25 பிப்ரவரி 2013

கடல் - ஆழமில்லாத ஒரு அபத்தக் குப்பை!



முன்பெல்லாம் தமிழ் திரைப்படங்கள் ஆழமான, அழுத்தமான கதைகளைக் கொண்டிருந்தன. காட்சிகளும், வசனங்களும் அன்றாடம் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளையும் பேச்சையும் படம் பிடித்துக் காட்டுவதுண்டு. அவற்றில் சிலவற்றை மிகைப்படுத்தி காட்டுவதும் உண்டு. நடிக, நடிகைகளின் நடிப்பு சற்றே மிகைப்படுத்தப்படுதலும் இருந்தன. ஆயினும் படத்தைப் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வரும்போது ஒரு மனநிறைவு இருந்ததை உணர முடிந்தது.

பாலசந்தர் நாடகத்துறையிலிருந்து வந்தவர் என்பதை நினைவுபடுத்தும் விதமாக அவருடைய பெரும்பாலான படங்கள் அமைந்தன - தண்ணீர், தண்ணீர் உள்பட. அவருடைய காமரா ஆங்கிளும் கூட (உ.ம். எதிர்நீச்சல்) முன்வரிசையிலிருந்து மேடையை அண்ணாந்து பார்க்கும் ஆங்கிளில் அமைக்கப்பட்டிருக்கும். அவருக்கு நெடுநாளாக 'கெட்ட வார்த்தை' ஒன்றை
தன்னுடைய படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் இருந்தது. சில படங்களில் வாயசைப்பாக மட்டும் காட்டுவார். அபூர்வராகத்தில் துணிந்து கமல் வழியாக அதை உதிர்ப்பார். அதுதான் அவர் செய்த பெரிய புரட்சி!

அவரைத் தொடர்ந்து பாலு மகேந்திரா. இவருடைய படங்கள் பலவும் ஒரே மாதிரியான கருக்கருவைக் கொண்டிருந்ததோடு காட்சியமைப்புகளும், கதாபாத்திரங்களும் கூட அவருடைய பாணியிலேயே அமைந்து பேசியதை
காண முடிந்தது. மூன்றாம் பிறையை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நினைவில் நிற்கும்படியாக ஒன்றும் இல்லை. அவருடைய படங்களில் சிறப்பம்சம் காமரா, லைட்டிங் மற்றும் மென்மையான பாடல்கள்.

பிறகு பாரதிராஜா. பதினாறுவயதினிலே ஒரு பசுமை புரட்சியாக - ஒரு நிஜமான கிராமத்தில்  நிஜமான பாத்திரங்களை உலாவ விட்டு - வெளிவந்தது. அவரும் கூட அதற்குப் பிறகு தடம்புரண்டாலும் முதல்மரியாதை, கிழக்குச் சீமையிலே போன்ற படங்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்தின.

பாக்கியராஜ் doesn't deserve to be mentioned in this list. அவருடைய படங்களை இப்போது பார்த்தால் வெறும் கமர்சியல் குப்பையாகவே படுகின்றன.

மணிரத்தின் ஆரம்ப கால படங்களான பகல்நிலவு, மவுனராகம், நாயகன் முதல் சமீபத்திய கடல் வரை அவருக்கு மிகவும் பிடித்தமானது வயலன்ஸ் (violence). அவருடைய அனைத்து படங்களிலும் எந்த அளவு உணர்ச்சிவசமான
காட்சிகள் இருந்தனவோ அதே அளவுக்கு ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் இருந்தன. மாஃபியா ரக கதாபாத்திரங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை.

அவர் காப்பியடிப்பதிலும் மிகவும் கைதேர்ந்தவர். அவருடைய படங்களை inspired என்பதைவிட copied என்பதுதான் சரி. சமூகத்தில் நடப்பவற்றை நகலெடுத்து சுய கற்பனையைக் கலந்து வடிப்பதுதான் 'கதை'. ஆனால்
இன்னொருவருடைய கற்பனையை சற்று இப்படியும் அப்படியும் வளைத்து தன்னுடைய கற்பனை போல் வடித்தெடுப்பது மணிக்கும் அவருடைய தோழரான கமலுக்கும் கைவந்த கலை.

மணி சமூகத்தில் காப்பியடிக்க விஷயம் கிடைக்கவில்லை என்றால் இதிகாசங்களையும் காப்பியடிப்பார். தளபதியில் மகாபாரதம், இராவணனில் ராமாயணம் என்ற தொடரில் இப்போது கடலில் பைபிள். சாத்தான் இயேசுவின் அண்ணன் என்கிறதாம் பைபிள்!!!

அவருடைய அனைத்து படங்களிலுமே protagonist,  antagonist என்று இருவர் இருப்பர். அதாவது நல்லவர் என்று ஒருத்தர் இருந்தால் அவரை எதிர்க்க கெட்டவரும் ஒருவர் இருப்பார். இருவருக்கும் இடையில் நடைபெறும்
யுத்தத்தில் நல்லவர் வெல்வார்.

அவருடைய படங்களில் பாலசந்தர், பாலுமகேந்திரா போன்றவர்களைப் போலவே அவருடைய பாணியில்தான் அனைத்து கதாபாத்திரங்களும் வசனங்களை பேச வேண்டும். மணிரத்தினத்தின் பாத்திரங்கள் வசனம் பேசுகின்ற பாணியே ஒரு காலத்தில் பெரிய நகைச்சுவையாக பல படங்களில் காண்பிக்கப்பட்டன. இருந்தாலும் மணி அதை கண்டுக்கொள்ளவே மாட்டார். அதற்குப்பிறகு வந்த அவருடைய அனைத்துப் படங்களிலும் அதே பாணி! சலிப்பே இல்லாமல் எப்படி ஒரே பாணியை இருபதாண்டு காலமாக.. how stupid!

