13 November 2013

சொந்த செலவில் சூன்யம் (முடிவுரை)

கோபால் மீதான மாதவியின் கொலை வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு அடுத்த நாள் காலை எஸ்.பி. சந்தானத்தின் அறையில்  அவருடைய மேசையை சுற்றி ஆய்வாளர் பெருமாள், துணை ஆய்வாளர்கள் தன்ராஜ், ஷங்கர் மற்றும் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலைய துணை ஆய்வாளர் பாலசுந்தரம் ஆகியோர் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து அவருடைய வருகைக்காக காத்திருந்தனர். 

அடுத்த சில நிமிடங்களில் எஸ்.பி. அறைக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்ததும் அவருடைய மேசை மீது தயாராக வைக்கப்பட்டிர்ந்த டேப் ரிக்கார்டரின் ப்ளே பொத்தானை அழுத்தினார் தன்ராஜ்.

அதிலிருந்து முருகேசனின் குரல் அறையை நிறைத்தது.

ஒலிநாடா ஓட, ஒட தன்ராஜின் அடுக்கடுக்கான கேள்விகள் முருகேசனை திணறடித்ததை அறையிலிருந்த அனைவரும் ரசித்தனர், ஆய்வாளர் பெருமாளைத் தவிர. அவரைத் தவிர அந்த அறையில் இருந்த அனைவருமே நேரடியாக அதிகார பதவிகளில் நுழைந்தவர்கள் என்பதால் தான் தனித்து விடப்படிருந்ததைப் போல் உணர்ந்தார் அவர். 

'ஓ! இதான் உங்க ஸ்டைலா..... நல்லாத்தான் இருக்கு..... நைஸ் வொர்க்' என்றார் எஸ்.பி.

அவருடைய பாராட்டு ஆய்வாளர் பெருமாளை எரிச்சலடையச் செய்தாலும் வேறு வழியின்றி மவுனமாக அமர்ந்திருந்தார். 

தன்ராஜின் கேள்விகளைத் தொடர்ந்து ஷங்கரின் விசாரணை முறையும் எஸ்.பியை கவர்ந்திருக்க வேண்டும்... 'This is your style.....தன்ராஜோட ஸ்டைல்லருந்து வித்தியாசமாருந்தாலும் you complement each other..' என்றார் எஸ்.பி. 'பேசாம ஒங்க ரெண்டு பேரையும் Crime Branchக்கு மாத்திட்டா என்னன்னு தோனுது.... என்ன சொல்றீங்க?'

தன்ராஜும் ஷங்கரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தனர். நா நேத்து சொன்னத சாரும் சொல்றார் பாத்தியா என்பதுபோலிருந்தது தன்ராஜின் பார்வை.

'நாங்க ரெடி சார்' என்றனர் இருவரும்.

'சரி.... கமிஷனர்கிட்ட சொல்றேன்....' என்ற எஸ்.பியின் கவனத்தை ஈர்த்தது ஒலிநாடாவில் இருந்து வந்த தன்ராஜின் அடுத்த கேள்வி. 

'நாந்தான் மர்டர் பண்ணேன்னு சொன்னா மட்டும் போறாது..... எதுக்கு பண்ணே, அதச் சொல்லு.'

'பின்னே என்ன சார்? அவளெ எவ்வளவு கஷ்டப்பட்டு சென்னைக்கி கொண்டு வந்து தொழில்ல எறக்கி விட்டேன்....? அவ பாட்டுக்கு திடீர்னு ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட்டா அப்புறம் என் கதி? இது உனக்கு வேணான்டின்னு எத்தன தடவையோ சொல்லி பாத்தேன்.... கேக்கல..... அதான்......'

'சரி.... அப்புறம் எதுக்கு ராமாரஜன இதுல கூட்டு சேத்த?'

'அவனுக்கும் இந்த ஐடியா இருந்துது சார்.... என்னைக்கி அவனெ வெளியில போடா வேலைக்கார நாயேன்னு அவ திட்டுனாளோ அதுலருந்தே அவள போட்டுத்தள்ளிறணும்னு சொல்லிக்கிட்டுத்தான் இருந்தான்.... ஆனா நம்ம அளவுக்கு தைரியமும் இல்ல.... ஒடம்புல தெம்பும் இல்ல...... நா பாத்துக்கறன்டான்னு சொல்லியும் கேக்காம இல்ல மச்சான் நா பாத்துக்கறேன்னுட்டு போனான்..... சும்மா புடிச்சி தள்ளிட்டு வந்து போட்டு தள்ளிட்டன்டா மச்சான்னு சொன்னான். ஆனா அவனால இது முடியாதுன்னு எனக்கு தெரியும்.... அதனாலதான் எதுக்கும் செக் பண்லாம்னு ஒரு ஆஃபனவர் கழிச்சி கூப்ட்டேன்.... நா நெனச்சிருந்தா மாதிரியேதான் நடந்திருந்துது.... அதான் அவனையும் இழுத்துக்கிட்டி மறுபடியும் அங்க போனோம். ஆனா கடைசி நேரத்துல என்னால முடியாது மச்சான்.... அவ மேல உசுரையே வச்சிருந்தேன்... அவ செத்துக்கிட்டக்கறத பாக்கற தெம்பு எனக்கில்லேன்னுன்னுட்டு கழண்டுக்கிட்டான். சரின்னுட்டு அவனெ பார்க்கிங்ல வுட்டுட்டு நா மட்டும் போனேன். நா நினைச்சா மாதிரியே அங்க அரைகுறை மயக்கத்தோட கிடந்தா.... இனிமேலும் புழைச்சா நம்பள காட்டிக் குடுத்துருவான்னுதான் மறுபடியும் அவ தலைய புடிச்சி சோபா கை மேல செமத்தியா இடிச்சி கொன்னுட்டு 'பரவால்லடா நீ போட்ட போடுல ஆள் க்ளோஸ்'னு சொல்லி அவந்தான் இந்த கொலைய செஞ்சான்னு அவனெ நம்பவச்சேன். ஆனா கேஸ் கோர்ட்டுக்கு வந்தப்போ கவர்ன்மென்ட் லாயர் சொன்னது முழுசையும் தினமலர்காரன் போட்டு காரியத்த கெடுத்துட்டான். மாதவி தலையில ரெண்டு அடி இருந்துது, ரெண்டாவது அடியாலதான் அவ செத்தாங்கறா மாதிரி எழுதியிருந்தத படிச்சதுலருந்தே பய கொஞ்சம் துள்ள ஆரம்பிச்சான்.... அப்போதான் குமார் அப்ஸ்கான்டானான்... அவன் எங்க போவான்னு தெரிஞ்சிருந்ததால அவன் ஊர் போய் சேர்றதுக்குள்ளயே அமுக்குனோம்..... கொஞ்ச நாள் உன் ரூம்ல வச்சிருடா.... தோதா வேற எடம் பாத்துட்டு சொல்றேன்னேன்..... ஆனா முட்டாப்பய அவசரப்பட்டு அவனெ ரூம்லயே விட்டுப்போட்டு வந்து இனி அவன் உன்னோட பொறுப்பு நீதான் அவனெ பாத்து பயப்படணும் எனக்கு என்னன்னான்...... வந்த ஆத்திரத்துல ஓங்கி ஒன்னு விட்டேன்.. பய மயக்கமாய்ட்டான். சரி இவன அப்புறம் பாத்துக்கலாம் முதல்ல போய் குமார மீட்டுக்கினு வரலாம்னு மேன்ஷன் பக்கம் வரேன்.... வாசல்ல ராஜசேகர் கார் நிக்கிது.... கடுப்பாருந்துது...... குப்புற தள்னது போறாதுன்னு மண்ணையும் கொட்றயா இருடா வச்சிக்கறேன்னுட்டு திரும்பி போயி அந்த கோவத்த ராமராஜன் மேல காட்டுனேன்..... முட்டாப் பயலே இன்னும் ஒரு நாள் வெய்ட் பண்ணியிருந்தா குமார் தப்பிச்சிருக்க மாட்டானேன்னேன்.... ஆனா அவன் ஒத்துக்கல... என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டிருந்தவன் என்னையே எதுக்கவும் இவன இனிமேலும் விட்டுவச்சிருந்தா நமக்குத்தான் ஆபத்துன்னுட்டு.... அவனெ கொன்னு மாதவிக்கு கொலைக்கு நாந்தான் காரணம் அதனால நா சூயிசைட் பண்ணிக்கறேன்னு அவன் எழுதறா மாதிரி ஒரு லெட்டர எழுதி கொண்டுபோய்  போட்டுட்டு வந்தேன்.'

'அதுக்கப்புறம் எதுக்கு மறுபடியும் அந்த வீட்டுக்குள்ள போன?'

'என்னது நானா?' என்றான் முருகேசன் வியப்புடன், 'எப்போ?'

'டேய்....' என்ற ஷங்கரின் குரலில் இருந்த கோபம் எஸ்.பியை புன்னகைக்க வைத்தது. ஷங்கரைப் பார்த்தார். 'என்ன ஒங்க கைவரிசையை காட்னீங்களா?'

''ஷங்கர் I said no violence' என்று டேப்பிலிருந்து ஒலித்த தன்ராஜின் குரல் அவருக்கு பதிலாய் அமைந்தது.

'நீ தான் போலீஸ் பாடிய அங்கருந்து ரிமூவ் பண்ணதும் அந்த வீட்டுக்குள்ள போனது...... சொல்லு எதுக்கு போன?'

'அவளோட நகையையும் பணத்தையும் எடுக்கத்தான் சார்..... ஆனா எப்ப போலீஸ் மறுபடியும் வந்துருவாங்களோங்கற பயத்துல சரியா தேட முடியல..'

'டேய்... டூப்படிக்காத.... வீட்டையே தலைகீழா பொறட்டி போட்டுருக்கே.... கிடைக்கலன்னு டூப்படிக்காம அங்கருந்து எடுத்தத எங்க வச்சிருக்கே.... உண்மைய சொல்லிறு..' என்றது ஷங்கரின் குரல்.

'பிராமிஸா நாங்க எடுக்கல சார்...' என்றான் முருகேசன். 'அதுக்குள்ளவே போலீஸ் ஜீப் வர்றா மாதிரி இருக்கு மச்சான்னு வாசல்லருந்து ராமராஜன் குரல் குடுத்தான்... அப்படியே போட்டுட்டு ஒடியாந்துட்டேன்..... சார் வந்துட்டு போயிருவார்னு நானும் அவனும் எதுத்து சைட்லருந்து வாட்ச் பண்ணிக்கிட்டு நின்னோம்.... ஆனா சார் போற போக்குல எதுத்தாப்பலருக்கற ஹார்ட்வேர் கடையிலருந்து ஆள கூட்டியாந்து புதுசா ஒரு லாக்க போட்டுட்டு போய்ட்டார்.... அந்த நகையும் பணமும் இப்பவும் அங்கதான் இருக்கணும்..'

சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு மீண்டும் தன்ராஜின் குரல் ஒலித்தது. 'சரி அத விடு.. ராமராஜன் பாடியிலருக்கற சூயிசைட் நோட்ட பாத்துட்டு போலீசோட கவனம் நம்ம மேல திரும்பாதுன்னு நீ நெனச்சது ஓரளவுக்கு சரி.... அதுக்கப்புறம் எதுக்கு ராகவனையும் அவர் வய்ஃபையும் கடத்துனே?'

'அதான் சார் நா பண்ண முட்டாத்தனம். பேசாம கொஞ்ச நாளைக்கி நார்த் பக்கம் போயிருந்தேன்னா கேஸ் தானாவே க்ளோசாயிருக்கும்..... என்னெ பத்தி யாருக்கும் சந்தேகம் வந்துருக்காது....'

'அப்புறம் ஏன்டா பண்ணே?' என்றார் ஷங்கர் கோபத்துடன்.

'எல்லாம் ராஜசேகர் மேலருக்கற கோவந்தான் சார்...... அந்தாள் மட்டும் கோபால் கேஸ்ல பூராம இருந்துருந்தா கோபால் தப்பிச்சிருக்கவே முடியாது.... போறாததுக்கு நாங்க கடத்தி வச்சிருந்த குமார மீட்டுக்கிட்டு போய்ட்டார்.  அதனால முதல்ல அந்தாளோட பொண்ண தூக்குலாம்னுதான் ப்ளான் பண்ணேன்.... ஆனா அங்கயும் அஞ்சி நிமிஷத்துல அவள கோட்டை விட்டேன்.... அப்புறம் கோபாலோட அப்பா சீனிவாசன கடத்தலாம்னு நினைச்சேன்.... ஆனா அங்கயும் அது நடக்கல... வாட்ச்மேன் என்னெ உள்ளவே விடமாட்டேன்னுட்டான்..... அதுவும் ராஜசேகர் வேலையாத்தான் இருக்கணும். அந்தாள நம்மளான்ட வர வைக்கலாம்னுதான்  ராகவனையும் அந்தாள் சம்சாரத்தையும் கடத்துனோம்...... ஆனா அங்கயும் ராஜசேகர் பூந்து சாமர்த்தியமா என்னெ மடக்கிட்டான்....'

தன்ராஜ் மற்றும் ஷங்கரின் சிரிப்பொலி அறையை நிறப்ப... டேப் ரிக்கார்டரை நிறுத்திவிட்டு எஸ்.பி. சந்தானம்..... 'I think we should be thankful to Rajasekar... இந்த கேஸ சால்வ் பண்றதுக்கு அவரோட ப்ரைவேட் இன்வெஸ்ட்டிகேஷனும் ஒரு முக்கிய காரணம்....' என்றார்.

பிறகு தன்ராஜையும் ஷங்கரையும் பார்த்தார்.  ' Nice work......இனிமே நீங்க ரெண்டு பேரும் டீமா ஃபீல்டுல இறங்குறதுதான் நல்லது.' என்றவாறு தன் இடப்புறத்தில் அமர்ந்திருந்த ஆய்வாளர் பெருமாளைப் பார்த்தார். 'என்ன பெருமாள், நீங்க என்ன நினைக்கிறீங்க?'

அவருடைய கேள்வியை எதிர்பாராத பெருமாள் சற்று தடுமாறினார். பிறகு சமாளித்துக்கொண்டு, 'நீங்க சொல்றது சரிதான் சார்.....' என்றார் வேறுவழி தெரியாமல்.

அவருடைய பதிலில் இருந்த பொறாமையை எஸ்.பி. உணர்ந்தாலும் அதை கண்டுக்கொள்ளாதவர்போல் எழுந்து நின்றார். 

'சரி தன்ராஜ், ஷங்கர்..... இனியும் இந்த கேஸ்ல டிலே பண்ணாம சார்ஜ்ஷீட் ஃபைல் பண்ணிருங்க....' என்று தொடர்ந்தவரை அவருடைய செல்ஃபோன் தடுத்து நிறுத்தியது. 'ஒன் செக்கன்ட்' என்றவாறு செல்ஃபோனை காதில் வைத்தவர், 'அப்படியா?' என்றார் வியப்புடன். 'I was expecting this... but not this fast. Thanks for the info.' 

இணைப்பைத் துண்டித்துவிட்டு தன்னை சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்தார். 'பிபி கொஞ்ச நேரத்துக்கு முன்னால ரிசைன் பண்ணிட்டாராம்.' என்றார்.

தன்ராஜும் ஏன் பெருமாளும் கூட இதை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவ்வளவு விரைவில் அது நடக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. 'அப்படியா சார்?' என்றனர் இருவரும்.

'இதுவும் நல்லதுக்குத்தான். கொஞ்ச நாளாவே அவரோட நடவடிக்கை ஒன்னும் சரியில்லைன்னு கமிஷனர் வரைக்கும் கூட கம்ப்ளெய்ன்ட்ஸ் போயிருக்கு.... அடுத்து வரப்போற பிபி ஹேன்டில் பண்ணப் போற முதல் கேஸ் இதுவாத்தான் இருக்கணும்..... சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு அவர போயி பாருங்க.' என்றார் எஸ்.பி தன்ராஜை பார்த்து.

'கண்டிப்பா சார்.' என்று பதிலளித்த தன்ராஜ் பெருமாளைப் பார்த்தார். 'சார்..... போலாமா?'

பெருமாள் அவருடைய கேள்வியின் பொருள் விளங்காமல் பார்க்க எஸ்.பி இடைமறித்தார். 'அவர மறுபடியும் ஒங்க ஸ்டேஷனுக்கே ரிலீவ் பண்ணிட்டேன்..... இந்த கேஸ்ல சார்ஜஸ் ஃப்ரேம் பண்ணி முடிக்கற வரைக்கும் அங்கதான் இருப்பார்..... அதுக்கப்புறம் என்ன செய்யிறதுன்னு சொல்றேன்....' 

பிறகு ஆய்வாளர் பெருமாளை தனியே அழைத்துக்கொண்டு போய், 'இந்த கேஸ்ல மட்டுமில்லாம முருகேசன் மேல ஃபைல் பண்ற கேஸ்லயும் PW1, PW2 விட்னஸ் ரொம்ப முக்கியம்ங்க.... இந்த கேஸ்ல ஒங்களுக்கு எதிரா அவங்க ரெண்டு பேரும் சொன்னத மனசுல வச்சிக்கிட்டு அவங்கள எதுவும் செஞ்சிறாதீங்க, சொல்லிட்டேன்...' 

'இல்ல சார்....' என்று தலையை அசைத்தார் பெருமாள்.

பிறகு தனக்காக வாசலில் காத்திருந்த தன்ராஜுடன் அவர் வெளியேற பாலசுந்தரம் ஷங்கரை நெருங்கி, 'பாத்தியா ஷங்கர்.... இவ்வளவு நேரம் இதே ரூம்ல இருந்தும் எங்கிட்ட ஒரு வார்த்தைக் கூட பேசாம பெருமாள் சார் போறத? விட்டா இங்கயே வச்சி என்னெ என்கவுன்டர் பண்ணிருவார் போல' என்றார் புன்னகையுடன்.

ஷங்கரும் சிரித்தார். 'பின்னே.... நீதான அவர எஸ்.பிகிட்ட போட்டு குடுத்தது? நானாருந்தாலும் இந்தாள என்கவுன்டர் பண்ணா என்னான்னுதான் நினைச்சிருப்பேன்....'

பாலசுந்தரம் முறைத்தார். 

***** 

சீனிவாசனும் மகாதேவனும் புழல் சிறை வாசலில் காலையிலிருந்தே கோபாலுக்காக காத்திருந்தனர். ஆனால் நீதிமன்றத்திலிருந்து இன்னும் உத்தரவு வரவில்லையென்று இழுத்தடித்து இறுதியில் கோபால் சிறையிலிருந்து வெளியில் வந்தபோது பிற்பகல் மூன்று மணியாகியிருந்தது.

சிறைவாசலில் தன் தந்தையுடன் காத்திருந்த மகாதேவனைப் பார்த்ததும் கோபாலின் முகம் சுருங்கினாலும் சமாளித்துக்கொண்டு 'வாங்க சார்' என்றான். பிறகு தன் தந்தையை நெருங்கி, 'சாரிப்பா, என்னால ஒனக்குத்தான் ரொம்ப அலைச்சலாயிருச்சி.....' என்றான் உண்மையான வருத்தத்துடன்.

'பரவால்லைடா..... இனியாச்சும் பழசையெல்லாம் மறந்துட்டு நளினியோட குடும்பம் நடத்து.' என்றார் சீனிவாசன். 

'அவ வரலையாப்பா?' என்ற கோபாலின் குரலில் தெரிந்த ஏமாற்றம் சீனிவாசனை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. தன் மருமகளைப் பற்றி கோபால் கேட்க மாட்டான் என்றுதான் நினைத்திருந்தார். 

'அவளுக்கு வரணும்னு ஆசைதான்..... ஆனா ரொம்ப வீக்காருக்காடா. வீட்டுல வச்சி மீட் பண்ணிக்கட்டுமேன்னு டாக்டர் சொன்னார்..... நேத்து ராத்திரிதான் நானே போய் அவள கன்வின்ஸ் பண்ணி வீட்டுக்கு கூட்டியாந்தேன்.... நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கி என் கூடவே இருக்கலாம்னு சொன்னதுக்கப்புறந்தான் வந்தா.....' என்ற சீனிவாசன் தன் மகனை பார்த்தார். 'நா சொல்றது ஒனக்கு புரியுதாடா?'

அவருடைய குரலில் இருந்த ஏக்கத்தைப் புரிந்துக்கொண்ட கோபால், 'நீ சொல்ல வர்றது புரியுதுப்பா.... இனி உங்கூடவே இருக்கேன்.... போதுமா?' என்றவாறு அவருடைய தோள் மீது கை வைத்தார். 

இருவரையும் மாறி மாறி பார்த்த மகாதேவன் இவன் இனி தப்பு பண்ண மாட்டான்..... என்று நினைத்தவாறு, 'சீனி போலாமா?' என்றவாறு காரில் ஏறி அமர்ந்தார். அவரை தொடர்ந்து கோபால் முன் இருக்கையிலும் சீனிவாசன் மகாதேவனுடன் பின் இருக்கையிலும் அமர்ந்துக்கொள்ள டிரைவர் வாகனத்தை நகர்த்தினான்.

**********


'ஏங்க, நேத்துலருந்தே ஒங்கக்கிட்ட ஒன்னு சொல்லணும்னு நினைச்சிக்கிட்டே இருக்கேன்.' என்றார் ரேணுகா ராகவன். 

'என்ன?' என்றார் ராகவன் தினத்தாளிலிருந்து கண்ணெடுக்காமல். 

'அந்த லாயர்.... ராஜசேகர்தான அவர் பேரு?'

'ஆமா அவருக்கென்ன?'

'அவரக் கூட அந்த பொண்ணு விட்டுக்கு வந்து போனத பாத்துருக்கேங்க.....!'

ராகவன் எரிச்சலுடன் திரும்பி தன் மனைவியை பார்த்தார். 'ஒனக்கு இதே பிரமைடி.... ஏற்கனவே ஒருத்தன பாக்கக் கூடாத நேரத்துல பாத்துட்டு பட்டது போறாதா? போயி வேலைய பாரு....'

'என்னைக்கி நா சொன்னத நம்பியிருக்கீங்க?' என்றவாறு எழுந்து ரேணுகா சமையலறைக்குள் நுழைய ராகவன் தினத்தாளில் மீண்டும் மூழ்கினார். ஆனால் அவருடைய மனதிலும் நமக்கும் அவர முதல் தடவ பாத்தப்போ இவர எங்கயோ பாத்தா மாதிரி இருக்கேன்னு தோனிச்சே.... ஒருவேளை இவ சொல்றது நிஜமாருக்குமோ? சரி அதப்பத்தி நமக்கென்ன? அவர் மட்டும் அன்னைக்கி புத்திசாலித்தனமா ஆக்ட் பண்ணலன்னா நம்ம கத கந்தலாயிருக்குமே?

*********

பி.கு. இந்த தொடரை கடந்த எழுபத்தைந்து நாட்களாக தொடர்ந்து படித்து ஆதரவளித்த அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. 

என்னுடைய அடுத்த க்ரைம் நாவலை சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற துணை ஆணையர் (ACP) ஒருவர் அவருடைய படுக்கையறையில் அவருடைய  துப்பாக்கியாலேயே சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியை மையமாக வைத்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். அந்த தொடருக்கு தாற்காலிகமாக 'தன் வினை....' என்று பெயர் வைத்திருக்கிறேன். அதை முழுவதும் எழுதி முடித்து புத்தாண்டில் வெளியிடலாம் என்று நினைத்திருக்கிறேன்....அன்புடன்,
டிபிஆர். 

25 comments:

இராஜராஜேஸ்வரி said...


"சொந்த செலவில் சூன்யம்

தன் வினை தன்னைச்சுடும்

தீதிம் நன்றும் பிறர்தர வாரா..

கதையை சிறப்பாக முடிவுரைக்குக் கொண்டுவந்ததற்கும் அடுத்த கதையின் ஆரம்பத்திற்கும் பாராட்டுக்கள்..!

Anonymous said...

Really superb Sir, with real information...no unnecessary exaggerations....very crisp....interesting novel it is...normally i dont read crime novels...but this one enjoyed...daily i was waiting for the episodes...
Waiting for your new novel
Geetha

siva gnanamji(#18100882083107547329) said...

CONGRATS!
i repeat what anonymous{geetha}said
puththandu, you mean JAN I or
THAI, I or
CHITHIRAI, I?

அ. பாண்டியன் said...

அன்பு சகோதரருக்கு வணக்கம்.
நான் இடையில் வந்தே தங்கள் தொடரை தொடர்ந்தேன். அதற்கே அசந்து போனேன். நேரம் கிடைக்கும் போது அனைத்தையும் படித்து விடுவேன். அழகான ஒரு தொடரை அற்புதமாக முடித்த தங்களுக்கு எனது பாராட்டுக்கள். அடுத்த தொடர் ”தன்வினை”க்கு எனது வாழ்த்துக்கள். இதுவும் அற்புதமான திருப்பங்களைக் கொண்ட தொடராக வரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பகிர்வுக்கு நன்றி..

Packirisamy N said...

