16 December 2013

அர்விந்த் கெஜ்ரிவால்தான் நாட்டிலேயே நேர்மையானவரா?

அர்விந்த் கெஜ்ரிவாலை அறியாத இந்தியர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் மிகப் பிரபலமடைந்தவர் அவர்.

சாமான்யர்கள் கட்சி என்ற ஒரு அரசிய கட்சியை அவருடைய குரு என்று கருதப்படும் அன்னா ஹசாரேவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் துவங்கி நடந்து முடிந்த தில்லி சட்டசைபை தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களைப் பெற முடியாவிடினும் வேறு எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாத அளவுக்கு கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றவர். 

நிபந்தனையற்ற ஆதரவை அளிக்க முன்வருகிறோம் என்று காங்கிரஸ் கட்சி முன்வந்தபோதும் உங்களுடைய ஆதரவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இதுதான் எங்கள் நிபந்தனைகள் என்று பல நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை முன்வைத்தவர். 

அது போதாதென்று தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக தெரிவு செய்யப்பட்ட பிஜேபியையும் கூட இந்த நிபந்தனைகளுக்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டு மிரட்டியவர். 

எங்களுடைய வாக்காளர்கள் எங்களை தனியாக அரசு அமைக்கும் அளவுக்கு வாக்களிக்கவில்லை, ஆகவே எதிர்கட்சியாக செயல்படவே விரும்புகிறோம். யாரிடமும் ஆதரவும் கோர மாட்டோம், யாருக்கும் ஆதரவும் அளிக்க மாட்டோம் என்ற Dog in the manger மாதிரியான முடிவை எடுத்து அதில் விடாப்பிடியாக நிற்பவர். 

எங்களைப் போன்ற சித்தாந்தம் உடைய நேர்மையான அரசியல்வாதிகள் (அதாவது தில்லி தேர்தலில் ஜெயித்தவர்கள்) வேறெந்த கட்சியிலிருந்தாலும் (காங்கிரஸ், பிஜேபி என்று கொள்க) தங்களுடைய கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு எங்களுடைய கட்சிக்கு வரலாம் என்றும் அறிக்கையிட்டவர்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு பிரபலமானவர் அர்விந்த் கெஜ்ரிவால்.

இவருடைய அரசியல் வாழ்க்கையில் சொற்பமே காலமே கடந்துள்ளது என்றாலும் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி என்று நிரூபித்துக் காட்டியவரும் இவரே. 

இவருடைய பின்னணியை (Background) சற்று ஆராய்ந்தால் இவருடைய இத்தகைய போக்குக்கான காரணங்கள் விளங்கும் என்பதால் இணையதளத்தை ஆய்வு செய்ததிலிருந்து கிடைத்த தகவல்கள்:

இவர் பிறந்தது ஆகஸ்ட் பதினாறாம் நாள். அதாவது சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள். ஆங்கில நட்சத்திர வரிசையில் பார்த்தால் சரியான சிம்ம ராசிக் காரர். பிறந்த நட்சத்திரத்தின் விவரம் எதுவும் கிடைக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பலருக்கும் patriotism எனப்படும் நாட்டுப்பற்று சற்று அதிகமாக காணப்படுவதைக் காண முடிகிறது. (நம்முடைய ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சுதந்திரத் தினத்தன்று பிறந்தவர். ஆகவேதான் அவருடைய பல  திரைப்படங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதாகவே இருப்பதை பார்த்திருக்கிறோம். பழம்பெரும் ஹிந்தி திரைப்பட நடிகர் மனோஜ்
குமாரும் இந்த மாதத்தில் (அதாவது சிம்மராசிக்காரர்கள் (Lion) பிறக்கும் மாதமான 22 ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் 21 வரையிலான நான்கு வாரங்கள்) பிறந்தவர்தான். Mr. Bharat உட்பட பல தேசபக்தி படங்களை எடுத்தவர்!  

ஆகவே கெஜ்ரிவாலும் அதிக அளவிலான தேசபக்தியும் ஒரு சிம்ம ராசிக்காரருடைய அனைத்து குணநலன்களும் கலந்து ஒரு புரியாத புதிராக (enigma) இருப்பதில் வியப்பேதும் இல்லை. 

