15 November 2013

காமன்வெல்த் கூட்டத்தில் இந்தியா பங்குபெறுவது சரிதானா?

இலங்கையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பிரதமர்  கலந்துக்கொள்ளாவிடினும் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் பங்குகொள்வதென என்ற முடிவு தமிழ்நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாநாட்டை அறவே புறக்கணிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக தமிழகமெங்கும் நடைபெற்று வந்த போராட்டங்களும் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன்  தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி இந்திய அரசின் முடிவை எதிர்த்து சிறப்பு தீர்மானமும் விழலுக்கு இரைத்த நீராகிப் போயின. 

இந்த சூழலில் இந்தியா எடுத்த முடிவு சரியானதுதானா என்ற விவாதத்தில் இறங்கவே பலரும் தயங்குகின்றனர். எல்லா விஷயத்திலும் தயங்காமல் தங்களுடைய கருத்துக்களை எழுதிவந்த பல மூத்த பதிவர்களும் கூட பெரும்பாலோனோருடைய கருத்துக்களைச் சான்றே எழுதி தப்பித்துக்கொள்வதைக் காண முடிகிறது. 

ஆகவே இந்திய அரசின் இந்த முடிவு சரியானதுதானா என்பதை நடுநிலையான கண்ணோட்டத்துடன் அணுகினால் என்ன என்று பல நாட்களாகவே எண்ணியிருந்தேன். 

முதலில் காமன்வெல்த் அமைப்பு என்றால் என்ன, அதன் உறுப்பு நாடுகள் யார், யார் என்பதை சுருக்கமாக பார்ப்போம். 

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த 53 நாடுகள் தாமாக முன்வந்து அமைத்துக்கொண்டதே காமன்வெல்த் என்ற அமைப்பு. இதை வேடிக்கையாகவும் சிலர் வர்ணிப்பதுண்டு. 

அதாவது இந்த 53 நாடுகளின் ஒட்டுமொத்த சொத்தையும் (common-wealth) ஆங்கிலேயர்கள் சுருட்டிச் சென்று தங்களுடைய நாட்டை வளம்கொழித்த நாடாக்கியதை அவ்வப்போது - இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை - நினைவுப்படுத்திக்கொள்ளத்தான் இந்த நாட்டின் தலைவர்கள் இந்த 53 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டின் தலைநகரில் கூடுகின்றனராம்! இந்த அமைப்பிலுள்ள நாடுகளில் மிகவும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற அடிப்படையில் இந்த அமைப்பிலுள்ள நாடுகளில் மிக முக்கியமான நாடாக இந்தியா கருதப்பட்டுவருகிறது. 

ஆனால் துவக்கத்திலிருந்தே இந்த நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றுகூடி தங்களுடைய பழைய அடிமை வாழ்வை நினைவுபடுத்திக்கொள்வதைத் தவிர பெரிதாக எதையும் சாதித்துள்ளதாக பெருமையடித்துக்கொள்ள முடியாது.

அதுபோலவே இந்த அமைப்பிலுள்ள நாடுகள் - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் கனடாவைத் தவிர, பொருளாதாரத்திலோ அல்லது தொழில்துறையிலோ வளர்ந்த நாடுகள் என்றும் தங்களைக் கூறிக்கொள்ளவும் முடியாது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடாவும் கூட உலகிலுள்ள மற்ற வல்லரசுகள் எடுக்கும் முடிவுகளைச் சார்ந்துதான் தங்களுடைய முடிவுகளையும் அமைத்துக்கொள்கின்றனவே தவிர இதுவரை உலகில் நடந்த எந்தவொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விலும்  தனித்து முடிவெடுத்ததில்லை. 

ஆகவே இந்த அமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் சம்பிரதாய மாநாட்டில் - உண்மையில் சொல்லப் போனால் இது ஒரு கூட்டம் (Meeting of Heads of Governments) மட்டுமே. மாநாடு என்று கூட அவர்களே கூறுவதில்லை -  கூட்டத்தின் முடிவில் உப்புசப்பில்லாத சில தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு கலைந்து செல்லும் கூட்டம் என்று கூட கூறலாம். 

இந்த அமைப்பின் கடைசி கூட்டம் 2011ல் ஆஸ்திரேலியாவிலுள்ள பெர்த் நகரத்தில் (Perth) நடந்தது.  ஆஸ்திரேலியா யுரேனியம் வழங்க மறுத்துவிட்டதை கண்டித்து அந்த கூட்டத்தில் நம்முடைய பாரதப் பிரதமர் கலந்துக்கொள்ளவில்லை. அப்போது (இப்போதும்தான்) குடியரசு துணைத்தலைவராக இருந்த ஹமீத் அன்சாரியின் தலைமையில் ஒரு அணி சென்றது. ஆனால் எதற்கு பிரதமர் அந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை என்பதை தெளிவாக கூறாமல் அவருக்கு உள்நாட்டில் நிறைய அலுவல்கள் இருந்தன என்று பூசி மெழுகினார்கள். கூட்டத்தின் இறுதியில் இந்திய பிரதமர் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாததற்கும் ஆஸ்திரேலியா யுரேனியன் வழங்க மறுத்ததற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது ஆஸ்திரேலியா!!

அந்த கூட்டத்தில் என்ன அப்படி பெரிதாக சாதித்தார்கள் என்றால் ஒன்றும் இல்லையென்றுதான் பதில் வரும். அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட எந்தவொரு தீர்மானத்திற்கும் அங்கத்தினர்களின் ஒட்டுமொத்த ஆதரவு கிடைக்கவில்லை. அப்போதும் ஒருசில நாடுகளால் (கனடா என்று அர்த்தம் கொள்க) கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் சம்மந்தப்பட்ட தீர்மானத்தை எதிர்த்த நாடுகளில் இந்தியாவும் இலங்கையும் இருந்தன. அந்த கூட்டத்திலேயே இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் 'இந்த அமைப்பு நாளுக்கு நாள் எதற்கும் பலனற்ற அமைப்பாக மாறி வருகிறது. இதற்கு அங்கத்தினர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாததும் ஒரு முக்கிய காரணம் என்றாலும் பல அங்கத்தினர்கள் எவ்வித ஈடுபாடும் காட்டாததும் ஒரு காரணம்.' என்று எடுத்துரைத்தார். அவரைத் தொடர்ந்து மலேசியாவும் உறுப்பு நாடுகளின் அக்கறையின்மையை (indifference) எடுத்துக்காட்டி இந்த கூட்டத்தில் முன்மொழியப்படும்  தீர்மானங்கள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படாதது இந்த அமைப்பின் செயலற்றத்தன்மையையே இது காட்டுகிறது.' என்று குறைகூறியது. 

அந்த கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே பேசுவதற்கு அழைக்கப்பட்டபோது கனடா பிரதமர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார். மேலும் காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் (அதாவது 2013ல்) இலங்கை தலைநகரில் நடத்தப்படுவதாக முடிவானால் அதை கனடா புறக்கணிக்கும் என்று அப்போதே அவர் அறிவித்தார். ஆனால் அவருடைய முடிவை கூட்டத்தில் பங்குகொண்ட எந்த உறுப்பு நாடும் கண்டுக்கொள்ளவில்லை, இந்தியாவையும் சேர்த்து.

இந்த அமைப்பின் முக்கியத்துவம் இவ்வளவுதான். 

இலங்கையில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் இந்தியா கலந்துக்கொள்வதால் அந்த நாட்டின் அதிபருடைய செயல்களுக்கு அங்கீகாரம் அளித்துவிடுவதுபோலாகிவிடும் என்கிற வாதத்தில் எல்லாம் எவ்வித பொருளும் இல்லை. அதுபோலவே அந்த கூட்டத்தில் பங்குபெறும் நாடுகள் எல்லாம் இலங்கையில் மனித உரிமை மீறல்களை அங்கீகரிக்கின்றன என்பதும் பொருள் இல்லை. இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சம்பிரதாய கூட்டம் அவ்வளவுதான். எப்போதும்போலவே மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சில நாடுகள் - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா - தீர்மானங்களை முன்மொழியும். அதை பல நாடுகள் கண்டுக்கொள்ளவும் போவதில்லை, இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஒன்றும் சொல்லாமல் மவுனம் காக்கும், இலங்கையை ஜால்ரா அடிக்கும் நாடுகள் - பாக்கிஸ்தான், பங்களாதேஷ் - அதை எதிர்க்கும்.... இந்த அமைப்பில் மிக அதிக அளவிலான அங்கத்தினர்கள் ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்துதான் வருகின்றனர். அவர்களுக்கு மனித உரிமை மீறல் என்பதன் அர்த்தமே புரிய வாய்ப்பில்லை. ஆகவேதான் அவர்கள் கண்டத்தைச் சார்ந்த, நோபல் பரிசு பெற்ற, பாதிரியார் டெஸ்மன்ட் டூட்டு இந்த கூட்டத்தை புறக்கணியுங்கள் என்று கூறியதை அவர்களில் எவரும் பொருட்படுத்தவே இல்லை.

இந்த வருடமும் இந்த கூட்டத்தின் இறுதியில் எந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தமுடிவும் எடுக்காமல் கூட்டம் முடிவு பெறும். இதுதான் உண்மையில் நடக்கப் போகிறது. இந்த மனித உரிமை மீறல் தீர்மானம் கடந்த மூன்று கூட்டங்களிலும் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படாமலே போனது என்பதும்  இதை ஒவ்வொரு முறையும் எதிர்த்து நின்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இந்த அமைப்பு நடத்திய முந்தைய சில கூட்டங்களில் ஏதாவது ஒரு காரணத்திற்காக பாரதப் பிரதமர் கலந்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்பதால் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் கூட்டத்திலும் அவர் கலந்துக்கொள்ளப் போவதில்லை என்பது அவ்வளவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவு இல்லை என்பதும் உண்மை. 

மேலும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளாததற்கு உண்மையான காரணத்தையும் பிரதமர் ராஜபக்‌ஷேவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடவில்லை போலிருக்கிறது. இதற்கு முந்தைய கூட்டத்தில் கலந்துக்கொள்ளாதபோது என்ன காரணங்களை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய பிரதமருக்கு எழுதினாரோ அந்த கடிதத்தை நகல் எடுத்து அனுப்பப்பட்டதுபோல்தான் உள்ளது ராஜபக்‌ஷேவுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதமும்!   

இந்த கூட்டத்தில் உள்நாட்டில் உள்ள இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்தியா எதற்காக கலந்துகொள்வது என்று முடிவெடுத்தது என்ற கேள்வி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதிலின் சாராம்சம் இதுதான்.

1. இலங்கை நம்முடைய அண்டை நாடுகளில் மிகவும் முக்கியமான நாடு. நம்முடைய மற்ற அண்டை நாடுகளுடன் நாம் எவ்வாறு சுமுக உறவு வைத்துக்கொள்ள முயல்கிறோமோ அதே போன்ற உறைவை இலங்கையுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பம்.

2.சமீபத்தில் நடந்து முடிந்த போரில் வீடுகளையும் உரிமைகளையும் இழந்து தவிக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுக்க இதுவரை இந்தியா எடுத்துள்ள முயற்சிகள் உண்மையில் பலனளிக்க வேண்டுமென்றால் அந்த முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து ஈடுபட வேண்டும். அதற்கு இலங்கையுடன் சுமுகமான உறவு இருக்க வேண்டியது அவசியம்.

3.நம்முடைய தொடர் முயற்சியால் மட்டுமே இலங்கை வட மாகாண தேர்தலை நடத்த சம்மதித்தது. இத்தகைய முயற்சிகளை இனியும் தொடரவும் இலங்கையுடன் சுமூக உறவு வைத்திருப்பது அவசியமாகிறது.   

4. இலங்கை மீதான போர்க்குற்றங்களைப் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் சூழலில் அதில் பங்குகொண்டு நம்முடைய கருத்துக்க்ளையும் எடுத்து வைக்கக்கூடிய வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கக் கூடும்.

5.இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதுபோன்ற இரு நாடுகளுக்கிடையிலான சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு காணவும் இலங்கையுடனான சுமூக உறவு தொடர வேண்டும்.

வெளியுறவு அமைச்சரின் விளக்கங்கள் எந்த வகையில் நியாயமாக தென்படுகிறது என்பது அவரவர் கண்ணோட்டத்தைப் பொருத்தது. 

இந்த விஷயத்தை நடுநிலையான கண்ணோட்டத்துடன் அணுகுபவர்களுக்கு வெளியுறவு அமைச்சர் கூறியதிலுள்ள நியாயங்களை கண்டுக்கொள்ள முடியும். 

ராஜபக்‌ஷே அரசு இலங்கையில் நடத்தியது அட்டூழியம்தான், போர்க்குற்றங்கள்தான். இல்லையென்று மறுப்பதற்கில்லை. ஆனால் அவற்றை அமெரிக்கா போன்ற நாடுகளாலேயே தடுத்து நிறுத்த முடியாமல்போனது. ராஜபக்‌ஷே அரசை எதிர்த்து ஐநா சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை காமன்வெல்த் அமைப்பில் இல்லாத நாடுகள் பலவும் இணைந்து தொடர்ச்சியாக பல மாற்றங்களைக் கொண்டு வந்து அந்த தீர்மானத்தை நீர்த்துப் போக செய்துவிட்டன. 

இத்தகைய நாடுகள் பெரும்பாலானவைகளில் இத்தகைய படுகொலைகள், போர்க்குற்றங்கள் நடந்திருப்பதுதான் இதற்குக் காரணம். ஆகவே இது முழுக்க, முழுக்க இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று பூசிமெழுகிவிட்டனர். 

இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலுள்ள காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் நபரின் தலையீட்டை இந்தியா எப்படி விரும்பவில்லையோ அதுபோலவே எங்களுடைய நாட்டில் நடைபெறும் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று இலங்கை அரசு பலமுறை பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆகவே இந்த விவகாரத்தில் இந்தியோ போன்ற நாடுகள் ஓரளவுக்குத்தான் தலையிட்டு சுமூக தீர்வு காண முடியுமே தவிர காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்தோ அல்லது ஐநா சபையிலிருந்தோ தள்ளிவைத்து இலங்கையை அடிபணிய வைத்துவிட முடியாது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்வது நல்லது.

இலங்கையை எதிரி நாடாக பாவித்து சாதிப்பதை விட ஒரு நட்பு நாடாக விருப்பம் இல்லாவிட்டாலும் அங்கு இன்றும் வாழும் தமிழர்களுடைய நலனுக்காக சகித்துக்கொண்டு செல்வது காலத்தின் கட்டாயம். 

ராஜபக்‌ஷேவோ அல்லது அவருடைய சர்வாதிகார குடும்பமோ என்றென்றைக்கும் இலங்கைய ஆளப் போவதில்லை.  இனிவரும் காலங்களில் இலங்கையில் ஆட்சி பொறுப்பை ஏற்கும் தலைவர்களுடைய கண்ணோட்டம் மாறலாம். 

காலங்கள் மாறும், காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.


*************  
19 comments:

தி.தமிழ் இளங்கோ said...

காரணம் வேறொன்றும் இல்லை எதை எழுதினாலும் துரோகி என்ற பட்டம் சூட்ட இங்கே சிலர் இருப்பதுதான்.

// இலங்கையை எதிரி நாடாக பாவித்து சாதிப்பதை விட ஒரு நட்பு நாடாக விருப்பம் இல்லாவிட்டாலும் அங்கு இன்றும் வாழும் தமிழர்களுடைய நலனுக்காக சகித்துக்கொண்டு செல்வது காலத்தின் கட்டாயம். //

சரியாகச் சொன்னீர்கள். இங்குள்ள சில அரசியல்வாதிகள் சிலர் தங்கள் பிழைப்பிற்காக எதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதில்லை.


// ராஜபக்‌ஷேவோ அல்லது அவருடைய சர்வாதிகார குடும்பமோ என்றென்றைக்கும் இலங்கைய ஆளப் போவதில்லை. இனிவரும் காலங்களில் இலங்கையில் ஆட்சி பொறுப்பை ஏற்கும் தலைவர்களுடைய கண்ணோட்டம் மாறலாம்.

காலங்கள் மாறும், காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். //

நம்பிக்கையோடு இருப்போம் என்ற உங்களது நம்பிக்கையில் நானும் பங்கு கொள்கிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை என்றதுமே, நிறையபேர்
(குறிப்பாக அனானிமஸ்) இங்கு தாவி குதித்து பாய்வார்கள். பொறுமையாக பதில் சொல்லவும்.


வேகநரி said...

அருமையா நியாயமா பலருக்கு விளக்கம் கொடுக்கும் கட்டுரை.
இந்தியாவில் இருந்து ஒரு துரும்பு கூட காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக்க கூடாதென்பது தமிழக அரசியல்கட்சிகளின் பெரிய கோமாளிக் கூத்தென்பது விஷய அறிவுள்ளவர்கள் பலருக்கு தெரியும்.ஆனா இதை வெளியே சொன்னா தமிழ் துரோகி பட்டம் கொடுத்துடுவாங்க என்பதினால் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
காமன்வெல்த் மாநாட்டைவைத்து தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் இலாபம் அடையும் முயற்சியே தமிழகத்தில் நடக்கிறது.கம்யூனிஸ்ட் கட்சியினர் நியாயம நடக்கின்றனர்.கனடவின் புறக்கணிப்பும் ஓட்டு அரசியல் நடவடிக்கையே.
//ராஜபக்‌ஷேவோ அல்லது அவருடைய சர்வாதிகார குடும்பமோ என்றென்றைக்கும் இலங்கைய ஆளப் போவதில்லை.//
அவருக்கு தேர்தல்களில் நிறைய வெற்றிவாய்புகளை வழங்க தமிழக அரசியல்வாதிகள் எப்போதும் கடும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
//இனிவரும் காலங்களில் இலங்கையில் ஆட்சி பொறுப்பை ஏற்கும் தலைவர்களுடைய கண்ணோட்டம் மாறலாம்//
அமெரிக்காவின் நண்பர்கள் ரணிலோ, சரத்பொன்சேகாவோ ஆட்சிக்கு வந்த பின் போர்க்குற்றம்,மனித உரிமை மீறல் கதைகளை அமெரிக்கா கைவிட்டுவிடும். பின்பு தமிழக அரசியல்வாதிகபாடு தான் திண்டாட்டம்:)

வே.நடனசபாபதி said...

சரியாக சிந்தித்து நடுநிலையுடன் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லியுள்ளதுபோல் இந்த கூட்டம் உப்பு சப்பில்லாததுதான். இந்தியா கலந்துகொண்டாலும் கலந்துகொள்ளவிட்டாலும் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள்/தீர்மானங்கள் நிறைவேற்றப்பட போவதில்லை என்பது நிச்சயம். இங்கே நம்மவர்கள் இந்தியா பங்குகொள்வதை எதிர்ப்பதின் காரணம் உள்ளூர் அரசியல்தான்.

நீங்கள் முத்தாய்ப்பாய் சொன்னது போல ‘காலங்கள் மாறும், காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.’ நம்பிக்கைதானே வாழ்க்கை!

அ. பாண்டியன் said...

வணக்கம் நண்பரே,
இலங்கை விவகாரம் தமிழகத்தில் அரசியலாக மாறி விட்டது வேதனை. இவர்கள் யாருக்காக போராடுவதாகச் சொல்கிறார்களோ அந்த இலங்கை தமிழர்களே முகம் சுழிக்கும் விதத்தில் இங்கு எல்லாம் அரசியல் ஆகி விட்டது. இனப்படுகொலைக்கு துணை போனது இந்தியா என்பதை யாரும் மறந்து விட முடியாது. காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு பாராமுகம் காட்டுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. கொச்சினில் இரு மீனவர்கள் இத்தாலி வீரர்களால் கொல்லப்பட்டதற்கு காட்டிய வேகம் தமிழக மீனவர்கள் விடயத்தில் காண்பிக்காதது எந்த வகையில் சரியாகப்படும்? காமன்வெல்த் மாநாட்டினால் எந்த பயனும் இல்லையென்றால் இந்தியா கலந்து கொள்ளாமல் தனது குறைந்தபட்ச எதிர்ப்பையாவது காட்டிருக்கலாம் அல்லவா!
இலங்கை நட்பு நாடு என்றால் போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்கு பாரத பிரதமர் சென்று வரட்டுமே விடுவாரா ராஜபக்சே?
உள்நாட்டு விவகாரம் என்றாலும் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியதும், ராணுவ தளவாடங்கள், ரேடார்கள் தந்து இன அழிப்பிற்கு துணை போனது இதே காங்கிரஸ் அரசு தானே!
செய்த தவறை மூடி மறைக்க பார்க்கிறது இலங்கை அதற்கு துணை போகுகிறது இந்தியா. உண்மையில் இந்தியா இலங்கையிடம் கெஞ்ச வேண்டியதே இல்லை.
இந்தியா மட்டும் இலங்கை மீது பொருளாதார விதிக்கட்டும் உலக நாடுகளே பின் தொடரும். இலங்கை இந்தியாவிடம் கெஞ்சும். அதுவே உண்மை.
தற்போது நடப்பது எல்லாமே அரசியல் தான் நண்பரே.
இருப்பினும் தங்கள் நடுநிலைமையான கட்டுரை மனம் கவர்ந்தது. துணிச்சலுடன் பகிர்ந்தமைக்கு வணக்கங்களும் பாராட்டுக்களும். நன்றி..

Packirisamy N said...

மிகவும் நடுநிலையோடு எழுதப்பட்டுள்ள கட்டுரை. வரலாற்றில் வென்றவர்களே எப்பொழுதும் நல்லவர்களாகக் கருதப்படுவர். அவர்கள்தான் வரலாற்றை எழுதுகிறார்கள். இப்படிப்பட்ட அடிமைத்தனத்தை நினைவுகூறும், ஒன்றுக்கும் உதவாத மாநாடுகள் தேவையில்லாதது. இந்தியாவைவிட, இப்பொழுது சைனாவின் ஆதரவு போதும் என்று இலங்கை நம்புகிறது என்று நினைக்கிறேன்.
காலங்கள் மாறும், காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.

Avargal Unmaigal said...

உங்கள் பார்வை மிக தெளிவாக இருக்கிறது......

டிபிஆர்.ஜோசப் said...


தி.தமிழ் இளங்கோ said...
காரணம் வேறொன்றும் இல்லை எதை எழுதினாலும் துரோகி என்ற பட்டம் சூட்ட இங்கே சிலர் இருப்பதுதான். //

உண்மைதான் இங்கு பட்டம் அளித்து 'கவுரவிப்பவர்கள்' ஏராளம்:))

இலங்கைத் தமிழர் பிரச்சினை என்றதுமே, நிறையபேர்
(குறிப்பாக அனானிமஸ்) இங்கு தாவி குதித்து பாய்வார்கள். பொறுமையாக பதில் சொல்லவும்.//

குதர்க்கமாக ஏதாவது வந்தால் பப்ளிஷ் செய்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


வேகநரி said...
அருமையா நியாயமா பலருக்கு விளக்கம் கொடுக்கும் கட்டுரை.
இந்தியாவில் இருந்து ஒரு துரும்பு கூட காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக்க கூடாதென்பது தமிழக அரசியல்கட்சிகளின் பெரிய கோமாளிக் கூத்தென்பது விஷய அறிவுள்ளவர்கள் பலருக்கு தெரியும்.ஆனா இதை வெளியே சொன்னா தமிழ் துரோகி பட்டம் கொடுத்துடுவாங்க என்பதினால் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.//

உண்மைதான்.

அமெரிக்காவின் நண்பர்கள் ரணிலோ, சரத்பொன்சேகாவோ ஆட்சிக்கு வந்த பின் போர்க்குற்றம்,மனித உரிமை மீறல் கதைகளை அமெரிக்கா கைவிட்டுவிடும். பின்பு தமிழக அரசியல்வாதிகபாடு தான் திண்டாட்டம்:)//

சரியாகச் சொன்னீர்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
சரியாக சிந்தித்து நடுநிலையுடன் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லியுள்ளதுபோல் இந்த கூட்டம் உப்பு சப்பில்லாததுதான். இந்தியா கலந்துகொண்டாலும் கலந்துகொள்ளவிட்டாலும் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள்/தீர்மானங்கள் நிறைவேற்றப்பட போவதில்லை என்பது நிச்சயம். இங்கே நம்மவர்கள் இந்தியா பங்குகொள்வதை எதிர்ப்பதின் காரணம் உள்ளூர் அரசியல்தான். //

சரியாகச் சொன்னீர்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...


அ. பாண்டியன் said...
வணக்கம் நண்பரே,
இலங்கை விவகாரம் தமிழகத்தில் அரசியலாக மாறி விட்டது வேதனை. இவர்கள் யாருக்காக போராடுவதாகச் சொல்கிறார்களோ அந்த இலங்கை தமிழர்களே முகம் சுழிக்கும் விதத்தில் இங்கு எல்லாம் அரசியல் ஆகி விட்டது. //

தேர்தல் வருடமாயிற்றே!

இனப்படுகொலைக்கு துணை போனது இந்தியா என்பதை யாரும் மறந்து விட முடியாது.//

துணை போனது என்று சொல்வதை விட பார்த்துக்கொண்டு சும்மா இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். அவர்கள் முயன்றாலும் ஒன்றும் நடந்திருக்காது என்பது வேறு விஷயம்.

காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு பாராமுகம் காட்டுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. கொச்சினில் இரு மீனவர்கள் இத்தாலி வீரர்களால் கொல்லப்பட்டதற்கு காட்டிய வேகம் தமிழக மீனவர்கள் விடயத்தில் காண்பிக்காதது எந்த வகையில் சரியாகப்படும்? //

அது வேறு இது வேறு. இத்தாலியர்கள் இந்திய கடல் எல்லைக்குள் வந்து நம்முடைய மீனவர்களை சுட்டனர். ஆனால் இலங்கை கடற்படையினர் நம்முடைய எல்லைக்குள் வந்து தங்களை சுட்டதாக நம்முடைய மீனவர்கள்தான் சொல்கின்றனர். ஆனால் நம்முடைய கடற்படை அதை தொடர்ந்து மறுத்துவந்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றன. அதில் ஒரு சில படகுகளே தாக்கப்படுகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

காமன்வெல்த் மாநாட்டினால் எந்த பயனும் இல்லையென்றால் இந்தியா கலந்து கொள்ளாமல் தனது குறைந்தபட்ச எதிர்ப்பையாவது காட்டிருக்கலாம் அல்லவா! //

செய்திருக்கலாம். ஆனால் அதனால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது என்பதுதான் என்னுடைய கேள்வி. நட்பு நாடாக இருக்கும்போதே நம்முடைய மீனவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். பகை நாடாக ஆனால் என்னவெல்லாம் நடக்கும்?

இலங்கை நட்பு நாடு என்றால் போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்கு பாரத பிரதமர் சென்று வரட்டுமே விடுவாரா ராஜபக்சே?//

ஒரு சுதந்திரம் பெற்ற நாட்டில் இன்னொரு நாடு எந்த அளவுக்கு தலையிட முடியுமோ அந்த அளவுக்குத்தான் தலையிட முடியும். நீங்கள் சொல்வதை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளாலும் கூட செய்ய முடியாது.

உள்நாட்டு விவகாரம் என்றாலும் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியதும், ராணுவ தளவாடங்கள், ரேடார்கள் தந்து இன அழிப்பிற்கு துணை போனது இதே காங்கிரஸ் அரசு தானே! //

இதை மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் செய்திருக்கும், இனியும் செய்யும். இது இந்துமா கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் செய்யப்படும் செயல்கள். இது சரியான கண்ணோட்டம்தானா என்பது வேறு விஷயம்.

செய்த தவறை மூடி மறைக்க பார்க்கிறது இலங்கை அதற்கு துணை போகுகிறது இந்தியா. உண்மையில் இந்தியா இலங்கையிடம் கெஞ்ச வேண்டியதே இல்லை.//

அப்படி சொல்ல முடியாது. மீண்டும் சொல்கிறேன். இலங்கையில் நடந்தவை அனைத்தும் அனைத்து நாடுகளுக்கும் தெரியும். ஆனால் அதை ஒரு எல்லை வரை மட்டுமே எடுத்துரைக்க முடியும் என்பதால்தான் அனைத்து நாடுகளும் மவுனம் காக்கின்றனர். பகிரங்கமான, வெளிப்படையான போர்க்குற்ற விசாரணை என்பதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம் என்பது அமெரிக்காவுக்கும் தெரியும்.

இந்தியா மட்டும் இலங்கை மீது பொருளாதார விதிக்கட்டும் உலக நாடுகளே பின் தொடரும். //

ஒரு துரும்பு நாடு கூட இந்தியாவை பின்பற்றாது. இந்தியா வழங்க மறுக்கும் பொருட்களை வழங்க பல நாடுகள் வரிசையில் நிற்கும். சீனா மட்டுமல்லாமல் பாக்கிஸ்தான், மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என பல நாடுகளை சொல்லலாம்.

இருப்பினும் தங்கள் நடுநிலைமையான கட்டுரை மனம் கவர்ந்தது. துணிச்சலுடன் பகிர்ந்தமைக்கு வணக்கங்களும் பாராட்டுக்களும். நன்றி..//

நான் கூறியுள்ள கருத்துடன் உங்களால் ஒத்துப் போக முடியாவிட்டாலும் பெருந்தன்மையுடன் வருகை தந்து உங்களுடைய கருத்துக்களை முன்வைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

டிபிஆர்.ஜோசப் said...


Packirisamy N said...
மிகவும் நடுநிலையோடு எழுதப்பட்டுள்ள கட்டுரை. வரலாற்றில் வென்றவர்களே எப்பொழுதும் நல்லவர்களாகக் கருதப்படுவர். அவர்கள்தான் வரலாற்றை எழுதுகிறார்கள்.//

சரியாக சொன்னீர்கள். இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மானியர்கள் தோற்றுப்போனதால்தான் அந்த நாட்டைச் சார்ந்த பல ராணுவ அதிகாரிகளும் போர்க்குற்றங்களுக்கு ஆளாகி தண்டனைப் பெற்றனர். மாறாக அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் அனைத்தும் மறக்கப்பட்டிருக்கும். அதுபோலத்தான் இலங்கையிலும் ராஜப்க்‌ஷே அரசு ஒரு நாள் வீழும். அதன் பிறகுதான் அவருடைய நிலமை என்னவாகும் என்பது தெரியவரும். இன்று பாக்கிஸ்தானில் முஷாரஃபுக்கும் ஏற்பட்ட நிலமை ராஜபக்‌ஷேவுக்கும் நிச்சயம் ஏற்படும்.

இப்படிப்பட்ட அடிமைத்தனத்தை நினைவுகூறும், ஒன்றுக்கும் உதவாத மாநாடுகள் தேவையில்லாதது. //
சரியாகச் சொன்னீர்கள்.

இந்தியாவைவிட, இப்பொழுது சைனாவின் ஆதரவு போதும் என்று இலங்கை நம்புகிறது என்று நினைக்கிறேன்.//

அதுவும் உண்மை. ஆனால் இலங்கையின் இந்த முடிவு சரியானதுதானா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


Avargal Unmaigal said...
உங்கள் பார்வை மிக தெளிவாக இருக்கிறது......//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

வேகநரி said...

ஜோசப் அவர்களுக்கு,
இது ஒரு பயனற்ற மகாநாடாக இருந்தாலும்(பொரிய ஜனநாயக நாடு இந்தியா அவசியம் கலந்துக்க வேண்டும்) முதலீடு தொடர்பான ஒரு அமைப்பு ஒன்று (Commonwealth Business Forum)அங்கே இருப்பதாகவும்,அது குறிப்பாக இந்திய முதலீட்டாளர்கள் தொழில் அதிபர்களுக்கு பயனுள்ளவை என்றும் இது பற்றி அறிந்த நண்பர்கள் தெரிவிக்கிறாங்க.

வேகநரி said...

நண்பர் அ. பாண்டியன்,
//இலங்கை நட்பு நாடு என்றால் போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்கு பாரத பிரதமர் சென்று வரட்டுமே விடுவாரா ராஜபக்சே?//

முள்ளிவாய்க்கால் பகுதிக்கு பாரத பிரதமர் சென்று வர பாரத பிரதமருக்கு எந்த தடையும் போடமாட்டாங்க என்று நினைக்கிறேன்/நம்புகிறேன். ஆனா பாரத பிரதமர் முள்ளிவாய்க்காலுக்கு சென்று ..?
தமிழங்க பொரும் பகுதி வாழும்மிடம் இலங்கையின் வட மாகாண சிற்றிகளே தவிர முள்ளிவாய்க்காலில்லை.அதனாலே தான் சமீப தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை தமிழ் முதல் அமைச்சர் பிரதமரை வட மாகாண சிற்றிக்கே அழைப்பு விடுத்தார். முள்ளிவாய்க்காலுக்கல்ல. முள்ளிவாய்க்கால் என்பது புலிகள் பெரும் தொகையான தமிழர்களை பயண கைதிகளாக (தமிழருவி மணியன் அறியதந்ததின்படி அமெரிக்கா கப்பல் அனுப்பி தங்களை,புலிகளை பாதுகாக்கும் என்று நம்பி) மக்களை வைத்திருந்து போர் செய்த இடம் என்பதாலே பலருக்கு தெரிய வந்தது.
இந்த சம்பவங்க நடந்தபோ நான் வழக்கத்தைவிட உலக செய்தி சானல்களை மிக அவதானமா அவதானித்தேன். தமிழகத்தில் மட்டுமே எதிர்மாறான செய்திகள்.நண்பர் பாண்டியனுக்கு இப்படியான கருத்து ஏன் உருவாகியது என்பதில் எந்த வித வியப்பு இல்லை.
நான் சென்ற வருடம் இலங்கையில் நின்றபோ சொன்னாங்க முள்ளிவாய்க்கால் விரும்பினா போகலம், சண்டை நடந்த இடங்களை பார்க்கலம்,புலிகள் பாதுகாப்பு அரண்களை பார்க்கலம் என்று.
போர் பெருமைகளை வெறுக்கும் நான் இவற்றை எல்லாம் பார்க்க துளியும் விரும்பல்ல.

டிபிஆர்.ஜோசப் said...

வேகநரி said...
ஜோசப் அவர்களுக்கு,
இது ஒரு பயனற்ற மகாநாடாக இருந்தாலும்(பொரிய ஜனநாயக நாடு இந்தியா அவசியம் கலந்துக்க வேண்டும்) முதலீடு தொடர்பான ஒரு அமைப்பு ஒன்று (Commonwealth Business Forum)அங்கே இருப்பதாகவும்,அது குறிப்பாக இந்திய முதலீட்டாளர்கள் தொழில் அதிபர்களுக்கு பயனுள்ளவை என்றும் இது பற்றி அறிந்த நண்பர்கள் தெரிவிக்கிறாங்க.//

உண்மைதாங்க. ஆனால் இலங்கையுடனான இருநாடுகள் வர்த்தக (bi-lateral trade agreements) ஒத்துழைப்பு என்பது இரு நாடுகளுக்குள் ஏற்கனவே இருக்கும் பல ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே உள்ளது. இந்த அமைப்பிலுள்ள பெரும்பாலானா உருப்பு நாடுகளுடனும் இந்தியாவுக்கு வர்த்தக உடன்பாடுகள் உள்ளன. ஆகவே இந்த் மாநாட்டில் பங்குபெறுவது வெறும் சம்பிரதாயமே இல்லாமல் பெரிதாக எந்த பலனும் இல்லை.


7:22 PM

டிபிஆர்.ஜோசப் said...

முள்ளிவாய்க்கால் என்பது புலிகள் பெரும் தொகையான தமிழர்களை பயண கைதிகளாக (தமிழருவி மணியன் அறியதந்ததின்படி அமெரிக்கா கப்பல் அனுப்பி தங்களை,புலிகளை பாதுகாக்கும் என்று நம்பி) மக்களை வைத்திருந்து போர் செய்த இடம் என்பதாலே பலருக்கு தெரிய வந்தது.//

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கும் இருதரப்பினருமே முக்கிய காரணம் என்பதை ஐநா குழுவே பல அறிக்கைகளில் உறுதி செய்துள்ளது. இது நம் நாட்டில் சிப்பாய் கலகம் போலவோ அல்லது ஜாலியன்வாலாபாத் படுகொலை போன்றதோ அல்ல. ஆனால் இருதரப்பினருக்கும் இடையில் பிணைக் கைதிகளாக சிக்கிக்கொண்ட அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் பலியானதுதான் என்னவோ உண்மை. இதைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழதலாம் என்று நினைத்துள்ளேன்.

G.M Balasubramaniam said...


இனம் என்பதும் மொழி என்பதும் யாரோ சிலர் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும் விஷயமல்ல. பெரும் பான்மை பலத்துடன் கழுதையை குதிரை என்றால் குதிரையாகி விடாது. விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலைமையுடன் எழுதப் பட்டுள்ள பதிவு.பாராட்டுக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...

இனம் என்பதும் மொழி என்பதும் யாரோ சிலர் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும் விஷயமல்ல. பெரும் பான்மை பலத்துடன் கழுதையை குதிரை என்றால் குதிரையாகி விடாது. விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலைமையுடன் எழுதப் பட்டுள்ள பதிவு.பாராட்டுக்கள்.//

மிக்க நன்றி சார்.

வேகநரி said...

//முள்ளிவாய்க்கால் படுகொலைக்கும் இருதரப்பினருமே முக்கிய காரணம் என்பதை ஐநா குழுவே பல அறிக்கைகளில் உறுதி செய்துள்ளது. இது நம் நாட்டில் சிப்பாய் கலகம் போலவோ அல்லது ஜாலியன்வாலாபாத் படுகொலை போன்றதோ அல்ல.//
முழுவதும் உண்மை.
உங்களுக்கு இது தெரிந்திருக்மோ தெரியல்ல, நேற்று ஒரு இலங்கை நண்பரரோடு பேசிய போது ஒன்றை தெளிவுபடுத்தினார். இதைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதவிருக்கும் உங்களுக்கு உதவியா இருக்கலாம். இலங்கை தமிழங்க அடுத்தபடியா வாழும் இன்னொரு மாகாணம் கிழக்கு மாகாணம் என்று ஒன்றிருக்கு. அங்கே புலிகளின் இரண்டாவது பெரிய தலைவர் கருணா என்று ஒருவர் இருந்தார்.அவர் இலங்கை அரசோடு சேர்ந்து தனக்கு கீழே இருந்த புலிகளை ஆயுதங்களை கைவிட்டு வீட்டுக்கு போங்க என்று சொல்லிட்டார்.பெரும்பான்மை புலிங்க அப்படியே செய்தாங்க.அதனால் இலங்கை இராணும் வந்தபோ பயண கைதிகளும் இல்லை, படு கொலைகளும் இல்லை, துயரமும் இல்லை.
இதை தானே இந்தியா அப்போ திரும்ப திரும்ப கேட்டது முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடையுங்க என்று. ஆனா அப்போ சீமானும் வைகோவும் வீர வசனங்கள் பேசி உசுப்பேற்றி கொண்டிருந்தனர்.