01 ஜனவரி 2014

வருசத்துல முதல் நாளும் அதுவுமா.....

என்னுடைய இரண்டு மகள்களும் எங்களுடன் இல்லாத முதல் ஆங்கிலப் புத்தாண்டு தினம்!

இருவருக்குமே தொலைபேசி வழியாக புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லியாகிவிட்டது. 

ஆயினும் மனதுக்குள் ஏதோ இனம் புரியாத சோகம். காலையிலிருந்தே மனம் சரியாக இல்லை. அசதி. சோர்வு.

நண்பகல் என்கிறது சுவர்க்கடிகாரம். 

இணையத்தில் சற்று மேயலாம் என்றால் நேற்று செய்திருந்த உறுதிமொழி பயமுறுத்தியது. சரி வேண்டாம் என்று ஏற்கனவே படித்து முடித்திருந்த ஆங்கில நாவல் ஒன்றை மீண்டும் படித்தால் என்ன தோன்ற எடுக்கிறேன். முதல் ஐந்தாறு பக்கத்திலேயே முழு கதையும் நினைவுக்கு வர சலிப்புடன் மூடி வைக்கிறேன்.

சமையலறையிலிருந்து மனைவியின் கைமணத்தில் பிரியாணி வாசனை. இன்னும் குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும் என்கிறார்கள் மனைவி. 

அதுவரை ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்று நினைப்புடன் மாடிப்படி ஏறுகிறேன். 

'ஏங்க எங்க போறீங்க, தூங்கத்தான' மனைவியின் குரல் மையலறையிலிருந்து.

'ஆமா....ஆஃபனவர்தான்.'

'வருசத்துல முதல் நாளும் அதுவுமா.....எதுக்குங்க.... அப்புறம் வருசம் முழுசும் தூங்கிக்கிட்டேதான் இருப்பீங்க... டிவிய பாருங்க.'

காலை டிஃபனுக்கு அரை மணிக்கு முன்னால் சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்த போதும் இதே பல்லவிதான்.

'இன்னைக்கி ஒரு நாளைக்கி போடாட்டித்தான் என்ன?' 

'இன்னைக்கி போட்டாலும் போடாட்டாலும் வருசம் முழுசும் போடத்தானம்மா போறேன்?'

'அது பரவால்லை.. இன்னைக்கி வேணாம்.'

'சரி' என்பதை தவிர வேறு வழியில்லாமல் மாத்திரை டப்பாவை மூடியாயிற்று. சர்க்கரைக்கு ஒரு நாள் சாப்பிடாவிட்டால் பரவாயில்லை. ஆனால் ரத்த அழுத்ததிற்கு அப்படியில்லையே? டிஃபன் சாப்பிட்டு முடித்ததும் மனைவிக்கு தெரியாமல் அதை சாப்பிட்டாயிற்று. 

வீட்டின் பின்வாசல் கிழக்கு திசையில். காலை வெயில் கீழ் பெட்ரூமை நிறைத்திருந்தது. வெளியில் இதுவரை வீடுகள் எதுவும் கட்டப்படாமல் இருக்கும் வெற்று நிலம். சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் புல் வெளி. அதற்கு அடுத்து சாலை அமைக்க முனிசிபாலிட்டி குவித்துப் போட்டிருந்த செம்மண் காற்றில் எழும்பி திறந்திருந்த பின்வாசல் வழியாக வருவது நன்றாக தெரிகிறது.... மூடி வைத்தால் என்ன என்று தோன்ற ஸ்டாப்பரை இளக்கி மூடுகிறேன்.

'வருசம் முதல் நாள் அதுவுமா வெயில் வரட்டுமே.... எதுக்கு மூடறீங்க?'

இப்படி எதற்கெடுத்தாலும் வருசம் முதல் நாளை காட்டி பேசுவது மூட நம்பிக்கையின் உச்சக்கட்டமல்லவா என்று கேட்க தோன்றுகிறது. ஆனால் அதை மனைவியிடம் கேட்பதில் எவ்வித பயனும் இருக்கப் போவதில்லை என்பதும் புரிகிறது.

சரி இதை நம்முடைய வலை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் மீண்டும் மாடி ஏறுகிறேன்.  

'லஞ்ச் ரெடியானதும் சொல்லு... சிட் அவுட்ல இருக்கேன்.' 

'எதுக்குங்க சிட் அவுட்னு டூப் அடிக்கிறீங்க? வருசத்துல முதல் நாள் அதுவுமா பொய் பேசணுமா? நெட்ல எழுதப்போறேன்னுதான் சொல்லிட்டு போங்களேன்.'

பதில் பேசினால் வம்பு... நாம் நினைத்த காரியம் நடக்காது என்ற நினைப்புடன் என் படுக்கையறைக்குள் நுழைந்து கணினியை திறந்து இணையத்துக்குள் நுழைகிறேன். நேற்று எடுத்த உறுதிமொழி நினைவுக்கு வருகிறது. ஒரு அரை மணி நேரம்தானே..... நாளையிலிருந்து என்று வைத்துக்கொள்ளலாம் என்று சமாதானம் சொல்கிறது மனசு. 

வருடத்தின் முதல் நாள் எது செய்தாலும் அதுவே தொடர்ந்து அந்த வருடம் முழுவதும் செய்ய நேரிடுமா என்ன?

அதுபோலவே 'வருசத்துல முதல் நாள் எத செய்யிறமோ இல்லையோ கோவிலுக்கு போயி சாமிய தரிசிச்சிறணும். அப்பத்தான் இந்த வருசம் முழுசும் சாமியோட அருள் கிடைக்கும்.' என்பார்கள். 

'வருடத்தின் முதல் நாள் என்னை வந்து கேட்பவர்களுக்குத்தான் அருள் பாலிப்பேன் என்று எந்த கடவுள் நேரில் வந்து சொன்னார்?' என்று கேட்டால் நாத்திகன் என்பார்கள். 

எங்களுடைய தேவாலயங்களிலும் சொல்லப்படும் அனைத்து பிரார்த்தனைகளிலுமே இறுதியில் 'எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்' என்ற சொல் இருக்கும். அதாவது இறைவனை தொழுவதே எதையாவது கேட்டுப் பெறுவதற்காகத்தான் என்கிற மனப்பாங்கு அனைத்து மத்ததினரிடமே இருப்பதைத்தான் இது காட்டுகிறது.

அதுமட்டுமல்ல. வேண்டியதை எல்லாம் புத்தாண்டின் முதல் நாள் அன்றே இதை பட்டியலிட்டுவிட வேண்டுமாம். 

நேற்று நள்ளிரவிலிருந்தே அனைத்து கோவில்களும் தேவாலயங்களும் நிறம்பி வழிகின்றன. 

இன்னும் சிலர் தமிழ் புத்தாண்டு பிறப்பதற்கு முந்தைய நாள் இரவில் தங்க நகைகளை எல்லாம் கழற்றி சாமியறையில் வைத்துவிட்டு கண்விழித்ததுமே தங்கத்தில் விழிக்க வேண்டும் என்பார்கள். அப்போதுதான் அந்த வருடம் முழுவதும் தங்கம் தங்கமாய் வீடு வந்து சேரும் என்கிற நம்பிக்கை. 

மாத சம்பளவாசிக்கு ஆண்டின் முதல் நாளில் தங்கத்தில் கண் விழித்தால் மட்டுமே அந்த ஆண்டில் தங்கம் வந்து குவிந்துவிடப் போவதில்லை. ஆனாலும் அப்படி ஏதும் நடக்காதா என்கிற நப்பாசைதான் இத்தகைய நம்பிக்கைகளுக்கு மூல காரணம். 

வருடத்தின் முதல் நாளில் நல்லவை எத்தனை நடந்தாலும் அந்த வருடம் முழுவதுமாக நன்மைகளாகத்தான் நடக்கும் என்பதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதுபோலவே வருடத்தின் முதல் நாளில் எத்தகைய தோல்விகள் ஏற்பட்டாலும் அந்த ஆண்டு தோல்வியாகவே முடியும் என்பதிலும் உண்மை இல்லை. 

வெற்றியும் தோல்வியும் நாம் எடுக்கும் முயற்சிகளைப் பொருத்தே அமைகின்றன என்ற புத்துணர்வுடன் இந்த வருடத்தில் அடியெடுத்து வைப்போம். 

உங்களுடைய அனைத்து முயற்சிகளும் நிச்சயம் வெற்றி பெறட்டும் என்ற வாழ்த்துக்களுடன்....









16 கருத்துகள்:

  1. சொன்னாலும் சொன்னீங்க... அத்தனையும் உண்மை. ஆனால் மனுஷ மனசுக்கு எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலைதானே:(

    இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

    துளசி (சென்னையில் இருந்து!)

    பதிலளிநீக்கு
  2. நம்மில் பெரும்பான்மையோர் ஆண்டில் முதல் நாள் நடப்பது ஆண்டு முழுதும் நடக்கும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவேளை ‘எண்ணம் போல் வாழ்’ என்ற பழமொழிக்கிணங்க நடக்கிறார்களோ என்னவோ.

    //வெற்றியும் தோல்வியும் நாம் எடுக்கும் முயற்சிகளைப் பொருத்தே அமைகின்றன என்ற புத்துணர்வுடன் இந்த வருடத்தில் அடியெடுத்து வைப்போம். //

    வழிமொழிகின்றேன்.

    பதிலளிநீக்கு
  3. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    அன்புடன் DD

    பதிலளிநீக்கு
  4. வெற்றியும் தோல்வியும் நாம் எடுக்கும் முயற்சிகளைப் பொருத்தே அமைகின்றன//உண்மைதான்

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா8:47 PM

    வணக்கம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

  6. ஒரே விஷயத்தை இரண்டு விதமாகப் பார்க்கலாம். இன்று வருடத்தின் முதல் நாள். அமாவாசை19 ஆண்டுகளுக்குப்பின் இப்படி என்று சொன்னார்கள். முதல்நாள் இருண்ட நாள் என்றும் இனி வளர்பிறைதான் என்றும் நினைக்கலாம். வருடத்தில் எல்லா நாட்களும் ஒரே போல்தான். நாம்தான் ஏதோ காரணங்களுக்காக முக்கியத்துவம் கொடுக்கிறோம். நான் சில நாட்களுக்கு முன் என்னை நானே உணரவை என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அது ஒரு வகையில் பலருக்கும் பொருந்தும். சுட்டி கீழே
    gmbat1649.blogspot.in/2011/11/blog-post_27.html

    பதிலளிநீக்கு
  7. புத்தாண்டின் துவக்கத்திலேயே பதிவிட்டதால். இனி தினம் பதிவிடப்போகிறீர்கள். தங்கள் இல்லத்திலும் திட்டமிட்டு அவர்கள் சொல்வதை கேட்கவைத்துவிட்டார்கள் போல் தோன்றுகிறது.

    நான் இதுபோன்ற அனைத்தையும் நம்புவேன். ஆனால், எனக்கு வசதியாகப்படும் பொழுதுமட்டும்தான்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  8. துளசி கோபால் said...
    சொன்னாலும் சொன்னீங்க... அத்தனையும் உண்மை.

    நம்ம வீட்லயே இந்த நிலைதானே அப்போ நிச்சயம் உண்மையாத்தான இருக்கும்! //

    ஆனால் மனுஷ மனசுக்கு எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலைதானே:(//

    ஆசைக்கு அளவில்லை என்பதும் உண்மைதான்.

    இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.//

    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  9. வே.நடனசபாபதி said...
    நம்மில் பெரும்பான்மையோர் ஆண்டில் முதல் நாள் நடப்பது ஆண்டு முழுதும் நடக்கும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவேளை ‘எண்ணம் போல் வாழ்’ என்ற பழமொழிக்கிணங்க நடக்கிறார்களோ என்னவோ. //

    இந்த பழமொழி உண்மையில் நீ என்னவாக உன்னை கற்பித்துக்கொள்கிறாயோ அதுபோலவே ஆவாய் (you are what you thing you are) என்கிறது. அதாவது நமக்கு எதையும் சாதிக்கக் கூடிய ஆற்றல் உள்ளது என்று நாம் நினைத்தால்தான் நமக்கு அந்த ஆற்றல் வரும். முடியாது என்று நாமே நினைத்தால் முடியாதுதான். ஆனால் நான் பணக்காரன், பணக்காரன் என்று நினைப்பதால் மட்டும் பணக்காரன் ஆகிவிட முடியாதே. அதற்கு உழைப்பும் வேண்டுமே. பைபிளிலும் கூட கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொல்லியிருப்பதை கடவுளிடம் எதைக் கேட்டாலும் கிடைக்கும் என்பதாக கற்பித்துக்கொண்டு இதைத் தா, அதைத் தார் என்று பிரார்த்திப்பார்கள். ஆனால் நல்ல எண்ணத்தை தா, பொய்யுரைக்கா நாவைத் தா, பிறருக்கு பரிவு காட்டும் உள்ளத்தைத்தா என்று யாரும் கேட்பதில்லை.

    //வெற்றியும் தோல்வியும் நாம் எடுக்கும் முயற்சிகளைப் பொருத்தே அமைகின்றன என்ற புத்துணர்வுடன் இந்த வருடத்தில் அடியெடுத்து வைப்போம். //

    வழிமொழிகின்றேன். //

    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  10. @ திண்டுக்கல் தனபாலன்,
    @ கவியாழி
    @ ரூபன்

    ஆகியோரின் வருகைக்கும்/வாழ்த்துக்கும் மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சிறப்பு மிக்க புத்தாண்டாய் அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு


  11. G.M Balasubramaniam said...

    ஒரே விஷயத்தை இரண்டு விதமாகப் பார்க்கலாம். இன்று வருடத்தின் முதல் நாள். அமாவாசை19 ஆண்டுகளுக்குப்பின் இப்படி என்று சொன்னார்கள். முதல்நாள் இருண்ட நாள் என்றும் இனி வளர்பிறைதான் என்றும் நினைக்கலாம். //

    அப்படியா? தெரியாத விஷயம். பகிர்வுக்கு நன்றி.

    வருடத்தில் எல்லா நாட்களும் ஒரே போல்தான். நாம்தான் ஏதோ காரணங்களுக்காக முக்கியத்துவம் கொடுக்கிறோம். நான் சில நாட்களுக்கு முன் என்னை நானே உணரவை என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அது ஒரு வகையில் பலருக்கும் பொருந்தும். சுட்டி கீழே
    gmbat1649.blogspot.in/2011/11/blog-post_27.html//

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த உண்மை தெரிந்திருந்தும் பழக்கத்தை விட முடியாமல் நம் முன்னோர் செய்தவைகளையே நாமும் செய்துக்கொண்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு

  12. Packirisamy N said...
    புத்தாண்டின் துவக்கத்திலேயே பதிவிட்டதால். இனி தினம் பதிவிடப்போகிறீர்கள். தங்கள் இல்லத்திலும் திட்டமிட்டு அவர்கள் சொல்வதை கேட்கவைத்துவிட்டார்கள் போல் தோன்றுகிறது.

    நான் இதுபோன்ற அனைத்தையும் நம்புவேன். ஆனால், எனக்கு வசதியாகப்படும் பொழுதுமட்டும்தான்.//

    ஹாஹா... நம்மில் பலரும் இந்த ரகம்தான்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

    நன்றி. உங்களுக்கும் எதிர்வரும் ஆண்டு சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  13. உண்மைதான் நாம் எடுக்கும் முயற்சிகளும், காரியத்தின் தன்மையும் தான் நம்முடைய வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். மற்றவை எல்லாம் நமது மன திருப்திக்காக செய்யப்படுபவையே.

    பதிலளிநீக்கு
  14. நல்ல பகிர்வு.....

    பல விஷயங்களை நாம் விரும்பவில்லை என்றாலும் செய்ய வேண்டியிருக்கும்.... :) அதில் இதுவும் ஒன்று......

    பதிலளிநீக்கு
  15. Robert said...

    உண்மைதான் நாம் எடுக்கும் முயற்சிகளும், காரியத்தின் தன்மையும் தான் நம்முடைய வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். மற்றவை எல்லாம் நமது மன திருப்திக்காக செய்யப்படுபவையே//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  16. 40 PM
    வெங்கட் நாகராஜ் said...
    நல்ல பகிர்வு.....

    பல விஷயங்களை நாம் விரும்பவில்லை என்றாலும் செய்ய வேண்டியிருக்கும்.... :) அதில் இதுவும் ஒன்று...... //

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு