26 நவம்பர் 2013

ஜிடிபி அப்படீன்னா என்னாங்க (நிறைவுப் பகுதி)

ஆனால் பொருட்களின் தயாரிப்பு செலவும் சந்தை விலையும் எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே? ஆகவே கடந்த ஆண்டோ அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு கணக்கிடப்பட்ட GDPயுடனோ ஒப்பிட்டு எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளோம் என்று எவ்வாறு தெரிந்துக்கொள்வது?  

உதாரணத்திற்கு 2000-2001ம் ஆண்டிலிருந்து நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) எத்தனை விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கணக்கிடவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். 2010-11 ஆண்டில் இருந்த விலைவாசியே இப்போதும் இருக்காது அல்லவா? இப்படிப்பட்ட சூழலில் நாட்டின் உற்பத்தியில் எவ்வித வளர்ச்சியும் இல்லையென்றாலும் இந்த இடைபட்ட காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வே நாட்டின் உற்பத்தி வளர்ச்சி அடைந்துவிட்டதைப் போன்றதொரு பிரமையை ஏற்படுத்திவிடக் கூடும். அதாவது 2010-11ல் நாட்டின் தானிய உற்பத்தி 1000 கோடி டன்னாக இருந்தது என்று வைத்துக்கொள்வோம். அன்று ஒரு டன் தானியத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாய் என்ற நிலையிலிருந்து பத்து ஆண்டுகளில் ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்கும் சூழலில் 2012-13ல் நாட்டின் தானிய உற்பத்தி  அதே அளவான ஆயிரம் கோடி டன்னாக இருந்தாலும் தற்போதைய சந்தை விலையில் அதன் மதிப்பு ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்குமே! 

இந்த விலைவாசி உயர்வை சமநிலைக்கு கொண்டுவந்தால் மட்டுமே நாட்டின் உண்மையான உற்பத்தி நிலவரம் தெரியவரும் என்பதால் எந்த ஆண்டுடன் ஒப்பிட விரும்புகிறோமோ அந்த ஆண்டின் சந்தை விலையிலேயே நடப்பு ஆண்டின் உற்பத்தியையும் கணக்கிடுவார்கள். எந்த ஆண்டு விலைவாசியுடன் ஒப்பிடுகிறோமோ அந்த ஆண்டை தொடக்க ஆண்டாக (Base Year) வைத்துக்கொண்டு நடப்பு ஆண்டிலுள்ள (current year) உற்பத்தி அளவை தொடக்க ஆண்டின் விலைவாசியில் கணக்கிடுவார்கள். இந்த முறையை deflator method என்கிறார்கள். சாதாரணமாக ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டிற்கு முந்தைய ஆண்டை தொடக்க ஆண்டாக வைத்துக்கொண்டு அந்த ஆண்டிலிருந்த விலைவாசிக்கே அந்த திட்டத்தின் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை கணக்கிட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம். 

மேலும் நடப்பு நிதியாண்டின் ஒவ்வொரு ஆண்டிலும் உள்ள ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் எந்த அளவு உற்பத்தியை எட்ட வேண்டும் என்ற குறியீட்டையும் (Target or Estimate) நிர்ணயித்துக்கொள்வார்கள். இந்த அடிப்படையில் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation)ஒவ்வொரு ஆண்டும் தயாரித்து அளிக்கும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி பற்றிய அறிக்கையின் மாதிரி இது. இத்துடன் ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் அடுத்த மூன்று மாத காலத்தில் அடைய வேண்டிய இலக்கையும் நிர்ணயித்து அந்த கால இறுதியில் இலக்கை அடைந்தோமா இல்லையா என்ற ஆய்வையும் இந்த அமைச்சகம் நடத்துகிறது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் நாட்டின் பொருளாதார ஆய்வு (Economic Survey) அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்து வெளியிடுகிறது. 

நான் கொடுத்துள்ள மாதிரி அறிக்கை நாட்டின் மொத்த உற்பத்தியை உற்பத்தி முறையிலும் (Production Method) நாட்டின் மொத்த செலவு முறையிலும் (Expenditure Method) முறையிலும் கணக்கிட்டுள்ளதை பார்க்கலாம். இவ்விரண்டு அறிக்கைகளும் ஒரே மதிப்பைத்தான் காட்டியுள்ளன என்றாலும் இரண்டாம் அறிக்கையின் (Expenditure Method) பதினாறாவது இலக்கத்தில் (No.16) காட்டப்பட்டுள்ள வித்தியாசங்கள் (discrepancies) என்ற  தொகை இந்த இரண்டு முறைகள் மூலமாக கணக்கிடப்படும் இறுதி மதிப்பிலுள்ள (final figure) வேறுபாடு எனவும் கொள்ளலாம். 

இந்த அறிக்கையின் இறுதியில் 31 மற்றும் 32 வது இலக்கங்களில் காட்டப்பட்டிருக்கும் எண்களைப் பாருங்கள். 31ல் இந்தியாவின் மக்கள் தொகையும் 32ல் per capita income என்று நம் நாட்டிலுள்ள ஒரு நபரின் வருமானத்தையும் காட்டப்பட்டுள்ளது. 

எண் 32ல் காட்டப்பட்டுள்ள தொகைதான் மிக முக்கியமான தொகை. இதன் அடிப்படையில்தான் நம்முடைய நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மற்ற நாடுகளிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட வகை செய்கிறது. இதன் அடிப்படையில் ஐ.நா, உலக வங்கி போன்ற அகில உலக அமைப்புகள் உலகிலுள்ள நாடுகளை வரிசைப் படுத்துகின்றன. அதன் ஒரு மாதிரியையும் அளித்துள்ளேன். 

கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பின் அடிப்படையில் இந்தியா பத்தாவது இடத்திலுள்ளதை காண முடிகிறது. ஆனால் இது நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை மட்டுமே வைத்து கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது. நம்மையும் விட வளர்ந்த நாடுகளாக கருதப்படும் பல ஐரோப்பிய நாடுகளைவிடவும் நம்முடைய ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நம்முடைய நாட்டின் விஸ்தீரணமும் (Georgraphical Area)மக்கள் தொகையும் (Working Population)என்று கூறலாம். ஆனால் Per Capita Income அடிப்படையில் நம்முடைய நாடு நம்மை விடவும் சிறிய நாடுகள் பலவற்றிலும் இருந்து பின்தங்கியிருப்பதை காண முடிகிறது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பீட்டின் அளவுக்கு முக்கிய காரணமாக இருக்கும் நம்முடைய மக்கள்தொகையே இதற்கும் காரணமாக அமைந்துள்ளதுதான் வேதனை. இதே அளவு உற்பத்தியும் தற்போதுள்ள மக்கள் தொகையில் பாதியும் இருந்திருந்தால் நம்முடைய நாடு உலக அரங்கில் முதல் இடத்தில் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடந்த சுமார் பதினைந்து ஆண்டுகளாக நம்முடைய மக்கள் தொகை அதிகரிக்கும் விழுக்காடு (Percentage increase in population) குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு இனிவரும் இருபத்தைந்தாண்டுகளில் இதே நிலையிலோ அல்லது இதை விட குறைவான விழுக்காட்டிலோ மக்கள் தொகை கூடுமானால் 2035ம் ஆண்டு வாக்கில் நம்முடைய நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேற்கத்திய நாடுகள் பலவற்றை விடவும் உயர்ந்திருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம். ஆகவேதான் 2050ம் ஆண்டில் உலகின் மிக பலம் பொருந்திய நாடாக இந்தியா இருக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். 

சரி. கடந்த சில ஆண்டுகளாக நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP)யின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விடவும் குறைந்து வருகிறது என்று ஏன் கூறுகிறார்கள்?

இந்த நிலைக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள்தான் காரணம் என்கிறார்களே?

இவை சரிதானா?

என்னைக் கேட்டால் இப்போது கடைபிடித்துவரும் பொருளாதார கொள்கையை நரசிம்மராவ் அவர்கள் பிரதமராவதற்கு முன்பிருந்தே (அதாவது இந்திரா காந்தி அம்மையார் ஆண்ட காலத்திலிருந்து) கடைபிடித்து வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பேன். 

எதிலும் தன்னிறைவு எல்லாவற்றிலும் தன்னிறைவு என்ற சித்தாந்தம், என்னால் முடியாதது எதுவும் இல்லை என்கிற மனப்போக்கு, ஒரு நூறு ஆண்டுக்கும் மேலாக ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டுக் கிடந்து அனுபவித்த துன்பங்கள் ஆகியவைதான்  உலகமயமாக்கல் (Globalisation) கொள்கையை நாம் எதிர்க்க காரணங்கள். Iron Curtain என வர்ணிக்கப்பட்டு வந்த ரஷ்யா போன்ற நாடுகளும் பொதுவுடமை கொள்கையை விடாமல் கட்டிக்காத்துவந்த சீனா போன்ற கம்யூனிச நாடுகளுமே உலகமயமாக்கலை இருகரம் விரித்து வரவேற்கிற சூழலிலும் இன்றும் இந்த கொள்கையை எதிர்த்துவரும் சிலரைக் கண்டால் எரிச்சலாகத்தான் வருகிறது. 

நம்முடைய நாடு இன்று கணினி துறையில் அதீத வளர்ச்சியடைந்திருந்தாலும் இன்றும் நம்முடைய நாட்டு நிறுவனங்கள் ஒரு கணினி சேவை நிறுவனங்களாகவே (Services) கருதப்பட்டு வருகின்றனவே தவிர மைக்ரோ சாஃப்ட் போலவோ அல்லது ஆப்பிள் போலவோ ஒரு உற்பத்தி (Product Company) நிறுவனமாக கருதப்படாததற்கு முக்கிய காரணம் தொழில்துறையில் நம்முடைய நாடு இன்னும் முன்னேறாததுதான். 

ஒரு நாட்டின் தொழில்துறை தொடர்ந்து முன்னேறுவதற்கு தொடர் முதலீடுகள் அவசியம் தேவை. நம்முடைய நாட்டிலுள்ள தனிநபர் சேமிப்பில் ஏறக்குறைய எழுபது விழுக்காடு முதலீடாக மாறுவதில்லை. அப்படியே மாறினாலும் அவற்றில் பெரும் பங்கு தங்கம் மற்றும் அசையா சொத்துக்களில்தான் முதலீடு செய்யப்படுவதை பார்க்கிறோம். 

இவையும் முதலீடுகள்தான் என்றாலும் அதனால் நாட்டின் உற்பத்தி பெருகப்போவதில்லை. ஏனெனில் நம்முடைய சேமிப்பை பெருமளவில் விழுங்கும் தங்கம் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல். 

நான் ஏற்கனவே கூறியுள்ளபடி நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிக்கு செலவிடப்படும் தொகை நாட்டின் GDP கணக்கிலிருந்து குறைக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் GDP என்ற மூன்றெழுத்தில் நடுவிலுள்ள 'D' அதாவது Domestic என்ற ஆங்கில வார்த்தை உள்நாட்டை குறிக்கிறது. அதாவது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலேயே பயன்பாட்டுக்கு வரும் பொருட்களின் மதிப்பு மட்டுமே இந்த கணக்கீட்டில் உட்படுத்தப்படுகிறது. ஆகவேதான் தங்கத்தில் செய்யும் முதலீடுகளை தயவு செய்து குறைத்துக்கொள்ளுங்கள் என்கிறது மத்திய நிதியமைச்சகம். 

அப்படியானால் சீனா இந்தியாவை விடவும் அதிக தங்கத்தை இறக்குமதி செய்வதாக கூறுகிறார்களே என்கின்றனர் சில அறிவுஜீவிகள். உண்மையில் சீனாவில் தனிநபர் எவரும் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு அரசாங்கம்தான் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. ஏனாம்? தங்களுடைய நாட்டின் சொத்தை மற்ற நாடுகளைப் போன்று அமெரிக்க டாலர்களில் வைக்க அவர்களுக்கு விருப்பமில்லையாம். ஆகவேதான் நாட்டின் கையிருப்பின் பெரும் பகுதியை தங்கத்தில் முடக்கி வைக்கின்றனர். மேலும் அமெரிக்க வங்கிகளில் வைத்தால் நாளை ஏதாவது ஒரு காரணத்திற்காக அவற்றை அமெரிக்க அரசு முடக்கிவிட்டால்?

இதுதான் தங்க முதலீட்டில் நமக்கும் சீனாவுக்கும் உள்ள வித்தியாசம்.

சரி அடுத்தபடியாக நம்முடைய GDPஐ எப்படியெல்லாம் உயர்த்த முடியும் என்று பார்ப்போம்.

நம்முடைய நாட்டின் மொத்த உற்பத்தி (GDP) குறையும்போதெல்லாம் அதை தூக்கி நிறுத்துவதற்கு அரசு தன்னுடைய செலவை (Expenditure) கூட்ட வேண்டும். ஏனெனில் இந்த கணக்கீட்டில் தனிநபர் மற்றும் கார்ப்பரேட் எனப்படும் நிறுவனங்களின் செலவு மற்றும் முதலீடுகள் (Savings and Investment) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு வாய்ப்புகள் குறைவு. பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் சூழலில் தனிநபர் வருமானமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. பிறகு எப்படி சேமிப்பது? தனிநபர் சேமிப்பு குறைந்து போனால் அவர்களுடைய வாங்கும் திறனும் (purchasing power) குறைகிறது. வாங்கும் திறன் குறைந்தால் உற்பத்தியாகும் பொருட்கள் சந்தையில் தேங்கிவிடுகின்றன. சந்தையிலேயே பொருட்கள் விற்காமல் இருக்கும் சூழலில் அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுடைய விற்பனை குறைந்துவிடுகிறது... விற்பனைக் குறைவு அவர்களுடைய வருமானத்தை குறைக்கிறது... குறைந்த வருமானம் அவர்களுடய சேமிப்பையும் அதன் விளைவாக முதலீட்டையும் பாதிக்கிறது..... இது ஒரு சுழற்சி  (cycle) இதில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவதென்பது அத்தனை எளிதல்ல.

இந்த சூழலில்தான் அரசு தலையிட்டு தன்னுடைய செலவை (Public Spending) அதிகரிக்க வேண்டும். அதுவும் கூட ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். இந்த சூழலில்தான் அன்னிய நாட்டின் முதலீடுகள் அவசியமாகின்றன. இதைத்தான் நம்மால் செய்ய முடியாதவற்றை மற்றவர்களைக் கொண்டு செய்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். நம்மால் முடியாதது எதுவுமில்லை என்கிற வாதம் எவ்வளவு வெற்று வாதம் (empty argument) என்பது புரிகிறதா?

நம்முடைய நிறுவனங்களாலும் அரசாலும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத தொகையை முதலீடாக நம்முடைய நாட்டில் செய்ய வருபவர்கள் ஏதோ நம்முடைய நாட்டு பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற தேசப்பற்றுடன் வருவதில்லை. எங்கு விதைத்தால் நல்ல பலன் கிடைக்குமோ அங்குதானே விவசாயி விதைக்கிறான்? அதுபோன்றுதான் அன்னிய முதலீடும். அன்னிய நிறுவனங்கள் இங்கு வருவதற்கான காரணத்தை ஆராயாமல் அதன் மூலம் கிடைக்கின்ற, நம்மால் செய்ய முடியாத, முதலீட்டால் நம்முடைய நாட்டின் தொழில் வளமும் உற்பத்தியும் பெருகுகிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். 

அன்னிய முதலீடு அறவே இல்லாமல் நம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை. இன்று நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தொழில்துறையின் பங்கு 25 விழுக்காடு மட்டுமே தானாம். எட்டு விழுக்காடு விவசாயத்துறையும் மீதமுள்ள 67 விழுக்காடு சேவைத் துறையும் அளிக்கிறதாம். இந்த சேவைத் துறையிலும் பெரும்பங்கு அளிப்பது சமீப ஆண்டுகளில் வளர்ந்துவரும் கணினி மற்றும் தொழில்நுட்ப துறைகளாம். இந்த நிலை மாற வேண்டும். நாட்டின் உற்பத்தி திறன் உயர வேண்டுமென்றால் நாட்டின் முதலீடும் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். இன்று பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் (Developed Countries) எனக் கருதப்படும் அனைத்து நாடுகளுமே தொழில்துறையிலும் வளர்ந்த நாடுகளே (Industrialised Countries). இன்று சீனா அவர்களுடைய கொள்கைகளுக்காக உலகளவில் வெறுக்கப்பட்டாலும் அவர்களுடைய பொருளாதார வலிமை அவர்களைக் கண்டு அச்சமடைய வைத்துள்ளது.  

உலக நாடுகளின் தர வரிசையில் இந்தியா உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் அளவும் மதிப்பும் உயர்ந்துக்கொண்டே செல்ல வேண்டும். நாட்டின் மக்கள்தொகையும் கட்டுக்குள் நிற்க வேண்டும். 

மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும் இப்போதுள்ள பொருளாதார கொள்கைகளிலிருந்து அடியோடு மாறிவிட வாய்ப்பே இல்லை. தேர்தல் நேரத்தில் என்ன சொன்னாலும் இதுதான் இன்றைய நிதர்சனம். இன்று மத்தியில் கொள்கைகளை வகுப்பது அரசியல்வாதிகள் அல்ல என்பதும் உண்மை. நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்திய மற்றும் அன்னிய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களே....

இந்த தொடரில் இனியும் பல பொருளாதார பதிவுகளை இடலாம் என்று நினைத்துள்ளேன்..... ஒவ்வொரு பதிவும் எழுதி முடிக்க பல இணையதளங்களிலுள்ளவைகளை தேடிப்பிடிக்க வேண்டியுள்ளதால் பல நாட்கள் தேவைப்படுகின்றன. ஆகவே அடிக்கடி இல்லாவிடினும் அவ்வப்போது எழுதுவேன்...

*********

22 கருத்துகள்:


  1. //நம்முடைய நாடு இன்று கணினி துறையில் அதீத வளர்ச்சியடைந்திருந்தாலும் இன்றும் நம்முடைய நாட்டு நிறுவனங்கள் ஒரு கணினி சேவை நிறுவனங்களாகவே (Services) கருதப்பட்டு வருகின்றனவே தவிர மைக்ரோ சாஃப்ட் போலவோ அல்லது ஆப்பிள் போலவோ ஒரு உற்பத்தி (Product Company) நிறுவனமாக கருதப்படாததற்கு முக்கிய காரணம் தொழில்துறையில் நம்முடைய நாடு இன்னும் முன்னேறாததுதான்.//

    சரியான கணிப்பீடு.

    நம் நாட்டில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க வேண்டியதன் காரணத்தை சொல்லி ‘நம்மால் முடியாதது எதுவுமில்லை என்கிற வாதம் எவ்வளவு வெற்று வாதம் (empty argument) என்பது புரிகிறதா?’ என அழகாக கேட்டிருக்கிறீர்கள்.

    உங்கள் பதிவை படித்ததும் ஒரு பொருளாதார பேராசிரியர் தமிழில் வகுப்பு நடத்தியது போல் இருந்தது. எளிய எடுத்துக்காட்டுடன், பழகு தமிழில் விளக்கியமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    அடிக்கடி இல்லாவிடினும் அவ்வப்போது எழுதுவேன்...என்று சொல்லியுள்ளீர்கள். அடிக்கடி எழுதுங்கள்.அநேகம் பேருக்கு இதுவரை புரியாதது புரியும். தெரியாதது தெரியும்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே..
    GDP கணக்கிடும் முறையைத் தெள்ளத் தெளிவாக வகுப்பு எடுத்த ஒரு உணர்வு ஏற்படுகிறது. பொருளியல் தகவல்களை அனைவருக்கும் புரியும் படி எளிமையாக விளக்கிய விதம் அருமை. தொடர்ந்து இது போன்ற தகவல்களைத் தாருங்கள். பகிர்வுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  3. தெளிவான விளக்கமளித்துள்ளீர்கள்.
    இந்தியா பத்தாவது,9 இடத்தை பொருளாதார அடிப்படையில் பிடித்த இடத்தையிட்டு மகிழும் போது மக்களின் வாழ்க்கை தரம் என்று வரும் போது இந்திய மக்களின் கட்டுபாடற்ற ஜனத்தொகை பெருக்கம் காரணமாக கீழ் நிலமைக்கு இந்தியா போவது ரொம்ப கவலையானது.
    இதனாலே தான் நாம் மலேசியா போனாலும், இலங்கை போனாலும் வாயை பிளந்து பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. நுட்பமான விளக்கங்கள்.இன்னும் ஓரிருமுறை படிக்கவேண்டும். அரசின் பொருளாதாரக் கொள்கை சரி இல்லை என்று சொல்கிறார்களே தவிர எது சரியானது என்பதை கணிக்க முடிவதில்லை. காரணிகள் சங்கிழ்த் தொடர்பு உடையவாகா உள்ளன. இது போன்ற பதிவுகள் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஜோசப் அவர்களே,

    உப்பு சப்பில்லாமல் முடிச்சுட்டிங்களே அவ்வ்!

    # // இருகரம் விரித்து வரவேற்கிற சூழலிலும் இன்றும் இந்த கொள்கையை எதிர்த்துவரும் சிலரைக் கண்டால் எரிச்சலாகத்தான் வருகிறது. //

    வங்களிகளில் கணியை கொண்டு வரும் போது எதிர்த்தது வங்கியாளர்களே, தனியார் வங்கிகளை அனுமதித்தப்போதும் எதிர்த்தது அரசு வங்கியாளர்களே , இப்போ இப்படி சொல்லுறிங்களே அவ்வ்!

    # //இந்த சூழலில்தான் அரசு தலையிட்டு தன்னுடைய செலவை (Public Spending) அதிகரிக்க வேண்டும். அதுவும் கூட ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். இந்த சூழலில்தான் அன்னிய நாட்டின் முதலீடுகள் அவசியமாகின்றன. இதைத்தான் நம்மால் செய்ய முடியாதவற்றை மற்றவர்களைக் கொண்டு செய்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். நம்மால் முடியாதது எதுவுமில்லை என்கிற வாதம் எவ்வளவு வெற்று வாதம் (empty argument) என்பது புரிகிறதா?//

    இதுவும் தவறானது.

    அந்நிய முதலீடுகளால் உருவாகும் உற்பத்தியால் , ஜிடிபி காகிதத்தில் மட்டும் ஏறும் ,ஆனால் அதன் "பணமதிப்பு" இந்திய பொருளாதாரத்துக்கு உதவாது.

    நீங்கள் கவனக்குறைவால் GNP(GNI) கணக்கீட்டை விட்டிங்களோ அல்லது , வேண்டும்னே தவிர்த்தீங்களோ தெரியலை, நம்ம ஜிடிபி மதிப்பை விட GNP(GNI) மதிப்பு குறைவாக இருக்கும். காரணம் அந்நிய முதலீட்டில் இயங்கும் நிறுவனங்கள் ஆண்டு தோறும் தங்கள் லாபத்தினை அயலாட்டுக்கு எடுத்து போயிடும்.

    உதாரணமாக பெப்சி நிறுவனம் ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர் உற்பத்தி & விற்பனை எனக்காட்டினால் அது நம்ம நாட்டு ஜிடிபியில்" மதிப்பாக" ஏறிடும், ஆனால் அமெரிக்காவுக்கு 500 மில்லியன் டாலரை அனுப்பிடும், எனவே நம்ம GNP(GNI) இல் கழிச்சிடுவாங்க, அமெரிக்க GNP(GNI) இல் கூட்டிப்பாங்க, அது அமெரிக்காவின் வருமானம்.

    பெப்சி போல இந்தியா முழுக்க ஏகப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் , உங்களை மாதிரி அந்நிய மூலதனம் 'அமுதசுரபி"னு நம்பிக்கிட்டு இருப்பவர்கள் வகுக்கும் பொருளாதார கொள்கையால் நம்ம நாட்டு ரீசோர்ஸ் தான் வெளியில் போகுது,அதனால் தான் நாம என்ன முக்கினாலும் "வல்லரசாக" முடிவதில்லை.

    இப்பவாச்சும் புரியுதா அந்நிய மூலத்தனத்தால் பெருசா நன்மைலாம் இல்லைனு :-))

    ஜிடிபி யில் உள்நாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் ,வெளிநாட்டு இந்திய உற்பத்தியாளர்கள் மூலம் நடைப்பெறும் பணப்பரிமாற்றத்தினை கழித்தால் GNP(GNI) , அது தான் ஒரு நாட்டின் கையில் இருக்கும் பணத்துக்கு சமம்.

    GNP(GNI) மதிப்புக்கு தான் இந்தியாவில் பணப்புழக்கம்,தொழில் வளர்ச்சி சாத்தியம்,ஜிடிபி மதிப்புக்கு அல்ல.

    அமெரிக்காலாம் GNP(GNI) மெத்தடுக்கு மாறியாச்சு என்றால் முட்டாள் தனமாக இல்லை,நாம GNP(GNI) முறை சரியா வராதுனு ஒரு சப்பையாக்காரணம் சொல்லிக்கிட்டு ஜிடிபி முறையில் இருக்க காரணம் , நம்மை நாமே ஏமாத்திக்கவே அவ்வ்.

    # நீங்க பதிவில சொல்லுறத விட நான் தான் அதிகமா சொல்ல வேண்டியிருக்கும் போல இருக்கே அவ்வ்!

    பதிலளிநீக்கு
  6. "there are three degrees of lies;
    lies,damned lies and statistics"
    (MARK TWAIN)

    பதிலளிநீக்கு
  7. "there are three degrees of lies;
    lies,damned lies and statistics"
    (MARK TWAIN)

    பதிலளிநீக்கு

  8. வே.நடனசபாபதி said...

    அடிக்கடி இல்லாவிடினும் அவ்வப்போது எழுதுவேன்...என்று சொல்லியுள்ளீர்கள். அடிக்கடி எழுதுங்கள்.அநேகம் பேருக்கு இதுவரை புரியாதது புரியும். தெரியாதது தெரியும். //

    முயற்சி செய்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  9. அ. பாண்டியன் said...
    வணக்கம் சகோதரரே..
    GDP கணக்கிடும் முறையைத் தெள்ளத் தெளிவாக வகுப்பு எடுத்த ஒரு உணர்வு ஏற்படுகிறது. பொருளியல் தகவல்களை அனைவருக்கும் புரியும் படி எளிமையாக விளக்கிய விதம் அருமை. தொடர்ந்து இது போன்ற தகவல்களைத் தாருங்கள். பகிர்வுக்கு நன்றிகள்..//

    மிக்க நன்றி சகோதரரே.

    பதிலளிநீக்கு

  10. வேகநரி said...
    தெளிவான விளக்கமளித்துள்ளீர்கள்.
    இந்தியா பத்தாவது,9 இடத்தை பொருளாதார அடிப்படையில் பிடித்த இடத்தையிட்டு மகிழும் போது மக்களின் வாழ்க்கை தரம் என்று வரும் போது இந்திய மக்களின் கட்டுபாடற்ற ஜனத்தொகை பெருக்கம் காரணமாக கீழ் நிலமைக்கு இந்தியா போவது ரொம்ப கவலையானது.
    இதனாலே தான் நாம் மலேசியா போனாலும், இலங்கை போனாலும் வாயை பிளந்து பார்க்கிறோம்.//

    உண்மைதான்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு

  11. 6:54 PM
    டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
    இது போன்ற பதிவுகள் எதிர்பார்க்கிறேன்.//

    முயற்சி செய்கிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு

  12. வவ்வால் said...
    ஜோசப் அவர்களே,

    உப்பு சப்பில்லாமல் முடிச்சுட்டிங்களே அவ்வ்!//

    காரசாரமா ஏதாச்சும் எதிர்பார்த்தீங்களா? Disappoint பண்ணிட்டேன் போலருக்கு :/)


    வங்களிகளில் கணியை கொண்டு வரும் போது எதிர்த்தது வங்கியாளர்களே, தனியார் வங்கிகளை அனுமதித்தப்போதும் எதிர்த்தது அரசு வங்கியாளர்களே , இப்போ இப்படி சொல்லுறிங்களே அவ்வ்!//

    எப்பவும் இப்படி பொதுவா பழிபோடறீங்களே? தனியார் வங்கிகள் கணினிமயமாக்கலை எதிர்த்ததில்லை. அரசு வங்கிகளிலும் கூட அதை எதிர்த்து கூப்பாடுபோட்டது தொழிற்சங்கங்கள்தான். கணினி ஆப்பரேட்டர் அலவுன்ஸ் அறிவிக்கப்பட்டதும் அதுவும் அடங்கிப் போனது.

    # //இந்த சூழலில்தான் அரசு தலையிட்டு தன்னுடைய செலவை (Public Spending) அதிகரிக்க வேண்டும். அதுவும் கூட ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். இந்த சூழலில்தான் அன்னிய நாட்டின் முதலீடுகள் அவசியமாகின்றன. இதைத்தான் நம்மால் செய்ய முடியாதவற்றை மற்றவர்களைக் கொண்டு செய்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். நம்மால் முடியாதது எதுவுமில்லை என்கிற வாதம் எவ்வளவு வெற்று வாதம் (empty argument) என்பது புரிகிறதா?//

    இதுவும் தவறானது.

    அந்நிய முதலீடுகளால் உருவாகும் உற்பத்தியால் , ஜிடிபி காகிதத்தில் மட்டும் ஏறும் ,ஆனால் அதன் "பணமதிப்பு" இந்திய பொருளாதாரத்துக்கு உதவாது.//

    பண மதிப்பு ஏறவும் குறையவும் அன்னிய முதலீடு மட்டுமே காரணமல்ல. இம்மாதிரியான கற்பனை காரணங்களை சொல்லியே பிழைப்பு நடத்துவது எதிர்கட்சிகள் செய்யும் வேலை. அவர்களே ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தான் செய்வார்கள்.

    நீங்கள் கவனக்குறைவால் GNP(GNI) கணக்கீட்டை விட்டிங்களோ அல்லது , வேண்டும்னே தவிர்த்தீங்களோ தெரியலை, //

    இந்த பதிவு GDP ன்னா என்னங்கறதைப் பற்றியது. GNI பற்றியும் எழுதுவேன். GDP, GNI இரண்டிற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும் எழுதுவேன். அப்போது உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

    இப்பவாச்சும் புரியுதா அந்நிய மூலத்தனத்தால் பெருசா நன்மைலாம் இல்லைனு :-))//

    அன்னிய நிறுவனங்கள் இங்கு வந்து தொழில் துவங்குவது வேறு, நம்முடைய பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது வேறு. நான் சொல்வது இங்குள்ள இந்திய நிறுவனங்களின் பங்குகளில் அன்னிய முதலீடு தேவை என்று சொல்வது. இரண்டையும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ குழப்பாதீர்கள்.

    ஜிடிபி யில் உள்நாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் ,வெளிநாட்டு இந்திய உற்பத்தியாளர்கள் மூலம் நடைப்பெறும் பணப்பரிமாற்றத்தினை கழித்தால் GNP(GNI) , அது தான் ஒரு நாட்டின் கையில் இருக்கும் பணத்துக்கு சமம்.

    GNP(GNI) மதிப்புக்கு தான் இந்தியாவில் பணப்புழக்கம்,தொழில் வளர்ச்சி சாத்தியம்,ஜிடிபி மதிப்புக்கு அல்ல.

    அமெரிக்காலாம் GNP(GNI) மெத்தடுக்கு மாறியாச்சு என்றால் முட்டாள் தனமாக இல்லை,நாம GNP(GNI) முறை சரியா வராதுனு ஒரு சப்பையாக்காரணம் சொல்லிக்கிட்டு ஜிடிபி முறையில் இருக்க காரணம் , நம்மை நாமே ஏமாத்திக்கவே அவ்வ்.//

    # நீங்க பதிவில சொல்லுறத விட நான் தான் அதிகமா சொல்ல வேண்டியிருக்கும் போல இருக்கே அவ்வ்!//

    அத செய்யிங்க. நீங்க jack of all arts master of noneகறத மறுபடியும் நிருபிச்சிட்டீங்க.

    பதிலளிநீக்கு

  13. 7:50 PM
    siva gnanamji(#18100882083107547329) said...
    "there are three degrees of lies;
    lies,damned lies and statistics"
    (MARK TWAIN)//

    இப்படிப்பட்ட புள்ளிவிவரங்கள வச்சித்தாங்க உலக வங்கி நாடுகளின் பொருளாதார தரத்தை கணக்கிடுது. இதையே பொய்னு சொன்னா?

    பதிலளிநீக்கு
  14. ஜோசப் அவர்களே,

    காரசாரமா எதிர்ப்பார்க்கலை,அதுவும் உங்கக்கிட்டேவா அவ்வ்!

    நான் எதிர்ப்பார்த்தது ,தெளிவான,விரிவான விளக்கத்தையே.

    #//எப்பவும் இப்படி பொதுவா பழிபோடறீங்களே? தனியார் வங்கிகள் கணினிமயமாக்கலை எதிர்த்ததில்லை. அரசு வங்கிகளிலும் கூட அதை எதிர்த்து கூப்பாடுபோட்டது தொழிற்சங்கங்கள்தான். கணினி ஆப்பரேட்டர் அலவுன்ஸ் அறிவிக்கப்பட்டதும் அதுவும் அடங்கிப் போனது. //

    எதுக்கு இப்படி அவசரப்படுறீங்க?

    தனியார் வங்கிகள் ஆரம்பிக்க அரசு வங்கிப்பணியாளர்கள்(தொழிற்சங்கம்)எதிர்த்தை சொன்னேன், தனியார் வங்கிகள் கணினியை எதிர்த்தார்கள் என சொல்லவில்லை.

    அப்புறம் வங்கி தொழிற்சங்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் வங்கிப்பணியாளர்கள் என நினைத்து சொல்லிட்டேன், அவங்களாம் வேற யாரோவா?

    சம்பள உயர்வு வேண்டும்னா அந்த வங்கி பணியாளர் தொழிற்சங்கம் தானே போராடுது அவ்வ்!

    //பண மதிப்பு ஏறவும் குறையவும் அன்னிய முதலீடு மட்டுமே காரணமல்ல. //

    அய்யா நான் சொன்னது எக்ஸ்சேஞ் ரேட் பணமதிப்பை அல்ல 'ஜிடிபி யின் பணமதிப்பு" அதாவது ஜிடிபியியோட கரன்சி வேல்யு.

    அன்னிய முதலீட்டால் ஏற்படும் பன்னாட்டு தொழிற்சாலைகளால் உயர்த்திக்காட்டப்படும் "ஜிடிபி"யின் கரன்சி வேல்யு நம்ம நாட்டு பொருளாதாரத்துக்கு பயன்ப்படாது.அவை லாபத்தினை அவங்கவங்க நாட்டுக்கு எடுத்துப்போயிடுவாங்க.

    //நான் சொல்வது இங்குள்ள இந்திய நிறுவனங்களின் பங்குகளில் அன்னிய முதலீடு தேவை என்று சொல்வது. இரண்டையும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ குழப்பாதீர்கள். //

    குழப்பம் உங்களுக்கு தான், நான் எங்கே "பங்கு சந்தை" முதலீட்டை சொன்னேன். பெப்சி நிறுவன உதாரணம் சொல்லியுமா , அந்நிய முதலீட்டால் துவக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களை தான் சொன்னேன் என்பது புரியாம போச்சு அவ்வ்!

    இந்தியாவில் ஏற்கனவே ஏகப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் கார் முதல் கடலை மாவு வரையில் வித்துக்கிட்டு இருக்காங்க, அவங்க லாபத்தினை எல்லாம் இங்கேயே விட்டுப்போகவா உழைக்கிறாங்க ,எனக்கு தெரியாம போச்சே அவ்வ்!

    #//நீங்க jack of all arts master of noneகறத மறுபடியும் நிருபிச்சிட்டீங்க.//

    இந்த குறிப்பு எதுக்குனு புரியலை?

    நீங்க என்ன நிறுபிச்சிங்கனு , பதிவை படிக்கிறவங்களே முடிவு செய்வாங்க, ஆனால் பெரும்பாலும் இங்கே என்னப்பேசப்படுதுனே புரியாதவங்களா இருக்காங்க அவ்வ்.

    சிவஞானம்ஜிக்கு தான் ஜிடிபி கான்செப்ட் இன் உண்மையான அடிப்படை புரிஞ்சிருக்குனு நினைக்கிறேன் ,சிம்பிளா "மார்க் டுவைண்" மேற்கோள் காட்டிட்டு எஸ்கேப் ஆகிட்டார் :-))

    # மன்னு மோகன், ப.சி போன்றோர் சொல்லும் பொருளாதாரக்கொள்கைகளின் மீது பற்றுக்கொண்டு அதனடிப்படையில் தாங்கள் பேசுவதை கணிக்க/கவனிக்க தவறிவிட்டேன் அவ்வ்!

    நீங்க சொல்றது தான் சரி ...இப்படியே செய்தால் இந்தியாவின் ஜிடிபி வளர்ந்து வல்லரசாகிடும் :-))

    பதிலளிநீக்கு
  15. வவ்வால் said...

    குழப்பம் உங்களுக்கு தான், நான் எங்கே "பங்கு சந்தை" முதலீட்டை சொன்னேன். பெப்சி நிறுவன உதாரணம் சொல்லியுமா , அந்நிய முதலீட்டால் துவக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களை தான் சொன்னேன் என்பது புரியாம போச்சு அவ்வ்??//

    இப்போதும் குழப்புகிறீர்கள். நீங்கள் பங்கு சந்தை முதலீட்டை சொன்னதாக நான் சொல்லவில்லை. நாந்தான் அன்னிய முதலீடு பங்கு சந்தையில் வேண்டும் என்று மட்டும்தான் சொன்னேன் என்றேன். பெப்சி போன்ற நிறுவனங்களைப் பற்றியும் சொல்லியுமா உங்களுக்கு புரியவில்லை என்று நீங்கள் கேட்பது வேடிக்கையாக உள்ளது.

    இந்தியாவில் ஏற்கனவே ஏகப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் கார் முதல் கடலை மாவு வரையில் வித்துக்கிட்டு இருக்காங்க, அவங்க லாபத்தினை எல்லாம் இங்கேயே விட்டுப்போகவா உழைக்கிறாங்க ,எனக்கு தெரியாம போச்சே அவ்வ்!//

    நான் அப்படி சொல்ல வரவில்லை. சொல்லவும் மாட்டேன். அன்னிய முதலீடு வரவேண்டும் என்பதன் முக்கிய நோக்கமே நம்மால் அந்த அளவுக்கு முதலீடு செய்ய முடியவில்லை என்பதால்தான். மேலும் அன்னிய முதலீட்டை மட்டுமல்லாமல் அன்னிய பன்னாட்டு நிறுவனங்களுடன் நம்முடைய நிறுவனங்கள் கூட்டு வைத்துக்கொள்வதன் மூலம் நம்முடைய நாட்டில் இல்லாத தொழில் நுட்பங்களும் வரும், உற்பத்தியும் பெருகும் என்பதாலும்தான். முதலீடு அதிகரித்தால்தான் தொழில் உற்பத்தி பெருகும். நம்முடைய நாடு தொழில்துறையில் வளர்ச்சியடந்தால்தான் உண்மையிலேயே வளர்ந்த நாடு என்ற நிலையை அடைய முடியும். இதற்கெல்லாம் தேவை முதலீடு. அதற்குத் தேவையான சேமிப்பு நம்மிடம் இல்லையென்றால் பிறரிடமிருந்து அதை கடனாக பெறுவதில் எவ்வித தவறும் இல்லை. அதுபோன்றதுதான் அன்னிய முதலீடுகளும். அதற்காக அன்னிய பன்னாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது பொருளாகாது.