கடல் படத்தில் வரும் யதார்த்தத்திற்கு முரணான பல விஷயங்களை என்னுடைய நண்பர் ஜோ மில்டன் பட்டியலிட்டு விட்டார். அவர் படத்தில் வரும் பகுதியைச் சார்ந்தவர் என்பதால் அவர் எழுதிய அனைத்தும் உண்மையே! இத்தகைய அபத்தங்கள் சாதாரண ஒரு இயக்குனர் -  சிலரைக் குறிப்பிடலாம். தூத்துக்குடியை சார்ந்த ஒரு இயக்குனரையே கூட குறிப்பிடலாம்தான். வேண்டாம். ஏன் வம்பு? அவருக்கும் கூட சில விசிறிகள் இருக்கலாம்! - என்றால் சரி, அவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்று விட்டுவிடலாம். ஆனால் தேசிய அளவில் தலைசிறந்த படைப்பாளி என்று பெயர் எடுத்த ஒருவர் இத்தகைய அபத்தங்களை செய்வது மன்னிக்க முடியாதது. கதை, வசனம் தன்னுடையதல்ல என்று அவர் தப்பிக்க முடியாது.

அவருடைய சாத்தான் கதாபாத்திரத்தில் வருபவருடைய பெயர் உண்மையிலேயே இன்று பிரிந்துபோன கிறிஸ்த்தவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு முன்னாள் பாதிரியாருடையது  என்பது மணிக்கு தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால் ஜெயமோகனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அவரும் கத்தோலிக்க பாதிரியாராக இருந்து வெளியேற்றப்பட்டவர்தான் (excommunicated). ஆனாலும் அவர் இன்னமும் இறைப்பணியில்தான் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய வெண்கல குரலில் வெளிவந்துள்ள அனைத்து கிறிஸ்த்துவ பாடல்களும் மிகவும்
பிரபலமானவை. அவருடைய பெயரை தன்னை சாத்தான் என்று கூறிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்திற்கு வைத்திருப்பது
அபத்தத்தின் உச்சக்கட்டம்!

அதே போன்றதுதான் 'மேசைக்காரன்' என குறிப்பிடப்படுவதும். நான் தூத்துக்குடியில் மேலாளராக பணியாற்றிக்கொண்டிருந்தபோதுதான் இந்த பட்டப்பெயரை கேள்விப்பட்டேன். தூத்துக்குடியில் இதை வசப்பெயர் என்றும்
கூறுவார்கள். அதாவது யாரையாவது கேலி செய்ய வைக்கப்படும் பெயர். தூத்துக்குடி நகரை இரண்டாக பிரிப்பது நகரின் இடையில் செல்லும் ரயில்பாதை. பாதையின் மேற்கே இருப்பவர்கள் மீனவர் அல்லாத மேல்தட்டு கிறிஸ்தவர்கள். கிழக்கே மீனவ கிறிஸ்தவர்கள். தங்களை மேல்தட்டு மக்கள் எனக் கூறிக்கொள்பவர்களும் அதே மீனவ இனத்தைச் (Paravas) சார்ந்தவர்கள்தான் என்றாலும் பெரும்பாலும்  Fernando என்ற குடும்பப் பெயரைக் கொண்டவர்கள்தான் என்றாலும் Fernando என்றால் எங்கே மீனவர்கள் என்று தங்களை மற்றவர்கள் நினைத்துவிடுவார்களோ என்று அஞ்சி தங்களை Fernandez என்று கூறிக்கொள்வார்கள்!

அந்த காலத்தில் மீனவர் அல்லாத மேல்தட்டு மக்களுடைய அனைத்து வீடுகளிலும் உணவு மேசையில் (dining table) அமர்ந்துதான் உண்பார்களாம். மீனவ குடும்பங்கள் பெரும்பாலும் அதிகம் படிக்காத பாமர மக்கள் என்பதால்
அவர்கள் தரையிலேயே அமர்ந்து உண்பார்களாம்! ஆகவே அவர்களை 'மேசைக்காரர்கள்' என்று கேலியாக அவர்களுக்கு பின்னால் அழைப்பதுண்டாம். அதுபோலவே தூத்துக்குடியில்  'கோப்பைக்காரங்க', 'கப்பக்காரங்க' என பல வசவுப்பெயர்கள் உண்டு. ஆனால் அவர்களை படத்தில் வருவதுபோல மேசைக்காரரே, கப்பக்காரரே என அழைத்து நான் கண்டதும்
இல்லை கேட்டதும் இல்லை.

தெந்தமிழ்நாட்டு மீனவக் குடும்பங்கள் இறைநம்பிக்கைக்கு மிகவும் பெயர்போனவை. ஆண்கள் எப்படியோ, பெண்கள் மிகவும் தெய்வ நம்பிக்கை உடையவர்கள். கடலுக்குள் பிழைப்பு தேடிச் செல்லும் தங்களுடைய வீட்டு ஆண்கள் நல்ல சுகத்தோடு திரும்பிவர அவர்களுக்கு இறைநம்பிக்கைதான் ஆதரவாய் இருந்து வந்துள்ளது. அவர்களுடைய நம்பிக்கையில் முதலிடம் இயேசுவின் தாயார் மாதாதான்... எந்த துன்ப நேரத்திலும் இயேசுவே என்று அழைக்கும் பெண்களை விட மாதாவே என்று கதறும் தாய்மார்கள்தான் அதிகம். அத்தகைய பெண்கள் ஞாயிறு திருப்பலிக்கு அழைக்கும் குருவானவரிடம் நக்கலாக, அதுவும் கேவலமாக பேசுவதுபோன்ற வசனங்கள் எழுதப்பட்டிருப்பதற்கு ஜெயமோகனின் வக்கிர புத்திதான் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

என்னைப் போன்ற கிறிஸ்த்துவர்களுக்கு இஸ்லாமிய அல்லது இந்து மத நுணுக்கங்களைப் பற்றிய அல்லது பூசை புனஸ்காரங்களைப் பற்றிய விவரங்கள் எப்படி முழுவதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லையோ அதுபோன்றுதான் கிறிஸ்த்தவரல்லாதவர்களுக்கும் ரோமன் கத்தோலிக்கம் என்றால் என்ன என்றோ பிரிந்து போன சகோதரரகள் (Protestants) என்றால் என்ன என்றோ அல்லது அவர்களுடைய வழிபாடுகள், வாழ்க்கை முறை, பேச்சுவழக்கம் இவைகளைப் பற்றியெல்லாம் முழுமையக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  அத்தகைய சூழலில் அவர்களுடைய வாழ்க்கை முறையை கதையாக வடிக்கும்போது சம்பந்தப்பட்டவர்களை ஆலோசகர்களாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அவசியத்தைக் கூட உணராமல் குருட்டுத்தனமாக தனக்கு தோன்றியதை படம்பிடித்து வெளியிடுவது என்பது மணிரத்தினம் போன்றவர்களுக்கு நிச்சயம் அழகல்ல.

ஆனால் கடலோர கிறிஸ்துவர்களுடைய வாழ்க்கையை சரியான முறையில் படம்பிடித்து காட்டவில்லை என்பதற்காக மட்டும் இந்த திரைப்படம் தோல்வியடையவில்லை என்பதையும் அவர் உணர்ந்துக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த கதையே பலருக்கும் அன்னியமாகவும் அபத்தமாகவும் பட்டதால்தானோ என்னவோ படம் படுதோல்வியை கண்டுள்ளது.

இராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்ட இராவணனும் இத்தகைய தோல்வியைத்தானே தழுவியது!

இனியாவது மணிரத்தினம் விழித்துக்கொண்டால் சரி. Some people never realise their folly until it is too late!

*********

15 பிப்ரவரி 2013

வனத்துல சுத்துனாலும்.....




எப்போதும் போலவே காதலர் தினம் வந்தது. பஜ்ரங்தல், இந்துத்வா அசட்டுத் தீவிரவாதிகளின் அராஜகங்களும் நடந்தேறின.

பல தமிழ் தொலைக்காட்சிகளில் காதலர் தினம் - சரியா, தவறா? அல்லது வேண்டுமா, வேண்டாமா?  என்ற ரீதியில் விவாத மேடைகளும் அரங்கேறின.

சொல்லி வைத்தாற்போல் அனைத்து மேடைகளிலும் லோக்கல் இந்துத்வா, பிஜேபி தலைவர்கள் ஒரே ராகத்தில், உச்சஸ்தாயியில் அதை எதிர்த்தனர். இளைஞர்கள், எழுத்தாளர்கள், நடுநிலையாளர்கள் என அவர்களுடைய எதிரணியில் திரண்ட அனைவருமே இதில் தவறேதும் இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமான வர்த்தகமயமாக்கல்தான் காதலர் தினத்தின் புனிதத்தைக் கெடுத்துவருகின்றது என்றெல்லாம் பேசினார்கள்.

அதில் சன்நியூஸ் நடத்திய விவாத மேடையில்தான் பல முட்டாள்தனமான ஏன், கேவலமான சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டன.

'வனத்துல சுத்துனாலும் - அவர் சொன்னது 'மேய்ஞ்சாலும்(!)' இனத்துல வந்து சேரணும்னு சொல்லி வச்சிருக்குல்லே...'

எதற்கோ சொன்ன பழமொழியை காதலர் தினத்துக்கு எதிராக பயன்படுத்தியபோது எதிரணியினரை மட்டுமல்லாமல் அதை கேட்ட அனைவரையுமே நிச்சயம் முகம் சுழிக்க வைத்திருக்கும்.

அதாவது யாரை வேண்டுமானாலும் - அவனோ, அவளோ எந்த சாதியை சார்ந்தவராக இருந்தாலும் காதலித்துக் கொள்ளலாமாம் (அவர் உபயோகித்த 'மேய்ஞ்சாலும்' என்ற வார்த்தைக்கு பொருள் வேறு என்பது வேறு விஷயம் - ஆனால் திருமணம் என்று வரும்போது சாதிக்குள்ளேயே செய்துக்கொள்ள வேண்டுமாம்.

எத்தனை அருமையான அறிவுரை! லட்சோப லட்சம் பார்வையாளர்கள் காணக்கூடிய ஒரு ஊடகத்திலேயே இப்படியொரு அருவருக்கத்தக்க உத்தியை ஒருவரால் துணிச்சலாக கூறமுடியும் என்றால் அவர் சார்ந்திருந்த கட்சியினரின் உண்மையான தரத்தை என்னவென்று சொல்வது?

சாதி அடிப்படையில் துவங்கப்படும் அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் மறுக்கப்படும் வரையில் இத்தகைய அநாகரீகமான பேச்சுக்களும் செயல்பாடுகளும் குறைவதற்கு வாய்ப்பேயில்லை.

எல்லா காதல்களுமே திருமணத்தில் முடிவதில்லையே? பலரும் வெறும் பொழுதுபோக்காகத்தானே காதலில் ஈடுபடுகிறார்கள்? அப்படியே திருமணத்தில் முடிந்தாலும் பெரும்பாலான காதல் திருமணங்கள் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களைப் போல நீடித்து நிற்பதில்லையே என்பது போன்ற வாதம் நடுநிலையாளர்கள் பலராலும் முன்வைக்கப்பட்டன.

அதற்கு பதிலாக முன்வைக்கப்பட்ட பதில்: காதலிக்கும்போது இடையில் வரும் அனைத்து சோதனைகளையும், எதிர்ப்புகளையும் துணிச்சலுடன் எதிர்த்து போராடும் காதலர்கள் திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் சில்லறை சோதனைகளிலும் சோர்ந்து போய்விடுகின்றனர். இதுதான் ஒருசில காதல் திருமணங்கள் இடையிலேயே முறிந்துவிடக் காரணம்.

இந்த வாதத்தில் ஓரளவுக்கு உண்மை இருக்கலாம். ஆனால் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களில் பிரச்சினைகள் ஏற்படும்போது அவர்களே தலையிட்டு அவற்றை முளையிலேயே கிள்ளி எடுத்துவிட முன்வருகின்றனர். ஆனால் அதுவே காதல் திருமணங்களில் பிரச்சினை என்று வரும்போது பெரும்பாலான பெற்றோர்கள்  'நீயா பாத்து செஞ்சிக்கிட்டதுதானே, அனுபவி' என்று இரக்கமில்லாமல் கூறி ஒதுங்கிக்கொள்வதை பார்த்திருக்கிறேன்.

சாதி, மதம், பொருளாதாரம் என்பவற்றையெல்லாம் பார்த்து வருவதெல்லாம் காதல் இல்லை. இருவர் மனதிலும் ஒரே சமயத்தில் ஏற்படும் இனந்தெரியா உணர்வுதான் காதல், அதுக்கு சாதிங்கற வேலிய போட்டு எங்கள அதுக்குள்ள அடைக்க முயற்சி செய்யாதீங்க என்று ஒரு இளம் பெண் கண்ணீர் மல்க கூறிய போது....

காதல் என்பது புனிதமானது.... காதலிக்காதவர்களே இல்லை.... காதலை அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்... என்பதெல்லாம் அதை ஆதரிப்பவர்களின் வாதங்களாக இருந்தாலும் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

காதல், திருமணம் என்பது சம்பந்தப்பட்ட இருவருடைய தனிப்பட்ட பிரச்சினை அதில் தலையிட சமுதாயத்திற்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதுதான் என்னைப் போன்ற பல நடுநிலையாளர்களின் கருத்து. ஆனால் அதே சமயம் கண்மூடித்தனமான காதலும் நிஜவாழ்க்கைக்கு ஒத்துவராது என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் சாதியோ மதமோ காதலுக்கு தடையாய் இருக்கலாகாது என்பது மட்டும் சத்தியமான உண்மை.

******


 

13 பிப்ரவரி 2013

யூதரும் இஸ்லாமியர்களும் 2

இஸ்ரவேல் மக்களுக்கு தாங்கள் கடவுளால் தெரிவு செய்யப்பட்ட இனம் (chosen people of God) என்ற எண்ணம் இருக்கிறது.  ஏன், மமதை என்றும் கூட கூறலாம். உலகெங்கும் வசிக்கும் யூத இன மக்களுக்கு இஸ்ரவேல்தான் தாங்கள் சென்று சேர வேண்டிய இடம் (Destined Homeland) என்ற எண்ணமும் உண்டு. 1948ம் ஆண்டு தன்னை தனி நாடாக இஸ்ரவேல் பிரகடனப்படுத்திக்கொண்டதிலிருந்து உலகெங்குமுள்ள யூதர்கள் தங்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்ட, தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடும், ஜெருசலேம் நகரைத் தலைநகரமாகக் கொண்ட புனித பூமிக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். புதிதாக இஸ்ரவேல் நாட்டிற்குள் நுழையும் யூதர்கள் அங்கே தங்களுக்கு எத்தகைய வரவேற்பு அளிக்கப்பட்டாலும் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தில் எத்தனை சரிவு ஏற்பட்டாலும் வாக்களிக்கப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம் என்ற மனநிறைவு தங்களுக்கு இருப்பதாக கருதுகின்றனர்.

அன்று கடவுள் ஆபிரகாமுக்கு வாக்களித்ததுபோல் யூத இனம் கடல் மணல் போல் பலுகிப் பெருகத்தான் செய்தது. இன்று யூதர்கள் இல்லாத கண்டமே உலகில் இல்லை என்று கூறலாம், ஆசியா உட்பட. அதுமட்டுமல்லாமல் அவர்களுடைய ஆதிக்கம் இல்லாத துறையும் இல்லை என்று கூறும் அளவுக்கு அவர்கள் தங்களுடைய புத்திக் கூர்மையாலும், கடின உழைப்பாலும் அதைவிட அதிகமாக, சாதுரியத்தாலும் உலகையே ஒரு சமயம் ஆட்டிப்படைத்துள்ளனர். ஜெர்மானியில் அவர்களுடைய அதீதமான ஆதிக்கத்தால் தன்னுடைய ஆரிய இனம் அழிந்துவிடும் தருவாயில் இருந்தது என்பதை உணர்ந்துதான் ஹிட்லர் அவர்களை உலகிலிருந்தே அழித்துவிடும் நோக்குடன் அவன் படையெடுத்து வெற்றி கண்ட அனைத்து நாடுகளிலிருந்தும் அவர்களை தனியே பிரித்து முகாம்களில் அடைத்து கொடுமைப் படுத்தி கொலை செய்தான். இரண்டாம் உலகப் போர் வெற்றிக்குப் பிறகு ஜெர்மானியை ஆக்கிரமித்திருந்த அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ரஷ்ய நாடுகள் அப்போது ஜெர்மானியின் பிடியிலிருந்த தலைசிறந்த யூத விஞ்ஞானிகளை தங்களுடைய நாடுகளுக்கு சிறைபிடித்துச் சென்றதன் விளைவுதான் அந்த நாடுகள் அறிவியலில் வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டன என்பதும் உண்மை.

யூத மக்களுக்கும் அவர்களைச் சுற்றிலும் அமைந்திருந்த எகிப்து, ஜோர்தான், சிரியா, ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வசித்து வந்த இஸ்லாமியர்களுக்கும் 19ம் நூற்றாண்டிலிருந்தே சுமூகமான உறவு இருந்ததில்லை. குறிப்பாக யூதர்களுடன் ஒரு சிறிய வால் போன்ற நாட்டைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் கணக்கிட முடியாத சண்டைகள், சச்சரவுகள் என இன்றும் தொடர்ந்துக்கொண்டுதான் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரவேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேம் இஸ்லாமியர்களின் பல புனித ஸ்தலங்களைக் கொண்டுள்ளது. ஆகவே ஜெருசலேமை ஒரு பொது நகரமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பாலஸ்தீனர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களைச் சுற்றிலும் அமைந்துள்ள இஸ்லாமிய நாடுகளுக்கும் உண்டு. ஆகவே இஸ்ரவேல் தன்னை தனி நாடாக பிரகடனப்படுத்தி ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் ஆகியும் இன்றும் அது பல இஸ்லாமிய நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

யூத மன்னர்களுள் மிகவும் பிரசித்திபெற்ற சாலமோன் அரசரிடம் கடவுள் உனக்கு செல்வம் வேண்டுமா விவேகம் வேண்டுமா (ஞானம்) என கேட்டதாகவும் சாலமோன் எனக்கு செல்வம் வேண்டாம் விவேகமே போதும் என்றாராம். ஆகவேதான் அவரை சாலமோன் அரசர் என்பதைவிட சாலமோன் ஞானி என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர். ஆபிரகாமின் அதிமிகு விவேகம் அவருக்கு மிகப் பெரிய சாம்ராஜ்யத்தையும் அளப்பரிய முடியாத செல்வத்தையும் ஈட்டு தந்தது என்றும் பைபிள் கூறுகிறது.