I too repeat the anonymous. Everyday I was waiting for the new episode. Wish to see the novel as a book. In my view, people will like it.

Once in a while, I request you to write something apart from the stories. Eagerly awaiting for the next novel.

Thank you.

டிபிஆர்.ஜோசப் said...

இராஜராஜேஸ்வரி said..

கதையை சிறப்பாக முடிவுரைக்குக் கொண்டுவந்ததற்கும் அடுத்த கதையின் ஆரம்பத்திற்கும் பாராட்டுக்கள்..!//

மிக்க நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


கீதா said...
Really superb Sir, with real information...no unnecessary exaggerations....very crisp....interesting novel it is...normally i dont read crime novels...but this one enjoyed...daily i was waiting for the episodes...
Waiting for your new novel//

Thank you so much for your kind words. It keeps us going and rewards us for all the efforts we take to make these stories look credible. I hope that the new novel would also attract the attention of several readers.
Geetha

டிபிஆர்.ஜோசப் said...


siva gnanamji(#18100882083107547329) said...
CONGRATS!
i repeat what anonymous{geetha}said
puththandu, you mean JAN I or
THAI, I or
CHITHIRAI, I?//

வாங்க ஜி!

என்னைப் பொருத்தவரைக்கும் புத்தாண்டுன்னா அது ஜனவரி 1தான். ஆனா நான் புத்தாண்டுன்னுதான் சொல்லியிருக்கேன், ஜனவரி 1ன்னு சொல்லலை :) It could be in the beginning, the middle or even at the end of the NY!!!

டிபிஆர்.ஜோசப் said...

4:35 PM
அ. பாண்டியன் said...
அன்பு சகோதரருக்கு வணக்கம்.
நான் இடையில் வந்தே தங்கள் தொடரை தொடர்ந்தேன். அதற்கே அசந்து போனேன். நேரம் கிடைக்கும் போது அனைத்தையும் படித்து விடுவேன். அழகான ஒரு தொடரை அற்புதமாக முடித்த தங்களுக்கு எனது பாராட்டுக்கள். அடுத்த தொடர் ”தன்வினை”க்கு எனது வாழ்த்துக்கள். இதுவும் அற்புதமான திருப்பங்களைக் கொண்ட தொடராக வரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பகிர்வுக்கு நன்றி..//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே...

இன்னும் ஒரு சில தினங்களில் முழு தொட்ரையும் ஒரே pdf கோப்பாக்கி இணையத்தில் ஏற்றிவிட்டு சுட்டியை தருகிறேன். படிப்பதற்கு எளிதாக இருக்கும்.

டிபிஆர்.ஜோசப் said...


9:50 PM
Packirisamy N said...
I too repeat the anonymous. Everyday I was waiting for the new episode. Wish to see the novel as a book. In my view, people will like it.//

May be. But I don't have connections. It is not that easy to bring out a book. I don't want to invest on such a thing unless I am sure that there is someone to market it.

Once in a while, I request you to write something apart from the stories.//

I will do that. But the problem with me is I don't write the feel-good posts liked by so many of our bloggers. I've prepared a post on upcoming Commonwealth Meet. I am not sure whether it would be received in the right spirit.

Eagerly awaiting for the next novel.//

Thanks for the interest shown by you. I've only drafted the basic. Lot of work is to be done. It might take about 3 months to complete it.

Anonymous said...

I think, you are giving some strategy news about diary, missing some papers in that story line.

டிபிஆர்.ஜோசப் said...

1 PM
Anonymous said...
I think, you are giving some strategy news about diary, missing some papers in that story line.//

I am sorry but I don't get you. Can you pl. elaborate!

நால்ரோடு said...

டி .பி.ஆர் அவர்களே,

இரண்டரை மாதம் தினம் 4 மணிக்கு (US EST) எழுந்து இந்த தொடரை படித்தேன். நிறைய திருப்பங்கள் இல்லாவிட்டாலும் அடுத்து என்ன அடுத்து என்ன என்று எதிர் பார்க்க வைத்தது. தன்னை காப்பாற்றி கொள்ள அந்த வழக்கை எடுத்து கொண்டாலும் பிறகு அவர் ஒரு துப்பறிவாளராக மாறியது ஒரு திருப்பம்.

கடைசி வரை அவர் செய்த தப்புக்கு தண்டனையே இல்லையே ? ஹீரோன்னா அப்படிதானா?. கரெக்டுதான் தப்பு பண்ணுற எல்லோருக்குமா தண்டனை கிடைக்குது? மிக சுவாரசியமான விரிவான நடை. கதையுலகம் என்ன ஆச்சு இப்போ அதுல ஏதும் எழுதுறது இல்லையா?←

அடுத்த தொடருக்கு I am waiting

வே.நடனசபாபதி said...

முடிவுரை சில பல ஐயங்களைத் தீர்த்து வைத்தது. நீங்கள் முடிவுரை தராதிருந்தாலும் சென்ற பதிவின் முடிவே கதை முழுமைபெற்றது போல் தான் இருந்தது. திரும்பவும் எனது வாழ்த்துக்கள்! சட்டநுணுக்கங்கள் விளக்கத்தோடு கூடிய ஒரு அருமையான துப்பறியும் நாவலைத் தந்தமைக்கு.

