31 டிசம்பர் 2013

என் புத்தாண்டு உறுதிமொழிகள்!!

இதோ மீண்டும் ஒரு வருடம் என்னைக் கடந்து போகிறது. 

கடந்து சென்ற வருடம் என்னை எவ்வாறெல்லாம் பாதித்தது. என்னென்ன அனுபவங்களை தந்தது என்றெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். 

பணியில் இருந்த காலத்தில், அதாவது கணினி என்கிற ஒரு வினோதம் வங்கியில் அடியெடுத்து வைத்திராத காலத்தில், ஆண்டு இறுதி என்பதே ஒரு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது. ஆண்டு இறுதி கணக்கு முடிக்க டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவையும் கடந்து பணியாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் இருந்ததுண்டு. ஆனாலும் வருட இறுதி ஜெனரல் லெட்ஜர் பாலன்ஸ் ஆகிவிட்டது என்கிற ஒரு மனநிம்மதியுடன் புத்தாண்டின் விடியற்காலையில் சில்லென்று காற்று முகத்தில் பட ஸ்கூட்டரில் பாரிஸ் கார்னரில் இருந்து புரசைவாக்கத்திலிருந்த வீட்டிற்கு வந்த சுகமான அனுபவமும் நினைவுக்கு வருகிறது.

பிறகு புகுந்த கணினி அலுவலக வாழ்க்கையை மட்டுமல்லாமல் குடும்ப வாழ்க்கையையும் கூட இயந்திரமயமாக்கிவிட்டது. இப்போதெல்லாம் நாம் எதையுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்கிற சவுகரியம் - அது சில சமயங்களில் அசவுகரியமாகவும் ஆகிப்போகிறது. மனைவியின் செல் நம்பரைக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை - எத்தனை தொலைவில் உள்ளவர்களுடனும் நொடியில் தொடர்புக்கொள்ளக் கூடிய சவுகரியம் - இதிலும் அசவுகரியம் உள்ளதே! பிறந்த நாள் வாழ்த்தை சொல்ல கடைசி நிமிடம் வரையிலும் காத்திருந்து சொல்ல முயலும்போது busy tone இடையில் வந்து பிறகு இணைப்பு கிடைக்கும்போது இப்பத்தான் உங்களுக்கு சொல்ல தோனிச்சா என்கிற மகள்களின் எரிச்சலையும் சம்பாதித்து கொடுத்திருக்கிறது - இப்படி பல சவுகரியங்கள் இருந்தாலும் இவை முன்பு தனிமனித உறவுகளில் இதுவரை இருந்து வந்த நெருக்கத்தை, அன்னியோன்யத்தை குறைத்துவிட்டது என்றே தோன்றுகிறது.

இணையம் முதன் முதலில் நம் வாழ்வில் நுழைந்தபோது அது ஒரு புரியாத புதிராகத்தான் இருந்தது. ஆனால் அதுவே நாளடைவில் ஒரு அலாதி அனுபவமாக மாறி இப்போது அதுவே நம்முடைய நாட்களின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொள்கிறதை காண முடிகிறது.

இந்த இணைய அடிமைத்தனம் இன்று பல தனிமனித உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. 

கடந்த பத்து நாட்களாக மலேசியாவிலிருந்து வந்திருந்த மகள் மற்றும் பேத்தியுடன் நேரம் செலவிடவேண்டும் என்பதற்காகவே இணையத்திற்கு வருவதை நிறுத்தியிருந்தேன். ஆனால் அது அத்தனை எளிதாக இருக்கவில்லை. எதையோ பறிகொடுத்துவிட்டதுபோன்ற எண்ணம் மனதில் இருந்துக்கொண்டே இருந்தது. அந்த அனுபவம் எனக்கே வியப்பாக இருந்தது. நான் எதற்கும் எந்த சூழலும் அடிமையாகிவிடுபவன் இல்லை என்று எண்ணியிருந்த எனக்கு என்னுடைய இந்த பலவீனம் ஒருவித அச்சத்தைக் கூட அளித்தது. 

ஆனால் முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு பேத்தியும் என்னுடன் நெருங்கி வந்துவிட நேரம் போனதே தெரியாமல் போனது. இணையத்திற்கு வெளியிலும் வாழ்க்கை இருப்பதை எனக்கு உணர்த்தியது  இரண்டு வாரங்களுக்குப் பிறகு நேற்று மாலை அவர்கள் திரும்பிச் சென்றதும் மீண்டும் ஒரு வெறுமை. நானும் என்னுடைய மனைவியும் தனித்துவிடப்பட்டதுபோன்ற ஒரு உணர்வு. மனைவிக்கு சமையல், தையல், தோட்டம் என்ற பல்வேறு அலுவல்கள். ஆனால் எனக்கு? இணையத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்பது போன்றதொரு வெறுமை. இத்தகைய எண்ணம் எனக்கு மட்டும்தானா அல்லது பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட அனைவருக்குமே உள்ளதா என்று தெரியவில்லை. 

இதிலிருந்து விடுபட வேண்டும். ஆகவே கடந்த வருடம் இணையத்தில் இருந்த நேரத்தில் பாதியளவு மட்டுமே இந்த வருடம் செலவிட வேண்டும் என்று எண்ணியுள்ளேன். இது அத்தனை எளிதல்ல என்றாலும் இதை சாத்தியமாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். இது நல்ல முடிவுதானா இதை தொடர்ந்து கடைபிடிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இணைய பிரவேசத்தால் நின்றுபோயிருந்த வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் தொடர வேண்டும். மறந்துபோயிருந்த நண்பர்களை  தேடிப்பிடிக்க வேண்டும், தொடர்பற்று போயிருந்த சொந்தங்களுடனான உறவுகளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 

இவைதான் எதிர்வரும் புத்தாண்டு உறுதிமொழிகள்.

இணைய நண்பர்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 


13 கருத்துகள்:


  1. வலையுலகில் 2012-ல் செலவு செய்ததை விட மிக அதிக நேரம் 2013-ல் செலவு செய்திருக்கிறீர்கள் (127 பதிவுகள் ?)இதைத் தவிரவும் கணினியில் அதிக நேரம் இருந்திருக்கலாம். கணினி இல்லாமல் இருப்பது ஒன்றும் பிரமாதமில்லை.இருந்தாலும் கணினியில் செலவிடும் நேரம் உபயோகமாயிருக்கிறது இல்லையா.? இப்போது வாழ்த்துப் பெற நிமிஷ நேரம் தாமதமானாலும் கோபப்படும் உறவினர் முன்பெல்லாம் வாழ்த்துக்கள் பெற காத்திருந்த நேரத்தைவிட இது மிகவும் குறைவுதான் என்று தெரியாதவர்களா.? மனதிற்குப் பட்டதை சரியென்று தோன்றினால் அமல் படுத்துங்கள். உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நானும் வங்கிப் பணியிலிருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக
    விருப்ப ஒய்வு பெற்றதால் உங்கள் உணர்வு புரிகிறது. ஒரு மாதம் வரை அவ்வளவு தோணவில்லை .
    பிறகு நீங்கள் சொல்வது போன்ற ஒரு வெறுமை எனக்கும் வந்தது.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. Sir,

    Wish you a happy& prosperous New Year.

    Krishnan

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் அய்யா! வங்கியின் அந்த ஆண்டின் PROFIT / LOSS ஐப் பார்த்துவிட்டு, ஒருவருக்கொருவர் HAPPY NEWYEAR சொன்ன அந்த இனிய நாட்களை இன்று நினைத்தாலும் சந்தோஷமாக இருக்கிறது!

    // ஆனால் எனக்கு? இணையத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்பது போன்றதொரு வெறுமை. இத்தகைய எண்ணம் எனக்கு மட்டும்தானா அல்லது பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட அனைவருக்குமே உள்ளதா என்று தெரியவில்லை. //

    உங்களுக்கு மட்டுமல்ல, பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டு, வலைப் பதிவர் எல்லோருக்குமே இந்த உணர்வு உண்டு. ஆனாலும் கம்ப்யூட்டரில் வலைபபதிவு உலகத்தில் இருப்பது என்பது, ஓய்வு பெற்று விட்டோம் என்ற உணர்வைத் தருவதில்லை. காரணம் அங்கும் இங்கும் கம்ப்யூட்டர் பணி.

    நன்றி! அய்யா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. வரும் ஆண்டில் அனைத்தும் மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

  6. கடந்த சில நாட்களாக தங்களை வலைப்பக்கம் காணவில்லை என்றதும் கிறிஸ்துமஸ் கொண்டாட சொந்த ஊருக்குபோய் விட்டீர்களோ என நினைத்தேன். அதனால் தங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல இயலவில்லை. தாமதமானாலும் இதோ எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!

    // இந்த இணைய அடிமைத்தனம் இன்று பல தனிமனித உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. //

    தங்கள் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன். இது ஒரு போதைப் பழக்கம்போல. ‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல’ என திருவள்ளுவர் சொல்வதுபோல இந்த கணினியோடு தொட்டும் தொடாமலும் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

    நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா10:36 PM

    வணக்கம்
    ஐயா..

    சிறப்பான பதிவு அருமை வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்.....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    ஐயா.
    பதிவு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்.....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  12. கருத்துரை இட்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளும் புத்தாண்டு வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  13. சிறப்பான பகிர்வு. உங்கள் பகிர்வில் சொன்ன அதே எண்ணங்கள் எனக்குள்ளும் - வலை நம்மை கட்டிப் போட்டு விட்டதோ.....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு