11 பிப்ரவரி 2014

கொட்டித் தீர்த்துவிடு!

Laugh the world laughs with you weep and you weep alone என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நீ சிரிக்கும்போது உலகமே உன்னுடைய இணைந்து சிரிக்கும் அழும்போதோ நீ தனிமையில்தான் அழவேண்டும்.
 
ஆனால் ஓஷோ இதையே மாற்றி கூறுவதைப் பார்க்கிறோம். நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது உலகம் உன்னுடன் சேர்ந்து மகிழ்ச்சியடைவதில்லை. மாறாக உன்னைப் பார்த்து பொறாமை கொள்கிறது. ஆனால் நீ துயரத்தில் இருக்கும்போது உன் மீது ஏற்படும் பச்சாதாப உணர்வினால் உன்னுடைய துயரத்தில் பங்கு கொள்ள வருகிறது என்கிறார்.
 
இவ்விரு நேர் மாறான கருத்துக்களுமே உண்மைதான்.
 
நம்முடைய சிரிப்பு நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் தொற்றிக்கொள்வதை பார்த்திருக்கிறோம். அதாவது நம்முடைய வெற்றியை தங்களுடைய வெற்றியாக ஏற்றுக்கொள்பவர்கள் நம்முடைய வெற்றிச் சிரிப்பில் மகிழ்வுடன் கலந்துக்கொள்கிறார்கள். குறிப்பாக ஒரு கட்சியின் வேட்பாளர் தேர்தலில் வெற்றியடையும்போது அவர் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்கள் அதை தங்களுடைய வெற்றியாக மகிழ்ந்து கொண்டாடுவதை பார்க்கிறோம். அதே போல் ஒரு நடிகரின் வெற்றியை அவருடைய ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். ஓரு மாணவனின் வெற்றியை அவனுடைய ஆசிரியர் அதை தன்னுடைய வெற்றியாக கருதுகிறார். ஒரு மகனின் வெற்றியை அவனுடைய தாய், தந்தையர் கொண்டாடுகின்றனர்.
 
துயரமும் ஒரு வகையில் அப்படித்தான். ஒருவருடைய இறப்பால் ஏற்படும் துயரம் அவரை சார்ந்துள்ளவர்களை மட்டுமல்லாமல் அந்த இறப்பால் எவ்வித இழப்பும் ஏற்பட வாய்ப்பில்லாதவர்களையும் கூட தொற்றிக் கொள்கிறது. மகிழ்ச்சிக்கு கூறிய அதே சான்றுகளை துயரத்திற்கும் கூறலாம். ஒரு தலைவனின் தோல்வி அவனுடைய தொண்டர்களையும் ஒரு தனிமனிதனின் தோல்வி அவனுடைய நண்பர்களையும் ஒரு மகனின், ஒரு மகளின் தோல்வி அவனுடைய பெற்றோர்களையும் ஒரு மாணவனின் தோல்வி அவனுடைய ஆசிரியரையும் துயருறச் செய்கிறது.
 
அப்படியிருக்கும் போது இந்த ஆங்கிலப் பழமொழி எப்படி உருவானது?
 
மகிழ்ச்சி என்பது ஒருவருடைய விடாமுயற்சியின் பயனாக கிடைத்த வெற்றியாக இருக்கும் சூழலில் உலகம் அவருடைய விடாமுயற்சியை பாராட்டுகிறது. அவனுடைய வெற்றியில் தன்னை இணைத்துக்கொள்ள விரும்புகிறது. ஆகவேதான் நீ சிரிக்கும்போது உலகம் உன்னுடைய சிர்ப்பில் இணைந்துக்கொள்கிறது என்கிறார்கள்.
 
மாறாக துயரம் ஒருவருடைய தோல்வியால் அதாவது எவ்வித உழைப்பும் இல்லாமல் ஏற்படும் தோல்வியாலோ அல்லது நம்முடைய கவனக் குறைவால் ஏற்படும் இழப்பாலோ ஏற்படும் சூழலில் உலகம் உன்னுடைய இழப்புக்கு நீதானே பொறுப்பு என்று நம்மை விட்டு விலகிச் செல்ல நினைக்கிறது. நம்மை நம்முடைய துயரத்திலேயே விட்டு விலகி விடுகிறது.
 