    நீங்க jack of all arts master of noneகறத மறுபடியும் நிருபிச்சிட்டீங்க.//

    இந்த குறிப்பு எதுக்குனு புரியலை? நீங்க என்ன நிறுபிச்சிங்கனு , பதிவை படிக்கிறவங்களே முடிவு செய்வாங்க, ஆனால் பெரும்பாலும் இங்கே என்னப்பேசப்படுதுனே புரியாதவங்களா இருக்காங்க அவ்வ்.//

    இந்த மனநிலையை குறித்துத்தான் அப்படிச் சொன்னேன். எல்லாராலும் எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொள்ள முடியாதுங்க. நானும் பெரிய பொருளாத நிபுணர் இல்லை. நான் எழுதிய பதிவு ஒரு பொருளாதார ஆய்வுக் கட்டுரையும் இல்லை. வங்கியில் சுமார் முப்பதாண்டு காலம் பணியாற்றிய அனுபவம் ஒர் நிதியறிக்கையை எப்படியெல்லம் அனலைஸ் செய்ய முடியும் என்று கற்று தந்துள்ளது. பொருளாதாரத்தை ஓரளவுக்கு புரிந்துக்கொள்ள கற்று தந்துள்ளது. ஆனாலும் இத்தகைய பதிவுகளை எழுதுவதற்கு முன்பு விக்கிப்பீடியா, உலக வங்கி என பல இணையதளங்களை பார்க்கிறேன். அத்துடன் பல பொருளாதார கட்டுரைகளையும் வாசிக்கிறேன். இவற்றிலெல்லாம் கிடைக்கும் கருத்துக்களை கிரகித்துக்கொண்டு என்னுடைய பாணியில் அனைவரும் புரிந்துக்கொள்ளும் அளவுக்கு எளிமையான தமிழில் எழுத முயற்சி செய்கிறேன். இது என்னுடைய பொழுதுபோக்கு. மாறாக நான் ஒரு பொருளாதார மேதை என்பதை பிறருக்கு காட்டிக்கொள்வதற்காக இல்லை.

    நீங்கள் ஒருவேளை பொருளாதார நிபுணராக இருக்கலாம். நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள், எந்த துறையில் பணியாற்றுகிறீர்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் உலகளவில் ஒரு பொருளாதார நிபுணர் என்று பெயரெடுத்த மன்மோகன் சிங் மற்றும் பல ஆண்டுகளாக நாட்டின் நிதியமைச்சராக பணியாற்றியுள்ள ப.சி அவர்களும் இணைந்து எடுக்கும் பல பொருளாதார முடிவுகள் தவறு என்று நீங்கள் வாதாடுவதையும் தமிழ் பதிவுலகிலுள்ள பலரும் 'இங்கே என்ன பேசப்படுதுன்னே புரியாதவங்களா இருக்காங்க' என்று நீங்கள் கூறுவதையும் பார்க்கும்போது உங்களையே ஏன் நாட்டின் அடுத்த நிதியமைச்சராக நியமித்துவிடக்கூடாது என்றும் கேட்க தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  16. வவ்வால் Said


    சிவஞானம்ஜிக்கு தான் ஜிடிபி கான்செப்ட் இன் உண்மையான அடிப்படை புரிஞ்சிருக்குனு நினைக்கிறேன் ,சிம்பிளா "மார்க் டுவைண்" மேற்கோள் காட்டிட்டு எஸ்கேப் ஆகிட்டார் :-))//

    அவர் புள்ளியியலைப் பற்றி கூறியதில் தவறேதும் இல்லை. ஏனெனில் sephology என்பதைப் போலவே இதுவும் ஒருவகையில் ஆரூடம் மாதிரிதான். எந்த காலத்திலும் புள்ளிவிவரங்கள் முழுக்க முழுக்க உண்மையைப் பேசுவதில்லை. அது இங்கு மட்டுமில்லை உலகளவிலும் இதே நிலைதான். ஆனாலும் அத்தகைய புள்ளிவிவரங்களை மையமாக கொண்டுதான் ஐ.நா மற்றும் உலக வங்கிகள் ஒரு நாட்டின் பொருளாதார நிலையை கணிக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

    # மன்னு மோகன், ப.சி போன்றோர் சொல்லும் பொருளாதாரக்கொள்கைகளின் மீது பற்றுக்கொண்டு அதனடிப்படையில் தாங்கள் பேசுவதை கணிக்க/கவனிக்க தவறிவிட்டேன் அவ்வ்!

    நீங்க சொல்றது தான் சரி ...இப்படியே செய்தால் இந்தியாவின் ஜிடிபி வளர்ந்து வல்லரசாகிடும் :-))//

    உங்களுடைய கருத்து என்னுடன் ஒத்துப்போக வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் அதை நீங்கள் முன்வைக்கும் முறைதான் கேள்விக்குறியதாக உள்ளது. உங்களுடைய எழுத்துக்களுக்கிடையில் இழையோடும் நக்கலும் நையாண்டியும் ஒவ்வொரு ஸ்டேட்மென்ட்டுக்கு இறுதியிலும் 'அவ்வ்' என்று வடிவேலு பாணியில் சொல்லும் முறையும்............ இதற்கு மேலும் இந்த வாதத்தை வளர்ப்பதில் அர்த்தமில்லை என்பதை எனக்கு உணர்த்துகிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க ஜி!

    I
    No no I am not disappointed . I'd go on. Thanks for your comment .

    பதிலளிநீக்கு
  18. அருமையாக விளக்கியுள்ளீர்கள். இன்னும் இது போன்ற கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.

    Your intentions are honourable. If someone wants elaborate more, I believe no one is going to stop them. Please keep writing. Thanks.

    பதிலளிநீக்கு

  19. Packirisamy N said...
    அருமையாக விளக்கியுள்ளீர்கள். இன்னும் இது போன்ற கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.

    Your intentions are honourable. If someone wants elaborate more, I believe no one is going to stop them. Please keep writing. Thanks.//

    I never expect that everyone should accept my view. Hence I always respect the views of others. But when such views are not presented properly it is quite natural to get disappointed. But such things happen in life. I've faced similar situations in the past. So, I don't dwell on that for long. I brush it aside and move on.

    Thanks for your support and the comment.

    பதிலளிநீக்கு
  20. மிகச்சிறந்த பயனுள்ள பதிவு.. உங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாமல் படிக்க வேண்டும்..

    ==========

    வணக்கம்...

    நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

    அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

    சரியா...?

    உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

    அப்போ தொடர்ந்து படிங்க...

    ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

    பதிலளிநீக்கு
  21. uppudu said...
    மிகச்சிறந்த பயனுள்ள பதிவு.. உங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாமல் படிக்க வேண்டும்.. //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

    அப்போ தொடர்ந்து படிங்க...//

    நிச்சயம் படிக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு