03 டிசம்பர் 2013

GNP என்றால் என்ன - GDP க்கும் அதற்கும் என்ன வித்தியாசம்?

கடந்த வாரம் GDP என்றால் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு என்று பார்த்தோம். உண்மையில் அது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு என்று கூற வேண்டும். அதாவது, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு முழுவதுமாக இதில் சேர்க்கப்படுவதில்லை. ஒரு நாட்டின் ஏற்றுமதி அதன் இறக்குமதியை விட அதிகமாக இருக்கும் சூழலில் மட்டுமே அதிகமுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு மற்ற உள்நாட்டு தயாரிப்புகளின் மதிப்புடன் சேர்க்கப்படுகிறது. 

ஆனால்  GNP என்பது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் அவை நம்முடைய நாட்டை சார்ந்தவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தின்  மதிப்பையும் (Income) உள்ளடக்கியதாகும். 

இன்னும் எளிமையாக கூறவேண்டுமானால் நம்முடைய நாட்டின் GDP நம்முடைய நாட்டில் வாழும்/இயங்கும் அயல் நாட்டைச் சார்ந்த தனிநபர்  அல்லது நிறுவனங்கள் இங்கு தயாரிக்கும் அல்லது அளிக்கும் சேவைகளின் மதிப்பை உள்ளடக்கியது என்றாலும் அவற்றால் அவர்களுக்கு (அயல் நாட்டினருக்கு) கிடைக்கும் வருமானம் அதாவது, முதலீடு மற்றும் பங்குகளிலிருந்து கிடைக்கும் டிவிடன்ட், கடன் பத்திர முதலீட்டிலிருந்து கிடைக்கும் வட்டி, அயல் நாட்டினருக்கு சொந்தமான நிறுவனங்கள் ஈட்டும் லாபம் ஆகியவற்றின் மதிப்பு ஒட்டுமொத்த GDP யிலிருந்து குறைக்கப்படுகிறது. 

ஆகவே நம்முடைய GDP வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும் நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த வருமானம் அதே அளவு வளரும் என்று சொல்ல முடியாது. 

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் இங்கு  செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள்  ஒவ்வொரு வருடமும் ஈட்டும் லாபம் மற்றும் FIIs எனப்படும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் நம்முடைய பங்கு சந்தைகளில் செய்யும் முதலீடுகளிலிருந்து ஈட்டும் லாபம் ஆகியவை நம்முடைய GDP அதாவது நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் சேவைகளின் மதிப்பிலிருந்து குறைக்கப்படும். அதே சமயம் நம்முடைய நாட்டினர் வெளிநாடுகளில் ஈட்டும் வருமானம், லாபம், வட்டித் தொகை ஆகியவை நம்முடைய GDPயுடன் சேர்க்கப்பட்டும். இந்த கூட்டுத்தொகைதான் GNP எனப்படுகிறது.

தலை சுற்றுகிறதா?

இதை ஒரு சூத்திரத்தின் மூலம் விளக்குகிறேன்.

கடந்தவாரம் GDPஐ கணக்கிட நாம் பார்த்த சூத்திரம் இது: 

GDP=C+I+G+(X-M) 

இதில் 

C= Consumption அதாவது தனிநபர் மற்றும் நிறுவன செலவினங்களையும் 

I= Investments அதாவது இவ்விருவகுப்பினரின் முதலீடுகளையும் 

G= Government Expenditure & Investments அதாவது அரசு செய்யும் செலவினங்கள் மற்றும் முதலீடுகளையும் 

X= Exports அதாவது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும்

M= Imports அதாவது இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் குறிக்கிறது என்று பார்த்தோம்

இந்த முறையில் கணக்கிடப்படும் GDPயிலிருந்து 

1. வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களுடைய நாட்டிற்கு அனுப்புகிற வருமானத்தை குறைக்க வேண்டும்

2. நம்முடைய நாட்டினர் வெளிநாடுகளிலிருந்து நம்முடைய நாட்டுக்கு அனுப்பியுள்ள வருமானத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இதன் கூட்டுத் தொகைதான் GNP (Gross National Product).

இன்னும் தெளிவாக்க வேண்டுமானால் GDPயை கணக்கிட நம்முடைய நாட்டின் பூளோக எல்லைக்குள் (Geopgraphic Area) தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களின் மதிப்பையும் பார்க்கிறார்கள். அது எந்த நாட்டினரால் தயாரிக்கப்பட்டது என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் அவற்றால் கிடைக்கும் வருமானம் நமக்கு கிடைப்பதில்லை. 

ஆகவேதான் நம்முடைய GDPயின் தொடர் வளர்ச்சி மட்டுமே நம்முடைய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒரு நாட்டின் GNP வளர்ச்சியடையும் போது அது அந்த நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தையும் அந்த நாட்டினரின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும் என்று நம்பப்படுகிறது. 

இதை சூத்திரத்தில் கூற வேண்டுமென்றால் GNP = GDP + Net Income Earned from Abroad என்று கூறலாம்.

இதில் NET என்ற வார்த்தை நம்முடைய நாட்டினர் அயல் நாட்டில் ஈட்டும் வருமானம் மற்றும் நம்முடைய நாட்டில் அயல்நாட்டினர் ஈட்டும் வருமானம் ஆகியவற்றிற்கு இடையிலுள்ள வித்தியாசத்தை (Difference between Income earned by our citizens abroad AND Income earned by foreign nationals in our Country) குறிக்கிறது. 

சுருக்கமாக கூறவேண்டுமென்றால் ஒரு நாட்டின் GNP என்பது அந்த நாட்டினர் ஈட்டும் மொத்த வருமானத்தின் மதிப்பு என்றும் கூறலாம். 

ஆயினும் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை GDP அடிப்படையிலேயே கணக்கிடுகின்றனர் என்பதும் உண்மை. ஆகவே 1991 வரை தங்களுடைய நாட்டுப் பொருளாதார நிலையை GNP மூலம் மட்டுமே கணக்கிட்டு வந்த அமெரிக்கா அதன் பிறகு பிற உலக நாடுகள் பின்பற்றும் முறையான GDP முறையை பின்பற்ற துவங்கியது.

(United States used GNP as its primary measure of total economic activity before 1991, when it began to use GDP. In making the switch, the Bureau of Economic Analysis (BEA) noted that GDP provided an easier comparison of other measures of economic activity in the United States and that "virtually all other countries have already adopted GDP as their primary measure of production.") 

Source:http://en.wikipedia.org/wiki/Gross_national_product

GDP முறையை அடிப்படையாக வைத்தே உலகிலுள்ள நாடுகளை உலக வங்கி தரவரிசைப் படுத்துகிறது என்றாலும் GNP அடிப்படையிலும் நாடுகளின் தரவரிசை பட்டியலும் விக்கிப்பீடியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா 2010 மற்றும் 2011 வருடங்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. (GDP அடிப்படையிலும் இந்தியா இதே இடத்தில்தான் உள்ளது). இதிலிருந்து என்ன புரிகிறது? நம்முடைய நாட்டைப் பொருத்தவரை GDP மற்றும் GNP ஆகிய எந்த முறையில் கணக்கிட்டாலும் பெரிய வேறுபாடுகள் இல்லை. 

ஆனால் உலகின் மற்ற வேறெந்த நாடுகளிலும் இல்லாத ஒரு பிரத்தியேகம் நம்முடைய நாட்டில் உள்ளது. அதுதான் parallel economy எனப்படும் கறுப்புச் சந்தை. நம்முடைய நாட்டின் உற்பத்தியாகட்டும் அல்லது வருமானமாகட்டும் அவற்றில் சரிபாதி, - சிலர் சம அளவு என்றும் கூட கூறுகின்றனர் - கணக்கில் வரவு வைக்கப்படாமலேயே இருந்து வருகிறது. ஆகவே நம்முடைய நாட்டில் வெளியிடப்படும் GDPயின் மதிப்பு உண்மையில் வெளியிடப்படும் மதிப்பை போல் ஒன்றரை மடங்கு இருக்க வேண்டும் என்றாலும் மறுப்பதற்கில்லை. இதை நம்முடைய நாட்டின் சாபக்கேடு என்றும் சொல்லலாம் அல்லது மறைந்துக்கிடக்கும் வலிமை என்றும் (Intrinsic Value)கூறலாம். அது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொருத்தது.  

ஒரு நாட்டின் GNPயும் GDPஐ போலவே நடப்பு விலைவாசியிலும் (current market prices) அடிப்படை ஆண்டிலிருந்த (Base Year) விலைவாசியிலும் கணக்கிடுகிறார்கள். இதன் மூலம் கணக்கிடப்படும் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு நாடு எந்த அளவுக்கு உற்பத்தியிலும் வருமானத்திலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை கணக்கிட முடிகிறது.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த GNPஐ அந்த நாட்டிலுள்ள மக்கள்தொகையால் வகுத்து (Divide) கிடைக்கும் தொகையை Per Capita GNP என்கின்றனர். 

ஒரு நாட்டின் Per Capita GNP மதிப்பை அமெரிக்க டாலருக்கு மாற்றுவதன் மூலம் உலகிலுள்ள அனைத்து நாடுகளின் தனிநபர் வருமானத்தை ஒரே நாணய மதிப்பில் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது என்கிறது உலக வங்கி. ஆனால் இந்த தொகை நாட்டிலுள்ள அனைத்த நபர்களுக்கும் ஒரே அளவில் கிடைக்கிறது (equal distribution) என்பதை காட்டுவதில்லை என்பதும் உண்மை. 

ஒரு நாட்டினரின் வாழ்க்கைத் தரத்தை இன்னொரு நாட்டினரின் வாழ்க்கைத் தரத்துடன் Per Capita GDP மற்றும் Per Capita GNP அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்ப்பதைவிட அவ்விரு நாட்டினரின் வாங்கும் திறன் அடிப்படையில் (Purchasing Power) ஒப்பிட்டு பார்க்கும் முறையை Purasing Power Parity Method என்கின்றனர். 

அது என்ன என்பதை அடுத்த பதிவில் காணலாம். 







10 கருத்துகள்:

  1. கடினமான பாடத்தை எளிதாக விளக்கியமைக்கு நன்றி! வங்கியில் சேருமுன் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்திருக்கிறீர்களோ? வாழ்த்துகளுடன் தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. பல வருடங்களுக்குப் பிறகு எகனாமிக்ஸ் கிளாஸ்
    கேட்ட மாதிரி இருக்கு .விவரமாகச் சொல்லியிருக்கிறீர்கள் .
    Thanks.

    பதிலளிநீக்கு
  3. திருவாளர்கள் வே.நடனசபாபதி, அபயா அருணா மற்றும் மரு. ப்ரூனோ அவர்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான விளக்கங்கள். பல அனுமானிக்கும் விஷயங்களை சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தது இதைப் போலவே மக்களின் ஓய்வு நேரம் மற்றும் உடல், மன நலம் குறித்தும் ஒப்பீடுகள் உள்ளனவா? நன்றி.

    பதிலளிநீக்கு
  5. PM
    Packirisamy N said...
    அருமையான விளக்கங்கள். பல அனுமானிக்கும் விஷயங்களை சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தது.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    இதைப் போலவே மக்களின் ஓய்வு நேரம் மற்றும் உடல், மன நலம் குறித்தும் ஒப்பீடுகள் உள்ளனவா? நன்றி.//

    இருக்க வாய்ப்புண்டு. இணையத்தில் தேடிப் பார்க்கிறேன். ஆனா இவ்விரண்டுமே நம்முடைய வாழ்க்கைத்தரத்தை பிரதிபலிப்பதுதானே? வருமானம் இருந்தால் வசதிகள் இருக்கும். வசதிகள் இருந்தால் உடல்நலமும் மனநலமும் இருக்கத்தானே செய்யும்!!

    பதிலளிநீக்கு
  6. //வருமானம் இருந்தால் வசதிகள் இருக்கும். வசதிகள் இருந்தால் உடல்நலமும் மனநலமும் இருக்கத்தானே செய்யும்!!//

    மிகவும் மகிழ்ச்சியான மக்கள், பூட்டானிலும், வியட்நாமிலும் வாழ்வதாகப் படித்திருக்கிறேன். அந்த நாடுகள் வருமானத்தில் உயர்ந்த நாடுகள் இல்லை.

    பதிலளிநீக்கு
  7. அதுவும். உண்மைதான் . ந்ம் நாட்டிலும். குடிசையில் வாழுகின்ற மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார் களே .

    பதிலளிநீக்கு
  8. இன்று தான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. வங்கிப் பணியை விட பேராசியர் பணியில் சேர்ந்திருந்தால் இன்று கூட மாலை கல்லூரிகளில் உங்களின் சேவை பயன்பட்டுருக்கக்கூடும்.

    பதிலளிநீக்கு
  9. 3 PM
    ஜோதிஜி திருப்பூர் said...
    இன்று தான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. வங்கிப் பணியை விட பேராசியர் பணியில் சேர்ந்திருந்தால் இன்று கூட மாலை கல்லூரிகளில் உங்களின் சேவை பயன்பட்டுருக்கக்கூடும்.//
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜோதிஜி!

    பதிலளிநீக்கு