இதற்கு இன்னும் ஒரு காரணம் உள்ளது.
 
வெற்றியால் கிடைக்கும் மகிழ்ச்சியை நாம் விரும்பிச் சென்று பிறருடன் பகிர்ந்துக் கொள்கிறோம். உலகிற்கு பறைசாற்றுகின்றோம். ஆனால் நம்முடைய தோல்வியை நம்முடைய இழப்பை நமக்குள்ளேயே வைத்து புழுங்குகிறோம். நான் தோல்வியடைந்துவிட்டேன் என்பதை யாரும் உலகிற்கு பறைசாற்றுவதில்லை. நம்முடைய இழப்பில் துயருறும் நம்முடைய சொந்தங்களிடம் மட்டுமே பகிர்ந்துக்கொள்ள முன்வருகிறோம்.  ஆகவேதான் உலகம் நம்முடைய துயரத்தில் பங்கு கொள்வதில்லை.
 
எப்போதும் முக மலர்ச்சியுடன் காணப்படும் ஒருவர் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் கவனத்தை கவர்வதைப் பார்க்கிறோம். மாறாக எப்போதும் சோகத்துடன் அழுது வடிந்துக்கொண்டிருப்பவரை விட்டு அனைவரும் விலகிச் செல்லவே விரும்புகின்றனர்.
 
மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும்போது அது மென்மேலும் பெருகும் என்பார்கள். மாறாக துக்கத்தை பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும்போது அது குறையுமாம்!
 
ஆனால் நம்மில் பலரும் இதை உணர்வதில்லை. நம்மில் பலருக்கும் நம்முடைய துயரத்திலேயே மூழ்கி இருப்பது ஒருவித நிம்மதியை அளிக்கிறது. என்னுடைய துயரம் என்னுடனேயே போகட்டும் உங்களுக்கு வேண்டாம் என்று ஆறுதல் கூற வருபவர்களையும் ஒதுக்கி விடுவதை பார்க்கிறோம். துயரத்தில் மூழ்கிப் போவதும் ஒரு சுகமான அனுபவம்தான் என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
 
மகிழ்ச்சியும் துயரமும் துக்கமும் இரவும் பகலும் போல மாறி மாறி வரும் உணர்வுகள். இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பது எவ்வாறு சாத்தியமில்லையோ அதே போல எப்போதும் துயரத்திலேயே மூழ்கியிருப்பதும் சாத்தியமில்லை.
 
ஆங்கிலத்தில் down in the dump என்பார்கள். சோகத்தின் அடிமட்டத்திற்கே சென்றுவிடுவது மனித இயல்புதான். அதிலிருந்து உடனே மீள்வது என்பது ஒரு சராசரி மனிதனால்  எளிதில் முடியாது என்பதும் உண்மைதான். ஆகவேதான் அதீத கோபத்தை கையாள்வது எப்படி என்று பயிற்றுவிப்பதைப் போலவே அதீத துயரத்திலிருந்து மீள்வது எப்படி என்பதை பயிற்றுவிப்பதற்கும் பல பயிற்சியாளர்கள் உள்ளனர்.
 
அதீத கோபம் ஒரு சிலருக்குத்தான் வரும் என்பார்கள். ஆனால் துயரம், சோகம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். Born with the silver spoon எனப்படும் செல்வந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவருக்கும் வரலாம். ஏனெனில் உலகில் தோல்வியைச் சந்திக்காத மனிதர்களே இல்லையே. தோல்விதான் வெற்றி என்னும் உச்சத்தை அடைய உதவும் ஏணியின் முதல் படி என்கிறார்களே!
 
நாம் சோகத்தில் இருக்கும்போது எதற்கு எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது என்கிற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. ஆனால் சோகம் நமக்கு மட்டுமே சொந்தமானதல்ல. இந்த அடிப்படை உண்மையை நான் எப்போது உணர்கிறோமோ அப்போதே அதிலிருந்து மீள துவங்கிவிட்டோம் என்று பொருள்.
 
