22 ஜனவரி 2014

நாடாளுமன்ற தேர்தல் ஆரூடம் (நிறைவுப் பகுதி)

இதே அடிப்படையில்  காங்கிரஸ் கடந்த தேர்தலில் கணிசமான இடங்களைப் கைப்பற்றிய  உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, தில்லி, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இம்முறை அதே அளவு இடங்களை கைப்பற்ற வாய்ப்பே இல்லை. இவற்றுடன் மஹாராஷ்டிரா,  மேற்கு வங்க மாநிலங்களையும் இணைத்துப் பார்க்கும்போது இந்த பத்து மாநிலங்களில் மட்டும் சுமார் நூறு இடங்களை காங்கிரஸ் இழக்க வாய்ப்புள்ளது. 

மேலும் தற்போது காங்கிரஸ் அல்லது பாஜக கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதாவது மாநில கட்சிகளின் ஆதிக்கம் இல்லாத மாநிலங்களில், இதுவரை காங்கிரஸ்-பாஜக கட்சிகளுக்கிடையில் இருந்துவந்துள்ள நேரடி போட்டி ஆம் ஆத்மி கட்சியினரின் வருகையால் மும்முனை போட்டியாக மாறவும் வாய்ப்புள்ளது. சமீபத்தில் தில்லி சட்டமன்ற தேர்தலில் நடந்தது போன்று வாக்குகள் சிதறும் சூழலில் இரு கட்சிகளுக்குமே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக காங்கிரசுக்கு இது ஒரு பெரும் சவாலாக அமையக் கூடும். 

இத்தகைய சூழலில் நடைபெறவிருக்கும் தேர்தலில் பாஜக விரும்பும் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் அது கீழ்காணும் வாக்காளர்களால் மட்டுமே சாத்தியமாகும்.

1. காங்கிரசின் ஆட்சியில் கடந்த ஐந்தாண்டு காலமாக நடைபெற்ற ஊழல்களினால் சலிப்படைந்து போயிருக்கும் என்னைப் போன்ற நடுநிலை வாக்காளர்கள் 

2. வாக்களிக்கும் வயதை அடைந்தும் வாக்களிக்க மனமில்லாமல் இருந்த வாக்காளர்கள் மற்றும்

3. புதிதாக வாக்குரிமை பெற்றுள்ள வாக்காளர்கள். 

இதில் மூன்றாவது வகையினர், அதாவது முதல் முறையாக வாக்களிக்கவிருக்கும் இளைஞர்களின் வாக்குகள்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது நிச்சயம் என்று பரவலாக பேசப்படுகிறது.. ஆகவேதான் இத்தகையோரை குறிவைத்து தன்னுடைய பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருக்கிறார் மோடி.

ஆனால் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் இவர்களுடைய வாக்குகள் கணிசமான அளவுக்கு இடங்களை எந்த ஒரு கட்சிக்கும் பெற்றுத்தர வாய்ப்பில்லை என்கின்றனர் தேர்தல் கணிப்பாளர்கள். மேலும் இத்தகையோரில் எத்தனை விழுக்காடு வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பார்கள் என்பதும் புரியாத புதிராக உள்ளது. சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவதில் வல்லவர்களாக உள்ள இவர்களுள் பலரும் வெளிநாடுகளில் அல்லது வெளியூர்களில் பணியாற்றுவதால் வாக்களிப்பதற்கென்றே தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வார்களா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 

நாட்டின் இரு  முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாத  சூழலில் இவ்விரு கட்சிகளும் அமைக்கவிருக்கும் கூட்டணியில் இடம் பெறவுள்ள மாநில கட்சிகளைப் பொறுத்தே இக்கட்சிகளுடைய வெற்றி-தோல்வி அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று அறிஞர் அண்ணா அவர்கள் அன்று கூறியபோது இது சாத்தியமா என்று எள்ளி நகையாடியவர்கள் இன்று அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கூற்று என்பதை உணர ஆரம்பித்துள்ளனர். ஆகவேதான் கூட்டணி கட்சிகளை தெரிவு செய்வதில் இவ்விரு தேசீய கட்சிகளுடைய அணுகுமுறை முக்கியத்துவம் பெறுகிறது.

காங்கிரசின் கடந்த ஐந்தாண்டு கால ஊழல்கள் மற்றும் பொருளாதார பின்னடைவுகள் பல மாநில கட்சிகளையும் அதிருப்தியடையச் செய்துள்ளன என்பதை வைத்து பார்க்கும்போது இப்போது அவர்களுடன் கூட்டு வைத்துள்ள கட்சிகளுள் மஹாராஷ்டிராவின் NCP காஷிமீரில் ஆட்சியிலுள்ள J&K தேசிய காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளைத் தவிர வேறெந்த கட்சியும் அவர்களுடைய கூட்டணியில் சேர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. பீஹாரிலுள்ள லல்லு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி வலிய சென்று சேரலாம். ஆனால் அதனால் காங்கிரசுக்கு பலன் ஏதும் இருக்கப் போவதில்லை.

கூட்டணி விஷயத்தில் பாஜகவின் நிலையும் ஏறக்குறைய இதே நிலைதான். பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள சில சில்லறைத் தமிழக கட்சிகள் அதாவது அதிமுகவுடன் கூட்டு வைத்துக்கொள்ள இயலாத கட்சிகளான தேதிமுக, மதிமுக போன்ற கட்சிகள் வேண்டுமானால் பாஜகவுடன் கூட்டு வைத்துக்கொள்ள விருப்பப் படலாம். ஆனால் மற்ற மாநில கட்சிகள் எவையும் கூட்டு வைத்துக்கொள்ள வாய்ப்பில்லை. இதற்கு மோடியை பிரதமராக முன்னறிவித்ததும் ஒரு காரணம் என்று கூறலாம். திமுக விரும்பினாலும் அதை பாஜக ஏற்றுக்கொள்ளாது என்றே தோன்றுகிறது. 

ஆகவே இவ்விரு கட்சிகளுக்குமே அவர்கள் அமைக்கவிருக்கும் கூட்டணியால் பெரிதாக ஏதும் லாபம் இருக்க வாய்ப்பில்லை. 

அப்படியானால் என்னதான் வழி?

கடந்த தேர்தலின் முடிவில் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 533 இடங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றிய மாநில கட்சிகள் நடைபெறவிருக்கும் தேர்தலில் பெறும் இடங்களின் எண்ணிக்கையே நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் என்கின்றனர் தேர்தல் கணிப்பாளர்கள்.   

இதை நன்கு உணர்ந்துள்ளதால்தான் தமிழக முதல்வர் அடுத்து மத்தியில் அமையவிருக்கும் ஆட்சியை வழிநடத்தும் வலிமையை தன்னுடைய கட்சிக்கு பெற்றுத் தர பாடுபட வேண்டும் என்று சமீபத்தில் தன்னுடைய கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார் . இது அவருடைய பிரதமர் கனவு என்று ஒதுக்கி விட முடியாது. இப்போதுள்ள குழப்பமான சூழல் தொடருமானால் தமிழகத்தில் அதிமுக பெறும் இடங்களின் எண்ணிக்கை அவருக்கு அந்த வலிமையை பெற்றுத் தந்தாலும் வியப்பில்லை. 

நம்முடைய தமிழக முதல்வரைப் போன்றே மேற்கு வங்க முதல்வருக்கும் இத்தகைய கனவு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. நாற்பதும் நமதே என்கிற தமிழக முதல்வர் கூறுவதைப் போன்றே சமீப காலங்களில்  மமதா மேடமும் கூறி வருகிறார்! உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரர் மாயாவதிக்கும் இது ஒரு நீண்ட நாள் கனவு. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் கிடைத்த அடி அவரை தற்போதைக்கு எழுந்திருக்க விடாது. 

மேலே விவாதித்துள் அனைத்தையும் கருத்தில் கொண்டு நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை தோராயமாக கீழே பட்டியலிட்டுள்ளேன்.  



தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருப்பதால் அதற்கு முன் இந்த போக்கு மாறலாம். ஆனாலும் பெரிதாக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. 