தொடரில் உள்ள ஒரு சொற்றொடர் ‘பாலசுந்தரம் முறைத்தான்’ என்றிருக்கவேண்டுமோ? ‘ஷங்கர் முறைத்தான்’ என்பதிற்கு பதிலாக.

திருமதி சசிகலா அவர்கள் சொன்னதுபோல் இந்த தொடரை புத்தகமாக வெளியிடவேண்டும்.முடிந்தால் பொங்கல் சமயம் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் அதை சிறப்பாக வெளியிடலாம்.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் போல் மெல்லிய நகைச்சுவையையும் கதையின் ஊடே தெளித்து சுவாரஸ்யமாக எழுதும் நடைப்பாங்கு தங்களிடம் உள்ளது.


'தன் வினை....' தொடரை மிக ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன் ஜூனியர் சுஜாதாவிடமிருந்து!

டிபிஆர்.ஜோசப் said...


நால்ரோடு said...
டி .பி.ஆர் அவர்களே,

இரண்டரை மாதம் தினம் 4 மணிக்கு (US EST) எழுந்து இந்த தொடரை படித்தேன். நிறைய திருப்பங்கள் இல்லாவிட்டாலும் அடுத்து என்ன அடுத்து என்ன என்று எதிர் பார்க்க வைத்தது. தன்னை காப்பாற்றி கொள்ள அந்த வழக்கை எடுத்து கொண்டாலும் பிறகு அவர் ஒரு துப்பறிவாளராக மாறியது ஒரு திருப்பம்.

கடைசி வரை அவர் செய்த தப்புக்கு தண்டனையே இல்லையே ? ஹீரோன்னா அப்படிதானா?. கரெக்டுதான் தப்பு பண்ணுற எல்லோருக்குமா தண்டனை கிடைக்குது?//

ராஜசேகரின் மனைவிக்கு மாதவியுடன் அவனுக்கு இருந்த கள்ள உறவு தெரிந்து அவனை விட்டு பிரிந்து போவதுபோல்தான் கதையை முடித்திருந்தேன். ஆனால் ஏனோ தெரியவில்லை நாளடைவில் என்னையுமறியாமல் ராஜசேகரின் கதாபாத்திரத்தை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். மேலும் அவனை இனி வரும் கதைகளிலும் பயன்படுத்த விருப்பப்பட்டதால் அந்த முடிவை கடைசி நேரத்தில் மாற்றிவிட்டேன்.

அடுத்த தொடருக்கு I am waiting//

உங்களுடைய ஆவலுக்கும் மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
முடிவுரை சில பல ஐயங்களைத் தீர்த்து வைத்தது. நீங்கள் முடிவுரை தராதிருந்தாலும் சென்ற பதிவின் முடிவே கதை முழுமைபெற்றது போல் தான் இருந்தது. திரும்பவும் எனது வாழ்த்துக்கள்! சட்டநுணுக்கங்கள் விளக்கத்தோடு கூடிய ஒரு அருமையான துப்பறியும் நாவலைத் தந்தமைக்கு.//

உங்களுடைய தொடர்ந்த ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சார்.

தொடரில் உள்ள ஒரு சொற்றொடர் ‘பாலசுந்தரம் முறைத்தான்’ என்றிருக்கவேண்டுமோ? ‘ஷங்கர் முறைத்தான்’ என்பதிற்கு பதிலாக. //

ஆமாம். மாற்றிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கும் நன்றி.

திருமதி சசிகலா அவர்கள் சொன்னதுபோல் இந்த தொடரை புத்தகமாக வெளியிடவேண்டும்.முடிந்தால் பொங்கல் சமயம் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் அதை சிறப்பாக வெளியிடலாம். //

ஏற்கனவே ஒருமுறை ஒரு புத்தகத்தை வெளியிட்டதால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் உள்ளன. ஆகவே அதையே மீண்டும் செய்ய எனக்கு விருப்பமில்லை. நான் எழுதுவது பொழுதுபோக்கிற்காக மட்டுமே. இருப்பினும் உங்களுடைய ஐடியாவுக்கு நன்றி.

Sasi Kala said...

தலைப்பை தேர்வு செய்ய அனைவரும் உங்களைத்தான் இனி நாட வேண்டும் போல..
கதை கொண்டு சென்ற விதம் ஒரு திகில் படம் பார்த்த உணர்வை தருகிறது. இவனா இருக்குமோ அவனா இருக்குமோ என்று எங்களுக்குள் போரா வைத்து முடிவை சொன்ன விதமும் சிறப்புங்க.
அடுத்த பகிர்வுக்காக காத்திருக்கிறோம்.
பொதுவா எனக்கு டிவியில் சீரில் பார்க்கவே பிடிக்காது ஆனா உங்க கதை என்றால் அதற்காக நேரம் பிடித்து படிக்க அமர வைக்கிறது.

டிபிஆர்.ஜோசப் said...

மிக்க நன்றிங்க சசிகலா .

G.M Balasubramaniam said...