அவருடைய கட்சிக்கு சாமான்யர்கள் கட்சி என்று பெயர் வைத்திருந்தாலும் அவர் BITS, Pilaniயில் படித்து பொறியாளர் பட்டம் பெற்ற, பொருளாதார ரீதியில் வசதிவாய்ந்த தந்தைக்குப் பிறந்தவர். ஒரு இந்திய சாமான்யன் படித்து ஆளாக படும் சிரமங்கள் எதையும் அனுபவிக்காத Born with a silver spoon ரகம். அவரும் IIT Karakpurஇல் படித்த பொறியாளர்தான். படித்து முடித்த கையோடு டாட்டா நிறுவனத்தில் வேலை கிடைத்தாலும் படித்த படிப்புக்கு சிறிதும் பொருத்தமில்லாத அரசு நிர்வாக பணியில் நுழைய விரும்பி இரண்டே ஆண்டுகளில் அதை துறந்தவர் அவர். IAS அதிகாரியாக முடியாமல் IRS அதிகாரியானவர். அங்கும் நிலைக்க மனம் இடம் கொடுக்கவில்லை. பணியில் இருந்தபோதே மேல் படிப்புக்கென்று விடுப்பில் சென்றவர். ஆனால் அவரை இழக்க விரும்பாத அரசு ஊதியத்துடனான விடுப்பு வழங்குகிறோம் என்றது, ஒரேயொரு நிபந்தனையுடன். அதாவது படிப்பு முடிந்து திரும்பியதும் குறைந்த பட்சம் மூன்றாண்டுகள் பணியாற்ற வேண்டும். இல்லையென்றால் விடுப்புக் காலத்தில் அரசிடம் இருந்து பெற்ற ஊதியத்தை திருப்பிச் செலுத்த வேண்டும்.

அரவிந்த் படிப்பு முடிந்து திரும்பி வந்தார். ஆனால் அவரால் பணியில் நிலைத்து நிற்க முடியவில்லை. இதுவும் சிம்ம ராசிக் காரர் குணம்தான். எதிலும் திருப்தியடையாத மனநிலை. யாருக்கும் பணிந்து செல்ல முடியாத குணநலன். பல்லைக் கடித்துக்கொண்டு பதினெட்டு மாதங்கள் பணியாற்றிவிட்டு மீதமிருந்த பதினெட்டு மாதங்களுக்கு ஊதியமில்லா விடுப்பில் (Loss of Pay leave of absence) சென்றார். அவர் கணக்குப்படி முப்பத்தியாறு மாதங்கள் அதாவது அரசு விதித்த மூன்றாண்டு பணிக்காலக் கெடு முடிந்துவிட்டது. ஆனால் அரசு உத்தியோகம் ஆனாலும் தனியார் உத்தியோகம் ஆனாலும் ஊதியமில்லா விடுப்பு சர்வீஸாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்பதை வேண்டுமென்றே மறந்துப்போனார். இதிலும் தான் ஒரு சிம்மராசிக் காரர் என்பதை காட்டினார். என்னை எதுவும் கட்டுப்படுத்தாது என்ற மனப்பாங்கு. விதியை மீறிவிட்டீர்கள் ஆகவே பெற்ற ஊதியத்தை திருப்பிச் செலுத்துங்கள் என்றது அரசு. 

ஆனால் கெஜ்ரி ஒத்துக்கொள்ளவில்லை. ஊழலுக்கு எதிராக புதியதொரு அணியைத் துவக்கியிருந்த அவருடைய குரு அன்னா ஹசாரேயுடன் தன்னை இணைத்துக்கொண்டு செயல்படத் துவங்கியதால் தன்னை அரசு பழிவாங்குகிறது என்று சொந்தப் பிரச்சினையை அரசியலாக்கினார். இதுவும் ஒருவகையில் ஊழல்தான், கையாடல்தான் என்பதை சவுகரியமாக மறந்தார். ஆனாலும் அரசு விடவில்லை. பிறகு நண்பர்கள், தெரிந்தவர்களிடத்திலிருந்தெல்லாம் கடன் வாங்கி அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தினார். 

படித்த படிப்புக்கு பொருத்தமான வேலை டாடா நிறுவனத்தில் கிடைத்தும் அதை உதறிவிட்டு அரசு பணியில் நுழைந்து பிறகு அதுவும் சலித்துப்போய் பொதுஜன சேவையில் இறங்கி பிறகு ஊழலை ஒழிக்க போராட்டங்கள் நடத்தி, அன்னா ஹசாரேவின் ஆத்மார்த்த சீடராக சிறிது காலம் அவருடைய போராட்டங்களில் கலந்துக்கொண்டு பிறகு அந்த கூட்டத்திலிருந்த ஒரு சிலருடன் ஒத்துப் போக முடியாமல் அதிலிருந்து விலகி தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு மீண்டும் பொதுஜன சேவையில் இறங்கி பிறகு அதையே ஒரு அரசியல் கட்சியாக உருவாக்கி பல நல்ல, சில சில்லறைத்தனமான போராட்டங்களையெல்லாம் நடத்தி இப்போது தில்லி சட்டமன்ற தேர்தலில் மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்தவரை அவருடைய சொந்த தொகுதியிலேயே துணிச்சலுடன் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கெஜ்ரிவால்.

இத்தனைக் குறுகிய காலத்தில் இத்தனை முறை தன்னுடைய வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொண்டாலும், இத்தனை சாதனைகளைப் படைத்திருந்தாலும் அவருடைய பிறப்பு குணம் அவரை நிம்மதியாக இருக்கவிடப் போவதில்லை என்பது உறுதி. அவர் எத்தனை நேர்மையான எண்ணங்களைக் கொண்டிருந்தாலும் தன்னை விட்டால் இந்த உலகில் குறைந்தபட்சம் இந்திய அரசியலில், நேர்மையாளன் இல்லை என்பதுபோல் உள்ள அவருடைய பேச்சும் நடவடிக்கைகளும் அவரை ஏதாவது ஒரு சிக்கலில் சிக்க வைத்துக்கொண்டே இருக்கும். அதற்கு அவருடைய அளவிட முடியாத ஈகோவும் ஒரு முக்கிய காரணம். 

காங்கிரஸ் ஒரு ஊழல்வாதிகளின் கட்சி ஆகவே அதனுடைய ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பதில் எவ்வித பொருளும் இல்லை என்ற அவருடைய நிலைப்பாட்டில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் அதை எடுத்துச் சொன்ன விதம்தான் அவரை ஒரு நடைமுறைக்கு சாத்தியமில்லாத மனிதர் (Impractical) என்று காட்டுகிறது.  

மேலும் நேர்மை (Honesty) என்பது ஒன்றும் புனிதமல்ல (Virtue). நாம் எல்லோருமே ஒருவகையில் நேர்மையாளர்கள்தான். ஆனால் எந்த அளவுக்கு என்பதில்தான் வேறுபாடே. நான்  அப்பழுக்கில்லாதவன் என்று யாராலும் கூறிக்கொள்ள முடியாது. பைபிளிலும் கூட ஏசுபிரானை ஒருவர் நல்லவரே என்று அழைத்தபோது இறைவன் மட்டுமே நல்லவர் என அழைக்கப்படத் தகுதியுள்ளவர் என்று பதிலளித்தார். இறைவனை விட்டால் தன்னையறியா பாலகனை கூறலாம். நிச்சயம் கெஜ்ரிவால் தன்னை இவ்விருவருடனும் ஒப்பிட்டுக்கொள்ள முடியாது என்று கருதுகிறேன். 

ஆகவே அவர் தன்னைத்தானே ஏற்றிவைத்துக்கொண்டுள்ள உயர்ந்த பீடத்திலிருந்து (High pedestal) சற்று இறங்கி வந்து தன்னையும் தன்னுடைய கட்சியையும் நம்பி வாக்களித்த தில்லி மக்களுக்கு உருப்படியாக எதையாவது செய்ய நினைத்தால் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறும் காங்கிரசின் ஆதரவைப் பெற்று அரசு அமைக்க முன்வர வேண்டும். 

காங்கிரசின் ஆதரவை அவராக கேட்டு பெறவில்லை. ஆகவே அவர்களுடைய ராகத்திற்கு ஆடவேண்டிய தேவையும் இல்லை. தன்னுடைய கட்சி தேர்தலுக்கு முன்பு என்னவெல்லாம் செய்வதாக வாக்களித்தாரோ அதையெல்லாம் அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து தாராளமாக செய்யலாம். நிபந்தனையற்ற ஆதரவு என்று சொல்லிக்கொண்டு ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் காங்கிரஸ் ஏதேனும் நிபந்தனைகளை முன்வைத்தால் அப்போது கெஜ்ரிவால் எவ்வித தயக்கமும் இல்லாமல் முதலமைச்சர் பதவியை தூக்கியெறிந்துவிட்டு சட்டசபையைக் கலைத்துவிடச் சொல்லி ஆளுநருக்கு பரிந்துரைக்கலாமே. அல்லது எவ்வித முகாந்திரமும் இல்லாமல் காங்கிரஸ் தன்னுடைய ஆதரவை விலக்கிக்கொண்டாலும் அது மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவை அதிகமாக்குமேயல்லாமல் நிச்சயம் குறைத்துவிட முடியாது. 

ஆனால் திருவிளையாடல் நாகேஷைப் போல எனக்கு கேள்விகளைக் கேட்கத்தான் தெரியும் என்கிற பாணியில் தொடர்ந்தால் இவருக்கு போராட்டங்கள் நடத்தத்தான் தெரியும் ஆக்கபூர்வமாக ஒன்றும் செய்யத் தெரியாது போலிருக்கிறது என்று மக்கள் நினைத்துவிட வாய்ப்புள்ளது.  

***********

22 comments:

வே.நடனசபாபதி said...

//அவரும் IIT Karakpurஇல் படித்த பொறியாளர்தான்.//

அவரும் என்ற இடத்தில் அவரது தந்தையும் என்று இருந்தால் சற்று குழப்பம் இல்லாமல் இருக்கும்.

இவர் ஒரு வாய்ச்சொல்லில் வீரராய் இருப்பாரோ என்ற ஐயம் எனக்கு ஆரம்பத்திலேயே இருந்தது. அது இப்போது நிருபணமாகிவிட்டது. அவரே இந்த வெற்றியை எதிர்பார்த்திருக்கமாட்டார் என நினைக்கிறேன்.அவர் விரும்பியது எதிர்க்கட்சியாக இருக்க மட்டுமே தவிர ஆளும் கட்சியாக இருக்க விரும்பவில்லை எனத்தெரிகிறது அவர் இப்போது எடுத்திருக்கும் நிலைப்பாடு.ஏனெனில் அப்போது தானே குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கமுடியும்.இவரை நம்புவது மண் குதிரை நம்பில் ஆற்றில் இறங்குவது போலத்தான்!

ஜோதிஜி திருப்பூர் said...

தலைப்பை பார்த்தவுடன் வேறு என்னவோ சொல்ல வர்றீங்கன்னு நினைச்சேன். ஆனால் நான் இதுவரையிலும் அறியாத தகவல்கள். அதெல்லாம் சரி. ஜெயலலிதா கூட சிம்மராசி காரர் தானாம். அவர் நாட்டுப் பற்று எப்படிங்க?

ஜெயம் said...

கங்கரஸ் யாரையாவது உருப்படியா இருக்கவிடுமா? வி பி சிங் அவர்களை காலைவாரியதே காங்கரஸ்சின் திறைமறைவு வேலை என்பது யாருக்கும் தெரியாதா.

காங்கிரசும் பாஜவும் சேர்ந்து கெஜ்ரிவாலை காமெடியனாக்க பார்க்கிறது. எது எப்படியாயினும் கெஜ்ரிவால் ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கை மிக்க துனிச்சல்காரர் அதுமட்டுமே போதும்.

Anonymous said...

உங்கள மாதிரி நாலு பேர் இருந்தால் நாடு உருப்பட்டுவிடும் ...

Anonymous said...

let some new comers join in politics......

தி.தமிழ் இளங்கோ said...


அர்விந்த் கெஜ்ரிவால் மனோபாவத்தை நன்றாகவே வெளிப்படுத்திய கட்டுரை.கட்சி துவங்கிய ஆரம்பகாலத்தில் எல்லோருக்கும் இருக்கும் ஆவேசம் இவருக்கும் இருக்கிறது. அர்விந்த் கெஜ்ரிவால் கட்சி எம்.எல்.ஏக்கள் பிஜேபியிலோ அல்லது காங்கிரஸிலோ கரைந்து விட வாய்ப்புகள் அதிகம். எனவே டில்லியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

Packirisamy N said...

கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்துவார் என்று எதிர்பார்ப்போம்.வேறொன்றும் சொல்வதற்கில்லை.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
//அவரும் IIT Karakpurஇல் படித்த பொறியாளர்தான்.//

அவரும் என்ற இடத்தில் அவரது தந்தையும் என்று இருந்தால் சற்று குழப்பம் இல்லாமல் இருக்கும். //

கெஜ்ரிவாலின் தந்தை பிட்ஸ், பிலானியில் Electrical Engg. படித்தவர். கெஜ்ரிவால் IIT, Karagpurல் Mechanical Engg படித்தவர். இருவரும் பொறியாளர்கள் என்ற பொருளில்தான் 'அவரும்' என்று குறிப்பிட்டிருந்தேன்.

இவர் ஒரு வாய்ச்சொல்லில் வீரராய் இருப்பாரோ என்ற ஐயம் எனக்கு ஆரம்பத்திலேயே இருந்தது. அது இப்போது நிருபணமாகிவிட்டது. அவரே இந்த வெற்றியை எதிர்பார்த்திருக்கமாட்டார் என நினைக்கிறேன்.அவர் விரும்பியது எதிர்க்கட்சியாக இருக்க மட்டுமே தவிர ஆளும் கட்சியாக இருக்க விரும்பவில்லை எனத்தெரிகிறது அவர் இப்போது எடுத்திருக்கும் நிலைப்பாடு.ஏனெனில் அப்போது தானே குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கமுடியும்.இவரை நம்புவது மண் குதிரை நம்பில் ஆற்றில் இறங்குவது போலத்தான்!

கரெக்டா சொன்னீங்க. ஆனா இங்க சிலருக்கு அப்படி சொல்றதே மகா தவறுன்னு தோனுது.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...


ஜோதிஜி திருப்பூர் said...
தலைப்பை பார்த்தவுடன் வேறு என்னவோ சொல்ல வர்றீங்கன்னு நினைச்சேன். ஆனால் நான் இதுவரையிலும் அறியாத தகவல்கள். அதெல்லாம் சரி. ஜெயலலிதா கூட சிம்மராசி காரர் தானாம். அவர் நாட்டுப் பற்று எப்படிங்க?

அம்மாவுக்கு நாட்டுப்பற்று அதிகமா இருக்கறதாலதான நாட்டுக்கே பிரதமராவணும்னு துடிக்கிறாங்க :))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


ஜெயம் said...
கங்கரஸ் யாரையாவது உருப்படியா இருக்கவிடுமா? வி பி சிங் அவர்களை காலைவாரியதே காங்கரஸ்சின் திறைமறைவு வேலை என்பது யாருக்கும் தெரியாதா.//

காங்கிரசும் பாஜவும் சேர்ந்து கெஜ்ரிவாலை காமெடியனாக்க பார்க்கிறது. எது எப்படியாயினும் கெஜ்ரிவால் ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கை மிக்க துனிச்சல்காரர் அதுமட்டுமே போதும். //

வெறும் துணிச்சல் மட்டுமே போறாதுங்க. சாதுரியமும் வேண்டும். அவர் சரியாக சிந்தித்து செயலாற்றியிருந்தால் காங்கிரசின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு தான் நினைத்த அனைத்தையும் சாதித்திருக்கலாம். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் தன்னுடைய ஆதரவை விலக்கிக்கொண்டிருந்தால் அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தில்லியை பிடித்திருக்கவே முடியாமல் போயிருக்கும். தன்னுடைய ஈகோவால் அந்த சந்தர்ப்பத்தை வீணடித்துவிட்டார் கெஜ்ரிவால்.

டிபிஆர்.ஜோசப் said...


Anonymous said...
உங்கள மாதிரி நாலு பேர் இருந்தால் நாடு உருப்பட்டுவிடும் ...//

யார் எவர் என்று தெரியாமல் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரிக்காதீர்கள் என்பதை கூறத்தான் கெஜ்ரியின் பின்னணியைப் பற்றி எழுதினேன். அவர் நேர்மையானவராக இருக்கலாம். ஆனால் அதை அவரே கூறிக்கொண்டு திரிவது சரியல்ல என்றுதான் சொல்கிறேன். நாடு இப்போதும் உருப்பட்டுத்தான் இருக்கிறது. காங்கிரஸ் ஊழல் வாதி கட்சி என்றால் அவர்களை தூக்கியெறிந்துவிட்டு வேறொரு கட்சியை தெரிவி செய்ய நமக்கு உரிமை உண்டு. ஆனால் ஆட்சி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அதை தட்டிக்கழிப்பவரை எப்படி நம்புவது?

டிபிஆர்.ஜோசப் said...

7:28 AM
Anonymous said...
let some new comers join in politics......

I am not blocking them from joining politics. He has already won an election, though could not achieve absolute majority. If he really wants to serve the people of Delhi he should have made sincere efforts to form a Govt. There is nothing wrong in accepting the outside support of a party only because they had opposed it in the election. Kejri could have put the entire blame on Congress if he could not successfully implement what he had promised in his manifesto. He lost the golden opportunity to finish off Congress at least in Delhi. It is mainly due to his ego and inexperience.

டிபிஆர்.ஜோசப் said...


தி.தமிழ் இளங்கோ said...

அர்விந்த் கெஜ்ரிவால் மனோபாவத்தை நன்றாகவே வெளிப்படுத்திய கட்டுரை.கட்சி துவங்கிய ஆரம்பகாலத்தில் எல்லோருக்கும் இருக்கும் ஆவேசம் இவருக்கும் இருக்கிறது. அர்விந்த் கெஜ்ரிவால் கட்சி எம்.எல்.ஏக்கள் பிஜேபியிலோ அல்லது காங்கிரஸிலோ கரைந்து விட வாய்ப்புகள் அதிகம். எனவே டில்லியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.//

காங்கிரசை அவ்வளவு எளிதில் தில்லி மக்கள் மன்னித்துவிடுவார்கள் என்று தோன்றவில்லை. என்னைக் கேட்டால் கெஜ்ரியே மீண்டும் தேவையான பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பேன். அப்போதுதான் அவர் ஆட்சி செய்வதில் திறமையானவர்தானா என்பது மக்களுக்கும் தெரியும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் தெரியும்.

டிபிஆர்.ஜோசப் said...


Packirisamy N said...
கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்துவார் என்று எதிர்பார்ப்போம்.வேறொன்றும் சொல்வதற்கில்லை.//

அவர்தான் கோட்டை விட்டுவிட்டாரே சார். ஆளுநர் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்துவிட்டாராமே. தானாக ஆதரவு அளிக்கிறோம் என்று வந்தவர்களை வேண்டாம் என்று கூறிவிட்டபோதே அரசு அமைக்கும் வாய்ப்பு போய்விட்டதே. இனி மீண்டும் மறு தேர்தல் வந்து, இவருக்கு பெரும்பான்மை கிடைத்து...... மக்கள் மீண்டும் இவரை தெரிவு செய்ய தயங்குவார்கள் என்றே தோன்றுகிறது.

டிபிஆர்.ஜோசப் said...

மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்களுடன் இன்னும் பல கருத்துக்கள் வந்தன. ஆனால் அவற்றை வெளியிட முடியாத அளவுக்கு கீழ்த்தரமான, நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருந்ததால் வெளியிடாமல் நீக்கிவிட்டேன்.

இத்தகையோருக்கு ஒரு வார்த்தை: அரசியலில் சகிப்புத் தன்மை வேண்டும். நம்மை யாரும் குறை சொல்லவோ எதிர்க்கவோ கூடாது என்று நினைப்பவர்கள் இந்தியா போன்ற சுதந்திர நாட்டில் அரசியலிலும் பொது வாழ்க்கையிலும் இறங்க தகுதியற்றவர்கள். AAPயின் ஆதரவாளர்கள் அறிவுஜீவிகள் என்று நினைத்தேன். ஆனால் அவர்களில் அடிப்படை நாகரீகமற்றவர்களும் உள்ளனர் என்பது வேதனையளிக்கிறது.

தி.தமிழ் இளங்கோ said...

எனது கருத்து:
//அர்விந்த் கெஜ்ரிவால் கட்சி எம்.எல்.ஏக்கள் பிஜேபியிலோ அல்லது காங்கிரஸிலோ கரைந்து விட வாய்ப்புகள் அதிகம். எனவே டில்லியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.//

உங்கள் பதில்:
// காங்கிரசை அவ்வளவு எளிதில் தில்லி மக்கள் மன்னித்துவிடுவார்கள் என்று தோன்றவில்லை. //

எனது இப்போதைய பதில்:
மீண்டும் தேர்தல், மக்கள் மன்னிப்பு என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. கட்சி தாவக் கூடிய, அர்விந்த் கெஜ்ரிவால் கட்சி எம்.எல்.ஏக்கள் துணையுடன் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைக்க வாய்ப்பு உண்டு என்பதனையே சுட்டிக் காட்ட விரும்பினேன். நன்றி!

ஜெயம் said...

கெஜ்ரிவாலின் திட்டம் நாம் எதிர்கட்சியில் அமர்ந்து அரசியலின் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொல்லலாம் என்று நினைத்திருப்பார் ஆனால் அவர் நம்மையே ஆட்சி அமைக்கசொல்வார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.

டிபிஆர்.ஜோசப் said...


தி.தமிழ் இளங்கோ said...


எனது இப்போதைய பதில்:
மீண்டும் தேர்தல், மக்கள் மன்னிப்பு என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. கட்சி தாவக் கூடிய, அர்விந்த் கெஜ்ரிவால் கட்சி எம்.எல்.ஏக்கள் துணையுடன் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைக்க வாய்ப்பு உண்டு என்பதனையே சுட்டிக் காட்ட விரும்பினேன். நன்றி! //

அப்படியும் நடக்க வாய்ப்புண்டோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ஒருமுறை ஆளுநர் ஆட்சி அமைக்கப்பட்டுவிட்டால் மீண்டும் கட்சிகளுக்கு அரசு அமைக்க வாய்ப்பளிக்க முடியுமா? தெரிந்தவர்கள் விளக்கவும்.

உங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...

PM
ஜெயம் said...
கெஜ்ரிவாலின் திட்டம் நாம் எதிர்கட்சியில் அமர்ந்து அரசியலின் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொல்லலாம் என்று நினைத்திருப்பார் ஆனால் அவர் நம்மையே ஆட்சி அமைக்கசொல்வார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.//

இருக்கலாம் ஆனால் ஏதாவது ஒரு கட்சி ஆட்சி அமைத்தால்தானே கெஜ்ரி எதிர்கட்சியாக செயல்பட முடியும்? காங்கிரஸ் பிஜேபியை ஆதரிக்க போவதில்லை. அப்படியானால் மீண்டும் மறுதேர்தல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. பொது மக்களின் பணம்தான் வீணாகப்போகிறது.

G.M Balasubramaniam said...


அரசியல் என்பது சாதாரணனுக்கு ஒரு vehicle ஆகத் தோன்றவில்லை. பணம் இல்லாமல் அரசியல் வெறும் டொனேஷன் மூலம் நடத்த முடியும் என்று தோன்றவில்லை. ஒரு அரசு அதிகாரியாயிருந்து மக்களின் குமுறல் மட்டும் பெற்று அரசியல் நடத்த முடியாது.கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஒரு பெண்ணீண் பலாத்த்காரப் பலிக்கு பொங்கி எழுந்த மக்களின் கோபமும், ஊழல் எதிர்ப்புக்கு எதிராகத் தோன்றிய ஹசாரேயின் உண்ணாவிரதமும் சேர்ந்து ஒரு மாற்றுக்காக ஏங்கி நிற்கும் நடுத்தர மக்களின் எதிர் பார்ப்பின் விளைவே கேஜ்ரிவாலின் வெற்றி. இன்னொரு தேர்தலை சந்திக்க பொருள் வேண்டும். அதைத் திரட்ட இவருக்கும் ஏதாவது வழி பிறக்க வேண்டும். தன் கட்சிக்கு மக்கள் ஆதரவு என்பது இருக்கும் ஆட்சிக்கு எதிர்ப்பு என்று எடுத்துக் கொள்ளாமல் தன்னைப் பற்றிய ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி எதையும் செய்ய முடியாமல் போய் விடுவாரோ என்னும் அச்சம் நிச்சயமிருக்கிறது.பொது மக்களின் நன்கொடையில் அரசியல் நடத்த முடியாமல் இவரும் கார்பொரேட்டுகளுக்கு துணை போகும் வாய்ப்பும் இருக்கிறது. செலவு அதிகம் இல்லாமல் அரசியல் நடத்தும் காலத்தில் நாம் இப்போது இல்லை.

டிபிஆர்.ஜோசப் said...

.M Balasubramaniam said...

அரசியல் என்பது சாதாரணனுக்கு ஒரு vehicle ஆகத் தோன்றவில்லை. பணம் இல்லாமல் அரசியல் வெறும் டொனேஷன் மூலம் நடத்த முடியும் என்று தோன்றவில்லை. ஒரு அரசு அதிகாரியாயிருந்து மக்களின் குமுறல் மட்டும் பெற்று அரசியல் நடத்த முடியாது.கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஒரு பெண்ணீண் பலாத்த்காரப் பலிக்கு பொங்கி எழுந்த மக்களின் கோபமும், ஊழல் எதிர்ப்புக்கு எதிராகத் தோன்றிய ஹசாரேயின் உண்ணாவிரதமும் சேர்ந்து ஒரு மாற்றுக்காக ஏங்கி நிற்கும் நடுத்தர மக்களின் எதிர் பார்ப்பின் விளைவே கேஜ்ரிவாலின் வெற்றி. இன்னொரு தேர்தலை சந்திக்க பொருள் வேண்டும். அதைத் திரட்ட இவருக்கும் ஏதாவது வழி பிறக்க வேண்டும். தன் கட்சிக்கு மக்கள் ஆதரவு என்பது இருக்கும் ஆட்சிக்கு எதிர்ப்பு என்று எடுத்துக் கொள்ளாமல் தன்னைப் பற்றிய ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி எதையும் செய்ய முடியாமல் போய் விடுவாரோ என்னும் அச்சம் நிச்சயமிருக்கிறது.பொது மக்களின் நன்கொடையில் அரசியல் நடத்த முடியாமல் இவரும் கார்பொரேட்டுகளுக்கு துணை போகும் வாய்ப்பும் இருக்கிறது. செலவு அதிகம் இல்லாமல் அரசியல் நடத்தும் காலத்தில் நாம் இப்போது இல்லை.//

மிக அழகாக சொல்லிவிட்டீர்கள்.

மிக்க நன்றி சார்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கேஜ்ரிவாலை அலசி ஆராந்து விட்டீர்கள். ஒருவேளை ஆட்சி அமைத்து விட்டால் ஆதரவு விலக்கிக்கொள்ளப் படும்போது அதை தூக்கி எறிந்து விட்டு அவராவது மிகக் கடினம். அதா மற்ற எம்.ஏக்க ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம் அப்படி இருக்கும் பட்சத்தில் கட்சி தலைமைகூட மாற்றப்படு வதற்கு வாய்ப்பு . என்ன நடக்கிறது என்று பார்ப்போம்