12 December 2013

மன்மோகன் சிங்கின் பதவி பறிக்கப்படுமா?

திரு. மன்மோகன் சிங் பல ஆண்டுகளாக பல்வேறு அரசு பதவிகளில் பணியாற்றி அவருடைய பொருளாதார அறிவுக்கும் திறனுக்கும் பாராட்டப்பட்டவர்தான் என்றாலும் கடந்த பத்தாண்டுகளாக தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களையும் - அமைச்சரவை சகாக்கள், தன்னுடைய இலாக்கா அதிகாரிகள் - தேசத்தையும் சரிவர வழிநடத்த தவறியதன் காரணமாக செயலற்ற பிரதமர் என்ற முத்திரையுடன் தன்னுடைய சுமார் இருபதாண்டு அரசியல் மற்றும் பொது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளார்.கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து பொருளாதாரத்தில் பட்டம் பெற்று உலகளவில் பொருளாதார மேதை, சிறந்த நிர்வாகி என்று ஏற்றுக்கொள்ளப் பட்ட மன்மோகன் சிங் முதன் முதலாக நாட்டின் நிதியமைச்சராக தேசிய அரசியலில் நுழைந்ததே யாரும் எதிர்பாராமல் நடந்ததுதான்.

1991ம் வருடம் ஜூன் மாதம் முதன் முதலாக நாட்டின் நிதியமைச்சராக அமர்த்தப்பட்டதை பிறகு பிபிசி நிரூபர் ஒருவருக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறுகிறார் சிங். 'நரசிம்ம ராவ் அவர்களின் முதன்மை காரியதரிசி என்னை நாட்டின் அடுத்த நிதியமைச்சராக தெரிவு செய்திருக்கிறார் என்று என்னிடம் தொலைபேசியில் கூறியபோது நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாளே ராவ் அவர்கள் என்னை அழைத்து சற்று கோபத்துடன் உடனே ஜனாதிபதி இல்லத்திற்கு வந்து பதவியேற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியபோது என்னால் மறுக்க முடியவில்லை.'

ஆக, அவராக விரும்பி அரசியலுக்குள் நுழையவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 

நாட்டின் நிதியமைச்சராக அவர் பதவியேற்றபோது நாட்டின் நிதிநிலமை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அந்த சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உலக நாணய நிதியத்தை (IMF) அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தனர் பிரதமர் ராவும் மன்மோகன் சிங்கும். நிதியம் தங்களுடைய கடனுதவி தேவையென்றால் அதற்கு தாங்கள் பரிந்துரைக்கும் அனைத்து பொருளாதார சீர்திருத்த முயற்சிகளையும் அமுல்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அன்று வரை இந்தியாவில் நடைமுறையில் இருந்த உரிம கட்டுப்பாடுகள் (Licence Raj), அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அன்னிய வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு தடையாயிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டும் என்றது நிதியம். 

பிரதமர் ராவ் அளித்த ஆதரவில் இந்த கட்டுப்பாடுகளை சிறிது சிறிதாக தளர்த்திய சிங் நாட்டின் வர்த்தகத்தை அன்னிய நிறுவனங்களுக்கு திறந்துவிட்டார். அதைத் தொடர்ந்து அரசின் கட்டுப்பாடில் இயங்கிவந்த பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் முதலீடு என்ற கொள்கையை அமுல்படுத்தினார். இவ்விரண்டு கொள்கைகளையும் இன்றளவும் எதிர்த்து வரும் கம்யூனிச கட்சிகள் நாட்டின் இன்றைய பொருளாதார தேக்க நிலைக்கு மன்மோகன் சிங்கின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம் என்று கூறிவருகின்றன.  

அவர்கள் கூறிவரும் குற்றச்சாட்டுக்கள் உண்மையோ இல்லையோ இத்தகைய முயற்சிகள் நாட்டின் நிதி நிலைமையை சீரமைத்தது என்பதில் சந்தேகமில்லை. அவர் நிதியமைச்சராக பதவியேற்றபோது USD 1 billionனாக இருந்த அன்னிய செலவாணி கையிருப்பு இன்று USD 280 billionனுக்கும் மேல்!

ஆனால் 1991ம் வருடம் பதவியேற்றதிலிருந்து அவர் எடுத்த முயற்சிகள் அரசை காப்பாற்ற முடியவில்லை. 1996ல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. 

2004ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது சோனியா காந்திதான் பிரதமராக வருவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த சூழலில் அவர் சிங்கை பரிந்துரைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த முடிவின் பின்னணியில் பல காரணங்கள் இருந்தாலும் சிங் பிரதமராவது காலத்தின் கட்டாயம் போலும். 

அவர் பிரதமராக பதவியேற்றபோது அவரை ஒரு இடைக்கால பிரதமராகவே காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பார்த்தன. ராகுல் காந்தி அந்த பதவியில் அமர்த்தப்படும் வரை இவர் ஒரு காபந்து பிரதமராகவே இருப்பார் என்று அனைவரும் கருதியிருந்த சூழலில் சுமார் பத்தாண்டு காலம் அந்த பதவியில் அவரால் இருக்க முடிந்ததே பெரிய சாதனை என்பதை மறுப்பதற்கில்லை. 

அதே சமயம் இந்த பத்தாண்டு காலத்தில் அவர் அதுவரை ஈட்டியிருந்த பெயரையும் புகழையும் இழந்து இப்போது தன்னை பிரதமராக்கியவராலேயே ஒதுக்கப்பட்டு நிற்பதுதான் வேதனை.

அவர் ஈட்டியிருந்த பொருளாதார பட்டத்துடன் 'செயலற்ற பிரதமர்', 'முடிவெடுக்க முடியாதவர்', 'துணிச்சலில்லாதவர்' என பல பட்டங்களைப் பெற்றிருக்கிறார். அவற்றுடன் 'ஊழல் பேர்வழி' என்ற பட்டமும் இணைந்துக்கொள்ளுமா என்பது அவர் மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முழுவதும் விசாரிக்கப்படும்போதுதான் தெரியவரும். 

அவர் ஊழல்வாதியா இல்லையா என்பது ஒருபுறமிருக்க அவருடைய அமைச்சரவையில் அங்கம் வகித்த பல அமைச்சர்களும் ஊழலில் ஈடுபட்டபோது அவர் பாராமுகமாக இருந்ததை மறுப்பதற்கில்லை. ஊழல் செய்வது தவறு என்றால் ஊழலுக்கு துணை போவதும் அதைக் கண்டும் காணாததுபோல் இருப்பதும் தவறுதான். இந்த தவறை சிங் செய்திருப்பது பல விதங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளதையும் மறுப்பதற்கில்லை. 

அவருடைய இந்த பாராமுகம்தான் இன்று காங்கிரஸ் கட்சியை இந்த இழிநிலைக்கு ஆளாக்கியுள்ளது என்பதும் உண்மைதான். அவருடைய இந்த செயலற்றத் தன்மைக்கு அவரை பின்னாலிருந்து ஆட்டிப்படைத்து வந்த சோனியா அம்மையாரும் அவருடைய குடும்பத்தினரும்தான் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் அவர்களுடைய குறுக்கீட்டை சகித்துக்கொண்டு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் சிங்கிற்கு இருக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் எந்த நேரமும் பதவியை தூக்கியெறிந்துவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஆகவே கடந்த சில தினங்களாக இத்தனைக்கும் காரணம் மன்மோகன்தான் என்று சோனியாவும் ராகுலும் மறைமுகமாக கூறிவருவதை இனியும் சகித்துக்கொண்டு இருக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஏ.கே.ஏவை இடைக்கால பிரதமராக்கலாமா என்று சோனியா ஆலோசித்துவருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானதும் அவர் பதவியை துறந்திருக்கலாம்.  இன்னமும் எதற்காக காத்திருக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது.

உலகத் தலைவர்களுள் முக்கியமானவர், நேர்மையானவர், பொருளாதார மேதை என்றெல்லாம் பல உலக தலைவர்களாலும் போற்றப்பட்டு வந்தவர் இப்போது தன்னுடைய சொந்த கட்சியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு நிற்பதைக் காணும்போது ஒரு புறம் வேதனையாக இருந்தாலும் அவருடைய இந்த பரிதாப நிலைக்கு அவர் மட்டுமே காரணம் என்பதும் நினைவில் வருகிறது.

இதுவரை ஒருமுறை கூட மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படாதவர் மன்மோகன் சிங். சமீபத்தில் மீண்டும் மாநிலங்கள் அவைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் ஒரு சில மாதங்களில்  அவருடைய அரசியல் பயணம் முடிவுக்கு வரும் என்பதில் ஐயமில்லை.

வெளியேற்றப்படுவதை விட வெளியேறுவது மேல் என்பதை அவர் உணர வேண்டும். ஆனால் அவருக்குத்தான் சட்டென்று முடிவெடுக்கவே தெரியாதே!!

**********

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புரியாத புதிராக தான் உள்ளது.... ம்... பார்ப்போம்...

கவியாழி கண்ணதாசன் said...

இதுவரை ஒருமுறை கூட மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படாதவர் மன்மோகன் சிங்//உண்மைதான்

s suresh said...

நிதி அமைச்சரோடு நின்றிருந்தால் பேசப்பட்டிருப்பார்! இப்போது ஏசப்படுகிறார்! பாவம்!

G.M Balasubramaniam said...


எல்லோருக்கும் , எல்லோரிடமும் நல்ல பிள்ளை என்னும் பெயர் வாங்குவதிலேயே குறியாய் இருந்தாரோ என்னவோ. அரசியலே தெரியாத அரசியல்வாதி என்று எண்ண வேண்டி உள்ளது.

டிபிஆர்.ஜோசப் said...

திருவாளர்கள் டிடி,
கவியாழி,
சுரேஷ் மற்றும்
GMB அவர்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

அரசியலுக்குள் நுழைந்துவிட்டால் அரசியல்வாதியாக மாறிவிடவேண்டும். இல்லையென்றால் வரவே கூடாது என்கிற அடிப்படை நியதியை மன்மோகன் சிங் மறந்ததால் வந்த வினைதான் இன்றைய இழிநிலை. இனியும் பதவியில் நீடிப்பது அவருக்கு இழுக்கு.

வே.நடனசபாபதி said...

அறிஞர் அண்ணா அவர்களின் வார்த்தையில் சொன்னால் நமது பிரதமர் அவர்கள் ஒரு சூழ்நிலையின் கைதி! அவ்வளவே! காலம் ஒரு நாள் மாறும். அவரும் ‘விடுதலை பெறுவார்’ என நம்புவோம்!!

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
அறிஞர் அண்ணா அவர்களின் வார்த்தையில் சொன்னால் நமது பிரதமர் அவர்கள் ஒரு சூழ்நிலையின் கைதி! அவ்வளவே! காலம் ஒரு நாள் மாறும். அவரும் ‘விடுதலை பெறுவார்’ என நம்புவோம்!!//

என்றைக்கு இந்த பதவியை தூக்கி எறிகிறாரோ அன்றைக்குத்தான் அவருக்கு விடுதலை. சோனியாவின் கைப்பாவையாக இருப்பதை விட அது எவ்வளவோ மேல்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

Packirisamy N said...

ஆசை யாரை சார் விடும்? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. இதில் அறிவாளி, முட்டாள் எதுவும் கிடையாது. மொத்தத்தில் பாதிக்கப்படுவது பொதுஜனங்கள்தான்.

Mathu S said...

ஓர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் ரிபோர்ட்டை பார்த்தமாதிரி இருக்கு...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சிறப்பாக அலசி இருக்கிறீர்கள். பிரதமர் பதவியே அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஆகி விட்டது.

bandhu said...

இந்த நேரத்தில் மன்மோகன் பற்றி அவரின் மேலதிகாரியாக இருந்தவர் (பெயர் மறந்துவிட்டது) சொன்னது தான் உண்மை என தோன்றுகிறது..

Manmohan is overrated as an economist and underrated as a politician!

டிபிஆர்.ஜோசப் said...


Packirisamy N said...
ஆசை யாரை சார் விடும்? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. இதில் அறிவாளி, முட்டாள் எதுவும் கிடையாது. மொத்தத்தில் பாதிக்கப்படுவது பொதுஜனங்கள்தான்.//

பதவி ஆசை பிடித்தவரா மன்மோகன்சிங்? ஒருவேளை இருக்கலாம். Power corrupts, Power corrupts absolutely என்பார்களே அது இதுதான் போலிருக்கிறது. என்னுடைய அலுவலக வாழ்க்கையிலும் இப்படி பல நல்ல திறமையுள்ள அதிகாரிகள் பதவி போதையில் குறித்த சமயத்தில் வெளியேற மறுத்து வெளியேற்றப்பட்டதை பார்த்திருக்கிறேன். ஒரு முதல்வர் வெளியேற்றப்பட்டதும் ஒரு ஆங்கில பத்திரிகை '....... Bank's Chairman shown the door' என்று செய்தி வெளியிட்டு அவரை அசிங்கப்படுத்தியது. அதே நிலை சிங்குக்கும் வராமல் இருந்தால் சரி.

டிபிஆர்.ஜோசப் said...


Mathu S said...
ஓர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் ரிபோர்ட்டை பார்த்தமாதிரி இருக்கு...//

உங்களுடைய முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எனக்கு சிங்கை நிதியமைச்சராக மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ஒரு பிரதமராக துவக்கத்திலிருந்தே பிடிக்கவில்லை.

டிபிஆர்.ஜோசப் said...


டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
சிறப்பாக அலசி இருக்கிறீர்கள். பிரதமர் பதவியே அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஆகி விட்டது.//

சிலருக்கும் வேறு யாருக்காவது உதவியாளராக அவருடைய உத்தரவுகளுக்கேற்ப செயல்படத்தான் முடியும். அவர்களையே இலாக்கா அதிகாரியாக நியமித்தால் அதே திறனை வெளிப்படுத்த தெரியாது. அதுபோன்றவர்தான் சிங்கும். யாரை எங்கே வைக்க வேண்டும் என்று தெரியாதவர். அதன் விளைவுதான் இந்த பரிதாப நிலை.

டிபிஆர்.ஜோசப் said...bandhu said...
இந்த நேரத்தில் மன்மோகன் பற்றி அவரின் மேலதிகாரியாக இருந்தவர் (பெயர் மறந்துவிட்டது) சொன்னது தான் உண்மை என தோன்றுகிறது..

Manmohan is overrated as an economist and underrated as a politician!//

உண்மைதான். அதிகாரியை போல் அதிகாரம் செய்யவும் தெரியவில்லை அரசியல்வாதிபோல் தரமிறங்கவும் தெரியவில்லை.