04 February 2014

சுர்ர்ர்ர்ரென்று வரும் கோபம்...

நான் பணியில் இருந்த காலத்தில் பயங்கர கோபக்காரன் என்று பெயர் எடுத்தவன். எதற்கெடுத்தாலும் கோபம் வரும். அப்படி நடந்துக்கொண்டால்தான் பிறர் நம்மைக் கண்டு அஞ்சுவார்கள் என்ற எண்ணம். ஒரு அதிகாரி என்றால் கண்டிப்பும் கறாருமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றும் நம்முடைய கோபத்தால் மட்டுமே நமக்குக் கீழே பணியாற்றுபவர்கள் நமக்கு அஞ்சுவார்கள் என்ற எண்ணமுமே இதற்கு முக்கிய காரணம். அது ஓரளவுக்குத்தான் உண்மை என்பதை புரிந்துக்கொள்ள பல காலம் பிடித்தது. இந்த அதீத கோபம் என்னை பல சமயங்களில் தனிமைப்படுத்தியுள்ளது. 

என்னுடைய வங்கி தலைவர்களுள் ஒருவர் 'நண்பர்களையும் விரோதிகளாக்கிவிடும் திறமை உனக்கு சற்று அதிகமாகவே உள்ளது' என்றார் ஒருமுறை கேலியுடன். ' As you go up in the ladder you should know how to manage your anger.'என்றார் தொடர்ந்து. 

நான் மும்பையில் கிளை மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒருமுறை புறநகர் மின்வண்டியிலிருந்து இறங்கும்போது தலைசுற்றி பிளாட்பாரத்தில் விழுந்துவிட்டேன். யாரோ என்னைப் பின்னாலிருந்து பிடித்துத் தள்ளியதுபோலிருந்தது.  மும்பை புறநகர் மின்வண்டிகளிலிருந்து இறங்கும்போது நம்மை தொடர்ந்து இறங்க முயலும் கும்பல் முன்னாலிருப்பவர்களை தள்ளிவிடுவது சகஜம்தான் என்றாலும் அன்று நான் விழுந்ததற்குக் காரணம் அதுவல்ல என்பது நண்பர்கள் சிலர் உதவியுடன் என் கிளைக்கு அருகிலிருந்து மருத்துவரைச் சந்தித்தபோதுதான் தெரிந்தது. என் தலைசுற்றுக்குக் காரணம் என்னுடைய உயர் இரத்த அழுத்தம் அபாய எல்லையை நெருங்கியிருந்ததுதான். 'இவ்வளவு ப்ரஷர வச்சிக்கிட்டு எப்படி நீங்க மேனேஜ் பண்ணிக்கிட்டிருந்தீங்க?' என்றார் மருத்துவர். எனக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்ததே அப்போதுதான் தெரிய வந்தது. 'குறைஞ்சது ஒரு வாரம் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்க வேண்டும்' என்றவர் 'கொஞ்ச நாளைக்கி மாசம் ஒரு முறை BP செக் பண்ணிக்குங்க சார்' என்று எச்சரிக்கையும் செய்து அனுப்பினார். அன்று துவங்கிய மருத்துவம் இன்றும் தொடர்கிறது.... அதாவது சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக!

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குத்தான் அதீத கோபம் வருகிறதா அல்லது அதீத கோபம் கொள்பவர்களுக்குத்தான் உயர் இரத்த அழுத்தம் வருகிறதா என்ற கேள்வி கோழியிலிருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழி வந்ததா என்று கேட்பது போன்றது. 

ஆனால் உண்மையில் உயர் இரத்தம் அழுத்தம் உள்ளவர்களுக்குத்தான் கோபம் வரும் என்பதில்லை. கோபம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பச்சிளம் குழந்தைக்கும் கோபம் வரும். அதை வெளிக்காட்டிக்கொள்ளத்தான் அது அழுகிறது. தொட்டிலில் சிறு நீர் கழித்து நெடு நேரம் ஆகியும் அதனுடைய அரைக்கச்சையை (nappy) மாற்றாவிட்டால் வீரிட்டு அழுவது கோபத்தின் வெளிப்பாடுதான். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மிருகங்களுக்கும் கூட கோபம் வருவது சகஜம். 

கோபம் என்பது நம்முடைய உணர்வுகளின் வடிகால் என்றும் கூறலாம். உணர்ச்சி உள்ள அனைவருக்குமே கோபம் வரும், வர வேண்டும். கோபம் வராத மனிதன் இல்லவே இல்லை என்றும் கூறலாம். சிலர் அதை உடனே வெளிக்காட்டிவிடுவார்கள். இவர்களைத்தான் கோபக்காரர் என்கிறோம்.