சாலமோன் வேண்டாம் என்று மறுதலித்த செல்வம் ஆபிரகாமின் மற்றுமொரு மகன் இஸ்மயேலின் சந்ததியினருக்கு அருளப்பட்டது என்றும் ஒரு கூற்று உண்டு. அதுதான் எண்ணெய் கிணறுகளாக அரபு நாடெங்கும் முளைத்தன. விவேகம் இருக்கும் இடத்தில் செல்வம் இருக்கும் ஆனால் செல்வம் இருக்கும் இடத்தில் விவேகம் இருக்க வாய்ப்பில்லை என்னும் கூற்றை இஸ்ரவேலுடனான பல மோதல்களில் அரபு நாடுகள் நிரூபித்தன. அரபு நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து நின்று இஸ்ரவேல் நாட்டை எதிர்கொண்டதில்லை. அவர்களிடைய ஒற்றுமையில்லாததும் அவற்றுள் பெரிய நாடாக கருதப்படும் சவுதி அரேபியாவுக்கு தங்களுடைய எண்ணெய் உற்பத்தி பெருக்க அமெரிக்க தொழில்நுட்பம் இல்லாமல் முடியாது என்ற எண்ணமும் இதற்குக் காரணம்.

இஸ்ரவேலை நேரடியாக எதிர்கொண்டு வெற்றிகொள்ள முடியாத பல இஸ்லாமிய நாடுகள் பலவும் மறைமுகமாக இஸ்லாமிய போராளிகளுக்கு உதவுவதுதான் இன்றைய இஸ்லாமிய ஜிகாதிசம் பெருகி வர முக்கிய காரணம். இஸ்ரவேலின் மிக முக்கிய ஆதரவாளர்களான அமெரிக்காவை அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தால் அது இஸ்ரவேலை ஆதரிப்பதை நிறுத்திக்கொள்ளும் என்பது ஜிகாதியர்களின் தவறான எண்ணமும் இத்தகைய மறைமுக தாக்குதல்களுக்கு முக்கிய காரணம்.

இது அடிப்படையில் ஒரு பங்காளி சண்டை. ஆகவே இது இன்றோ அல்லது நாளையோ ஓய்ந்துவிடப் போவதில்லை என்பது உறுதி.

இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு இந்தியா மீதுள்ள கோபம் அமெரிக்காவுடன் இந்தியா கொண்டுள்ள நட்பு ஒரு காரணம் என்றாலும் இந்துத்வா தீவிரவாதிகளின் மூடச் செயல்களும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. இதற்கு காஷ்மீர்தான் முக்கிய பிரச்சினை என்று பாகிஸ்தான் தொடர்ந்து வாதிட்டாலும் அதுவல்ல முக்கிய காரணம்.

இதைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். இது போதும் என்று கருதுவதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

**********



12 பிப்ரவரி 2013

எதிர்பாராததோர் மரணம்.... மீண்டும்...


டோண்டு அவர்களுடைய அகால மரணச் செய்தியை இன்று காலை படித்தபோது உண்மையிலேயே அதிர்ந்துபோனேன். எதிர்பாராமல் வருவதுதான் மரணம் என்றாலும் அவருடைய ஆஜானுபாகவான, திடகாத்திரமான உருவம் உஷா அவர்கள் எழுதியிருந்ததுபோல இன்னும் சிலகாலம் வாழ்ந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது.

அவரை எனக்கு 2004லிருந்துதான் பழக்கம். நான் பதிவுலகில் நுழைந்தபோது ஏற்கனவே பிரபலமாகியிருந்த பதிவர் அவர். எனக்கு நினைவில் இருக்கும்வரை என்னுடைய முதல் பதிவில் முதலில் வரவேற்று வாழ்த்தியவர் அவர்தான். நான் அதன் பிறகு எழுதிய ஏறத்தாழ அனைத்துப் பதிவுகளிலும் அவருடைய பின்னூட்டம் இருக்கும். நான் சாதாரணமாக வேறெந்த பதிவிலும் சென்று கருத்துக்களை முன்வைப்பதில்லை. ஆகவே என்னுடைய பதிவுகளுக்கு பின்னூட்டம் மிகவும் அரிதாகவே வருவதுண்டு... இன்றும் அப்படித்தான்.

ஆனால் என்னுடைய பதிவுகளை தவறாமல் படித்து தன்னுடைய கருத்துக்களை - அவை பல சமயங்களில் எதிர்மறையானதாக இருந்தாலும் - பதிவு செய்வதுடன் என்னுடைய ப்ரொஃபைலில் இருந்த என்னுடைய அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசவும் செய்வார். அடிக்கடி மின்னஞ்சலிலும், கூகுள் டாக்கிலும் தொடர்பு கொண்டு உரையாடியதுண்டு. ஒவ்வொரு கிறீஸ்துமஸ் அன்றும் தவறாமல் அவருடைய தொலைபேசி வாழ்த்து வரும். என்னுடைய மனைவிக்கும் அவரை நன்றாக தெரிந்திருந்தது.

நான் ஒரு வங்கி அதிகாரி என்று தெரிந்ததும் வங்கி, மற்றும் அதன் அலுவல்களைக் குறித்து பல சந்தேகங்களை அவ்வப்போது கேட்பார். நான் பதிவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டம் போடலாமே என்றபோது உடனே சம்மதித்துடன் நில்லாமல் ஜெயராமன் போன்ற நண்பர்களையும் சம்மதிக்க வைத்து அழைத்து வந்தார். அப்போதெல்லாம் பதிவர்கள் கூட்டம் என்பது மிகவும் அரிதான ஒன்று.

நான், அவர், ஜெயராமன் மற்றும் இன்னும் சில பதிவுலக நண்பர்கள் இணைந்து பல மாதக் கூட்டங்களை சென்னையிலுள்ள டிரைவின் உட்லேன்ட்ஸ் உணவகத்தில் நடத்தியது இப்போதும் நினைவில் உள்ளது. பதிவுலகைப் பற்றி மட்டுமல்லாமல் பல விஷயங்களிலும் அவருக்கு ஈடுபாடு இருந்ததை அப்போது என்னால் உணர முடிந்தது.

ஆனால் அதற்குப் பிறகு போலி டோண்டு விவகாரம் விபரீதப் போக்கை அடைந்தபோது ராகவனின் செயல்பாடுகளிலும் எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பதிவுலகமே இரண்டுபட்டு தேவையில்லாமல் என்னையும் அவருடன் இணைத்து சிலர் இழிவுபடுத்தியபோது பல அலுவல்களுக்கிடையில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் எழுதிக்கொண்டிருந்த எனக்கு எதற்கு இந்த தேவயற்ற மனக்கசப்பு என்று அவருடைய பதிவுகளை வாசிப்பதையே நிறுத்தி வைத்திருந்தேன்.

ஆனாலும் பதிவுலகைக் கடந்து எங்களுடைய நட்பு தொடரத்தான் செய்தது. நட்புக்கு கருத்து ஒற்றுமை தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. அவருடைய மனதைரியத்தையும் தான் மனதில் எண்ணியதை, அது சரியோ தவறோ, அப்படியே எழுதும் ஆற்றலும் எனக்கு அவரிடம் பிடித்த குணங்களில் ஒன்று. ஆனால் உஷா அவர்கள் குறிப்பிட்டுள்ளது போன்று அந்த போலி டோண்டு விவகாரத்திலிருந்து அவர் மீளவே இல்லை என்பதை நானும் உணர்ந்துக்கொண்டேன்.  அந்த விஷயம் அவரை எந்த அளவுக்கு காயப்படுத்தியிருந்தது என்பதையும் புரிந்துக்கொள்ள முடிந்தது. அதை அத்தனையளவுக்கு பெரிதாக்கியதற்கு அவருடைய எழுத்தும் ஒரு காரணம் என்று அவரிடமே பலமுறை கூறியிருக்கிறேன். ஆனாலும் அவரைப் பற்றி தவறாக ஒருநாளும் எண்ணியதில்லை. அது அவருடைய சுபாவம் என்று ஏற்றுக்கொண்டேன்.

என்னைப் பொறுத்தவரை பதிவுகளில் எழுதும் கருத்துக்களை வைத்து ஒருவருடைய குணத்தை தீர்மானிப்பதோ அல்லது அதற்காக அவரை இழித்துரைப்பதோ மனமுதிர்வற்றவர்கள் செய்யும் செயல். அதிலும் ஒருசிலர் அவருடைய மறைவுக்குப் பிறகும் என்றோ நடந்தவற்றைப் பற்றி அவதூறாக பேசுவதென்பது அநாகரீகமான செயல் என்றே படுகிறது.

இந்த பதிவு அவருடனான என்னுடைய தனிப்பட்ட நட்பை மீண்டும் ஒருமுறை அசைபோடவும் அவருடைய ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனையை பதிவு செய்யவும் எழுதப்பட்டது. ஆகவே தயவு செய்து இதில் வந்து அவரைப் பற்றியோ அல்லது அவருடைய எழுத்தைப் பற்றியோ விமர்சிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

**********



யூதரும் இஸ்லாமியரும் பங்காளிகளே.. 1

இஸ்ரவேல் (Israel)நாட்டைச் சார்ந்த யூதர்களும் இஸ்லாமியர்களும் ஒருவகையில் பங்காளிகள்தான். ஏன், அந்த கூட்டத்தில் கிறிஸ்துவர்களுக்கும் பங்குண்டு.

கிறிஸ்துவர்கள் புனிதநூல் என போற்றும் பைபிள் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கிறீஸ்துவின் பிறப்புக்கு முந்தைய காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அடக்கியது  பழைய வேதாகமம். கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டது புதிய வேதாகமம்.

பழைய வேதாகம புத்தகத்தின் துவக்கத்தில் கூறப்பட்டுள்ள சில வரிகளைப் படித்தால் அதில் அடங்கியுள்ளவற்றை புரிந்துக்கொள்ள முடியும்:

"அனைத்து மானிடரையும் மீட்குமாறு கடவுள் ஆபிரகாமை தேர்ந்தெடுத்து அவர்தம் வழிபமரபினர் வரலாற்றில் தாமே செயல்பட்டு, மீட்புப் பணியை தொடர்ந்தாற்றுகிறார் என்பதை இந்நூல் (தொடக்க நூல்) விரித்துரைக்கின்றது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தாம் அளித்த வாக்குறுதியை இறைவன் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இந்நூல் முற்றுப்பெறுகின்றது.:

அதாவது ஆதாம், ஏவாள் படைக்கப்படுதல், ஆபிரகாம் துவங்கி  அவர்களுடைய சந்ததிகள் எனப்படும் 12 யூதக் குல கோத்திரங்களில் உதித்த  யூதர்களின் வாழ்க்கைமுறை அவர்களுக்கு கடவுளின் வார்த்தையை எடுத்துரைக்கத் தோன்றிய பல்வேறு இறைவாக்கினர்களின் முயற்சிகள் என சுமார் 20க்கும் மேற்பட்ட பாகங்களாக பழைய வேதாகமம் விரிகிறது.

யூதர்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்களும் இந்நூல்களில் அடங்கியுள்ள பல நிகழ்வுகளையும் உண்மையென ஏற்றுக்கொள்கின்றனர்.

உலகிலுள்ள மானுடகுலத்தை மீட்குமாறு இறைவன் தெரிவு செய்யப்பட்ட ஆபிரகாம் இம்மூன்று மதத்தைச் சார்ந்த  அனைவருமே தங்களுடைய தந்தை எனவும் ஏற்றுக்கொள்கின்றனர். அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

இஸ்லாமியருக்கும் யூதர்களுக்கும் உள்ள ஒற்றுமை: கிறீஸ்துவை இறைமகன் என்றோ உலகை மீட்க வந்த இரட்சகர் என்றோ ஏற்றுக்கொள்ளாதது.

இஸ்லாமியராலும் யூதர்களாலும் தங்களுடைய தந்தையாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஆபிரகாம்.