நம்முடைய துயரத்திலிருந்து மீண்டு வர யோகா, ஆழ்நிலை தியானம் என பல நிவாரணிகள் உள்ளன என்கிறார்கள். ஆனால் இவை அனைத்துமே நம்முடைய துயரத்தை ஓரளவுக்கு மட்டுமே குறைக்கும். ஏனெனில் இத்தகைய மனநிலையில் நாள் முழுவதும் இருக்க முடிவதில்லை. இவற்றிலிருந்து மீண்டு வந்தவுடனேயே நம் உள் மனதில் ஒளிந்துக்கொண்டிருக்கும் சோகம் மீண்டும் நம்மை வந்து தொற்றிக்கொள்வதை உணர்கிறோம். ஆக இத்தகைய முயற்சிகள் நிரந்தர தீர்வுகள் இல்லை என்பது தெளிவாகிறது.
 
பிறகு இதற்கு என்னதான் தீர்வு?
 
நம்முடைய சோகத்தை நமக்குள்ளேயே வைத்திருக்காமல் அதாவது நம்முடைய சோகத்திலேயே சுகம் காணாமல் அதனுடைய அடிப்படைக் காரணத்தை கண்டறிய வேண்டும். ஒருவேளை இது நம்மால் முடியாமல் போகலாம். அத்தகைய சூழலில் நம்முடைய சோகத்தை பிறருடன் மனம் திறந்து கூறுவதுதான் நல்லது. குறிப்பாக நம்முடைய நலனில் அக்கறையுள்ளவர்களிடம். இதைத்தான் மனதிலுள்ளவற்றைக் கொட்டித் தீர்த்துவிடு என்கிறார்கள். சோகத்தை பகிர்ந்துக்கொள்ளும்போது அதனுடைய தாக்கம் குறையும் என்பதுடன் அதற்கு தீர்வும் பிறரிடமிருந்து கிடைக்க வாய்ப்புள்ளது. நாம் எத்தனை முறை முயன்றாலும் நமக்கு புலப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு பிறரிடம் பகிர்ந்துக்குள்ளும்போது ஒரு நொடியில் கிடைத்துவிடுவதை நாம் கண்டுணர்ந்திருக்கிறோமே? எப்படி இது எனக்கு புலப்படாமல் போயிற்று என்று மகிழும் அளவுக்கு பல சமயங்களில் தோன்றுவதில்லையா?
 
ஆம். நம்முடைய துயரத்திற்கு காரணிகளாக உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பிறரிடமிருந்துதான் வருகின்றன என்பதை நாம் உணர வேண்டும். ஆகவே நம்முடைய உள்ளத்தில் மண்டிக்கிடக்கும் சோகத்தை, துயரத்தை பிறரிடம் கொட்டி விட வேண்டும். நம்முடைய சோகம் முழுவதுமாக தீர்ந்துவிடவில்லையென்றாலும் அது நிச்சயம் குறையும். நாம் சற்றும் எதிர்பார்த்திராத தீர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு.
 
இன்று குடும்பங்களிலும் தனி மனித உறவுகளிலும் ஏற்படும் பல மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படாமல் போவதற்கு முக்கிய காரணம் பிரச்சினைகளை மனம்விட்டு பேச முன்வராத மனநிலைதான் என்றால் மிகையாகாது. தங்களுடைய சோகத்தை நெருங்கிய நண்பர்களுடனோ அல்லது சொந்தங்களுடனோ பகிர்ந்துக்கொள்ள மனமில்லாத பலரும் இப்போது மனநல மருத்துவர்களையும் ஆலோசகர்களையும் அணுகுவதைப் பார்க்கிறோம். அது தேவையல்ல என்பதல்ல என்னுடைய கருத்து. ஆனால் அவர்களுக்கு அது ஒரு தொழில். எவ்வித ஈடுபாடும் (involvement) இல்லாமல் இயந்திரத்தனமாக (mechanically) வழங்கப்படும் அறிவுரைகளால் நமக்கு கிடைக்கும் நிம்மதியை விட நம்மை நன்கு அறிந்தவர்கள், நம்முடைய நலனில் அக்கரை உள்ளவர்கள் அளிக்கும் அறிவுரையும் ஆறுதலும் பாமரத்தனமாகவோ (ameturish) அல்லது சிறுபிள்ளைத்தனமாகவோ (childish) இருந்தாலும் பல சமயங்களில் அவை நமக்கு பயனுள்ளதாகவும் அமைய வாய்ப்புள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது.
 
*************
 

16 கருத்துகள்:


  1. // மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும்போது அது மென்மேலும் பெருகும் என்பார்கள். மாறாக துக்கத்தை பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும்போது அது குறையுமாம்!//

    மகிழ்ச்சி என்பது ஒரு அட்சய பாத்திரம் போல. அதை மற்றோரிடம் பகிரப்பகிரப் பன்மடங்காகும் என்பது சரியே.

    சோகத்தை வெளியே காட்டாமல் மனதிற்குள் புழுங்கி அதையே நினைத்து நினைத்து தங்களையே வருத்திக்கொள்ளாமல், நெருக்கமானவர்களிடமாவது அந்த சோகத்தை கொட்டி விட வேண்டும். அப்போது சோகம் முழுவதுமாக தீர்ந்துவிடவில்லையென்றாலும் அது நிச்சயம் குறைய வாய்ப்புண்டு மற்றும் சமயத்தில் சற்றும் எதிர்பார்த்திராத தீர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு என்ற தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.

    Frozen sorrow is dangerous than the melted sorrow!

    பதிலளிநீக்கு
  2. எதையும் அடக்கி வைத்தாலே பிரச்சனை தான்... அதுவும் துயரத்தை சொல்வதற்கு முன், அதை உடனே கண்டுபிடித்து, அதைப் பற்றி எதுவும் பேசாமல் நம் மனதை மாற்றி, ஆறுதல் படுத்துபவர்கள் இருந்தால் (நண்பர்கள், தாய், தந்தை, மனைவி என யார் இருந்தாலும்) அவர்களின் வாழ்வு என்றும் ஆனந்தம் தான்...!

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி...
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...!

    பதிலளிநீக்கு

  3. ஒரு சில வாசகங்கள்
    success breeds success
    you fall to get up.
    failure is the stepping stone for success
    நம் துயர் உணரக்கூடியவரிடம் கொட்டித்தீர்க்கலாம் மற்றையோர் நம் தோல்வியில் கஷ்ட்த்தில் மகிழ்ச்சி அடைவர் அந்த நேர துக்கங்களை அவரவரே அனுபவிக்க வேண்டும் இல்லையென்றால் ஜெசலத்தின் wailing wall மாதிரி எங்காவது அழுது தீர்த்தலே சரி. யார் நம் துக்கத்தில் பங்கு பெறுவர் என்று அறிவதே கடினம்.

    பதிலளிநீக்கு
  4. அழுதாலும், சிரித்தாலும் கண்ணீர் வரும். இரண்டையுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தங்களது வாக்கியத்தில் எனக்கும் உடன்பாடு.

    பதிலளிநீக்கு
  5. சோகங்களை பகிர்ந்து கொள்ளும்போது கிடைக்கும் கழிவிரக்கத்தை சிலர் விரும்புவதில்லை. அது போல மகிழ்ச்சியையும் சிலர் பகிர்வதில்லை . இதெல்லாம் எனக்க சர்வ சாதாரணம் என்ற எண்ணமும கவுரவக் குறைவாக கருதுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
    நன்கு ஆய்வு செய்திருக்கிறீர்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  6. // மருத்துவர்களையும் ஆலோசகர்களையும் அணுகுவதைப் பார்க்கிறோம். அது தேவையல்ல என்பதல்ல என்னுடைய கருத்து. ஆனால் அவர்களுக்கு அது ஒரு தொழில். எவ்வித ஈடுபாடும் (involvement) இல்லாமல் இயந்திரத்தனமாக (mechanically) வழங்கப்படும் அறிவுரைகளால் நமக்கு கிடைக்கும் நிம்மதியை விட நம்மை நன்கு அறிந்தவர்கள், நம்முடைய நலனில் அக்கரை உள்ளவர்கள் அளிக்கும் அறிவுரையும் ஆறுதலும் பாமரத்தனமாகவோ (ameturish) அல்லது சிறுபிள்ளைத்தனமாகவோ (childish) இருந்தாலும் பல சமயங்களில் அவை நமக்கு பயனுள்ளதாகவும் அமைய வாய்ப்புள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது. //

    என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? இது சரியல்ல என்று நினைக்கிறேன். ஒரு புனிதமான பணியைத் தாங்கள் குறைத்து மதிப்பிடுவது தவறு. சிலர் சரியில்லாமல் இருக்கலாம். அதனால் மருத்துவரை நாடக் கூடாது என்று குறிப்பிட முடியாது. வரும் தலைமுறையினரை அதிகம் பாதிக்கப் போவது மன நல குறைபாடு என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. குடும்ப அமைப்பு சிறிது சிறிதாக குலைவதே இதற்கு காரணம்.

    பதிலளிநீக்கு
  7. Blogger வே.நடனசபாபதி said...

    சோகத்தை வெளியே காட்டாமல் மனதிற்குள் புழுங்கி அதையே நினைத்து நினைத்து தங்களையே வருத்திக்கொள்ளாமல், நெருக்கமானவர்களிடமாவது அந்த சோகத்தை கொட்டி விட வேண்டும். அப்போது சோகம் முழுவதுமாக தீர்ந்துவிடவில்லையென்றாலும் அது நிச்சயம் குறைய வாய்ப்புண்டு மற்றும் சமயத்தில் சற்றும் எதிர்பார்த்திராத தீர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு என்ற தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.

    Frozen sorrow is dangerous than the melted sorrow!//
    உண்மைதான். உள்ளுக்குள் அடக்கி வைக்கும் சோகம் புகையும் எரிமலைக்குச் சமம் என்று கூட சொல்வார்கள்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  8. Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    எதையும் அடக்கி வைத்தாலே பிரச்சனை தான்... அதுவும் துயரத்தை சொல்வதற்கு முன், அதை உடனே கண்டுபிடித்து, அதைப் பற்றி எதுவும் பேசாமல் நம் மனதை மாற்றி, ஆறுதல் படுத்துபவர்கள் இருந்தால் (நண்பர்கள், தாய், தந்தை, மனைவி என யார் இருந்தாலும்) அவர்களின் வாழ்வு என்றும் ஆனந்தம் தான்...!//

    மிகச் சரியாக சொன்னீர்கள்.

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி...
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...!//

    எத்தனை அருமையான வரிகள்! வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  9. Blogger G.M Balasubramaniam said...

    ஒரு சில வாசகங்கள்
    success breeds success
    you fall to get up.
    failure is the stepping stone for success
    நம் துயர் உணரக்கூடியவரிடம் கொட்டித்தீர்க்கலாம் மற்றையோர் நம் தோல்வியில் கஷ்ட்த்தில் மகிழ்ச்சி அடைவர் அந்த நேர துக்கங்களை அவரவரே அனுபவிக்க வேண்டும் இல்லையென்றால் ஜெசலத்தின் wailing wall மாதிரி எங்காவது அழுது தீர்த்தலே சரி. யார் நம் துக்கத்தில் பங்கு பெறுவர் என்று அறிவதே கடினம். //

    அருமையான வாசகங்கள். ஜெருசலேம் புலம்பல் மதில் எத்தனை ஆண்டுகாலமாக இருந்து வருகிறது! சொல்லி அழுவதற்கு இறைவனே கதி என்று நினைப்பவர்களுக்கு புகலிடம் அது!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  10. Blogger தி.தமிழ் இளங்கோ said...
    அழுதாலும், சிரித்தாலும் கண்ணீர் வரும். இரண்டையுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தங்களது வாக்கியத்தில் எனக்கும் உடன்பாடு.//

    வருகைக்கம் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  11. Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
    சோகங்களை பகிர்ந்து கொள்ளும்போது கிடைக்கும் கழிவிரக்கத்தை சிலர் விரும்புவதில்லை. அது போல மகிழ்ச்சியையும் சிலர் பகிர்வதில்லை . இதெல்லாம் எனக்க சர்வ சாதாரணம் என்ற எண்ணமும கவுரவக் குறைவாக கருதுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். //

    உண்மைதான். இதுமாதிரியான சமயங்களில் நமக்கு ஆறுதலாக பேசுபவர்கள்தான் உண்மையான நண்பர்கள்.

    நன்கு ஆய்வு செய்திருக்கிறீர்கள் ஐயா!//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு

  12. Blogger Packirisamy N said...
    // மருத்துவர்களையும் ஆலோசகர்களையும் அணுகுவதைப் பார்க்கிறோம். அது தேவையல்ல என்பதல்ல என்னுடைய கருத்து. ஆனால் அவர்களுக்கு அது ஒரு தொழில். எவ்வித ஈடுபாடும் (involvement) இல்லாமல் இயந்திரத்தனமாக (mechanically) வழங்கப்படும் அறிவுரைகளால் நமக்கு கிடைக்கும் நிம்மதியை விட நம்மை நன்கு அறிந்தவர்கள், நம்முடைய நலனில் அக்கரை உள்ளவர்கள் அளிக்கும் அறிவுரையும் ஆறுதலும் பாமரத்தனமாகவோ (ameturish) அல்லது சிறுபிள்ளைத்தனமாகவோ (childish) இருந்தாலும் பல சமயங்களில் அவை நமக்கு பயனுள்ளதாகவும் அமைய வாய்ப்புள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது. //

    என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? இது சரியல்ல என்று நினைக்கிறேன். ஒரு புனிதமான பணியைத் தாங்கள் குறைத்து மதிப்பிடுவது தவறு. சிலர் சரியில்லாமல் இருக்கலாம். அதனால் மருத்துவரை நாடக் கூடாது என்று குறிப்பிட முடியாது. வரும் தலைமுறையினரை அதிகம் பாதிக்கப் போவது மன நல குறைபாடு என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. குடும்ப அமைப்பு சிறிது சிறிதாக குலைவதே இதற்கு காரணம்.//

    நான் இத்தகைய மருத்துவர்களை குறைத்துச் சொல்லவில்லை. அவர்களிடம் செல்ல வேண்டாம் என்பதல்ல என் கருத்து என்றும் கூறியுள்ளேன். எனக்கும் இத்தகையோரிடம் சென்ற அனுபவம் உண்டு. அதை வைத்துச் சொல்கிறேன். அவர்கள் நம்முடைய துயரங்களை முழுமையாகக் கேட்டு அதற்கு பரிகாரங்கள் கூறுவதை விட தங்களுடைய நேரத்தை விற்பதிலேயே குறியாக இருப்பவர்கள் என்பது என்னுடைய சொந்த கருத்து. நான் எல்லோரையும் சொல்லவில்லை.

    They don't listen and respond to our apprehensions with sympathy. Some even ridicule our fears. They are more concerned about their hours! I maybe wrong. But this is my personal experience.


    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  13. //துயரத்தில் மூழ்கிப் போவதும் ஒரு சுகமான அனுபவம்தான் என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.//
    நானும் பார்த்திருக்கேன் சோக பாடல்களை மிகவும் ரசிக்கும் சிலர் இருப்பதை.

    பதிலளிநீக்கு

  14. 11:47 AM
    Delete
    Blogger வேகநரி said...
    //துயரத்தில் மூழ்கிப் போவதும் ஒரு சுகமான அனுபவம்தான் என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.//
    நானும் பார்த்திருக்கேன் சோக பாடல்களை மிகவும் ரசிக்கும் சிலர் இருப்பதை.//
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  15. 11:47 AM
    Delete
    Blogger வேகநரி said...
    //துயரத்தில் மூழ்கிப் போவதும் ஒரு சுகமான அனுபவம்தான் என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.//
    நானும் பார்த்திருக்கேன் சோக பாடல்களை மிகவும் ரசிக்கும் சிலர் இருப்பதை.//
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. மகிழ்ச்சியும் துயரமும் துக்கமும் இரவும் பகலும் போல மாறி மாறி வரும் உணர்வுகள். இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை//உண்மைதான்

    பதிலளிநீக்கு