 வேறு சிலர் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காமல் இருப்பதைப் போல் காட்டிக்கொள்வார்கள். இவர்களை சாது என்றோ அல்லது கோழை என்றோ குறிப்பிடுகிறோம். சாது போல் இருப்பவர்களுக்கு எப்போதாவது வரும் கோபம் கோபக்காரர்களுக்கு அடிக்கடி வரும் கோபத்தை விட பயங்கரமானது. அதனால்தானோ என்னவோ சாது மிரண்டால் காடு கொள்ளாது என்கிறார்கள். இதை யானையை எடுத்துக்காட்டாக கூறுவார்கள். 

கோபம் வருவதில் தவறில்லை ஆனால் அது நியாயமான காரியங்களுக்கு வர வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் அநீதிகளைக் காணும்போது வரும் கோபம் நியாயமான கோபம். அதாவது மற்றவர்களுடைய நலனுக்காக நாம் கோபப்படும்போது அதை ஆக்கபூர்வமான கோபம் எனலாம். நமக்கு தேவையானவற்றை கேட்டுப் பெறுவதற்கு ஏற்படும் கோபமும் நியாயமான கோபம்தான். தொழிலாள வர்க்கத்தினரின் போராட்டங்கள் முதலாளித்துவத்திற்கு எதிராக ஏற்படும் கோபத்தின் வெளிப்பாடுகளே. இவற்றில் தவறில்லை. அழுகிற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என்பார்கள். 

ஆக கோபம் அனைவருக்குமே வரும். அதில் தவறில்லை. ஆனால் அதை எவ்வாறு வெளிக்காட்டுகிறோம் என்பதில்தான் நம்மில் சிலர் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறோம். சாது அல்லது கோபக்காரன் என்று முத்திரைக் குத்தப்படுவது நம்முடைய கோபத்தை வெளிக்காட்டும் முறையால்தான். சில குழந்தைகள் பசி வந்துவிட்டால் அழுது ஊரையே கூட்டிவிடுவார்கள். வேறு சில குழந்தைகளோ பசித்தாலும் தேமே என்று இருக்கும். அதுபோலத்தான் நம்முடைய கோபத்தின் வெளிப்பாடும். 

ஆனால் கோபத்தை வெளிக்காட்டிவிடுவதுதான் நம்முடைய ஆரோக்கியத்திற்கு நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். அதை அடக்குவதால் அது நம்முடைய இரத்த அழுத்தத்தை உயர்த்தக் கூடுமாம்.

ஆனால் அதீத கோபமும் ஆபத்தான விஷயம்தான். ஆகவே இவ்விரு துருவங்களுக்கும் இடையிலுள்ள நிலையில் நம்மை வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகிறது. அதாவது நம்முடைய கோபத்தை ஓரளவுக்கு திறம்பட கையாள்வது. அதை ஆக்கப்பூர்வ உணர்வாக (constructive expression) வெளிப்படுத்துவது. நம்முடைய எதிர்ப்பை, ஏமாற்றத்தை அல்லது சலிப்பை பிறர் புரிந்துக்கொள்ளும் வகையில் வெளிப்படுத்துவது.

ஏனெனில் நம் உள்ளத்தில் ஏற்படும் இத்தகைய உணர்வுகளை வெளிக்காட்டுவதன் மூலம் மட்டுமே இத்தகைய உணர்வுகளுக்கு காரணமாக இருப்பவர்களுக்கு நம்முடைய உணர்வை உணர்த்த முடியும்.

கோபத்தை கட்டுக்குள் வைத்திருப்பதும் அதை அடக்க முயல்வதும் இருவேறு விஷயங்கள். Anger Management என்பதும் Anger Control என்பதும் ஒன்றல்ல. கோபத்தை கையாள்வது (Managing one's anger) என்பது அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை. அது அனுபவத்தால் மட்டுமே வரக்கூடியது.

கோபம் வராமல் இருக்கவே முடியாது. ஏனெனில் அது நம் கையில் மட்டும் இல்லை. சாலையில் பயணிக்கும்போது விபத்து ஏற்படாமல் இருப்பது எவ்வாறு நம் கையில் மட்டும் இல்லையோ அதுபோலத்தான் இதுவும். 

காலையில் எழுந்தவுடன் 'இன்று முழுவதும் நான் யாரிடமும் கோபப்பட மாட்டேன்.' என்ற உறுதிமொழியுடன் வீட்டிலிருந்து சாலையில் இறங்கியதுமே நாம் கோபப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவதுண்டு. நம் கண்ணெதிரிலேயே சாலை விதிகளை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளையோ அல்லது சாலையை கடக்கும் பாதசாரிகளையோ கணும்போது  நம்மையுமறியாமல் கோபம் எழலாம். மேலும் பேருந்து நிறுத்தத்தில் வேண்டுமென்றே நிற்காமல் செல்லும் பேருந்து ஓட்டுனர், பேருந்தில் இடமிருந்தும் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு நம்மை பேருந்தில் ஏறவிடாமல் தொல்லைதரும் பயணிகள் என நாம்  கோபம் கொள்வதற்கு என்று பல காரணிகள் உள்ளன. 

இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் போகிறவர்கள்தான் அதிகம். ஆனால் ஒரு சிலருக்கு இதை பொறுத்துக்கொள்ள முடியாது. இது அவரவர்களுடைய மனநிலையைப் பொறுத்தது. வளர்ப்பு முறையைப் பொறுத்தது. 
- -
எதற்கெடுத்தாலும் சினம் கொள்பவர்களை - அதாவது அதை வெளிக்காட்டிக்கொள்பவர்களை -  சில வாரங்கள் தொடர்ந்து கண்கானித்து வந்ததிலிருந்து கண்டுபிடித்த சிலவற்றை பட்டியலிட்டுள்ளனர் மனநல ஆய்வாளர்கள். 

1. எதை செய்தாலும் இதை இப்படித்தான் செய்ய வேண்டும், 
2. எதையும் என்னால் மட்டுமே சரியாகச் செய்ய முடியும்,
3. என்னுடன் ஒத்துப் போகாத அனைவரும் என்னுடைய எதிரிகள்,
4. நான் சொல்வதைத்தான் மற்ற அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பிடிவாத எண்ணம் கொண்டவர்கள் அதாவது எதற்கும் எந்த காலத்திலும் எவருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ள மறுப்பவர்கள்.

இத்தகைய மனநிலை உள்ளவர்கள்தான் பெரும்பாலும் அதிக சினம் கொள்பவர்களாம். 

ஆனால் இவர்களுள் அனைவருமே தங்களுடைய கோபத்தை அப்படியே வெளிக்காட்டுபவர்கள் என்று கூறிவிட முடியாது.  கடுகடுவென்ற முகபாவனையுடன் உள்ளவர்களை இவர்கள் கோபக்காரர் என்று எளிதில் இனம் கண்டுக்கொள்ள முடிகிறது. ஆனால் இதே மனப்போக்கு உள்ளவர்களும் தங்களை மற்றவர்கள் இனம் கண்டுக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடன் சாது வேடம் போடுபவர்களும் உண்டு. முன்னவர்களை விட இவர்கள்தான் மிகவும் அபாயகரமானவர்கள்.  நான் திருடன் என்பதை ஒப்புக்கொள்பவனை விட நல்லவனைப் போல் வேடமிட்டுக்கொண்டு கொள்ளையடிப்பவனைப் போன்றவர்கள் இவர்கள். 

கோபம் வரும்போது அதை வெளிக்காட்டிவிட வேண்டும் இல்லையென்றால் அது நம்முடைய உடல் நலத்தை பாதிக்கக் கூடும் என்று கூறினேன். இதற்கு என்னுடைய நெருங்கிய நண்பரும் அவருடைய மனைவியுமே உதாரணம்.

என்னுடைய நண்பர் சினம் கொண்டு நான் பார்த்ததே இல்லை. எந்த சூழலிலும் தன்னுடைய நிதானத்தை இழக்க மாட்டார். அவருடைய மனைவி அவருக்கு நேர் எதிர். எதற்கெடுத்தாலும் கோபம் வரும்.  மனைவியின் கோபம் நண்பரை பாதிக்கவில்லை என்பதை அவருடைய முகத்தை பார்த்தாலே தெரியும். அருகிலேயே அமர்ந்திருந்தாலும் எதுவும் நடக்காததுபோல் இருப்பார். அதுவே அவருடைய மனைவியின் கோபத்தை அதிகரிப்பதை பார்த்திருக்கிறேன். 'நா கரடியா கத்தறேன், எப்படி ஒக்காந்துருக்கார் பாருங்க? இவர் இப்படி இருக்கறதாலத்தான் எனக்கு கோபமே வருதுங்க.' என்பார் மனைவி. எப்படி நண்பரால் இப்படி இருக்க முடிகிறது என்று நானும் பல சமயங்களில் வியந்திருக்கிறேன். ஆனால் சில வருடங்கள் கழித்து அவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் தெரிந்தது அவர் கோபத்தை எந்த அளவுக்கு அடக்கி வைத்திருந்தார் என்பது. தன்னுடைய அதீத கோபம்தான் தன்னுடைய கணவருக்கு மாரடைப்பு ஏற்பட காரணம் என்பதை அறிந்தபோது நொருங்கிப் போனார் அவருடைய மனைவி. 

சிலர் வேண்டுமென்றே கோபப்படுவார்கள். இத்தகையோருக்கு அது தங்களுக்கும் தங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அதை கண்டுக்கொள்ளாதவர்கள் போல் இருப்பார்கள். இத்தையோரை திருத்தவே முடியாது. இவர்களுக்கு யோகா போன்றவைகள் கூட பலனளிக்காது.  அது அவர்களுடைய குணநலன் (character). 

வேறு சிலர் தங்களையுமறியாமல் கோபப்படுவார்கள். தாங்கள் செய்வது தவறு என்று தெரியும். ஆனால் தவிர்க்க முடியாமல் தவிப்பார்கள். கோபம் வரும்போதெல்லாம் அதை தவிர்ப்பதற்கு முயல்வார்கள். ஆனால் முடியாமல்போய்விடும். பிறகு தங்களுடைய கோபத்திற்கு வருத்தம் தெரிவிப்பார்கள். இவர்கள் தங்களுடைய கோபத்தை தவரிக்கவோ அல்லது ஓரளவுக்கு கட்டுக்குள் வைத்துக்கொள்ளவோ முயற்சி செய்யலாம். 

கோபத்தை தவிர்க்க என்ன செய்யலாம்?

1. கோபத்திற்கு காரணமாகவுள்ள நபர்களிடமிருந்தோ அல்லது அந்த இடத்திலிருந்தோ விலகிச் சென்றுவிடலாம்.

2. கோப மன நிலையில் உள்ளபோது பேசாமல் இருந்துவிடலாம்.

3. மனதை சாந்தப்படுத்த உதவும் உடற் பயிற்சிகள் அல்லது யோகா போன்றவைகளில் ஈடுபடலாம். 

இப்படி எத்தனையோ வழிகளில் கோபத்தை எல்லை மீறி செல்லாமல் கையாள (Manager) முயற்சி செய்யலாம். 

இதையும் மீறி கோபம் வரும்போது அதை உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்காமல் வெளியில் காட்டிவிடுவதுதான் நல்லது. ஆனால் அதையும் ஒரு எல்லைக்குள் வைத்துக்கொள்ள பயிற்சி செய்ய வேண்டும்.  

சினம் கொள்ளாம் இருப்பது முற்றும் துறந்த துறவிக்கே சாத்தியமாகும். ஆகவே கோபத்தை திறம்பட கையாள்வது எப்படி என்பதை மட்டுமே நாம் கற்றுக்கொள்ள வேண்டும். 

இது ஒரு நாளில் கைவந்துவிடும் கலையல்ல. காலப் போக்கில் அனுபவமும் விவேகமும் கூட கூடத்தான் இது சாத்தியமாகும்.

சினம் கொள்வதைப் பற்றி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் என்பதை இணையத்தில் ஆராய்ந்தபோது என் கண்ணில் பட்டவற்றை கீழே கொடுத்துள்ளேன்.  

குறள் 303: 

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய 
பிறத்தல் அதனான் வரும்.

கலைஞர் உரை: 
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.

குறள் 304: 

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
பகையும் உளவோ பிற.

கலைஞர் உரை: 
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.


குறள் 305: 

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் 
தன்னையே கொல்லுஞ் சினம்.

கலைஞர் உரை: 
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், 

அவனை அழித்துவிடும்

குறள் 307: 

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு 
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

கலைஞர் உரை: 
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.


குறள் 310: 

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் 
துறந்தார் துறந்தார் துணை.

கலைஞர் உரை: 
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

இன்று மனநல ஆய்வாளர்கள் ஆய்ந்து கண்டறிபவைகளை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைத்துள்ளார் வள்ளுவர்!! தமிழின் பெருமையை இதற்கு மேலும் பறைசாற்ற வேண்டுமா என்ன?

**********

31 comments:

ராஜி said...

கோபம் தன்னையும் அழித்து மத்தவங்களையும் அழிக்கும்ன்னு அம்மா சொல்வாங்க. ஆனா, என்னாலயும் கோவத்தைக் கட்டுப்படுத்த முடியல

Suresh Kumar said...

கோபத்தை பற்றி வெகு நன்றாக எழுதி உள்ளீர்கள் சார்..... படிக்க படிக்க நிறைய புரிவது போல இருந்தது !

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படிச் சொல்லுங்க...!

முக்கியமான குறளை சொல்லவில்லை... அதனால் கோபித்துக் கொள்கிறேன்.... ஹிஹி...

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்...
அன்பு நன்றி கருணை கொண்டபவன் மனித வடிவில் தெய்வம்...
இதில் மிருகம் என்பது கள்ளமனம்...
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்...

வே.நடனசபாபதி said...

//கோபம் வருவதில் தவறில்லை ஆனால் அது நியாயமான காரியங்களுக்கு வர வேண்டும்.//
//கோபம் வரும்போது அதை வெளிக்காட்டிவிட வேண்டும் இல்லையென்றால் அது நம்முடைய உடல் நலத்தை பாதிக்கக் கூடும்.//

நீங்கள் சொல்வது சரியே.

உங்களைப்போல் நானும் கோபக்காரன் தான். எனக்கு எல்லாமே சரியாக இருக்கவேண்டும். குறித்த நேரத்திற்கு வருவது. செய்யவேண்டிய காரியங்களை தவறாமல் செய்யவேண்டும் போன்றவைகளில் யாரேனும் சுணக்கம் காட்டினால் எனக்கு கோபம் வரும் ஆனால் அதை வெளிக்காட்டிவிடுவேன். உடனே பின்பு சகஜமாகிவிடுவேன். கோபம் வந்தால் தண்ணீர் குடித்தாலும் சரியாகிவிடுமாம். படித்திருக்கிறேன்.

அறத்துப்பாலில் ‘வெகுளாமை’ என்ற அதிகாரத்தில் உள்ள திருக்குறள்களில் ஐந்தை மட்டும் தந்திருக்கிறீர்கள் கலைஞரின் உரையோடு. சினம் கொள்ளாமை பற்றி சொல்லும் மற்ற குறள்களையும் தந்திருக்கலாம். நல்ல உபயோகமான பதிவு.

தருமி said...

இப்போ ரொம்ப கோவமா இருக்கேன். பிறகு வந்து பின்னூட்டம் எல்லாம் போடுறேன்.
என்ன ... சரியா ..?

J. ANTONY RAJA said...

Very nice topic as usual .. Great

G.M Balasubramaniam said...


நான்கு விதமான மனிதர்கள் உண்டு என்பார்கள் முதல் வகையினரை A type personality என்பர். இவர்களுக்கு எல்லாமே தன் பிடியில் இருக்க வேண்டும்They do not like to be told what to do. Type B personalities are often outgoing and energetic. Typically they are well liked by others. Type C personalities prefer things to be stable and organized. Type D personalities do not mind repetitive tasks, and enjoy slower paced environments.ஒருவருக்கு கோபம் அதிகம் என்றால் எந்த catagary என்று தெரிந்து விடும் கோபம் வர வேண்டிய சமயம் வந்தே தீரவேண்டும். பாரதி கூட ரௌத்திரம் பழகு என்றார். கோபம் ஆபத்தான நிலைக்குப் போகுமுன் கட்டுப்படுத்த வேண்டும். எல்லாமே நம் விருப்பப்படிதான் நடக்க வேண்டும் என்பது தவறு. Everyone has to have his own space. என் அப்பா “ "கோபம் வருகிறதென்று தெரிந்த உடனே ஒன்று இரண்டு என்று கோபம் போகும் வரை எண்ணு” என்பார் எனக்கும் கோபக்காரன் என்னும் பட்டம் உண்டு.

காரிகன் said...

A man who can't be angry is a fool. A man who won't be angry is wise. இப்போது தேவைப்படுவது நீங்கள் சொல்வதுபோல anger management not control. சிறப்பான பதிவு. பாராட்டுக்கள்.

Packirisamy N said...

மிகவும் சிறப்பான பதிவு. கோபம் எனக்குத் தெரிந்தவரை மரபணுவிலேயெ மறைந்துள்ளது என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட இதுவும் ஒருவகை அடிக்ஷன் என்று நினைக்கிறேன். கோபம் கொள்பவர்களையும் பாருங்கள், அனேகமாக தன் கோபம் சுலபமாக செல்லக்கூடிய இடங்களில்தான் காண்பிப்பார்கள். கோபம் வந்தால் மூளை சரியாக சிந்திக்காது. எனவே திட்டமிடாமல் கோபப்பட்டால் இழப்புதான் அதிகமாக இருக்கும். கோபத்தைக் காட்டாவிட்டால் சிலர் இளிச்சவாயனாக எடுத்துக்கொள்வார்கள். அதற்காகவாவது கோபப்பட வேண்டியிருக்கிறது.

எனக்கு எப்பொழுதும் ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும். பீட்ரூட் பச்சையாக ஜூஸ் சாப்பிட்டேன். ரத்த அழுத்தம் இன்னும் குறைந்துவிட்டது. உடனேயே தலை சுற்றல் வந்துவிட்டது. அதாவது எனக்கு எதிராக வேலை செய்துவிட்டது. உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் ஒருவேளை உங்களுக்கு நல்லதாக இருக்கக்கூடும். தொந்தரவு இல்லாவிட்டால், வெறும் வயிற்றில், முயற்சித்துப் பாருங்களேன்.

பழனி. கந்தசாமி said...

கோபத்தை நன்கு அலசியுள்ளீர்கள். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள். பாராட்டுகிறேன்.

மகேந்திரன் said...

தேவையான இடங்களில் கோபம் அவசியமே
என்பதுதான் என் கருத்தும் நண்பரே...
இடம்,பொருள் வேண்டும் கோபத்திற்கும்.

2008rupan said...

வணக்கம்

நல்ல கருத்தாடல் இறுதியில் திருக்குறள்... விளக்கம் சிறப்பு.. வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

MANO நாஞ்சில் மனோ said...

எங்கப்பா பயங்கர கோபப்படும் ஆளு, அப்பா வாங்க பிரஷர் செக் பண்ணலாம்ன்னு கூட்டிட்டுப் போனேன், அவருக்கு பிரஷர் ஒன்னுமில்லை நார்மலாக இருக்கிறது என்று டாக்டர் சொன்னார், அப்போது அப்பாவின் வயது அறுபத்தி ஐந்து...!

எனக்கும் சடார் என்று பலவேளைகளில் கோபம் வரும், எனக்கு பிரஷர் எல்லை தாண்டும் தருவாயில் இருப்பதாக டாக்டர் சொன்னார், எனக்கு வயது ௩௯ [[தமிழ் எண் ஹி ஹி]]

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சினம் பற்றி தங்களுக்கே உரித்தான பாணியில் செய்துள்ள அலசல் மிக சிறப்பு.

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் அனுபவத்தோடு திருக்குறள் மேற்கோள்களோடு கோபத்தைப் பற்றி ஒரு விளாசு விளாசி இருக்கிறீர்கள் நன்றி! நானும் உங்களைப் போலவே கோபக்காரன்தான். இப்போது பழைய கோப நிகழ்வுகளை நினைக்கும் போது இதற்காகவா நாம் இப்படி கோபப்பட்டோம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

டிபிஆர்.ஜோசப் said...


ராஜி said...
கோபம் தன்னையும் அழித்து மத்தவங்களையும் அழிக்கும்ன்னு அம்மா சொல்வாங்க. ஆனா, என்னாலயும் கோவத்தைக் கட்டுப்படுத்த முடிய//

எனக்கும் அப்படித்தாங்க. ஆனால் வயசு ஏற, ஏற இரத்தம் சுண்டிப்போய் இப்பல்லாம் கோபமே வர்றதில்லை. என் மனைவிக்கு ரொம்ப ஆச்சரியம். எல்லாம் உங்க ஆஃபீஸ் ஆளுங்க குடுத்த குடைச்சல்தான் போலருக்கு என்பார்.

டிபிஆர்.ஜோசப் said...


Suresh Kumar said...
கோபத்தை பற்றி வெகு நன்றாக எழுதி உள்ளீர்கள் சார்..... படிக்க படிக்க நிறைய புரிவது போல இருந்தது !//

எல்லாம் சொந்த அனுபவம்தான். பட்டால்தான் தெரியும் என்பார்களே அது போன்று பட்டு அனுபவித்திருக்கிறேன். கோபத்தால் எவ்வித பயனும் இல்லை என்பது இப்போது புரிகிறது!

டிபிஆர்.ஜோசப் said...


திண்டுக்கல் தனபாலன் said...
அப்படிச் சொல்லுங்க...!

முக்கியமான குறளை சொல்லவில்லை... அதனால் கோபித்துக் கொள்கிறேன்.... ஹிஹி...//

இது மிக மிக நியாயமான கோபம்:)

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்...
அன்பு நன்றி கருணை கொண்டபவன் மனித வடிவில் தெய்வம்...
இதில் மிருகம் என்பது கள்ளமனம்...
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்...//

திருக்குறளைப் போல் இல்லாவிட்டாலும் கண்ணதாசனும் மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தன் எளிய பாடல்களால் விவரித்திருக்கிறார். ஆனால் அவை அனைத்தையும் ஒரே இடத்தில் திரட்டி வைக்க முடிந்தால் அவரைப் பற்றி ஒரு தீசீசே எழுதலாம்.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
//கோபம் வருவதில் தவறில்லை ஆனால் அது நியாயமான காரியங்களுக்கு வர வேண்டும்.//
//கோபம் வரும்போது அதை வெளிக்காட்டிவிட வேண்டும் இல்லையென்றால் அது நம்முடைய உடல் நலத்தை பாதிக்கக் கூடும்.//

நீங்கள் சொல்வது சரியே.//

என்னுடைய நண்பர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர்களே ஒரு ஆலோசகரை வைத்து அறிவுரை கூறினார்கள். அப்போது நானும் உடனிருந்தேன். அவர் அன்று கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இப்போதும் என மனதில் அப்படியே உள்ளது.

கோபம் வந்தால் தண்ணீர் குடித்தாலும் சரியாகிவிடுமாம். படித்திருக்கிறேன்.//

உண்மைதான் நானும் கேட்டிருக்கிறேன். தண்ணீர்தான் கோபத்தை ஆற்றுகிறது என்பதைவிட அதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் நேரம்தான் அதிகம் பயனளிக்கிறது என்று நினைக்கிறேன். கோபம் உச்சியில் இருக்கும்போது மனதை அந்த சூழலில் இருந்து சற்று நேரம் திசை மாற்ற வேண்டும். சிறிது நேரம் நடந்தாலும் அல்லது இசையை ரசித்தாலும் மனம் அமைதியடைந்துவிடும் என்பார்கள்.

அறத்துப்பாலில் ‘வெகுளாமை’ என்ற அதிகாரத்தில் உள்ள திருக்குறள்களில் ஐந்தை மட்டும் தந்திருக்கிறீர்கள் கலைஞரின் உரையோடு. சினம் கொள்ளாமை பற்றி சொல்லும் மற்ற குறள்களையும் தந்திருக்கலாம். //

பதிவின் நீளம் அதிகரித்துவிடுமே என்ற எண்ணத்தில் என் மனதில் பொருத்தமானவை என்று தெரிந்த குறள்களை மட்டும் பதிந்திருந்தேன். உங்கள் கருத்துக்கள் அனைத்தும் பயனுள்ளவையாக இருந்தன. நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


தருமி said...
இப்போ ரொம்ப கோவமா இருக்கேன். பிறகு வந்து பின்னூட்டம் எல்லாம் போடுறேன்.
என்ன ... சரியா ..?//

சரிங்க :) ஒரு கிளாஸ் அடிச்சிட்டு வாங்க அதாவது குளிர்ந்த நீர் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

டிபிஆர்.ஜோசப் said...


J. ANTONY RAJA said...
Very nice topic as usual .. Great//

Thanks Mr.Raja.

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...

நான்கு விதமான மனிதர்கள் உண்டு என்பார்கள் முதல் வகையினரை A type personality என்பர். இவர்களுக்கு எல்லாமே தன் பிடியில் இருக்க வேண்டும்They do not like to be told what to do. Type B personalities are often outgoing and energetic. Typically they are well liked by others. Type C personalities prefer things to be stable and organized. Type D personalities do not mind repetitive tasks, and enjoy slower paced environments.ஒருவருக்கு கோபம் அதிகம் என்றால் எந்த catagary என்று தெரிந்து விடும்//

அருமையா சொல்லிட்டீங்க. நானும் இந்த பயிற்சியை எங்கள் வங்கி பயிற்சி கல்லூரியில் செய்திருக்கிறேன். பல அதிகாரிகள் டைப் ஏ வில்தான் வருவார்கள். இது அதிகாரவர்க்கத்தின் குணநலன்.

கோபம் வர வேண்டிய சமயம் வந்தே தீரவேண்டும். பாரதி கூட ரௌத்திரம் பழகு என்றார். கோபம் ஆபத்தான நிலைக்குப் போகுமுன் கட்டுப்படுத்த வேண்டும். எல்லாமே நம் விருப்பப்படிதான் நடக்க வேண்டும் என்பது தவறு. Everyone has to have his own space. என் அப்பா “ "கோபம் வருகிறதென்று தெரிந்த உடனே ஒன்று இரண்டு என்று கோபம் போகும் வரை எண்ணு” என்பார் எனக்கும் கோபக்காரன் என்னும் பட்டம் உண்டு.//

உண்மைதான். கோபம் வருவது கெட்டது என்றில்லை. அதை எப்படி கையாள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

டிபிஆர்.ஜோசப் said...


காரிகன் said...
A man who can't be angry is a fool. A man who won't be angry is wise. இப்போது தேவைப்படுவது நீங்கள் சொல்வதுபோல anger management not control. //

அழகாக சொல்லிவிட்டீர்கள். அதீத கோபம் அழிவையே தரும் என்பார்கள். திறமையாக கையாளப்படும் கோபம் ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்துமாம்.

டிபிஆர்.ஜோசப் said...


Packirisamy N said...
மிகவும் சிறப்பான பதிவு. கோபம் எனக்குத் தெரிந்தவரை மரபணுவிலேயெ மறைந்துள்ளது என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட இதுவும் ஒருவகை அடிக்ஷன் என்று நினைக்கிறேன். கோபம் கொள்பவர்களையும் பாருங்கள், அனேகமாக தன் கோபம் சுலபமாக செல்லக்கூடிய இடங்களில்தான் காண்பிப்பார்கள். கோபம் வந்தால் மூளை சரியாக சிந்திக்காது. எனவே திட்டமிடாமல் கோபப்பட்டால் இழப்புதான் அதிகமாக இருக்கும். கோபத்தைக் காட்டாவிட்டால் சிலர் இளிச்சவாயனாக எடுத்துக்கொள்வார்கள். அதற்காகவாவது கோபப்பட வேண்டியிருக்கிறது.//

உண்மைதான். எங்கே எப்போது கோபம் வர வேண்டுமோ அங்கு அப்போது வரும் கோபம் நியாயமான கோபமாகவே இருக்கும். காரியம் ஆகணும்னா காலையும் பிடிக்கலாம் தவறில்லை என்பார்கள். அதுபோலவே வேறு சிலரிடம் கோபப்பட்டால்தான் காரியம் நடக்கும் என்றால் கட்டாயம் கோபப்படத்தான் வேண்டும்.

எனக்கு எப்பொழுதும் ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும். பீட்ரூட் பச்சையாக ஜூஸ் சாப்பிட்டேன். ரத்த அழுத்தம் இன்னும் குறைந்துவிட்டது. உடனேயே தலை சுற்றல் வந்துவிட்டது. அதாவது எனக்கு எதிராக வேலை செய்துவிட்டது. உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் ஒருவேளை உங்களுக்கு நல்லதாக இருக்கக்கூடும். தொந்தரவு இல்லாவிட்டால், வெறும் வயிற்றில், முயற்சித்துப் பாருங்களேன்.//

கண்டிப்பாக. உங்கள் அறிவுரைக்கு நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


பழனி. கந்தசாமி said...
கோபத்தை நன்கு அலசியுள்ளீர்கள். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள். பாராட்டுகிறேன்.//

மிக்க நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...


மகேந்திரன் said...
தேவையான இடங்களில் கோபம் அவசியமே
என்பதுதான் என் கருத்தும் நண்பரே...
இடம்,பொருள் வேண்டும் கோபத்திற்கும்//

இதுதான் இந்த பதிவின் சாராம்சம். நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


2008rupan said...
வணக்கம்

நல்ல கருத்தாடல் இறுதியில் திருக்குறள்... விளக்கம் சிறப்பு.. வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க ரூபன்.

டிபிஆர்.ஜோசப் said...


MANO நாஞ்சில் மனோ said...
எங்கப்பா பயங்கர கோபப்படும் ஆளு, அப்பா வாங்க பிரஷர் செக் பண்ணலாம்ன்னு கூட்டிட்டுப் போனேன், அவருக்கு பிரஷர் ஒன்னுமில்லை நார்மலாக இருக்கிறது என்று டாக்டர் சொன்னார், அப்போது அப்பாவின் வயது அறுபத்தி ஐந்து...!//

ஆகவேதான் கோபக்காரர்கள் எல்லாருக்குமே உயர் இரத்த அழுத்தம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறினேன்.

எனக்கும் சடார் என்று பலவேளைகளில் கோபம் வரும், எனக்கு பிரஷர் எல்லை தாண்டும் தருவாயில் இருப்பதாக டாக்டர் சொன்னார், எனக்கு வயது ௩௯ [[தமிழ் எண் ஹி ஹி]]//

ஆனால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நிச்சயம் கோபக்காரர்களாகத்தான் இருப்பார்கள் போலிருக்கிறது :)

டிபிஆர்.ஜோசப் said...


டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
சினம் பற்றி தங்களுக்கே உரித்தான பாணியில் செய்துள்ள அலசல் மிக சிறப்பு.//

மிக்க நன்றிங்க முரளி.

டிபிஆர்.ஜோசப் said...


8:09 AM
தி.தமிழ் இளங்கோ said...
உங்கள் அனுபவத்தோடு திருக்குறள் மேற்கோள்களோடு கோபத்தைப் பற்றி ஒரு விளாசு விளாசி இருக்கிறீர்கள் நன்றி! நானும் உங்களைப் போலவே கோபக்காரன்தான். இப்போது பழைய கோப நிகழ்வுகளை நினைக்கும் போது இதற்காகவா நாம் இப்படி கோபப்பட்டோம் என்று நினைக்கத் தோன்றுகிறது. //

எனக்கும் இப்போதெல்லாம் அப்படித்தான் தோன்றுகிறது. என்னுடைய கோபத்தால் எத்தனை நல்லவர்களின் நட்பை இழந்திருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்கும்போது அந்த சூழலை இன்னும் நன்றாக கையாண்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

வெங்கட் நாகராஜ் said...

கோபம் - பல நல்ல நண்பர்களை இழக்க வைக்கும்.....

சிறப்பான கட்டுரை....