதான் பாத்தீங்களே சொல்லுங்க. இங்க என்னைக்கி தேர்தல்?

ஜோசப்: ஏப்ரல் 24ல. முன்னெ மாதிரில்லாம் இல்லாம இந்த தடவ ஒரே தேதியில தமிழ்நாடு முழுசுக்கும் தேர்தலாம். 

கணேஷ்: அப்போ ரிசல்ட்?

ஜோசப்: (சிரிக்கிறார்) அதுக்கு முழுசா ஒரு மாசம் காத்துக்கிட்டிருக்கணும் போலருக்கு. கடைசியா உ.பியில மே மாசம் 12ம் தேதி. அதனால மே பதினாறாம் தேதிதான் ரிசல்ட் வருமாம்.

ரஹீம்: என்ன அக்கிரமம் பாருங்க. ஓட்டு போட்டமா ரிசல்ட் வந்துதான்னு இல்லாம ஓட்டுப் போட்டு நாப்பது நாள் வரைக்கும் காத்துக்கிட்டிருக்கணும். முன்னெல்லாம் இப்படியா நடத்துனாங்க? அதாவது இருபது வருசத்துக்கு முன்னால? எல்லாம் இந்த சேஷன் வந்ததுக்கப்புறம்தான்! 

ஜோசப்: நீங்க சொல்றது உண்மைதான். ஆனா முன்னாலல்லாம் ஓட்டுக்கு காசு குடுக்கறது கள்ள ஓட்டு போடறதுங்கறதெல்லாம் அவ்வளவா இல்லீங்களே பாய். ஒவ்வொரு ஓட்டு பூத்துக்கு முன்னாலயும் நாலஞ்சி கான்ஸ்டபிள்ஸ் நின்னா போறும். எந்த ப்ராப்ளமும் இல்லாம நடந்து முடிஞ்சிரும். இப்ப அப்படியா? 

கணேஷ்:  எனக்கு நல்லா ஞாபகம் இருக்குங்க. எழுபதுகள்ல ஓட்டு பூத் வரைக்கும் கூட கட்சிக்காரங்க வண்டி ஏற்பாடு பண்ணி கொண்டு விடுவாங்க. இறக்கி விடறப்போ மறக்காம நம்ம சின்னத்துல குத்திருங்கன்னு சொல்வாங்க. அப்பல்லாம் நாலஞ்சி நாள்லயே ரிசல்ட் சொல்லிறுவாங்களே?

ரஹீம்: பூத் வரைக்கும் கொண்டு போய் விடுவாங்கதான். ஆனா ஓட்டுப் போட்டுட்டு திரும்பி வர்றப்ப ஒரு பயலும் கண்டுக்கமாட்டான். 

ஜோசப்: (சிரிக்கிறார்) அவங்களுக்கு வேலை ஆவணும். அதுக்கப்புறம் ஒங்க தயவு வேணாம்ல? அதான்.

கணேஷ்: சரிங்க. நேத்து CNN-IBN டிவியில தமிழ்நாட்டுல நடத்துன எலக்‌ஷன் ட்ராக்கர் ரிசல்ட்ட போட்டானே பாத்தீங்களா?

ஜோசப்: அத விட்டா நமக்கு என்ன வேலைங்க? ஆனா போன வாரம் C-Voterஐ பத்தி ஒரு நியூஸ் வெளியில வந்தது அப்படியே மனசுல நிக்கிறதால இதுவும் அப்படித்தான் இருக்குமோன்னு ஒரு டவுட்டோடயே பாக்க வேண்டியதா போச்சி. 

ரஹீம்: அதென்ன ஜோசப் C-Voter? அப்படியென்னா செஞ்சாங்க?