விட்டுப்போன பதிவுகளையும் சேர்த்து வாசித்தேன். கதையை கதையாக மட்டுமல்லாமல் சில துறைகளின் நெளிவு சுளிவுகளையும் விளக்கி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் சேர்த்துப் பாராட்டுக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

நால்ரோடு said...
டி .பி.ஆர் அவர்களே,

இரண்டரை மாதம் தினம் 4 மணிக்கு (US EST) எழுந்து இந்த தொடரை படித்தேன். நிறைய திருப்பங்கள் இல்லாவிட்டாலும் அடுத்து என்ன அடுத்து என்ன என்று எதிர் பார்க்க வைத்தது. தன்னை காப்பாற்றி கொள்ள அந்த வழக்கை எடுத்து கொண்டாலும் பிறகு அவர் ஒரு துப்பறிவாளராக மாறியது ஒரு திருப்பம். //

மாதவியை நாம்தான் கொன்றுவிட்டோம் போலிருக்கிறதே என்று நினைத்த ராஜசேகர் அதிலிருந்து தப்பிப்பதற்கு எடுத்த அவதாரம்தான் இது. ஆனால் அதுவே உண்மை குற்றவாளையை கண்டுபிடிக்கவும் உதவியது.

கதையுலகம் என்ன ஆச்சு இப்போ அதுல ஏதும் எழுதுறது இல்லையா?←//

கதைகளுக்கு என்று தனியாக ஒரு பதிவு தேவையில்லை என்னுலகம் பதிவிலேயே எழுதுங்கள் சில நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் அதில் இப்போது எழுதாமல் இருக்கிறேன். இனி சிறுகதைகளை அதில் எழுதலாம் என்றிருக்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...

விட்டுப்போன பதிவுகளையும் சேர்த்து வாசித்தேன். கதையை கதையாக மட்டுமல்லாமல் சில துறைகளின் நெளிவு சுளிவுகளையும் விளக்கி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் சேர்த்துப் பாராட்டுக்கள்.//

மிக்க நன்றி சார்.

உங்கள் சென்னை விஜயத்தைப் பற்றி எழுதுவீர்கள் என்று காத்திருக்கிறேன்.

தருமி said...

//தப்பு பண்ணுற எல்லோருக்குமா தண்டனை கிடைக்குது? //

இதுக்கு உங்க பதில் நல்லா இருந்தது. சொல்றதைப் பார்த்தா உங்க ஹீரோ & வசந்தை அடிக்கடி இனிமே பார்க்கலாம். நல்லது.
வெகு வெகு நல்ல முயற்சி. புத்தகமாக நீங்கள் போடாவிட்டாலும், உங்களை யாரும் இதற்காகத் தேடி வரத்தான் போகிறார்கள். நடக்க வேண்டும் அது.

வாழ்த்துகள்.

இதே இடத்தில் இன்னொரு வார்த்தை. இக்கதைக்குப் பிறகு வந்த இரு அரசியல் பதிவுகளும் மிக நன்றாக இருக்கின்றன. புது வேகத்தில் இருக்கிறீர்கள்; தொடர்ந்து இதே நடையில் செல்லவும் என் வாழ்த்துகள்.

டிபிஆர்.ஜோசப் said...

ருமி said...
//தப்பு பண்ணுற எல்லோருக்குமா தண்டனை கிடைக்குது? //

இதுக்கு உங்க பதில் நல்லா இருந்தது. சொல்றதைப் பார்த்தா உங்க ஹீரோ & வசந்தை அடிக்கடி இனிமே பார்க்கலாம். நல்லது.
வெகு வெகு நல்ல முயற்சி. புத்தகமாக நீங்கள் போடாவிட்டாலும், உங்களை யாரும் இதற்காகத் தேடி வரத்தான் போகிறார்கள். நடக்க வேண்டும் அது.

வாழ்த்துகள்.//

மிக்க நன்றி அண்ணா! (நீங்க தம்பின்னு சொன்னதால....)

இதே இடத்தில் இன்னொரு வார்த்தை. இக்கதைக்குப் பிறகு வந்த இரு அரசியல் பதிவுகளும் மிக நன்றாக இருக்கின்றன. புது வேகத்தில் இருக்கிறீர்கள்; தொடர்ந்து இதே நடையில் செல்லவும் என் வாழ்த்துகள்.//

இதெல்லாம் ஒரு மூடு (Mood). எழுதணும்னு தோனணும்... எழுதறதுக்கு டாப்பிக்கும் கிடைக்கணும்.. ரெண்டும் இல்லன்னா எழுத மனசு வராது. அதனால இந்த ட்ரென்ட் எத்தன நாளைக்கு இருக்கும்னுல்லாம் சொல்ல முடியாது.
6:46 PM

Anonymous said...

In Madhavi house, found diary. Some papers missing.

டிபிஆர்.ஜோசப் said...

Anonymous said...
In Madhavi house, found diary. Some papers missing.//

You are right. But that knot could have been untied only by one person: Madhavi. She is no more. But I introduced that phone book only with one purpose. To enable Rajasekar to confirm that Murugesan was the person who intentionally introduced him to Madhavi to seek revenge.

I could have,however, explained it at some place. It was an oversight. But it does not affect the storyline. Had there been someone else other than Murugesan and Ramarajan I would have used that phone book to find out.

Anyway, thank you for bringing this out.