பாஜக தனிப்பெரும் கட்சியாக வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்பது உண்மைதான். ஆனால் பிரதமராக நரேந்திர மோடி வர முடியுமா என்பது பாஜக எத்தனை இடங்களைக் கைப்பற்றப் போகிறது என்பதைப் பொறுத்தே அமையும். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஷட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் கிடைக்கவிருக்கும் இடங்களுக்கு மோடி பொறுப்பேற்க முடியாது என்பதால் அதை தவிர்த்துள்ள மற்ற மாநிலங்களில் கிடைக்கவிருக்கும் இடங்கள் அவரைப் பொறுத்தவரை மிக முக்கியத்துவம் பெறுகின்றன. பல அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டுமென்றால் பாஜக குறைந்தபட்சம் 225 இடங்களயாவது கைப்பற்ற வேண்டும். இப்போதைய சூழலில், அதாவது ஆம் ஆத்மி கட்சியின் சமீபத்திய தில்லி வெற்றிக்குப் பிறகு இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

காங்கிரஸ் மற்றும் பாஜகவினரின் இந்த அவல நிலைக்கு தேசிய கட்சிகள் என்ற நிலையில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தங்களுடைய கட்சிகள் வளர தேவையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் எந்த தேர்தலில் எந்த மாநில கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் வெற்றி கிடைக்கும் என்கிற குறுகிய கால கண்ணோட்டத்திலேயே இருந்து வந்ததுதான் முக்கிய காரணம். 

நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் எவ்வித அடித்தளமும் இல்லாத பாஜக தனித்து ஆட்சி அமைக்க தேவையான இடத்தை யாருடைய தயவும் இல்லாமல் கைப்பற்றிவிட முடியும் என்பதும் அது சாத்தியம்தான் என்று அனைவரும் கூப்பாடு போடுவதும் வேடிக்கையாகத்தான் உள்ளது. 

காங்கிரசின் மீதுள்ள கோபம் மட்டுமே பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்துவிட உதவாது. ஏனெனில் காங்கிரஸ் இழக்கும் ஒவ்வொரு ஓட்டையும் பெற இன்று பல வலிமை வாய்ந்த மாநில கட்சிகள் உள்ளன. இது போதாது என்பதுபோல் புதிதாய் முளைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியும் இம் மாநில கட்சிகளுடன் இணைந்து பாஜக மற்றும் மோடியின்  இலட்சியத்தை வெறும் பகற்கனவாக்கிவிடுமோ! 

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

*********** 

18 கருத்துகள்:

  1. பார்ப்போம்... பட்டியலையும் சரி பார்க்கிறேன்...!

    பதிலளிநீக்கு

  2. நீங்கள் சொல்வதுபோல் இந்த பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான இடத்தைப் பெறமுடியாது என்பது உண்மை.சாமானியனின் கட்சி என சொல்லிக்கொள்ளும் ஆம் ஆத்மி கட்சியின் சமீபத்திய செயல்பாடுகளைப் பார்க்கும்போது எனக்கென்னவோ இவர்கள் தில்லியின் எல்லையைத் தாண்டமாட்டார்கள் எனத் தோன்றுகிறது.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யார் யார் எந்த கூட்டணியில் இருப்பார்கள் என்பது பற்றி அறியாதவரையில் யார் எவ்வளவு இடம் பெறுவர் என்பதை இப்போது சொல்ல இயலாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். வட மாநிலத்தலைவர்கள் ஒரு தென்னிந்தியரை தலைமை அமைச்சராக விடமாட்டார்கள். குடியரசுத்தலைவருக்கு நிச்சயம் தலைவலியைத் தரக்கூடிய தேர்தல் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. my mind goes back to 1971 election to the tamilnadu assembly
    (grand alliance and all that)
    national partiees will loose their
    strength but they will be .
    the kingmakers and will lead to an immediate bye-election
    (consider the downfall of charansing's ministry and the grate
    young turk chandrasekar's ministry

    பதிலளிநீக்கு

  4. கொள்கைகளிலும் மக்கள் நலத் திட்டங்களிலும் காங்கிரஸ்மற்ற எல்லாக் கட்சிகளிலிருந்தும் தனியாய் நிற்கிறது. இருந்தாலும் ஊழல் என்னும் சாக்கடைக்குள் காலை விட்டும் சந்தர்ப்ப அரசியலுக்கு முன்கைகட்டியும் நிற்கும் இந்தப் பாரம்பரியக் கட்சியை நினைத்தால் பாவமாயிருக்கிறது. இருந்தாலும் இவர்களது ஆட்சியில் மக்கள் பலன் பெற்றுள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  5. மிக நல்ல அலசல். ஆந்திராவில் காங்கிரஸ் இன்னும் பெரிய அடி வாங்கும் என நினைக்கிறேன். அதே போல, தமிழகத்தில் அதிமுக அவ்வளவு சீட் அள்ளுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது

    பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
  6. நாட்டில் இருக்கும் முக்கிய மூன்று பெண் மாநில தலைவர்களுக்கும் பிரதமர் கனவு இருப்பது தற்செயலானதா என்று தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  7. திண்டுக்கல் தனபாலன் said...
    பார்ப்போம்... பட்டியலையும் சரி பார்க்கிறேன்...!

    பட்டியலில் சில இடங்களில் தவறு இருக்கலாம்.

    நேரமின்மையால் அதை அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் அதனால் என்னுடைய ஒட்டுமொத்த கணிப்பில் பெரிய பாதிப்பு இருக்காது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  8. Blogger வே.நடனசபாபதி said...

    நீங்கள் சொல்வதுபோல் இந்த பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான இடத்தைப் பெறமுடியாது என்பது உண்மை.சாமானியனின் கட்சி என சொல்லிக்கொள்ளும் ஆம் ஆத்மி கட்சியின் சமீபத்திய செயல்பாடுகளைப் பார்க்கும்போது எனக்கென்னவோ இவர்கள் தில்லியின் எல்லையைத் தாண்டமாட்டார்கள் எனத் தோன்றுகிறது. //

    அப்படி சொல்வதற்கில்லை. சமீபத்தில் நடந்த தெருப் போராட்டத்தில் சிக்கி தவித்தவர்களுள் சிலர் வெறுத்துப் போயிருக்கலாம். ஆனால் மற்ற நகரங்களில் உள்ளவர்கள் அதாவது காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்றாக இல்லாவிடினும் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்திருப்பவர்கள் இவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்புண்டு. குறிப்பாக மெட்ரோ எனப்படும் தில்லை, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதிராபாத் போன்ற நகரங்களில் வாழும் படித்த இளைஞர்கள். கொல்கொத்தா மட்டும் விதிவிலக்கு. அங்கு படித்த இளைஞர்களுக்கும் கூட அவர்களுடைய மாநிலத்தைச் சார்ந்த கட்சிகள் மீதுதான் பற்று.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யார் யார் எந்த கூட்டணியில் இருப்பார்கள் என்பது பற்றி அறியாதவரையில் யார் எவ்வளவு இடம் பெறுவர் என்பதை இப்போது சொல்ல இயலாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். வட மாநிலத்தலைவர்கள் ஒரு தென்னிந்தியரை தலைமை அமைச்சராக விடமாட்டார்கள். குடியரசுத்தலைவருக்கு நிச்சயம் தலைவலியைத் தரக்கூடிய தேர்தல் என எண்ணுகிறேன். //

    இங்கு இதுவரை இருந்ததுபோல் வலிமை வாய்ந்த கூட்டணி அமைய வாய்ப்பில்லை. அதிமுக கம்யூனிஸ்டுகளுடன் களம் இறங்கும். திமுக விடுதலை சிறுத்தை, மக்கள் நேய கட்சி, புதிய தமிழகம் என சில்லறை கட்சிகளுடனும் பாஜக இவ்விரு அணிகளில் சேர அல்லது சேர முடியாத கட்சிகளான பாமக, மதிமுக ஆகியோருடனும் சேரலாம். தேதிமுக மட்டுமே எந்த அணியில் சேர்ந்தால் லாபம் அதிகம் என்று இறுதிவரை பார்த்துக்கொண்டு நிற்கும். திமுகவுடன் சேர்வது படுமுட்டாள்தனமான முடிவாக இருக்கும். எப்படி பார்த்தாலும் மும்முனை போட்டி நிச்சயம். இதில் லாபமடையப் போவது அம்மாதான்.

    பதிலளிநீக்கு

  9. Blogger siva gnanamji(#18100882083107547329) said...
    my mind goes back to 1971 election to the tamilnadu assembly
    (grand alliance and all that)
    national partiees will loose their
    strength but they will be .
    the kingmakers and will lead to an immediate bye-election
    (consider the downfall of charansing's ministry and the grate
    young turk chandrasekar's ministry//

    You may be right to a certain extent. National parties may be kingmakers but not the kings. The present state of confusion is sure to continue for five more years until the so called national parties build strong infrastructure and cadre strength in every State and UTs..

    பதிலளிநீக்கு

  10. Blogger G.M Balasubramaniam said...

    கொள்கைகளிலும் மக்கள் நலத் திட்டங்களிலும் காங்கிரஸ்மற்ற எல்லாக் கட்சிகளிலிருந்தும் தனியாய் நிற்கிறது. இருந்தாலும் ஊழல் என்னும் சாக்கடைக்குள் காலை விட்டும் சந்தர்ப்ப அரசியலுக்கு முன்கைகட்டியும் நிற்கும் இந்தப் பாரம்பரியக் கட்சியை நினைத்தால் பாவமாயிருக்கிறது. இருந்தாலும் இவர்களது ஆட்சியில் மக்கள் பலன் பெற்றுள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.//

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து அதிக ஆண்டுகள் நாட்டை ஆண்டது அவர்கள்தானே? ஆனால் சாதாரணமாக ஒருவரின் வெற்றிகளை விட அவருடைய தோல்விகளைத்தானே அவருடைய எதிரிகள் நினைவில் வைத்திருப்பார்கள்? அதுதான் காங்கிரசின் விஷயத்திலும் நடக்கிறது! சுமார் நாற்பதாண்டு கால ஆட்சியில் நாட்டிற்கு கிடைத்த அனைத்து வசதிகளையும் மறக்கும் விதமாக அவர்கள் கடந்த பத்தாண்டில் செய்த ஊழல்கள்தானே மக்கள் நினைவில் இப்போது உள்ளன?

    பதிலளிநீக்கு

  11. Blogger bandhu said...
    மிக நல்ல அலசல். ஆந்திராவில் காங்கிரஸ் இன்னும் பெரிய அடி வாங்கும் என நினைக்கிறேன். அதே போல, தமிழகத்தில் அதிமுக அவ்வளவு சீட் அள்ளுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது //

    ஆந்திரா விஷயத்தில் நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் YSR பெறும் ஒவ்வொரு இடமும் இறுதியில் காங்கிரசுக்கே சென்றடைய வாய்ப்புள்ளது. தேர்தலுக்குப் பிறகு அவர்கள் யார் பக்கம் சாய்வார்கள் என்று இப்போது சொல்ல முடியாது.

    தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளதால் மும்முனை போட்டி நிச்சயம் இருக்கும். ஓட்டுகள் சிதறுவதால் அது அதிமுகவுக்கே சாதகமாக அமையும். அவருக்கு எதிராக விழும் ஓட்டுகள் அதிகமாக இருப்பினும் தனிப் பெரும் கட்சியாக அது குறைந்தபட்சம் முப்பது இடங்களை கைப்பற்றும்.

    பதிலளிநீக்கு

  12. Blogger மருதநாயகம் said...
    நாட்டில் இருக்கும் முக்கிய மூன்று பெண் மாநில தலைவர்களுக்கும் பிரதமர் கனவு இருப்பது தற்செயலானதா என்று தெரியவில்லை//

    இன்னும் சில மாநிலங்களில் பெண்கள் முதல்வராக இருப்பார்களேயானால் (ராஜஸ்தானில் இப்போதுதான் வந்திருக்கிறார்) அவர்களுக்கும் இந்த பேராசை இருந்திருக்கும். அது பெண்கள் சுபாவம் என்று சொன்னால் பெண்கள் அடிக்க வருவார்கள். ஆகவே அதை வெளிப்படையாக சொல்லாமல் விட்டுவிட்டேன் :)

    பதிலளிநீக்கு
  13. நன்றாக புள்ளி விவரங்களோடு கருத்துக்களை சொன்னீர்கள். பெரும்பாலும் நமது இந்தியாவில் அனைத்து மாநில மக்களும், சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு அளவுகோலும், பாலிமெண்டுக்கு ஒரு அளவுகோலும் வைத்துதான் வாக்களிக்கிறார்கள்.

    // காங்கிரசின் ஆட்சியில் கடந்த ஐந்தாண்டு காலமாக நடைபெற்ற ஊழல்களினால் சலிப்படைந்து போயிருக்கும் என்னைப் போன்ற நடுநிலை வாக்காளர்கள் //

    இதுவரை கார்ங்கிரசுக்கு மட்டுமே ஓட்டு அளித்து வந்த காங்கிரஸ் அனுதாபிகள், காங்கிரஸ் மீது வெறுப்பு வந்தால் ஓட்டு போடாமல், நடுநிலை வ்கிப்பார்களே ஒழிய பாஜகவிற்கு மாற மாட்டார்கள். அதேபோலத்தான் பாஜக அனுதாபிகள்.

    அரசியல் கட்சிகளுக்கு கொள்கை என்பது கிடையாது. தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி. தேர்தலுக்குப் பின் ஒரு கூட்டணி. என்பதுதான் இப்போதைய நடைமுறையாக வைத்து இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  14. மத்தியில், எந்தக்கட்சி ஆட்சியமைத்தாலும், தமிழ் நாட்டுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது என்று நான் நினைக்கிறேன்.
    இந்தியா அளவுக்காவது நல்லது நடந்தால் மகிழ்ச்சியே. நல்ல அலசல். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. இதுவரை கார்ங்கிரசுக்கு மட்டுமே ஓட்டு அளித்து வந்த காங்கிரஸ் அனுதாபிகள், காங்கிரஸ் மீது வெறுப்பு வந்தால் ஓட்டு போடாமல், நடுநிலை வ்கிப்பார்களே ஒழிய பாஜகவிற்கு மாற மாட்டார்கள். அதேபோலத்தான் பாஜக அனுதாபிகள்.//

    உண்மைதான். ஆகவே வெறும் காங்கிரசின் எதிர்ப்பு ஓட்டுகளை நம்பியே பாஜக வெற்றி பெற்றுவிட முடியாது.

    அரசியல் கட்சிகளுக்கு கொள்கை என்பது கிடையாது. தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி. தேர்தலுக்குப் பின் ஒரு கூட்டணி. என்பதுதான் இப்போதைய நடைமுறையாக வைத்து இருக்கிறார்கள். //

    இது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. ஆகவே தனிக் கட்சி எப்போது வருகிறதோ அப்போதுதான் நாட்டிற்கு சுபிட்சம். அதுவரை இப்போதுள்ள நிலைதான் நீடிக்கும். இத்தகைய சூழலில் கூட்டணி கட்சிகளை அனுசரித்துக் கொண்டு நாட்டிற்கு நல்லதும் செய்ய முடியும் என்று நிரூபித்தது காங்கிரஸ்தான். அவர்கள் மட்டும் ஊழலை கட்டுக்குள் வைத்திருந்தால் இந்த அவலநிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். இது நாட்டிற்கு போறாத காலம். இதிலிருந்து மீண்டு வருவது அத்தனை எளிதாக எனக்கு தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
  16. PM Delete
    Blogger Packirisamy N said...
    மத்தியில், எந்தக்கட்சி ஆட்சியமைத்தாலும், தமிழ் நாட்டுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது என்று நான் நினைக்கிறேன். //

    தமிழக கட்சிகள் மத்தியில் ஆளும் கூட்டணியில் ஒரு பலம் வாய்ந்த அங்கத்தினராக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நல்லது நடக்கும்.

    இந்தியா அளவுக்காவது நல்லது நடந்தால் மகிழ்ச்சியே. நல்ல அலசல். நன்றி.//

    இதற்கு மீண்டும் ஒரு கூட்டணி ஆட்சி வந்தால் பலனில்லை. அல்லது பாஜகவோ அல்லது காங்கிரசோ குறைந்த பட்சம் 225 இடங்களைக் கைப்பற்ற வேண்டும். இப்போதுள்ள சூழலில் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரர்
    இடைவிடாத பணிச்சுமையால் தங்களது பல பதிவுகளைப் படிக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன். இருப்பினும் அனைத்தும் படித்து விடுவேன். தங்களின் அரசியல் கணிப்பு சரியாகவே இருக்கும் என்று நம்புகிறேன். மத்தியில் இரு கட்சிகள் மீதும் பெரிதாக எனக்கு நம்பிக்கையில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  18. அ. பாண்டியன் said...
    வணக்கம் சகோதரர்
    இடைவிடாத பணிச்சுமையால் தங்களது பல பதிவுகளைப் படிக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன். இருப்பினும் அனைத்தும் படித்து விடுவேன். தங்களின் அரசியல் கணிப்பு சரியாகவே இருக்கும் என்று நம்புகிறேன். மத்தியில் இரு கட்சிகள் மீதும் பெரிதாக எனக்கு நம்பிக்கையில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். பகிர்வுக்கு நன்றி..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே!

    பதிலளிநீக்கு