ஆபிரகாம் மற்றும் அவருடைய மனைவி சாராள் இருவருக்கும் அவர்களுடைய முதிர்ந்த வயது வரை குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. சாராவிடம் எகிப்து நாட்டைச் சார்ந்த ஆகார் என்ற பணிப்பெண் ஒருத்தி இருந்தாள். சாராய் ஒரு நாள் ஆபிரகாமிடம் ஆண்டவர் என்னை பிள்ளைப்பேறு இல்லாதவளாக்கிவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவுகொள்ளும். ஒருவேளை எனக்காக ஒரு பிள்ளை பெற்றுத் தரக்கூடும் என்கிறாள். அவளை ஆபிரகாமுக்கு மனைவியாகவும் கொடுக்கிறாள். ஆபிரகாமுடன் ஏற்பட்ட உறவின் விளைவாக கருவுற்ற ஆகார் தன் எஜமானியையே ஏளனத்துடன்
நோக்குவதைக் கண்ட சாரா ஆபிரகாமிடம் 'நீர் தழுவும்படி நானே கொடுத்த என்னுடைய பணிப்பெண் என்னை ஏளனமாக நோக்குகிறாள். ஆண்டவரே எனக்கும் உமக்கு நீதி வழங்கட்டும்.' என்கிறாள். ஆனால் ஆபிரகாமோ ஆகார் உன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டவள்தானே நீயே உனக்கு நல்லதாகப்படுவதை அவளுக்குச் செய் என்கிறார். சாராளோ ஆகாரை
கொடுமைப்படுத்த ஆகார் அவளிடமிருந்து தப்பி ஓட வழியில் ஆண்டவரின் தூதர் அவளுக்குத் தோன்றி 'நீ திரும்பிச் சென்று உன் தலைவியின் பேச்சுக்கு கட்டுப்படு நட. உனக்கும் உன் வழிமரபினரையும் யாரும் எண்ண முடியாதபடி
பலுகிப் பெருகச் செய்வேன். நீ கருவுற்று பெற்றெடுக்கும் மகனுக்கு இஸ்மயேல் எனப் பெயரிடு. ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லாரையும் அவன் எதிர்ப்பான். எல்லோரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கும் அவன் எதிரியாக வாழ்வான் என்கிறார்.

அதன் பிறகு ஆபிரகாம் ஒருமுறை ஒரு காட்சி வழியாக இறைவனிடம் உறையாடியபோது ஆண்டவரே எனக்கு குழந்தையே இல்லையே, எனக்குப் பிறகு என் வீட்டு அடிமை மகன் அனைத்திற்கும் உரிமையாளனாகப் போகிறானே என்று புலம்புகிறார். அதற்கு மறுமொழியாக உனக்குப் பிறப்பவனே (அதாவது அவருக்கும் அவருடைய மனைவி சாராவுக்கும்) உனக்குப் பின் உரிமையாளன் ஆவான் என்கிறார் ஆண்டவர். ஆனால் அப்போதே ஆபிரகாமும் அவருடைய மனைவியும் மிகவும் வயது முதிர்ந்தவர்களாக இருந்தனர். ஆயினும் ஆண்டவர் வாக்களித்தபடியே அவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டனர்.

பிறகு அடிமைப் பணிப்பெண் ஆகார் தனக்கு பிறகு பிறந்த குழந்தையுடன் சிரித்து விளையாடுவதைக் காணப் பொறுக்காமல் சாரா ஆபிரகாமிடம் 'இந்த பணிப்பெண்ணையும் அவளுடைய மகனையும் விரட்டிவிடும். ஏனெனில்
பணிப்பெண்ணின் மகன் என் மகன் ஈசாக்குடன் பங்காளியாய் இருக்கக் கூடாது.' என்கிறாள். அவளுடைய இந்த பேச்சு ஆபிரகாமுக்கு வேதனையளித்தது. அப்போது ஆண்டவர் அவரிடம் பையனையும் பணிப்பெண்ணையும் குறித்து வேதனைப்படாதே. சாரா கேட்டுக்கொண்டபடியே அவளை அனுப்பிவிடு. ஆயினும் அவனும் உன்னுடைய வித்தாய் இருப்பதால் அவனிடமிருந்தும் ஒரு இனத்தைத் தோன்றச் செய்வேன் என்கிறார்.

ஆபிரகாம் அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து, ஆகாரமும் ஒரு துருத்தித் தண்ணீரும் எடுத்து ஆகாரிடம் கொடுத்து, அவள் தோளின் மேல் வைத்து, பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து அவளை அனுப்பி விடுகிறார். அவள் புறப்பட்டுப்போய், பெயர்ஷெபாவின் வனாந்திரத்தில் அலைந்து திரிகிறாள். துருத்தியிலிருந்து தண்ணீர் செலவழியவே, அவள் பிள்ளையை
ஒரு செடியின் கீழ் விட்டு, பிள்ளை சாகிறதை நான் பார்ப்பேனோவென்று சொல்லி, அம்பு பாயும் தூரத்தில் போய், எதிரே உட்கார்ந்து சப்தமிட்டு அழுகிறாள்.

ஆண்டவர் பிள்ளையின் சத்தத்தைக் கேட்கிறார். ஆண்டவரின் தூதனானவன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு, ஆகாரே உனக்கு நேரிட்டதென்ன? பயப்படாதே. பிள்ளை இருக்கும் இடத்தில் கடவுள் அவன் சப்தத்தைக் கேட்டார். நீ எழுந்து பிள்ளையை எடுத்து, அவனை உன் கையால் பிடித்துக் கொண்டு போ! அவனைப் பெரிய ஜனமாக்குவேன் என்றார். கடவுள் அவளுடைய கண்களைத் திறக்க தண்ணீருள்ள ஒரு துரவை அவள் கண்டு, போய், துருத்தியில் தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுக்கிறாள். ஆண்டவர் இஸ்மயேலுடன் துணையாய் நின்று அவனை காக்கிறார். அவன்
வளர வளர வில் வித்தையிலும் வல்லவனானாகிறான்.

ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் பிறந்த ஈசாக்கின் வழிமரபினர் இஸ்ரவேலிலும் பணிப்பெண் ஆகாருக்கு பிறந்த இஸ்மவேல் வழிமரபினர் பாலைவனத்திலும் குடியேறுகின்றனர்.

ஈசாக்கின் வழிவந்தவர்களே இஸ்ரயேல் நாட்டினராகிய யூதரும் எகிப்தில் குடியேறிய இஸ்மயேலின் வழிவந்தவர்களே இஸ்லாமியர்களும்...

ஆக ஒரே தகப்பனுக்கு மனவியராக இருந்த இருவேறு பெண்களுக்கு பிறந்த பங்காளிகள்தான் இஸ்ராயேல் நாட்டைச் சார்ந்த யூதரும் எகிப்து மற்றும் அரபுநாடுகளைச் சார்ந்த இஸ்லாமியிரும். இங்கிருந்துதான் இஸ்லாம் உலகெங்கும் பரவியது.

இவ்விரு இனத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையில் ஆதிகாலம் முதலே சமாதானம் இருந்ததில்லை.

அதைப்பற்றி மேலும் சுருக்கமாகக் கூறுகிறேன்...

தொடரும்...


11 பிப்ரவரி 2013

விஸ்வரூபம் - மெய்யாலுமா?


நானும் கமலின் விஸ்வரூபம் படத்தை பார்த்துவிட்டேன் என்பதைத் தவிர பிரமாதமாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.

இதற்கு முன்பு அவர் இயக்கிய படங்களை விட அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் எப்போதும் போலவே எதையுமே ஆழமாக செய்யாமல் மீண்டும் கோட்டை விட்டுவிட்டார்.

ஆஃப்கானிஸ்தானில் நிகழ்வதாக காண்பிக்கப்படும் நிகழ்வுகளும் அநேகமாய் Frederick Forsyth (Odessa File, Day of the Jackal நாவல்களை எழுதியவர்) எழுதிய The Afghan நாவலிலிருந்து காப்பியடிக்கப்பட்டது போன்று தெரிகிறது. அதில் இங்கிலாந்து ராணுவ வீரர் ஒருவர் (மைக் மார்ட்டின்) ஆஃப்கானிஸ்தான் நாட்டை ஆக்கிரமித்திருந்த ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக போராடும் ஆஃபாகானிஸ்தான் போராளிகளுக்கு உதவும் சாக்கில் ஆஃப்கானிஸ்தானுக்கு நுழைந்து அல்கொய்தா போராளிகளூக்கு பயிற்சியளிக்கும் அளவுக்கு முன்னேறுவார். அவருடைய தாயார் ஒரு பெங்காலி என்பதால் (அப்பா ஆங்கிலேயர்) அவருடைய உருவமும் நிறமும் ஆஃப்கானியராக வேடமிட ஒத்துப்போனதாம் (இதுவே காதில் பூ சுற்றிய கதைதான்!). இருந்தாலும் நாவல் சிறப்பான நடையுடன் விருவிருப்பாக இருக்கும். அதிலும் அமெரிக்கர்கள் சிறைபிடிக்கப்படுவது, கழுத்து அறுபட்டு ஒருவர் மடிவது, மற்றவர்களை மீட்க அமெரிக்கப் படை ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்துவது அதில் மைக் மார்ட்டினின் ஆஃப்கானிய நண்பருடைய (இஸ்மத் கான்) குடும்பமே அழிந்துபோவது அதன் விளைவாக அவர் அமெரிக்கர்களுக்கு எதிராக சபதமேற்பது என விஸ்வரூப படக்காட்சிகள் பலவும் நாவலில் வரும் நிகழ்வுகளுடன் ஒத்துப்பொகின்றன. நாவலில் இஸ்மத் கானாக வருபவர்தாம் விஸ்வரூபத்தின் முல்லா ஓமர்.

ஆக இதுவும் கமலின் சொந்த கற்பனை அல்ல.

The Afghan நாவலில் ஆங்கிலேய ராணுவ வீரர் ஆஃப்கானிஸ்தானில் எப்படி நுழைகிறார் என்பதையும் அதுபோலவே அங்கிருந்து அவர் எப்படி படாதபாடுபடு தப்பிச் செல்கிறார் என்பதையும் விலாவாரியாக, விருவிருப்பாக கூறியிருப்பார் ஆசிரியர்.  விஸ்வரூபத்தில் இந்த இரண்டுமே அவிழ்க்கப்படாத முடிச்சுகள்.

படத்தின் க்ளைமாக்ஸும் ஒரு புரியாத புதிர் மட்டுமல்ல சற்று சிறுபிள்ளைத்தனமானதும் கூட. எழுந்துவரும் போது ஒரு படத்தின் இடைவேளைபோதே எழுந்து வந்துவிட்டது போன்றதொரு பிரமை!

ஆனால் சராசரியான ஒரு திரைப்படம் எதிர்பாராத அளவுக்கு வெற்றிபெற இந்திய, குறிப்பாக தமிழக, இஸ்லாமிய சமூகத்தினருடைய எதிர்ப்பும் படத்தையே பார்க்காமல் அதற்கு தடை விதித்த தமிழக அரசுமே காரணம். ஒருவேளை எல்லாமே திட்டமிட்ட ஏற்பாடோ! இதில் எந்த காட்சியில் அல்லது வசனத்தில் இந்திய, குறிப்பாக தமிழக இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளனர் என்பதுதான் புரியாத புதிர்.

உலகிலுள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையே தீவிரவாதிகளைப் போல் சித்தரித்துள்ளார் என்றும் கூற முடியாது. ஏனெனில் protoganist எனப்படும் பாத்திரமும் ஒரு இஸ்லாமியர்தான். ஆக, தீவிரவாதத்தின் இருபக்கமும் இஸ்லாமிய சமூகத்தினர் உள்ளனர் என்பதுதான் உண்மை என்கிறார் கமல் சூசகமாக.

படத்தைவிட சுவாரஸ்யமாக இருந்தது திரையரங்கில் எனக்கு பின்னால் அமர்ந்திருந்த இரு நண்பர்களின் பேச்சு.

ஒருவர் தன் நண்பரிடம் கேட்கிறார்: 'ஏன்டா இந்த முஸ்லீம்களுக்கு அமெரிக்கா மேல இவ்வளவு ஆத்திரம்?'

நண்பரின் பதில்: 'அவன்களுக்கு இஸ்ரேயல்காரன்க மேலதான்டா ஆத்திரமெல்லாம். அமெரிக்கா இஸ்ரேலுக்கு சப்போர்ட் பண்றதால அவனுங்க மேலயும் ஆத்திரம். எல்லாத்துக்கும் இஸ்ரேல்தான் காரணம்!'

'மெய்யாலுமா?'

'ஆமாடா. எல்லாம் பங்காளி சண்டைதான்.'

'என்னது பங்காளி சண்டையா, அப்படீன்னா?'

நண்பர் பதிலளிப்பதற்குள் அக்கம்பக்கத்திலிருந்து 'உஷ்.....'

'ஒனக்கு அப்பால விலாவாரியா சொல்றன்... இப்ப படத்த பார்'

உண்மைதான்.

இஸ்ரவேல் (Israel) யூதர்களும் அரபு நாடுகள் (அரேபியர்கள்) மற்றும் உலகெங்கும் வசிக்கும் இஸ்லாமியர்களும் ஒருவகையில் பங்காளிகள்தான்.

எப்படி?

எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்...

தொடரும்..