ஜோசப்: அது ஒரு கருத்துக் கணிப்பு கம்பெனி பாய். இந்தியா முழுசும் போய் லேட்டஸ்ட் ஓட்டர் லிஸ்ட்லருக்கற  வாக்காளர் சிலர சந்திச்சி நீங்க இந்த தடவ யாருக்கு ஓட்டுப் போடப் போறீங்கன்னு கருத்து கேட்டு அவங்க சொல்றத வச்சி அந்த தொகுதியிலருக்கற மொத்த வாக்காளர்ங்களும் யாருக்கு போடுவாங்கன்னு எஸ்ட்டிமேட் போடுவாங்க. இவங்க செய்யிற வேலை உண்மையிலேயே நம்பக்கூடியதான்னு செக் பண்றதுக்கு அவங்கள ஒரு நியூஸ் சானல் காரங்க ரகசிய மைக்கோட போயி நாங்க உங்களுக்கு இவ்வளவு தரோம் நாங்க சொல்ற பார்ட்டிக்குத்தான் ஆதரவு ஜாஸ்தின்னு சொல்லணும்னு சொல்லியிருக்காங்க. அவங்களும் இது இதுக்கு இன்னின்ன ரேட்டுங்கறா மாதிரி சொல்லியிருப்பாங்க போலருக்கு. அவங்க சொன்னது அப்படியே ரெக்கார்டாயிருச்சி. எத வச்சி வேணும்னாலும் காசு பாத்தா போறும்னு நினைச்ச அந்த சானல்காரங்க இந்த டேப்ப எல்லா நியூஸ் சானலுக்கும் அனுப்பிட்டாங்க. 

ரஹீம்: அடப்பாவிங்களா? இதனாலதான் இது கருத்து கணிப்பு இல்ல கருத்து திணிப்புன்னு காங்கிரஸ் காரங்க சொல்றாங்களா?  

கணேஷ்: (சிரிக்கிறார்) அட நீங்க வேற பாய் எல்லா கணிப்புமே அவங்களுக்கு எதிரா வர்றதால அப்படி சொல்றாங்க. இதுவே அவங்களுக்கு சாதகமா வந்திருந்தா இப்படியெல்லாம் புலம்ப மாட்டாங்க.

ஜோசப்: அப்போ நீங்க புலம்புவீங்க அப்படித்தானங்க?

ரஹீம்: (சிரிக்கிறார்) அப்படி போடுங்க அருவாள!

கணேஷ்: (கடுப்புடன்) எல்லாத்துக்கும் ஜால்ரா போடாதீங்க பாய். 

ரஹீம்: சரி நம்ம சண்டைய அப்புறம் வச்சிக்கலாம். ஜோசப் நேத்து தமிழ்நாட்ட பத்தி சொன்னாங்கன்னு சொன்னீங்களே அத சொல்லுங்க.

கணேஷ்: (குறுக்கிட்டு) அதான் நீங்களே சொல்லிட்டீங்களே பாய் கருத்து திணிப்புன்னு இதுவும் அத மாதிரிதான். விட்டுத்தள்ளுங்க வேற எதைப் பத்தியாவது பேசலாம்.

ரஹீம்: யோவ் நீ இப்படி சொல்றதுலருந்தே இதுல ஏதோ வில்லங்கம் இருக்கும்னு தோனுது. ஜோசப் நீங்க சொல்லுங்க, யார் ஜெயிப்பாங்களாம்?

ஜோசப்: கணேஷ் சொல்றா மாதிரிதான் இருக்குமோன்னு எனக்கும் தோனத்தான் செய்யிது பாய். ஏன்னா ரெண்டு மாசம் முன்னால வரைக்கும் அதிமுகவுக்குத்தான் எங்க ஓட்டுன்னு சொல்லிக்கிட்டிருந்தவங்க அவ்வளவு சீக்கிரம் மாறிருவாங்களா என்ன?

ரஹீம்: (பொறுமையிழந்து) அது இருக்கட்டுங்க. யாருக்கு எத்தன சீட் கிடைக்குமாம்? அதச் சொல்லுங்க.

ஜோசப்: சொல்றேன், சொல்றேன், அதிமுகவுக்கு 16லருந்து 20 சீட் கிடைக்குமாம், அதாவது மொத்த சீட்டுல அம்பது பர்சன்ட். திமுகவுக்கு பத்துலருந்து பதினாறு சீட் கிடைக்குமாம், காங்கிரசுக்கு நாலு சீட் வரைக்கும் கிடைக்குமாம். மீதி இருக்கறது தேதிமுக, மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் மாதிரி கட்சிங்களுக்கு கிடைக்குமாம்.

ரஹீம்: அப்போ பாஜகவுக்கு?

ஜோசப்: ஓ! அத விட்டுட்டேனா? அவங்களையும் மீதி இருக்கற கட்சிங்களோட சேத்துக்கலாம். ஒன்னோ ரெண்டோ கிடைச்சா லாபம்.

கணேஷ்: அட நீங்க ஒன்னுங்க. நாடு முழுசும் மோடி அலை வீசுதுங்கறாங்க. இங்க மட்டும் வீசாதாக்கும்? இதெல்லாம் சும்மா...

ஜோசப்: நீங்க சொல்றா மாதிரியும் நடக்கலாம். தமிழ்நாட்ட பொறுத்தவரைக்கும் இது வரைக்கும் எந்த எலக்‌ஷன் கருத்துக் கணிப்பும் கரெக்டா இருந்ததில்லையாம். அவங்களே ஒத்துக்கறாங்க. 

ரஹீம்: அப்படியா? அப்பறம் எதுக்குங்க மறுபடியும் மறுபடியும் இப்படி சொல்லி கன்ஃப்யூஸ் பண்றாங்க?

கணேஷ்: இதெல்லாம் காசு பண்ற வேலைங்க. எலெக்‌ஷன் டைம்ல இப்படியெல்லாம் செஞ்சாத்தான் நியூஸ் சேனல்காரங்களுக்கு விளம்பரம்லாம் வரும். ஜனங்களுக்கும் இதுல பயங்கர இன்ட்ரஸ்ட் இருக்கே. நடக்குதோ இல்லையோ யாருக்கு சாதகமா கணிப்பு வருதோ அந்த கட்சிக்காரங்களுக்கு சந்தோஷம். 

ஜோசப்: இத விட தமாஷ் என்னன்னா நாடு முழுசும் மோடிதான் பிரதமரா வரணும்னு சொல்றப்போ தமிழ்நாட்டுல மட்டும் ராகுலுக்கு ஜாஸ்தி ஆதரவாம்? இத என்னன்னு சொல்றது?

ரஹீம்: அப்படியா? இருக்கும்ங்க. நம்ம ஆளுங்களுக்கு இந்திரா காந்தி குடும்பம்னாலே ஒரு அட்ராக்‌ஷந்தான். அதுமட்டுமில்லாம ராஜீவோட சாவுக்கும் நாமளும் ஒரு காரணம்தானே. நம்ம போலீஸ் மட்டும் இன்னும் கொஞ்சம் உஷாரா இருந்துருந்தா அது நடந்துருக்காதுங்கற எண்ணமும் நம்ம ஆளுங்க மனசுல இப்பவும் இருக்குதே?

கணேஷ்: அட நீங்க வேற பாய். அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. இது முழுக்க முழுக்க ஒரு பேய்ட் (paid) சர்வே. வேற ஏதாச்சும் இருந்தா பேசுவோம் இல்லன்னா நாளைக்கி பாக்கலாம். 

ஜோசப்: சிரித்தவாறே எழுந்திருக்கிறார். சரிங்க நாளைக்கி மீட் பண்லாம். இப்ப கணேஷ் இருக்கற மூடுல போன வாரம் செஞ்சா மாதிரி எழுந்து போயிருவார் போலருக்கு. 

கணேஷ்: அதெல்லாம் ஒன்னுமில்லீங்க. இந்த மாதிரி முழு பூசணிக்காய சோத்துல மறைக்கிறா மாதிரி பேத்தலாருக்கேன்னு சொல்ல வரேன். 

ரஹீம்: சரி விடுங்க ரொம்பத்தான் டல்லாய்ட்டீங்க? மீதிய நாளைக்கி பேசிக்கலாம்.

**********

பி.கு. கடந்த இரு வாரங்களாக திண்ணை பதிவின் நீளம் அதிகமாக இருப்பதாக சில நண்பர்கள் கூறியதால் இந்த வாரம் முதல் வாரம் இரண்டு அல்லது மூன்று பதிவுகளாக இடலாம் என்று எண்ணியுள்ளேன்.